தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை மீண்டும் பிடித்துத் தோளில் போட்டபடி நடக்க ஆரம்பித்தான். அப்போது வேதாளம் அவனைப்பார்த்துச் சற்று எள்ளலுடன் கூறியது.
“ஏ விக்கிரமாதித்தியா, நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், நீயும் கடமை துஞ்சாது சதா என்னை முருங்கை மரத்திலிருந்து பிடித்துக்கொண்டு செல்கிறாய். நானும் எப்படியோ தப்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறேன். இப்படியே உன்னுடைய காலம் கழிகிறது. நீ பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாய். உனக்கு நான் ஒரு கதை சொல்லி இறுதியில் சில கேள்விகளைக் கேட்கப்போகிறேன். அந்தக்கேள்விகளுக்கு உனக்குச் சரியான பதில் தெரிந்தும் சொல்லாவிடில் உன் தலை சுக்கல் நூறாக வெடித்துச் சிதறிவிடும்”
000
அறிவுபுரம் என்கின்ற கடற்கரைக்கிராமத்தில் சண்முகம் என்கின்ற குடியானவன் தன் மனைவியோடும் இரண்டு மகள்மாரோடும் வாழ்ந்துவந்தான். கூடவே சண்முகத்தின் வளர்ப்பு நாயும் அவர்களோடு சேர்ந்து அங்கு வளர்ந்துவந்தது. சண்முகம் அந்தக் கிராமத்தின் தூண்டில் மீன்பிடிகாரன். அவன் அக்கிராமத்து மீன்பிடி சங்கத்தின் நடப்புத் தலைவனுமாவான்.
சண்முகம் அதிகாலையிலேயே துயிலெழுந்துவிடுவான். காலைக்கடன்களை முடித்து, தேநீர் ஊற்றிக் குடித்துவிட்டு அவன் வேலைக்குப் புறப்படத்தயாராகும் சமயத்தில் காலை மூன்றுமணிகூட ஆகியிருக்காது. அவன் மனைவியும் மகள்களும் அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர். போகும்போது சண்முகம் அவர்களின் கால்களை தான் எப்போதும் கூடவே வைத்திருக்கும் கைத்தடியால் இடறிவிட்டபடியே கடந்து செல்வான். அங்கே வாசலில் அவனுக்காகக் காத்து நிற்கும் வளர்ப்பு நாய் அவனைக் கண்டதுமே எசமான விசுவாசத்தோடு சின்னதாகக் குரைத்துவைக்கும். அதன் தலையைத் தேடித் தடவிவிட்டபடி சண்முகம் கொல்லைப்புறத்துக்குச் சென்று, அங்கு குவிந்துகிடக்கும் மீன்வலைகளைக் கால்களால் ஒதுக்கிவிட்டு, சுவரில் சாய்த்துவைத்திருந்த தூண்டிலையும் மீன் கூடையையும் எடுத்துக்கொள்வான்.
சண்முகமும் நாயும் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.
கடற்கரையை அண்மித்ததும் சண்முகத்தின் நாய் தன்பாட்டுக்கு எடுபட்டு அலைய ஆரம்பிக்கும். சண்முகம் அதனைத் தன் அருகிலேயே நிற்குமாறு கூவி அழைப்பான். நாய் கேளாது. கொஞ்சநேரம் அதனைக் கூப்பிட்டுப்பார்த்துவிட்டு பின்னர் அவன் அமைதியாகிவிடுவான். கடற்கரையில் ஒருபக்கம் அலைகளின் சத்தம். இன்னொருபக்கம் பனங்காட்டிலிருந்து ஓலைகள் காற்றில் அடித்துக்கொள்ளும் சத்தம். சண்முகத்துக்கு சற்றுக் குழப்பமாகவிருக்கும். யோசிப்பான். நாயை மீண்டும் ஒருதடவை கூப்பிட்டுப்பார்ப்பான். பயனிராது. பின்னர் ஒரு முடிவெடுத்தவனாய் பனங்காடடைப் பார்த்து உட்கார்ந்தபடி தூண்டிலை எடுத்து வீசுவான்.
கரையை நோக்கி.
பொழுது மெதுவாகப் புலர ஆரம்பிக்கும். இரவில் கடலுக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்ப ஆரம்பிப்பார்கள். மீன் வியாபாரிகள் கூடையும் கையுமாய் கடற்கரைக்கு விரைவார்கள். ஆளரவமற்றுக்கிடந்த மீன்வாடி திடீரென்று உயிர் பெற ஆரம்பிக்கும். சண்முகத்தின் மனைவியும் மகள்களும்கூட அங்கு வந்துவிடுவர். அவர்கள் களங்கண்டி மீன் பிடிப்பவர்கள். கடலுக்குள் இறங்கி, முந்தைய நாள் கட்டிய களங்கண்டி வலைகளை அவர்கள் மிகக்கவனமாகக் கழட்டிச் சுருட்ட ஆரம்பிப்பார்கள். மகள்களில் ஒருத்தி அன்றைய பொழுதுக்குரிய வலையைப் பொருத்தமான இடம் தேர்ந்து ஊன்ற ஆரம்பிப்பாள். அவர்கள் வந்ததைக் கண்ட சண்முகத்தின் நாய் கரையில் நின்று அவர்களை நோக்கி ஆக்ரோசத்துடன் குரைக்க ஆரம்பிக்கும்.
சண்முகம் இப்போதும் தான் மணலினுள் வீசிய தூண்டிலில் ஏதேனுமொரு மீன் சிக்குமெனப் பொறுமையுடன் காத்திருப்பான். நேரம் மதியத்தைத் தாண்ட ஆரம்பிக்கும். தாம் பிடித்த மீன்களைக் குத்தகைக்காரர்களுக்கும் ஏல வியாபாரிகளுக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் கொடுத்துவிட்டு, வீட்டுக்குத் தேவையான மீன்களோடு மீனவர்கள் புறப்பட ஆரம்பித்திருப்பர். சந்தையிலும் கூட்டம் குறைய ஆரம்பித்திருக்கும். சிலர் இறுதிநேரத்து மலிவு மீன்களுக்காக இன்னமும் காத்திருப்பர். சண்முகத்தின் மனைவியும் பெண்களும்கூட தாம் பிடித்த களங்கண்டி மீன்களை விற்றுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டிருப்பர். இப்படி வீடு திரும்பும் அத்தனைபேரும் போகும் வழியில் மணலில் தூண்டில்போட்டு மீனுக்காகக் காத்திருக்கும் சண்முகத்தைக் கவனிப்பர். அவனோடு அளவளாவுவர். கதைகள் பல பேசுவார்கள். தத்தமது கூடைகளில் இருக்கும் விற்கமுடியாத நாறிய சல்லித் திரளிகளையோ அல்லது முள் நிறைந்த கொய் மீன்களையோ போகிறபோக்கிலே அவர்கள் சண்முகத்தின் தூண்டிலில் செருகிவிட்டு, தூண்டிலின் நூலையும் சற்று இழுத்துவிட்டுப் போவர்.
சண்முகத்துக்கு மணலில் மீன் பிடிபடத்தொடங்கும்.
ஒவ்வொருதடவையும் சண்முகத்தின் தூண்டிலில் யாரேனும் மீனைச் சொருகிவிட்டபின்னர், அவன் தூண்டிலைக் கவனமாக இழுத்து எடுத்து, அதன் முள்ளில் குத்தப்பட்டிருந்த மீனை இலாவகமாக அகற்றி, கொண்டுவந்திருந்த கூடையினுள் போடுவான். இப்போது சண்முகத்தின் நாய் அவனருகே வந்து நின்று மகிழ்ச்சியில் குரைக்க ஆரம்பிக்கும். அதன் வால் மின்விசிறி வேகத்தில் சுழலும். “இப்போதுதான் மீன் பட ஆரம்பித்திருக்கிறது, குரைத்துக் கெடுக்காதே” என்று சண்முகம் தன் நாயைச் செல்லமாக வைவான். கூடையில் கிடக்கும் ஒரு மீனை எடுத்து அதனிடம் வீசி எறிவான்.
மதியத்துக்கு மேலே இரண்டு மணியளவில் சண்முகத்தின் தூண்டிலில் மீன் படுவது குறைந்துவிடும். அவனும் கனம் தாளாத அவனுடைய மீன் நிறைந்த கூடையோடு, தூண்டிலையும் எடுத்துக்கொண்டு பெருமிதச் சிரிப்போடு கள்ளுத்தவறணையை நோக்கிச் செல்வான். அங்குதான் அந்தக்கிராமத்தின் அத்தனை மீனவர்களும் தொழிலுக்குச் சென்று திரும்பியபின்னர் கூடுவார்கள். சண்முகம் செல்கின்ற சமயம் அங்கே கூட்டம் நிறைந்து இருக்கும். சண்முகம் தவறணைக்காரரிடம் தன் மீன்கூடையைக்கொடுத்துவிட்டு கள்ளு வாங்கிக்குடிப்பான். வீட்டுக்கென சில மீன்களை அவன் எடுத்துவைக்கவும் மறப்பதில்லை. தவறணையில் பலரும் பத்தும் பேசுவார்கள். சண்முகத்தை சிலர் எள்ளி நகையாடுவார்கள். சிலர் கழிவிரக்கம் கொள்வர். அவனுடைய பெண்களில் நாட்டம்கொண்ட சிலர் அவனோடு அன்பு பாராட்டவும் தவறுவதில்லை. சிலர் அவனுக்குக் கள்ளு வாங்கிக் கொடுப்பர். சிலர் சுருட்டு, பீடி எனப் புகைக்கக்கொடுப்பர். வெற்றிலை சீவல் கொடுப்பர். சண்முகம் அன்றையதினம் எப்படி மதியத்துக்குப்பிறகு தனக்கு மீன் ‘பட’ ஆரம்பித்தது என்று பெருமையாக விவரிக்க ஆரம்பிப்பான். கூட்டம் அவனைச்சுற்றிக் கூடியிருந்து சுவாரசியத்தோடு கதை கேட்கவும், அந்த இடமே களை கட்ட ஆரம்பிக்கும். தினமும் தவறணையில் தன்னைச்சுற்றிக் கூடும் அந்தக்கூட்டத்தை நம்பியே கிராமத்து மீனவ சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு சண்முகம் துணிச்சலோடு போட்டியிட்டான். அவன் நம்பிக்கையை அந்தக்கூட்டமும் வீணாக்கவில்லை. முதல்தடவையே தலைவர் தேர்தலில் வென்றது மாத்திரமன்றி, அடுத்தடுத்த தேர்தல்களிலும் வென்று, மீனவ சங்கத்தின் நிரந்தரத் தலைவனாக சண்முகம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டான்.
இப்படியாக, அதிகாலையில் கடற்கரைக்குப் புறப்படும் சண்முகம், தரையில் மீன் பிடித்து, பின்னர் தவறணையில் தற்பெருமைபேசி, இடையிடையே மீனவ சமூகத்தின் பிரச்சனைகளை அலசி, நிறை வெறியோடு வீடு திரும்பும்போது இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். வருபவன், நேரே மனைவியை அழைத்து அவளிடம் மீன்களைக் கொடுத்து, குழம்பும் பொரியலும் செய்யுமாறு ஆணை பிறப்பித்துவிட்டு, கொல்லைப்புறத்துக்குச் சென்று தன் தூண்டிலைக் கவனமாகச் சாய்த்துவைப்பான். பின்னர் கிணற்றடியில் தானும் குளித்து, தன் நாயையும் குளிப்பாட்டிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது சுவையான களங்கண்டி பாரை மீன் கறியும் அறக்குளா பொரியலும் புட்டோடு அவனுக்காகக் காத்திருக்கும். வயிறு புடைக்க அவற்றை ருசித்துச் சாப்பிட்டு முடித்துவிட்டு, பெருத்த ஏவறை ஒன்றை விட்டவாறே சண்முகம் தன் மனைவியிடம் பெருமை தாளாமல் சொல்வான்.
“சண்முகம் பிடிச்ச மீன் எண்டால் சும்மாவா?”
000
கதையைச் சொல்லிமுடித்ததும் வேதாளம் விக்கிரமாதித்தனை நோக்கிக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தது.
“விக்கிரமாதித்தா, இந்தக் கதையில் மீன் கடலில் கிடைக்குமா, தரையில் கிடைக்குமா என்பதுகூடத் தெரியாத சண்முகம் எப்படி ஒரு மீனவ குழுமத்தினுடைய தலைவராக முடிகிறது? இதில் தவறிழைப்பவர்கள் எவர்? சண்முகமா? அல்லது அவனைத் தம் தலைவனாக்கி அழகுபார்க்கும் சமூகமா? அல்லது அவனது மனம் நோகாதவண்ணம் அவனுக்கேற்ப வளைந்துகொடுத்து குடும்பம் நடத்தும் அவனுடைய மனைவி மக்களா? நீ என்ன நினைக்கிறாய்?
விக்கிரமாதித்தன் சற்றுநேரம் யோசித்துவிட்டுப் பின்னர் தன் பதிலைக் கூற ஆரம்பித்தான்.
இந்தக்கதையில் வருகின்ற சண்முகத்தின் நடவடிக்கைகள் ஒன்றைத் தெளிவாக உணர்த்துகிறது. அவன் அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்துவிடுகிறான். இரவு, பகல் வேறுபாடுகள் அவனுக்கு இல்லை. கடல் எது, தரை எது என்று பிரித்துணர அவனுக்குத் தெரியவில்லை. அவன் எப்போதும் ஒரு கைத்தடியையும் துணைக்கு ஒரு நாயையும் வைத்திருக்கிறான். இதன்வழி பார்க்கையில் சண்முகம் ஒரு பார்வைப்புலன் அற்றவனாக இருப்பதற்குரிய ஏதுக்களே கதையில் அதிகம் கிடைக்கிறது. அன்றேல் அவன் பேதைமை நிறைந்தவனாக இருத்தல் வேண்டும். இப்படியான ஒருவனிடம் பலரும் கழிவிரக்கமும் பரிதாபமும் காட்டுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
கழிவிரக்கமும் பரிதாபமும் அளவுக்குமேல் காட்டும்போது, அதை யாருக்குக் காட்டுகிறோமோ அவரை அது படுகுழியிலேயே வீழ்த்திவிடும். அது மாத்திரமன்றி பரிதாபம் காட்டுபவரையும் சேர்த்து அது வீழ்த்திவிடும். சண்முகத்துக்கு தூண்டில் மீன் பிடிக்கும் ஆர்வம் இருப்பின் அவனுக்கு அதற்கான பயிற்சியையும் ஊக்கத்தையும் கொடுக்கவேண்டுமே ஒழிய, அவன் தரையை நோக்கித் தூண்டில் எறிவதைப்பார்த்து “ஐயோ பாவம்” என்று அவன் தூண்டிலில் மீனைச் சொருகுவது எந்த வகையிலும் சரியான செயலாகப்போவதில்லை. அது எந்த வகையிலும் அவனுக்கு நீண்ட காலப்போக்கில் உதவப்போவதுமில்லை. அந்த மீனவ சமூகத்தில் ஏன் ஒருவர்கூட சண்முகத்திடம் மீன்கள் எதிர்த்திசையில் இருக்கும் கடலில் பிடிக்கப்படவேண்டியவை என்று சுட்டிக்காட்டவில்லை? அப்படிச் சொல்லியிருந்தால், அவன் தூண்டிலில் எவரும் அழுகிய நாறிய மீன்களைச் சொருகாமல் விட்டிருந்தால், சண்முகம் உண்மையிலேயே ஒரு தேர்ந்த தூண்டில்காரனாகக் காலப்போக்கில் வந்திருக்கமுடியும். ஏனெனில் ஒரு தூண்டில்காரருக்குரிய முயற்சியும் பொறுமையும் அவனிடம் உண்டு. ஆனால் அவன் அத்திறனை அடைய விடாமல் அவனைச் சூழ இருந்தோரே அவனைக் கெடுத்துவிடுகின்றனர். அவன் நாய், கூடையில் மீன் சேர்ந்ததும் அவனிடம் வாலாட்டியபடி வந்து நிற்கிறது. தவறணையில் மற்றவர்கள் பொழுதுபோக்குக்காக அவன் புழுகுகளை கேட்டு ரசிக்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் அவனைத் தலைவனாக்கி அதன்மூலம் தம் காரியங்களைச் சாதிக்க நினைக்கிறார்கள். தகுதி அடிப்படையிலன்றி, தம் இருத்தலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதவர்களையும், தமக்கு சார்பானவர்களையும், தேவைப்பட்டோரையும் தூக்கிக்கொண்டாடுவது என்பது கீழ்மை நிறைந்த மனிதரின் குணமாகும். அதனையே சண்முகத்தைச் சூழ்ந்திருப்போர் செய்கின்றனர். அவன் மனைவியோ அவள் பிடித்த களங்கண்டி மீனை சண்முகம் தன்னுடையது என்று பெருமை அடிக்கும்போதும் அமைதி காக்கிறாள்.
ஆக, சண்முகம் பார்வைப்புலன் அற்றவனாகவோ அல்லது பேதைமை நிறைந்தவனாகவோ இருக்கலாம். புலன் இருத்தலும் இன்மையும், புத்திக்கூர்மையும் பேதைமையும் உயிரியலின் தெரிவு. அது எவருடைய தவறும் கிடையாது. இயற்கையின் நியதி அது. ஆனால் பார்வைப்புலன் இல்லாத சண்முகத்துக்கு கண்கள்போலச் செயற்பட்டிருக்கவேண்டிய அவனுடைய சமூகம், அவன் பேதைமையைத் தெளியவைத்து அவனுக்கு அறிவுபுகட்டியிருக்கவேண்டிய அந்தச் சமூகம், அதனைச் செய்யாமல் அவனை மேலும் மழுங்கடித்து அதிலிருந்து குளிர்காய முயற்சிக்கிறது. எதுவுமே செய்யாமல் வாளாவிருக்கிறது.
ஒரு சமூகத்தின் அத்தனை மக்கள்கூட்டமும் ஒன்றுசேர்ந்து தவறான தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுப்பதன்மூலம், தம்முடையதும் தம் எதிர்கால சந்ததியினரதும் அழிவுக்கு வழிகோலுகிறது. அந்தச்சமூகத்தின் அறிவுடையோர் தமக்கேன் வம்பு என்று பேசாமடந்தையராயிருப்பதன்மூலம் அக்கொடுஞ்செயலுக்குத் துணைபோகின்றனர். வரலாற்றின் பல மிகப்பெரிய சமூக நாகரிகங்களும் கலாச்சாரங்களும் இப்படியான செயற்பாடுகளாலேயே அழிந்துபோயின.
ஆக இந்தக்கதையில் பெருந்தவறிழைப்பவர்கள் ‘அறிவுபுரம்’ கிராமத்து மக்களேயாவர்.
விக்கிரமாதித்தனது இந்தச் சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் பறந்துசென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
000
இளவேனில், தை, 2018
About "leadership".......
ReplyDeleteIt's all over the world - incompetent people grip power and spoil the surroundings.
We experience everyday at workplaces. You can easily see this in Australian work places - Favouritism, corruption, nepotism, bias, undercutting, boot licking....
Before emigrating to Australia, I was innocently believing that they will your (real) "competency". It took me many years to understand this (I was a tube light). Anyway this is one way journey and we have to adapt it
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ReplyDeleteஞாலத்தின் மாணப் பெரிது.
- காலத்தின், ஈழத்தின் தேவை கருதிய பதிவு.
இதில் சண்முகத்தின் குடும்பத்தின் பொறுப்பு பற்றியும் கூறி இருக்கலாம்
ReplyDelete