வணக்கம் ஜேகே.
வெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை(?)யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.இரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது?' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது?
<<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்தன. அப்பட்டமான உண்மைதான் .
'எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே' என்று ஆரம்பித்து அன்றிலிருந்து இன்றுவரை ...கடந்து வந்த, வருகின்ற பாதைகள்,சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள், தந்திரங்களும் நாடகங்களும் நிறைந்த அரசியல், குழுக்கள் என்பவற்றின் நகர்வுகள் என்று, இரண்டு பகுதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதிவரை பிட்டுப் பிட்டு வைத்ததாகவே உணர்ந்தேன்.எப்போதுமே உங்கள் ஆக்கங்களை வாசிக்கையில் நாம் பாவித்த , இன்று பாவிக்காத சொற்கள், சின்னதும் பெரிதுமான நிகழ்வுகள் அப்படியே அங்கே இழுத்துச் சென்றுவிடும் . அப்படியே கொஞ்ச நேரம் ஊருக்குச் சென்றுவந்த உணர்வு!இலைமறைகாயாக நச்சு நச்சென்று ஏகப்பட்ட குறியீடுகள்! அம்மாடியோவ்!சரியாகக் கணிப்பவர்களால் நிச்சயம் வியாக்காது இருக்க முடியாது .எத்தனையோ வருடங்கள் நடந்தேறிய நாடகங்களை... பச்! விளையாட்டுக்களை இப்படியும் கொடுக்க முடியுமா ?
இறுதிப் பாகத்தில் கடைசியில் நிறைவுறும் இடத்தில் ...<<<<எவ்வளவு சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்த ஆட்டம் அது. எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல். எப்போது இந்த சுதா அக்கா வந்து சேர்ந்தாவோ அப்போதே தரித்திரமும் கூட வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. ச்சைக்.தேவநேசன் தூரத்தில் யாரோடோ கதைத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கையில் பொது நிறத்திலே ஒரு சீனக் குழந்தை எல்லோரையும் விழுங்கிவிடுவதுபோலவே பார்த்தது. >>>>.இந்த வரிகளை வாசிக்கையில் மனதுள் கலக்கம் !
என்ன செய்யலாம்? பெருமூச்சு /அல்லது ஒரு அபத்தமான சிரிப்பு... இதுதான் நம்மால் முடிந்தது . ச்சைக்!
நேரத்துக்குத் தக்க மாதிரி, சமயத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும், பிடி கொஞ்சம் கிடைத்தாலே சுற்றிவளைத்துக் கைக்குள் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் தந்திரபுத்தியும் உள்ளவர்களாலேயே மூன்று என்ன இன்னும் அதிகமாகவே பருக்க முடியும் போங்க.'என்னவோ போங்கப்பா நல்லா இருந்தா சரிதான்...பெயரில்லா ஒழுங்கைகள் எந்தப் பெயரையாவது பெற்றுவிட்டுப் போகட்டும் ' என்று எண்ணினாலும், (கையாலாகாதவர்கள் என்று நெற்றியில் பட்டை போட்டுவிட்டு விழுந்தும் ஒட்டாத பாவனையில் இப்படிச் சொல்லித் தப்பிக்க வேண்டியதுதான் ) அந்த 'நல்லா' என்றதின் அர்த்தம் எதுவென்றுதான் புரிபடவே இல்லை. போகிற போக்கில் அர்த்தங்கள் கூட புதுசு புதுசாக முளைக்கலாம்.
உங்கள் வாசகியாக மேலும் மேலும் எதிர்பார்க்கிறேன்!
மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்,-- ரோசி கஜன்
வீடு. பாடசாலை. அலுவலகம், கழகம். கட்சி. நாடு எல்லாம் நிறைய வளர்மதிகளாலும் ஒன்று இரண்டு சுதா அக்காக்களாலும் தேவனேசனாலும் நிரம்பியே இருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் நாமே இன்னொருவராக மாறிக்கொண்டும் இருக்கிறம்.//தேவநேசனும் சட்டாம்பித்தனம் காட்டியவன்தான். ஆனால் அவன் ஆங்கிலத்தில் சொன்னதாலோ அல்லது அவன் காட்டிய விதமோ தெரியாது, அவன் சட்டம் போட்டபோது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் சுதா அக்கா சொல்லும்போது எரிச்சல் எரிச்சலாகவே வந்தது///Personal favourite lines.Thanks for the wonderful writing JK
-- வீணா
பேணிப்பந்து செம்மை. என்னாலை அதை வெறும் நனவிடைதோய்தலுக்காக எழுதியதாகப் பார்க்க ஏலேல்லை. Post colonialism என்டதை எப்பிடி பிள்ளையளுக்கு இலகுவா சொல்லலாம் எண்டு யோசிச்சிட்டே இருந்தன். சிங்கன் சிக்கிற்றான். ஆனா வாசகர்களின் பின்னூட்டம் நனவிடையை மட்டும் முதன்மைப்படுத்தியதோ என்று சந்தேகம். எனக்கு இது பின்காலனித்துவம். காலனியம் தன்னை அதிகாரத்தை எப்பிடி மையத்திலை குவிச்சதோ.. அது அப்பிடியே பெடியனிட்டையும்..அவன் போன பிறகு அக்காட்டையும்... யாப்புகள். திருத்தங்கள்.
-- தவச்செல்வி
000000000
கதையை வாசித்த, கருத்துகள் தெரிவித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தக்கதையின் முதற்பொறி ஒரு அலுவலக உரையாடலின்போதே உருவாகியது. அது மைத்திரி ரணிலைத் தூக்கிவிட்டு மகிந்தவை பிரதமராக நியமித்திருந்த காலம். இவர்களின் பின்னணியையும் நிகழ்வையும் விளக்கிவிட்டு ‘They all play a shitty game with no rules’ என்று அலுவலக நண்பனுக்கு சொல்லியிருந்தேன். பின்னர் அதையே முழுக்கதையாக எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதுதான் வெம்பிளி ஒஃப் ஜப்னா.
இலங்கை வரலாற்றில் காலனித்துவத்துக்கு முன்னிருந்த முடியாட்சி அரசியலை பிள்ளையார்பேணி ஆட்டம் பிரதிபண்ணுகிறது. பிராந்தியங்களுக்கு ஒரு சட்டம், துணைகண்ட ஆட்சிகளின் தாக்கம் (இந்தியன் ஆர்மியின் பேணிகள்), அதற்கே உரிய பிக்கல்கள் பிடுங்கல்கள் எல்லாமே பிள்ளையார்பேணி ஆட்டத்திலும் இருக்கும். சுதா அக்காவின் வருகைக்குப்பின்னர் பிள்ளையார்பேணியின் வரலாறு அவரை மையப்படுத்தியே நிகழ்த்தப்பட ஆரம்பிக்கிறது. விசயனின் வருகைக்குப் பின்னரான இலங்கை அரசியல்போல.
இச்சமயத்திலேயே தேவநேசன் ஒரு மீட்பரைப்போல இலங்கைக்கு வருகிறான். பலருக்கு ஆங்கிலேயர் மீட்பர்களைப்போலவே தெரிந்தார்கள். அல்லது அப்படி ஒரு தோற்றத்தை அவர்கள் நமக்குக் கொடுத்தார்கள். முடியாட்சிமுறை ஒழிக்கப்பட்டு சனநாயகம் இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வசதியான சனநாயகம். அவர்களுக்கு வசதியான விதிகள். அவர்கள் வெளியேறும்போது சனநாயகத்தின் பிடி பெரும்பான்மையினரின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. சுதா அக்காவின் கைகளின் புட்போல் அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல. பெரும்பான்மையினர் சனநாயகத்தை தமக்கேற்றபடி மாற்றியமைத்தார்கள். மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ஏனையவர்களும்கூட அதனைச் செய்தார்கள். இங்கே எல்லாமே நியாயமாக்கப்படுகிறது. விதியே இல்லாத ஒரு விளையாட்டில் விதிமீறல் எங்கனம்? சுதா அக்கா புட்போலை கைகளால் தூக்கியது கொஞ்சம் அதிகப்படியாகிவிட்டது என்று ஒரு கருத்து. அதுதானே நம் அரசியலில் அச்சொட்ட நிகழ்கிறது?
வரலாற்றைப்பொறுத்தவரையில் இது எல்லாமே கடற்கரை மணல்வெளியில் சிறு துகள்கள்தான். வரலாறு இவை எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்துபோகும். அலை இருக்கும்வரை துகல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு துகலும் நமக்கு நாம் வாழ்ந்த ஒழுங்கை.
இதுதான் வெம்பிளி ஒஃப் ஜப்னா.
ஆரம்பத்தில் என்னவோ அரசியல் கதையாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் கதை ஒரு கட்டத்தில் அரசியலையும் தாண்டி வீணா குறிப்பிட்டதுபோல எங்கேயும் நிகழக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. காரணம் அரசியல் என்பது ஆட்சிபீடங்களில் மாத்திரமன்றி அலுவலகங்களில், குடும்பங்களில், கழகங்களில், வைபவங்களில், விளையாட்டு அணிகளில் என்று எல்லா இடங்களிலுமே அணிகளிலுமே நிகழக்கூடிய ஒன்றுதான்.
பி.கு : சில வாசகர்கள் இக்கதையை ஒரு நனைவிடைதோயும் அனுபவப் பகிர்வாக ஆரம்பத்தில் அணுகியது உண்மைதான். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர்களும் கதைக்குள் இழுபட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அம்மா பாத்திரத்தை என் சொந்த அம்மா என்றும் அந்த ஒழுங்கையை நான் வாழ்ந்த ஒழுங்கை என்று நினைப்பதும்கூட புனைவு கொடுக்கும் மயக்கங்கள்தாம். வாசிப்பின் பரமபதத்தில் இது ஏணியாகவும் சமயத்தில் பாம்பாகவும் மாறிவிடுவதுண்டு. அவரவர் வாசிப்பு என்பது அவரவர் வெளி. இதில் சில்லுப்பட ஏதுமில்லை.
இன்னொரு எழுத்தோடு சந்திப்போம்.
அன்புடன்,
ஜேகே
Comments
Post a Comment