Skip to main content

ஓய்வு



புகழின் உச்சத்தில் இருக்கும்போதே மரியாதையாக ஓய்வு பெற்றுவிடல் வேண்டும் என்பது பொதுவெளியில் இருக்கின்ற கருத்தியலாக இருக்கிறது. ஒருவர் திறமையாக விளையாடும்போது ஓய்வுபெறுதலும், கலைத்துறையில் உச்சியில் இருக்கும்போது ஓய்வுபெறுதலும் பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மேலோங்கி, துறையாளர்கள் மனதிலும் ஆழத் திணிக்கப்பட்டும் விடுகிறது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால், எங்களுக்குத்தான் அது விளையாட்டும் கலையும். நாம்தான் நேரம் கிடைக்கும்போது பார்ப்போம் ரசிப்போம். ஆனால் அவர்களுக்கு அதுதான் முழுநேரத் துறை. தொழில். அதுதான் அவர்களின் வாழ்வு. அதைத்தான் அவர்கள் ரசித்துச் செய்கிறார்கள். அவர்களை ஓய்வுபெறவேண்டும் என்று வலியுறுத்துவதும் அப்படியான எண்ணங்களை விதைப்பதும் எந்தளவுக்குச் சரி என்று தெரியவில்லை.

ரோஜர் பெடரர். அண்ணர் இனி ஓய்வுபெற்றுவிடவேண்டும் என்ற குரல் கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் ரோஜர் தனக்குப் பிடித்ததை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றுப்போயிருந்தாரேயானால் இந்த வருட அவுஸ்திரேலிய ஓபன் அழகு ஆட்டத்தை நாம் இழந்திருப்போம். இன்று செமிபைனலை நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்காது. பெடரர் தான் தோற்கும் ஆட்டத்தில்கூட ஒரு சின்ன பாக்ஹாண்ட் ஷோட் விளையாடினால் ரசித்துச் சொக்கிப்போய்ப் பார்க்கலாம். அவர் விரும்பும்வரைக்கும் விளையாடிக்கொண்டே இருக்கட்டும்.

இலங்கைக் கிரிக்கட் அணியின் இரு பெரும் வீரர்களான மகெல ஜெயவர்த்தனாவும், குமார் சங்கக்காராவும் இந்தப் புகழின் உச்சியில் ஓய்வு என்ற பெருமைக்காகவே முற்கூட்டியே ஓய்வு பெற்றுப்போனவர்கள். கிரிக்கட் குழுமத்தில் இருந்த அரசியலும் ஒரு காரணம் என்றாலும் அவர்கள் வெளிப்படையாக சொன்ன காரணம் “Retiring while on top”. இதில் உள்ள நன்மை ரசிகர்கள் அவர்களுடைய உச்சபட்ட ஆட்டத்தை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் என்பதுதான். டயானா, மர்லின் மன்ரோ மாதிரி. அவர்கள் இளவயதில் இறந்தமையால் அவர்கள் பெயரோடு அந்த அழகும் காந்தமும் இன்னமும் ஒட்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் எண்பது வயதுவரை வாழ்ந்திருந்தால் இந்த ஈர்ப்பு இருந்திருக்குமோ?

என்னைக்கேட்டால் அது இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ரேவதி என்றால் உடனே நமக்கு மௌனராகம்தானே ஞாபகம் வருகிறது? மதுபாலா என்றால் அந்த ஸ்வெட்டர் சீன்தானே கண் எங்கும் நிறைகிறது? அவர்கள் இப்போது நடிப்பது எப்படியிருப்பினும். அதே சமயம் அவர்கள் இப்போதும் ஏதாவது கிளாஸிக்குகளில் நடிக்கலாம் அல்லவா?

அணிக்காக விளையாடுகிறோம், நாட்டுக்காக விளையாடுகிறோம் என்றுவிட்டுத் திறமையின் உச்சியில் இருக்கும்போது வெளியேறுதல் எந்த வகையில் பெருமையாக இருக்கமுடியும்? இடிக்கிறது. மகெலவும் குமாரும் தொடர்ந்து விளையாடி இருந்திருக்கலாம். அவர்களுடைய விளையாட்டுத் திறன் போதாமையாக இருக்கும்பட்சத்தில் தெரிவுக்குழு அவர்களை அணியிலிருந்து நீக்கம் செய்யலாம். ஒரு தொழில்சார் அமைப்பில் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படுவதும் வெளியேற்றப்படுவதும் இயல்பான விடயங்கள். சச்சினுக்கும் அதுதான். ஒரு இலட்சிய அமைப்பிலே சச்சின் தான் விரும்பும்வரைக்கும் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருக்கமுடியும். அணியில் இடம்பிடிக்க அவருடைய பெறுபேறுகள் போதாமல் போகையில் அவர் ரஞ்சியிலோ, கவுண்டியிலோ மீண்டும் திறமையை நிரூபிப்பதன்மூலம் உள்ளே மீள வரலாம். இதுதான் தொழில்சார் அமைப்பின் நியதி. இப்படித்தான் அது இருக்கவேண்டும். இதில் அவமானம் என்று ஒன்றில்லை. வெளியேற்றப்படுவதால் அவருடைய புகழ் ஒருபோதும் மங்கியிருக்கப்போவதில்லை. சார்ஜாவில் வோர்னுக்கு அடித்த மரண அடியும், ஹராரேயில் ஒலங்காவுக்கு சொல்லி வைத்துச் செய்ததையும் எப்படி மறக்கலாம்? நாங்கள்தான் எதையும் புனிதமாக்கி இப்படியான முறையான விடயங்களை சாத்தியமில்லாமல் ஆக்கிவிடுகிறோம். 

விளையாட்டில் இன்னுமொரு அபத்தமான விடயம் இந்த “டிரான்சிஷன்”. அடுத்தது “இளைஞர்களுக்கு வழிவிடுவது”. என்னதான் முறையான டிரான்சிஷன் செய்தாலும் திறமை இருந்தால்தான் அடுத்த தலைமுறை ஜொலிக்கும். என்னதான் மறித்துக்கொண்டு நின்றாலும் திறமை இருந்தால் அடுத்த தலைமுறை பிச்சுக்கொண்டு வெளிவரும். அதுதான் உண்மை. அந்த இருவரும் படிச்சுப் படிச்சு டிரான்சிஷன் பற்றிப் பேசிவிட்டு விலகிவிட்டார்கள். மத்தியூஸ் திறமையான வீரர்தான். ஆனால் அவரால் அணியையும், பந்துவீச்சையும், துடுப்பாட்டத்தையும் காயங்களையும், உள்ளக அரசியலையும் ஒன்றாக சமாளிக்கவே முடியவில்லை. அதேசமயம் எந்த டிரான்சிஷனும் இல்லாமல் திடீரென்று ஒருதலைவர் வந்து கலக்குக் கலக்குவார். தோனிக்கு யார் டிரான்சிஷன் கொடுத்தது? திடீரென்று உலகக்கோப்பைக்குத் தலைவராக நியமித்தார்கள். Rest history.

ஆக இரண்டு விடயங்கள். எல்லாத் தொழிற்றுறை போலவே விளையாட்டிலும் கலையிலும் அந்தத் துறையாளர்கள் விரும்பும்வரையிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். அதனால் உருவாகக்கூடிய நெப்போடிசத்தைச் சமாளிக்கக்கூடிய சிஸ்டத்தை நாம் கட்டியமைக்கவேண்டும். திறமை அடிப்படையில் மாத்திரமே அணியில் வீரர்களை சேர்க்கவேண்டும். டெனிஸ்மாதிரி. ராங்கிங்கில் இருந்தால் மாத்திரமே கிராண்ட்ஸ்லாம் விளையாடலாம். காயப்பட்டு மீள்பவர்களுக்கு மாத்திரமே விசேட வைல்ட்கார்ட் முறைகள் அதில் இருக்கின்றன. ஷரபோவா தடைக்குப் பிறகு விளையாட வைல்ட்கார்ட் கேட்டு தலைகீழாக நின்று பார்த்தார். பிரெஞ் ஓபன் மாட்டேன் என்று அடித்துக் கூறிவிட்டது. இந்த சிஸ்டத்தில்தான் மார்ட்டினா ஹிஞ்சிசால் பதினாறு வயதில் கிராண்ட்ஸ்லாம் வெல்லமுடிகிறது. அதே சமயம் வீனஸ் வில்லியத்தால் முப்பத்தேழு வயதில் பைனல் வரமுடிகிறது (சனி இரவு இதனை வெல்ல முடிகிறது என்று மாற்றி வாசிக்க). கிரிக்கட்டிலும் அது வேண்டும். சச்சினோ, மகெலவோ திறமை காட்டினால் மாத்திரமே அணியில் இருக்கலாம் என்ற நிலை வேண்டும். அல்லாவிட்டால் முதல்தர கிரிக்கட்டை விளையாடி திறமையை நிரூபிக்கவேண்டும். இந்த இரண்டுமே நம்முடைய சிஸ்டத்தில் இல்லை. இந்த நெப்போடிசத்தைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ ரசிகர்களும் ஒருவர் முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்டாலே ஓய்வுக் கூச்சலை நிகழ்த்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் இழப்பு அவர்களுக்குத்தான் என்பதையும் அறியாமல்.

இதே ஓய்வுக்கூச்சலை நிகழ்த்தும் ரசிகர்கள்தான் அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என்று வயதிலே ஸ்கோர் அடித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை, அவர்களின் திறமையையோ, பெறுபேறுகளையோ மதிப்பிடாமல் திரும்பத் திரும்ப வாக்களித்து தம்மை ஆள்வதற்காக நியமிக்கிறார்கள் என்பது முரண்நகை. ஹிப்போகிரிசி.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...