பார்த்திபன் மறுபடியும் டொய்லட்டுக்குள் அவசரமாக ஓடினான்.
சிறுவயதிலிருந்தே அவனுக்கு இதுவொரு பெரும் பிரச்சனை. ஏதாவது பரீட்சை என்றால். மேடையில் ஏறிப் பரிசு வாங்குவது என்றால். வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும்போது அடுத்த பெயர் அவனது என்றால். தவமணி வாத்தி ரவுண்ட்ஸ் வந்தால். யாரேனும் வீடுகளுக்கு விஸிட் சென்றால். விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால். வீதியில் செல்லும்போது தெரிந்தவர்கள் எதிர்ப்பட்டால். தூரத்தே பொலீஸ் வாகனம் நின்றால். டெண்டுல்கர் சேஸிங் செய்தால். டெலிபோன் அடித்தால். இப்படி எந்தச் சின்ன டென்சன் என்றாலும் எங்கிருந்தோ ஒரு பூரான் நுழைந்து குடல்வழியே ஊர ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு தடவையும் அவன் புதிதாகக் காதல் வயப்படும்போதும் வயிற்றைக்குழப்பி, ‘இந்தா இப்போதே கலக்கி அடிக்கிறேன்’ என்று அது பாவ்லா காட்டும். ஆனால் உள்ளே போய்க்குந்தினால் சனியன் பூரான் சருகுக்குள் போய்ப்பூந்துவிடும். சிறிதுநேரம் முக்கிவிட்டு இது வேலைக்காகாது என்று முடித்து வெளியே வந்தால் திரும்பவும் பூரான் மெதுவாக ஊர்ந்து வெளியேவரும். பார்த்திபன் இந்தச் சிக்கலுக்கு வைத்தியரிடமும் சென்று ஆயிரத்தெட்டு பரிசோதனைகளும் செய்துபார்த்துவிட்டான். கான்சராக இருக்குமோ என்று கொலனோஸ்கோப்பிகூடச் செய்தாயிற்று. ம்ஹூம். ஈற்றில் ஐ.பி.எஸ் என்று விளக்கம் கொடுத்தார்கள். அன்க்ஸயட்டி. ஸ்ட்டிரஸ். பிஎச்டிக்கு இது சகஜம். நிறைய பழம் சாப்பிடுங்கள். தண்ணி குடியுங்கள். சில மருந்துகள். ஆலோசனைகளுக்குக் குறைச்சல் இல்லை.
பார்த்திபனுக்குத் திரும்பவும் பூரான் பிறாண்டியது.
"சும்மா சும்மா கக்கூசுக்குள்ள போய்க் குந்தாதை ... மூலம் இறங்கப்போகுது"
"சும்மா சும்மா கக்கூசுக்குள்ள போய்க் குந்தாதை ... மூலம் இறங்கப்போகுது"
அம்மா ஏசியதைப் பொருட்படுத்தாமல் அவன் நேரத்தைப்பார்த்தான். மணிக்கம்பி ஏழரையிலேயே அசையாமல் துடித்துக்கொண்டிருந்தது. அழைப்பு எடுப்பதற்கு இன்னமும் மூன்றரை மணித்தியாலங்கள் இருந்தன. மறுபடியும் குளிக்கலாம் என்று முடிவு செய்தான். குளிர்நாளில் எத்தனை தடவை குளித்தாலும் அலுப்பதில்லை. வெந்நீர் உடலில் படர்கையில் அசையவே மனம் வராது. அப்படியே கண்களைத் திறந்தபடி ஷவரை நோக்கித் தலையை உயர்த்தி நிற்க, நீர்த்திரளைகள் அவனின் உச்சி, கண்கள், மூக்கு, கழுத்து, மார்பு என்று சூடேற்றியபடி கடந்து வழிந்தன. வாழ்க்கையில் துணைக்கு ஒரு பெண் வேண்டும் என்று பெருமூச்சு விட்டான். இனியும் நாள்களைக் கடத்தமுடியாது. இந்த வருடத்துக்குள் எப்படியும் திருமணம் முடித்துவிடவேண்டும். விட்டால் ஐந்து வருடங்களுக்குச் செய்யமுடியாது என்று அம்மா ஒற்றைக்காலில் நிற்கிறார். சனிப்பெயர்ச்சியும் இராகுவின் ஸ்தானமும் அவனைச் சிக்கலுக்குள் மாட்டிவிடுமாம். ஒரு ஆராய்ச்சியாளனாகச் சாத்திரத்தைத் தான் நம்பலாமா என்ற சந்தேகம் பார்த்திபனுக்கு எப்போதும் இருந்தது. ஆனால் ஐந்தாயிரம் வருடங்களாக இந்த சந்தேகத்தைக் கடந்தே சாத்திரங்கள் பயணித்திருக்கின்றன. சிலசமயம் சில விதிகளின் ஆதாரங்கள் அபத்தமான புள்ளிகளில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் எதிர்வுகூறல்களும் கணிப்புகளும் சரியாக அமைந்துவிடுவதுண்டு. பிரபஞ்சத்தின் மையம் பூமி என்கின்ற விதியைப்போல. எல்லாமே பூமியைச் சுற்றியே வருவதுபோலத் தெரிகிறது. ஈர்ப்பு சக்தி பூமியை நோக்கியே இருக்கிறது. நிலம் அசையாமல் இருக்கிறது. ஏனைய கிரகங்களின் சுழற்சி. ஸ்டெல்லர் பரலக்ஸ். இப்படி எல்லா எதிர்வுகூறல்களும் நிகழ்வுகளும் சரியாக அமைகையில் மூலவிதி தவறாக இருப்பதால் என்ன சிக்கல் நேர்ந்துவிடப்போகிறது? நியூட்டனின் விதிகள் புவியின் சடடத்தில் சரியாக அமைந்துவிடவில்லையா. சாத்திரமும் அப்படித்தானே என்று அவனுக்குத் தோன்றியது. அவற்றின் ஆதார விஞ்ஞானம் அபத்தமானதாக இருக்கலாம். ஆனால் எதிர்வுகூறல்கள் பெரும்பாலும் சரியாகத்தானே அமைந்துவிடுகின்றன? காண்டம் வாசிப்பு எப்படிச் சரியாக வேலை செய்கிறது? சம்திங் இஸ் தெயார். எம்மால் விஞ்ஞானரீதியாக நிறுவமுடியவில்லை என்பதற்காக எடுகோள்களை எப்படிக் குறைகூற முடியும்? எங்களிடம் அவற்றை முழுமையாக அணுகுவதற்கான இண்டலக்சுவல் கப்பாசிட்டி இல்லை. அவ்வளவே. தேவையில்லாமல் அவற்றை நம்பாமல் எதற்காக ரிஸ்க் எடுக்கவேண்டும்?
‘டிக் டிக் டிக்’ என்று பாத்ரூமில் ஒட்டப்பட்டிருந்த டைமர், குளியல் ஐந்து நிமிடங்கள் கடந்துவிட்டதை சொல்லிக்காட்டியது. பார்த்திபன் ஷவரை நிறுத்தி, துவாலையால் உடலைத் துவட்டி, பொடி ஸ்ப்ரே அடித்தான். கண்ணாடியில் பக்கவாட்டில் திரும்பிநின்று பார்த்ததில் சின்னத் தொப்பை வருமாப்போலத் தெரிந்தது. கடந்த இரண்டு வாரங்களாக நாரி கொஞ்சம் இறுக்கமாக இருக்கிறது என்று அவன் புஷ் அப் செய்வதைத் தவிர்த்து வந்ததால் இருக்கலாம். அல்லது அம்மாவின் பிறந்த நாள் என்று தேவையே இல்லாமல் ஸ்பெஷலாகப் புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டதாலும் இருக்கலாம். அந்த வீணாய்ப்போன புட்டின்மேல், பெண்களைக் காணும் காய்ந்துகிடந்த சாமியாரைப்போல சபலமுற்று, கோப்பை கோப்பையாக விழுங்கி, ஆசை அடுத்தநாளும் அதையே நாடி, அதிகமான கார்போ கொழுப்பாகப் படிந்து. ஆர்ட்டரி வெஸல் எல்லாம் சுருங்கி, மாடி ஏறும்போதும் இளைத்து, அறுபது வயதிலேயே மார்பைப் பிரித்து பைபாஸ் செய்து, மீதிவாழ்வு முழுதும் அந்த நினைவிலேயே பயந்து பயந்து வாழ்ந்து. வேண்டாம். இனிக்கவனமாக இருக்கவேண்டும். சிக்கின் ரோஸ்ட் போதும்.
அறைக்குள் வந்தவன், இடுப்பு இலாஸ்டிக்கில் சி.கே என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த பெண்டரை எடுத்து அணிந்தான். பின்னர் லெவாய் டெனிமை கீழ் இடுப்புவரை இழுத்து நிறுத்தினான். கட்டிலில் அம்மா அயர்ன் பண்ணி விரித்து வைத்திருந்த ஜி-ஸ்டாரை எடுத்துப்போட்டு கசுவலாக உதறிவிட்டான். பாத்ரூம் கண்ணாடி முன்னே நின்று, அதன் கழுத்துவெட்டைச் சரிசெய்து, மொய்ஸ்டரைசிங் கிரீம் தடவி, தலைமயிருக்கு ஜெல் தடவி, சீவி இழுத்தான். மூக்கு மயிர் ஒன்று நட்டுக்கொண்டு வெளியில் தெரிந்தது. பிடுங்கினான். ஏதோ முகத்தில் மிஸ் ஆவதுபோலத் தெரிந்தது. கறுப்பு பிரேம் கண்ணாடியை எடுத்து அணிந்துபார்த்தான். கொஞ்சம் திருப்தி வந்தது. அறைக்குத் திரும்பி கணினியை ஓன் பண்ண, திங்பாட் பூட் ஆக நேரம் பிடித்தது. சுவரில் ஒட்டிவைத்திருந்த ஸ்டிக்கி நோட்சுகளில் மணிமேகலாவையும் நர்சிகாவையும் உரித்தெடுத்து, கசக்கி டஸ்ட்பின்னில் போட்டான். அருண்மொழியைத் தேடி எடுத்து வாசித்தான்.
‘பெரா எஞ்சினியர். ஐடி. ஸ்மார்ட். குட் லுக்கிங். சோஷல். கடகம். ஏழில் வியாழன். நான்காம் நம்பர். நோ ரிலேஷன்ஷிப்ஸ். அம்மா மட்டும்தான்’
அதைக் கணினித்திரையின் இடதுபக்க விளிம்பில் ஒட்டினான். இன்னொரு பெரிய ஸ்டிக்கி நோட்டையும் உருவிச் சரி பார்த்தான். சுபாஷினியோடு பேசுகையில் சமையல்பற்றிச் சுத்தமாகக் கேட்க மறந்துவிட்டிருந்தான். இம்முறை எதையும் தவறவிடவில்லை என்று தோன்றியது. அந்த நோட்டையும் கணினி மேல்விளிம்பில் ஒட்டினான்.
மீண்டுமொருமுறை அதை சத்தம்போட்டு வாசித்தான்.
மீண்டுமொருமுறை அதை சத்தம்போட்டு வாசித்தான்.
1. முகமன் விசாரித்தல். ஹலோ. ஹவ் ஆர் யு. தாங்க்ஸ். என்ன சாப்பாடு. மழை. வேலை பிஸி. Just go with the flow.
2. படிப்பு பற்றி. ஸ்கூல். ஏ.எல். எதற்கு இலங்கையில் படிக்கவில்லை. மொனாஷ். பி.எச்.டி. தீசிஸ் டீடெயில்ஸ். ரெலவன்ஸ்.
3. வேலை. எதிர்கால பேராசிரியர். எக்ஸ்ப்ளெயின் ஹெர் புரொஸ்பெக்ட்ஸ்.
4. சமையல். மேக் இட் கிளியர் எபவுட் த ஹெல்தி டயற்.
5. மேல்மருவத்தூர் அம்மா. வருடாவருடம் ஆசி பெறச்செல்லுதல்.
6. பமிலி பிளானிங். குழந்தைகள். எக்ஸ்பிளெய்ன்.
7. வீடியோ ஓன் பண்ணுதல். Have a close look. Can I really live with this face for the rest of my life? Chase the initial attraction away.
8. அம்மா அறிமுகம்.
9. வேறு விடயங்கள். Conclude.
சூடாக இருந்த உடல் இப்போது குளிர ஆரம்பித்தது. ஜக்கட்டை எடுத்து அணியலாம் என்றெழுந்தவன் அது வேண்டாமென்று போய் ஹீட்டரை ஓன் பண்ணினான். திடீரென்று இலங்கையில் ஜி-ஸ்டார் பிராண்ட் பிரபலமாக இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. வேண்டாம். ஆர்மனி என்றால் எப்படியும் தெரிந்திருக்கும். வெள்ளை டீசேர்ட்டில் ஏ.எக்ஸ் எழுத்துகளும் பளிச்சென்று.
“அம்மா இந்த டிசேர்ட்டை ஒருக்கா அயர்ன் பண்ணித்தாறீங்களா?”
வேதநாயகி அவன் கொடுத்த ஆர்மனியை வாங்கி அயர்ன் பண்ண ஆரம்பித்தார்.
“கொட்டின்ல விடுங்கோ, இல்லாட்டி எரிஞ்சிடும்”
“எனக்குத் தெரியும்… நீ ரெடியா? பிள்ளை கொஞ்சம் இண்டெலிஜெண்ட்போலக் கிடக்கு … ஓவரா புராணம் பாடிடாதை.”
“திரும்பவும் ஒருக்கா லிஸ்ட் செக் பண்ணிட்டன்… வேலையைப்பற்றி கனக்க கதைக்கோணுமா? ஆள் ஐடில வேலை செய்யுது. என்னைவிடச் சம்பளம் கூடக்கிடைக்கும் … தேவையா?”
“லைட்டாத் தொட்டிட்டு அங்கால போ … உன்னைப்பற்றி மட்டுமே கதைக்காத … அதையும் பேசவிடு”
“நான் கொஞ்சம் ஓவராப்போனா அங்கால நிண்டு சிக்னல் தாங்கோ என்ன”
“உனக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். சரி, அந்த டொக்டர் பிள்ளைக்கு என்ன சொல்லுறது?”
“யாரு ஜீவதர்சனியா?”
“இல்லை, அந்த எழுதுமட்டுவாழ் பிள்ளை”
‘ஓ கோசலாவா, அவ டொக்டர் இல்லை, ஜஸ்ட் எ டெண்டிஸ்ட்’
பார்த்திபன் கூகிள் டிரைவுக்குச் சென்று ஒரு ஷீட்டைத் திறந்தான். கோசலா பற்றிய குறிப்புகளைக் கவனித்தான்.
‘டெண்டிஸ்டாக கொழும்பில் வேலை செய்வதால் இங்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஐந்து வருடங்களில் கிளினிக் ஆரம்பிக்கலாம். சமையல் நன்றாகத் தெரியும். ஐ.கியூ அவரேஜ். சூரியா பிடிக்கும். பிடித்தபடம் ஜில்லென்று ஒரு காதல். குழந்தைகள் எப்போது வேண்டுமென்றாலும் ஓகே. மக்ஸிமம் மூன்று. நல்ல இங்கிலிஷ். லிஸினிங் சென்ஸ் படான். பொதுநிறம். கூனல். சரியான ஒல்லி. நீட்டு முகம். நொட் ஷூர் ஐ லைக் தட் பேஸ். மே பி வெயிட்டிங் லிஸ்ட்.’
இந்தப்பெண்ணுக்காக மெனக்கெட்டு ‘முன்பே வா’ பாடலைக் கேட்டு முகநூலில் ஷெயார் பண்ணியதும் ஞாபகம் வந்தது. நோ குட்.
“அம்மா, அவ பெரிசா வடிவில்லை. கதைக்கேக்க எப்பவுமே குனிஞ்சுகொண்டு இருந்தா. ஸ்கைப்பில நெத்தியும் தலையுச்சியும்தான் தெரிஞ்சுது. ஆனா இஞ்ச வந்தா அவவுக்கு ஈஸியா வேலை கிடைக்கும்.”
“இப்ப என்ன சொல்லுற? வேண்டாமெண்டு சொல்லிடட்டா?”
“இல்லை, ஸ்டாண்ட்பைல வச்சிருங்கோ … இப்ப என்ன அவசரம்?”
“அது சரியில்லை … ஓமா இல்லையா எண்டு கடத்தாமல் சொல்லிடோணும். பொம்பிளைப்பிள்ளைகளிண்ட வாழ்க்கை. விளையாடக்கூடாது.”
வேதநாயகி கொடுத்த அயர்ன் பண்ணிய டிசேர்ட்டை அவன் வாங்கி அணிந்துகொண்டான். கைகள் இறுக்கி, உடலோடு ஒட்டியபடி ஆர்மனி சிக்கென்று இருந்தது. ஒரு மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு கொஞ்சம் அதிகமாகத் தன்னைத் தயார்படுத்துகிறானோ என்று பார்த்திபனுக்கு சந்தேகம் வந்தது. ஒரு கார் வாங்குவதற்கு எவ்வளவு ரிசேர்ச் செய்கிறோம். வேலை நேர்முகத்தேர்வுக்கு எவ்வளவு மெனக்கடுகிறோம். இது வாழ்க்கைத்துணை. எவ்வளவு தயார்படுத்தினாலும் தகும் என்று தோன்றியது.
நேரம் அசைவதாய்க் காணோம். பார்த்திபன் முகநூல் சென்று அருண்மொழியை மீண்டும் தேடிப்பார்த்தான். “Independent Idiot” என்று அவள் தன்னைப்பற்றி விளக்கம் கொடுத்திருந்தாள். டிப்பிக்கல் ஐடிகாரி. அமெரிக்கர்களைப் பின்பற்றி. தம்மை அறிவாளி என்று எண்ணி. மற்றவர்கள் தேவைகளை புரோகிராமாக எழுதுவதை ரிசேர்ச் அண்ட் டிவலப்மெண்ட் என்று அழிச்சாட்டியம் பண்ணி. இவர்களுக்கு ரிசேர்ச் பற்றி என்ன தெரியும்? அருண்மொழி நிறையப் படிப்பாள் போலிருந்தது. தோஸ்தாவஸ்கி, காப்ரியல் மார்க்கஸ், டெரிதா என்று அவன் கேள்வியேபடாத பெயர்கள் கிடந்தன. அவ்வப்போது ஆங்கிலப்பாடல்களும் கர்நாடக சங்கீதப்பாடல்களும் ஷெயார் செய்யப்பட்டிருந்தன. நிலைத்தகவல்களில் ஒருவித லிபரலிஸம் இருந்தது. ஒபாமாவின் முகநூல் பக்கத்தை லைக் செய்திருந்தாள். பார்த்திபன் தான் என்றோ ஒபாமா பற்றிப்போட்ட ஸ்டேடஸின் பிரைவசியை பப்ளிக் ஆக்கினான். அவளைப்பார்த்தால் கடவுள் பக்தி இருப்பவள்போலத் தோன்றவில்லை. தன்னுடைய மதம் சார்ந்த பதிவுகள் ஏதும் பப்ளிக்காக இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். ஸ்டிக்கி நோட்டில் மேல்மருவத்தூர் பற்றிய பொயிண்டை ஸ்ட்ரைக் பண்ணினான். இப்போதைக்கு வேண்டாம்.
அடுத்ததாக அருண்மொழியின் போட்டோக்களை அவன் ஒவ்வொன்றாக மேய ஆரம்பித்தான். அவள் நண்பர்களோடு எடுத்த படங்கள் ஆங்காங்கே கிடைத்தன. பெரும்பாலும் டிஷேர்ட் ஜீன்ஸ்தான் அணிந்திருந்தாள். நீச்சலின்போது கவர்ச்சியாக ஸ்விம்மிங் ட்ரெஸ் அணிகிறாள். பப்ளிக் போட்டோக்களிலேயே இப்படி என்றால் பிரைவசி செட் பண்ணுப்பட்ட போட்டோக்களில் … என்று உருவான எரிச்சலை அவன் புறந்தள்ளினான். ஒரேயொரு குளொசப் போட்டோ இருந்தது. ஏதோவொரு தொழிநுட்ப மாநாட்டில் எடுத்த செல்பி அது. உப்புக்கல் வெள்ளையாட்டம் முகம் மேக்கப் ஏதுமில்லாமல் பளீரென்றிருந்தது. சுருள் தலைமயிரை அலட்சியமாகத் தவழவிட்டிருந்தாள். சற்றே நீள முகம். முட்டைக் கண்கள். கொண்டக்ட் லென்ஸ் அணிந்திருந்தாளா இல்லையா என்று ஊகிக்கமுடியாமலிருந்தது. போஃனை உயரமாகப் பிடித்து செல்பி எடுத்திருந்ததில், உள்சட்டையினூடே மார்பு இடைவெளி சற்று அதிகமாகவே தெரிந்து…கிரைஸ்ட் ஸேக். வழமைபோல அவனுக்கு வயிற்றைக் கலக்கியது. பி ரூத்லெஸ் பார்த்தி. அவளை நிஜமாகவே பிடித்திருக்கிறதா? அல்லது வெறும் உடல் கவர்ச்சியா இது? முப்பது நாள்களில் மோகம் எக்ஸ்பைர் ஆனபின்னரும் இந்தப் போட்டோவை இப்படித்தான் ரசிப்பாயா? பார்த்திபன் பார்வையை அவசரமாக விலக்கி, இன்னொரு போட்டோவுக்குத் தாவினான். பிட்ஸா ஹட்டில் நண்பர்களுடன் ஒரு படம். சிரிக்கும்போது அழகாக இருந்தாள். பார்த்திபனுக்கு அருண்மொழியை தீர்க்கமாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. இதுவரை வந்த குறிப்புகளில் எந்தப்பெண்ணும் இத்தனை அழகில்லை. ஒரு டீச்சர் குறிப்பு. சிவலைதான். ஆனால் வெறும் அவித்த இறால். அந்தப்பெண்மீது எந்த ஈர்ப்பும் வரவில்லை. கோசலை, ஜீவதர்சினி, சிந்தியா என்று எவரையுமே பார்த்தவுடன் பிடித்துப்போகவில்லை. ஆனால் அருண்மொழி வேறு லெவல் என்று தெரிந்தது. அழகு. ஸ்மார்ட். கண்களில் ஒரு பிளேர்ட்டினெஸ் இருந்தது. இவளைச் சமாளிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஐடிகாரி. ஆண் நண்பர்களோடு நெருக்கமாகப் பழகுவாள். பொறாமையை மறைக்கவேண்டியிருக்கும். அவளுக்குத் தெரியாமல் பாத்ரூம் சுவரில் ஓங்கி குத்துவிடவேண்டியிருக்கும். அவன் சொல்லுக்கும் அடங்கமாட்டாள். பட் இட்ஸ் ஓகே. இரண்டு பிள்ளைகளின் பின்னர் இதையெல்லாம் சிந்திக்கவே நேரம் கிடைக்கப்போவதில்லை. மிக முக்கியம். இவளை இம்ப்ரெஸ் செய்தாகவேண்டும். நான் யார்? என் கல்வித்தகுதி என்ன? என்னுடைய சொத்து என்ன? என்னோடு குடும்பம் நடத்தினால் எதிர்காலம் எப்படி இருக்கும்? இருவருக்கும் பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகளாகப் பிறக்கும்? வாழ்க்கை எத்தனை செட்டிலாக அமையும்? எல்லா சிந்தனைகளையும் அவளில் விதைக்கவேண்டும். உளவியலின்படி பெண்களுக்கு, ஆண்களைப்பற்றி அவர்கள் அதிகம் யோசிக்க, யோசிக்கத்தான் காதல் வருகிறது. அதனாலேயே தொடர்ந்து பின்னால் சுற்றும் காவாலிகளை அவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்கத்தொடங்குகிறார்கள். தொடர்ந்து அவளுக்கு தன் ஞாபகம் வருவதுபோல ஏதாவது செய்துகொண்டிருந்தாலே போதுமானது. ஒரு பெண் தன்னை நிராகரிக்க ஏதாவது காரணம் இருக்கக்கூடுமா என்று பார்த்திபன் யோசித்தான். எதுவுமே அப்படி அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகின் அதி உன்னதமான தகுதிகளை உடைய மாப்பிள்ளையாக அவன் தன்னை சுவீகரித்துக்கொண்டான். பட் யு நெவர் நோ. அருண்மொழி அவனை நிராகரித்துவிடுவாளோ என்று சின்னதாக ஒரு சந்தேகம் எட்டிப்பார்த்தது.
டொய்லட் போய் வந்தான்.
கை கழுவும்போது காலையில் சவரம் செய்ததற்கு இப்போது முகம் சொரசொரத்ததுபோல இருந்தது. உடுப்பைக் கழட்டிக் கவனமாக மாட்டிவிட்டு முகச்சவரம் செய்து மீண்டுமொருமுறை குளித்தான். மீண்டும் முகத்துக்குக் கிரீம்போட்டு, தலைக்கு ஜெல் தடவி, ஜீன்ஸ் டிசேர்ட் அணிந்தான். அவனுக்கு அலுக்கவேயில்லை. ஆயிரம் முறை திருத்தங்களோடு திரும்பிவந்த தீஸிஸ்களை சின்ன எரிச்சல்கூடக் காட்டாமல் சரி செய்து புரபசருக்கு அனுப்புபவன் அவன். இது என்ன பிரமாதம். ஜிம் வெயிட்டுகளை கைகளால் தூக்கி சில நிமிடங்கள் பயிற்சிசெய்தான். டீசேர்ட் கை மேலும் இறுகி சதை புடைத்துக்கொண்டு நின்றது. திருப்தியாக இருந்தது. கண்ணாடியை அணியலாமா வேண்டாமா என்று யோசித்தான். கறுப்பு பிரேம் கண்ணாடி ஒரு இளம் பேராசிரியருக்குரிய தோற்றத்தைக்கொடுத்ததுபோல இருந்தது. அணிந்தான்.
பதினொரு மணி.
“அம்மா ரெடி, வாங்கோ”
தாயை அறைக்குள் கூப்பிட்டபடியே, ஸ்கைப்பில் அருண்மொழியின் ஐடியைத் தேடி இணைத்தான். அவள் புரபைல் போட்டோ வெறுமையாக இருந்தது. இந்த அழைப்புக்காகவே புதிதாக ஒரு எக்கவுண்டை அவள் உருவாக்கியிருக்கிறாள். வட்ஸப், வைபர் கேட்டபோது அதைத் தவிர்த்து ஏன் ஸ்கைப் அனுப்பினாள் என்று இப்போது புரிந்தது. ஸ்மார்ட்.
கோல் பண்ணினான்.
“ஹலோ, கான் யா ஹிர் மீ?”
வலிந்து ஆஸி ஆங்கிலத்தை குரலில் வரவழைத்தான். ‘ஹியர்’ எனும்போது ‘ய’க்கு ஓசை வரக்கூடாது. ‘யு’ என்ற சொல் ‘யா’ போன்று ஒலிக்கவேண்டும். கவனமாக இருந்தான்.
“யெஸ், லவுட் அண்ட் கிளியர், கான் யு?”
அருண்மொழியின் குரலும் மொழியும் அழுத்தம் திருத்தமாக இருந்தது. பார்த்திபனிடம் இருந்த பதட்டம் அவளிடம் இருக்கவில்லை. ஆங்கில உச்சரிப்பில் ஒரு இலாவகம் இருந்தது. அவள் பல நாடுகளுக்கும் சென்றவள் என்று அம்மா சொன்னது உண்மைதான். அவனுடைய ஆங்கிலப்புலமையை அவளிடம் காட்டிப்பிரயோசனம் இல்லை என்று தோன்றியது. தமிழுக்கே மாறலாம். ஏன் இரண்டு தமிழர்கள் தேவையேயில்லாமல் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற எண்ணமும் பார்த்திபனுக்கு அப்போது வந்தது. எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? “என் பெயர் பார்த்திபன், நான் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் ….” தமிழில் இப்படி விவரிப்பது அவனுக்கு அபத்தமாகப் பட்டது. கொஞ்சம் தயங்கியபடி விளிம்பில் ஒட்டியிருந்த ஸ்டிக்கி நோட்ஸைப் பார்த்தான்.
“சாப்பிட்டீங்களா?”
பார்த்திபனுக்கு உணவு என்பது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதற்கான ஒரு எரிபொருள். அதில் அவன் கலோரி அளவைத்தான் கவனிப்பானே ஒழிய ருசியை அல்ல. புரதத்தேவைக்காக கோழி இறைச்சியை அவன் உப்பு, மிளகு எதையும் போடாமல் அப்படியே வாட்டி உண்பான். இலை வகைகளையும் அவிக்காமல் வெறுமனே கழுவியே உண்பான். உணவில் உப்பும் உறைப்பும் அவனுக்கு வேண்டாத விடயங்கள். சந்தையில் ஓர்கானிக் காய்கறிகளைத்தான் அதிக விலை கொடுத்து வாங்குவான். முட்டை என்றால் வெள்ளைக்கரு மாத்திரம்தான். மஞ்சள் கருவை அம்மாவுக்கும் கொடுக்காமல் ரப்பிஷ் பின்னில் தட்டிவிடுவான். தினமும் ஜிம் செல்வான். தினமும் உடல் எடை சரி பார்ப்பான். முதுகில் சிறிய தீற்றலாய் நோவை உணர்ந்தாலும் வைத்தியரிடம் செல்வான். இதையெல்லாம் அருண்மொழி அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவனைப்பொறுத்தவரையில் இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமேயில்லை. உடனேயே அடுத்த டொப்பிக்குக்கு அவன் தாவினான்.
படிப்பு.
பார்த்திபன் உயர்தரக் கணிதப்பிரிவில் அகில இலங்கையிலேயே இரண்டாமிடம் வந்தவன். படிப்பில் பயங்கரக் கெட்டிக்காரன். ஒரு புத்தகத்தை எந்திரத்தைப்போல மனனம் செய்யக்கூடியவன் அவன். கணித நிறுவல்களைக்கூட அவன் அடிக்கோடு பிசகாமல் மனனம் செய்வான். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து படிப்பான். நித்திரை தூக்கினால் மூக்கினுள் தென்னந்தும்பை நுழைத்து, தும்மல் வரவழைத்து, வந்த தூக்கத்தை அடித்துக் கலைத்துவிடுவான். ஊர்பூராக மின்சாரம் இருந்த காலத்திலும் மண்ணெண்ணெய் விளக்கில் படித்த பெருமை அவனுக்கு இருந்தது. மின்சார விளக்கொளி அறையெங்கும் பரவுகிறது. அதனால் படிக்கும்போது கவனமும் அறையெங்கும் சிதறிவிடுகிறது. ஆனால் லாம்பு வெளிச்சம் ஒரு எல்லை தாண்டுவதில்லை. அதனால் படிக்கும்போது கவனமும் ஒருபோதும் புத்தகத்தைவிட்டு வெளியே சிதறுவதில்லை என்பது அவனது வாதம். பரீட்சைக்காலத்திலும் அவன் எவரோடும் பேசுவதில்லை. வாய்வரை வந்து நிறைந்திருந்த வாந்தியை ஒரே கக்காக கக்குவதுபோல அவன் மண்டபத்தில் பரீட்சைத்தாளைப் பெற்றுக்கொண்டதும் விறுவிறுவென்று எழுத ஆரம்பிப்பான். விடைத்தாள் பறிக்கப்படும்வரை தொடர்ந்து எழுதுவான். பின்னர் எவருடனும் பேசாமல் வீடு திரும்பி அடுத்தநாள் பரீட்சைக்காக வாந்தியைச் சேகரிக்க ஆரம்பிப்பான். இந்த யுக்தியை அவன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போதுதான் முதன்முதலில் கற்றுக்கொண்டான். பின்னர் சாதாரண தரத்திலும் அது தொடர்ந்தது. உயர்தர கணிதத்தில் அவனுடைய யுக்தி செல்லுபடியாகாது என்று ஆசிரியர்கள்கூட சொன்னதுண்டு. அவனுடைய பதில் மிக இலகுவானது. இலங்கையில் பரீட்சைத்தாள் தயாரிப்பவர்களுக்கு சொந்தப்புத்தியே கிடையாது. அவர்கள் லண்டன் பரீட்சை, லோனி, கடந்த ஐம்பது வருட பரீட்சைக் கேள்விகள், இவற்றிலிருந்தே கேள்விகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவற்றையெல்லாம் அட்சரம் பிசகாமல் மனனம் செய்த ஒருவன் கணிதத்தில் இலகுவில் விண்ணன் ஆகமுடியும். அதுமட்டுமல்ல, அவன் நினைத்தால் பட்டவியல், முதுமானிப் படிப்பில்கூட இதே வழிமுறையைப் பின்பற்றி அதி சிறந்த கணிதவியலாளர் ஆகமுடியும். இதுவே பார்த்திபனின் வலுவான நம்பிக்கை. வாழ்க்கையில் மனனம் செய்யாமல் அவன் சொந்த புத்தியில் நிறுவிய ஒரே தத்துவம் அதுதான். அதில் அவனுக்கு அளவிலாப்பெருமையும்கூட. இந்த அணுகுமுறைக்காக சக பிஎச்டி நண்பர்கள் அவனைக் கேலி செய்தாலும் அவன் கணக்கே எடுப்பதில்லை.
“யூ நோ வட் பார்த்திபன்? யு வோன்ட் பிலீவ் இட். ஏ.எல் பர்ஸ்ட் ஷை நடக்கேக்க நான் கிராண்ட் மாஸ்டர் கொம்பெடிசனுக்குப் போயிட்டன். வி வொன்.”
அருண்மொழி சொல்லியதை எப்படி எடுத்துக்கோள்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் எந்த டியூஷனுக்கும் செல்லாமலேயே உயர்தரம் படித்ததாகச் சொன்னபோது பொய் சொல்கிறாள் என்றே நினைத்தான். டியூஷனுக்குப் போகாமல், அதுவும் ஒரு பெண், எப்படி பொறியியலுக்குத் தேர்வாக முடியும்? தூய கணிதப்பரீட்சைக்கு முதல்நாள் பேர்மட்டின் கடைசி விதியை இரவிரவாகத் தீர்க்கமுயன்று தோற்றதை அருண்மொழி சொல்லியபோது பார்த்திபனுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது.
“அதென்ன பேர்மட்டின் கடைசி விதி?”
கேட்க நினைத்தவன் பின்னர் தவிர்த்தான். ஒரு பி.எச்.டிக்கு கணிதவிதி ஒன்று தெரியவில்லை என்று சொல்வது அவமானம். அவள் தன்னை இம்பிரஸ் பண்ணுவதற்காக இட்டுக்கட்டவும் கூடும். அறுபது விகிதமான பெண்கள் முதல்நாள் டேட்டிங்கின்போது நைச்சியமாகப் புழுகுகிறார்கள் என்று குவாராவில் வாசித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. தன்னைப்போன்ற சகல தகுதிகளையும் உடைய ஒரு ஆணை ஒரு மணப்பெண் மிக அலட்சியமாகத் தாண்டிச்செல்வதை உணர்ந்த பார்த்திபன் நிலைகொள்ளாமல் தவித்தான். உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி கைக்கெட்டியபின்னரும் அவனிடமிருந்து நழுவிச்செல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. அவள் அப்படி நழுவும்போது மேலும் மேலும் அவளுடைய அழகு மெருகேறியதுபோலத் தோன்றியது. பார்த்திபன் மேல்மருவத்தூர் அம்மாவிடம் மானசீகமாக விண்ணப்பம் வைத்தான்.
“நீதான் எப்படியும் இப்பெண்ணிற்கு என்மீது காதல் வரவைக்கவேண்டும்”
பார்த்திபனுக்கு அவன் அப்படி வேண்டியது பெரும் அபத்தமாகவே இருந்தது. முடிவே எடுத்துவிட்டானா? அவளை நேரில் பார்க்கவில்லை. பேசிப் பதினைந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. எப்படியோ, டெக்னிக்கலி அவளுக்குத்தான் காதல் வரவேண்டும் என்று கேட்டானே ஒழிய இருவரும் சேரவேண்டும் என்று கேட்கவில்லை. அந்த முடிவை அவன் அப்புறம் எடுத்துக்கொள்ளலாம்.
பேச்சு சமையலுக்குத் தாவியது. இங்கு வந்தால் வீட்டில்தான் சமைக்கவேண்டியிருக்கும் என்று அவன் ஹெல்த் காரணங்களுக்காகச் சொன்னதை அவள் தவறாக எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். கூடவே தேவையில்லாமல் அவன் அம்மாவையும் இழுத்தாள். பார்த்திபனுக்கு முதற்தடவையாக அருண்மொழிமீது எரிச்சல் வந்தது. அவள் தன்னை பெரும் அறிவாளி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள்போல. அலுவலகத்தில் ஒரு பெரிய டீமை ரன் பண்ணுவதன் திமிர். எல்லோரும் அவளிடமே உதவிக்கு சென்று நிற்பார்கள். கூடவே நான்கு நாடுகளுக்கு சென்று வந்ததில் கொம்பு பிச்சுக்கொண்டு முளைத்திருக்கிறது. இண்டிப்பெண்டண்ட், லிபரலிஸம், மொடர்னிசம் என்று புதிது புதிதாக வெஸ்டேர்ன் ஐடியோலொஜீஸை அப்படியே காவு வாங்கி வெயிலுக்கும் ஜக்கட் போடும் பேர்வழிகள் இவர்கள். புல்ஷிட்.
ஏதோ சொல்லப்போனவனை அம்மாதான் சைகையால் நிறுத்திவைத்தார். பார்த்திபன் அடுத்ததாக என்ன பேசுவது என்று யோசித்தான். பிள்ளைகள்பற்றிப் பேசவேண்டும். ஆனால் அதற்கு அது சரியான தருணமல்ல. என்ன பேசலாம்? திடீரென்று அத்தனை சாம்பிளிங் டேட்டாவும் எந்த ஒரு புரஜெக்சனையும் கொடுக்காமல்போகவும் மீள டேட்டா கலக்சனுக்குச் செல்லவேண்டிய நிலைமை.
பார்த்திபன் கணம் அமைதியாக, அருண்மொழியே ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு என்ன பிடிக்கும்?”
ஏதோ யோசனையில் இருந்தவன் திடீரென்று அவள் கேட்ட கேள்வியில் சற்றுத் தடுமாறி, ‘தோசை’ என்றான்.
“ஆ நைஸ் .. எனக்கும் பிடிக்கும் … ஐ டிண்ட் மீன் இட் … மியூசிக் .. என்னமாதிரி மியூசிக் கேப்பீங்கள்?”
அவள் பதிலில் ஏகத்துக்கு நக்கல் இருந்தது. Such a bully. அவனுக்கு வெறுத்துப்போனது. சொதப்பிவிட்டான். என்ன பிடிக்கும் என்பதற்கு என்னுடைய ரிசேர்ச்சில் இன்னமும் அடித்து ஆடியிருக்கலாம். ஐதரசனை நிலக்கரியிலிருந்து பிரித்தெடுப்பது பற்றி மாத்திரம் மேலோட்டமாகச் சொல்லியிருந்தாலும் அவன் தன்னுடைய ஆராய்ச்சிக்கு சரியான நியாயம் சேர்க்கவில்லை என்று தோன்றியது. விளக்கவேண்டும். எப்படி நூறாண்டுகளுக்கும் மேலாக தோல்வியில் முடிந்த ஒரு ஆராய்ச்சியில் தான் ஒரு சின்ன ஒளிக்கீற்றைக் கண்டறிகிறான் என்பதை அவளுக்கு விளக்க ஆசையாக இருந்தது. அவள் புரிந்துகொள்வாள். புத்திசாலி. ஆனால் லூசுத்தனமாக இசை பற்றி கேட்கிறாள். இண்டெலிஜண்ட் இமோஷனல் இடியட்ஸ்.
இசைபற்றி பார்த்திபனுக்கு ஒரு தனித்துவமான பார்வை இருந்தது. அதைப்பலரும் இலகுவில் புரிந்துகொள்வதேயில்லை என்பது அவனது எண்ணம். அதுபற்றி ஒரு டெட்டோக் செய்யவேண்டும் என்றுகூட அவன் நினைத்ததுண்டு. உலகில் அதிகம் தகுதிக்கு மேலாகக் கொண்டாடப்படுவது இசை என்பது அவனது உறுதியான நம்பிக்கை. இசை உலகத்துக்கு எந்த நன்மையையும் விளைவிப்பதில்லை. நீண்ட ஆயுள், குழந்தைகள், தேக ஆரோக்கியம், அபிவிருத்தி என்று எதற்கும் இசை உதவுவதில்லை. இசைப்பதால் இசைக்கலைஞர்களுக்கு பணம் சேர்கிறது. அவ்வளவுதான். அதைப் பைத்தியம்போல கேட்டு என்ன பயன்? பிழைத்தலுக்கு தேவையே அற்ற பொருள் அது. மனிதரின் வால்போல அதுவும் ஒருநாள் கூர்ப்பில் அழிந்துவிடும். மிஞ்சிப்போனால் சிறந்த கவிதைகளை ரசிக்க இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தமுடியும். அவ்வளவே. தென் எகயின், கவிதைகளும் தேவையற்றவைதானே. பார்த்திபன் உடற்பயிற்சியின்போதுகூட ஏதாவது ஒலிப்புத்தகத்தை இயர்போனில் கேட்பானே ஒழிய இசையின்மீது அவனுக்கு என்றைக்கும் நாட்டம் சென்றது கிடையாது. இசை என்பது பெண்களுக்கானது என்று எப்படியோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அல்லது உணர்ச்சிவயப்படும் முட்டாள்களுக்கானது.
அவன் சொல்வதையெல்லாம் கேட்டுமுடித்த அருண்மொழி மெலிதாகச் சிரித்தபடியே ‘என்யா’ பற்றிக் குறிப்பிட்டபோது அவனுக்கு அடிமுடி விளங்கவேயில்லை. அவன் இவ்வளவு சொல்லியும் கேட்காமல், எவனோ ராமகிருஷ்ணன் பாடல்கள் பற்றி அவள் சிலாகித்தாள். பார்த்திபன் மீண்டும் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கலாம் என்று நிமிர்ந்தான்.
அவனுடைய அம்மா திடீரென்று எழுந்து நின்று சைகையால் கணினியை மியூட் பண்ணச்சொன்னார்.
“தம்பி … இப்பிடி லூசுத்தனமா இன்னும் அஞ்சு நிமிசம் கதை. பிள்ளை கட் பண்ணீட்டு ஓடிப்போயிடும். நீ கொஞ்சநேரம் வாயைப் பொத்தீண்டு இரு. அது பேசட்டும். ”
பார்த்திபன் சுதாகரித்தவனாய் கணினியை அன்மியூட் பண்ணிவிட்டு அருண்மொழியிடம் கூறினான்.
“ஆர் யூ ஓகே அருண்மொழி? ஏன் திடீரென்று சைலண்டாயிட்டிங்கள்?”
அருண்மொழி ஒன்றுமில்லை என்று சொன்னாலும் இவன் விடாமல் கேட்டான்.
“ஏலாதா? ஏதும் வருத்தம் காய்ச்சலா? டொக்டரிட்ட போனீங்களா”
அவளுக்கு இவன் கேள்வி எரிச்சலாக இருந்திருக்கவேண்டும்.
‘நா … தேவையில்லை. பீரியட் டைம், இரண்டாம் நாள். பட் ஐ ஆம் பைஃன்’
திடீரென்று அவள் அப்படிச்சொன்னதும் பார்த்திபன் தடுமாறிப்போனான். ஒரு பெண் இத்தனை பட்டவர்த்தனமாக தனக்கு பீரியட் என்று ஒரு ஆணுக்குச் சொல்லுவாளா? அவளுக்கு அதில் எந்தக்கூச்சமுமே இருக்காதா? அவளுக்கு என்ன பதில் சொல்லலாம்? பார்த்திபனுக்கு மிக அந்தரமாகவும் வெட்கமாகவும் இருந்தது.பூரான் மறுபடியும் கலக்கியது. முன்னால் அம்மா இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் என்ன நினைப்பார்? உடற்கழிவுகள் சார்ந்த எந்த விடயமும் பொதுவில் பேசக்கூடாதவை என்பது அவனது எண்ணம். அவை மிக அந்தரங்கமானவை. பெண்களுக்கு அவை இன்னமும் ஒரு படி அதிகம். அவனுடைய ஆய்வுகூடத்தில்கூட யாரேனும் பெண் மாணவி ‘ஜஸ்ட் வோன்ன பீ’ என்று சொன்னாற்கூட இவன் மிகவும் சங்கட நிலைக்குச் சென்றுவிடுவான். சிறுவயதில் பெண்கள் டொய்லட்டுக்கே செல்வதில்லை என்று அவன் நினைத்ததுகூட உண்டு.
ஆனால் கூடவே அவனுக்கு சிறு நம்பிக்கைத்தீற்றலும் உருவாகியது. இது சாட்சாத் மேல்மருவத்தூர் அம்மாவின் ஆசைதான். அங்குதான் மாதவிடாய்ப் பெண்களும் கர்ப்பக்கிரகம் சென்று பூசை செய்யமுடியும். எங்கோ புள்ளிகள் இணைவதுபோல இருந்தது. அவன் தன்னுடைய வருங்காலக்கணவன் என்று எண்ணியதாலேயே சங்கோஜமில்லாமல் அவள் அதைச்சொல்கிறாள் என்று அவன் எண்ணிக்கொண்டான். சிலவேளை அதுபற்றிப்பேசினால் அங்கிருந்து அப்படியே குழந்தைகள்பற்றிய பேச்சு எழும் என்று எண்ணினாளோ என்னவோ? பார்த்திபனுக்கு சிந்தனை எங்கெல்லாமோ ஓடியது. இப்படிப்பட்ட புரட்சியாகப் பேசும் பெண்கள் ஆரம்பத்தில் குழந்தையே வேண்டாம் என்பார்கள். அது ஒரு ட்ரெண்டாக உலாவி வருகிறது. எதிர்காலம் பற்றிய பிரக்ஞை ஏதும் இன்றி, இந்த இக்கணம் சாசுவதம் என்று நம்பி, அப்படியே வாழ்வு முழுதும் கழித்துவிடலாம் என்று இந்த நவீன புரட்சியாளர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். காலம் காலமாக இடம்பெற்ற மனிதகுல விருத்தியின் ஆதாரத்தை அவர்கள் புறந்தள்ளுகிறார்கள். அருண்மொழிக்கு அப்படியொரு சிந்தனை இருப்பின் அந்தச் சிந்தனையை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். திருமணம் ஆகி இரண்டாம் வருடத்திலேயே குழந்தை பெற்றுக்கொண்டுவிடவேண்டும் என்னும் அவனது விருப்பத்தைத் தெரிவித்துவிடவேண்டும். ஐந்தே வருடங்களில் இரண்டு பிள்ளைகள். குடும்பத்துக்கேற்ப பெரிய வீடு ஒன்று. இரண்டுபேர்களின் தாய்மாருக்கும் தனித்தனி அறைகள். ஒவ்வொரு வருடமும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கைப் பயணம். தனியார் கல்லூரிகளில் படிப்பு. பெண் குழந்தை சாமத்தியப்படும்போது பெரிதாக ஒரு விழா. அவர்கள் பதின்ம வயதுக்கு வந்ததும் எல்லோரும் உலகப் பயணங்களைச் செய்யலாம். பிள்ளைகளை தமிழ்க்கலாசாரத்தில் வளர்க்கவேண்டும். அவர்களுக்கு திருமணம் முடித்துவைத்து. பேரப்பிள்ளைகள் கண்டு. பார்த்திபனுக்கு இது எல்லாவற்றையும் அருண்மொழியோடு சேர்ந்து செய்வது எத்தனை இன்பத்தைக் கொடுக்கும் என்று எண்ணிப்பார்க்கவே சுவைத்தது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த அவள் தயாராக இருக்கவேண்டும். பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஊர்ச்சாப்பாடு சமைத்துப்போட்டு, கடவுள் கும்பிட்டு, அதேநேரம் வேலைக்கும்போய். இதனை இப்போதே உறுதி செய்துவிடல் வேண்டும்.
“பிள்ளைகள் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?”
அவள் முதலில் தடுமாறினாலும் ஈற்றில் அவன் விருப்புக்கு இணங்கிவந்தாற்போலவே தெரிந்தது. அருண்மொழிபோன்ற புத்திசாலி பொறியியலாளர் மணமகளை திருமணம் முடிப்பது சந்ததிக்கு நல்லது என்று பார்த்திபன் நினைத்தான். இவன் ஒரு பி.எச்.டி. அவள் வெறுமனே ஐ.டி என்றாலும் ஒரு செஸ் மாஸ்டர். இரண்டு உயர் ஐ.கியூக்களுக்குப் பிறக்கும் பிள்ளை எத்தனை புத்திசாலியாக வளரும்? மகன் நிச்சயம் நாஸாவரைக்கும் செல்வான். ஸ்பேஸ் எக்ஸில் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவான். நோபல்கூடக் கிடைக்கலாம். ஒரே ஸ்கைப் அழைப்பில் பார்த்திபனது வாழ்வு மிக செழிப்புடன் விரிவடைவதை அவனால் உணரமுடிந்தது. இந்தப்பெண்ணை எப்படியும் இழந்துவிடவே கூடாது.
“வீடியோ ஓன் பண்ணுவமா?”
கலங்கல் திரையிலும் அருண்மொழி முகத்தில் தேவதை களை தெரிந்தது. அலட்சியமாகச் சிதறிக்கிடக்கும் கேர்லி முடிக்கற்றைகள். நெற்றிப்பொட்டு. சிவலை முகம். சல்வாரில் அவள் ஆதிபராசக்திபோலவே இருந்தாள். மேக்கப் இல்லாத முகம் மேலும் கவர்ச்சியைக் கொடுத்தது. அந்தக் கண்கள். மூக்கு. அப்படியே அவள் மூக்கோடு மூக்கு வைத்து அழுத்தி, கண்களைக் கண்கள்மேல் வைத்து, படபடவென்று அடித்து. பார்த்திபனுக்கு தன்னையே நம்பமுடியவில்லை. ஹவ் டிட் ஹி பிகம் ஸோ பொயட்டிக்? ‘முன்பே வா’ பாட்டின் காட்சி ஞாபகம் வந்தது. ‘நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே… தகுமா’ என்று சூரியா செல்லமாக பூமிகாவின் தோள்களை உரசுவதுபோல அவனும் அருண்மொழியும். மியூசிக்ல இவ்வளவு இருக்கா? இது மியூசிக்கா? இல்லை காதலா? இல்லை அருண்மொழியா? வட் இஸ் ஹி டூயிங்? ஒரு ஐலண்ட் செக்கண்ட் பிஎச்டி செய்யும் வேலையா இது? கொன்சென்ரேட் பார்த்தி. மயங்காதே. எல்லாமே கொஞ்சநாள்தான். லஸ்ட். பீரோமோன்ஸ், டோபமின். ஏதோ ஒரு ஓர்மோன். இதெல்லாம் தாண்டி நிலைக்குமா என்று பார். இதையெல்லாம் தாண்டி நிலைத்தும் என்ன பயன்? ஜஸ்ட் என்ஜோய் த மொமண்ட். பார்த்திபன் குழம்பினான்.
“யு லுக் ஸ்மார்ட்”
என்று அருண்மொழி சொல்லவும் பூரான் குட்டிபோட்டு புழுத்துப்பரவி வயிறு கட்டுப்படுத்தமுடியாவண்ணம் கலக்கியது. அம்மா ஏதோ சைகையில் சொன்னதும் அவனுக்கு கலக்கிய கலக்கில் விளங்கவில்லை. அவர் அவசர அவசரமாக அவருடைய போனில் எதையோ எழுதி அவனுக்குக் காட்டினார்.
“பியூ …ஓ யியா … யு லுக் பியூட்டிபுல்”
அவள் சிரித்தாள். கொஞ்சம் விரக்தியாகச் சிரித்ததுபோலத் தெரிந்தது. ச்சே. ஒரு பெண்ணோடு எப்படி பிளேர்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை. என்ன ஆண் நான்? பார்த்திபன் தன்னையே நொந்துகொண்டான். “அருண்மொழி, அம்மாணை யு லுக் ஓசம்” என்று சொல்ல நினைத்தவன் பஸ் தாண்டிப்போய்விட்டதை உணர்ந்தான். அடுத்தகணமே சுயநினைவு வந்தது. அதிகம் அலைவதை ஒரு பெண்ணுக்கு காட்டிக்கொள்ளவே கூடாது. அப்புறம் காக்கவைத்து சாகடிப்பார்கள்.
லிஸ்டின்படி அடுத்ததாக அம்மாவை அவன் அருண்மொழிக்கு அறிமுகம் செய்தான். நேரமும் ஆகியது. அவனும் அருண்மொழியும் விடைபெற்றுக்கொள்ளும் நேரம். பார்த்திபனுக்கு அப்போதே அவளைப் பிடித்திருக்கிறது என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது. சுவரில் ஒட்டியிருந்த அத்தனை ஸ்டிக்கி நோட்ஸையும் அந்தக்கணமே உரித்து எறிந்துவிட்டு அருண்மொழியின் செல்பியை கன்வாஸ் பண்ணி மாட்டவேண்டும். அப்போதே நிச்சயதார்த்தம் செய்துகொண்டு, தொடர்ந்து இரவு முழுதும் பேசினால் என்ன என்று தோன்றியது. அற்புதமான டெட்டோக்குகளை இருவரும் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஒவ்வொன்றும் கேட்டுமுடிந்ததும் மணிக்கணக்காய் டிஸ்கஸ் பண்ணலாம். ஒருநாள் கிளீன் எனேர்ஜி. ஒருநாள் ஏரோ டைனமிக்ஸ். ஒருநாள் குவாண்டம் பிசிக்ஸ். ஒருநாள் அஸ்ரோ பயோலஜி. அருண்மொழிக்கு தன்னிடமிருந்த பேஃப்ரிக் ஒஃப் கொஸ்மோஸ் புளூரேயை அனுப்பி வைக்கவேண்டும். இப்போதே டிரைவில் ஷேர் பண்ணினால் என்ன? அவனுக்கு எண்ணங்கள் படுவேகமாகப் பறந்தன. ஆனால் அடுத்தகணமே அவன் அந்தச்சிந்தனைகளை உதறித்தள்ளினான். நிச்சயதார்த்தத் திருமணங்களில் பெரியவர்கள் பேச ஆயிரம் இருக்கும். எப்போது திருமணம், செலவு யாருடையது, சீதனம், இப்படிப்பல விடயங்கள். இப்போதே அவளை உறுதிசெய்துவிட்டால் அம்மாவின் பிடி பேச்சுவார்த்தைகளில் இளகிவிடலாம். ஆக்கப்பொறுத்தவன். ஆளப்பொறுக்கமாட்டானா. பார்த்திபன் தெளிவானான்.
“பிளஷர், நானும் அம்மாவும் பேசிட்டு கொண்டக்ட் பண்ணுறம்.”
‘குட் நைட்’ சொல்லி கணினியை மூடிவைத்துவிட்டு, அறைக்குள் படுத்திருந்த அம்மாவிடம் பார்த்திபன் ஓடினான்.
“அம்மா … இவதான் … ஷி இஸ் த கேர்ள்”
அம்மா நித்திரையாகிவிட்டதுபோலத் தோன்றியது. ஆர்வத்தை அதிகம் காட்டக்கூடாது.
“அம்மோய் … அருண்மொழி … ஐ திங் ஷி இஸ் ஓகே”
அவர் கண்களைத் திறக்காமலேயே முணுமுணுத்தார்.
“ம்ம்ம் …. பார்த்தன் … வீணி வடிஞ்சுது”
அவர் சிரித்தபடி திரும்பிப்படுக்கவும் பார்த்திபன் தாயை இறுக்கக் கட்டிப்பிடித்தான்.
“நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?”
“நீ இப்ப சொன்னா கேக்கமாட்டாய் …. அந்தப்பிள்ளை கொஞ்சம் ஹிப்போகிரிட்போலத் தெரியுது. வெரி ஜட்ஜ்மெண்டல் பேர்சன். அவ சைலண்டாக இருக்கிறதுகூட எனக்கு எல்லாம் தெரியும் எண்டுற ஒருவித திமிர் தம்பி. அதுதான் என்னுடைய யோசனை. உங்கட டேஸ்டுகளும் வித்தியாசம்.”
“நோ அம்மா … ஐ தின்க் ஷி இஸ் ஸ்மார்ட். எ கேர்ல் வித் பியூ வேர்ட்ஸ். ஐ லைக் ஹெர்”
பார்த்திபன் பக்கவாட்டில் படுத்திருந்த தாயின் தோள்பட்டை மூட்டில் முகவாயை வைத்து அழுத்தியபடி தயங்கித் தயங்கிச் சொன்னான்.
“அம்மா … ஐ திங் ஐ லைக் ஹெர்”
“சரி விடு. இப்ப என்ன அவசரம். காலமை பார்ப்பம். நீ போய்ப்படு”
தாய் அவன் பக்கம் திரும்பாமல் சொல்லவும், பூரான் மீளவும் சருகுகளினூடே ஊர ஆரம்பித்தது.
--- தொடரும் ---
Photo Credits : retronator.deviantart.com
Nice writing! I still think they shouldn't end up together. Is it going to be about Nirojan tomorrow?
ReplyDelete................
ReplyDeleteஆழுமை அறிமுகம் அச்சொட்டாய்.....
வாய்க்காலில் வெள்ளமென உள்மன எண்ண ஓட்டங்கள்...
பிடிச்சிருக்கு...
என்ன நடக்கப் போகுது எண்டறிய இன்னும் ஆவல்.
நாவலாய் நீளும் சாத்தியம் இருக்கோ?
இருக்கலாம்; இருக்க வேண்டும்...
Awesome... awaiting next episode...
ReplyDeleteஅடுத்து நான் தானே???? ஏன் அண்ணை லேற்???
ReplyDelete😁👍
Deleteபாகம் 3 வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்
ReplyDeleteLove the mother character. I bet she is going to be a big part of the story.
ReplyDelete