இன்று ஊடகங்களிலும் அலுவலகத்திலும் வானொலி, தொலைக்காட்சிகளிலும் “Space X” பற்றியே கதையாக இருக்கிறது. மீளவும் பூமிக்குத் திரும்பக்கூடிய மூன்று பூஸ்டர்களின் உதவியுடன் எலன் மஸ்கினுடைய சொந்த டெஸ்லா காரை விண்வெளியில் துப்பிவிடும் இந்தத்திட்டம் திட்டமிட்டபடி நடந்தேறியிருக்கிறது. மூன்றாவது பூஸ்டர் பிழைத்துப்போனாலும் ஏனைய இரண்டும் திரும்பிவிட்டன. டெஸ்லா கார் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்துவிட்டது. இந்தத்திட்டத்தின் நோக்கங்கள், இது அடியெடுத்துக்கொடுத்திருக்கும் அடுத்தடுத்த சாத்தியங்கள் பற்றியெல்லாம் இணையத்தில் ஏராளம் கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களிலும் எப்படியும் இரண்டொரு நாள்களுக்குள் அவை வந்துவிடும். சிலதில் வரப்போகின்ற கூகிள் மொழிபெயர்ப்பை நினைக்கத்தான் அச்சமாக இருக்கிறது. “Musk” என்ற சொல்லை கூகிள் “கஸ்தூரி” என்று மொழிபெயர்க்கிறது. நம்மட ஆளுகள் “நடிகை கஸ்தூரி தன்னுடைய மின்சார வண்டியை விண்வெளிக்கு அனுப்பினார்” என்று தலைப்புச்செய்தி இட்டாலும் இடுவார்கள்.
நான் சொல்லவந்தது வேறு.
எலன் மஸ்க் அனுப்பிய காரின் டாஷ்போர்டில் “Don’t Panic” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இது வேறொன்றுமில்லை. டக்ளஸ் அடம்ஸ் எழுதிய “The Hitchhiker’s Guide To Galaxy” நாவலின் தாரக வாசகம்தான் இது. பிரபஞ்ச பயணங்களின்போது அவசரக்காலத்துக்கு உதவவென ஒரு வழிகாட்டி அந்த நாவலில் உள்ளது. அதன் முதற்பக்க வாசகம்தான் “Don’t Panic”. “கந்தசாமியும் கலக்சியும்” நாவலில் வருகின்ற பிரகராதியின் முதற்பக்கத்து வாசகம் “பதற்றப்படாதே”! கந்தசாமியும் கலக்சியும் நாவல் டக்ளஸ் அடம்ஸ் எழுத்துகளின் தழுவல் என்பது ஒன்றும் ரொக்கட் சயன்ஸ் கிடையாதுதானே. அந்த நாவலில் வருகின்ற “Infinite Improbability Drive” என்ற விண்கலம் பற்றி எலன் மஸ்க் முன்னரும் ஒரு பேட்டியில் சிலாகித்திருப்பார். நம்மளோட கதையில் மீட்பு விண்கலமாக அது வரும். கந்தசாமியையும் சுமந்திரனையும் மிகின்காற்றிலிருந்து மீட்பதும் அந்த மீட்புக்கலம்தான். இப்போது யோசிக்கையில் அதை இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
டக்ளஸ் அடம்ஸ் எழுத்துகள் ஒருவிதமான கல்ட் தன்மை வாய்ந்தவை. வெறுமனே விஞ்ஞானப்புனைவு என்ற ஒரு எல்லையை வைத்துக்கொண்டு அதற்குள் நிறைய விசயங்களைப் புகுத்தி அவர் விளையாடுவார். அடிப்படை இழை அபத்தம்தான். சரியான ஆங்கிலப்பதம் “absurdity”. அதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளமுடிந்தால் உலக நியதிகளையும், போக்குகளையும் அறிதல் இலகு. சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதும் இலகு. உலகின் பல தொழில்நுட்பவியலாளர்களுக்கு டக்ளஸ் அடம்ஸ் ஒருவிதமான பொப் ஐகன் (இன்னொருவர் ஓர்வல்). குறிப்பாக சிலிக்கன்வலிகாரர்களுக்கு. 42 என்று ஒரு பல்கலைக்கழகமே அங்கு உள்ளது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் சீனியராக இருந்தவர் நேர்முகத் தேர்வுகளில் “42 என்றால் என்ன?” என்று கேட்பார். யாராவது இளம் பொறியியலாளர்கள் அதற்கான பதிலைச்சொன்னால் பின்னர் நேர்முகத்தேர்வு அநேகமாகப் பழமாகவே அமைவதுண்டு. பதில் சொல்லாவிட்டால் தவறு ஒன்றுமில்லை. தேர்வு வழமைபோல இடம்பெறும். ஆனால் பதில் சொன்னால், தேர்வின் போக்கு கொஞ்சம் மாறும். அவ்வளவே. இன்றுங்கூட மென்பொருள் எழுதும்போது டெஸ்ட்கேசுகளில் டக்ளஸ் அடம்ஸ் பாத்திரங்களையும் இடங்களையும் டெஸ்ட் டேட்டாவாக நான் பயன்படுத்துவதுண்டு. சும்மா பம்பலுக்குத்தான். கந்தசாமியும் கலக்சியும் நாவலை வேண்டுமானால் தூக்கிப்போடுங்கள். கணித ஆர்வலர்கள், உயர்தரத்தில் கணிதம் கற்பவர்கள், கணித, விஞ்ஞான பொறியியல்துறையில் ஆர்வம் உள்ளவர்கள், சும்மா மதிய உணவு இடைவேளையின்போது டக்ளஸ் அடம்ஸ் நாவல்களை எடுத்து வாசித்துப்பாருங்கள். இணையத்தில் இலவசமாகவே அவை கிடைக்கும். மிக இலகுவான, நகைச்சுவை ததும்பிய எழுத்துகள். Its fun. பிடித்துக்கொண்டால் தாமதியாமல் அடுத்தபடியாக தாவவேண்டியது சைமன் சிங் எழுதிய “Fermat’s Last Theorem”. ஆரம்பித்தால் மூடி வைக்கமுடியாது.
இன்று மாலை, “Space X” பூஸ்டர்கள் மீளத்திரும்பும் பாதை வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் பற்றி வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்விடம் இருந்து என்ன பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்கின்ற ஆயாசம் வந்தது. நாம் மட்டும் ரசிச்சுச் செய்வது என்பது ஒன்று. ஒட்டுமொத்த கூட்டமுமே அணு அணுவாக ஒரு வேலையை ரசித்துச்செய்யும்போது அவர்களிடையே இருந்து வேலை செய்வது எவ்வளவு உவகையைத் தரக்கூடியது? எவ்வளவு பெரிய சிக்கலான திட்டங்கள் இவை.
ஆனால் அடுத்த கணமே, எந்தச்சிக்கலான வடிவமைப்பும் திருத்தப்பட்டு, குட்டி குட்டியாக உடைக்கப்பட்டு கடைசியில் லெகோ கட்டைகளாகப் பிரிக்கப்படும்போது இலகுவாக்கவே படுகிறது என்ற விடயமும் விளங்கவே செய்கிறது. அப்போது நான் இந்தக்கணம் எழுதிக்கொண்டிருக்கும் கோடுக்கும் அதற்கும் பெரிதான வித்தியாசங்கள் இருக்கப்போவதில்லை.
அது தேநீர் போடும் செயற்பாடாக இருந்தாலும்கூட.
Comments
Post a Comment