Skip to main content

Posts

Showing posts from July, 2018

ஆதிரை வாசகர் சந்திப்பு - படங்கள்

  எழுத்தாளர் சயந்தன் மெல்பேர்ன் வந்திருப்பதைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆதிரை, ஆறாவடு பற்றிய ஒரு வாசகர் சந்திப்பை நேற்று மாலை செய்திருந்தோம். ஆதிரை பற்றி ஒரு சந்திப்பு செய்யவேண்டுமென்பது மூன்று வருடக்கனவு. நிறைவேறியிருக்கிறது. கடைசிநேர அழைப்பு என்றாலும் நேரம் ஒதுக்கி கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. நம்முடைய கதைகளை எல்லாம் சிறு புன்னகையுடன் கடந்துகொண்டிருந்த சயந்தனுக்கும் நன்றி.

பெற்ரா

இன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள். “சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்? ஏன் கூட்டி வரவில்லை?” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. “ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”

சமாதானத்தின் கதை - கருத்துகள்

' சமாதானத்தின் கதை ' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறது. "உண்மைக்கதையோ!? " என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை. அன்புடன் பிரிய வாசகன் முருகபூபதி

குஷி

நேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு,  ‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’ பதிலுக்கு நான்,  ‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’ சிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை.