Skip to main content

பாழ் மனம்



ஏழாவது தடவையாக தொலைபேசி மணி அடித்தபோதே தயங்கியபடி எடுத்தேன். அம்மா. “வீட்ட வந்திட்டியா?” என்று கேட்டார். “சாப்பாடு என்ன பிளான்?” என்றார். “நேத்தையான் புட்டு இருக்கு, கறிச்சட்டியும் கிடக்கு. பிரட்டிட்டு முட்டையையும் பொரிச்சா விசயம் முடிஞ்சுது” என்றேன். “சித்தப்பாவிண்ட தமையன் இறந்துபோனார், எடுத்துக் கதைச்சியா?” என்றார். “இல்லை” என்றேன். “அண்ணாவோட கதைச்சியா?”. “இல்லை”. “ஹீட்டர் சரியா வேலை செய்யேல்ல எண்டனி, பேசினியா?”. “இல்லை”. “சரி, நாளைக்குத் தோசைக்குப் போட்டிருக்கு, ரெண்டு பெரும் வந்திடுங்கோ” என்றுவிட்டு கட் பண்ணிவிட்டார்.

தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏழு தடவைகளும் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை என்று அம்மா என்னிடம் கேட்கவேயில்லை. சித்தப்பாவோடு ஏன் பேசவில்லை என்றும் திட்டவில்லை. “இவனைத் திருத்தமுடியாது” என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம்.

அம்மா எப்போதுமே இப்படித்தான். சிறுவயதிலும் வகுப்பிலிருந்து திரும்ப சற்றுத் தாமதமானால்கூட வீட்டின் வெளியே கேற்றுத் தூணில் வந்து நின்று ஒழுங்கை முகப்பைப் பார்த்தபடி காத்திருக்க ஆரம்பித்துவிடுவார். சமயத்தில் அரை மணிநேரம், ஒரு மணிநேரம், மூன்று மணிநேரங்கள்கூட தாமதமாக வீடு திரும்பியிருக்கிறேன். அந்தக் காத்திருத்தலில்தான் அவருக்கு எத்தனை கவலைகள் வந்து போயிருக்கும்? டியூஷனில் பிரச்சாரம் நடந்திருக்கலாம். இவன் எடுபட்டுப்போயிருப்பானோ? சைக்கிளை மாத்திரம் கொண்டுவந்து கொடுக்கப்போகிறார்களோ? வழியில் எங்காவது விபத்து நடந்துவிட்டால்? பலாலியிலிருந்து செல் அடிக்கிறான். எந்நேரமும் பொம்மர் வரலாம். இவன் எங்கு போய்விட்டான்? எத்தனை சாத்தியங்கள் மீண்டும் மீண்டும் மனதில் சுற்றியிருக்கும்? இருப்புக் கொள்ளாமல் தவித்திருப்பார். ஆனால் ஒழுங்கை முகப்பில் என் சைக்கிளைக் கண்டதும்தான் தாமதம், உடனேயே உள்ளே போய் கேத்திலை அடுப்பில் வைத்துவிடுவார். தேத்தண்ணி ஊற்றுவதற்கு. என்றைக்குமே “ஏன் இவ்வளவு லேட்?” என்று கேட்டதில்லை. கேட்டிருந்தாலும் பொய்தான் சொல்லியிருப்பேன்.

என்னோடு என்றில்லை, பொதுவாக எல்லோரிடமும் அம்மா அளவாகத்தான் பேசுவார். பிறந்தநாள் வைபவங்களில் கைப்பையை மடியில் வைத்து, அதன்மேல் கைகளைக் குறுக்கே கட்டியபடி மற்றவர்களின் கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் உருவம் வந்துபோகிறது. இந்தப் பிம்பம் அம்மாவைத்தெரிந்த எல்லோருக்குமே பரிச்சயமானதாக இருக்கும். ஏதாவது கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தையில்தான் பதில்வரும். புத்தகம் புத்தகமாக வாசித்துக் குவித்தாலும் ஒரு வரி விமர்சனம்கூட அம்மாவிடமிருந்து வெளிவராது. “புதிய சொல்” பிரதியை இரண்டு நாள்களுக்கு முன்னமேயே அவரிடம் கொடுத்துவிட்டேன். “விளமீன்” நிச்சயம் வாசித்திருப்பார். அதில் வருகின்ற விளமீன் சமையல் பற்றிய விவரணங்கள் எல்லாம் அவரின் சமையலில் இருந்து கொறித்ததுதான். மீனரிவாளால் செதில் உடைக்கும் காட்சியில்கூட அம்மாவை இலகுவாக பொருத்திப்பார்க்கலாம். அவருக்கும் வாசிக்கும்போது இது தெரிந்திருக்கும். கதைகூட சிலவேளை பிடித்துப்போயிருக்கலாம். ஆனால் ஒருபோதும் சொல்லமாட்டார். அம்மாவுக்கு வாசிப்பு என்பது குளத்தில் போட்ட கல். உள்ளே அது கிடந்து, பாசி படிந்து, உயிர்கள்கூட ஜனித்திருக்கும். கல்லைப் பிரட்டிப்பார்த்தால் உள்ளிருந்து சிறு நண்டுகளும் நத்தைகளும் சிப்பிகளும் வாய் திறக்கும். ஆனால் வெளியிருக்கும் எவருக்கும் எதுவுமே தெரியவராது. மிகவும் வலிந்துகேட்டால் “நல்லா இருக்கு” என்பார். அவ்வளவுதான்.

அம்மாவின் இந்த அளவெடுத்த தொடர்பாடல் குணம் எனக்கும் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை இப்போதெல்லாம் உணர்கிறேன். மனிதர்களோடு பேசுவது என்பது கொல்லக்கொண்டு செல்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தொலைபேசி உரையாடல்கள். என் கைத் தொலைபேசியை இப்போதெல்லாம் சைலன்ஸ் மோடில்தான் வைத்திருக்கிறேன். அதனுடைய ரீங்காரம் மிகுந்த பதட்டத்தைக் கொடுக்கிறது. அறிமுகமே இல்லாத அழைப்புகள்முதல் பெற்ற அம்மாவின் அழைப்புவரை எல்லாமே அடிவயிற்றைக் கலக்குகிறது. ஒவ்வொரு அழைப்பையும் ஒத்திப்போடவே மனம் விரும்புகிறது. பிறகு எடுக்கலாம், பிறகு எடுக்கலாம் என்று பின்னர் அழைப்பை எடுக்காமலேயே விட்டுவிடுகிறேன். இதனால் பலவற்றை இழந்திருக்கிறேன். நண்பர்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பல நல்ல விடயங்கள், அழைப்புகள் மிஸ்ஸாகி இருக்கின்றன. என் இவ்வியல்பு விளங்கி ஈமெயிலில் மாத்திரமே என்னோடு தொடர்பு கொள்பவர்களும் உள்ளனர்.

அண்மையில் போஸ் ஹெட்போனைத் தேடி ரசித்து வாங்கினேன். ஒரு ஹெட்போனுக்கு அவ்வளவு விலை கொடுக்கவேண்டுமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் அதன்மீதான ஆர்வம் உள்ளுணர்வுடன் கூடியது என்பது பின்னர் புரிந்தது. அதனை அணிந்திருக்கும்போது உலகம் பல ஒளியாண்டுகள் தொலைவில் ஓடிப்போய் உட்கார்ந்துகொள்கிறது. எதுவுமே கேட்பதில்லை. மனிதர்களின் பேச்சு, ஹீட்டரின் மெல்லிய ரீங்காரம், வாகன இரைச்சல் என எதுவுமே அதை அணிந்திருக்கும்போது கேட்பதில்லை. ஒரு நட்சத்திரத்தைப்போல அப்போது உலகத்தை ரசிக்கமுடிகிறது. மனிதர்களின் போலித்தனங்கள் தூரத்தில் மறைந்துவிடுகிறது. சமயத்தில் எந்த இசையையும் கேளாமல் வெறுமனே அதை ஓன் பண்ணி அணிந்திருப்பேன். அப்போது நானும் நிசப்தமும்தான். எல்லையில்லாப் பெருவெளியில் ஒரு மெல்லிய சலனமாக நான் தனியே மிதப்பதுபோன்ற சூழ்நிலை. அந்நிலையில் வேலையும் மிகுந்த நுட்பத்துடன் இடம்பெறும்.

நான் ஏன் இப்படி இருக்கிறேன்? மனிதர்களோடு எனக்கு என்னதான் தகராறு? என்னைச்சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே என் மீது அபிமானமாகவே இருக்கிறார்கள். எனக்கு நல்லதையே நினைக்கிறார்கள். ஆனாலும் அவர்களோடு தொலைபேசியில் உரையாடுவதை நினைக்கும்போது மிகப்பெரிய அசூயை உருவாகிறது. “யூ ஆர் அன் இன்ட்ரோவேர்ட்” என்று ஒரு விளக்கம். “நேரில் காணும்போது சிரித்துப்பேசுகிறேனே?” என்பதற்கு “அது நான் அணியும் மாஸ்க்” என்று மேலதிக விளக்கம். இதனால் பலருக்கு, அவர்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. தெரியவேண்டும் என்பது இல்லை. விளங்கமுடியா மனிதராய் இருப்பது சமயத்தில் அர்த்தமில்லாப் பெருமையைத் தருகிறது. அடுத்தகணம் பெருத்த பதட்டத்தையும் அது கொடுக்கிறது. “புரோகிராமிங், அதைவிட்டா புத்தகங்கள், இப்பிடியே இருந்தால் மனிதர்கள் எப்படிச் சுவருவார்கள்?” என்கிறாள் மனைவி.

உலகத்தை எவ்வளவு நாள்களுக்குத்தான் ஒரு நட்சத்திரத்தை ரசிப்பதுபோலத் தூரத்தில் வைத்து ரசித்துக்கொண்டிருக்க முடியும்? அடர்காட்டுக்குள் அலைகிறேன் என்று பொய்சொல்லிக்கொண்டு எத்தனைகாலம்தான் பாலைவனத்தில் பயணம் செய்வது? தெரியவில்லை. இது ஒரு மாற்றிக்கொள்ளும் இயல்பா என்றும் தெரியவில்லை. அம்மா வீட்டு புத்தகப்பெட்டி பயமுறுத்துகிறது. திருவிழாக்கூட்டத்தில் பக்கத்து மனிதரின் பெயரை விசாரித்துப்பார்த்தால்தான் என்ன? நத்தைக்கூடு என் வியர்வையில் கசிந்து ஊற்றுகிறது. புத்தகங்களை எல்லாம் எரித்துவிட்டு அவற்றின் சாம்பலை மனிதர்களின் காலடியில் கொட்டவேண்டும் என்று மனம் உந்துகிறது. மனிதர்கள் வேர்விட்டு விருட்சமாகி கிளைகள் பரப்பட்டும். அக்கிளைகள் காற்றில் வீசி அடிக்கட்டும். அவை வானத்தை மூடி நிற்க, கீழிருக்கும் இருளை மின்மினிப் பூச்சிகளும் ஒளிக்கீற்றுகளும் அகற்றட்டும். அந்த மனிதர்களின் அடர்காட்டுக்குள் ஒரு மந்தியைப்போல கொப்பு விட்டுக் கொப்புத்தாவி எல்லோரோடும் அளவளாவிட மனம் எண்ணுகிறது. ஒவ்வொரு கிளையோடும் உறவாடி, கதைகள் பல பேசி, சிரித்து, முறைத்து, அழுது, அரற்றி... நினைக்கவே உற்சாகமும் கிளர்ச்சியும் ஏற்படுகிறது.

அதை இன்னொருநாளைக்கு ஒத்திப்போடலாம் என்று ஏனோ இந்தப்பாழும் மனம் ஈற்றில் முடிவெடுக்கிறது.

Comments

  1. இந்த இரண்டு வருடத்தில் எதாவது மாற்றம் ?????? நிச்சயமாக இருக்காது என்பது என் கணிப்பு.
    எழுத்தாளர்கள் பலர் தமக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி அதில் அவர்கள் வலம் வருவதால் தான் தனித்தன்மையுடனான பதிவுகளை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம் . இது நமக்கான சுயநலம் .அவர்களை பற்றி சிந்தித்தால் ..... பாவம் தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...