நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது? முதல் வரியினூடாகத்தான். “We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling. In Faha, County Clare, everyone is a long story” இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.