‘வானம் திறந்தால் மழை இருக்கும்…’ என்று பாடிக்கொண்டிருந்த சித்ராவை அப்பிள் மப்ஸ் பெண் இடைநடுவில் குறுக்கிட்டாள்.
“உங்கள் பாதையில் நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்றுப் பாதையில் ஒன்றில் மூன்று நிமிடங்கள் சீக்கிரமாகவே செல்லலாம். மாற்றப்போகிறீர்களா?”
நிரோஜன் ‘நோ’ என்று சொல்லவும் அந்தப்பெண் எந்தச் சுழிப்புமில்லாமல் நன்றி சொல்லி மீண்டும் சித்ராவுக்கு வழிவிட்டாள். ‘என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்’ என்று அவர் குரல் உருகி வழிந்தது. எத்தனை அழகான பாட்டு இது. எதைப்பற்றியும் சட்டை செய்யாமல் அந்த இடத்திலேயே காரை வீத்யோரம் நிறுத்திவைத்து, பாட்டை முழுதாய் ரசித்துக் கேட்டால் என்ன? ஜெயச்சந்திரனின் காந்தக்குரல் தொடர்ந்து தாலாட்டியது.
“இரவைத் திறந்தால் பகல் இருக்கும். என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய். என் மேல் …”
படக்கென்று சுயநினைவு வந்து கண்களைத் திறந்தவன், சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்ததை இறுதிக் கணத்திலே கவனித்துச் சடுதியாக பிரேக் போட, கார் ஒருமுறை தூக்கிக் குலுங்கி நின்றது.
000
“அருண்மொழி…”
அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. நேர்முகத்தேர்வு. விசுக்கென்று கதவைத் திறந்தபடி அருண்மொழி உள்ளே நுழைந்தாள். தட்டுத்தடுமாறி எழுந்தவனிடம் ஹலோ சொல்லி அவள் கை குலுக்கியபோது பிடி வலித்தது. இவன் தன்னுடைய சுயவிபரக்கோவையைக் கொடுக்கவும் அதை அப்படியே மேசையில் தள்ளிவைத்துவிட்டு நேரே அவன் கண்களைப் பார்த்தாள்.
“டெல் மீ. எதற்காக இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாய்?”
எதிர்பார்த்த கேள்விதான். நிரோஜன் எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னான்.
“எனக்குப் புரப்ளம் சோல்விங் என்றால் மிகவும் பிடிக்கும்”
“தென் ஹெல், யு ஷுட் கோ டு பொலிடிக்ஸ்”
சிரிக்காமல் சொன்னாள். அதுதான் அருண்மொழி. நோ புல்ஷிட்டிங். அவன் தெளிவாக கூகிள் பண்ணித் தயார் பண்ணிக்கொண்டுபோன எந்தக் கேள்விகளையும் அவள் கேட்கவில்லை. கேள்விகளை அவள் ஆரம்பித்தவிதமே புதிதாக இருந்தது.
“எந்த ஏரியாவில் நூறு வீதம் உனக்கு கொன்பிடண்ட் என்று சொல்வாய்?”
“எதுவானாலும்.. ஆனால் குறிப்பாக டிசைன் பட்டர்ன்ஸ் என்றால்…”
“கூல். தென் லெட்ஸ் ஸ்டார்ட் புஃரம் தேர்”
அடுத்த அரைமணி நேரமும் அருண்மொழி அவனை வறுத்து எடுத்தாள். டிசைன் பட்டர்ன்களின் ஆதார நோக்கங்களையே ஆட்டம் காணவைக்குமாப்போல கேள்விகளைக் கேட்டாள். எவையுமே மேலோட்டமான கேள்விகள் கிடையாது. எதுவுமே ‘எப்படி’ என்ற கேள்விகள் கிடையாது. எல்லாமே ஏன், ஏன், ஏன், என்றே ஆரம்பித்தன. அவன் தீர்க்கமானவை என்று எண்ணிய அடிப்படை விடயங்களில்கூட அவனுக்குச் சந்தேகம் வரப்பண்ணினாள். அன்றைக்கு அவன் கதை முடிந்தது என்றுதான் நினைத்தான். ‘வி வில் கெட் பாக் டு யு’ என்பார்கள். இரண்டு நாள் கழித்து மன்னிப்புடன் ஒரு நிராகரிப்புக் கடிதம் வரும். நிரோஜன் அங்கேயே அதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டான்.
“யு நோ வட்? யூ ஆர் ஸ்மார்ட். ஐ கிவ் யூ அன் ஒஃபர். நூற்றி ஐம்பதில்தான் ஆரம்பிப்போம். அவ்வப்போது சியாட்டில் போகவேண்டியிருக்கும். வேர்க் ஸ்மார்ட். அதுதான் இங்கே தாரகமந்திரம். ஆறுமணிக்குமேல் எவரும் அலுவலகத்தில் நின்று வேலை செய்வதை நான் விரும்புவதில்லை. வேலை, தனிப்பட்ட வாழ்வு பலன்ஸ் முக்கியம். உனக்குப் பிடித்திருந்தால் இப்போதே நீ முடிவைச் சொல்லலாம். நான் போய் எச்.ஆரை அனுப்புகிறேன்.”
படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு மீட்டிங் ரூம் கதவுவரைக்கும் போனவள், திரும்பினாள். முதன்முதலாக அவனைப்பார்த்துச் சினேகமாகச் சிரித்தாள்.
“பை த வே நிரோஜன். அந்த ஸ்ப்ரிங் கேள்விக்கான பதில் … கிளாசிக்…. ஐ ஆம் இம்ப்ரஸ்ட்”
போய்விட்டாள். அல்லேலூயா. நிரோஜனுக்குத் தலைகால் புரியவில்லை. நிஜமாகவேயா? இன்னமும் பட்டதாரிப்படிப்பு முடியவே ஒரு செமிஸ்டர் மீதமிருந்தது. இதைக்கேட்டால் அப்பா எவ்வளவு சந்தோசப்படுவார். அம்மா பாவம். கேட்ட உடனேயே தோத்திரம் சொல்லி அழும். பெத்தப்பா அறிந்தால் கையோடு அவனை பேதுறுவானவரிடம் அழைத்துச்சென்று மெழுகுதிரி ஏற்றியிருப்பார். எவ்வளவு அருமையான அலுவலகம். காலி வீதிக்கு அருகிலேயே. கடைகளும் பக்கத்தில். உள்ளே விசாலமான தளம். ஊழியர்களைக் குத்தி முறிப்பதில்லை என்கிறார்கள். எல்லாவற்றையும் விட, இந்தப்பெண் இங்குதானே வேலை செய்கிறாள். யோசிக்காமல் ஒப்பந்தத்தில் அன்றே கையெழுத்துப் போட்டான். வேலையில் இணைந்து மறுவாரமே நிரோஜனை அருண்மொழி தன் டீமில் இணைத்துக்கொண்டாள். அவளுடன் வேலை பார்ப்பது சற்றுக் கடினம்தான். முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பாள். ஆனால் அற்புதமான லீடர். தீர்வுகளைக் கொடுக்காமல் வெறும் கோடி மாத்திரம் காட்டிவிட்டு மற்றவர்களையே தீர்க்கவிட்டு அழகு பார்ப்பாள். கெயாரிங். அடிக்கடி வீட்டு விடயங்களையும் பேசி நெருக்கமாக இருப்பாள். பகிடிக்காரி. பயங்கர மண்டை. அப்புறம் அவள் அழகு இருக்கிறதே.
ஏசுவே.
அவனைவிட அருண்மொழி நான்கு வயது மூத்தவள் என்பதை அறிந்தபோது அவனால் நம்பவே முடியாமல் இருந்தது. சும்மா ஒரு பாதுகாப்புக்கு வயதைக்கூட்டிச் சொல்கிறாள் என்றுதான் நினைத்தான். ஆனால் இல்லை. உண்மையிலேயே அவள் நான்கு வருடங்கள் மூப்புதான். ஸ்விம்மிங் செய்யும் உடல். கொஞ்சம் டைட்டான டிசேர்ட், ஜீன்ஸ் அணிந்தாலே போதும். அப்படியே ஒரு கொக்டெயில் கிளாஸ்போல அவள் உடல் இடுப்புவரை ஒடுங்கி, பின்னர் தேவையான அளவு விரிந்து, தென் இரண்டு கால்களும் …ஒருமுறை மீட்டிங்கில் அவள் அட்டனக்கால் போட்டபடி, மடியில் மக்புக்கை நோகாமல் நொங்கு எடுத்துக்கொண்டிருந்தபோது, வலது கணுக்காலில் பெரிதாக ஒரு தழும்பு இருந்ததைக் கவனித்தான்.
“கொத்தமல்லித்தண்ணி. சுடச்சுட ஊத்திட்டன். ஏழு வயசில நடந்தது. ஆனா தழும்புமட்டும் போகேல்ல”
மீட்டிங்கில் வைத்தே சாட்டில் பிளிங் பண்ணினாள். இவன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க ரகசியமாகக் கண்ணடித்தாள். மயில் நீலத்தில் கண்கள். கொன்டக்ட் லென்ஸ் அணிவாள்போல. அல்லது தேவதை வம்சாவளி என்பதால் இயற்கையாகவே கண்களின் நிறம் அப்படியிருக்கலாம். அவன் அவள் கால்களைப் பார்த்ததை எப்படிக் கவனித்தாள்? சிலவேளை அவளும் அவனைக் கவனிக்கிறாளா? ஜூனியர். இன்னமும் பட்டப்படிப்புக் கூட முடிக்கவில்லை. நான்கு வருடங்கள் மூத்த. அலுவலகத்தினுடைய ஒரே குயீன். ஆர்க்கிடெக்ட். கேவலம் அவனைப்போய் விரும்புவாளா என்ன? அதுவும் தமிழ்பெண்கள் நாட்கணக்கில்கூட கணவனுக்கு மூப்பாக இருந்துவிடக்கூடாது என்றல்லவா எண்ணுவார்கள்? சான்ஸெ இல்லை.
அப்பிள் பெண் மறுபடியும் நினைவுகளைக் குறுக்கிட்டாள்.
“டேக் த பர்ஸ்ட் எக்ஸிட் இன் த நெக்ஸ்ட் ரவுண்ட் எபவுட்”
எக்ஸிட் முதலாவதா, மூன்றாவதா என்று விளங்காமல் நிரோஜன் ரவுண்ட் எபவுட்டை இரண்டு தடவைகள் சுற்றிவந்தான். இன்னமும் பத்து நிமிடங்களே இருந்தன. ‘பூமிக்கு வந்த பனித்துளி நான், சூரியனே என்னைக் குடித்துவிடு’ என்று சாதனா சர்க்கம் சிணுங்கிக்கொண்டிருந்தார்.
“You need to man up buddy”
ஒருநாள் மாலை இருவரும் அலுவலகத்துக் கிட்சனில் கோப்பி ஊற்றிக்கொண்டிருக்கும்போது திடீரென்று சொன்னாள். அவன் விளங்காமல் திருதிருவென்று விழித்தபோது.
“எனக்குத்தெரியும். நீ வீடு போயும் வேலைதான் செய்கிறாய். அப்படி இருக்காதே. இங்கே யாரையும் நீ கவரத்தேவையில்லை. அலுவலக நேரத்தில் செய்வதுதான் வேலை. அதற்கு ஏற்றமாதிரித்தான் நாமும் வேலை உனக்குக் கொடுக்கவேண்டும். தினமும் மாலை வேலை முடிந்து, அலுவலக வாசற்கதவைத் தாண்டும்போதே சட்டையைக் கழட்டி எறிந்துவிடு. எங்கேயாவது போ. மே பி ஒரு இன்ஸ்ருமெண்ட் பழகலாம். கிட்டார் ட்றை பண்ணு. சல்ஸா கிளப் ஒண்டு கொள்ளுப்பிட்டில இருக்கு. செக் பண்ணு. எதையாவது எக்சைட்டிங்காகச் செய்”
“இட்ஸ் ஓகே அருண்மொழி. ஐ லவ் புரோகிராமிங்”
“கட் தட் கிராப். இன்றைக்கே உனக்கு ஐம்பது மில்லியன் கிடைத்தால் இப்படித்தான் நீ டொக்கு டொக்கு என்று புரோகிராமிங் பண்ணிக்கொண்டிருப்பாயா? ஏன் பொய் சொல்கிறாய்? வருமானத்துக்கு வேலை. அதை ரசித்துச் செய்கிறோம். அவ்வளவுதான். அதற்குமேலே புரோகிராமிங்கை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடக்காதே. பெருசா ஒரு உலகம் இங்கே தனியா சுத்திக்கொண்டிருக்கு. பாவம் அதுக்கு ஒரு கொம்பனி குடு”
நிரோஜன் பூம் பூம் மாடுபோலத் தலையாட்டினான்.
“யு நோ வட். யு ஆர் எ ஷிட். இந்த வெள்ளி நீ எங்களோட வாறாய். கறுப்பா ஒரு சேர்ட் போட்டுவா. கசுவல். முகத்தை ஷேவ் பண்ணி நோர்த் இண்டியன்மாதிரி வராதே”
அந்த வெள்ளிதான் அவன் முதன்முதலாக வாழ்க்கையில் ஒரு பப்புக்குச் சென்றான். அவன் எண்ணத்தில் பஃப் என்பது பெண்கள் திறந்தமேனியுடன் மேசையின்மேலே நின்று ஆடும் இடம் என்றே ஆங்கிலத்திரைப்படங்களினூடு அறிந்திருந்தான். அது நைட் கிளப் என்று பின்னர்தான் தெரிந்தது. அந்தப் பப்பில் எல்லோரும் இயல்பாகக் கூடி இருந்து மதுக்கோப்பைகளைச் சுவைத்தபடி கதையாடிக்கொண்டிருந்தார்கள். பப் குவிஸ் என்று மேசை, மேசையாகப் பிரித்து கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். எல்லோர் கையிலும் பொதுவாக பியர்தான் இருந்தது. அருண்மொழி மாத்திரம் வித்தியாசமான ஒரு பானத்தை அருந்திக்கொண்டிருந்தாள்.
“என்னது இது?”
“பெலினி. ஒருவித கொக்டெயில். பீச்சும் கொஞ்சம் ஸ்பார்க்லிங் வைனும் மிக்ஸ் பண்ணுவார்கள். சிம்பிள். லைட். எலிகண்ட். குடிச்சுப்பாரு”
அவள் கிளாசை நீட்ட இவன் கூச்சப்பட்டான். இவன் மறுத்தாலும் அவள் விடவில்லை. எச்சில் படாமல் அதை எப்படி அண்ணாந்து குடிப்பது? தயங்கினான்.
“பொறு நான் ஒரு ஸ்ட்றொ எடுத்துவாறன்”
“லூசா? ஜஸ்ட் ஒரு ஸிப். சும்மா குடி”
கிளாஸின் ஒடிந்த இடுப்பில் கை பிடிக்க அது நடுக்கத்தில் தள்ளாடியது. சாதுவாக உறிஞ்சிப்பார்த்தான். இனிப்பும் இல்லாமல் உவர்ப்புமில்லாமல் ஸ்பார்க்கிளிங்கும் சேர்ந்து, அவனுக்கு அதன் சுவையை விளக்கமுடியவில்லை.
“நைஸ் ரைட்?”
அவன் தலையாட்டவும் அவள் உடனே அவனுக்கும் ஒரு கிளாஸ் ஓர்டர் பண்ணினாள். அருகிலிருந்த செகான் ‘அது ஒரு பெண்கள் பானம்’ என்று நக்கலடிக்க அவனை ஸ்டுபிட் என்றாள். பெலினியைக் குடிக்கக் குடிக்க நன்றாகவே இருந்தது. ஆனால் போதை மாத்திரம் ஏறவில்லை. அருண்மொழி நிரோஜனின் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.
“என்ன குடிச்சிட்டு, வெறில கத்தி, சத்தி எல்லாம் எடுப்பம் எண்டு பயந்தியா? திஸ் இஸ் சோஷல் டிரிங்கிங் நிரோ. சும்மா. நண்பர்களுடன் சேர்ந்து இருந்து பம்பல் அடிக்க இது ஒரு சாட்டு. அவ்வளவுதான்.”
சிரித்தாள். முதன்முதலாக அவள் அவனை நிரோ என்று அழைத்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. அன்று புறப்படும்போது இருவரும் ஒரே டக்ஸியிலேயே சென்றார்கள். அவள் தன் வீட்டில் இறங்கும்போது , அவனை ஞாயிறு காலை சென்பீற்றர்ஸில் நீச்சலுக்கு வந்து இணையச்சொன்னாள். மறக்காமல் ஸ்விம்மிங் கியரையும் வாங்கி வா என்றாள். இவனும் அவள் சொன்னதுபோலவே எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஞாயிறு காலை அங்கே போனான். எந்த விகற்பமும் இல்லாமல் அருகிலேயே நின்று குழந்தைப்பிள்ளைக்குப் பழக்குவதுபோல அவனுக்கு நீச்சல் பழக்கினாள்.
“ரூல் நம்பர் வன். நெவர் பீ இன் த பூல்!”
சொல்லிவிட்டு அவள் சிரிக்க நிரோஜன் சங்கடத்தில் நெளிந்தான். அவள் சொன்னதுபோலவே உள்ளே இறங்கியதுமே பாத்ரூம் வந்தது. அடக்கிப்பார்த்தான். முடியவில்லை.
“பி குயிக். போயிட்டு ஓடிவா. அதற்குள் நான் ஒரு லாப் அடித்துவிட்டு வருகிறேன்”
அவன் கேட்காமலேயே சொன்னாள். அன்று மூச்சுப்பயிற்சி மாத்திரம் சொல்லிக்கொடுத்தாள். அடுத்த வாரம் மிதக்கப் பழக்க. பின்னர் அசையப் பழக்க. நான்கே வாரத்தில் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு அவன் நீச்சல் அடிக்கப்பழகிவிட்டான். இத்தனை நாட்களில், நீச்சலுடையில், மிக அருகாமையில் நின்று அவள் நீச்சல் சொல்லிக்கொடுத்திருந்தாலும் கண நேரம்கூட அவனுள்ளே விகாரமான எண்ணங்கள் வந்ததேயில்லை. அது சில பெண்களுக்குக் கைவந்த கலை என்று அவன் எண்ணிக்கொண்டான். அவளை எந்தச் சூழலில் எந்த ஆண் எப்படிப்பார்க்கவேண்டும் என்பதை அவளே தீர்மானிக்கிறாள். ஸச் எ கேர்ல். அவளை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக வார நாட்களிலும் அவன் இரகசியமாகச் சென்று நீச்சல் பயிற்சி செய்தான். பாக்ஸ்றோக்கை அவள் சொல்லாமலேயே பழகிக்கொண்டான். ஒருமுறை ஒரு கரைக்கு நீச்சலிடித்துச்சென்று அதன் சுவரில் கால்களை எத்தி மறுபக்கம் திரும்பி நீச்சலடித்ததைப் பார்த்து வியந்தவள்.
“ஹோலி ஷிட். டிட் யூ ஜஸ்ட் டூ இட்? ஐ ஆம் புரவுட் ஓஃப் யூ”
ஓடி வந்து அவனை அழுத்தமாகக் கட்டிப்பிடித்தாள். சக்கென்று மார்பு முட்டியது. இல்லை அவன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது என்றாலும் சிந்தனை வந்தது. மே பி அவளே அவன் அப்படி நினைக்கவேண்டும் என்றே செய்திருக்கலாம். மே பி ஷி லைக்ஸ் இட். அவளை அப்படியே அணைத்தபடி அங்கேயே குளத்தில் குதித்தால் என்ன என்று தோன்றியது. மே பி ஷி வோண்ட்ஸ் இட். இப்ப என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது. லெட்ஸ் டூ இட். பேதுருவானவரே நீர் என்னை காப்பாற்றும். பெத்தப்பா அறிந்தால் ஊரி நிறைந்த தெற்குவீதியில் முழங்காலில் நிற்க வைப்பார். அம்மா இதற்கும் அழுவார். அப்பா பேசாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். சமாளித்துவிடலாம். படித்த, கெட்டிக்கார, நீச்சல் தெரிந்த, கர்நாடக சங்கீதம் ரசிக்கும், நுனி நாக்கு ஆங்கில, செக்ஸியான பெண்ணை யார் வேண்டாம் என்று சொல்வர்? எவருமே அக்கரை வழியே நீந்தவில்லை. கனவு கண்டது போதும். நிரோஜன் தயாரானான்.
“அடுத்த முறை கடலில் ட்றை பண்ணலாம். சரியா? ஐ திங் யு ஆர் ரெடி”
சொல்லிக்கொண்டே பிடியை விலத்தியவள், அப்பால் நகர்ந்துபோய்விட்டாள்.
000
“உங்கள் முடிவிடத்தை வந்தடைந்துவிட்டீர்கள்”
அப்பிள் பெண் சொல்லவும் அவன் காரை மெதுவாகச் செலுத்தியபடி வீட்டை அவதானித்தான். டிரைவ் வேயில் பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 நின்றது. அவனது கார் வெறும் டொயோட்டா கொரல்லாதான். வேண்டாம். நிரோஜன் தன் காரை அங்கே நிறுத்தாமல் இரண்டு வீடு தள்ளியே நிறுத்தினான்.
காரைவிட்டு இறங்கமுதல் போனை எடுத்துப்பார்த்தால் திரேசமேரியின் மெசேஜ் வந்திருந்தது.
“சைனீஸ் மா எண்டு ஒண்டு இருக்குமாம். புட்டுக்குப் போட்டால் சொப்டா வருமெண்டு ரதி அக்கா சொன்னவா. வரேக்க வாங்கி வாறீங்களா?”
திரேசமேரிக்கு ‘சரி’ என்று பதில் அனுப்பிவிட்டு காரிலேயே சற்றுநேரம் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அருண்மொழி அவனுக்கு டூ மச் என்று ஏன் ஆரம்பத்திலேயே தெரியாமற்போனது? அவன் ஏன் இன்னமும் அவளைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறான்? திரேசமேரிக்கு என்ன குறை? இஞ்சி இஞ்சியாக அவனைக் கவனித்துக்கொள்கிறாள். அவன் எங்கே கிளம்பச்சொன்னாலும் மறுபேச்சில்லாமல் வந்துவிடுகிறாள். அவுஸ்திரேலியா செல்கின்ற முடிவை அவன் அவளோடு கலந்தாலோசிக்கக்கூட இல்லை. தனிப்பிள்ளை, செல்லமாக வளர்ந்தவள். சின்ன புறுபுறுப்புக்கூட இல்லாமல் கூடவே வந்துவிட்டாள். அவன் வேலை கிடைக்காமல் கடந்த ஒருமாதமாக அலையும்போதும் முணுமுணுப்பேனும் காட்டவில்லை. இருந்த ஓரிரண்டு நகைகளை விற்றால்தான் சமாளிக்கலாம் என்றபோது மறுபேச்சு பேசவில்லை. அவன் ஏன் இன்னமும் அருண்மொழி பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறான்? அதுவும் அந்த நைச்சியமாக ஆண்களுடன் விளையாடும் பாசாங்குக்காரியை. நிரோஜன் தலையை ஒருமுறை ஸ்டியரிங்கில் முட்டிவிட்டு காரிலிருந்து இறங்கினான். வீட்டு வாசலிலிருந்த அழைப்பு மணியை அழுத்தினான்.
கதவு திறக்க, சிரித்த முகத்துடன் அருண்மொழி.
“ஹேய் நிரோ… கமோன் இன், வா”
அவனைப் பலமாகக் கட்டியணைத்து முகமன் சொன்னாள்.
“திஸ் இஸ் அவர் லிட்டில் பலஸ்”
உள்ளே அழைத்துச்சென்று சோபாவில் கிடந்த விளையாட்டுச்சாமான்களை ஒதுக்கிவைத்துவிட்டு அமரச்சொன்னாள்.
“செட்டில் ஆகமுதல்… ஐ ஆம் கோயுங் டு மேக் எ கொஃபி. உனக்கும் ஒண்டு போடட்டா?”
“ஓ நோ… நீ ஸ்றெஸ் பண்ணாத. ஐ ஆம் பைன்”
“நானா ஊத்தப்போறன், மெசின்தான் ஊத்தப்போகுது. நான் லோங் பிளக் போடப்போறன். உனக்கு என்ன வேணும் சொல்லு?”
“லோங் பிளக் இஸ் பைன்”
“யூ ஷூர்?”
“யியா … ஐ லைக் இட்”
லோங் பிளக் என்பது பால் விட்டுக் குடிப்பதா அல்லது வெறுங் கோப்பியா என்று நிரோஜனுக்குக் குழப்பம் வந்தது. பால் அதிகம் விடுவது லட்டேயாகத்தான் இருக்கவேண்டும். டூ லேட். சமாளிக்கலாம். அருண்மொழி சமையலறையிலிருந்த கோப்பி மெஷினில் ஒரு மாத்திரையைப்போட்டு ஓன் பண்ணினாள். இந்நாட்டு வீடுகளைப்போலவே இங்கும் சமையலறை ஹோலுக்குள்ளேயே இருந்தது. தட்டில் பாத்திரங்கள் கழுவி அடுக்கப்பட்டிருந்தன. மதியம் சமைக்கப்பட்ட கறி வாசம் இன்னமும் மீதமிருந்தது. கோழி இறைச்சியாக இருக்கவேண்டும். ஹோல் முழுதும் விளையாட்டுப்பொருட்கள் சிதறிக்கிடந்தன. ஸ்கிரபிள் ஆட்டம் ஒன்று இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. ‘Irony’ யின் ’N’ கிடைக்காமல் யாரோ தடுமாறியிருக்கிறார்கள். ஒரு கரையில் சிறு புத்தக அலுமாரி இருந்தது. பெரும்பாலும் ஆங்கிலப்புத்தகங்கள். ரொபின் சர்மா, கிளாட்வல் என்று ஒன்றிரண்டு தெரிந்த பெயர்கள். பெரும்பாலானவை துறைசார்ந்தவையாக இருந்தது. 75 இஞ்சி சைஸில் பிரமாண்ட டிவி ஒன்று ஹோம் தியேட்டரோடு சுவரில் பூட்டப்பட்டிருந்தது. இன்னொரு சுவரில் ஒரு புராதன பெண்டுலம் மணிக்கூடு. ஒரு சாமியார் படமும் இருந்தது. வெற்றுமேலோடு இருந்தார். அம்மா பகவானாக இருக்கவேண்டும். அல்லது கல்கி பகவான். தெரியவில்லை. மாலை போட்டிருந்தார்கள். அருகில் இன்னொரு மாலை போட்ட படத்தில் ஒரு பெண்மணி பாந்தமாக இருந்தார். இன்னொரு சுவரில் அருண்மொழியின் திருமணப்படம் கன்வாஸ் செய்யப்பட்டிருந்தது. திருமண வரவேற்பின்போது எடுத்திருக்கவேண்டும். அவள் திருமணத்தின்போது அவன் சியாட்டில் போய்விட்டான். படத்தில் அருண்மொழி அழகாகவே இல்லை. முகத்துக்குச் சம்பந்தமேயில்லாத ஹேர்ஸ்டைல் செய்து, முகம் முழுதும் பூச்சுத் தப்பி, சேலைத்தலைப்பை பிளீட் செய்யாமல் ஹங் பண்ணவிட்டு. நிகழ்வின் இறுதியில் எடுத்த படமாக இருக்கவேண்டும். வெக்கையில் கண் மை எல்லாம் கரைந்து இமையோரம் மெதுவாகக் கோடு வரைந்திருந்தது. அருகில் கோர்ட் சூட்டுடன் பார்த்திபன். அந்த பிஎச்டி மாப்பிள்ளை. அவனைப் பிடிக்கவில்லை என்றாயே அருண்மொழி. லூசன் என்றாயே. மொத்த பி.எச்.டி உலகத்துக்கே அவன் ஒரு ஷேம் என்றாயே. அவனைப்போய் எப்படி நீ திருமணம் முடிக்கலாம்? உன்னை தேவதைபோல வைத்திருந்திருப்பேனே. ச்சீ. நிரோஜனுக்கு அப்போதே அந்தப்படத்தைக் கிழித்து எறியவேண்டும்போல.
“அவர் பாத்ரூமில் இருக்கிறார். சொறி. உள்ளே போனால் லேசில வரமாட்டார். ஸ்லோ பவல்”
சிரித்தபடியே அவள் கோப்பியைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
“இல்லை, இட்ஸ் பைன்”
தானும் கையில் ஒரு கோப்பிக் கப்போடு அவன் முன்னே வந்து அமர்ந்தாள். அட்டனக்கால் போட்டு, நிமிர்ந்து உட்கார்ந்து கோப்பியை ஒரு உறிஞ்சு உறிஞ்சினாள். வீட்டினுள் அணியும் செருப்பு. மெல்லிய நீலத்தில் ஒரு கொட்டன் ஷோர்ட்ஸ். அதற்கு சம்பந்தமேயில்லாத கடும் மஞ்சளில் டொப். அலட்சியமாகப் போட்டிருந்த கொண்டையில் வழுக்கி வீழும் மயிர்க்கற்றைகள். மேக்கப் இல்லாத முகம். மெலிதாக மீசைவேறு முளைத்திருந்தது. அதே மயில் நீலக் கண்கள். அந்தக் கண்களுக்கு கீழே சுருக்கங்களை அவன் தேடிப்பார்த்தான். ஒரு சின்னச்சுருக்கமாவது இருக்காதா? இந்த வாழ்க்கை ஒரு ஊசிப்படுக்கை என்று சொல்லமாட்டாயா? ஐ மேட் எ பிளண்டர் எண்டு என் மடியில் தலை சாய்த்து… சும்மா ஒருக்கா சொல்லு அருண்மொழி. போதும்.
“பயங்கரமாப் பயந்தன் நிரோ. அவுஸ்திரேலியா வேற ஒரு மூலைல இருக்கு. இந்தாளும் ஒரு மாதிரியான ஆள். பிழையா முடிவு எடுத்திட்டனோ எண்டு பயந்தன். பட் இட் பெயிட் ஓஃப். ஹி இஸ் எ நைஸ் கை தெரியுமா”
நிரோஜன் உடல் முழுதும் நடுங்கி ‘ஈய்க்’ என்றான். லோங் பிளாக் சனியன். கசாயம். கைத்தது.
“நினைச்சன். லோங் பிளக் கேக்கேக்கையே நினைச்சன். நீ இன்னும் அப்பிடியே இருக்கிறாய் நிரோ. குரோ அப். எது பிடிக்குமோ அதை கேக்கப்பழகு”
கண்ணடித்தாள். அவன் மறுக்க மறுக்கக் கேளாமல் கப்புசீனோ போட்டுத்தருவதாகச் சொல்லி கப்பை வாங்கிப்போனாள். எஞ்சிய கோப்பியை பேஸினில் கொட்டிவிட்டு கப்பை டிஷ் வோஷரினுள் வைத்தாள். இன்னொரு கப்பை எடுத்து வைத்து, கப்புசினோ கப்சூலை மெசினுள் போட்டு.
நிரோஜன் அருண்மொழியின் முதுகையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்றைக்குத்தான் துணிச்சல் வந்து அவனாக அருண்மொழியை கோப்பிஷொப் போகலாமா என்று கேட்டு அழைத்து வந்திருந்தான். அதுகூட இரண்டு மாதங்கள் மூனிச் ஒன்சைட் அசைன்மெண்டுக்குப் போய் வந்த அனுபவம் கொடுத்த துணிச்சல்தான். சரியான சந்தர்ப்பம் அமைந்தால் புரபோஸும் பண்ணிவிடலாம். அவன் அழைத்தால் அவள் மறுப்பாளோ என்று முதலில் நினைத்தான். ஆனால் ‘ஒப்கோர்ஸ், பைனலி யு ஆஸ்க்ட் மீ அவுட்’ என்று சிரித்துவிட்டு அவளே எந்தக்கடை என்பதையும் முடிவு பண்ணினாள். கோப்பிக்கடையில்போய் அவன் டீ ஓர்டர் பன்ணியபோது, சிரித்தபடியே அவள் ‘ஐஸ் மொக்கா’ என்று சொன்னாள். கூடவே ஒரு ப்ரவுணி. அவன் அசந்த சமயத்தில் அவளே தன் கார்டைக்கொடுத்து பில்லைக் கட்டியும் பண்ணியும் விட்டாள். அவன் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். கேட்டாளில்லை. அடம்.
“இட்ஸ் மை ட்றீட் நிரோஜன்”
“நோ. அருண். இட்ஸ் மை பேர்த்டே. மை ட்றீட்”
“தெரியும். ஆனால் அதைவிட பெரிய நியூஸ் இருக்கு. ஐ ஆம் கோயிங்டு கங்கரூ லாண்ட்”
கூச்சமே இல்லாமல் அவள் கைகளால் ஹொப் பண்ணிக்காட்ட பக்கத்துமேசை விசிறிகள் சிரித்தார்கள். அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
“அதென்ன கங்கரூ அருண்மொழி?”
“ஐயோ … அதான் கங்காரு … நாங்கள் எல்லாரும் அதைப் பிழையாவே சொல்லிப் பழகீட்டம்”
நிரோஜனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. கங்காரு லாண்ட் என்றால் அவுஸ்திரேலியாவா. ஏசுவே.
“என்ன சொல்கிறாய் அருண்மொழி?”
“யெஸ். ஐ ஆம் கெட்டிங் மரீட்”
“விளையாடாத அருண்மொழி. ஐ ஆம் சீரியஸ்”
“மீ டூ…. மாப்பிள்ளை யாரு தெரியுமா? அந்த டிக் ஹெட்தான்”
“யாரு … அந்த பி …”
“யெஸ்…. ஐ திங் ஹி இஸ் நைஸ்”
நிரோஜன் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு ஸ்தம்பித்த நிலைக்கே போய்விட்டான்.
000
‘என்ன மாப்பிளைக்கு கடுமையான யோசனை?’ என்றபடி அருண்மொழி அவனிடம் கப்புசீனோவைக் கொண்டுவந்து நீட்டினாள். அவன் அதனை உறிஞ்சும்வரைக்கும் பொறுத்திருந்து “நைஸ்?” என்று கண்களால் கேட்டாள். சீனி போட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
“கோப்பியில ஒரு அக்குயார்ட் டேஸ்ட் இருக்கு. அதை ரசிச்சுக்குடிச்சால் கொஞ்சநாளில் அப்பிரிசியேட் பண்ணுவாய். பனங்கொட்டைகள்மாதிரி சீனியை அள்ளிக்கொட்டிப் பழகிடாத”
சீனி கேட்கப் போனவன் அவள் சொல்வதை அமைதியாக ஆமோதித்தான். கதையை மாற்றினான்.
“எப்பிடி அருண்மொழி. ஒஸ்ரேலியா பிடிச்சிருக்கா?”
“ம்ம்ம்… ஓகே. வெரி மல்டி கல்ச்சரல். எல்லாரும் நாட்டை விட்டு வந்த பீலிங்ல, பென்குயின்ஸ் மாதிரி குளிருக்கு ஒட்டிக்கொண்டு எப்பவுமே ஒண்டா இருக்கினம். எப்ப பார்த்தாலும் பார்ட்டியும் கூட்டமும்தான். எல்லாத்துக்கும் சங்கம். சிறிலங்கன் டியூட்டறிக்குக் கூட இங்க பழைய மாணவர் சங்கம் இருக்கு. வீக் எண்ட் எல்லாமே வேஸ்ட். போகாட்டியும் பிரச்சனை. போனாலும் பிரச்சனை. எங்கட ஸ்கூல் சங்கம் எண்டாக்கூட பரவாயில்லை. எங்கேயோ தீவுப்பள்ளிக்கூடம் விழா வச்சாலும் போகவேண்டியிருக்கு”
“நானும் மண்டைதீவுதான் அருண்”
“ரியலி? … எனக்கு எப்படித் தெரியாமற்போனது? அதாலதான் நீ மண்டைக்காய்போல”
சிரித்து மழுப்பினாள். அவன் அப்பாலே நகர்ந்தான்.
“உனக்கு இப்படியான கூட்டம் எல்லாம் அலர்ஜியே அருண்மொழி. எப்படி சமாளிக்கிறாய்?”
“ஐ ஹேட் இட். ஆனா ஒப்லிகேசன் எண்டு ஒண்டு இருக்குத்தானே. ஐஞ்சு சங்கத்தில இந்த டொட்டு கொமிட்டி மெம்பர். ஹிந்து சொசயட்டில பிரெசிடெண்ட்”
“டொட்டு?”
“ஹ ஹா… அதான் நம்மட பி.எச்.டி. உனக்குத் தெரியுமா? முதல்நாள் அதோட நான் பேசும்போது உன்னோட சாட் பண்ணிக்கொண்டிருந்ததை நான் சொல்லேல்லை. சொன்னால் கொலை விழும். ஹி இஸ் பிட் பொஸசிவ்”
எவ்வளவு இலாவகமாக அவனையும் அதுபற்றிப் பேசிவிடாதே என்கிறாள். நிரோஜனுக்கு அவன் ஏன் அங்கு வந்தான் என்றிருந்தது. இது அவன் பார்த்து ரசித்த அருண்மொழி அல்லவே. நிறைய கொம்பிரமைஸ் பண்ணப் பழகிவிட்டிருந்தாள். கணவன், குழந்தை, சமூகம். இதுவெல்லாம் இவளுடைய ஏரியாவே கிடையாது. நானும் அவளுமென்றால் இந்நேரம் கிரீன்லாண்டில் ஒரு சின்ன முற்றம் உள்ள வீட்டில், முற்றத்தில் சின்னச் சின்ன சாடிகளில் வசந்த காலச் செடிகளைப் பராமரித்து, அவை பூத்திருக்கும்போது அருகில் தரையில் அமர்ந்து புத்தகங்கள் வாசித்து, மெல்லிய சத்தத்தில் ரகுமான் மெலடிகளை இசைத்து… ச்சே. அவன் ஏன் இப்படி யோசிக்கிறான்? கனவுலகிலேயே வாழ்ந்து பழகிவிட்டான். திரேசமேரியின் முகம் வந்துபோனது. அவனையே நம்பி, அவனையே கொண்டாடி, அவனையே நினைத்து மகிழ்ந்து, அவன் கார் ஸ்டார்ட் பண்ணும்போது ஸ்தோத்திரம் சொல்லி, வேலைக்குப் போகாத இந்நாட்களிலும் அவனை மாய்ந்து மாய்ந்து கவனித்து, எவ்வளவு களைப்பு என்றாலும், எத்தனை உடல் வலி என்றாலும் அவன் காதலுக்கு அழைத்தால் மறுக்காமல் மகிழ்ச்சியோடு வந்து விழுந்து … அவன் ஏன் இப்படி இருக்கிறான்? அருண்மொழி. அருண்மொழி. அருண்மொழி. லீவ் மி எலோன். பிளீஸ்.
“ஹேய் கேட்கவே மறந்துட்டன். யு மரீட் இல்லையா? வைஃப் எங்கே?”
“ஷி இஸ் ஹோம்”
“நெக்ஸ்ட் டைம் கூட்டிக்கொண்டு வா. என்ன பெயர். எப்பிடி ஆளைப் பிடிச்சாய்?”
“திரேசமேரி”
“ஓ … கிரிஸ்டியனா? லவ் பண்ணினியா?”
“அருண்மொழி … நான் கிரிஸ்டியன் எண்டது உனக்குத் தெரியாதா?”
“நீயும் கிரிஸ்டியனா… ஷிட் .. எனக்குத் தெரியாது. ஹூ கெயார்ஸ் மேன்? கடவுள் இல்லை எண்டால் அவர் எந்த மதத்திலும்தானே இல்லை? ஆனால் டொட்டு ஒரு கன்பியூசிங் கேஸ். கடவுள் சிலவேளை இருக்கலாமாம். இருந்திட்டாலும் ஏன் வம்பு எண்டு கும்பிடுவாராம். அது சும்மா. ஆளுக்குப் பயங்கர நம்பிக்கை. கேள்வி கேட்டா பதில் சொல்ல ஏலாது எண்டுதான் இந்த பீலாக்கள்”
“ஓ”
“அதைவிடு … உன் ஆளை எங்க கண்டாய்? சேர்ச்சிலயா?”
“இதென்ன கேள்வி. ஒரு இந்துவும் இந்துவும் இந்துக்கோயில்லயா லவ் பண்ணியிருப்பினம்? அப்படியல்லாம் இல்லை. இது புரபோசல்”
“அதானே பார்த்தன். மூண்டு வருசமா ஒண்டாத்திரிஞ்சும் நீ ஒரு ஆணிகூடப் புடுங்கேல்ல…. நீயாவது … லவ் பண்ணுறதாவது”
தெயார் ஷி இஸ். டீஸிங். பிளேர்டி. டிபிக்கல் அருண்மொழி. இந்தக்கதைகளால்தானே ஏமாந்தான். அவர்கள் பேசுவது உள்ளே கக்கூசில் முக்கிக்கொண்டிருக்கும் அந்த டொட்டுவுக்கு கேட்டுவிடுமோ என்று பயமாக இருந்தது. அவன் மேல்மாடியைப்பார்த்தான்.
“ஐ நோ… அவர் போனால் அங்கேயே குடும்பம் நடத்துவார். பொறு கூப்பிடுறன்”
எழுந்துநின்று “டொட்டூ…” என்று கத்தினாள். பதில் வரவில்லை. “டொட்டூ….” என்று மறுபடியும் கத்தினாள். “வாறன்” என்று பதில் வந்தது. நிரோஜனுக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக இருந்தது. கொழும்பில் ஒரு இராணிபோல வாழ்ந்தவள். அலுவலகத்தில். நண்பர்கள் வட்டத்தில். அந்தக்காலத்தில் புளொக்கர்ஸ் என்று ஒரு கூட்டம் எழுதிக்கொண்டிருந்தது. அதில் சொந்தப்பெயரில் எதைப்பற்றியும் யோசிக்காமல் முற்போக்காக எழுதி பல சர்ச்சைகளில் சிக்கியவள். எதைப்பற்றியும் அவள் கவலைப்பட்டதாகச் சரித்திரமே இல்லை. அப்படிப்பட்டவள் எப்படி இந்த டொட்டூவைப்போய். அதுவும் கக்கூசில் குடும்பம் நடத்தும் ஒருவனை. அவனோடு குழந்தைகூடப் பெற்றுவைத்து.
“ஹேய் … சொன்னாப்போல நீ பங்கை பார்க்கேல்ல என்ன… பொறு தூக்கியாறன்”
உள்ளே ஓடிப்போய் தூக்கத்தில் கிடந்த குழந்தையைத் தூக்கிவந்தாள்.
“இந்தா … பிடி. பயப்பிடாதை. விழுத்திடமாட்டாய்”
வாங்கினான். கைகள் நடுங்கின. குழந்தையை எப்படித் தூக்குவது என்று தெரியவில்லை. குழந்தை தூக்கத்தில் எழுந்து மலக்க மலக்க விழித்தது. பொது நிறம். வட்ட முகம். பரட்டை முடி. தகப்பனைப்போல இருக்கவேண்டும்.
“ஹி ஓர் ஷி?”
“கண்டுபிடி பார்ப்பம்?”
அவன் அந்தரத்தில் நெளிந்தான்.
“பெடியந்தான் … பெயர் பங்காரு”
“பங்காருவா?”
“ம்ம்ம்.. டொட்டுக்கு பிடிச்ச பேர்… பங்காரு அடிகளாரின் பக்தர் அவர். கேள்விப்பட்டிருப்பாய். அவராலதான் எல்லாமே சாத்தியமானது எண்டு சொல்லி… எனக்கு ஒருமாதிரியாதான் இருந்துது. ஆனா யோசிச்சுப்பார்க்கேக்க பங்காரு நல்லாத்தான் இருந்தது. டே கெயார்லதான் பங்கரூ என்று கூப்பிட்டு அறுக்கிறாங்கள். கங்கரூமாதிரி. … நான் பங் எண்டுதான் கூப்பிடுவன்… பங்குக்குட்டி … பங்கூ…”
நிரோஜனுக்கு அடச்சிக் என்று இருந்தது. இப்போதே கக்கூசுக்குள் நுழைந்து அந்த டொட்டுவை … சவம். அவளைத் தொடும்போதும் அம்மா பகவானை துதித்துக்கொண்டே தொட்டிருப்பான். அவனுக்கு ஏன் இப்படியான சிந்தனைகள் வருகிறது? யாரோ குடும்பம், யாரோ வாழ்க்கை. யாரையோ வணங்குகிறார்கள். யார் பெயரோ வைக்கிறார்கள். அவனுக்கு என்ன வந்தது. ஆனால் இது அவனுடைய அருண்மொழி அல்லவா? பட் அவள் சந்தோசமாகவே இருக்கிறாள். தேவதைகள் எப்படித்தான் தேவாங்குகளுக்கு வாழ்க்கைப்படுகிறார்களோ என்ற அங்கலாய்ப்பு வந்துபோனது.
பங்கை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.
“ஐ நோ வட் யூ திங்கிங் நிரோ. ஆனா பமிலி லைப் அப்படி ஒண்டும் மோசமில்லை. ஐ ஆம் ஹாவிங் எ குட் டைம். டொட்டூ கொஞ்சம் ஓக்வேர்ட்தான். ஆனால் அது கிளேமாதிரி. மோல்ட் பண்ணச்சரிவரும். உனக்குத்தெரியுமா, மியூசிக்கே பிடிக்காது எண்டவர். இப்ப வரேக்க, காதல் ரோஜாவே என்ன ராகம் எண்டு கேளேன். உனக்குக்கூடத் தெரிந்திருக்காது”
“தேஷ் அருண்மொழி”
“ஆனால் மிக்ஸ்ட். எனிவே, ஹி இஸ் ஓஸம் மேன். நான் என்ன கேட்டாலும் செய்யும். பங்கைக்கூட நான் பெத்துப்போட்டது மட்டும்தான். பார்க்கிறது முழுக்க அவர்தான். நத்திங் டூயிங் எண்டுட்டன். நோ வொரீஸ் எண்டுட்டுது. எனக்கென்ன. பங் வளர்ந்தா அம்மா அம்மா எண்டுதான் சொல்லப்போறான். ஹா ஹ”
“உண்மைதான் … அதாலதான் பங்குக்கு ஒரு தங்கச்சி வேணுமெண்டு அருவுட்ட சொல்லிக்கொண்டிருக்கிறன்”
மாடிப்படியிலிருந்து குரல் வந்தது. பார்த்திபன். படத்தில் பார்த்ததற்கு நேரில் ஸ்மார்ட்டாக இருந்தான். உடம்பு இரும்புபோல தசை, கொழுப்பு இல்லாமல் நச்சென்று இருந்தது. கிளீன் ஷேவ் பண்ணி, ஜெல் போட்டுத் தலைவாரி, வீட்டில்கூட டிப்டொப்பாக நின்றான். அருண்மொழியை அரு என்று சிதைத்தான்.
“தெயார் யு கோ … மிஷன் அக்கம்பளிஷ்ட்… டொட்டூ மீட் மை நிரோ…நிரோஜன்.. திஸ் இஸ் பார்த்திபன். ஓல்ஸோ நோன் ஆஸ் டொட்டூ. அண்ட் ஓல்ஸோ நோன் ஆஸ் மை ஸ்வீட் ஹார்ட்”
பொறாமையாக இருந்தது. அந்த ஸ்வீட் ஹார்ட்டை அந்தக்கணமே பிரித்து எடுத்து கொத்துரொட்டி போடவேண்டும்போல இருந்தது. கால் கைகளுக்கெல்லாம்கூட பக்காவாக கிரீம்போட்டு மினுக்கென்று வைத்திருந்தான். நிரோஜனுடைய கால்கள் வெள்ளை பட்டு, சொரசொரத்துப்போய், அப்போதும் திரேசமேரி கிரீம் போட்டுவிடுவதாகச் சொன்னவள். அவன்தான் கேட்கவில்லை.
“ஹவ் ஆர் ய மேட்?”
பார்த்திபன் கைகொடுக்கும்போதும் வலித்தது. ஜிம் கைகளால் வேண்டுமென்றே நெரித்தான்போல. அல்லது அருண்மொழி சொல்லிக்கொடுத்திருப்பாள். நிரோஜன் கைகளை விலக்கிக்கொண்டே, “நைஸ் மீட்டிங் யூ” என்றான்.
“எப்ப வந்தீங்கள்?”
“நீங்கள் டொய்லட்டுக்குள் இருக்கேக்க..”
“ஹா ஹ.. ஹி இஸ் பஃனி… ஐ மீன் எப்ப மைகிரேட் ஆகி வந்தீங்கள்?”
“இப்பத்தான் … ஒரு மாசம் ஆகுது … ஸ்டில் செட்டில் ஆகேல்ல”
“ஆ … நைஸ் … வேலை எடுத்திட்டீங்களா? ஐடிகாரர் எல்லாரும் வரேக்கையே எடுத்திட்டு வாறினமே … அருகூட ஐ திங் நெக்ஸ்ட் டே எடுத்திட்டுது … டூ ஈஸி”
நிரோஜனுக்கு அவமானமாக இருந்தது. ஒரு மாதமாகியும் வேலை கிடைக்கவில்லை என்பதைக் குத்திக்காட்டுகிறானா? அருண்மொழி குறுக்கிட்டாள்.
“அதுபற்றித்தான் இவனை இண்டைக்குக் கதைக்கக் கூப்பிட்டனான். எப்பிடி வேலை தேடுறது எண்டு சொல்லிக்கொடுக்க…”
“நைஸ் நைஸ் … மேக் யுவர் செல்ஃப் கொம்பர்டபிள்… நான் ஒருக்கா ஜிம்வரைக்கும் போயிட்டு வாறன். அரு … ட்ரீட் த ஜெண்டில்மேன் வெல்… சீ யூ”
“ஐ வில் … பாய் .. லவ் யூ”
அவள் சொல்ல, அவன் அவளை நெருங்கி கிஸ் பண்ணி பதில் லவ் யூ சொன்னான். நிரோஜன் திரும்பி நின்று அம்மா பகவானைப் பார்த்தான். எழுந்து சென்று அந்தாள் மூஞ்சியில் ஒரு குத்துவிட்டால் என்ன என்று தோன்றியது. நிரோஜன், வேண்டாம். வந்த வேலையைப்பார். பிளீஸ்.
பார்த்திபன் போனதும் அருண்மொழி பங்கோடு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.
“சரி … இப்ப சொல்லு. எப்பிடி வேலை தேடும் படலம்?”
பேச ஆரம்பித்தார்கள். அவள் இங்கே எப்படி வேலை தேடுவது, நேர்முகத்தேர்வுகளை எதிர்கொள்வது பற்றியெல்லாம் விவரித்தாள். ஏஜண்டுக்கு பஃலோ அப் கோல் பண்ணச்சொன்னாள். அவள் நிறுவனத்திலேயே வேக்கன்ஸி ஏதும் வந்தால் சொல்வதாகச் சொன்னாள். புதுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறு புரஜெக்டை செய்து கிட்ஹப்பில் ஏற்றுமாறு வலியுறுத்தினாள். அவனுடைய ரெஃரியாக இருக்கச் சம்மதம் சொன்னாள். சி.வியையும் தெரிந்தவர்களுக்கு அனுப்புவதாகச் சொன்னாள். பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக,
“ஒருக்கா இந்த பங்கைப் பிடி”
அந்த பங்கை கையில் கொடுத்துவிட்டு, உள்ளேபோய் மக்புக் எடுத்துவந்தாள். அவன் அருகே வந்து உட்கார்ந்து, சப்பாணி கட்டி, மடியில் மக்புக்கை வைத்து, அவனுடைய சி.வியை ஈமெயிலில் தேடி எடுத்தாள்.
“இஞ்ச பாரு. ‘The’ எங்கெல்லாம் போடோணும் எண்டுகூட உனக்குத் தெரியயில்லை. டைப்போ பிழைகள் விடவே கூடாது. இங்கே யுகே இங்கிலிஷ். யு.எஸ் இங்கிலிஷ் யூஸ் பண்ணாதே. டோன்ட் புல்ஷிட் இன் த சி.வி. சிம்பிளா இரண்டு பக்கத்துக்குள்ள முடிக்கோணும். உண்ட ஓபின்சோர்ஸ் வேர்க்கை ஹைலைட் பண்ணு. உனக்கு டென்சர்புலோ தெரியுமா?”
“சும்மா, கொஞ்சநாள் பிளே பண்ணிப்பார்த்தன்”
“அப்ப அதை கிளியரா மென்ஷன் பண்ணு. தெரியாத விசயத்தை சி.வில போடாதே. என்ன ஷிட்டுக்கு ஏ.எல் ரிசல்ட் போட்டிருக்கிறாய்? டிலீட். டிலீட். உனக்கு டெனிஸ் பிடிச்சா அவனுக்கு என்ன? டிலீட். ஸ்விம்மிங்? சீரியஸ்லி? அடுத்தவருடம் பங்கூட இங்கே நீந்தத்தொடங்கிவிடுவான். டிலீட்.”
அவள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜிம்முக்குப் போவதாகச்சொன்ன பார்த்திபன் திரும்பி வந்தான். அவன் வந்ததைக் கவனியாமல் அருண்மொழி நிரோஜனின் சி.வியைத் திருத்திக்கொண்டிருந்தாள். வெறும் ஆறு இஞ்சி இடைவெளியில் அவனும் அருண்மொழியும். ஷோர்ட்ஸ் மேலே ஏறி, கால் மூட்டு அவனில் சாதுவாக முட்டியதை அவள் சட்டை செய்யவில்லை. அவன் கையில் பங்காரு அடிகள் வெறு மலங்க மலங்க விழித்தபடி கிடந்தான். நிரோஜனுக்கு மகாபாரதத்து பானுமதியின் சீன்தான் ஞாபகம் வந்தது. அந்த டொட்டு துரியோதனன்போல. இது அதைவிட மோசம். டொட்டுவும் அவனும் உயிர் நண்பர்கள் கிடையாது. அவன் சந்தேகப்பட்டால் கதை முடிந்தது. கோர்க்கவா எடுக்கவா என்றெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணமாட்டான். ஜிம் உடம்பு. நிரோஜன் சப்பளிவான்.
“தண்ணிப்போத்தலை மறந்துபோயிட்டன்”
என்றபடி பார்த்திபன் போத்தலை எடுத்துக்கொண்டு திரும்பிப்போனான். அருண்மொழி நிமிரவில்லை. நிரோஜனுக்கு சின்னதாக ஒரு சந்தோசத் துளி முளைவிட்டது. பார்த்திபன் ஒரு சந்தேகப் பிராணி. அதனால்தான் திரும்பிவந்தான். அது தெரிந்தே கோபத்தில் அவள் நிமிரவேயில்லை. தே ஆர் நொட் ஹப்பி. அருண்மொழி இதையெதையும் கவனியாதவள்போல சி.வியைக் குடைந்துகொண்டு இருந்தாள். சற்று நேரத்தில்.
“லுக் அட் திஸ்”
பார்த்தான். அவனது சி.விபோலவே அது இருக்கவில்லை. இரண்டே பக்கத்தில் படு மொடேர்னாக, ஒரு வெப்சைட் புரபைல்போல சி.வி மாறியிருந்தது. எது தேவையோ அதை மட்டுமே விட்டுவைத்து மீதி எல்லாவற்றையும் அழித்திருந்தாள். ஸச் எ மஜிக்.
“தாங்ஸ் அருண்மொழி…”
“ஓல் டன். இனி வேலை கிடைச்சமாதிரித்தான். இரு பிட்ஸா எடுக்கிறன். சாப்பிட்டுப்போகலாம்.”
“வேண்டாம் … திரேஸ் வெயிட் பண்ணுவாள்”
“அட்ரஸ் தா … அவவுக்கும் ஒரு டெலிவரி பண்ணலாம்”
இவன் என்ன சொன்னாலும் அவள் விடவில்லை. திரேசுக்கு கோல் பண்ணிச்சொன்னான். பிட்ஸா வந்தது. சாப்பிட்டார்கள்.
“ஞாபகம் இருக்கா அருண்? பார்த்திபனோடு நீ முதன்முதலில பேசேக்க நான் பீட்ஸா வாங்கிச்சாப்பிட்டது”
“ஓ யியா … குட் ஓல்ட் டைம்… ஆனா நீ அடுத்தடுத்த மாசமே சியாட்டில் போனதால கொஞ்சம் டச் விட்டுப்போச்சு என்ன? எங்கட கலியாணத்துக்கும் நீ இல்லைத்தானே”
அவள் வாயுள் ஹவாயன் கிடந்தது. ஒரு அன்னாசித்துண்டை பங் வாயிலும் திணித்தாள். பங் துப்ப, அன்னாசி நிரோஜன் சட்டையில் விழுந்தது. ‘இப்பவே டிரெயினிங் எடு’ என்று சிரித்தாள்.
“கியூரியஸ்லி அருண்மொழி …ஒண்டு கேக்கோணும்… நான் சியாட்டில் போனதால கேட்கவும் முடியேல்ல… ”
“வட்? … சொல்லு”
“நீ எப்படி …ஐ மீன்…”
“எப்படி டொட்டுவை லவ் பண்ணினன் எண்டா?”
“யியா…”
“சிம்பிள்…. ஹி ரியலி வோண்டட் மீ … நான் வேண்டாம் எண்டு சொன்னது தெரிஞ்சதும் மாப்ள அடுத்தநாள் இரவு வந்து வீட்டு வாசலில் நிக்கிறார். பதினாலு மணித்தியால பிளைட். இக்கனமி இல்லை எண்டு பிசினஸ் கிளாஸ் போட்டு, எண்ணாயிரம் டொலர்ஸ் கொடுத்து… ஹவ் லவ்லி தெரியுமா அது. நானும் ஆரம்பத்தில, சாவனிஸ்ட், பனங்கொட்டை, அம்மாண்ட மடி எண்டெல்லாம் நினைச்சன் … ஆள் கொஞ்சம் லூசுதான்… ஆனா எனக்கேற்ற லூசு.”
அவள் சிரிக்க, நிரோஜன் கணம் கண்மூடினான். ஷிட். ஷிட். ஷிட். அவன் ஏன் அவளைக் கேட்கவேயில்லை? தேவையே இல்லாமல் அவளை நினைத்தபடி கவிதைகள் எழுதி, மெலடி கேட்டு, கனவு கண்டு .. ஜஸ்ட் ஒரே ஒரு சொல்லு, சொல்லியிருக்கலாமே. அதுவும் நல்லதுக்குத்தான். இல்லாவிட்டால் அவனுக்கு திரெஸ் கிடைத்திருக்கமாட்டாளே. அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்? ஒப்பிடுகிறானா? சால்ஜாப்பு சொல்கிறானா? அருண்மொழியை அவன் மறக்கவே முடியாதா?
“யு நோ வட் நிரோ … எனக்கு உன்னிலகூட ஒரு கிரஷ் இருந்தது … பட் எண்ட் ஓப் த டே பிரக்டிகலா யோசிச்சுப்பார்த்தால் எல்லாமே நல்லதுக்குத்தான் … இப்பப்பாரு … நான் நினைச்சபடி வாழ்க்கையை அமைக்கக்கூடியதாக இருக்கு … இரண்டு வருசத்தில ஏழு நாட்டுக்குப் போயிட்டம். லாஸ்ட் டிஸம்பர் மடகஸ்கார் போனம் … ஆபிரிக்காதான் … ஆனா வெரி டிபரண்டான நாடு. டொட்டூக்கு ஒண்டுமே தெரியாது … சோ வட்? … நான் ஒவ்வொண்டா சொல்லிக்குடுக்கிறன். அதுகூட ஈஸி. ஏனெண்டா அவர் ஒரு கிளீன் ஸ்லேட். அவருக்கு என்ன ட்ரிங் இப்பப் பிடிக்கும் சொல்லு?”
“பெலினியா?”
“ஸீ … எக்ஸாக்ட்லி … இட்ஸ் ஈஸி மேன்…எண்ட அம்மாவையும் கூப்பிடப்போறோம். ஒரு லட்சம் டொலர்ஸ் கட்டோணும்…. வி ஆர் வெல் ஓப் நிரோஜன்… ”
“பார்த்திபனோட அம்மாக்கு என்ன நடந்தது”
“ஓ .. மாமியா? அவ சரியான நல்லவா … ஜெண்டில் வுமன். பாவம். வெரி கொம்பிளிகேடட் கான்ஸர் ஒண்டு … ஆறு மாசத்துக்கு முன்னாலதான் மோசம் போயிட்டா”
“ஓ சொறி”
“தட்ஸ் ஓகே … எனக்கும் ஆரம்பத்தில பயமாத்தான் இருந்தது. இந்தாள் வேற அம்மா பக்தன் என்று இந்த லுசிண்ட படத்தை நடு வீட்டில வச்சிருக்கு. ஆனா சில விசங்களில நாங்கள் ஆம்பிளைகளை அவர்கள் போக்கில் விட்டிடோணும். இப்ப என்ன, டொட்டூ அடிக்கடி மேல்மருவத்தூர் போகோணும் எண்டு சொல்லும் … எனக்கும் ஓகே… அப்படியே இந்தியாக்கும் போனமாதிரி .. யு நோ வட் … பங் கொன்சீவ் ஆனதுகூட ஆலப்புழாவிலதான் … என்னா செட் அப் தெரியுமா… போட் ஹவுஸ்… காண்டில்ஸ், ரொமாண்டிக் டின்னர் … புளோட்டிங் பெட்… அப்டியே வானத்தில மிதக்கிறமாதிரி… ”
அருண்மொழி கண்ணடிக்க இவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவள் எல்லாவற்றையும் தெரிந்தே செய்கிறாள். அவனை வேண்டுமென்றே டீஸ் செய்கிறாள். நிரோஜன் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தான். இந்த ஷிட் வேண்டாம். அருண்மொழி வேண்டாம். அவனுக்கென்று ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது. அதில் கவனக் கலைப்பான்கள் தேவையில்லை. ஹி இஸ் பெட்டர் ஓஃப் வித்தவுட் ஹேர்.
“சரி அருண்மொழி … நான் வெளிக்கிடுறன்”
“நல்லது… குட்லக் … வேலை கிடைச்சதும் எனக்கு பார்ட்டி வைக்கோணும் சரியா. என்ன பெயர்… ஆ, திரேசமேரிகூட அப்புறம்தான். நான்தான் சுப்பர்வைஸர் … மறந்திடாத”
சிரித்தாள். சமயங்களில் இவள் குழந்தைபோல நடந்துகொள்கிறாள். சமயங்களில் ஒரு சாகசக்காரிபோல. சமயங்களில் பசப்புக்காரிபோல. சமயங்களில் அரசியல்வாதிபோல.
“ஷுர் அருண்மொழி … உனக்கில்லாமலா… நான் வாறன்”
வாசல்வரைக்கும் கூடவந்து கட்டியணைத்து வழியனுப்பினாள். காரை ஏன் தூரத்தில் விட்டாய் என்று கேட்டாள். இவன் சிரித்தபடியே கை காட்டிவிட்டு தன் காருக்கு வந்தான். டொயோட்டோ கொரோல்லோ 2008 மொடல். தான் ஏதோ தவறு செய்வதாகவே அவனுக்குத் தோன்றியது. காரை மனைவிக்கு ஒப்பிடாதே நிரோஜன். காரைத் திறந்து உள்ளே அமர்ந்து போனை எடுத்துப் பார்த்தான். திரேஸ் நான்கு தடவைகள் கோல் பண்ணியிருந்தாள். அவளுக்கு அழைப்பு எடுத்தான்.
“என்ன விசயம் திரேஸ்… சாப்பிட்டியா ….? ”
“ம்ம்ம் … பிட்ஸா வந்தது … நாங்க எடுக்கிற டொமினோஸ்மாதிரி இல்லாம டேஸ்டா இருந்தது. அருண்மொழி அக்காவுக்கு ஒரு தாங்ஸ் சொல்லலாம் எண்டு கோல் பண்ணினால் நீங்கள் போனையே எடுக்கேல்ல”
“கோல் மியூட்டில இருந்துது … நான் காருக்கு வந்திட்டன்”
“ஐயோ … சரி சரி …வெளிக்கிட்டிங்களா? ஏசுவே .. கவனமா வந்து சேருங்கோ .. களைச்சிருக்காட்டி வரேக்க சைனீஸ் மா வாங்கியாங்கோ … இல்லாட்டியும் பரவாயில்ல … பிறகு பார்க்கலாம் ..”
அவன் தயங்கினான்.
“திரேஸ் … நாங்கள் திரும்பவும் ஶ்ரீலங்கா போயிருவமா?”
“ஏன் என்னாச்சு … அருண்மொழி அக்கா இந்தநாடு நமக்கு சரிவராது எண்டு சொன்னாவா? போறதெண்டால் போகலாம் …எப்ப?”
இதுதான் திரேசமேரி. ஒரு சின்ன சந்தேகம். சின்ன தொணதொணப்பு. எதுவும் இல்லை. கேள்வி இல்லை. அவள் நகைகளை எல்லாம் விற்றுத்தான் பணத்தோடு அவுஸ்திரேலியா வந்தார்கள். திரும்பிப்போய் எல்லாவற்றையும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். அவள் சின்னதாக கவலைகூடக் கொள்ளவில்லை. இந்த தேவைதையைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ஏன் சதா அருண்மொழி, அருண்மொழி, அருண்மொடி என்று ….
“இந்தக் கிழமையே போயிடலாம் திரேஸ் …வாடகை கட்டுப்பணம், போனால் போகட்டும்”
“சரி … நீங்கள் முதலில கவனமா வந்து சேருங்கோ”
அவள் போனைக் கட் பண்ணவும்,
‘டக், டக், டக்’
அருண்மொழிதான் கார்க் கண்ணாடியைத் தட்டினாள். கதவைத் திறந்தான்.
“என்ன அருண்மொழி?”
“ஹேய் … சொல்ல மறந்திட்டன் … பக்கத்து கவுன்ஸில்ல சல்ஸா பிகின்னர்ஸ் கிளப் தொடங்கினம்… டொட்டூவைக் கேட்டால் நாரிப்பிடிப்பு என்று கிழவிமாதிரி நிக்குது … நீ வாறியா? இரண்டுபேரும் போகலாம்”
“எப்ப?”
“ஒவ்வொரு சண்டேயும் எட்டு மணிக்கு. ஆரம்பத்தில நோரமல் ட்ரக் பாண்ட்சும் டிசேர்டும் போதும்… தொடர்ச்சியா எட்டு ஞாயிறு போகோணும். இட் வில் பி பஃன். நீ வாறியா? பெயர் கொடுக்கவா?”
நிரோஜன் சற்றும் தயங்காமல் பக்கென்று பதில் சொன்னான்.
“ஓ. கே அருண்மொழி ... நான் வாறன்”
—- முற்றும் —-
எல்லா அருண்மொழியும் ஒண்டுதான் போல... 4 வயசோட யாழ்ப்பாண உயர் சைவ வே.... வையும் சேர்த்துக்கொள்ளுங்கோ...
ReplyDeleteObviously unexpected! Now I think its better Niro and Arun didn't end up together.
ReplyDeleteநிரோஜன் சற்றும் தயங்காமல் பக்கென்று பதில் சொன்னான். - but this is very disturbing!
Read all three part. Interesting. Couldn't avoid thinking of 'Pirivom Santhppom' from Sujatha.
ReplyDeleteஇந்த ’முற்றும்’ க்குப் பிறகு தான் கதையே தொடங்குது....
ReplyDeleteஒரு பாதுகாப்பான இடத்தில் முற்றும் போட்டு ஜேகே தப்பி விட்டார்.
என்றாலும் சுவாரிஸமான எழுத்தோட்டத்துக்கும் துல்லியமான பாத்திரப்படைப்புக்கும் எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்கும் நிச்சயமாய் ஒரு சபாஷ் குடுத்தே ஆக வேண்டும்.
JK எல்லாம் சரி புலம்பெயர் இலக்கியவாதிகளில் உங்களுடைய எழுத்துக்கள் தனித்தன்மை கொண்டவையே பொழுதுபோக்காக எழுதுபவர்களுக்கு இது போதும் நவீன தமிழ் எழுத்துலகில் இடம் பிடிப்பதற்கான தகுதியும் உங்களுக்கு உண்டு அதற்கு வெறுமனே உயர் மட்ட வாழ்க்கையில் இருந்து வெளி வந்து அனைத்து தரப்பினரையும் ஏற்பதாக உங்கள் பாத்திரப்படைப்புக்கள் அமைய வேண்டும் வெறும் IT, programming,doctor,engineer என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் வெளி உலகம் இதனை விட அழகானது
ReplyDeleteபாஸ், ஒரு சிறந்த எழுத்தாளன் தான் சார்ந்த சூழலில் இருந்தே, ஆக்கங்களை உருவாகிறான். எனக்கு தெரிந்தவரை JK'ன் படைப்புகள் திண்ணைவேலி, வட்டகச்சி, கொழும்பு, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என பரந்து பயணிக்கின்றன.
Deleteஎன்னை பொறுத்தவரை JK'ன் படைப்புகள் பரந்துபட்டவை, அவர் வாழ்த்த அல்லது வாழ்கின்ற சூழல் சார்ந்தவை.
மன்னிக்கவும், நீங்கள் நுனிப்புல் மேய்த்திருக்கிறீர்கள்.
JK, என்னக்கு பரிசு ஏதாவது உண்டா?
வெள்ளிக்கு பிறகு உங்களிடமிருந்து மீண்டும்.. ஒரு திரைப்படத்திற்கான கதை...
ReplyDeleteமூன்று பாத்திரங்களின் பேச்சு ஊடாக ஒரு கதை... பாத்திரங்களை மட்டும் நீங்கள் தந்திருக்கிறீர்கள்.. கதையை அநேகமாக நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.. ஏலவே அமுதவாயனும் அப்படித்தான் இருந்தது... இறுதியில் பெரும்பாலும் வெறுக்கப்பட்ட பாத்திரம் சலனமற்றதாகவும், மற்ற இரண்டும் சலனம் கொண்டதாகவும் இருக்கின்றன.... அருண்மொழி, எல்லா தூண்டல்களையும் செய்துவிட்டு, நான் சோஷியலதான் பழகினன்... நீ தப்பா புரிஞ்சிகொண்டாய் என்று சொல்லும் ஒருத்திபோல தோன்றுகிறது.... இன்னொரு வாசிப்பு அனுபவத்துக்காக காத்திருக்கிறோம்...
ReplyDelete"அந்த ஸ்வீட் ஹார்ட்டை அந்தக்கணமே பிரித்து எடுத்து கொத்துரொட்டி போடவேண்டும்போல இருந்தது" - my favourite line. really enjoyed. Thanks
ReplyDeleteஎத்தனை முறை சபாஷ் போட்டாலும் தகும். எழுத்து நடை, சொல்லாடல், பாத்திரப்படைப்பு, ரயிலில் பயணித்து வாசிக்கும்போது அவ்வப்போது வருகின்ற சிரிப்பை அடக்கமுடியாமல் படுகின்ற இன்ப அவஸ்தை, நேரிலோ தொலைபேசியிலோ இன்னும் அதிகமாக பேசலாம். வேண்டாவெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டாமிருகம் என்று பேர் வைத்தானாம். அதேபோல கங்காரு நாட்டில் பிள்ளையைப் பெத்து பங்காரு என்று பேர் வைத்தானாம்.
ReplyDeleteFollowing you for many years..after long time an interesting writing..
ReplyDeleteஎப்போதும் தெளிவாக இருக்கும் அருண்மொழி. எதுவும் தெரியாமல், எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொள்ளும் பார்த்திபன். தெரிந்தும் துணிச்சல் இல்லாத இனம் புரியாத சபலம் உள்ள நிரோஜன்.. வெகு சுவாரஸ்யம்.. சபாஷ்!
ReplyDeleteவேகமாக கமெண்ட் எழுதிவிட்டேன். யோசித்தால், நானும் நிரோஜன் போன்ற ஆள் தான். என் மனைவியும் திரேசமேரி போன்றவர்தான். நல்ல வேளை , அருண்மொழி போன்ற ஒருவரை நான் பார்க்க நேரவில்லை. அருண்மொழி போன்றவர்கள்தான் எவ்வளவு எளிதாக சந்தர்ப்பங்களை தங்களுக்கு ஏற்றமாதிரி வளைத்துக் கொள்கிறார்கள்!
ReplyDeleteபடித்த இரண்டு நாட்களுக்கு பிறகு என்னை வரவழைத்து கமெண்ட் போடவைத்துவிட்டீர்கள்!
ஆக நிரோஜன் தெளிந்துவிட்டான் , எந்த அருண்மொழி வந்தாலும் எங்கே கூப்பிட்டாலும் போவான் தெளிந்த நீரோடை போன்ற மனதுடன் ,
ReplyDeleteபார்த்தீபன் சந்தேக படுகிறான் என்ற பின் தான் இந்த தெளிவு வந்ததை ம்ம்ம் ..... மற்றவர்களுக்காக தான் வாழ்கிறோமா
சமயத்தில் சாமியாரையும் சல்லாபத்தையும் சம்பந்தப்படுத்தி....
அந்த சைனீஸ் மா உங்கட வீட்டையும் போட்டு தாக்குது போல
X5 ,Q7 எல்லாம் மேய்க்க கஷ்டம் டொயோட்டா ரிலையப்பில் யு நோ