எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது. முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.