ஒரு தமிழ்நாட்டுத் தமிழரோடு தேநீர் குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.
பேச்சுவாக்கில் “ஈழத்தமிழர்களுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது? மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே?” என்று நெல்லிச்சாக்கைத் தெரியாத்தனமாக அவிழ்த்துவிட்டார்.
எனக்கு அன்றைக்கு என்ன மூடு இருந்ததோ தெரியவில்லை. அவருக்குப் பதிலளிக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆரம்பித்தேன்.
மொழி முதல் கலாச்சாரம்வரை நமக்கு ஏன் அது இந்தியாவிலிருந்து வந்தது என்று கூறவேண்டும்? ஈழத்தில் பலநூற்றாண்டுகளாக, கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் இருந்தே மனித நாகரிகம் இருந்தமைக்கான சான்றுகள் இருக்கிறது. அவர்கள் வேறு எந்த மொழியை விடவும் தமிழைப் பேசியிருப்பதற்கே சாத்தியங்களே அதிகம் என்பது ஷோபாசக்தியின் உள்ளங்கை கிரனைட். அப்படியிருக்க, என் பாட்டர், முப்பாட்டர் எல்லாம் தமிழையே பேசியிருக்க, எதற்காக என் மொழி இன்னோரிடத்திலிருந்து வந்தது என்று சொல்லவேண்டும்? எப்படி நாகபட்டினத்து மக்கள் தமிழ் பேசினார்களோ, எப்படி கோவை மக்கள் தமிழர்களோ, அதுபோலத்தான் ஈழத்தவர்களுக்கும். ஆங்கிலமொழி இங்கிலாந்திலிருந்துதான் ஸ்கொட்லாந்துக்கு வந்தது என்று ஒரு ஸ்கொட்டிஷ்காரரிடம் சொல்லிப்பாருங்கள். அறை விழும். அதிகம் ஏன், நெல்லைக்காரரிடம் போய், "உம் தமிழ் மதுரையிலிருந்து வந்ததுதானே" என்று சும்மா சொல்லிப்பாருங்களேன். அரிவாள்தான்.
நண்பர் டென்சனாகிவிட்டார். “அப்படி என்றால் கம்பரையும், பாரதியையும் உரிமை கோருவீர்களா?” என்றார்.
இதில் உரிமை கோருவதற்கு என்ன இருக்கிறது? கம்பனும் பாரதியும் உலகப் பொதுமைகள். நாமெல்லாம் அவர்களை உரிமைகோரி அசிங்கப்படுத்தத்தேவையில்லை. ஆனால் ஒரு சென்னைக்காரருக்கு, ஒரு தஞ்சாவூர்க்காரருக்கு, ஒரு நெல்லைக்காரருக்கு பாரதிமேல் இருக்கும் உரிமையளவு எனக்கும் உண்டு. பிரிட்டிஷ்காரர் திராவிடப் பிராந்தியத்தின் பெரும்பகுதியை தம் வசதிக்காக வட இந்தியாவுடன் சேர்த்ததற்காக எமக்கு உரிமையான சங்க இலக்கியங்களை நாம் ஏன் காவு கொடுக்கவேண்டும்? உங்களுக்கு உள்ள அதேயளவு உரிமை எமக்கும் உண்டு.
“இல்லையே, உங்களிடம் கேரளப்பண்புகளும் இருக்கின்றனவே?”
இருக்கட்டுமே. அது நல்லதுக்குத்தான். எங்களுக்கு தூய உயிரி என்று எதுவும் இல்லை. கலிங்கர்கள், அலாவுதீன் கிஞ்சி காலத்திலேயே கலப்பு என்பது திராவிடத்தில் ஆரம்பித்துவிட்டது. டி.என்.ஏ அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு சிங்களவர்களோடே அதிகத் தொடர்பு என்கிறது ஒரு ஆய்வு. இதற்கு ஆய்வு எல்லாம் தேவையே இல்லை. வந்தது எழுநூறுபேர்தானே? மற்றவர் எல்லாம் இங்கிருந்த திராவிடர்கள்தானே. இன்னுஞ் சொல்லப்போனால் சிங்களவர்களுக்கு சங்க இலக்கியங்களின் மீதுள்ள உரிமைகூட குறைவானதல்ல எனலாம். மொழி வேறானதால் உரிமைகள் அகன்றுவிடுமா என்ன? அப்புறம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்று அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள். உலகமெங்குமே இதே நிலைதான். எல்லா உயிரிகளுக்கும் இதே நிலைதான். கூர்ப்பின் அடிப்படையே இதுதானே. தூய உயிரிகள் நீண்டகாலம் நிலைக்கா. எவராவது தம்மை தூய இரத்தம், தூய சாதிக்காரர், தூய தமிழர் என்று தற்புகழ்ந்தால் அவர் வீட்டில் பெண்ணோ ஆணோ எடுக்காதீர்கள். நோய் வந்து பரம்பரை விரைவிலேயே அழிந்துவிடும். அந்தக் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு மேலே நின்று பிடிக்காது. கூர்ப்புக்கு அப்படியான இனங்கள் என்றாலே சத்துரு.
“எல்லோருக்குமே உரித்து உள்ளதென்றால் என்றால் எதற்காக உரிமைப்போராட்டம்?”
உரிமைப்போராட்டம் வரலாற்றுக்காரணங்களுக்காக உருவாக்கப்படுவதில்லை. உரிமைகள் மறுக்கப்படும்போது கூடவே உரிமைப்போராட்டமும் கிளம்புகிறது. இப்போதுகூட நான் சும்மாதான் இருந்தேன். எப்போது எனக்கு என் தமிழ்மீது உரிமை இல்லை என்ற வகையில் கூறினீர்களோ அப்போதே இந்த விளக்கத்தை நான் கொடுக்கவேண்டிவந்தது. தவிர, எந்தவித மொழி, வரலாற்று, கலாச்சார பின்புலம் இல்லை என்றாலும்கூட, ஒரு இனத்துக்கோ, குழுவுக்கோ அல்லது தனிமனிதருக்கோ உரிமை மறுக்கப்படுமேயானால் அங்கே போராட்டம் கிளர்ந்தெழும். அது இயல்பு. அதுதான் வரலாறு முழுதும் இடம்பெற்று வருகிறது. சொல்லப்போனால் அதுதான் அட்டன்பரோவின் காணொலிகளிலும் தினமும் இடம்பெறுகிறது. எடுப்பதும் மறிப்பதும் பறிப்பதும் எழுவதும் வீழ்வதும் உயிரிகள் இயல்பு.
அவ்வளவுதான். தேநீர் இடைவேளை நிறைவுற்றது.
Comments
Post a Comment