தொல்லியல் படிமங்களிலிருந்து வரலாற்றை அறிதல் என்பது கிளிஞ்சல்களினின்று ஆழ்கடலை அறியமுற்படுவது போன்றது. அவை ஆழ்கடலை வியப்புடன் நோக்கவும் அதனுள் பரந்து விரிந்து கிடக்கும் உலகை மேலும் அறியவும் உத்வேகம் கொடுக்கும். அதன் சாத்தியங்கள் நம்மை மிரட்டும். காற்சட்டையை மேலும் இழுத்துவிட்டு கடலினுள் இறங்கி இன்னும்பல கிளிஞ்சல்களைப் பொறுக்குவதற்குத் தூண்டும். முன்னொருமுறை எழுதியதுபோல, வரலாறு ஒரு சாகசக்காரிக்கேயுரிய கொஞ்சலுடன் நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சிறு வெளிச்சங்களைக்காட்டி, நம்மை அருகே இழுத்து, வசீகரித்து, கிளர்ச்சியை உண்டுபண்ணி ஈற்றில் அதுவாகவே நம்மையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது.
சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான திரு அ. முத்துக்கிருஷ்ணன் வரும் ஞாயிறு மாலை அன்று மெல்பேர்ணில் “கீழடி” பற்றிப் பேசப்போகிறார்.
“கீழடி” அகழ்வாராய்வு மையம் பற்றி ஓரளவுக்கு நாமெல்லோரும் கேள்விப்பட்டேனும் இருப்போம். மதுரைக்கருகே கண்டறியப்பட்ட இந்தத் தொன்மை மையம் முதற்சங்க காலத்தையது (அல்லது அதற்கும் முன்னையது) என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அக்காலத்து மக்களின் நாளாந்த வாழ்வு, நகரக் கட்டுமானம், வியாபாரம், மொழி என்று பலதையும் இதனூடாக அறியக்கிடைக்கிறது. யவனிகர்கள் என்று நம் இலக்கியங்கள் குறிப்பிடும் கிரேக்கர்களின் தொடர்பு பற்றிய சான்றும் இங்கு உளது. இன்னும் ஏராளம் விடயங்கள். முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டு, படித்து, மேலும் மேலும் தேடுவதற்கு ஆவலாக இருக்கிறது.
மாதிரிக்கு ஒன்று.
‘கீழடி’யில் கண்டறியப்பட்ட பல மட்பாத்திரங்களில் அக்காலத்தவரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. திருமணத்துக்குப் பரிசாகத் தரும் சில்வர் தட்டுகளில் “அன்பளிப்பு பொன்னுச்சாமி குடும்பம்” என்று அச்சடிப்பதுபோல, “இந்த சில்வர் இலச்சுமி விலாஸில் திருடப்பட்டது” என்று வார்ப்பதுபோலத்தான் இதுவோ தெரியாது. எது எப்படியோ, அவற்றிலிருக்கும் பெயர்கள் ரசிக்கும்படியானவை. ஆதன், உதிரன், சேந்தன், திசன், இயணன். இதில் ‘திசன்’ பல வெள்ளி, தங்க மோதிரங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது (திசன் ஓதலன், நெல்வேல் திசன்). இந்தத் திசன் மற்றும் பூதன் போன்ற பெயர்கள் ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டிருக்கின்றன. ‘திசன்’ என்பது ஒரு தனிப்பெயர்ச்சொல் (திசை என்பதன் காரணப்பெயர் அல்ல). ஈழத்தில் பௌத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் அங்கு ஆட்சிசெய்த மன்னனின் பெயர் தேவநம்பியதிசன். அவன் அப்பன் பெயர் மூத்தசிவன். மூத்தசிவனின் அப்பன் பெயர் பண்டுகாபயன். பண்டுகாபயனுடைய பெயருக்குப்பின்னால் பாண்டிய ஆட்சியாளர்களின் தொடுப்பு இருக்கலாம் என்கின்ற ஊகங்களும் இருக்கின்றன. விஜயன் பாண்டிய இளவரசியை மணம் முடித்ததாகவும் ஒரு கதை உள்ளது. மகாவம்சம், இல்லையில்லை பண்டுகாபயனின் அப்பா, அம்மா இருவருமே ஆரியர்கள்தாம் என்று அடித்துவிடுகிறது. இவையெல்லாம் வரலாறு துப்பிவிட்ட வெறும் கிளிஞ்சல்கள்தான். புள்ளிகள்தான். மொழி என்பது ஒரு ஊடகமெனில் அது பல்வேறுகாலங்களில் பல்வேறு வடிவமெடுத்து பல்வேறு இடங்களில் பரவியிருக்கும். பரவினால்தான் அது மொழி. தேங்குமேயானால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. பிராமியின் வடிவங்களும் பரம்பல்களும் பற்பல. இனக்குழுக்களுக்கான தொடர்புகளும் அப்படித்தான். அவற்றுக்கு ரிஷி மூலம், நதிமூலம் பார்த்தால் எல்லாமே கொண்ட்வானா நிலத்திலேயே சந்திக்கவேண்டிவரும். விடுவோம்.
நம் இனம் தொன்மை நிறைந்தது. நம் மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. நமக்குப் பெரும் வரலாறு உண்டு என்ற உண்மைகளிலிருந்து நாங்கள் எதனை அடையப்போகிறோம் என்பது பட்டவர்த்தனமாகப் பேசப்படவேண்டிய விடயம். பண்டுகாபயன் தமிழ் மன்னன் என்று சொல்வதன்மூலம் சிங்களவர்களை விட நாம் மூத்தகுடிகள் என்று பறையடித்தோம் எனில் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றிருக்கமுடியாது. ஐந்திணைகளும் புலன்களும் இயற்கையும் எவையும் அங்கு வாழும், வாழவிரும்பும் எவருக்கும், எவற்றுக்கும் சொந்தமானது. இது, முதலில் வந்தவருக்கு முன்னிடம் என்கின்ற சாப்பாட்டுப்பந்தி வரிசை கிடையாது. “இங்கு நானே முதலில் இருந்தேன், இது எனக்கே சொந்தம்” என்று சொல்பவரிடம் “இல்லை, உனக்கு முன்னரேயே நான் வந்துவிட்டேன், எனக்கே இது சொந்தம்” என்று பதிலுக்கு நிரூபிப்பது சிறுபிள்ளைத்தனம். இது உனக்கும் எனக்குமான இடம். இதில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. எம் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமை எமக்கானது. இந்தப்புள்ளிகளிலிருந்து விலகாமலேயே அதிகாரத்தைக்குயும் பேரினவாதத்தையும் நாம் எதிர்கொள்ளவேண்டுமே தவிர அதிகாரம் தன்னை நிலைநிறுத்தப்பயன்படுத்தும் காரணிகளையே நாமும் பதிலுக்குப் பயன்படுத்தி அந்த முடியா சிக்கலில் வீழ்ந்துவிடலாகாது. அதே சமயம் வீட்டைவிட்டு அதிகாரம் நம்மை இழுத்துத் துரத்தி அடிக்கும்போது கதவுப்பிடியை மிக இறுக்கமாகப் பிடித்தபடி கதறி அழும் மனிதரின் முகமும் ஞாபகத்துக்கு வந்துபோகிறது.
முத்துக்கிருஷ்ணன் இவற்றையெல்லாம் தன் பேச்சில் கோடிகாட்டி விளக்கினால் தன்யனாவேன். நேரம் போதுமானதாக இருந்தால், “கீழடி” தாண்டியும் பல விடயங்களை அவரோடு பேசவும் ஆவலாக இருக்கிறது. “தொன்மங்களை அறிதல்” என்பது நம்மை அறிதலுக்கும், நம் இருத்தலுக்கும், நீட்சிக்கும் எவ்வளவு அவசியமாகிறது? குறிப்பாக, சமகாலத்தில் இடம்பெறுகின்ற மிக நுணுக்கமான அடையாள அழிப்பு முயற்சிகளை எதிர்கொள்ளத் தொன்மங்களை அறிதலும் அவற்றைப் பரப்புதலும் எவ்வகையில் உதவி செய்யும்?
ஞாயிறு மாலை நான்கு மணிக்குச் சந்திப்போம்.
புத்துணர்வை கொடுக்கும் செய்திகளை இன்று அறியும் போது .....தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
ReplyDeleteத என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு தமிழ் பெயர் கூறவும் ...ஆண் குழந்தை
ReplyDeletepanarvin@gmail.com