Skip to main content

பால் சமத்துவத் திருமணங்கள்



“பால் சமத்துவத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிக்கவேண்டுமா?” என்கின்ற தபால்மூலக் கருத்துக்கணிப்பு ஒன்று அவுஸ்திரேலியாவில் விரைவில் இடம்பெற இருக்கிறது. தீவிரமான ஆதரவு, எதிர்ப்புப் போராட்டங்கள், இருபெரும் அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைகள், நீதிமன்ற வழக்குகள் என்று இந்தப்பிரச்சனையில் அவுஸ்திரேலியா ஒரு தீர்வினை எட்டமுடியாமல் தள்ளாடினாலும்கூட தொடர்ச்சியாகச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப்பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆங்கில ஊடகங்களிலும் சமூக அமைப்புகள் மத்தியிலும் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் மிக ஆழமாக இடம்பெறத்தொடங்கிவிட்டன. கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவுப்பு வெளிவந்தபின்னர் “வேண்டும்” என்கின்ற பிரிவும் “கூடாது” என்கின்ற பிரிவும் தத்தமக்கு ஆதரவுதேடி மிகப் பரவலான பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. ஆனால் அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் இதுபற்றியக் கலந்துரையாடல்கள் இன்னமும் பரவலாக இடம்பெறத் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நாம் வாழும் சூழலில் இடம்பெறுகின்ற, நம்மோடு வாழுகின்ற சக மனிதர்களின், அதுவும் சிறுபான்மை மனிதர்களின் உரிமைசார்ந்த ஒரு விடயத்தை, நாளைக்கு நம் வீட்டுக்குள்ளும் நாம் எதிர்கொள்ளக்கூடிய ஒரு விடயத்தைப்பற்றித் தொடர்ச்சியாக பேசவேண்டியதும் கலந்துரையாடுவதும் அதுபற்றிய விழிப்புணர்வை நம்மிடையே ஏற்படுத்துவதும் முக்கியமான ஒன்று என்று படுகிறது.

“Marriage Equality” என்கின்ற ஆங்கில பிரயோகத்துக்குத் தமிழில் ஒரு சரியான வார்த்தையைத் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. இது நம் வரலாற்றில் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத ஒரு விடயம் என்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இன்னமும் இதுபற்றிய ஒரு திறந்த வெளிப்படையான உரையாடல் நம்மிடையே இடம்பெறாமல் இருப்பதும் இன்னொரு காரணம். பரவலாகப் பயன்படுத்தப்படும் “ஒருபால் திருமணம்”, “சமபால் திருமணம்”, “தற்பால் திருமணம்”, “ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம்” என்கின்ற வார்த்தைகளில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் இவ்வகைத் திருமணங்கள் ஒரே பாலினருக்கிடையேதான் இடம்பெறவேண்டும் என்றில்லை. அது வெவ்வேறு பாலினரான ஒரு திருநங்கைக்கும் ஆணுக்குமிடையேகூட இடம்பெறலாம். “Marriage Equality” க்குச் சரியான தமிழ்வார்த்தை கிடைக்கும்வரை இப்போதைக்கு அதனைச் “திருமணத்தில் பால் சமத்துவம்” என்று வைத்துக்கொள்வோம். “திருமணத்தில் பால் சமத்துவம்” என்பதை, ஒரு மனிதர் சுய பிரக்ஞையோடு தனக்குப் பிடித்த சக மனிதரைப் பால்வேறுபாடின்றி மணம் முடிப்பதற்கான உரிமை என்று வரையறை செய்துகொள்ளலாம். அது ஆணும் ஆணுமாக இருக்கலாம். பெண்ணும் பெண்ணுமாக இருக்கலாம். ஆணும் பெண்ணுமாக இருக்கலாம். திருநங்கையும் திருநங்கையுமாக இருக்கலாம். திருநங்கையும் ஆணுமாக இருக்கலாம். திருநங்கையும் பெண்ணுமாக இருக்கலாம். இப்படி இதிலுள்ள அத்தனை சாத்தியங்களையும் இணைத்துக்கொள்ளலாம். அடிப்படை விடயம் ஒன்றுதான். திருமண வயதை எட்டிய ஒரு மனிதர் பால்வேறுபாடுகளின்றித் தான் விரும்பும் சக திருமண வயதை எட்டிய மனிதரை மணம் செய்யும் உரிமை. 

இந்த விடயத்தில் பலருக்கு அடிப்படையிலேயே முரண்பாடு உள்ளது. உறவு என்பது, குறிப்பாகப் பாலியல் ஈர்ப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலானது. அதுதான் இயற்கை. டார்வினின் கூர்ப்பு விதி உண்மை எனின், உயிரிகளின் பிழைப்புக்கும் அதுவே அவசியமானது. ஆக சக பாலினருக்கிடையிலான ஈர்ப்பு என்பது இயற்கைக்கு விரோதமானது. அது போலி. மன விகாரம். அதை அங்கீகரிக்கவே கூடாது. இப்படி ஒரு எண்ணம் பலருக்கும் உண்டு. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பாலியல் ஈர்ப்பைத் தவிர்த்து மீதி எல்லாமே உயிரிகளின் நீட்சிக்கு உதவிசெய்யமாட்டாது என்கின்ற வாதத்தில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. ஆனால் உயிர்களின் நீட்சிக்கு உதவாது என்பதற்காக ஒரு உடலியற்கூறை இயற்கைக்கு விரோதமானது எனலாமா? அப்படியாயின் உலகில் “அல்பா மேல்” உயிரிக்கு மாத்திரம் வாழத்தகுதி இருக்கிறது என்று அர்த்தம் வந்துவிடுகிறதல்லவா? ஊனம் என்கின்ற வார்த்தையைக் காலாவதியாக்கி மாற்றுத்திறன் என்று அதை மீள்வரையறுத்தவர்கள் இதனை மாத்திரம் இயற்கைக்கு விரோதமானது என்று எப்படிச்சொல்லமுடியும்?



சக பாலினரோடு ஏற்படும் ஈர்ப்பு என்பது போலித்தனமான நாகரிகத்தின் பக்க விளைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அது உண்மை அல்ல. பாலியல் ஈர்ப்பு என்பது ஹோர்மோன்களின் சுரப்புகளில் அளவு வேறுபாடுகளால் ஏற்படுவது. ஈர்ப்பு, காதல், அதன் நீட்சியான உடலுறவு என எல்லாமே உயிரின விருத்திக்கான ஆதாரமான செயற்பாடுகள்தாம். மிகச்சிக்கலான, பல மில்லியன் ஆண்டுகாலக் கூர்ப்புச் செயற்பாட்டின் விளைவு இது. யோசித்துப்பாருங்கள், ஒரு ஆணும் பெண்ணும் கண்டு, ஒருவர்பால் மற்றவர் ஈர்க்கப்பட்டு, கவிதை எழுதி, கதைகள் பல பேசி, ஒருவர் இல்லாமல் மற்றவருக்கு வாழ்வே இல்லை என்ற எண்ணம் வந்து, பேசிப் பழகித் தொட்டுத் தழுவி இறுதியில் உடலுறவுகொள்ளும் அந்தப் புள்ளிவரை எத்தனை ட்ரில்லியன் உயிரியல், சூழல், சமூகச் சாத்தியங்கள் சரியான புள்ளிகளில் அமைந்திருக்கவேண்டும்? வெறும் புரதக் குழம்பிலிருந்து ஆரம்பித்து இந்தப்புள்ளியை அடைய எவ்வளவு கூர்ப்புப் புள்ளிகளை இயற்கை கடந்திருக்கவேண்டும்? இதற்காக எத்தனைவகை சாத்தியங்களை இயற்கை பரிசோதித்திருக்கும்? இயற்கையின் அந்தவகைப் பரிசோதனைகளின் ஒரு சாத்தியம்தான் ஒருபாலினருக்கு இடையேயான ஈர்ப்பு என்பது. இவர்களிடம் சுரக்கும் ஹோர்மோன்களின் அளவு, பெரும்பான்மையான ஆண்,பெண் ஈர்ப்பாளர்களிடமிருக்கும் அளவைவிட வேறுபட்டது. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த ஒன்று. இயல்பு. இது ஒரு தனிநபரின் சொந்தத் தேர்வு அல்ல. ஒரு ஆண், இன்னொரு ஆணுடனா அல்லது பெண்ணுடனா காதல்கொள்ளவேண்டும் என்பது அந்த ஆணின் புத்திசார்ந்த தேர்வு அல்ல. யாரைப்பார்க்கையில் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. உயிரியல்கூறுகளில் நிச்சயிக்கப்படுகிறது. சமூகச்சூழல் சார்ந்தது. இங்கே தெரிவுக்கு இடமில்லை. எப்படி ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஈர்த்துக்கொள்வது இயற்கையின் தேர்வோ அதுபோலவே ஒரு பெண்ணும் பெண்ணும் தம்மிடையே ஈர்ப்படைவதும். பல தசாப்தகால விஞ்ஞான, சமூக ஆய்வுகளின் கண்டறிதல்களின் பின்னரான முடிபு இது. சமூகச் சூழலும் இதற்குப் பங்களிக்கிறது. இல்லாமலில்லை. ஆனால் ஒரு பெண் தன்னை ஆணாக உணருகின்ற நிலையைத் தனியே சமூகக்காரணிகள் மாத்திரம் தீர்மானிக்கமுடியுமா என்ன? உடலியலே இதில் அதீத பங்கு அளிக்கிறது. எம்மில் பலருடைய உய்த்துணர்வுக்கு எதிர்மறையாக இது இருப்பதால் இதனை ஏற்க மறுக்கிறோம். நம்மில் பலரைப்போல இவர்கள் இல்லாததால் இவர்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சொல்லப்போனால் அவர்களாலேயே தம்மைப் புரிந்துகொள்ளமுடியாமற்போவதற்கும் இந்த உய்த்துணர்வே காரணமாகிறது. பல நூற்றாண்டு கால சமூக முன்முடிபுகளின் “Semantic Memory” கொடுக்கும் தாக்கம் இது. இலகுவில் அதனைப் புறந்தள்ளுதல் கடினம். ஆனால் அதனை முயற்சி செய்வது முக்கியம். எல்லாச் சமூக முன்னேற்றங்களும் அதற்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட உள்ளுணர்வுகளையும் முன்முடிபுகளையும் நிராகரிக்க முடிந்ததாலேயே சாத்தியமாயின. அல்லாவிட்டால் நாம் இன்னமும் யானைகள் தாங்கும் தட்டையான பூமியிலேயே வாழ்ந்துகொண்டிருப்போம் அல்லவா.

கேள்வி மிகச்சிறியது. நம்மோடு கூடப்பிறந்து வாழும் சக மனிதரை அவருடைய உடலியற்கூற்றைக் காரணம்காட்டி நிராகரிப்பதும் அவருடைய உரிமையை மறுப்பதும் எந்தளவுக்கு நியாயமானது?

ஆண், பெண் தவிர்ந்த ஏனையவகைப் பாலீர்ப்பைப் புதிதாக முளைத்த நவநாகரிகத்தின் விளைவு என்று பலர் சொல்லுவதுண்டு. ஆண் பெண் உறவினைத் தவிர்த்து வேறு எந்த உறவுகளையும் சமூகம் சில தசாப்தங்களுக்கு முன்னர்வரை வெளிப்படையாக அங்கீகரித்ததில்லை. ஆனால் ஓரளவுக்கு எல்லா நாகரிகங்களிலும் இந்த உறவுகள் காலங்காலமாக இருந்து வந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன. மனுநீதியில் ஆணுடன் ஆண் புணர்வது பாவச்செயல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காமசூத்திரத்திலும் இதுபற்றியத் தகவல்கள் இருக்கின்றன. கங்கை நதியை பூமிக்குக் கொணர்ந்த பகீரதன் இரு பெண்களுக்கு பிறந்தவன் என்று ஒரு கதை உண்டு. இந்துச் சமுதாயத்தில் நிலவும் ஐயப்பசாமியின் பிறப்புப் பற்றியக் கதைகளை எதேச்சையாக அமைந்த ஒன்றாகக் கருதமுடியவில்லை. அதற்குப்பின்னாலே யாரோ ஒருவரின், ஒரு குழுவின் செயற்பாடு இருந்திருக்கவே வேண்டும். வெறும் ஊகம்தான். ஒருபாற்சேர்க்கையாளர்களைச் சமூகம் ஒதுக்கிவைத்த நிலையில், அவர்களுக்குச் சமூகத்தின் வாய்ப்புகள் அத்தனையும் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஊருக்கு வெளியே தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தமக்காக எங்கோ தொலைவில் காட்டு எல்லையில் ஒரு கோயிலை அமைத்திருக்கலாம். தமக்கான ஒரு பெரிய கடவுளைச் சிருட்டித்திருக்கலாம். தம் கடவுளுக்கு என்று கதைகள் இட்டுக்கட்டியிருக்கலாம். ஆன்மீகக்கதைகள் எல்லாமே சமூகத்திலிருந்து சமூகத்துக்காகச் சொல்லப்பட்டவைதானே. கடவுள்கள் நம்பிக்கை கொண்டவருக்காக மீண்டும் மீண்டும் பற்பல வடிவங்களில் அவதாரங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது நம்பிக்கை கொண்டவர்கள் தமக்கான கடவுளரை எப்போதும் அவர்களுக்கு வேண்டிய வடிவில் சிருட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் அப்படியான ஒன்றாகவே இருக்கலாம். சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவில் பெரும்பகுதியை தன் அதிகாரத்துக்குள் வைத்திருந்த அலாவுதீன் கிஞ்சி என்கின்ற சுல்தானுக்கும் அவருடைய தளபதியான மாலிக்கபூருக்குமிடையேயான தொடர்பு மிகத் தெளிவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அலாவுதினின் மகனான முபாரக் கிஞ்சிக்கும் குஸ்ருவுக்குமிடையிலான தொடர்பும்கூட மிகப் பிரசித்தமானது. கஜிராகோ ஓவியங்களில் ஒருபாற்சேர்க்கை ஒரு கலையாகவே கொண்டாடப்பட்டுள்ளது. இதைப்போய் மேலைத்தேய நாகரிகத்தின் எச்சம் என்று குறிப்பிடுவது எவ்வளவு அபத்தம்?



கிரேக்க நாகரிகத்தில் சமபாலீர்ப்பு என்பது பரவலாகவே இடம்பெற்றுள்ளது. அலக்சாண்டர் முதல் பிளேட்டோவரை பலர் ஒருபாற்சேர்க்கையாளர்கள் என்கின்ற கருத்து இருக்கிறது. “ஆண்கள் காதல் செய்வதற்கும் பேசித்தீர்ப்பதற்கும் உகந்தவர்கள். பெண்கள் குழந்தை பெறுவதற்கே தகுந்தவர்கள்” என்ற வகையாக ஆண்கள் எழுதிய கவிதைகள் கிரெக்கத்தில் உண்டு. சபோ என்கின்ற பெண் கவிஞர் பெண்களை நோக்கி எழுதிய காதல்கவிதைகள் வரலாற்றுப் பிரசித்தமானவை. லெஸ்பியன் என்ற வார்த்தையே சபோவின் ஊரான லெஸ்போ தீவின் பெயரிலிருந்து எடுக்கப்பட்டதுதான். சபோவின் கவிதைகளில் எப்போதுமே பிரிவுத் துயர் இருக்கிறது. பாலைத்திணை. வெள்ளிவீதியார் வகை. சங்ககாலத்துக்கும் முன்னையவை அவை. ஒரு உதாரணம். ஆதாரத்தைக் குலைக்காமல் கொஞ்சம் சுதந்திரம் எடுத்து மாற்றியிருக்கிறேன். 

“அவளிடமிருந்து 

ஒரு வார்த்தைகூட இன்னமுமில்லை. 

சத்தியமாகச் சொல்லுகிறேன் – நான் 

செத்துப்போயிருக்கவேண்டும். 

அவள் பிரிந்தபோது. 

அவள் அழுதபோது.

நான் செத்துப்போயிருக்கவேண்டும். 

போ. போய் மகிழ்ந்திரு. 

ஆனால் 

ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. 

நீ யாரை விட்டுப் பிரிந்துபோனாயோ – அவள் 

காதலால் இன்னமும் உடைந்தே கிடக்கிறாள்” 

இப்படி நீளுகின்ற அந்தக் கவிதை முழுதும் பிரிந்துபோன காதலிபற்றிய ஏக்கமே நிரவிக்கிடக்கிறது. இரண்டு தடவைகள் வாசிக்கத்தான் கொஞ்சம் பொறி தட்டியது. அவள் சபோவை விட்டுவிட்டு ஏன் பிரிந்துபோயிருப்பாள்? ஒருவேளை திருமணம் முடித்துக் கணவனோடு போயிருக்கலாம் அல்லவா? சபோவின் அந்தக்கவிதை முடியும் வரிகளில் அது கொஞ்சம் வெளிப்படும். 

“நாமிருவரும் இல்லையேல் 

அசரீரிகள் ஒலிக்கப்போவதில்லை.

தேவர்கள் வேதம் ஓதப்போவதில்லை. 

வசந்த காலத்தில் 

வூட்லட் மரங்கள் பூக்கப்போவதுமில்லை.” 

ஒருபால் உறவாளர்களை வஞ்சிப்பதிலும் தண்டிப்பதிலும் வரலாறு ஆண் பெண் பேதம் பார்த்ததே கிடையாது. சென்ற நூற்றாண்டில் புகழ்பெற்ற கணிதவியலாளரும் சங்கேதவார்த்தைகளை உடைப்பதில் நிபுணருமான (code breaker) அலன் டியூரிங் ஒரு ஒருபாற்சேர்க்கையாளர். அந்த ஒருவிடயத்தை மாத்திரம் காரணம்காட்டி அவரை வாழ்வுமுழுதும் பணயம் ஆடினார்கள். நாசிக்களின் சிக்கலான சங்கேத சமிக்ஞைகளை தயாரிக்க உதவிய மிக நுட்பமான எனிஜ்மா அல்கோரிதத்தை உடைத்த பெருமையை உடைய மனிதருக்கு வாழும் காலத்தில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. போருக்குப்பின்னர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டமைக்காக நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு டியூரிங் தண்டிக்கப்பட்டார். தண்டனை மிகக்கொடூரமானது. அவருடைய பாலியல் ஈர்ப்பைக் குறைப்பதற்கான இரசாயன மருந்தை உட்கொள்ளவேண்டும் (Chemical Castration). அதன் பக்கவிளைவுகள் உடலைத் துவட்டிப்போட்டுவிடும். அந்தத் துன்பம் தாங்கமுடியாமல் நாற்பத்திரண்டு வயதில் அந்தக் கணிதமேதை சயனைட் அருந்தித் தற்கொலை செய்தார். 



இவை எல்லாம் சில உதாரணங்கள்தான். ஒருபாற் சேர்க்கையாளர்கள் கல்லால் எறியப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதும், அவர்களுக்குச் சமூகத்தின் அத்தனை மட்டங்களிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும் காலம் காலமாக இடம்பெற்று வரும் ஒன்று. ஆனால் இன்றைக்கு ஓரளவுக்கு நிலைமை பல நாடுகளில் மாறிவிட்டது. அப்பிள் நிர்வாகி “டிம் குக்” தான் ஒரு ஒருபாற்சேர்க்கையாளர் என்று பகிரங்கமாகவே தன்னை அறிவித்துக்கொள்ளக்கூடியச் சமூக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியச் செனட்சபையின் எதிர்க்கட்சித் தலைவரான “பென்னி வோங்” ஒரு ஒருபாற்சேர்க்கையாளர். அவருக்கும் அவருடைய பல்கலைக்கழகக்காலத்துத் தோழிக்கும் இரண்டு குழந்தைகளும் இப்போது உண்டு. இந்த மனிதர்களின் உரிமை பற்றி, பிரச்சனை பற்றி பொதுவெளியில் பேசக்கூடிய சூழ்நிலை உள்ளது. நான் பணிபுரியும், பணிபுரிந்த அலுவலகங்களில் பல ஒருபாற்சேர்க்கையாளர்களும் பணிபுரிகிறார்கள். திருநங்கைகள் பணிபுரிகிறார்கள். அவர்களோடு எந்தப் பேதமும் இல்லாமல் நட்புடன் சங்கடமில்லாமல் பழகும் பக்குவத்தை அவுஸ்திரேலியச் சமூகம் எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த விடயம் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. “மினோஸா” என்ற சிறுகதை அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே. 

அவுஸ்திரேலியாவில் ஒருபாற்சேர்க்கையாளர்கள் ஒன்றாக வாழலாம். பழகலாம். அவர்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். “De-facto Relationship” என்பதன்கீழ் அவர்களுடைய குடும்ப உறவும் அங்கீகரிக்கப்படுகிறது. வீடு வாங்குவதற்கான வங்கிக்கடன்கள் இருவருக்கும் சேர்த்துக்கொடுக்கப்படுகிறது. சில மாநிலங்களில் அவர்கள் குழந்தைகளையும் தத்தெடுக்கலாம். அவர்களுடைய பாற்சேர்க்கையைக் காரணமாக வைத்து வேலைத்தளத்திலோ பொதுவிலே வேற்றுமை காட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இப்படி அவர்களுக்கு ஏறத்தாழ அத்தனை உரிமைகளும் இருக்கிறது. ஒன்றைத்தவிர. அவர்கள் இந்த நாட்டில் சட்டரீதியாகத் திருமணம் முடிக்கமுடியாது. சட்டம் அவர்களைக் கணவன் மனைவி என்று அங்கீகரிக்காது. அதாவது ஒரு பெண்ணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கை நடத்தலாம். ஒரு கூரையின்கீழ் குடியிருக்கலாம். வங்கிக் கடனிலிருந்து சமூக உதவித்தொகைவரை அத்தனை விடயங்களிலும் அவர்கள் ஒரு குடும்பமாகக் கருதப்படலாம். ஆனால் திருமணம் மாத்திரம் முடிக்கமுடியாது. அவர்களின் திருமணங்களை அங்கீகரிக்கவேண்டுமா இல்லையா என்பதே இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கணிப்பு. 

சமத்துவத் திருமணங்களை அங்கீகரிக்கக்கூடாது என்பதற்குப் பலவிதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன. இத்திருமணங்களை அதிகமாக எதிர்ப்பது மத அமைப்புகள்தாம். குறிப்பாக அரசியல் செல்வாக்கு மிகுந்த கத்தோலிக்க மத அமைப்புகள். ஏனைய மத அமைப்புகள் எதிர்த்தாலும் அவற்றின் எதிர்ப்புக்கு அவ்வளவு வலு இங்கு இல்லை. திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் நடத்தி வைக்கப்படுவது என்பது கத்தோலிக்கர்களின் பல நூற்றாண்டுகால மத நம்பிக்கை. அதில் திருத்தம் கொண்டுவர அவர்கள் தயாராக இல்லை. சமத்துவத் திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் கத்தோலிக்கத் தேவாலயங்களில் அவற்றைப் போதகர் செய்துவைக்கவேண்டிவர நேரிடும், மறுத்தால் அவர்களுக்கெதிராக சமத்துவச் சட்டங்கள் (laws against discrimination) பாயலாம் என்பது மத அமைப்புகளின் பயம். ஆனால் இந்தச்சட்டம் சமூகத் திருமணங்களுக்குத்தான் செல்லுபடியாலும், மதங்கள் செய்துவைக்கும் திருமணங்களைச் சட்டம் கட்டுப்படுத்தாது என்று அரசு எவ்வளவோ விளக்கிச்சொல்லிவிட்டது. அவர்கள் கேட்பதாக இல்லை. எதிர்ப்பதற்கு இன்னொரு காரணம் பாடசாலைகளில் கல்வித்திட்டங்கள் மாற்றப்பட்டுவிடும் என்பது. திருமணம் என்பதன் வரைவிலக்கணம் மாறிவிட்டால், அதனைத் தெளிவாகக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டி நேரிடும். சமயத்தில் அதுவே ஒருபாற்சேர்க்கை பற்றிய சிந்தனைகளை சிறுவர்கள் மத்தியில் தூண்டிவிடலாம். விடலைப்பருவத்தில் சமபால் மாணவர்களே ஒன்றாக விடுதிகளிலும், சுற்றுலாக்களின்போதும் தங்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் அல்லவா? சமபாலீர்ப்பு இச்சைக்குச் சமூகச்சூழலும் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால், இங்கே, நாமே அந்தச்சூழலை ஏற்படுத்திக்கொடுத்துவிடுகிறோமோ என்கின்ற கவலை எதிர்ப்பாளர்கள் மத்தியில் இருக்கிறது. இந்தக்கவலையில் உண்மையும் இல்லாமலில்லை. குழப்பமான விடலைப்பருவத்தில் குழந்தைகளுக்கு நாங்களே உந்துதலான சூழலை ஏற்படுத்திவிடக்கூடாதுதான். பாடத்திட்டங்களையும் கல்வி நிறுவனங்களின் சூழலையும் அதற்கமைய மிகக்கவனமாக அமைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு அரசுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் உள்ளது. அதே சமயம் திருமணம் என்கின்ற ஒன்றைத்தவிர மீதி எல்லா உரிமைகளும் ஒருபாற்சேர்க்கையாளர்களுக்கு இந்த நாட்டில் உள்ளது. அப்படியிருக்கையில் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவதால் இப்போதுள்ள சூழல் அப்படியே குலைந்துபோய்விடும் என்று விவாதிப்பது சற்று அதிகப்படி என்றே தோன்றுகிறது. 

மூன்றாவது காரணி குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது. முக்கியமான வாதம். ஒருபாற்சேர்க்கைத் தம்பதிகள் தத்தெடுப்பதன் மூலமோ, வாடகைத்தாய் அல்லது விந்துவங்கி மூலமோ குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அக்குழந்தைகளுக்கு இருபாற் பெற்றோர்கள் கிடைக்காமல் போய்விடும். ஒரு குழந்தைக்குத் தந்தை ஆணாகவும் தாய் பெண்ணாகவும் இருக்கவேண்டியது அதன் உரிமை. அது அந்தக் குழந்தையின் வளர்ப்புக்கு இன்றியமையாத ஒன்று. ஆகவே ஒருபாற்சேர்க்கையாளர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று ஒருவாதம் முன் வைக்கப்படுகிறது. ஜெர்மனியில் அண்மையில் இதேபோல ஒரு வாக்கெடுப்பு அரசுமன்றில் நடைபெற்றபோது ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல் இந்தக் குழந்தைகள் பிரச்சனையைக் காரணம் காட்டியே அதற்கெதிராக வாக்களித்தார். ஒரு ஆண் தந்தை, பெண் தாயைப்போலவே, ஒரு ஆண் தந்தை, ஆண் தாயும் பெற்றோர்களே. ஒரு ஆணுக்குத் தாயுணர்வு இருக்காதா? ஒரு பெண்ணுக்குத் தந்தை உணர்வு இருக்கமுடியாதா? என்று இதற்குப் பதில் வாதங்கள் வைக்கப்படுகின்றன. என்னளவில் இவ்வாதங்களை இப்பிரச்சனைக்குத் தக்க காரணங்களாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. திருமணம் என்பது வயதுவந்த இரண்டு பெரியவர்கள் தம்மிடையே எடுக்கும் முடிவு. அது அவர்களுடைய தெரிவு. ஆனால் பெற்றோர் என்பது குழந்தையின் தெரிவு இல்லை. ஆனால் ஒரு ஆணும், பெண்ணும்தான் குழந்தை பெற முடியும் என்பது இயற்கையின் தெரிவு. அப்படி இருக்கையில் ஒரே பாலினத்தவரே தாயாகவும் தந்தையாகவும் இருக்க முடிவு செய்வது விரோதமான ஒன்றாகவே எனக்குப் படுகிறது. திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினால், அடுத்ததாக குழந்தைகள் விவகாரம் கையில் எடுக்கப்படும் என்கின்ற எதிர்ப்பாளர்களின் வாதத்திலும் ஒருவித உண்மை உள்ளது. இதுபற்றிய தெளிவுபடுத்தல்களும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் அவசியமானவை. 

இந்த மூன்று வாதப்புள்ளிகளையும் தவிர்த்த ஏனைய வாதங்கள் எல்லாமே அடிப்படையற்றவை. “Appeal to fallacy”, “Appeal to fear”, “Slippery slope” வகை நாவலோ நாவல் வாத வழுக்கள். சமத்துவத் திருமணங்களை அங்கீகரித்தால் நாளை ஆண் குழந்தை பாடசாலைக்குப் பாவாடையோடு செல்ல ஆரம்பித்துவிடும் என்கின்றது ஒரு தொலைக்காட்சி விளம்பரம். Appeal to fear bullshit. ஒருபாற் சேர்க்கையாளர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பது இன்னொரு வாதம். Appeal to fallacy bullshit. தனிமனித ஒழுக்கம் என்பது குழப்பமான ஒன்று. ஆனால் வயதுவந்த இரு மனிதர்கள் மனமொத்து ஒரு விடயத்தை மற்றவரின் சுதந்திரத்தைப் பாதிக்காவண்ணம் செய்கையில் எவரும் கேள்வி கேட்கமுடியாது. தவிர ஆண், பெண் உறவாளர்களிடையே இருக்கின்ற அதே அறவொழுக்கம் ஒருபாற்சேர்க்கையாளர் மத்தியிலும் இருக்கிறது. அவர்களும் குடும்பமாகவே கூடி வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஒருவராக வாழ்கிறார்கள். மீறி ஒருவர் விலகிச்செல்லும்போது குடும்பம் பிரிகிறது. இது எல்லா பாலீர்ப்பாளர்களுக்கும் பொதுவான ஒன்றுதானே? இதெல்லாம் ஒரு நாகரிகத்தின் பான்சி விடயம், இதற்குத் தீனி போடலாகாது என்கின்றது இன்னொரு வாதம். இப்போது இதை அங்கீகரித்தால், நாளை மிருகங்களோடும் காதல்கொண்டு திருமணம் செய்யவேண்டும் என்று சொல்வோரையும் அங்கீகரிக்கநேரிடும் என்கிறது இன்னொரு வாதம். Slippery slope bullshit. உறவு என்பது இருமனங்கள் ஒத்துச் செய்யுமொன்று. இது எப்படி ஐந்தறிவு மிருகங்களுக்குச் செல்லுபடியாகும். சொல்லப்போனால் மிருகங்களை “Neutering” செய்து வீட்டில் வளர்ப்பதே வன்கொடுமையான விடயம். அதுபற்றிப் இன்னொரு கட்டுரையில் பேசலாம். 

சமத்துவத் திருமணங்கள் எதற்குத் தேவை? அதுதானே அவர்களுக்கு சகல அங்கீகாரங்களும் இருக்கின்றனவே.? ஏன் அவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கவேண்டும்? இது முக்கியமான கேள்வி. இதே மாதிரியான கேள்வியை என்னிடம் சிங்கள நண்பர்கள் எப்போதும் கேட்பதுண்டு. தமிழர்கள் கொழும்பிலே சிங்களவர்களோடு இணைந்துதானே வாழ்கிறார்கள்? அவர்களுக்கு எல்லா உரிமையும் இந்த நாட்டில் இருக்கிறதே? அப்புறம் ஏன் அவர்கள் தனிநாடு கேட்டுப்போராடுகிறார்கள்? என் பதில். “தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்ற தீர்மானத்தைத் தமிழரல்லாத இனமொன்று எடுக்கமுடியாது. இருப்பதை எவரும் கேட்பதில்லை. இல்லாததைத்தான் கேட்பார்கள். “எனக்கு இவ்வுரிமை வேண்டும்” என்று ஒருவர் கேட்கவேண்டிய நிலைமையே அபத்தமான ஒன்றாகப் படுகிறது. உரிமை என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் ஒரு விடயமே அல்ல. எடுக்கப்படும் விடயமும் அல்ல. ஆனால் இவ்விரண்டும் காலம்காலமாக உயிரிகளிடத்தில் இடம்பெற்று வருவது மனிதகுலச் சோகம். 

கொழும்பில் பிறந்து பின்னர் கனடாவில் குடியேறிய சியாம் செல்வதுரையின் “Funny Boy” என்கின்ற நாவல் அர்ஜி என்கின்ற தமிழ், ஒருபால் ஈர்ப்புடைய ஒருவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. சமகாலத்தில் வீட்டுக்கு வெளியே இனக்கலவரங்களும் ஒடுக்குமுறைகளும் இடம்பெறும்வேளையில் வீட்டுக்குள்ளே அர்ஜியின் புதிரான நடவடிக்கைகளால் அவன் கேலிக்குள்ளாகித் துன்புறுத்தப்படுகிறான். ஒரு பதின்ம இளைஞன், பெண்போல தன்னைப் பாவனை செய்வதும், ஆண்கள்மீது ஈர்ப்புக்கொள்வதும் விசனத்தோடு எள்ளி நகையாடப்படுகிறது. வெளியே இன அடக்குமுறை. உள்ளே பாலியல் அடக்குமுறை. இந்த இரண்டு புள்ளிகளினூடாக அந்த நாவல் நகர்ந்துசெல்லும். நாவலில் அர்ஜி சொல்லும் ஒரு வாக்கியம் மிக முக்கியமானது. 

“சரி பிழை, நல்லது கெட்டது போன்ற விடயங்கள் வரலாற்று அடிப்படையிலானவை அல்ல. அவை முன்னர் இப்படித்தான் நிலைமை இருந்தன என்பதற்கான ஆதாரங்களும் அல்ல. நான் என்னையும் செகானையும் நினைத்துப்பார்க்கிறேன். கராஜினுள்ளே நமக்குள் நடந்தவை தவறான விடயமே அல்ல. செகானை நான் காதலிப்பது எப்படித் தவறானதாக அமையும்? அது யாரின் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதில் தங்கியிருக்கிறது. எல்லாச் சரி பிழைகளும், எல்லா நல்லது கெட்டதுகளும் யாருடைய கையில் அதிகாரம் இருக்கின்றது என்பதிலேயே தங்கியிருக்கிறது. ஒருநாள் அந்த அதிகாரம் எம்முடைய கைகளில் வந்துவிழும் சாத்தியமும் இருக்கிறது!” 



“திருமணம் என்பது எமது உரிமை, அது மறுக்கப்பட்டு நாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்று ஒருபாற்சேர்க்கையாளர்கள் சொல்லும்போது, “உங்களுக்கு ஏன் இந்த உரிமை வேண்டியிருக்கிறது? மீதி எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறதே?” என்று அவர்களை நோக்கிச் சொல்லுவது என்பது அர்த்தமற்ற வீண்வாதம். சட்டத்துக்கு முன்னர் அனைவரும் சமம் எனின், இவர்கள் மாத்திரம் எப்படி சமனில்லாமற் போனார்கள்? இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர்வரை பெண்களின் நிலைமை இருந்தது. அதற்குமுன்னர் கறுப்பினத்தவர்கள். பூர்வீகக் குடிகள். அகதிகள். குடியேறிகள். தென்னாசியச் சமூகத்தின் இன, மத, சாதியக்கட்டமைப்புகள் இன்றைக்கும் மிக வலுவாக மனிதர்களைப் பிரித்துவைத்து ஒடுக்குமுறை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம்தான். ஆனால் அந்த “அனைவர்” என்ற பதத்துக்குள் யார் யாரெல்லாம் அடங்குவார்கள் என்பதையும் சட்டமே தீர்மானித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் சோகம். வரலாறும் காலமும் தொடர்ச்சியான புரட்சிகளும் போராட்டங்களும் அந்த “அனைவரும்” என்ற சொல்லின் வட்டத்தைப் வியாபித்துக்கொண்டே வருகின்றன. அந்த நெடிய போராட்டத்தின் இன்னொரு புள்ளிதான் சமத்துவத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்குவது என்பது. 

ஒருபாற்சேர்க்கையாளர்களை எந்தச் சங்கடமுமில்லாமல் தம் சமூகத்தின் சக மனிதராய் ஏற்றுக்கொள்வதை இன்றைக்கு உலக நாடுகளின் பல இனக்குழுக்கள் செய்யத்தொடங்கிவிட்டன. இந்த விடயம் பற்றிய ஒரு தெளிவான வெளிப்படையான பார்வையும் மனிதர்களிடத்தில் தோன்றிவிட்டது. ஆனால் நம் தமிழ் சமூகத்தில் அந்த நிலைமை இன்னமும் தோன்றவில்லை. இந்த விடயம் இன்னமும் ஒரு பேசாப்பொருளாக, வேண்டாதவேலையாக, தீண்டத்தகாத ஒன்றாகவே இருந்துவருகிறது. ஒருபால் ஈர்ப்பு உள்ளவர்கள் மிக அரிதாகவே தம்மை வெளிக்காட்டிக்கொள்ளமுடிகிறது. அதில் பலர் சமூகத்துக்காக, சமூகத்தின் போலித்தனத்துக்காக தம்முடைய பாலியல் ஈர்ப்பை மறைத்துக்கொண்டு மாற்றுப்பாலினரைத் திருமணமும் முடித்துத் தம்முடைய வாழ்க்கையையும் மற்றவர் வாழ்க்கையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தனிமனிதரின், ஒரு குழுவின் வாழ்க்கை இப்படிச் சீரழியும்போது போலியான முன்முடிபுகளால் கட்டப்பட்டிருக்கும் நம் நம்பிக்கைகளையும் உள்ளுணர்வுகளையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா? நாளை நம் வீட்டில் இப்படி ஒரு நிலைமை வரலாம் அல்லவா. நம் குழந்தைகளில் ஒன்று ஒருபாற்சேர்க்கையாளராக அமைந்துவிடும் சாத்தியம் இருக்கிறதல்லவா? அப்படி அமையும்பட்சத்தில் அந்தப்பிள்ளை சுதந்திரமாக இயங்குவதற்கான சமூகவெளியை நாம் ஏலவே அமைத்துவைத்திருக்கவேண்டியது முக்கியமல்லவா? அல்லது அதனுடைய உணர்வுகளையும் மலினப்படுத்தி, அடக்கியாண்டு ஒடுக்கிவைக்கப்போகிறோமா? 

சிந்திப்போம்.

000

தொடர்புள்ள பிற பிரதிகள்


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...