Skip to main content

பக்



அலுவலகத்தில் புதிதாக ஒரு நாயை நேற்று கொண்டுவந்தார்கள்.
ஒரு பக்.
எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிப்பவன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது?
ஆனால்.
இந்த ஆனால் என்ற வார்த்தைக்கு அற்புதமான சக்தி உண்டு. அது தனக்கு முன்னர் உதிக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிடும். விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஒருவரை எத்தனை பாராட்டினாலும் ஈற்றில் ஒரு “ஆனால்” போட்டுப்பாருங்கள். அவ்வளவும் சங்குதான். இன்னார் ஒரு அற்புதமான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பேச்சு பிடிக்கும். அவர் சிரிப்பு பிடிக்கும்.
ஆனால்.

இந்த பக் பின்புறத்தையும் ஆட்டியபடி, நிற்க. குண்டியையும் ஆட்டியபடி என்றுதான் எழுதப்போனேன். அது சுத்த தமிழா அல்லது கெட்டவார்த்தையா என்ற குழப்பம் வந்தது. உறுப்புதானே என்று சும்மா சொல்லிவிட்டுப்போக முடியவில்லை. அது ஒரு வசைபோலவே ஒலித்தது. கழிவு உறுப்பு என்றால் அத்தனை இழிவா? இல்லைதான். ஆனால் குண்டி எனும்போது அந்தப் பெருமதிப்புக்குரிய உறுப்பைவிட அவ்வார்த்தை சுமந்துவரும் வசையே அதிகம் முன்னிறுத்தப்படுகிறது. அதனால் அதனை நீக்கிவிட்டு பின்புறம் என்று எழுதினேன். நாய்க்கு நான் கொடுக்கும் மரியாதை இது. கவிஞர்கள் பின்னழகு என்று விளிக்கிறார்கள். ஆனால் நாய்களின் பின்புறம் எனக்கு என்றைக்குமே அழகாகத் தெரிந்ததில்லை. மன்னிக்கவும்.
இந்த பக் பின்புறத்தையும் ஆட்டியபடி ஒவ்வொருவர் டெஸ்க்குக்கும் வந்துபோனது. நான் பழைய மீன் குழம்பில் பாண் துண்டுகளைத் தோய்த்து காலை உணவுக்கு எடுத்து வந்திருந்தேன். பக்குக்கு மணந்துவிட்டது. அது என் காலைச் சுற்றிச்சுற்றி வந்து அங்கேயே படுத்துவிட்டது. பழைய மீன் குழம்பு வாசத்துக்கு மூக்கைப்பொத்தும் வெள்ளைகள் மத்தியில் ஒரு வெள்ளை வளர்க்கும் நாய் இப்படி ஆவலுடன் வந்து காலடியில் கிடக்கையில் கொஞ்சம் பெருமிதம் வந்தது. ஆனால் வாலை ஆட்டியபடி நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டிருக்கும் நாய்க்கு மறந்தும் எலும்பு போடாதே என்று அம்மா சின்ன வயதில் சொல்லியிருக்கிறார். அதைவிட பாணையும் பழங்குழம்பையும் பக்குக்கு கொடுக்க நான் என்ன முட்டாளா? கொடுக்காமல் காட்டி காட்டிச் சாப்பிட்டேன்.
பக் அசைவதாக இல்லை. வட் த பக் என்று அதைப்பார்த்துத் திட்டினேன். அது அசைவதாகவே இல்லை. இந்த பக் நாய்க்கு வெட்கம் சூடு சுரணை என்று எதுவும் கிடையாது. அலுவலகத்தில் உலாவும் ஏனைய நாய்கள் என்னை அண்டுவதில்லை. நாயைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சியபடி கோடிங் செய்பவர்கள் இங்கு உண்டு. நான் மடியில் எந்த நாயையும் வைத்துக் கொஞ்சுவதில்லை. யாழ்ப்பாணத்தில் என் செல்ல நாய் ஹீரோ. அதைக்கூட நான் தூக்கிக் கொஞ்சியதில்லை. நாறும். அழுகிய கூழாம்பிலாப்பழ நாற்றம். ஹீரோ என்றாலும் நாய் நாய்தானே.
மீண்டும் சொல்கிறேன்.
எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிக்கிறேன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது?
ஆனால்.
நாய்களை அலுவலகத்துக்குக் கொண்டுவராதீர்கள். நாய்கள் மதங்கள்போல. Dog, God என்று அன்பே சிவத்தில் மய்யம் பேசியது ஞாபகம் இருக்கா? நாய், மதம் எல்லாம் ஒன்றுதான். அவற்றின்மீதான காதலை உங்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள். நாய்களை வெளியே கொண்டுவராதீர்கள். அப்படியே கொண்டுவந்தாலும் கூடவே அவற்றை கயிற்றால் கட்டி வைத்திருங்கள். அவை வழியில் கக்கா போனால் அள்ளுங்கள். இதைச்சொல்லுவதால் விலங்குகள்மீது எனக்குக் கரிசனை இல்லை என்று என்னை வையாதீர்கள். சிவனே என்று வாழவேண்டிய நாயினத்தை நலமடித்து அதற்கு சக நாயின்மீது காதல்கூட வரமுடியாமற்பண்ணி அதை உங்கள் இஷ்டத்துக்கு வளர்த்துக்கொண்டு நாய்மீது கரிசனை என்று நாடகம் ஆடாதீர்கள். “ஓ ஸ்வீட் டோரத்தி லவ்ஸ் டேர்போ” என்காதீர்கள். பாவம் நாய்கள். அவை தமக்குள் என்னவோ சுரண்டி விளையாடுகின்றன, அதைக் காதல் என்காதீர்கள். நான் சொன்னால் உங்களுக்குக் கோபம் வருகிறது. காதல் என்பது வெறும் காமம் மட்டுமில்லை என்கிறீர்கள். அதை நீங்கள் சொல்லாதீர்கள். நலமடிக்கப்பட்ட நாய்கள் சொல்லட்டும். நான் கேட்கிறேன். நீங்கள் வெறும் மூச். போதும். நாங்கள் இல்லாவிட்டால் பராமரிக்க ஆள் இல்லாமல் நாயினமே அழிந்துவிடும் என்று முதலாளித்துவ ஆட்டம் ஆடாதீர்கள். சிக்கின் சாப்பிடாவிட்டால் சிக்கின் இனம் அழிந்துவிடும் என்கின்ற கோழிக்கதை என்னோடு கதைக்காதீர்கள். இதைச்சொல்லித்தான் நீங்கள் சிரியாவில் குண்டு போடுகிறீர்கள். புரியாணியில் சிக்கினை விட்டிட்டு மாவு உருண்டைகளைத் தேடுகிறீர்கள். காட்டிலும் பற்றைகளிலும் ஓநாய்கள் வாழவில்லையா என்ன? உனக்கு வாலாட்ட ஒரு நாய் வேண்டுமென்பதற்காக சும்மா சீவகாருண்ய பிக்காலித்தனங்களை என்னோடு பேசாதீர்கள்.
என்னைச் சீண்டாதீர்கள். எனக்குக் கோபம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என் வீடு மிகவும் வீக்கான பலகைகளால் ஆனது. எரித்துவிடுவீர்கள் என்று தெரியும். என்னைக் கோபப்படுத்தாதீர்கள். முட்டாள்தனமாக உங்களை நான் வசைபாடிவிட்டால் என்னை அழித்துவிடுவீர்கள். அதற்காக உங்கள் நாய்களை நான் கட்டிக்கொஞ்சவேண்டும் என்றால்? ஆக மடையன் என்று நினைத்துவிட்டீர்களா? மீண்டும் சொல்கிறேன். என் வீடு தாங்காது.
பக். அந்த நாய் என் சப்பாத்தை விறாண்ட ஆரம்பித்தது. என் சப்பாத்து கீழடி காலத்தில் கழுவினதுக்கு பிறகு கழுவவில்லை. அதற்கு அந்த நாற்றம் பிடித்திருக்கவேண்டும். சீ நாயே என்று அதனைக் கலைத்தேன். பக் அசையவில்லை. எனக்குக் கோபம். அதன் மீது கோபம். அதனை வளர்ப்பதின்மீது கோபம். அதனை வளர்ப்பதை வளர்த்ததின்மீது கோபம். நாய்களைத் தலையில் வைத்துக் கொண்டாடும் எல்லாவற்றின்மீது கோபம். அறச்சீற்றம்போல. வந்து தொலைத்துவிட்டது.
”யூ பக்கிங் இடியட்“
என்று சீறிக்கொண்டே கால்களை உதறினேன். எனக்கு அறச்சீற்றம்போல அதற்கு நாய்ச்சீற்றம் வந்துவிட்டது. கறுவல் என்றாலும் பக் வெள்ளைக்கார நாய்தானே. ஆங்கிலத்தில் திட்டியது அதற்குப் புரிந்துவிட்டது. அல்லது அதன்பேர் பக் என்பதாலும் இருக்கலாம். அதன் இனமே பக் என்பதாலும் இருக்கலாம். யார் கண்டார்.
எந்தச்சத்தமும் போடாமல் பக் பக்கத்திலிருந்த நோர்வேக்காரனின் கால்களைப் போய் நக்க ஆரம்பித்தது. அலுவலகத்தில் இப்போது மொத்தமாக நான்கு நாய்கள். நான்கும் என்னைச் சீண்டுவதில்லை. நாய்களுக்கும் நாய்களை வளர்ப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நீங்கள் அதோடு என்னத்தையும் செய்யுங்கள். ஆனால் அவை என் காலடியில் வந்து தனகினால் அப்புறம் நான் நானாகவே இருக்கமாட்டேன்.
மீண்டுமொருமுறை.
எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிக்கிறேன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது?
ஆனால்.
இந்த பக் இஸ் எ பக்கிங் இடியட்.

000


Photo Credits
Nora García's art

Comments

  1. வேறு விதமான வாசிப்பனுபவத்தை தந்தது..

    ReplyDelete
  2. நீண்ட நாட்களின் பின்பு உங்களிடம் இருந்து அருமையான பதிவு. ஒரு சிறிய பதிவில் பல விடயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். புரிந்து படித்தால் பிடிப்பதற்கென்று பல சுவாரசியங்கள் உண்டு உங்கள் எழுத்தில்..பட்டியலிடுவதென்றால் இந்த விமர்சனம் பல பக்கங்களைத் தாண்டும் என்பதால் சுருக்கிக் கொள்ளுகிறேன்.
    -நல்ல தமிழ்ச் சொற்கள் கூட தவறான நினைப்பால் ஆபாசமான அல்லது அருவருக்கத்தக்க தொன்றாகைவிடுகிறது. உங்களைப் போன்றவர்கள் அப்படியான வார்த்தைகளைத் துணிச்சலுடன் பாவனைப் படுத்தும் போது அவை மீண்டும் நல்மதிப்பைப் பெறும் என்பது என் எண்னம். மனிதன் தான் செய்யும் கொடுமைகளிக்குச் சப்பைக் காரணம் சொல்வது. எதனை எங்கு வைத்துப் பார்க்க வேண்டும், இயலாமையினால் வரும் கோபம்/ பயம்,மண்வாசன உணவு அதை மறக்கமுடியாத, விட்டுக் கொடுக்காத உணர்வு,[எனக்கு நா ஊறுயது வேறு விடயம்] இலேசாக வாசகர்களை ஊர் வரை கூட்டிச் சென்று பின்பு திரும்பவும் அலுவலகம் கூட்டிக் கொண்டு வந்து கதை சொல்லும் இலாவகம். … பாராட்டுக்கள் … மகிழ்ச்சி…
    --சிவபாலன். - மானிப்பாய்/நியூயார்க்.

    ReplyDelete
  3. என்ன இவர் நல்லது என்கிறாரா கூடாது என்கிறாரா? பிடிக்கும் என்கிறாரா பிடிக்காது என்கிறாரா ?
    இனிமேல் ஒரு நாய் கதையையும் வாசிக்க போவதில்லை .ஆனால் ........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...