எம். ஜி. சுரேஷ் காலமாகிவிட்டார்.
நண்பர் ஆனந்த் பாலாதான் முதன்முதலில் எம்.ஜி.சுரேஷை எனக்கு அறிமுகப்படுத்தியவர். ஆனந்த் எம்.ஜி.சுரேஷின் அதி தீவிர ரசிகர். எழுத்தாளர்களை ‘அவன், இவன்’ என்று உரிமைகொண்டாடும் வாசகர்.
“அவன் எம்.ஜி.சுரேஷ் இருக்கானே ஜேகே, தமிழ்ல ஒரு டான் பிரவுண் மாதிரி. செமயா இருக்கும். நீங்க வேணும்னா ஒரு தடவை வாசிச்சுப்பாருங்களேன்”
முதன்முதலில் வாசித்தது “அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்”. பிடித்திருந்தது. பின்னர் “அலக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்” கொஞ்சம் வாசித்தேன். ஏனோ நிறுத்திவிட்டேன். ஆனால் மிக நிதானமாக, துணை ஆராய்ச்சிகளோடு ரசித்து ரசித்துப் படித்தது “பின்நவீனத்துவம் என்றால் என்ன?” என்ற நூலைத்தான். வாசிப்பு வடிவங்களை (எழுத்து வடிவமல்ல) கட்டம் கட்டமாக வரலாற்றுக் காலக்கோட்டோடு விளக்கும் புத்தகம் இது. தெரிதாவும் பாத்தும் எம். ஜி. சுரேஷின் ஆதர்சங்கள். அந்தப்புத்தகத்தை வாசித்த சூட்டோடுதான் “புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்” என்ற கட்டுரை எழுதியதாக நினைவு. “வழிகாட்டிகளைத் தொலைத்தல்” கட்டுரையின் நதிமூலம்கூட எங்கேயாவது எம்.ஜி.சுரேஷ் நூலில்தான் இருந்திருக்கவேண்டும். ஞாபகமில்லை. தொடர்ச்சியாக “பொண்டிங்”, “மெல்லுறவு” என்று எழுதிய சிறுகதைகள் எல்லாம் அந்தப்புத்தகமும் அதன் நீட்சியான தேடலும் ஏற்படுத்திய காய்ச்சல்தான். எழுத்தாளர் கருணாகரனுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். “கந்தசாமியும் கலக்சியும்” அச்சுக்குத் தயாராகிய சமயம், முன்னுரைக்கு யாரையாவது அணுகலாமா என்று யோசித்தோம். எனக்கு “எம். ஜி. சுரேஷ்” அந்த நாவலை முழுமையாக உள்வாங்கி எழுதுவார் என்ற நம்பிக்கை இருந்தது. பின்னர் வேறொருவரின் முன்னுரை நூலுக்கு வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டேன்.
எம். ஜி. சுரேஷ் நிறையப் பரிசோதனை முயற்சிகளை எழுத்தில் மேற்கொண்டவர். “நிகாமாவின் கண்ணீர்”, “செய்திகள்” எல்லாம் அதற்குச் சிறந்த உதாரணங்கள். எனக்கென்னவோ சுரேஷ் பரிசோதனை முயற்சிகளோடு மாத்திரம் தன் படைப்புகளை நிறுத்திவிட்டாரோ என்று ஒரு எண்ணம். தன்னுடைய எழுத்து ஆய்வுக்கூடத்தை விட்டு அவர் வெளியே வரவேயில்லை என்று தோன்றுகிறது. இது வெறுமனே மூன்று புத்தகங்களை மாத்திரம் வாசித்துவிட்டுச் சொல்லும் கருத்து. முழுதும் வாசிக்கையில் என் அபிப்பிராயம் மாறுபடலாம்.
எனக்கு எம்.ஜி.சுரேஷ் கறுப்பா, சிகப்பா, இந்தியாவா, மலேசியாவா என்று எந்த விவரமும் தெரியாது. ஆனால் அவருடைய எழுத்தை வாசிக்கும்போது ஏனோ எழுத்தாளர் ஆதவனின் முகம் வந்து போவதுண்டு. சமயத்தில் போலோ கொயேல்லோகூட ஞாபகம் வருவதுண்டு. சுரேஷ் கொலம்பியாவில் எங்கோ ஒரு கோப்பித்தொட்டத்தில் முகாமையாளராக இருக்கிறார் என்று சொன்னாலும் நம்பியிருப்பேன். இப்போதும்கூட அவர் இறந்துபோன விடயம் முத்துக்கிருஷ்ணனின் நிலைத்தகவல்மூலமே அறிந்துகொண்டேன். அவர் மரணம் பெரிதாக என்னைப் பாதிப்பதாகவும் தெரியவில்லை. அவர்தானே ஆசிரியரின் மரணம் பற்றிப் படித்துப் படித்துச் சொன்னவர். தவிர அவருடைய ஏராளமான புத்தகங்களை இன்னமும் நான் வாசிக்கவில்லை. எப்போதோ எதேச்சையாக நூலக அலுமாரியில் தேடி எடுத்து "ங" சிறுகதையை வாசிக்கப்போகும் வாசகருக்கும் அவருடைய மரணம் எப்போது நிகழ்ந்திருக்கும் என்பது பொருட்டல்ல. புதுமைப்பித்தன் எப்போது காலமானார் என்பதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?
ஆனால் ஆனந்தை இந்தச் செய்தி நிச்சயம் பாதித்திருக்கும். ஆனந்த் இப்போது என்ன யோசித்துக்கொண்டிருப்பார் என்று கற்பனை போகிறது. வேலை முடிந்து வீடு திரும்பிய ஆனந்தும் நித்யாவும் இப்படிப் பேசிக்கொள்ளலாம்.
“ஏய் நித்யா, அவன் எம். ஜி. சுரேஷ் எறந்திட்டானாம், தெரியுமா உனக்கு?”
“ஐயோ பாவமில்ல? என்னமா எழுதுவான் தெரியுமா. அவனோட இங்கிலீஷ் கதைலாம் செமயா இருக்கும்ல. ஜேகே அண்ணாக்கு சொல்லிட்டியா நீயி?”
“அவரு ஸ்டேடசுகூட போட்டுட்டாரு. நீ வேற”
“ஆ. அப்போ சூப்பரு”
Comments
Post a Comment