Skip to main content

பழைய வீடு



எங்கள் குடும்பம் சற்றுப்பெரியது. நான் பிறக்கும்போது ஏற்கனவே குடும்பத்தில் பதின்மூன்று, ஒன்பது, எட்டு, ஆறு வயதுகளில் சிறுவர்கள் வரிசைகட்டி நின்றார்கள். மூன்று அக்காமார். அண்ணா. தமக்கெல்லாம் ஒரு தம்பி வந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். பொறுப்பு, பொறாமை, சினேகம், விளையாட்டுக்கு ஒரு துணை. எத்தனை எண்ணங்கள் வந்து போயிருக்கும்.

எழுபத்தேழு கலவரத்தில் நுகேகொடவிலிருந்து அடித்துக்கலைப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த குடும்பம் அப்போதுதான் ஓரளவுக்குச் செட்டில் ஆகிக்கொண்டிருந்த சமயம். கம்பஸடியில் வாங்கிப்போட்டிருந்த காணியில் ஒரு கொட்டில் வீடு போட்டுக் குடியேறியிருந்தார்கள். வீடு என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு வரவேற்பறை. ஒரு படுக்கையறை. ஒரு பத்தி. பத்தியில்தான் சமையல் எல்லாம். பின்னர் அங்கிருந்தபடியே அம்மாவும் அப்பாவும் காணிக்குள் இப்போதிருக்கும் புது வீட்டினைக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

புதுவீடு கட்டிக் குடிபோனபின்னர் கொட்டில் வீடு பழையவீடு ஆகிவிட்டது. என்னுடைய முதலாவது பிறந்தநாள் புகைப்படத்தில் இன்னமும் அந்தப்பழைய வீடு உயிர்ப்போடு இருக்கிறது. பழைய வீடு பின்னரும் பலகாலம் பிடுங்குப்படாமல் கிடந்தது. அதில் சிறிதுகாலம் அப்பாவின் அலுவலகம் இயங்கியது. பின்னர் அது வகுப்பறையாக மாறியது. சில வருடங்களின் பின்னர் அதற்குள் விறகும் பொச்சுமட்டையும் அடுக்கி வைத்திருந்தோம். ஒழுங்கைச்சிறுவர்கள் அதற்குள் கூடியிருந்து தாயம் விளையாடியதுமுண்டு. ஒளிச்சுப்பிடிச்சு விளையாட்டில் பெரும்பாலும் ஆக்கள் பிடிபடுவதும் அதற்குள்தான். அம்மாவிடம் திட்டுவாங்கும்வேளைகளில் அழுதுகொண்டு நான் ஒதுங்குவதும் அங்கேதான். மழைக்காலத்தில் அது ஆட்டுக்கொட்டில் ஆகும். வீட்டு நாயும் ஒரு பழைய சாக்கை இழுத்துப்போட்டபடி அங்கே குறண்டும். சிலவேளை அக்கம்பக்கத்து நாய்களும் அதனோடு சேர்ந்துகொள்ளும். புரொய்லர் வளர்ப்பு ஊரில் பிரபலமானபோது பழையவீட்டைச் சுற்றிவரக் கம்பிவலை அடித்து அதைக் கோழிக்கூடு ஆக்கினோம். திட்டம் பலிக்கவில்லை. எப்படியோ கூரை இடுக்குகளினூடாக மரநாய்கள் நுழைந்து கோழிகளைப் பதம்பார்க்க ஆரம்பித்தன. இது சரிவராது என்று நாங்களே ஒவ்வொன்றாகப் அவற்றை சமைத்துச் சாப்பிட்டுவிட்டோம். விறகுத்தட்டுப்பாடு வந்தபோது பழையவீட்டின் கதவு, நிலை, தீராந்தி, கூரை என்று ஒவ்வொன்றாக பிடுங்கி எரித்தோம். அதன்பின்னர் அது வெறும் சீமெந்துத்தரையும் நான்கு தூண்களுமாகவே காட்சியளித்தது. சிலகாலம் அதில் சல்லியும் குறுமணலும் பறித்து வைக்கப்பட்டிருந்தது. கனகாலமாக, கூரையில்லாத அந்தப் பழையவீடு திரவுபதிபோல வானத்தைப்பார்த்து கிருஸ்ணா கிருஸ்ணா என்று அரற்றிக்கொண்டிருந்தது. ஒரு நாள் கிருஸ்ணா பொம்மரில் வந்து குண்டு போட்டதில் மிச்சமிருந்த தூண்களும் உடைந்துபோய் அந்த எச்சமும் தொலைந்துபோனது.

வருடங்கள் கழித்து பழையவீடு இருந்த இடத்தில் மரவள்ளித்தோட்டம் வைத்தோம். நாம் தோட்டம் வைத்த ராசியோ என்னவோ, கிலோ மரவள்ளியை ஒரு ரூபாய்க்குக்கூட விற்கமுடியாமற்போனது. அந்நாட்களில் அம்மா மரவள்ளி சமையலில் முனைவர் ஆய்வையே செய்து முடித்திருந்தார். பொரியல், வெள்ளைக்கறி, குழம்பு, இனிப்புக் கூழ், உறைப்புக்கூழ், அவித்த மரவள்ளி, சுட்ட மரவள்ளி, மரவள்ளிச் சம்பல். இப்படிப் பல ரகங்கள். அப்படியும் மரவள்ளி மிஞ்சியது. பாடசாலை முடிந்து திரும்புகையில் மரவள்ளித்தோட்டத்தில் ஒரு மரம் பிடுங்குப்பட்டுக்கிடந்தாலே நெஞ்சு டிக் எண்டும். அன்றும் மரவள்ளியில் ஏதோ ஒரு சமையல். அயலவர்களும் வந்து மரவள்ளியை மரத்தோடு பிடுங்கிக்கொண்டு போனார்கள். ஏதோ ஒரு பிடாரிகோயில் அன்னதானத்துக்கு பத்துப் பதினைந்து மரங்களையும் கிளறிகொண்டு போனார்கள். அப்படி ஒரு சீசனுக்கு மரவள்ளி எம் வாழ்வைப் பதம் பார்த்தது என்றால் அடுத்ததாக தக்காளி பிறவி எடுத்து எம்மை அலைக்கழித்தது. தக்காளிக்குழம்பு, தடித்த குழம்பு, தண்ணிக்குழம்பு, சம்பல். ஜாம். சும்மா சீனி போட்டு அடித்துக்கலக்கிய ஜூஸ். உடம்பு முழுதும் கடி வந்து சொறியாக்கும்வரை தக்காளி ஓயாமல் காய்த்துத்தள்ளியது. அதன்பின்னர் அங்கே வாழை நட்டோம். நாம் நட்ட நேரம் சொல்லவும் வேண்டுமா, ஒரு குலை நாற்பது ரூபா போனது. பின்னர் ரோசா, நித்தியகல்யாணி என்று அவ்விடத்தில் பூமரங்கள் வளர்க்கப்பட்டன. ஒரு கொய்யாவும் தலை நிமிர்ந்துவிட்டது. எல்லாமே அந்தப்பழைய வீடு இருந்த நிலத்தில் வளர்ந்தவை.

இப்போது அந்தப்பழைய வீடு இருந்த இடத்தில் மாடிக்கட்டடம் ஒன்றை எழுப்பலாமா என்று யோசிக்கிறோம். எண்பதில் அப்பா கட்டிய புதுவீடு இன்று பழசாகிவிட்டது. பல இடங்களில் கசிகிறது. மழை பெய்தால் சுவருக்குள் இருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது. சுவரில் இருக்கும் சுவிட்ச்சை போடப் பயமாக இருக்கிறது. எத்தனைமுறை ஓடு வேய்ந்தாலும் ஒழுக்கு நிற்பதாயில்லை. பழசானதிலோ என்னவோ, வீட்டில் எப்போதுமே ஒரு இருட்டு சூழ்ந்துகொள்ளுகிறது. பகலிலும் அறைகளுக்கு லைட் போடவேண்டியிருக்கிறது. முப்பத்தைந்து வருடங்களிலேயே ஒரு வீடு பழசாகிவிடுகிறது. நிறைய மனிதர்களை, அவர்களின் அன்பை, காதலை, காமத்தை, சண்டையை, பிரிவை, அழுகையை, சிரிப்பை, கதைகளை, தனிமையை, கொண்டாட்டத்தை என்று எவ்வளவற்றையெல்லாம் வீடுகள் சுமக்கின்றன. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் எத்தனை வருடங்கள் எம் ரகசியங்களை அவை காத்து நிற்கின்றன. இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய உயர்தரப் பெறுபேறு பாடசாலையில் வெளியிடப்பட முன்னரேயே அருமைநாயகம் சேர் கொழும்பில் பார்த்துச் சொல்லிவிட்டார். அதை வெளியில் எவரோடும் பகிர முடியாது. தனியே என்னுடைய அறை மேசையில் போய் அமர்ந்திருந்து பௌதீகவியல் கொப்பியைத் திறந்துவைத்து வாசித்துக்கொண்டிருந்தேன். சடத்துவத்திருப்பம் பாடம். உடம்பின் அத்தனை அணுக்களும் அந்தக் கணத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. யாருக்கும் அது இலகுவில் புரிந்துவிடாது. பல்கலைக்கழக அனுமதிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. மூன்று வருடங்களாகத் தனியனாக இஞ்சி இஞ்சியாக ரசித்துப்படித்த படிப்பைப்பற்றி எனக்கும் அந்த அறைக்கும் அறையின் கரும்பலகைக்குமே தெரியும். அந்த வீட்டுக்கே நன்றாகத் தெரியும். முப்பத்தைந்து வருடங்களில் இது வெறுமனே ஒரு சம்பவம்தான். இப்படி வீட்டில் ஏழுபேருக்குமே பல பிரத்தியேகக் கணங்கள் இருந்திருக்கும். அவ்வப்போது வீட்டில் வாடகைக்குத் தங்கிய கம்பஸ் அக்காமார்களுக்கும் அப்படியான கதைகள் இருந்திருக்கும். அவற்றையெல்லாம் அறிந்த ஒரே சீவன் அந்த வீடுதான். மாடிக்கட்டடம் எழுந்ததும் பழையவீடு என்று அழைக்கப்படப்போகும் அந்த சீவன்.

நயினாதீவில் பிறந்து வளர்ந்த சாதாரண சந்திரன் என்கின்ற சிறுவன் எப்படியோ யாழ்ப்பாணம் சென்று, ஆங்கிலக்கல்வியில் தட்டுத்தடுமாறி பாஸ் பண்ணி, நில அளவையாளர் ஆகி, நகரத்திலேயே காணி வாங்கி, பெரிய வீடு கட்டி, ஐந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினான் என்கின்ற மாபெரும் சாதாரண மனிதனின் சாதனையின் ஒவ்வொரு கணங்களையும் பதிவுசெய்த வீடு அந்த வீடு. “அதுக்கும் உண்ட வயசுதான்” என்று அப்பா ஒருமுறை சொல்லியபோது நான் அந்த வார்த்தைகளை விட்டேற்றியாகக் கடந்துபோய்விட்டிருந்தேன். இப்போது யோசிக்கையில் சில்லிடுகிறது. அந்த வீட்டுக்கும் எண்ட வயசுதானே.

வீடுகள். கட்டியவர்களுக்கு அவை என்றுமே குழந்தைகள்தான். வாழ்ந்தவர்களுக்கு உறவுகள்.

000

Comments

  1. என்றுமே எம் மனதை விட்டு விலகாதவை இப்படியான நினைவுகள் .வீடு பற்றிய நினைவுகள் அடிக்கடி நினைவிலும் ,கனவிலும் எனக்கு வருவதுண்டு ,நான் கட்டாத வீடாக இருந்தாலும் .உண்மையில் வீட்டுக்கும் எமக்குமான உறவு எமது நிலத்தில் அதிகம் .இங்கு நான் சொல்லவே தேவையில்லை .உண்மையில் ஒவ்வொரு கல்லாக பார்த்து பார்த்து கட்டியவர்களுக்கு வீட்டின் மேல் இருக்கும் பாசம் எமக்கு புரிவதில்லை எமக்கும் அப்படி ஒரு நிலை வரும் வரை .

    நல்லதொரு பதிவு நண்பரே

    ReplyDelete
  2. வாசிக்கும் போது எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் மீட்க தோன்றும் என்றும் பசுமை தரும் நினைவுகள், குறிப்பாக புலம்பெயர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு. நிற்க, சந்திரன் என்ற சிறுவனின் சாதனையை கோடிட்டு பதியும் கடைசிப் பந்தி, எண்ணிலடங்கா தந்தையர்க்கு சமர்ப்பணம்.

    நன்றி தலைவா!

    ReplyDelete
  3. அதே வருடம் நீங்கள் நுகேகொட இல் இருந்து நாம் கிருலப்பனையில் இருந்து ......
    வாழ்ந்த வீடு என்பது வெறும் கல்லும் மண்ணும் சேர்ந்தது அல்ல என்பது வெளிநாட்டில் புரிகிறது.நிறைய எழுதலாம் ....
    எல்லாமே பசுமரத்தாணி போல் இருக்கட்டும் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .