எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது.
முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.
முருகபூபதியின் “சொல்லமறந்த கதைகள்” தொகுதி எனக்கு மிக நெருக்கமான ஒன்று. அதன் வெளியீட்டு நிகழ்வில் நூலைப்பற்றிப் பேசியும் இருக்கிறேன். அதில் உள்ள “வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை” என்கின்ற கட்டுரை மிக ஆழமானது. கல்லை நகர்த்திப்போடுவது. எழுபதுகளில் ஜே.வி.பி எழுச்சியின்போது அவர்களுடைய பிரசாரமேடைகளில் பங்குபற்றிய அனுபவம், எண்பதுகளில் நீர்கொழும்பு, கொழும்பு பத்திரிகையாளர் வாழ்க்கை எல்லாமே சுவாரசியமானது. முக்கியமானது. முருகபூபதியின் ஞாபகசக்தியும் அபாரமானது. எல்லா எழுத்தாளர்கள், நண்பர்களின் படங்களையும் அவர் தன்னுடைய கணினியில் சேகரித்து வைத்திருக்கிறார். அதனாலேயே யாராவது இறக்கும்போது இரங்கல் கட்டுரை, கல்வெட்டு எழுதுவதற்கு முருகபூபதியை எல்லோரும் நாடுவதுண்டு. ஒருமுறை அவருடைய கணினியை நோட்டம் விட்டபோது என்னுடைய படம் ஒன்றும் சிரித்துக்கொண்டிருந்தது. அப்படி என்னதான் எழுதுவார்? “அன்புத்தம்பி ஜேகேயின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ....”. அபத்தம் அங்கிள்.
“சொல்லவேண்டிய கதைகள்” நூலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். வாசிப்பில் ஆர்வம் மிகுந்த மெல்பேர்ன் அக்காமார்கள் நால்வர் பேசப்போகிறார்கள். கலக்குங்கோ.
நூல் வெளியீட்டோடு முருகபூபதி பற்றிய ஆவணப்படம் ஒன்றும் வெளியாகிறது. ‘ரஸஞானி’ என்கின்ற இந்த ஆவணப்படத்தை இரண்டு மூர்த்திகள் தயாரித்து இயக்கியிருக்கிறார்கள். ஒருவர் ‘மறுவளம்’ எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி. மற்றையவர் புத்தகவிரும்பியும் ஒளிப்பதிவாளருமான மூர்த்தி. இருவரையுமே தனிப்பட்டரீதியில் அறிவேன். அவர்கள் இந்த ஆவணப்படத்தை எவ்வளவு சிரத்தையோடு தயாரித்தார்கள் என்பதையும் அறிவேன். காய்த்தல் உவத்தல் இன்றி, பயிர், களை என்ற வேறுபாடு பாராது எல்லாவற்றுக்கும் பெய்யும் மழைதான் முருகபூபதி. அவருக்கான ஒரு நன்றி சமர்ப்பணமே இந்த ஆவணப்படம். அதற்காக இரண்டு மூர்த்திகளுக்கும் அன்புகலந்த முத்தங்கள். நானும் இதில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறேன். எடிட்டிங்கின் பின்னர் இரண்டு மூன்று செக்கனாவது தேறியிருக்கும் என்று நம்புகிறேன்.
சனி மாலையை எதிர்பார்த்து.
000
30-09- 2017 - சனிக்கிழமை மாலை 5.30 மணி
மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில்
Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072
Comments
Post a Comment