Skip to main content

உடல்களின் துயர்



மரணவீடுகளுக்கு துக்கம் பகிரச்செல்வது என்பது மிகச்சங்கடமானது. நுழையும்போதே அந்த வீட்டுக்காரர்களஒ எப்படி எதிர்கொள்வது என்று மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிடும். அனேகமான சந்தர்ப்பங்களில் இறந்தவர் நமக்கு அதிகம் பரிச்சயமானவராக இருந்திருக்கமாட்டார். சமயத்தில் அவரை நாம் நேரில் சந்தித்திருக்கவே மாட்டோம். தெரிந்தவரின் தந்தையோ, தாயோ, தாத்தாவோ, பாட்டியோ. முகத்தை எப்படி வைத்திருப்பது? எப்போதும் சந்திப்புகளின்போது முதலில் புன்னகைத்தே பழக்கப்பட்டிருக்கும் நம் முகம் அங்கும் நம் அனுமதியைக் கேளாமல் அதையே பதிவு செய்யத் தலைப்படும். எப்படி அதைத் தவிர்ப்பது? அல்லது தவிர்க்கத்தான்வேண்டுமா? நம்மைக் கண்டதும் நண்பரோ, உறவினரோ அழும் பட்சத்தில் அதை எப்படி எதிர்கொள்வது? பதிலுக்கு நாமும் அழுவது என்பது அபத்தம். வலுக்கட்டாயமாக, இல்லாத சோகத்தை வரவழைப்பதும் போலித்தனமே. இந்தச் சூழலை எப்படி நேர்மையுடன் சமாளிப்பது? 

சிலவருடங்களுக்கு முன்னர் நெருங்கிய அண்ணர் ஒருவரின் மனைவி காலமாகிவிட்டார். வீட்டினுள்ளே நுழைந்ததும் அவரே ஓடிவந்து கட்டிப்பிடித்தார். “உம்மையும் மனைவியையும் வீட்ட கூப்பிட்டுச் சாப்பாடு கொடுக்கோணும் எண்டு சொல்லிக்கொண்டிருந்தவா… அதுக்குள்ள அவசரம் பார்த்தீரா” என்றழுதார். பிடி மேலும் இறுகியது. இன்னொரு அண்ணரின் மனைவியும் அண்மையில் காலமாகியிருந்தார். வாசலில் என்னைக் கண்டதுமே “மச்சான்” என்று அவர் என்னை இறுக்கக் கட்டிப்பிடித்தார். நாம் வேறெதுவும் பேசிக்கொள்ளவில்லை. சொந்தக்கார அண்ணை ஒருவரின் தந்தையின் மரணத்தின்போதும் இதுவே நிகழ்ந்தது. “வாடா” என்று சொல்லியபடி அந்த அண்ணா என்னை அணைத்துக்கொண்டார். அவ்வளவுதான். எதுவுமே பேசவில்லை. பேசத்தெரியவில்லை. 

ஆச்சரியமாக நம் உடல்களுக்கு எப்படியோ துக்கத்தைப் பகிரத் தெரிந்திருக்கிறது. வாய் மொழியைவிட. அறியாத உடல்களோடுகூட அவற்றுக்கு அன்னியோன்னியம் இருக்கிறது. துக்கத்தின்போது உடல்கள் அனிச்சைச்செயலாட்டம் கட்டியணைக்கின்றன. அவற்றின் பிடி இறுகுகிறது. பலகாலம் பழகித்திரிந்தவைபோல பிரியமனமின்றி அப்படியே அவை கட்டிக்கிடக்கும். அப்போது அவை பேசிக்கொள்ளும் விசயங்கள்தாம் எத்தனை? உடல்களின் மொழி தொன்மையானது. எந்த மத நம்பிக்கையையும் எடுத்துப்பாருங்கள். உயிர்கள்தாம் உலகைப் பிரிகின்றன. உடல்கள் இங்கேயே தோன்றி வளர்ந்து, இறந்தபின்னர்கூட உயிர்களை வழியனுப்பிவிட்டு தம் சொந்த ஊரிலேயே தங்கிவிடுகின்றன. உயிர்கள் குருவிச்சைபோல. உடலோடு ஒட்டிக்கிடந்து, உடலை ஆட்கொண்டு வாழ்ந்து கழித்து ஈற்றில் பிரிந்துவிடுகின்றன. உடல்களின் அகங்களை நாங்கள் கவனியாமல் விட்டேற்றியாகவே இருந்துவிட்டோம். அவற்றுக்கிடையேயான பரிச்சயங்களை நாம் எண்ணிப்பார்த்ததுமில்லை. முன்பின் அதிகம் பேசிப்பழகாத ஒரு ஆணும் பெண்ணும்கூட முதலிரவின்போது இம்மி பிரியா ஓர்மத்துடன் கூடித் திளைக்க முடிகிறது எனில் அது எப்படி சாத்தியமாகிறது? உடல்களுக்குள் இருக்கும் இந்தப் பரிச்சயத்தை மனங்களால் ஒரு ஆயுள் நீளத்துக்குள்ளேனும் அடைந்துவிடமுடியுமா என்ன? 

எங்கள் ஊர் மரணவீடுகளில் ஓலம் என்ற ஒரு விசயம் எப்போது ஊடுபொருளாக இருக்கும். கூடி ஓலமிடும்போது சோகம் அடங்குகிறது. ஒப்பாரி. பறை. திருமுறைகள். குறிப்பாகப் பொற்சுண்ணம். மரணவீடுகளில் வெயில்கூட ஒருவித ஓலத்துடனே எரிவதுண்டு. மழை பெய்தாலும் அது முற்றத்து படங்குக் கொட்டகைமீது விழும்போது ஓலமாகவே ஒலிப்பதுண்டு. இந்தச்சூழலில் உடல்கள் எப்படித் துக்கத்தைப் பகிருகின்றன என்று தெரியவில்லை. அல்லது உடல்கள் அப்படித் துக்கத்தைப் பகிர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஊரே கூடி ஓலம் இடுகிறதோ தெரியவில்லை. மனம் வெறுமனே ஒப்பாரியுடனோ அல்லது கைப்பிடித்தலோடோ அடங்கிவிடக்கூடியது. அடுத்தகணமே அருகிலிருக்கும் வெற்றிலைத்தட்டத்தை நாடக்கூடியது. உடல்களின் சோகம் அப்படியல்ல. ஒப்பாரியின்போதும் உடல்கள் அருகருகே ஒட்டிக்கொள்கின்றன. பல மரணங்களுக்கான சோகம் அச்சமயம் பகிரப்படுகின்றது. 

என்னுடைய மாமா ஒருவர் விபத்தில் இறந்தபோது மாமி இருந்த கோலம் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின்னரும் கண் முன்னே நிழலாடுகிறது. மாமி ஒரு அங்கிலிக்க கிருத்தவர். மிக மென்மையான சுபாவம் கொண்டவர். பேசும்போதும் குரல் எழுப்பாமல் நிதானமாகவே பேசுவார். எதிர்பாராமல் நிகழ்ந்த கணவரின் மரணத்தை அவரால் எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. போதாக்குறைக்கு மாமாவின் உறவினர்கள் எல்லோரும் அங்கே கூடி ஒப்பாரி வைக்கத்தொடங்கிவிட்டார்கள். சிலர் திருமுறைகள் ஓத ஆரம்பித்தார்கள். அவ்வப்போது மாமியையும் ஒப்பாரிக்கு அழைப்பார்கள். மாமி அசையவே இல்லை. அழவும் இல்லை. அத்தனைபேர் கூடியிருந்த அவரது வீட்டில் மாமி முதன்முதலாகத் தனித்துக்கிடந்தார். அவருக்கு மிகப்பரிச்சயமான உறவு அருகே சவப்பட்டியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. மாமிக்கு அச்சமயம் தேவையாக இருந்தது சக உடல் ஒன்றினுடைய அன்பான கட்டியணைப்பு மாத்திரமே. எதுவும் பேசாமல், எந்த ஓலமும் இடாமல் வெறுமனே ஒரு கட்டியணைப்பு. அது அவருக்கு அன்று கிடைக்கவேயில்லை. பின்னர் எப்போதாவது கிடைத்ததா என்றும் தெரியவில்லை. மாமாவின் மரணத்துக்கு அவர் எப்போது எப்படி அழுதிருப்பார் என்பதையும் ஊகிக்கமுடியவில்லை. 

சென்றவாரம், தன் தாயார் மறைந்துவிட்டதாக நண்பியிடமிருந்து குறுந்தகவல் வந்தது. அவர்கள் இத்தாலியர்கள். அந்த நண்பியின் தங்கை ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். சிலவாரங்களுக்கு முன்னர் அவரின் தந்தை நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதாகவும் செய்தி வந்திருந்தது. இப்போது தாயார் இறந்துவிட்டார். நான் குறுந்தகவலுக்கு ஒரு இரங்கல் பதிலை அனுப்பிவிட்டு டிவியில் தொடர்ந்து நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். “நீ செத்தவீட்டுக்குப் போகேல்லையா” என்று மனைவி ஆச்சரியமாகக் கேட்டாள். “இல்லை” என்றேன். “இங்கே பொதுவாக நண்பர்கள் குடும்ப நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை” என்றேன். “யார் சொன்னது?” என்றாள். முழித்தேன். “ஒன்றாக எல்லோரும் சேர்ந்து உணவகங்களுக்குச் செல்வீர்கள், வெள்ளி மாலை மதுச்சாலைக்குச் சென்று கதைகள் அலம்புவீர்கள், ஆனால் ஒருத்தரின் அம்மா செத்தால் போய்த் துக்கம் விசாரிக்கமாட்டீங்களோ?”. உண்மைதானே. இவ்வூர்ப்பழக்கம் எப்படியும் இருந்துவிட்டுப்போகட்டும். ஐந்து வருடங்களுக்கு மேலாகத் தினமும் ஒரே அலுவகத்தில் கூடப்பணிபுரிந்த நண்பரின் தாயாரின் மரணவீட்டுக்கு போகாமல் எப்படி? உறைத்தது. உடனேயே அவருக்கு “நான் வந்து உங்கள் தாயாருக்கு இறுதி மரியாதை செய்யவிரும்புகிறேன், வரலாமா?” என்று கேட்டு அனுப்பினேன். “தாராளமாக, உங்கள் அன்புக்கும் கரிசனைக்கு மிக மிக நன்றி. திங்கள் மாலை ஏழு மணிக்கு மரியாவை பார்வையிடலாம்” என்று பதில் உடனேயே வந்தது. 

என் உடல் ஒருதடவை ஆடி அடங்கியது. 

திங்கள் மாலையில் மரியாவின் மரணவீட்டுக்கு புறப்படத்தயாராகையில் மனம் தயங்கியது. போகாமல் தவிர்ப்பதற்கான காரணங்களைத் தேடியது. முதலில் என்ன உடை அணிவது என்ற குழப்பம். நம்மூர் மரணவீடுகளுக்கு மிகச் சாதாரணமாக ஒரு டீசேர்ட், ஜீன்சோடுதான் செல்வதுண்டு. ஆக மிஞ்சினால் வெள்ளை சேர்ட். நம்மூர் மரணவீடுகள் இயல்புக்கு மிக நெருக்கமாக இருப்பதுண்டு. ஒப்பனை இல்லாத மனிதர்கள். விருந்தினர்கள் வருகைக்காக அழகுக்கடையாட்டம் ஒழுங்கமைக்கப்படாத வீடு. பாசாங்கில்லாத பேச்சு. சாதாரண விருந்துபசாரங்களுக்கு செல்லுகையில் அந்த வீடுகளில் கிடைக்காத இயல்பு துக்கம் விசாரிக்கச்செல்லும்போது கிடைப்பதுண்டு. வீட்டுத்தரைகளில் கூட்டாமல் அரைபடும் மண்கூட அந்த நெருக்கத்தைக் கொடுக்கும். ஆனால் ஐரோப்பியர்கள் மரணத்தை அப்படி எதிர்கொள்வதில்லை. துக்கம் என்றாலும் அது ஒரு மனிதரின் வாழ்வை அங்கீகரிக்கும், நினைவுகூரும் தருணம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால் துக்கத்தை அவர்கள் ஒரு அமைதியான கொண்டாட்டமாகவே நிகழ்த்துவார்கள். அதை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. கறுப்பு ஜீன்ஸ், இன் பண்ணிய கறுப்பு சேர்ட், சப்பாத்து என்று தயாராகி, வழியில் பூக்கடையில் வெள்ளை லில்லி மலர்க்கொத்து ஒன்றையும் வாங்கியபடி மரணவீட்டுக்குச் சென்றேன். 

மரியாவை பெட்டிக்குள் மூடியே வைத்திருந்தார்கள். 

சரியாக ஏழு மணிக்குப் பிரார்த்தனை ஆரம்பித்தது. இத்தாலிய மொழியில். மிக மிருதுவாக அந்தப் பிரார்த்தனையின் சொற்கள் பரவிக்கொண்டிருந்தன. காற்றில்லாத அமைதியான நாளில் கடலலைகள் நோகாமல் கரையைத் தழுவுவதுபோல அந்த ஒலி இருந்தது. மொழி புரியாவிட்டாலும் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்தது. கூடவே “பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்று அறியேன்” வரிகள் அங்கு வந்து விழுந்தன. உலகமெங்கும் கடவுள்களுக்கான மொழி ஒன்றாகவே அமையப்பெற்றது ஆச்சரியமானது. அர்த்தமும்தான். அரைமணி நேரம் நீடித்த பிரார்த்தனை, “அன்னை மேரி நம் எல்லோரையும் ஒவ்வொரு தினமும் செழிப்புற ஆசீர்வதிக்கட்டும்” என்ற ஆங்கிலவரிகளோடு நிறைவுற்றது. 

என் உடல் ஒருவித பதட்டத்தோடே அங்கு நின்றுகொண்டிருந்தது. மனதுக்கும் நிறையப் பதட்டம்தான். ஆனால் அவை லோகியல் பிரச்சனைகளுக்கானவை. அந்தக்கூட்டத்தில் நான் ஒருவன்தான் வேற்று இனத்தவன். என் உடை ஏனையவர்களோடு பொருந்திப்போகிறதா என்று மனம் ஒப்பிட்டது. அனேகமானவர்கள் கறுப்பில்தான் வந்திருந்தார்கள். ஆனால் நான் நினைத்ததுபோல எவரும் நேர்த்தியாக ஒப்பனைகள் செய்திருந்ததாகத் தெரியவில்லை. ஆண்கள் டெனிம் ஜீன்ஸ், கறுப்பு சேர்ட் அல்லது டீசேர்ட். சற்று வயதானவர்கள் ஓவர்கோர்ட் அணிந்திருந்தார்கள். பெண்களும் அப்படியே. கறுப்பு கவுண் அணிந்தவர்களிடம்கூட அளவுக்கதிகமான ஒப்பனை இருக்கவில்லை. இத்தாலியர்கள் பொதுவாகவே பூச்சுமெழுக்கு குறைந்தவர்கள். சத்தம்போட்டு பலவித உடல்மொழியோடு பேசுபவர்கள். பிரார்த்தனை முடிந்ததுமே அவர்கள் தமக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். வெக்கையிலிருந்து ஆரம்பித்து விடுமுறைக்கு எங்கு போனோம், உதை பந்தாட்ட முடிவுகள், இத்தாலி தேர்தல் என்று நீடிக்கும் பேச்சுகள். மனம் இவற்றையெல்லாம் அவதானிக்கையில் உடல் நடுங்கிக்கொண்டேயிருந்தது. அது மூடிய பெட்டிக்குள் கிடக்கும் மரியாவைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது. தாமும் ஒருநாள் அவ்விடம் ஏகுவேன் என்கின்ற பதட்டமாக இருக்கலாம். அல்லது தனக்குத் தெரிந்தவர்களும் ஒருநாள் அதனுள் செல்வார்களே என்கின்ற பதட்டம். அல்லது அதற்குள் இருக்கும் உடல் தனக்கு நெருக்கமானது என்று அது நினைத்திருக்கலாம். மனதுக்கு அந்தப்பயங்கள் பொதுவாக வருவதில்லை. மரணவீடுகள் மற்றவர்களுக்கானது என்கின்ற அயராத நம்பிக்கை மனதுக்கு எப்போதும் உண்டு. நம் வீட்டில் மரணங்கள் என்றைக்குமே நிகழாது என்று அவை எண்ணிக்கொள்கின்றன. இல்லை. அதுபற்றி தம்வீட்டு மரணங்கள் பற்றி நம் மனம் சிந்திப்பதே இல்லை. 

மரியாவின் முகத்தையேனும் பெட்டியைத்திறந்து காட்டுவார்கள் என்று எண்ணினேன். செய்யவில்லை. அவர் நெட்டையா, குள்ளமா, எத்தனை வயது இருக்கும், முகம் எப்படியானது, நீளமா, பாந்தமானதா, சுருக்குகள் விழுந்ததா. எதுவும் எனக்குத் தெரியாது. வேறு ஒருவரும் கையில் பூங்கொத்தோடு வந்திருக்கவில்லை. பிரேதப்பெட்டிக்கருகே பூங்கொத்தை வைக்கும் வசதியும் இல்லை. என்ன செய்வது என்று அங்கிருந்தவர் ஒருவரிடம் கேட்டேன். “உங்கள் பூங்கொத்தை நாளை தேவாலயப் பிரார்த்தனையின்போது சமர்ப்பிக்கவா?” என்று அவர் கேட்டார். “உங்கள் பெயரையும் பூங்கொத்தில் எழுதுங்களேன்” என்றார். “பெயர் தேவையில்லை, பூங்கொத்தை அங்கு வைத்தால் அது பெருத்த உபகாரம்” என்றேன். மிகக்கவனமாக அதனை வாங்கிக்கொண்டுபோய் உள்ளே வைத்தார். திடீரென்று அந்தப்பூக்களுக்குப் பயன் வந்தாற்போல. பல்பொருள் அங்காடிக்கு வெளியே சாதாரணமாக நாளைக் கழித்துக்கொண்டிருந்த பூங்கொத்து அது என்று நான் நினைத்தேன். வெறுமனே சம்பிரதாயத்துக்கு என்றே அவற்றை வாங்கினேன். ஆனால் அதை எடுத்துச்சென்ற அந்தப்பெண்மணி என் கரிசனை அந்தப்பூக்களினூடாக மரியாவை எப்படியும் எட்டும் என்று நம்பினார். 

அடுத்ததாகக் குடும்பத்தாரோடு துயரம் பகிரும் நிகழ்வு. நானறிந்து இத்தாலியக் குடும்பங்கள் மிகப் பெரியவை. அத்தோடு அவர்கள் குடும்பங்களும் தமக்குள் நெருக்கமானவை. அதனால் கிட்டத்தட்ட இருபது பேருக்குமேலே உடனடிக்குடும்ப அங்கத்தவர்களாக வரிசைகட்டி நின்றார்கள். அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள். எல்லோரும் வரிசையில் சென்று குடும்ப அங்கத்தவர்களைக் கட்டியணைத்து துயர் பகிர்ந்தார்கள். எனக்கோ தயக்கம். நான் என்னத்தைச் சொல்ல? நண்பியைத் தவிர வேறு எவரையும் எனக்கு அங்கு தெரியாது. என்னை அறிமுகப்படுத்தவேண்டுமா? எதற்கு? வருத்தம் சொல்வதா? மரணவீட்டில் எதைச்சொன்னாலும் அது அபத்தம்போலவே பட்டது. கட்டியணைக்கவேண்டுமா? முத்தமிடும்போது எந்தக்கன்னத்தை முதலில் கொடுப்பது? மரணவீட்டில் இரண்டு கன்னத்திலும் முத்தமிடுவதா? வலது கன்னம் மாத்திரமா? அல்லது இடதா? மனம் பதட்டமடையத் தொடங்கியது. ஆனால் உடல் தயாராகவே இருந்தது. 

வரிசையில் முதலில் நின்றது ஒரு வயதான பெண்மணி. என்னைக்கண்டதும் உடனேயே “தாங்யூ டார்லிங்” என்று அவரே முத்தமிட்டுக் கட்டியணைத்தார். அவ்வளவுதான். உடலுக்குள் எங்கிருந்தோ அந்தத் துக்கம் வந்துசேர்ந்தது. உடல்கள் மெல்ல இறுகின. அடுத்ததாக மரியாவின் கணவர். அவரின் உடலோடும் என் உடல் அளவளாவியது. மரியாவின் முகம்கூட எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அவரின் மரணத்தின் துயரைப் பகிருவதற்கு என் உடலுக்கு அவ்வளவு ஆத்மார்த்தமாகத் தெரிந்திருக்கிறது. நண்பி என்னைக் கண்டதும் “ஓ ஜேகே, தாங்ஸ் போர் கமிங்” என்று கட்டிப்பிடித்து அழுதார். உடல்கள் இவ்வண்ணம் பேசுவதுகூடக் கிடையாது. பரஸ்பரம் நன்றி சொல்வதும் கிடையாது. அவற்றின் மொழி ஆழமானது. புதைத்தால் மண்ணுக்கடியில் அவை மீண்டும் சந்திக்கத்தான் போகின்றன. எரித்தாலும் அவை பூமியை விட்டுப் பிரிவதில்லை. தீயாய், காற்றாய், மழையாய் மீண்டும் வடிவமெடுத்து மண்ணையே அவை சேர்ந்துகொள்ளும். அதனாலேயே அவை சாசுவதம். அதனாலேயே அவற்றுக்கிடையில் இத்தனை பரிச்சயம் வந்திருக்கக்கூடும். ஒரே கிராமத்தில் வாழ்ந்த மனிதர்கள்போல. அவற்றின் துக்கத்தின் பகிர்தலில்கூட ஒரு சந்தோசம் ஒளிந்து இருக்கிறது. இதை வெறுங்கூடு என்று எவர் சொன்னார்? 

விடைபெற்றுக்கொண்டு காருக்குத் திரும்பி அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது. 

“We are blessed with a baby girl…” 

வாசித்துக்கொண்டிருக்கையில் என் உடல் தன்னையறியாமல் சிலிர்த்து அமைதியானது. அக்கணம் அது யாரோடு பேசிக்கொண்டது? 

000

Painting Credits: Daniel Nevins/theispot.com

Comments

  1. உங்களின் எழுத்துக்களின் எப்பொழுதுமே வயதை மீறிய முதிர்ச்சி இருப்பதுண்டு. உடல்களின் துயர் மட்டுமென்ன விதிவிலக்கா?மரண வீட்டில் எதிர்கொள்ளும் சங்கடங்களை மிக நேர்ததியாக விபரித்துள்ளீர்கள்.மரணங்கள் தரும் வேதனைகள் பிறப்புகள் பிரசவிக்கும் மகிழ்வுகளில் மறக்கப்படுகின்றன என்பதை கடைசி வரிகளில் சொல்லாமல் எழுதிக் காட்டி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. வித்தியாசமான பதிவு ஜேகே. பொதுவாக உயிர் அல்லது ஆண்மாவே ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படும். நீங்க உடலைபற்றி அற்புதமாக யோசித்துள்ளீர்கள்.”உடல்கள் இங்கேயே தோன்றி வளர்ந்து, இறந்தபின்னர்கூட உயிர்களை வழியனுப்பிவிட்டு தம் சொந்த ஊரிலேயே தங்கிவிடுகின்றன.” இந்த வரிகள் ஏனோ பல உறவுகளை ஞாபகப்படுத்தியது.
    சாந்தி சிவகுமார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...