Skip to main content

கன்னடக் கதைகளு 1: நெல்லி




மாலை ஐந்து மணி தாண்டியிருந்தது. ஹம்பி எக்ஸ்பிரஸ் ஹோஸ்பேட்டுக்கு வந்துசேர இன்னமும் நான்கு மணித்தியாலங்கள் இருந்ததால், அவ்வளவு நேரமும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வெளியே இறங்கி நடக்கலாம் என்றால் மழை தூறிக்கொண்டிருந்தது. தனியனாக உணவகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடந்து வெறுமனே கிங்பிஷரை அருந்திக்கொண்டிருக்க அலுப்படித்தது. இன்னொரு மிளகு மசாலா சொல்லலாம் என்றால் வயிறு வாய்தா கேட்டது. இன்னொருபுறம் மனம் இக்கணங்களை இப்படிக் கழித்து இலகுவில் இழந்துவிடாதே என்று சொல்லியது. 

வெளியே வந்தேன். 

மழையை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தெருவோரமாக ஒரு பெண்மணி சோளம் பொத்திகளை நெருப்பில் சுட்டு விற்றுக்கொண்டிருந்தார். இடது கையால் ஒரு பழைய கறுப்புக்குடையை நெருப்பு அணையாவண்ணம் மழைக்குப் பிடித்தபடி, மறு கையில் ஒரு குழாயை ஊதி ஊதி தணலை எரியூட்டிக்கொண்டிருந்தார். அவருக்கருகிலேயே சிறு பெட்டிக்கடையில் வெங்காயப்பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்கள். சூடாக எதையாவது வாங்கிச்சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. வீதியைக் குறுக்கே கடந்து போனபோது, பக்கத்திலேயே ஒரு சிறுமி நெல்லிக்காய் விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டதும் மனம் மாறிவிட்டது. அவள் சிறு கடகம் நிறையச் சின்ன நெல்லிகளைக் குவித்துவைத்து விற்றுக்கொண்டிருந்தாள். வாய் ஊறியது. அவளிடம் சென்று, “எஷ்டு தங்கே?” என்றேன். “ஹத்து” என்று அவள் சொல்லியது புரிந்தது. அதற்கப்பால் எதுவும் புரியவில்லை. இப்படித்தான் மூன்று வாரங்களாகவே கன்னடம் எனக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்தது. மற்றவர்கள் பேசும்போது புரியுமாப்போல இருக்கும். அட, இது தமிழிலும் இருக்கிறதே என்று தோன்றும். சரி நாமும் பேசிப்பார்க்கலாம் என்று யாரிடமாவது பேச்சுக்கொடுத்தால் அவ்வளவுதான், ஒரு சவமும் விளங்காது. 

பத்து ரூபாய்க்கு அந்தச்சிறுமி ஒரு பேப்பர் சரை நிறைய நெல்லிக்காய்களைப்போட்டு உப்பும் மிளகாய்த்தூளும் தூவித்தந்தாள். ஒரு நெல்லியை எடுத்து வாயில் போட்டேன். கயர்த்தது. பிஞ்சிலேயே மரத்திலிருந்து பிடுங்கப்பட்டிருக்கவேண்டும். எனக்கு எம் யாழ்ப்பாண வீட்டுக்கிணற்றடியில் நின்ற மரம் ஞாபகத்துக்கு வந்தது. தானாகவே வளர்ந்த நெல்லிமரம் அது. எந்த ஊரிலாவது சின்ன நெல்லியை நட்டுத் தண்ணீரூற்றி வளர்ப்பார்களா என்று தெரியவில்லை. எங்கள் வீட்டு நெல்லி அதுவாக வளர வளர, வருபவர், போகிறவர் எல்லாம் கிணற்றடியில் நெல்லியை வளரவிடவேண்டும், விடக்கூடாது என்று இருவேறு கருத்துகள் சொல்ல ஆரம்பித்தனர். நெல்லி தண்ணியைக் கயர வைக்கும் என்றனர் சிலர். நெல்லி நின்றால் கிணற்றிலிருந்து சர்க்கரைத்தண்ணி ஊறும் என்பார் மற்றவர். அது பெரு நெல்லிக்குத்தான். சிறு நெல்லி சதத்துக்கும் உதவாது என்றனர் இன்னும் சிலர். அம்மா இதையொன்றையும் காதுகொடுத்துக் கேளாமல், கிணற்றடிக்கு நிழலாக இருக்கட்டும் என்று அதனை வளரவிட்டார். குளிக்கும் நீர், துவைக்கும் சவர்க்கார நீர், ஆடு கட்டினால் அதன் புழுக்கை, மூத்திரம் என்று நெல்லிக்கும் ஆகாரங்கள் கிடைக்க, மிக வேகமாகச் சிங்கன் சடைத்து வளர ஆரம்பித்தார். ஒருநாள் நான் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருக்கையில் மரம் சின்னதாக அரும்பு விட்டிருந்ததைக் கண்டு, ‘அம்மா நெல்லி பூத்திருக்கு’ என்று அடுப்படி யன்னலுக்குள்ளால் அம்மாவுக்குச் சொன்னது ஞாபகம் வருகிறது. “சும்மா கண்ணை வைக்காம வேலையைப்பார்” என்று அம்மா சொன்னார். முதல் நெல்லிக்காயை முற்றும்வரை பொறுக்கமுடியாமல் பிஞ்சிலேயே பிடுங்கிச் சாப்பிட்டுப்பார்த்ததும் அது கயர்த்ததும் ச்சிக் என்று துப்பியதும்கூட ஞாபகம் வந்தது. அந்தச்சம்பவம் நடந்து இன்று இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இருக்கலாம். “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் பரமேஸ்வராச்சந்தி ரெக்கோர்டிங் கடையில் வெளியாகியிருந்த காலம் அது. அதற்கடுத்த வருடம்முதல் அந்த நெல்லி காய்த்துக்கொட்டத்தொடங்கியது. சும்மாவே நன்றாகக் காய்க்கும் மரம் அது. நாங்கள் எங்காவது இடம்பெயர்ந்துபோய்விட்டுத் திரும்பிவருகையில் இன்னமும் பயங்கரமாகக் காய்த்துக்கொட்டியிருக்கும். வீட்டில் இருந்த ஒரே சிறுவன் ஆகையால் எனக்கு அப்போது வீட்டு நாயும் ஆடும் இந்த நெல்லி, மா, வாழை மரங்களும்தான் நண்பர்கள். அதிலும் நெல்லிக்குச் சின்ன வயதாகையால் அதிகநேரம் நாம் ஒன்றாகவே இருப்பதுண்டு. நெல்லியோடு சேர்ந்து ஒரு கோழிக்கூடு இருந்தது. அதன் கூரையில் ஏறிச் சரிந்து படுத்தால் நெல்லியின் கிளைகள் எல்லாம் உடலோடு உரசிக்கொண்டு கிடக்கும். நெல்லிக்காய்க்குலைகள் சிறு காற்றுக்கு ஆடி என் மூக்கில் தனகி விளையாடும். யாரோடும் பகிர முடியாத சந்தோசங்களை, அம்மாவோடான கோபங்களை, தனிமையை நான் அந்தக் கோழிக்கூட்டுக் கூரைகளிலேயே நெல்லியோடு சேர்ந்து பகிர்ந்திருக்கிறேன். அதுவும் தன் வாழ்நாள் தனிமையை என்னோடு அப்படிப் பகிர்ந்திருக்கக்கூடும். அந்த மரத்தில் எப்போதாவது ஒரு குருவி, கூடு இருந்து நான் அறியேன். அம்மா மீன் அரியும்போது வந்து உட்காரும் காகம், கோழிக்கூட்டின் கதவு தவறுதலாகப் பூட்டப்பட்டுக் கிடந்தால் அந்த மரத்தில் ஏறிக்குந்தும் கோழிகளைத்தவிர நெல்லிக்கு என்று நிலையான ஒரு நட்பு இருந்ததாக அறியேன். 

ஊர் நினைவுகளை வலிந்து அகற்றவேண்டியிருந்தது. நினைவுகளின் தொடிசல்கள் எப்போதுமே இப்படித்தான். அவை எப்படி எப்போது எங்கே வந்துவிழும் என்று சொல்லமுடிவதில்லை. கருநாடகத்தின் வடக்கே, பெங்களூரிலிருந்து முந்நூற்றுமுப்பது கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் ஹோஸ்பெட்டில் ஒரு சிறுமி தந்த நெல்லிக்காய் என் யாழ்ப்பாண வீட்டு நெல்லி மரத்தை நினைவூட்டுகிறது. குட்டி இளவரசன் நாவலில் வருகின்ற ரோஜா மலரைப்போல. 

குட்டி இளவரசனுடைய கிரகம் மிகவும் சிறியது. ஒரு வீட்டின் அளவே உள்ள கிரகம் அது. அங்கு சில எரிமலைகளும் சில தாவரங்களுமே அவனோடு வாழ்ந்துவருகின்றன. ஒரு நாள் அந்தக் கிரகத்தில் திடீரென்று ஒரு ரோஜாச்செடி வளர ஆரம்பிக்கிறது. குட்டி இளவரசன் அந்தச்செடிக்கு நீரூற்றி அதற்கு அரண் அமைத்து நன்றாக வளர்க்க ஆரம்பித்தான். மயிர்க்கொட்டிகளிடமிருந்து அதனைக் காப்பாற்றினான். நாளடைவில் அவனுக்கு அந்த ரோஜாமேல் காதல் மலர ஆரம்பிக்கிறது. அந்த ரோஜாவோ தான் பிரபஞ்சத்திலேயே ஒரு தனித்துவமான மலர் என்றும் அதனைவிட ஒரு சிறந்த செடி எங்குமே இல்லை என்றும் சொல்லி குட்டி இளவரசனின் கவனத்தை மேலும் அதன்பாற் திருப்ப முயல்கிறது. போகப்போக குட்டி இளவரசனுக்கு ரோஜா தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து அதன்மேல் வெறுப்பு வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அவன் விரக்தியுற்று தன் கிரகத்தை விட்டே வெளியேறுகிறான். கிரகம் கிரகமாகச் சுற்றுகிறான். ஈற்றில் பூமியை வந்தடைகிறான். பூமியில் ஏராளம் ரோஜாச்செடிகளைக் கண்டதும் அவனுடைய வெறுப்பு இன்னமும் அதிகமாகிறது. தன்னுடைய ரோஜா அப்படி ஒன்றும் தனிச்சிறப்பானது இல்லை என்று எண்ணுகிறான். தன் கிரகத்துக்கே தான் இனித் திரும்பிப்போவதில்லை என்று புலம்புகிறான். அப்போது ஒரு நரியுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. நரியிடம் அவன் தன் நிலைமையைச் சொல்லுகிறான். 

“அடடா, என் கிரகத்து ரோஜா பிரபஞ்சத்திலேயே தனித்துவமானது என்று நினைத்திருந்தேனே. இங்கே பார்த்தால் ஏராளம் ரோஜாக்கள் இருக்கின்றனவே, நான் அந்த ரோஜாவை நம்பி ஏமாந்துபோனேனே” 

அதற்கு நரி சொல்லும். 

“எல்லா ரோஜாக்களையும் போலல்லாது உன் ரோஜா தனிச்சிறப்பானது. ஏனெனில் நீ உன் அன்பையும் நேரத்தையும் கொடுத்து உன் ரோஜாவை உனக்குப் பழக்கப்படுத்திருக்கிறாய். நீ வளர்த்த ரோஜாவும் ஏனைய ரோஜாக்களும் ஒன்றல்ல. அது தனித்துவமானது. அதுவே பிரபஞ்சத்தில் மிக அழகானது. தவிர ஒன்றைப் பழக்கப்படுத்தியமைக்கு நீயே பொறுப்பாளியாகிறாய்.” 

ஹோஸ்பெட்டில் இந்த இக்கணம் நான் உண்ணும் நெல்லி என் வீட்டு நெல்லி அல்ல. என்னவொன்று, என் வீட்டு நெல்லிமரம் தறிக்கப்பட்டு பத்துவருடங்கள் தாண்டிவிட்டது. கிணறு மூடப்பட்டு இப்போது மோட்டர் இயக்கப்படுகிறது. கோழிக்கூடும் இல்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு அப்படி ஒரு நெல்லிமரம் அங்கு இருந்ததே மறந்துபோயிருக்கலாம். குறிப்பிட்டு இதுதான் காரணம் என்று ஒன்றுமிருக்கவில்லை. தறிக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான். அதன் வேர்கள் கிளறப்பட்ட சமயத்தில் அது என்னை நினைத்திருக்கக்கூடும். நான் பழக்கப்படுத்தியிருந்த ரோஜா அது. நான் அதற்காக அது தறிக்கப்படும் சமயத்தில் இருக்கவில்லை. என் தவறு. அப்போது நான் கிரகம் கிரகமாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். 

இரண்டாவது நெல்லிக்காயும் கசந்தது. சிறுமியிடம் திரும்பிச்சென்று சரையில் கொஞ்சம் உப்பும் தூளும் அதிகமாகக் கேட்டுப் போட்டுக்கொண்டபடி ஹொஸ்பேட் நகர மையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மழை கொஞ்சம் கனக்க ஆரம்பித்தது. நல்லகாலத்துக்கு முச்சக்கரவண்டி பிடிக்கவில்லை என்று தோன்றியது. அதிலும் மழையில் கழுவப்பட்ட தெருவில் நடப்பது அலாதியானது. புகை கழுவப்பட்ட வளி மண்டலம். வெயிலின் எரிச்சலினின்று விடுபட்ட மனிதர்களின் புன்னகைகள். உடல் உதறும் வீதி நாய்கள். துள்ளிக்குதிக்கும் கன்றுக்குட்டிகள். புழுதி அகன்ற கட்டடங்கள். வீதியின் இரு மருங்கிலும் வீடுகளும் கடைகளும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன. இடையிடையே சில கோயில்களும். அனேகமாக எல்லாமே ஐந்தாறு நூற்றாண்டுகாலப் பழைமையான கட்டடங்கள். சில இன்னமும் அப்படியே இருந்தன. சில சுண்ணாம்புப்பூச்சு கண்டிருந்தன. சிலது முன்னேயும் பின்னேயும் சீமெந்து அறைகளால் நீட்டப்பட்டிருந்தன. பல வீடுகளின் முன்னே மாடுகள் கட்டப்பட்டு நின்றன. குடைகளைப் பிடித்தபடியே பொதுக்குளாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு நின்றார்கள். ஒரு வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுமி திடீரென்று தெருவோரம் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தாள். சுவரோரம் திரும்பி அமரலாமே என்ற பிரக்ஞை இல்லாமல். 

இஸ்லாமியர்களின் பிரேத ஊர்வலம் ஒன்று முன்னே மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. அலட்டிக்கொள்ளாத கூட்டம். மய்யத்தைச் சுமந்து சென்றவர்கள் தமக்குள் ஏதோ சத்தமாகப் பேசிக்கொண்டே சென்றார்கள். பின்னாலே ஒரு முதியவர், குரானாக இருக்கவேண்டும், ஓதிக்கொண்டிருந்தார். பின்வரிசை இளையவர்கள் செல்பேசியை நோண்டிக்கொண்டே சென்றனர். இறந்தவர் மிக வயதானவராக இருக்கவேண்டும். அல்லது கவிஞர், இலக்கியவாதி வகையறாவாக இருக்கலாம். முப்பது பேரளவிலேயே கூட்டம் வந்திருந்தது. இன்னும் ஒரு மணிநேரத்தில் மய்யத்தைப் புதைத்துவிட்டு எல்லோரும் இறந்தவர் வீட்டுக்குத் திரும்பிச்சென்று பிரியாணி சாப்பிடுவார்கள். அவர் குடும்பம் நாற்பது நாள்களுக்குத் துக்கம் அனுஷ்டித்தாலே பெரிய விடயம். அத்தோடு அன்னாரின் சரித்திரம் முடிந்துவிடுகிறது. வரலாற்றில் இப்படி ஒருவர் இருந்தார், அவர் ஹோஸ்பேட்டின் அங்காடித்தெருவில் சிறு கடை போட்டிருந்தார், அல்லது கரும்புத்தோட்டத்தில் பணி புரிந்தார், வார இதழுக்குக் கவிதை எழுது அனுப்பினார், ரெயில்வே கார்டாக வேலை பார்த்தார், நான்கு பிள்ளைகள், கடன்வாங்கி மூத்த மகளுக்கு பெல்லாரியில் திருமணம் செய்துவைத்தார், இப்படி எத்தனையோ சாதனைகளை அவர் செய்திருக்கக்கூடும். அவருக்கென்று அவர் பழக்கிவைத்திருந்த ஒரு ரோஜாகூட இருந்திருக்கும். அல்லது ஒரு சிறு நெல்லியாவது. மரணத்தோடு இது எதுவுமே சிறு தடயம்கூட இல்லாமல் அழிந்துபோய்விடுகிறது. அவருடைய சவ ஊர்வலத்தின் பின்னே, நெல்லிச் சரையைக் கொறித்தபடி, அசை போட்டு நடந்துபோன ஒரு சுற்றுலாப்பயணியின் நாள் குறிப்பின் சிறு பத்தி நீளக் கற்பனைக்குள் ஒரு வாழ்க்கை அடங்கிவிடுகிறது. எத்தனை பெரிய அபத்தம் இது? 

ஒரு பொலிஸ்காரர் கூட்டத்தை விலத்தி ஒவ்வொரு வாகனத்தையும் ஓரமாக வழிவிட்டுக்கொண்டிருந்தார். கார்கள், ஓட்டோக்கள், மோட்டர்சைக்கிள்கள். எல்லோரும் சும்மா, சும்மா ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றார்கள். ஹம்பியில் ஒரு திருப்பத்தில் ஹோர்ன் அடிக்குமாறு சமிக்ஞைப்பலகை நடப்பட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. பெங்களூரில் அலுவலக நண்பர்களின் மோட்டர் சைக்கிளை அவ்வப்போது கடை கண்ணிக்கு எடுத்துச்செல்வதுண்டு. அப்போது ஒன்றைப்புரிந்துகொண்டேன். ஹோர்ன் அடிக்காத வாகனத்தை எவரும் கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள். சிறுவீதியிலிருந்து பெருவீதிக்கு நுழையும்போதும். பெருவீதியால் செல்லும்போது சிறுவீதிகள் குறுக்கே வரும்போதும். திருப்பங்களிலும். இன்னொரு வாகனத்தை ஓவர்டேக் பண்ணும்போதும். மனிதரோ, மாடோ, ஆடோ குறுக்கே வரும்போதும். அப்படி அவர்கள் வராவிட்டாலும் வந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் வரும்போதும். இப்படி எந்தக்காரணங்களும் இல்லாத பொழுதுகளிலும்கூட ஹோர்ன் அடித்துக்கொண்டே இருக்கவேண்டும். நாங்களும் இந்த நெரிசலின் ஒரு அங்கம் என்பதை ஹோர்ன் அடித்துக் கூவிக்கூவிச் சொல்லவேண்டியிருக்கிறது. நேரெதிரேகூட ஹோர்ன் அடிக்காமல் ஒரு வாகனம் வந்தால் படக்கென்று இடித்துவிடுவார்கள்போலத் தோன்றியது. வீதியில் போகும்போது கண்களைப் பயன்படுத்தாது ஹோர்ன் சத்தங்களைப் பயன்படுத்தியே சூழவுள்ள வாகனங்களை ஆழ்மனது கிரகித்து வைக்கிறது. அதனாலேயே இங்கே எவரும் எங்கேயும் திரும்பியே பார்க்காமல் வாகனத்தைத் திருப்பமுடிகிறது. எவ்வளவு நெரிசல் என்றாலும், எவ்வளவு மயிரிழை நெருக்கத்தில் சுற்றிச்சுழன்றாலும், எத்தனை விதிகளையும் ஒழுங்குகளையும் மீறி ஓடினாலும், இவர்களால் முட்டாமல் இடிக்காமல் பயணிக்க முடிகிறது. சக பயணிகளுடனான இந்த அற்புதப் புரிந்துணர்வு ஆச்சரியம் கொடுக்கும் ஒன்று. கன்னடர்கள் செல்லிடப்பேசியில் பேசியபடியே வாகனம் ஓட்டுகின்ற அழகே தனி. அதுவும் மோட்டர்சைக்கிள்காரர்கள். அவர்கள் தம் செல்பேசியை காதருகே தலைக்கவசத்தினுள் செருகி வைத்தபடியே ஓட்டுகின்ற அதிசயத்தைக் கன்னடம் எங்கும் காணமுடியும். ஓடிக்கொண்டிருக்கும்போது வட்ஸப்பில் மெசேஜ் பார்ப்பவரையும் சர்வசாதாரணமாகக் காணலாம். சந்திகளில் எல்லோரும் சிக்னலுக்கு காத்திருக்கும்போது மறக்காமல் வாகனத்தின் எஞ்சினை நிறுத்துகிறார்கள். கண்ணாடியில் முகத்தை அழகு பார்க்கிறார்கள். செல்லிடப்பேசியை நோண்டுகிறார்கள். சிக்னல் பச்சையாகும்போது மறக்காமல் காறித் துப்பிவிட்டு அவர்களும் புறப்படுகிறார்கள். முதல்நாள் சற்றே முகம் சுழிக்கவைத்தை கன்னடத்து வாகன நெரிசலை மூன்று வாரங்களில் இப்போது ரசிக்க ஆரம்பித்திருந்தேன். நிறையக் கதைகளையும் ஜீவனையும் சுமந்து திரிகின்ற நெரிசல் இது. ஒரு ஒழுங்குக்குள் அடங்காத, நட்டுப்பிடிக்கும் மனிதர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தின் திருமணக் களேபரம் போன்றது இந்த நெரிசல். 

இன்னொரு பெருமழைக்காக கருமுகில்கள் திரள ஆரம்பித்திருந்தன. திரும்பி புகையிரத நிலையத்துக்கே போய்விடலாமா என்று யோசித்தேன். வீதியோரத்தில் ஒரு சினிமா சுவரொட்டியைக் காணக் கிடைத்தது. திருமணக்காட்சி ஒன்று. காதல் படமாக இருக்கவேண்டும். ஹீரோவின் மூஞ்சி கொஞ்சம் வெள்ளைப்பணியாரம்போல இருந்தது. ஆனால் ஹீரோயினைக் கண்டதும் அந்தப்படத்தைப் பார்த்தே தீருவது என்று முடிவெடுத்தேன். ஆறு மணிக்கு ஒரு ஷோ என்று போட்டிருந்தது. எட்டரைக்கு படம் முடிந்தாலும் ஒன்பதுக்கு ஸ்டேஷனுக்குச் சென்றுவிடலாம். ஒரு முச்சக்கரவண்டியை மறித்து போஸ்டரில் இருக்கும் கன்னடப்படத்துக்கு செல்லவேண்டும் என்று சொன்னேன். 

“அது தெலுகு சார்” 

“ஓ, இட்ஸ் ஓகே, கோகோனா” 

“நமக்கு தமிழா சார்? நன்ன ஊரு ஊட்டி”, கன்னடர்கள் பொதுவாகவே பல மொழிகள் பேசுவார்கள். எல்லாமே கன்னடத்திலேயே இருக்கும். 

“நானு ஶ்ரீலங்கா” 

“ஆ ஶ்ரீலங்காலடலி தமிழியன்ஸ் இதரா?” 

திரையரங்கு பழசாக இருந்தது. அந்தக்காலத்து மனோகரா, வின்சர் தியேட்டர்கள்போல. ஐந்நூறு அறுநூறு இருக்கைகள் இருந்த அரங்கில் இருபதுபேர்களே அமர்ந்திருந்தனர். ஐந்தாறு வயோதிபர்கள். ஒரு தந்தையும் குறுக்கே மறுக்கே ஓடித்திரியும் சிறுவனும். ஒரு பக்பாக் இளைஞர், சுற்றுலாப்பயணியாக இருக்கலாம். மாமா மாமியுடன் ஒரு இளங்குடும்பம் வந்திருந்தது. அண்மையில் திருமணம் ஆகியிருக்கவேண்டும். நகைகள், பட்டுசேலை, மடிப்புக்கலையாத புதுச்சேர்ட்டு என்று. பல்கனி மொத்தமாகக் காலியாகியிருந்தது. சாதாரண டிக்கட் நூறு ரூபாய். கலரி டிக்கட்டும் இருந்தது. அங்கும் ஒரு புதுத் தம்பதி அமர்ந்திருந்தது. அனைவரும் கூட வந்தவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல கச்சான் பொரியலையோ உருளைக்கிழங்கு சிப்சுகளையோ கொறித்துக்கொண்டிருந்தார்கள். கணவன்மார்கள் மனைவியரின் தோள்கள்மேல் கைபோட்டிருந்தார்கள். ‘ஶ்ரீனிவாச கல்யாணம்’, அதுதான் அந்தத் திரைப்படத்தின் பெயர். இந்துத் திருமணங்களின் சம்பிரதாயங்களின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படம். பயங்கர மோசமான இந்தப்படத்தினைக் கொஞ்சமேனும் பார்க்கவைத்தது ஹீரோயினின் அழகுதான். கூகிளில் தேடிப்பார்த்தேன். பெயர் ராசி கண்ணா. தமிழிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்போல. நாங்கள் ரோஜா மதுபாலாவுக்கு லொள்ளுவிட்டகாலத்தில் பிறந்திருக்கிறார். 

திரையரங்கை விட்டு வெளியே வருகையில் மழை தொடர்ந்து தூறிக்கொண்டிருந்தது. ரயிலுக்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. பதினைந்து நிமிட நடைதான். நடக்க ஆரம்பித்தேன். போகும்வழியில் ஒரு சந்தியில் பெரியதொரு புரந்தரதாசர் சிலை இருந்தது. புரந்தரதாசர் கருநாடக இசையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். விஜயநகரப்பேரரசின் எழுச்சிக்காலத்தில் அதன் தலைநகர் ஹம்பியில் அவர் வாழ்ந்துவந்ததற்கான சான்றுகளை இன்னமும் காணலாம். அங்கிருந்துதான் அவர் தனது புகழ்பெற்ற உருப்படிகளை உருவாக்கியிருக்கிறார். நமக்கெல்லாம் தெரிந்த பாடலான ‘பாக்யாட லக்ஸ்மி பாரம்மா’வை எழுதியதும் அவர்தான். ஹம்பியிலோ அல்லது ஹோஸ்பெட்டிலோ அலைந்து திரிகையில் புரந்தரதாசர் பாடல்களை இலகுவில் மிஸ் பண்ணிவிடமுடியாது. உணவகங்களில், மடங்களில், கோயில்களில், மண்டபங்களில் என்று இந்தப்பாடல்கள் சதா ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒன்று எம்.எஸ் பாடுவார். அல்லது பீம்சென் ஜோஷி. சிதைவடைந்த விஜயநகரப் பேரரசின் எச்சங்களில் இன்னமும் செழிப்புடன் திளைப்பது இந்த கருநாடக சங்கீதமும் பரதநாட்டியமும்தான் என்று என்னுடைய வழிகாட்டி சொல்லியிருந்தார். அதுபற்றி உள்ளூர்வாசிகளுக்கு ஒரு கருவமும் இருக்கிறது. அதனால்தான் வாகனங்களின் ஹோர்ன் சத்தங்களும் தள்ளுவண்டிகளின் பீபீ ஒலிகளும் மனிதக் கத்தல்களும் நிறைந்த ஹோஸ்பேட்டின் பிரதான் சந்தியில் பிருமாண்ட புரந்தரதாசர் சிலையை நிறுத்தியிருக்கிறார்கள்போல. அதனாலென்ன. எல்லாமே இசைதான். 

சிலையைச்சுற்றி இரண்டு படங்களைப்பிடித்துவிட்டு சந்தியைக்கடக்கலாம் என்று துணிந்தேன். சிக்னல் இல்லாத சந்தி. எனக்கு முன்னே சென்றவர் விறுவிறுவென்று வாகனங்களை விலக்கிக்கொண்டு பறந்துவிட்டார். எனக்குக் கொஞ்சம் தடுமாற்றம். என்னதான் இலங்கையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அங்கு வாகன நெரிசல் இத்தனை மோசமில்லை. இங்கு அப்படியல்ல. அகன்ற வீதிகள். ஒரு ஒழுங்குக்குள் கட்டுப்படாத வாகனங்கள். எந்த வாகனம் எந்தத்திசையிலிருந்து வருமென்பது அஷ்டாவதானியால்கூட அனுமானிக்கமுடியாத ஒரு விடயம். ஒருமாதிரி ஒரு பக்க வீதியைக் கடந்து நடுச்சந்திக்குப் போய்விட்டேன். அங்கிருந்து அடுத்த பக்கத்துக்குப் போவதற்கு வாகனங்கள் இடங்கொடுப்பதாகத் தெரியவில்லை. இப்போது என் நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது. நெரிசல் நிறைந்த சந்தியின் நட்ட நடுவே பொலீஸ்காரர்போல நான். நான்கு திசை வாகனங்களும் என்னை விலத்திச்சென்றுகோண்டிருந்தன. ஒரு காலடி எடுத்து வைத்தால் வாகனமொன்று கீசிக்கொண்டு செல்லும். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் ஒரு காளைமாடு என்னைக்கடந்து மிகவும் காசுவலாக அசைபோட்டபடி குறுக்கே நடந்துசென்றது. மோட்டர்சைக்கிள்களில் சென்றவர்கள் ஸ்லோப்பண்ணி அந்த மாட்டைத்தொட்டு வணங்கியபடியே போனார்கள். இதுதான் சமயம் என்று நான் அந்த மாட்டுக்குப்பின்னாலேயே சென்று சந்தியைக் கடந்துவிட்டேன். 

சந்தியைக்கடந்து இரண்டு அடி நடப்பதற்குள் ஸ்கூட்டர் ஒன்று அருகில் வந்து நின்றது. ஐம்பது வயது மதிக்கத்தக்க உருவம். சாறம். மேல் பட்டன் திறந்த அரைக்கை சட்டை. 

“ஸ்டேசன்கே ஹொகிதீரா சார்?” 
“ஓம் … ஆமா … ஹோடி…” 

“ஹிந்தே ஏரி சார்” 

ஏறி உட்கார்ந்துவிட்டேன். அவர் ஏதோ கன்னடத்தில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. தவிர, தயக்கமின்றி ஏறிக்குந்திவிட்டேனே ஒழிய ஏறியபின் சற்றுப்பயம் பிடித்துக்கொண்டது. வண்டி நேரே ரயில் நிலையத்துக்குச் செல்லாமல் எங்கேனும் முட்டுச்சந்துக்குள் நுழைந்தால் என்ன செய்வது. பையில் எவ்வளவு பணம் இருக்கிறது. பாஸ்போர்ட் எந்தப்பக்கற்றில் இருக்கிறது? போன் போய்விட்டால் எப்படி மற்றவரைத் தொடர்புகொள்வது. இலக்கங்களுக்கு எங்கு போவது? யாரிடம் பணம் கேட்கமுடியும்? சிக்கல் வந்தால் முரண்டு பிடிக்கவேண்டுமா? ஓடினால் தப்பலாமா? இந்த மனிதரைப்பார்த்தால் அப்படித் தவறாக எதுவும் தோற்றவில்லையே? நம்பலாமா? 

வண்டி ரயில் நிலையத்துக்கு முன்னே நின்றது. இறங்கினேன். என்மீது கோபம் கோபமாக வந்தது. ஏன் மனிதர்களை எப்போதும் மனம் தப்பாகவே எடை போடுகிறது? வாகன நெரிசலில் தடுமாறும் நடை பயணிக்கு லிப்ட் கொடுக்கும் இயல்பு மனிதர்கள். நான் எப்போதாவது ஒரு வீதியோரப்பயணிக்கு லிப்ட் கொடுத்திருக்கிறேனா என்று யோசித்துப்பார்த்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது செய்திருக்கலாம். இப்போதெல்லாம் அது தோற்றுவதேயில்லை என்பதே உண்மை. இந்த வகை மனிதர்கள் அவ்வப்போது வந்து நம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரென்று அறியாத, பெயர் ஊர் தெரியாத செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றி அவர்களைப் பழக்கப்படுத்தும் குட்டி இளவரசர்கள் இன்னமும் இவ்வுலகத்தில் வாழ்கிறார்கள் என்று நம்பிக்கையூட்டவேண்டியிருக்கிறது. இப்படியான குட்டி இளவரசர்களை என்னுடைய கன்னடப் பயணம் முழுதும் சந்தித்துக்கொண்டேயிருந்தேன். இவ்வகை மனிதர்களே பயணங்களை அழகாக்குபவர்கள். 

இந்த ஸ்கூட்டர் மனிதரின் பெயரை அறிந்து, முடியுமானால் கூடநின்று ஒரு புகைப்படமும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்தேன். 

“தாங்யூ சோ மச் … யுவர் குட் …” 

“ஓகே சார் … பார்தினி .. பாய்.” 

போய்விட்டார்.

000

Comments

  1. அதே கிணத்தடி..... கிணத்தடியில் நின்று பார்த்தால் நேராக தெரியம் குசினி ஜன்னல் ..... அதே கிணத்தடி அரை நெல்லி மரம் ....... நீங்கள் மணல்தரை லேனால் போய் இருக்கிறீர்கள் போல அல்லது எல்லா ஊர் வீடும் அப்படி தானோ ?
    கதை என்னும் வாசித்து முடிக்கவில்லை . ஆறுதலாக வருகிறேன், ரயிலால் இறங்க வேண்டும்

    ReplyDelete
  2. ஊரில் எவனாவது நெல்லி மரத்துக்கு மட்டுமல்ல கறிவேப்பிலை ,முருங்கை ,பப்பாளி மரத்துக்கெல்லாம் தண்ணி விட்டதா சரித்திரம் இல்ல. யாரோ ஒரு நாதாரி பொம்பிளை பிள்ளைஇருக்கும் வீட்டு கிணத்தடியில் பழ மரம் இருக்க கூடாது என்று சொன்னதால பப்பாளி பழம் இனிப்பா புளிப்பா என்று காக்காவுக்கும் குயிலுக்கும் தான் தெரியும் .
    இங்கு ......ஊரில் அந்தூரியும் வளர்த்த மாதிரி இதுகளை வளர்த்தால் ஒரு பூ காய் இல்லாமல் பம்மிக்கொண்டு தண்ணி காட்டுதுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .