Skip to main content

நாய் கொண்டான்




இப்பக் கொஞ்சக் காலமாகவே எனக்கு நாய்களின்மீது ஒரு தனிப்பாசம் வர ஆரம்பித்துள்ளது. 

நான் நித்தமும் நாய்களோடு வேலை செய்யும் அனுபவத்தில் சொல்கிறேன். அதுகள் அவ்வளவுக்கு மோசமென்று சொல்வதற்கில்லை. நாய்கள் மீது ஒருவித கரிசனைகூட எனக்கு வந்துவிட்டது. அதுகளும் என்ன செய்யும் சொல்லுங்கள்? அதுகளாக வந்து என்னை எடுத்து வளர்த்துவிடு என்று கெஞ்சியதா? இல்லையே. நீ, மனுசன், உனக்கு ஒரு அடிமை வேணும் எண்டதுக்காக நாயை வாங்கி, நலமடிச்சு வளர்த்திட்டு, நாய்கள் கியூட் என்கிறாய், நாய் நன்றியுள்ள மிருகம் என்கிறாய், நாய் வளர்ப்பது நல்லது என்கிறாய், நாய் வீட்டில் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி சிறக்கும் என்றும் சொல்கிறாய். நாய்களோடு கூட வளர்ந்தால் இம்மியூனிட்டி அதிகமாகும் என்கிறாய். இப்படி எல்லாமே நாய்களால் உனக்கும் நீ பெத்ததுகளுக்கும் என்ன நன்மை என்று வரிசைப்படுத்துகிறாயே ஒழிய நாய்களைப்பற்றி நீ எப்பனேனும் யோசித்தாயா? கேட்டால் நாய்க்கும் என்னைப்பிடிக்கும் என்று சொல்கிறாய். கூப்பிட்டோன என்னட்ட ஓடிவரும் என்கிறாய். நாய்களுக்கு ஊருலகத்தில அப்பிடி என்னதான் பிரச்சனை? என்று திருப்பி என்னையே கேட்கிறாய். அப்படியே பிரச்சனைதான் என்றாலும் அதை நாய் சொல்லட்டுமே, நீ ஏன் கத்துறாய்? என்று என்னை மடக்கப்பார்க்கிறாய். நல்ல கதையால்லோ கிடக்கு. இப்பிடித்தான் என்னோடு படித்த விசிறிக்காரனும் ஒருநாள் என்னிடம் கேட்டான். 
“நீங்கள் தமிழர்களுக்கு உண்மையிலேயே என்னதான் பிரச்சனை? வெள்ளவத்தையில் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவில்லையா?” 
பக்கெண்டு ஏறிட்டது. எனக்குத் தண்ணியடிச்சாலும் ஏறாது. ஆனாத் தமிழனைப்பற்றி என்னவாவது சொன்னால் மட்டத்தேள் கடிச்சதுமாதி ஏறும். 
“நாயே, நீ ஒருநாள் உன்ர நாயை வீட்டில கட்டிவைக்காம அவுத்துவிடன். ஏன் பிடிச்சு வச்சிருக்கிற?” 
எக்கணம் தமிழனை நாய்க்கு ஒப்பிடுகிறனோ என்று ஒரு யோசனை வந்தது. ஆனாலும் சில தீர்வுகளை அடைவதற்கு சில தெளிவுபடுத்தல்களை விசிறிக்குச் செய்யவேண்டிய கடமை எனக்கு இருந்ததுபோலத் தோன்றியது. தமிழனை நாயாக்கியேனும் காரியம் ஆகி பலன் கிடைத்தால் போதும்தானே. நீ அதுகூடச் செய்யேலையே? 

அதுக்கு விசிறி சொன்னான். 
"இல்ல மச்சாங், நாயை அவுத்துவிட்டா, அதுக்கு என்ன செய்யிறது, எங்க போறது என்று தெரியாம அக்கம்பக்கத்து நாயளோட போய் அடிபட்டு கடிபட்டு விசர் பிடிச்சு வந்துசேரும். இல்லாட்டி லொறில மிதிபட்டுச் செத்துப்போயிடும். நாங்கள் நாயைக் கட்டிவைக்கிறது நாயிண்ட பாதுகாப்புக்குத்தான் மச்சாங்"
மெய்தான் மச்சாங். நீ இப்பிடித்தான் சொல்லுவாய் என்று எனக்குத் தெரியும். காட்டில சிவனே என்று வேட்டையாடித்திரிஞ்ச ஓநாயை குட்டியிலேயே எடுத்து வளர்த்து, உன்னுடைய வேட்டைக்கு அதிண்ட திறமையை பயன்படுத்திட்டு, பிறகு அதுக்கு ஏதோ பிச்சை போடுறதுபோல அந்த வேட்டையிலேயே கிடைக்கிற எலும்புத்துண்டை எடுத்துப்போட்டால், அதை அந்த நாய், வெக்கம், ரோசமில்லாம எடுத்துச் சூப்பிட்டு உனக்குப்பின்னால வாலை ஆட்டிக்கொண்டு திரிஞ்சு, அப்பப்ப அப்படி வாலாட்டாம உன் துடையில பங்கிறைச்சி அடிச்ச நாயளை நீ விசம் வச்சு கொண்டுபோட்டதில, மிச்ச நாயெல்லாம் அதைப்பார்த்துப் பயந்துபோய், சூப்பிக்கொண்டிருந்த எலும்பை அப்பிடியே போட்டிட்டு உண்ட காலை வந்து நக்கிக்கொண்டு கிடந்ததில, இப்ப ஐம்பதாயிரம் வருசத்துக்குப்பிறகு நீ சொல்லுறாய், நாயை அவுத்துவிட்டா அடிபட்டுச் செத்துப்போயிடுமாம். எனக்கு விடுறார் கதை. நாய்க்கதை. 

இருங்கடே. உலகத்தை டைனோசர் ஆட்டிக்கொண்டு திரிஞ்ச காலத்தில பால் குடுத்துக்கொண்டிருந்த எலியடா நீங்கள் எல்லாம். டைனோசரை வெளியில இருந்து வந்த கல்லு அடிச்சுக்கொண்டது உங்களுக்கு வாசியாயிட்டுது. இப்ப இது உங்கட காலம். ஆனாலும் அதிகம் ஆடாதையடா தம்பி. வேணுமெண்டால் அலுமாரிக்குப்பின்னால இருக்கிற நீக்கலுக்குள்ள பூந்துபாரு. பூரா குட்டி க்குட்டி முட்டையா கிடக்கும். பல்லி முட்டை தம்பி. 

000 

ஏனிந்த திடீர் நாய்ப்பாசம் எனக்கு வந்தது என்பது இப்போது உங்களுக்குக் கொஞ்சம் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். பேசிக்கலி இப்போதெல்லாம் நாய்களைப்பார்க்கும்போது எனக்கு என்னைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. 

ஒருநாள் அலுவலகத்தில் மிகச்சிக்கலான ஒரு பிரச்சனையை பெரிய விண்ணன்மாதிரித் தீர்த்துவிட்டு மேலதிகாரியிடம் போய்ச் சொன்னேன். அவர் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டு ‘யு ஆர் சச் எ லெஜண்ட்’ என்றார். எனக்கு உடனே அந்த ஆதிவாசி நாய்க்கு எறிந்த எலும்புத்துண்டுதான் ஞாபகம் வந்தது. மனேஜரிடம் இன்கிரிமென்ட் கேட்டு அடிபட்டவனை வேலையை விட்டுத் தூக்கியபோது அதே ஆதிவாசி கடிநாயை விசம் வைத்துக் கொன்றது வந்து மிரட்டுகிறது. அதன்பிறகு எத்தினை வருசம் ஆனாலும் பரவாயில்லை, சம்பள உயர்வே வேணாஞ்சாமி என்று நினைத்தபோது, எலும்புத்துண்டைப் போட்டுவிட்டு மனுசன் காலைப்போய் நக்கிய நாய்தான் ஞாபகம் வந்தது. நாய்களிலும்தான் எத்தனை வகை. கடுவன் நாய்கள் எல்லாம் மனேஜரின் பெண்டரைக்கூடத் தோய்க்கத் தயாராகிவிட்டிருந்தன. மனேஜர் என்ன சொன்னாலும் ‘பியூட்டிபுல்’, ‘கிரேட்’, ‘ஸோ மெதோடிக்கல்’ என்று வாலை ஆட்டின. நாய் வாலின் ஆட்டத்துக்குப்பின்னாலே இத்தனை மொழிக்கூறுகள் இருப்பதை இதுவரை நான் உணர்ந்ததேயில்லை. கடுவன் நாய்கள்தான் இப்படி என்றால், உந்தப் பெட்டை நாய்கள் எல்லாம் குண்டியைக் கிளப்பிக்கொண்டு அலுவலகம் முழுதும் சுற்றித் திரிந்தன. இங்கே திரிகின்ற நாய்கள் எல்லாமே நலமடிக்கப்பட்ட நாய்கள் என்பதால் நாய்களுக்கிடையே மீடூ மொமண்ட்ஸ் எதுவுமே நிகழ்வதில்லை. இன்னுஞ்சொல்லப்போனால் நலமடிக்கப்படாவிட்டாலும்கூட எதுவும் நிகழப்போவதுமில்லை. காரணம் இங்கே நாய்களிடம் எந்த அதிகாரமுமில்லை. அதிகாரம் முழுவதும் மொத்தமாக குடியிருந்தது மனிதரிடம். மனுசன் தடவினாலும் வாலாட்டவேணும். கொஞ்சினாலும் வாலாட்டவேணும். வாலைப்பிடிச்சாலும் விடாமல் வாலாட்டவேணும். உந்த வாழ்க்கை எதுக்கு உனக்கு என்று கேக்கேணும்போல இருக்கு. சும்மா அவன் தடவேக்க பேசாம இருந்திட்டு போனாப்பிறகு குலைச்சு என்ன பிரயோசனம். ஆனாலும் யோசித்துப்பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது. பிறந்ததுமுதல் மனிசரோட வளர்ப்புக்குள்ளேயே இருந்தாச்சு. ஒரு நல்லது கெட்டதுகூட மனுசர் சொல்லித்தான் நாய்க்குத்தெரிய வருகுது. மனுசர் கூட்டிப்போற இடத்தாலதான் நாயும் போகோணும். வீட்டுக்குள்ள கக்கா இருக்கக்கூடாது எண்டா கூடாது. சாப்பிட்டு கக்கக்கூடாது எண்டால் கக்கக்கூடாது. அவன் சொல்லிற டைமில படுக்கோணும். சொல்லிற டைமில எழும்போணும். அவன் போடுற சாப்பாட்டை கணக்காச் சாப்பிட்டிட்டு வாலைச் சுருட்டிக்கொண்டு கிடக்கோணும். அவன் சட்டை போட்டுவிட்டா சிரிக்கோணும். கழட்டினாலும் சிரிக்கோணும். என்ன ஒரு நாய்ப்பாடு தெரியுமா? உரிச்சா கம்பளி, அடிச்சா ஆட்டுக்கறி, கேவலம் உந்த செம்மறிக்குக்கூட தனக்குப் பிடிச்ச புல்லை நினைச்சநேரம் எவ்வளவு சாப்பிடவும் சுதந்திரம் இருக்கு. ஆனா இந்த நாய்க்கு இருக்கா? இல்லை. இதை நினைச்சுப்பார்த்ததிலதான் எனக்கு நாய்களின்மீது ஒரு கழிவிரக்கம் வரத்தொடங்கியது. அது என்ன பாவம் செஞ்சது எண்டு யோசிக்க யோசிக்க பாவமாக இருக்குது. அதனால்தான் நாய்களை இனிமேல்பட்டும் வையவே போவதில்லை என்று உறுதியும் பூண்டிருந்தேன். தவிர நாய்களின் உரிமைகளுக்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் போராடவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டேன். என்ன ஒன்று, இந்த நேரம்தான் சனியன், எனக்குக் கிடைக்குதேயில்லை. ஊருலகத்தில மத்தவனெல்லாம் வேலையில்லாம சும்மா இருக்கிறான். அவனுக்கு இந்த பொதுச்சிந்தனை வரமாட்டுது. நாள் முழுக்க பிசியா இருக்கிற எனக்கு எப்ப பார்த்தாலும் உலகத்தைப்பற்றிய சிந்தனை. ஒருத்தன் எவ்வளவு வேலையத்தான் செய்யமுடியும் சொல்லுங்கள்? 

000 

நாய்களிடம் தனிப்பாசம் என்று சொன்னேனில்லையா? அதிலும் குறிப்பாக பழைய நாய்களிடம் பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பழைய நாய் என்றால் வயசான நாய் என்ற அர்த்தத்தில் இல்லை. அலுவலகத்தில் சீனியர் நாயைத்தான் பழைய நாய் என்கிறேன். ஒரு நாய் புதிதாக எங்கள் அலுவலகத்துக்கு வந்தால் எல்லோரும் அந்த நாயையே சுற்றிச்சுற்றி வருவார்கள். தூக்கிக் கொஞ்சுவார்கள். சாப்பாடு போடுவார்கள். ஆனால் அப்போது பழைய நாய்கள் எல்லாம் கேப்பாரற்றுத் திரியும். அந்த நேரம் அவற்றிடம் போனால் எக்ஸ்ராவாக எமக்கு அவை வாலாட்டும். சாப்பாடு எல்லாம் போடத்தேவையில்லை. சும்மா ‘ஹாய் கியூட்டி’ என்றாலே போதும். ஆட்டிக்கொண்டு வந்துவிடும். அவற்றுக்கு அப்போது தேவை ஒரு அன்பான ஆதரவு. அது கிடைத்தால் அவை அதற்காக உயிரையே கொடுக்கத்தயாராகிவிடும். அதனாலேயே நான் அவற்றிடம் போவேன். புது நாய்களைக் கண்டுகொள்ளமாட்டேன். அதில் ஒரு அற்ப சந்தோசம். இதில் என்ன ஒரு பியூட்டி என்றால், என்னடா இது, புதிதாக நான் இஞ்ச வந்து நிக்கிறனே, இந்த நாய் என்னை விட்டிட்டு பழசப்போய்த் தடவிக்கொண்டு நிக்குதே என்று புதுநாய் குழம்பிடும். பிறகு அதுவும் எனக்குப்பின்னாலே வந்திடும். அதுகளிண்ட இந்த உளவியலை விளங்கிக்கொண்டுவிட்டால் நாய்களை ஆள்கொள்வது (or is it நாய்கொள்வது?) இலகுவானது. கொஞ்சம் அதிகாரமும் சேர்ந்துகொண்டால் சும்மா பின்னலாம். இதைத்தான் மனுசன் ஆண்டாண்டுகாலமாக செய்துவருகிறான். நீங்கள் கவனித்துப்பார்த்தால் தெரியும். சில மனுசரைப்பார்த்து எந்த நாயும் வாலை ஆட்டிக்கொண்டு நிக்கும். சிலரை அவர்கள் வளர்க்கும் நாயே கடித்துத் தொலைக்கும். நெக்ஸ்ட் டைம் வீதியோரம் நடந்துபோகையில் இரண்டு மூன்று நாய்கள் குலைத்துக்கொண்டிருந்தால் இந்த உளவியலை டெஸ்ட் பண்ணிப்பாருங்கள். பட் கடிவாங்கித் தொலைத்துவிடாதீர்கள். முக்கியமாக பட்டில். 

000 

சொன்னாப்போல இன்றைக்குப் புதிதாக ஒரு நாய் அலுவலகத்துக்கு வந்திருந்தது. 

நான் பொதுவாக காலையில் அலுவலகத்துக்குள் நுழையும்போது டேர்போதான் என்னை வரவேற்கும். டேர்போ ஒரு குட்டி நாய். இரவிலே பார்த்தால் சிலர் அதனை பொஸம் என்று நினைத்துவிடுவார்கள். அவ்வளவுக்கு ஒரு குட்டி. ஆனால் சின்னன் என்றாலும் சிங்கன் ஒரு பொன்னன். அவ்வளவு குட்டி நாய்க்கு எவ்வளவு குட்டியான மூளை இருக்கவேண்டும்? அந்தக் குட்டி மூளைக்குள்ளும் பயங்கரமான ஒரு ஞாபக சக்தி. 

எப்போதோ ஒரு நாள் அலுவலகத்துக்கு நான் புட்டும் ஆட்டிறைச்சிக்கறியும் கொண்டுபோயிருந்தேன். மதியம் அதனைச் சூடாக்கி சாப்பிடும்போது அலுவலக நாய்கள் அனைத்துமே என்னைச் சுற்றி சுற்றி வந்தன. சில தமது மூக்கால் கையையும் காலையும் சுரண்டும். சில என் கால்களை நெருடும். சிலது சின்னதாக ஹீனும். எல்லாமே ஒருசேர வாலை ஆட்டும். ஆனால் இந்த டேர்போ மாத்திரம் சனிக்கிழமை ஆடு அடித்து கறி வைக்கும்போது மூலையில் அழுது அரற்றியபடி பருப்புக்கறியைச் சாப்பிடும் புரட்டாசிச்சனி விரதக்காரன்போல எங்கோ ஒரு மூலையில் போய் ஒதுங்கி நின்றபடி என்னைக் கலங்கிய விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தது. அதற்குத் தெரியும், இந்தப் பெரு நாய்களின் கூட்டத்திடையே ‘He doesn’t stand a chance’. ஆனால் உங்களுக்குத் தெரியும்தானே. எனக்கு அப்படியான ஆட்களையே அதிகம் பிடிக்கும். மன்னிக்க. எனக்கு அப்படியான நாய்களையே அதிகம் பிடிக்கும். நாய்களுக்குள்ளேயே ஒரு நாய், நாய் படும் பாடு படவேண்டும் என்றால் அது எவ்வளவு கொடுமை என்று யோசித்துப்பாருங்கள். கொடிது கொடிதுவில் டொப் மோஸ்ட்டாக அதுதான் வரும். அதனாலேயே எலும்புத்துண்டுக்கு வாலாட்டிக்கொண்டு சுற்றிவர நிற்கும் நாய்களைவிட தூரத்தேபோய் ஒதுங்கி நிற்கும் நாய்களை எனக்கு அதிகம் பிடிக்கிறது. தே ஆர் ஸோ பிட்டி. நான் என் வாழ்க்கையில், எத்தனை நாய்கள் சுற்றி நின்றாலும் ஒரு இறைச்சித்துண்டையேனும் போட்டதில்லை. அதுவும் ஆட்டிறைச்சி. சான்ஸே இல்லை. யாராவது வைரக்கல் மோதிரத்தை வாங்கி தெருவில் போகிறதுக்குக் கொடுப்பானா? வெயிட். அப்படிக்கொடுத்த ஒரு அலுக்கோசும் இருக்கிறான். அவன் கதை .. வேணாம், மே பி நெக்ஸ்ட் டைம். 

ஆனாலும் இந்த நாய்களுக்கு எப்போதுமே என்னிலே ஒரு நம்பிக்கை. என்றாவது ஒரு நாள் ஒரு இறைச்சித்துண்டு, அல்லது எலும்புத்துண்டு, சரி வேணாம் ஒரு உருளைக்கிழங்கு, உள்ளி, வெங்காயம். அட்லீஸ்ட் ஒரு கறிவேப்பிலையாவது இவன் போடுவான் என்று அவை என்னை எப்போதும் நம்பிக்கொண்டே இருக்கின்றன. நம்புவதோடு மட்டுமில்லாமல் அவை தம்மை நம்பும் சக நாய்களையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் என்னிடம் வேகுமா என்ன? மசிரைக்கொடுத்தான். 

சின்ன வயதில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆப்டர் ஓல் ஒரு அஞ்சு வீடுதானே. துரியோதனன் ஏன் அவற்றைக்கொடுக்கமாட்டேன் என்று நட்டுக்கொண்டு நின்றான்? அவனிடம் இல்லாத சொத்தா பத்தா? அஞ்சு வீட்டைக் குடுத்துத்துலைச்சிருந்தால் அந்த தர்மசீலன் உதிட்டிரனும் வாங்கிட்டு அம்மிக்கொண்டு போயிருப்பான். அவனை எதிர்க்கத் துணிவில்லாத மத்த நாலும் சிவனே என்று திரவுபதியோட உட்கார்ந்து சோகி உருட்டி தாயம் விளையாடியிருக்கும். ஒரு இழப்பும் வந்திருக்காது. சாவித்திரிமாதிரி ஒரு பெஞ்சாதிவேற. என்ன குறை? எதுக்கு துரியோதனன் இப்படி ஒரு லூசுவேலை செய்தான்? எனக்கு விளங்கவே இல்லை. எல்லோரும் அதனை ஆணவம், பேராசை அது இது என்று விளக்கம் சொன்னார்கள். எதுவுமே நம்பிறமாதிரி இருக்கேல்ல. 

ஆனால் அண்டைக்கு இந்த நாய்கள் எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு நிக்கையில்தான் நான் துரியோதனனை முற்றாகப் புரிந்துகொண்டேன். ஆணவம் இல்லை. பேராசை மண்ணாங்கட்டி ஒன்றும் இல்லை. அது அதிகாரம். இந்த அதிகாரம் என்ற போதை இருக்கல்லோ, அதுதான் விசயமே. ஒருத்தன் கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருக்கையில் கேட்டபொருளைக்கொடுக்காமல் ஏய்ப்பதில் ஒருவித உச்சம் கிடைக்கிறது. அதுவும் அவனிண்ட பொருளையே அவன் திருப்பிக் கேட்கையில் கொடுக்காமல் பண்ணும் இம்சை இருக்கிறதே. தட் இஸ் த அல்டிமேட் எக்ஸ்டஸி. அம்மாடி. எப்பிடி இருக்கும் தெரியுமா? கொடுத்த காசை கடங்காரன் திருப்பிக்கேட்கையில். இரவல் கொடுத்த புத்தகத்தை சொந்தக்காரன் கேட்கையில். அவுஸ்திரேலிய ஆதிவாசி வெள்ளையிடம் உரிமை கேட்கையில். தானா சினாவிட்ட தீர்வு கேக்கையில். பக்தன் கடவுளிட்ட வரம் கேக்கையில். அதிலும் குடுக்கிறமாதிரி கொஞ்சம் சீன் போட்டு ஏய்ப்புக் காட்டுகையில் கிடைக்கும் மலர்ச்சி இருக்கிறதே. அப்பப்பப்பா. அப்பிடி தூக்கிப்போடும். நாலு நாய்க்கு முன்னால நிக்கிற எனக்கே இப்படி எண்டால். பஞ்சபாண்டவர். அதுவும் தூதனாக சாட்சாத் பரமாத்மாவே முன்னால் வந்து நிற்கையில் துரியோதனனுக்கு கிக்கு புங்குடுதீவு காண ஏறி நின்றதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

ஸோ அந்த நாய்கள் எல்லாம் என்னைச் சுற்றி நிக்கையில் நான் எலும்புத்துண்டைக் காட்டிச் சூப்பிக்கொண்டு நின்றேன். ஆனால் தூரத்தில் ஏங்கியபடி என்னையே இறைஞ்சிக்கொண்டிருந்த டேர்போவைப் பார்க்க எனக்கு அப்படியே கர்ணனைப் பார்ப்பதுபோலவே தெரிந்தது. என்ன நினைத்தேனோ தெரியாது, நல்ல கால் எலும்பு ஒன்றைச் சூப்பு சூப்பென்று சூப்பி உள்ளே இருந்த மச்சையை கருந்துளை இழுப்பதுபோல உறிஞ்சி எடுத்துவிட்டு மீதி எலும்பைக்கொண்டுபோய் டேர்போவிடம் கொடுத்தேன். அது சுத்தின சுத்தில அதிண்ட வாலில கம்பியைக் கொழுவியிருந்தா மெல்பேர்ன் முழுதுக்கும் மின்சாரம் குடுத்திருக்கலாம். அவ்வளவு வேகம். அவ்வளவு புளுகம் அண்ணருக்கு. ஆனால் பாவம், அதுக்கு என்னுடைய மனநிலை புரிந்திருக்க சாத்தியமில்லை. எனக்கு எலும்பை டேர்போவுக்குக் கொடுக்கவேண்டும் என்ற விருப்பமா, அல்லது சுற்றி நின்ற நாய்களுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்ற விருப்பமா என்று தெரியவில்லை. டேர்போவுக்குக் கொடுக்கவேண்டும்போல இருந்தது. கொடுத்தேன். ஆனால் அந்தோ பரிதாபம், டேர்போவுக்கு எலும்பு கொடுத்துவிட்டேன் என்ற கடுப்பில் ஏனைய நாய்கள் எல்லாம் அதனை விரட்டிக் கடிக்க ஆரம்பித்துவிட்டன. சிவனே என்று மூலையில் கிடந்த டேர்போ இப்போது அலுவலகம் முழுதும் விரட்டி விரட்டிக் கலைபட ஆரம்பிக்க, கக்கூசுக்குப் போயிருந்த டியோன் வந்துதான் அதனை மீட்டு வீட்டுக்கு அழைத்துபோகவேண்டியிருந்தது. டேர்போ வீட்டுக்குப்போனதும் ஏனைய நாய்களும் தத்தம் வேலையைப் பார்க்கப்போய்விட்டன. கடைசியில் அந்த எலும்புத்துண்டு யாரும் அண்டாமல் போட்ட இடத்திலேயே கிடந்தது. நான் அதை எடுத்து ரபிஷில் போட்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். நாய்களிடம் எனக்குப் பிடிக்காததே இதுதான். கிடைக்கும்வரைக்கும் எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு கிடக்குங்கள். தங்களுக்குள்ளே அடிபட்டு யாருக்குமே கிடைக்காவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அது உறுதியானதும் எலும்பை விட்டுவிட்டு தங்கட சோலியைப்பார்த்துக்கொண்டு திரியுங்கள். இப்பிடித்தான் எங்களோட டியூனில ஒண்டாப்படிச்ச கோகிலவாணிக்கும் நடந்தது. அவளிண்ட கதை …வேணாம், மே பி நெக்ஸ்ட் டைம். 

அந்தச் சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து டேர்போ என்மீது பிரியமாக இருக்க ஆரம்பித்தது. அன்றைக்கு என்னால் அதற்கு எந்த இலாபமும் கிடைக்கவில்லை. எலும்பும் இல்லை. தவிர நாய்கள்வேறு அதனை விரட்டி விரட்டி கடிக்க ஆரம்பித்ததில் அது அலுவலகத்தை விட்டே ஓடிப்போகவேண்டி வந்தது. ஆனாலும் இதனை பிரித்து உணரும் மூளை அதற்கு இல்லை. புவர் திங். 

அதற்குப்பிறகு நான் அலுவலகத்துக்குள் நுழைந்தால் அது என்னைப் பார்த்துக் குலைத்து வரவேற்று என் இருக்கை வரைக்கும் கொண்டுவந்து விடும். அலுவலகத்தை விட்டு அது வெளியேறும்போது வந்து என்னிடம் ஒரு ‘தடவு’ வாங்கிவிட்டே வீட்ட போகும். இடையிடையே நான் மீட்டிங் போனால், பாத்ரூம் போனால், கிச்சின் போனால், டேபிள் டெனிஸ் விளையாடப்போனால், ‘பவர் நப்’ எடுக்க ஸ்லீப்பிங் பொட்டுக்குள் போனால், எல்லாவிடமும் அதுவும் என்னோடு கூடவே வரும். காவல். வெறுங் காவல். தளபதில பத்மாவுக்கு சூரியாபோல. இத்தனைக்கும் அந்த எலும்புத்துண்டுதான் நான் அதற்குப்போட்ட ஒரே ஒரு தீனி. அதைக்கூட டேர்போவால் ஒரு வாய் வைக்க முடியவில்லை. ஆனால் இட்ஸ் நொட் எபவுட் எலும்புத்துண்டு யு நோ. யாருமே தன்னைக் கவனியாமல் ஒதுக்கி வைக்கும்போது ஒருத்தர் வந்து நம்மை இனங்கண்டு அங்கீகரிக்கும் உணர்வு இருக்கல்லவானன்? 

அது நாய்களுக்கு நம்மைவிட அதிகம். 

000 

இன்றைக்கும் நான் அலுவலகத்துக்குள் நுழையும்போது டேர்போ என்னை வரவேற்றது. 

வழமையான வரவேற்பைவிட இன்றைக்கு சீன் கொஞ்சம் ஓவராக இருந்தது. குலைத்தது. வாலை ஆட்டியது. என்னைச் சுற்றிச் சுற்றி வந்து பச்சை சாத்தியது. குப்புறப்பிரண்டு நாலு கால்களாலும் வானத்தில் நீச்சலடித்தது. சீன் என்றால் சீன். நினைச்சுப்பார்க்க இயலாத சீன். ஆச்சரியத்துடன் ‘யு லுக் சோ எக்சைட்டட், வட் ஹப்பிண்ட் டேர்போ?’ என்றேன். உடனே அது என்னுடைய டெனிமைக் கடித்துத் தொங்கியது. நான் வந்து மேசையில் மக்புக்கைத் திறந்து, சார்ஜர் போட்டுவிட்டு, கோப்பி மெசினை நோக்கி நடந்தேன். அதுவும் கூடவே வந்தது. பொதுவாக இரண்டடி தள்ளியே நடக்கும் டேர்போ இன்றைக்கு மாத்திரம் கால்களுக்குள்ளேயே இடறியது. 
‘பக்கிங் ஹெல், வட் ஹாப்பிண்ட் மேன்?’ 
அப்போதுதான் பெருத்த குரைப்போடு ஒரு நாய் என்னை நோக்கி ஓடி வந்தது. அதுதான் அந்தப் புது நாய். அதைப்பார்த்தால் எங்கள் ஊர் நாய்களின் சைசில் இருந்தது. ஆனால் வெள்ளை. ஐ மீன், சுத்தமான வெள்ளைக்கார வெள்ளை. அதன் உடலெல்லாம் முடியை வழித்து வைத்திருந்தார்கள். பார்க்க அன்று பிறந்த எலிக்குஞ்சின் தோல்போல இருந்தது. தலையில் மாத்திரம் மயிரை விட்டுவைத்திருந்தார்கள். தலை உச்சியில் சின்னதாக அலிஸ்பாண்ட் போடப்பட்டிருந்தது. வாக் வாக் என்று தாராபோல குரைத்தது சனியன். நாய்களின்மீது அண்மைக்காலமாக வந்திருந்த பாசத்தை இந்த நாய் ஒரே நாளில் காலி செய்துவிடும்போலத் தோன்றியது. யார் இந்த அலுக்கோசைக் கூட்டிவந்தார்கள் என்று பார்த்தேன். 

கெலி வந்தாள். கெலி புதிதாக வந்திணைந்த ரசியாக்காரி. ரசியாக்காரிகளை எப்போதுமே இன்கொக்னிட்டோவிலேயே பார்த்துப்பழகியதில் நேரில் பார்க்கும்போது விரல் நிலம் கிளறவேண்டியிருந்தது. நான் என்றில்லை. அலுவலகம் முழுதுமே இப்படி விரல் நிலம் கிளறப்பட்டதில் நெல்லுப்போட்டால் நாலே மாதத்தில் அறுப்புக்கூட செய்துவிடலாம். நிலைமை அப்படியிருந்தது. 

ஆனால் உங்களுக்குத் தெரியும்தானே, நாயோ, மனிசரோ, புதிதாக வந்து யாரும் சீன் போட்டால் நான் வேண்டுமென்றே கண்டுகொள்ள மாட்டேன். அதிலும் இந்தக் கெலி ஒரு எச். ஆர்காரி. பொதுவாகவே எனக்கும் எச்.ஆருக்கும் ஆவதில்லை. நான் மனதில் படுவதை நேரே பெயிண்ட் அடிக்காமல், பற்றையைச் சுற்றி அலையாமல் சொல்லும் ஒரு ஆள். அதனால் அடிக்கடி எச். ஆர் என்னிடம் வந்து ‘டோன் இட் டவுன்’ என்று சொல்லவேண்டியிருக்கும். உண்மையை உரத்துச்சொன்னால் உனக்கென்ன பிரச்சனை? 

சரி அதைவிட்டுவிட்டு நாய்களுக்கு வருவோம். 

இந்தப்புது நாய் என்னைப்பார்த்து குலைத்துக்கொண்டே இருந்தது. அதைப்பார்த்து டேர்போ குலைத்தது. புதுநாய் இப்போது இன்னமும் சத்தமாகக் குலைத்தது. அதுவும் அதிண்ட மயிரும். எனக்கு பத்திகொண்டு வந்தது. ஆள் கிடைக்காம பார்பர் குறுக்கால போன பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம் என்று நயினாதீவில் ஒரு பழமொழி உண்டு. எனக்கு இந்த நாயைப்பார்க்க அந்தப்பழமொழிதான் ஞாபகம் வந்திருந்தது. இதை எப்படியும் உந்த ரசியாவுக்கு சொல்லவேண்டும்போல வாய் துருதுருத்தது. ஆனால் நயினாதீவு பழமொழிகளை தமிழிலேயே மொழி பெயர்ப்பது கடினம், இதிலே ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எங்கே போவது? 

ஆனாலும் உந்த செலிட்டு நாயிண்ட தோற்றத்தைப்பற்றி ரசியாக்காரிக்குச் சொல்லியே தீரவேண்டும். உண்மையை உரக்கச் சொல்லும் தருணம் இது. குனிந்த அந்த நாயின் தலையைத் தடவினேன். 

"சோ கியூட் டோக் .. வட்ஸ் இட்ஸ் நேம்?" 
“கேட்” 

வில்லியம் எங்கே என்று கேட்க வாய் உன்னியது. 
“இஸ் இட் ஹி ஓர் ஷி?” 
கேட்டைப் பார்க்கையில் அதனை ஆணா பெண்ணா என்று மட்டுக்கட்ட முடியவில்லை. கேட் என்றில்லை, இங்கே எந்த நாய்களையும் அப்படி மட்டுக்கட்ட முடியாது. அதே நேரம் அஃறிணையில் அவற்றை அழைக்கவும் கூடாது. நாய் எதிக்ஸ். 
“ஓஹ் .. இட்ஸ் ஷி … ” 
“வாவ் … ஷி இஸ் சோ லவ்லி” 
பொய்தான் சொன்னேன். உண்மையை உரத்து உரைப்பேன் என்பதெல்லாம் சும்மா புச்சுபுச்சுதான். நமக்கு சிக்கல் இல்லாத தருணங்களில் சும்மா நான் உண்மையைத்தான் சொல்வேன் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பிட்டுகளை எடுத்து விடுவதுண்டு. அதனைப்பார்த்து அலுவலகத்திலும் நான் ஒரு சத்தியவான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார்கள். நான் உண்மை சொன்னதில் இதுவரை நான்கு பேரின் வேலை போய், எனக்கு இரண்டு தடவை சம்பள உயர்வும் கிடைத்திருக்கிறது. எனக்கு எந்த சிக்கலும் வந்ததில்லை. இதுதான் உண்மை. என்ன ஒன்று, ஒரு முறை நான் சத்தியவான் என்பதை ஒருத்தரின் மண்டையில் ஏற்றிவிட்டால், அவர் அதை மற்றவரிடம் சொல்லுவார். மற்றவர் அடுத்தவரிடம் சொல்லுவார். இவனிடம் கவனமாக இருங்கள், ‘ஹி இஸ் சச் அன் ஒனஸ்ட் கை’ என்று தமக்குள்ளே சட் பண்ணிக்கொள்வர். அதன்பிறகு நான் பொய்யே சொன்னாலும அது உண்மைதான். இந்த் சூட்சுமம் மட்டும் புரிந்துவிட்டால் உலகத்தில் பொய்யனாக இருப்பதைவிட உண்மைவானாக இருப்பது எவ்வளவு இலகு என்பது உங்களுக்குப் புரிந்துவிடும். 

நான் சொன்னதை கெல்லி அப்படியே நம்பிவிட்டாள். எனக்கு உண்மையிலேயே கேட்டைப் பிடித்துக்கொண்டுவிட்டது என்று அவள் எண்ணியிருக்கவேண்டும். இந்த நாய் ஓனர்களிடன் சின்னதாக அவர்களது நாயைப்பற்றி விசாரித்துவிட்டால் போதும். அவ்வளவுதான். ஜெனரேட்டர் ஸ்டார்ட் ஆகிவிடும். 
‘ஷி இஸ் த மோஸ்ட் பிஹேவிங் டோக் தெரியுமா? சொன்னதை சொன்னபடியே செய்வாள். கெட்டிக்காரி’ 
நான் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எனக்குத் தெரிந்த எல்லா நாய்களுமே சொன்னதை சொன்னபடி செய்யுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் நாயைத் திருப்பிக்கொடுத்துவிடுவார்கள். என் ஆச்சரியம் அதன் மயிரில் இருந்தது. ஐ மீன் இல்லாத மயிரில். 
‘அடிக்கடி இதிண்ட மயிரை வழிப்பீர்களா?’ 
‘ம்ம்ம் .. மாதமொருமுறை … இஸிண்டிட் பியூட்டிபுல்?’ 
‘இட் இஸ் … ஸோ சொப்ட்’ 
சொல்லியபடி கேட்டின் முதுகை சாதுவாகத் தடவிப்பார்த்தேன். அலுக்கென்று ஜெலிக்குள் விரல் வைத்ததுபோல. டேர்போ திடீரென்று குலைத்தது. டேர்போவைப்பார்த்து கேட் குலைத்தது. 
‘கொயட் பிளீஸ்’ 
எட்வேர்ட் வந்தான். எட்வேர்ட் ஒரு பிலிப்பினோ. இங்கிதம் தெரியாதவன். கேட் அவனைப்பார்த்து மேலும் குலைத்தது. பிலிப்பினோ கடுப்பாகிவிட்டான். 
‘இதுவே மனிலா என்றால் இந்நேரம் நீ சட்டிக்குள்ள போயிருப்பாய்’ 
ஷிட். கெல்லி அழ ஆரம்பித்துவிட்டாள். வாழ்க்கையில் அலக்ஸ்சாந்திரா பிலிப்போனாவுக்குப்பிறகு ஒரு ரசியாக்காரி அழுவதை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கே ஒருமாதிரியாகப் போய்விட்டது. எனக்கென்ன என்றால், நான் நாயை என்னவும் சொல்வேன். ஆனால் எனக்கு முன்னால் நாயை வேறு யாராவது திட்டினால் கடுப்பாகிவிடுவேன். கோகிலவாணியின் புருசன்காரன்போல. 
‘எட்வேர்ட் மைண்ட் யுவர் வேர்ட்ஸ், ஒரு நாயோடு என்ன பேசவேண்டும் என்ற இங்கிதம்கூடத் தெரியவில்லையா உனக்கு?’ 
‘இட்ஸ் ட்ரூ மேன்’ 
சிரித்தபடியே எட்வேர்ட் ஆண்கள் டொய்லட்டுக்குள் விரைந்துவிட்டான். ஒரு அபொலஜிகூட கேட்கவில்லை. அவனுக்காக நான் ரசியாக்காரியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டி வந்தது. 
‘சொறி எபவுட் இட்’ 
‘இட்ஸ் ஓகே, அவன் சொன்னதுக்கு நீ என்ன செய்வாய், எல்லாருக்கும் நாய்கள் என்றால் பிடிக்குமா என்ன?’ 
அவள் கேட்டை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்துவிட்டு எனக்கும் ஒரு சீயூ சொல்லிவிட்டு பெண்கள் டொய்லட்டுக்குள் போய்விட்டாள். 

இப்போது கிச்சினில் நானும் டேர்போவும் கேட்டும்தான். 

நான் கோப்பிக்கொட்டைகளை அரைப்பதற்காக எடுத்து மெசினில் போட்டேன். டேர்போ என் காலடிக்குள்ளேயே சுருண்டு படுத்துவிட்டது. அங்காலே கேட் ரசியாக்காரி திரும்பும்வரைக்கும் அங்கேயே நிற்பதா அல்லது இடத்தைக் காலி செய்வதா என்று யோசித்துக்கொண்டிருந்தது. நான் பாலை எடுப்பதற்காக பிரிட்ஜைத் திறந்தேன். அப்போதுதான் கவனித்தேன், முந்தைய தினம் அலுவலகத்தில் வாங்கிய பிட்சா துண்டுகளின் மீதியை யாரோ வைக்கல் பட்டறை பிரிட்ஜுக்குள் வைத்திருந்தது. அதில் ஒன்று தந்தூரி பிட்ஸா. அதிலிருந்து ஒரு தந்தூரிச்சிக்கினை வெளியே எடுத்தேன். என் கையில் சிக்கினைக் கண்டதுமே டேர்போ பெருத்த ஆர்வத்துடன் துள்ளிக்குதித்தது. அது இப்போது பழைய நாய். தவிர இந்த நாய்க்கூட்டத்திலேயே நான் அதிகம் பாசம் வைத்த நாய். கேட் இன்றைக்கு வந்தது. அதனால் டேர்போவுக்கு நம்பிக்கை கண்களில் பளிச்சிட்டது. தந்தூரிச் சிக்கின் தனக்குத்தான் என்ற நம்பிக்கை. பார்க்கப் பாவமாக இருந்தது. ஏன் இதனை ஏய்ப்பான்? கொடுத்தால்தான் என்ன? வேறு நாய்களும் அதனை விரட்டுவதற்கு அருகிலில்லை. இந்த கேட் நாய்கூட விரட்டும் மனநிலையில் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது கொடுத்தால்தான் டேர்போவால் நிம்மதியாக அந்தச் சிக்கினை ஆற அமர சாப்பிட முடியும். எனக்கும் என் நாய்களின் மீதான பாசத்தைப் புடம் போட்டதுபோலவும் இருக்கும். ‘ஹியர் யு கோ டேர்போ’ என்று சொல்லியபடியே அதனிடம் சிக்கினைக் கொடுக்கப்போனேன். 

அந்தநேரம்பார்த்து பெண்கள் டொய்லட் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. என்ன நினைத்தேனோ தெரியாது. சனியன். 

தந்தூரியை அந்தக் கேட்டுக்கே கொடுத்துவிட்டேன். 

000 


Comments

  1. இதுக்கெல்லாம் அவசரப்பட்டு விமர்சனம் போடக்கூடாது போல இருக்கு , எங்கேயோ தாக்கப்பட்டிருக்கின்ரீர்கள் । இந்த பதிவை பல விதமாக ஜோசிக்க சொல்கிறது । இதுக்கெல்லாம் கிட்னி வேணும் ।

    ReplyDelete
  2. Old/Pioneers and Upcoming writers........
    Employer employee relationship........
    Old and New work colleague..........
    Readers.........

    ReplyDelete
  3. தன்யா2/20/2019 2:03 am

    வாசிக்கேக்கையே எனக்கும் வால் முளைக்கிறமாதிரி மனப்பிராந்தி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...