Skip to main content

நண்பர்கள் மற்றும் பிறர்



சென்றவாரம் எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய இலக்கம். 

“தம்பி நான் மகாலிங்கம் கதைக்கிறன். உங்கட அப்பாண்ட பழைய பிரண்ட். ஒஸ்ரேலியால வந்து நிக்கிறன் … அவரோட கதைக்கலாமா?”

அப்பாவிடம் போனைக் கொடுத்தேன். அப்பாவும் அந்த மகாலிங்கம் அங்கிளும் பேச ஆரம்பித்தார்கள். தியத்தலாவை, நொச்சியாகமை, குமரப்பெருமாள் அண்ணன், சேர்வெயிங் டிபார்ட்மெண்ட், ரெமி மார்டின், பெர்ணாண்டோ, எச்.என்.பெரேய்ரா, டோஹா, பாரெயின், தியோடலைட், டோடல் ஸ்டேசன், ஶ்ரீகரன், ஒரேட்டர் சுப்ரமணியம் என்று பொதுவாகவே இரண்டு நில அளவையாளர்கள் பேசிக்கொள்ளும்போது அடிபடும் சொற்கள் மீண்டும் கேட்டன. அவர்கள் சொல்லிக்கொண்ட பெயர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நில அளவை உபகரணங்களும் பாவனையில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். பேசிமுடியும்போது அப்பா மகாலிங்கம் அங்கிளுக்கு வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அவ்வளவுதான். இனி ஒரு வார இறுதியில் மகாலிங்கத்தாரின் மகனோ மகளோ காலையில் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுப்போனால் இரவு உணவு முடிந்து பத்துப் பதினொரு மணிவரைக்கும் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா அப்பவே புறுபுறுக்க ஆரம்பித்தார்.

கதைத்து முடித்து போனைத் திருப்பித்தரும்போது அப்பா சொன்னார்.

‘ஆரோ மகாலிங்கமாம் … எனக்கு ரெண்டு வருசம் ஜூனியர்போலக்கிடக்கு … ரெண்டுபேரும் நொச்சியாகமல ஒண்டா வேலை செய்திருக்கிறம் … ஆனா முகம் மட்டும் ஞாபகத்துக்கு வருகுதில்லை’

‘பெரிய கூட்டாளிமாதிரி கதைச்சுக்கொண்டிருந்தீங்கள்?’

‘மெய்தான், கதையைப்பார்த்தா கூட்டாளியாத்தான் இருந்திருக்கிறம் … நான் நல்லா மீன் குழம்பு வைப்பன் எண்டதைக்கூட சொல்லுறார் … ஆனா ஐம்பது வருசம் ஆனதில டக்கெண்டு வீரன் ஆரெண்டு ஞாபகம் வருகுதில்ல …’ 

‘குமரப்பெருமாள் மாமாவையும் நல்லாத்தெரியும்போல?’

‘குமரப்பெருமாள் மாமா ஆருக்குத்தான் பிரண்டில்ல?’

000

சில நாட்களாகவே பேஸ்புக் மெசெஞ்சர் அப்ளிகேசனில் அடிக்கடி நதியாவின் மிஸ்கோல்கள் வந்திருந்தன. 

நதியா என்பது பொம்பிளை கிடையாது. அது எம்மோடு படித்தவன் ஒருத்தனின் பட்டப்பெயர். அந்தக்காலத்தில் நதியாக்காப்பு, நதியாத்தோடு, நதியாச்சட்டை என்று பல இருந்தன. நதியா டான்ஸ் என்றும் ஒன்றிருந்தது. முழங்காலையும் முழங்கையையும் சற்று மடித்து இடமும் வலமுமாக சமச்சீராக மாறி மாறி ஆட்டினால் அது நதியா டான்ஸ். அதை எங்கள் நதியா மிக அற்புதமாகச் செய்வான். ஒருநாள் எங்கள் பாடசாலை ஆசிரியர் தின விழாவில் அவன் நதியா போலவே சட்டை போட்டு, பெரிய அகலமான பெல்டை இடுப்பில் அணிந்து அந்த நதியா டான்ஸை எல்லோருக்கும் ஆடிக்காட்டினான். அப்போதுகூட அது நதியா டான்ஸ் என்பது எங்களுக்குப் பிடிபடவில்லை. பொல்லர் வாத்தி அவனை அருகில் அழைத்து ‘நீர் நதியா டான்ஸை சுப்பரா ஆடினீர்’ என்று கன்னத்தில் கிள்ளியபின்னர்தான் எமக்கும் இரண்டு விசயங்கள் வெளித்தன. ஒன்று அவன் ஆடியது நதியா டான்ஸ் என்பது. இரண்டு, பொல்லர் வாத்தி கூப்பிட்டால் கிட்டே போகக்கூடாது என்பது

நேற்றும் நதியாவின் கோல் வந்திருந்தது. 

அவன் ஏன் எனக்கு எடுக்கிறான் என்று யோசனையாக இருந்தது. எங்காவது பட்ச் ரியூனியன் எதையாவது செய்து தொலைக்கப்போகிறார்களோ என்ற கவலை எழுந்தது. நதியாவோடு நான் கடைசியாக எப்போது பேசினேன் என்றும் ஞாபகமில்லை. அண்மைக்காலங்களில் பாடசாலை நினைவுகள் எல்லாம் ஒரு ஆற்றுப்பாலத்து ரயிலோசைபோல அவ்வப்போது பெரிதாக அடித்துவிட்டு ஓய்ந்துவிடுகின்றன. மற்றும்படி நண்பர்களின் பெயர்கள் பல மறக்க ஆரம்பித்துவிட்டன. சம்பவங்கள் பல உண்மையிலேயே நிகழ்ந்ததா அல்லது புனைவா என்ற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. யார் யாரோ எப்போதோ சொன்னவையெல்லாவற்றையும் நம் சொந்த அனுபவங்களாகவே வரிக்க ஆரம்பித்துவிடுகிறொமோ என்ற குழப்பம் வருகிறது. உதாரணத்துக்கு தவமணிதாசன் என்று யாழ் இந்துக்கல்லூரியில் ஒரு ஆசிரியர் இருந்தார். டிசிப்பிளின் வாத்தி. அந்தாள் அடித்தால் அறளை பெயரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அந்தத் தவமணிதாசனை நான் வாழ்நாளில் நேரில் கண்டதில்லை. ஆனால் அவருக்கு ஒரு முகம்கொடுத்து அவர் எப்படி எவ்வளவு ஆக்ரோசமாக மாணவர்களை அடிப்பார் என்று எனக்குள் ஒரு  நினைவுப்படிமம் இருக்கிறது. தவமணிதாசன் வாத்தியைப்பற்றி ஒரு நாள்பூராவும் பேசுவதற்கு என்னிடம் அனுபவங்கள் இருக்கின்றன. அதேபோல நம் அனுபவங்கள்கூட காலப்போக்கில் புனைவாகிவிடுகின்றன. ஆனால் மூளை அவற்றைப்புனைவு என்று நம்ப மறுக்கிறது. நதியா பற்றிய நினைவுகளும் அந்த குழப்பத்தோடே எனக்குத் தெரிகின்றன. நதியாவோடு ஏ.எல் கடைசி நாள் கெமிஸ்ரி பரீட்சைக்குப்பின்னர் பேசியதாக ஒரு ஞாபகம். நாம் எல்லோரும் அன்று மாலை தாவடிச்சந்திக்கருகிலிருந்த மினி சினிமாவில் கூசிழிவுப் படம் பார்க்கச்சென்றிருந்தது சன்னமாக ஞாபகம் வருகிறது. மலையாள மொழிபெயர்ப்புப்படம் அது. சீன் ஞாபகம் இருக்கிறது. கதை ஞாபகமில்லை. படம் முடிந்ததும் கொக்குவில் சந்தியடியில் ஒரு பிளேன்ரீ குடித்ததும் ஞாபகம் வருகிறது. அதற்குப்பிறகும் பலதடவை நான் நதியாவைச் சந்தித்திருக்கவேண்டும். ஆனால் எதுவுமே ஞாபகம் இல்லை. 

நானே அழைப்பை எடுத்தேன். 

"மச்சான் நதியா சொல்லு … எப்பிடி இருக்கிற?" 

“ஜேகே … எனக்கொரு பிரச்சனைடா” 

எங்கோ இடித்தது. பாடசாலை நண்பர்கள் எவரும் என்னை ஜேகே என்று அழைக்கமாட்டார்கள். ஜேகே சம்பவம் மொறட்டுவ பல்கலையில் இடம்பெற்ற ஒன்று. அதற்குமுதல் நான் ஜெயக்குமரன்தான். வகுப்பிலே இன்னொரு ஜெயக்குமரனும் இருந்ததால் என்னை சானா ஜெயக்குமரன் என்று டாப்பு இனிஷலோடுதான் பாடசாலை நண்பர்கள் கூப்பிடுவார்கள். 

“என்ன சொல்லு?” 

“மச்சான் ஊரில வந்து நிக்கிறன் … கையில காசு இல்ல … மாசா மாசம் ஒரு அம்பதாயிரம் அனுப்பினியென்றால் மெத்தப்பெரிய உபகாரமா இருக்கும்” 

எனக்கு டிக் என்றது. இவ்வளவு ஜஸ்ட் லைக் தட்டாக, கண்டீனில் ரோல்ஸ் துண்டு கேட்பதுபோல, இருபது வருடங்கள் கழித்து முதற்தடவை பேசும்போது அவன் இப்படிக்கேட்கையில் தடுமாறிவிட்டேன். இவன் முதலில் அதே நதியாதானா என்ற சந்தேகமும் வந்துவிட்டது. சந்தேகத்தை நிவர்த்தி செய்யக் கொஞ்சம் குடைந்து பார்க்கலாம்தான். ஆனால் அவன் உண்மையிலேயே நதியாதான் என்று உறுதிப்படுத்தினாலும்கூட நான் என்ன செய்வேன் என்று யோசித்தேன். இப்போது எனக்கு மண்டை விறைக்க ஆரம்பித்தது. நைஜீரியாக்காரன்கூட விளக்கம் சொல்லித்தான் காசு கேட்டு ஈமெயில் அனுப்புவான். ஆனால் இந்த நதியா, ஏன் காசு வேண்டும், ஏன் இப்படி ஒரு நிலை வந்தது என்ற எந்த விளக்கத்தையும் சொல்லவே இல்லை. “யோசிச்சிட்டுச் சொல்றன்” என்றுவிட்டு அழைப்பைக் கட் பண்ணினேன். 

பலர் பல இடங்களில் என்னை இப்படிச் சங்கடங்களில் மாட்டிவிடுவதுண்டு. அவுஸ்திரேலியாவில் இருப்பதில் இருக்கும் சில சிக்கல்களில் இது ஒன்று. இங்கு பல அமைப்புகளும் தனி மனிதர்களும் இவ்வாறான நிதி உதவிகளைக் கோரிக்கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் பின்னாலே தகுந்த காரணங்களும் காரியங்களும் நிச்சயம் இருக்கும். யாழ்ப்பாணத்தில் நூறு பிரபல பாடசாலைகள் இருக்குமென்றால், அந்த நூறுக்கும் ஒரு நூற்றியிருபது(போட்டி சங்கங்களையும் சேர்த்து) பழைய மாணவர் சங்கங்கள் மெல்பேர்னில் இருக்கும். அந்த நூற்றியிருபது சங்கங்களும் பாடசாலை அபிவிருத்திக்கு என கலை நிகழ்ச்சிகள் வைத்து இந்தியாவிலிருந்து ஆட்களை கூட்டிவரும். இது ஒரு பக்கம் என்றால், ஊர் அபிவிருத்திச் சங்கங்கள், துறைசார் அபிவிருத்தி சங்கங்கள் என இன்னும்பல. ஒரே ஆட்கள்தான் எல்லா அமைப்புகளிலும் வெவ்வேறு முகமூடிகளில் திரிவார்கள். எனக்குத்தெரிந்து ஒரே நபர் மூன்று பழைய மாணவர் சங்கக் கொமிட்டிகளில் ஒரே சமயத்தில் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எனக்கு விசர் பிடித்துவிட்டது. நாம் நமக்குத் தோதான, சரியென்று நினைக்கும் விடயங்களுக்கு மாத்திரமே பணம் கொடுக்கமுடியும். ஆனால் கொடுக்காமல்போகும் சந்தர்ப்பங்களில் அவர்கள் எம்மை ஒருவித நக்கலோடும் எள்ளலோடும் அணுகுவார்கள். உதவிசெய்ய விரும்பாத கஞ்சன் என்பார்கள். கொடுப்பது குறைவாக இருந்தாலும் நக்கல் பண்ணுவார்கள். இன்னார் இவ்வளவு கொடுத்தார் என்றுதான் ஆரம்பிப்பார்கள். தவிர நம்மீது அவர்களுக்கு ஒருவித எதிரி மனப்பாங்கு வந்துவிடும். தான் கேட்டும் இவன் கொடுக்கவில்லையே என்று. நதியா கேட்ட மாசா மாசம் ஐம்பதாயிரம் என்பது அவுஸ்திரேலிய டொலரில் நானூறு டொலர்கள்வரை வரும். மாசா மாசம் நானூறு டொலர்கள் என்பது எனக்குப் பெரிய காசு. 

நிலைமையை மனைவியிடம் சொன்னேன். 

“என்னடி செய்யிறது?” 

“அந்தாளின்ர உண்மையான பெயர் என்ன?” 

சொன்னேன். அவள்போய் நதியாவுடைய புரபைலைப் பூராய்ந்தாள். 

“இவ்வளவு காலமும் ஆள் கனடாவில இருந்திருக்கு, பிள்ளைக்குப் பெரிசா பேர்த்டே பார்ட்டி நாலு மாசத்துக்கு முன்னால நடந்திருக்கு... லெக்சஸ் எண்டு ஒரு கார் இருக்கா?” 

“பக்கிங் ஹெல்” 

“வாங்கி ஓடியிருக்கு …” 

“அப்ப ஏதும் பிசினெஸ் செய்திருப்பான் …. என்ன இழவோ தெரியேல்ல … நான் இப்ப என்ன செய்யிறது?” 

மனைவி என்னை முறைத்துப்பார்த்தாள். 

“முதலில ஆன சப்பாத்து ஒண்டை வாங்கிப்போடு … எப்ப பார்த்தாலும் கேமார்ட்டில போய் பத்து டொலருக்கு வாங்கிறது. கசவாரக்கூட்டம்” 

Out of no where பேச்சு நதியாவிலிருந்து எங்கள் குடும்பத்துக்குத் தாவிவிட்டது. 

“இப்ப எதுக்கு என்ர குடும்பத்தை இழுத்தனி?” 

“ஒ சொறி … உது உங்கட நைனாதீவுக்குணம்தானே … கச்சதீவு மாதிரி உங்கட கஞ்சதீவு” 

“இப்ப எதுக்கு என்ர ஊரை இழுத்தனி? … நீ மட்டும் என்ன ..” 

தேவையே இல்லாமல் நானும் ஆரம்பித்தேன். நல்லா ஓப்ஸடம்புக்கு வெளிய போன பந்து. பட்டைக் குடுக்காமலேயே இருந்திருக்கலாம். ச்சைக் சனியன். 
“எங்கிருந்தோ வந்தான். நின் நதியா நான் என்றான். என் நாக்கில் தான் ஏறிநர்த்தனமே ஆடிவிட்டான்” 
000

முகநூலில் ஒரு புகைப்பட டக் நோட்டிபிகேசன் வந்திருந்தது. 

விதுல என்று ஒரு சிங்கள நண்பன். புரூனாயில் நாங்கள் வேலை செய்த சமயம் எடுத்திருந்த புகைப்படத்தை முகநூலில் ‘குட் ஓல்ட் டேஸ்’ என்று போட்டிருந்தான். அந்த நாள்கள் ஞாபகத்துக்கு வந்தன. பத்துப்பன்னிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போதெல்லாம் நாளின் முக்கால்வாசியை விதுலவோடும் ஏனைய அலுவலக நண்பர்களுடனுமே கழித்திருப்பேன். ஒரே ஹொட்டலில் தங்கியிருந்தோம். ஒரே காரில் வேலைக்குப்போய், ஒன்றாகவே உணவகத்தில் உண்டு, ஒன்றாகவே புரூனாயைச் சுற்றிப்பார்த்து, ஒன்றாகவே சுல்தானிடம் சென்று கைலாகு கொடுத்து. அப்போது விதுல எனக்கு மிக முக்கிய நண்பனாக இருந்தான். எல்லா விடயங்களையும் ஷெயார் பண்ணுவோம். அரசியல் கதைப்போம். மதம் கதைப்போம். சாப்பாடு, வரலாறு, தொழில்நுட்பம் என்று பலவும். எல்லாம் கொஞ்சக்காலம்தான். பின்னர் நான் சிங்கப்பூர் திரும்பிவிட்டேன். அவன் இலங்கை திரும்பிவிட்டான். சில மாதங்களில் அவன் வேறு அலுவலகம் மாறிவிட்டான். தொடர்பு அறுந்துவிட்டது. முகநூல் வந்தது. முகநூலில் அவனுக்குக் குழந்தைகள் பிறந்தன. அவனும் அவன் மனைவியும் சுற்றுலாக்கள் போனார்கள். அவன் மகிந்தவைத் தீவிரமாக ஆதரித்தான். புலிகளைக் கழுவி ஊற்றினான். ஆரம்பத்தில் நான் தமிழர் தரப்பு புள்ளிகளை அவனுக்கு விளக்க முயற்சித்தேன். முகநூல் என்பது கருத்தாடலுக்கான அற்புதத் தளம் என்று நான் நம்பியிருந்த காலம் அது. With all due respect என்று அவனும் பதில் சொல்ல ஆரம்பிப்பான். ஒரு கட்டத்துக்குப்பிறகு இருவருக்குமே விளங்கியது. ஒரு இம்மிதானும் அவரவர் நிலைகளிலிருந்து நாம் மாறவேயில்லை. தவிர நிலைகள் இன்னமும் தீவிரமானது. பிறகு என்ன மயிருக்கு இந்த விளக்கங்கள் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். அவனும் அப்படியே யோசித்திருக்கலாம். அவன் திடீரென்று சிங்களத்தில் எழுத ஆரம்பித்தான். நானும் திடீரென்று தமிழில் எழுத ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் நான் அவனை ‘Unfollow’ பண்ண ஆரம்பித்தேன். அவனும் என்னை unfollow பண்ணியிருக்கக்கூடும். 

புகைப்படத்தைக் கவனித்த மனைவி ‘ஆரிந்த கோஷ்டி?’ என்று கேட்டாள். 

‘Colleagues’ என்றேன். 

‘You mean your ex colleagues?’ என்றாள். சின்னதாக ஒரு நக்கல் தொனித்தது. 

நல்லகாலம், இந்தத்தடவை என்னுடைய ஓப்ஸ்டம்பை நான் நன்றாகவே அறிந்து வைத்திருந்தேன். 

000 

தமிழில் நண்பர்கள் என்ற வார்த்தையை நாங்கள் துஷ்பிரயோகம் செய்கிறோம் என்றே தோன்றுகிறது. எல்லோரையும் நண்பர்கள் என்கிறோம். தெரிந்தவர்கள் அனைவருமே எமக்கு நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. 

சமூக வலைத்தளங்களில் பரிச்சயமான, பொது நிகழ்வுகளில் காணும்போது குழைந்து வழிகின்ற, விளையாட்டுத் திடலில் சந்திக்கின்ற அல்லது வீட்டில் இழவு விழும்போது மாத்திரம் தேடிவரும் மனிதர்களை எல்லாம் நண்பர்கள் என்று குறிப்பிடமுடியாது. அவர்கள் எல்லோரும் எமக்குத் தெரிந்தவர்கள். அவர்களை ஆங்கிலத்தில் acquaintances என்று அழைப்பார்கள். மற்றும்படி நண்பர்கள் என்று சொன்னால் அதிகம் மூன்றுபேர் தேறினாலே அதிசயம்தான். நமக்கு ஒன்று என்றால் அடுத்தகணம் அருகில் வந்து நிற்கும், அவர்களுக்கு ஒன்று என்றால் அடுத்தகணம் நாம் போய் விழுந்துகிடக்கும் அந்த மூன்று நண்பர்கள். எல்லோருக்குமே அந்த மூன்று நண்பர்கள்தான். பொதுவாகவே தெரிந்தவர்கள் எல்லோரோடும் நாங்கள் நல்லபடியாகவே இருக்க முயற்சிப்போம். தேவையில்லாமல் தனகுவதற்குப் போகமாட்டோம். ஆனால் நண்பர்களோடு மாத்திரம்தான் நாம் நாமாக இருப்போம். பச்சைத் தூசணத்தை அவர்களோடு பயமில்லாமல் பேசுவோம். ஐந்து ரூபா கடன் கேட்க அந்தரப்படமாட்டோம். அவர்களைக் கண்டதுமே நம் முகமூடியைத் தூக்கி எறிந்துவிட்டு பளிச்சென்று தெரிவோம். யாருக்கென்றாலும் இதுதான் நிஜம். எல்லோருக்கும் தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் நண்பர்கள் என்றால் அது அதிகம் மூன்றுபேர்கள்தான். ஐநூறு பேரைக் கூப்பிட்டு மண்டபம் அலங்கரித்து பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கும் மூன்று நண்பர்கள்தான். அரசியல் சமூக செல்வாக்கு உள்ளவர்களுக்கு இதே நிலைதான். ஒபாமா என்றாலும் உள்ளூர் முகநூல் பிரபலம் என்றாலும் ஜஸ்ட் அந்த மூன்றுபேர்தான். ‘இது ஒரு கிரந்தம், இதோட மனுசர் பழகேலுமோ?’ என்று நாம் நினைப்பவர்களுக்கும் மூன்று நண்பர்கள் இருப்பார்கள். ‘அவண்ட கண்ணே சரியில்ல, பாக்கவே தெரியுது பொம்பிளைக்கள்ளன் எண்டு’க்கும் மூன்று நண்பர்கள். கொலைக்குற்றவாளிக்கும் மூன்று நண்பர்கள். ‘சீட்டுப்பிடிச்சு அம்பது பேரை ஏமாத்திட்டு எடுப்புக்காட்டிக்கொண்டு திரியிறான்’க்கும் மூன்று நண்பர்கள். ‘இயக்கத்தின்ர காசில நாலு வீடு கட்டினவன்’க்கும் மூன்று நண்பர்கள். ‘இயக்கம் இயக்கம் எண்டு திரிஞ்சதில மனிசி பிள்ளைய கவனிக்காம விட்டிட்டு’க்கும் மூன்று நண்பர்கள். வாள் கோடாலியோட நாலு வீட்டுக்குள் இறங்கி பவுடர் தலைக்கேறி கதிரை டிவியை வெட்டி எறியிற திருடருக்கும் மூன்று நண்பர்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’க்கும் மூன்று நண்பர்கள். ‘நான் ஒரு இன்றொவெர்ட்’ என்று சொல்லித்திரிபவர்களுக்கும் மூன்று நண்பர்கள். எல்லோருக்குமே அந்த மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு கூடிக்குறையலாம். அடிப்படையில், பரஸ்பரம் எல்லா குடும்ப விசயமும் தெரிந்த, நிதி நிலைமை தெரிந்த, அவரவர் சிந்தனைகள் புரிந்த நண்பர்கள் மிகச்சிலராகவே இருப்பர். 

இன்னுமொன்று, அந்த மூன்று நண்பர்களும்கூட காலத்தோடும் புலத்தோடும் மாறியபடியே இருப்பார்கள். நண்பர்கள் சமயத்தில் தெரிந்தவர்களாக மாறிப்போவதுமுண்டு. என் பதின்மவயது மூன்றும் இருபதுகளின் மூன்றும் இப்போதைய மூன்றும் ஒரே மனிதர்கள் அல்லர். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சிங்கப்பூரிலும் மெல்பேர்னிலும் இருந்த இருக்கின்ற நண்பர்களும் ஒரே மனிதர்கள் அல்லர். புதிய நண்பர்கள் வருவதும் பழைய நண்பர்கள் விலகிப்போவதும் வழமையான ஒன்றுதான். யோசித்துப்பாருங்கள், இளவயதில் ஒன்றாய்த்திரிந்த மிக நெருங்கிய நண்பர்கள் பலரோடு இப்போது நாம் வருடக்கணக்கில்கூட பேசியிருக்கமாட்டோம். அதே சமயம் இரண்டு வருடங்களுக்கு முன்னரே பரிச்சயமானவருடம் மிக நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்போம். நண்பர்களை குணவியல்புகள் மாத்திரம் தீர்மானிப்பதில்லை. சூழ்நிலையும் காலமும் இடமும்கூட நட்பையும் அதன் இருப்பையும் தீர்மானிக்கின்றன. 

000 

அண்மையில் ஒரு மச்ச சாமத்தியவீட்டுக்குப் போகவேண்டியிருந்தது. மச்ச சாமத்தியவீடு என்றால் வேறொன்றுமில்லை. பொதுவாக சாமத்தியவீட்டில் அசைவமோ தண்ணியோ பாவிக்கக்கூடாது என்பதால் சிலர் தனியாக மச்ச சாமத்தியவீட்டை ஒழுங்குசெய்து ஆட்டிறைச்சிக்கறியும் புட்டும் பிளக் லேபிளும் உடைப்பார்கள். சாமத்தியப்பட்ட குழந்தையும் அதன் நட்புகளும் துப்பாக்கியை முந்நூறாவது தடவை டிவியில் சேர்ந்து பார்ப்பார்கள். அவ்வளவுதான். 

அன்றைக்கு மச்ச சாமத்திய வீட்டுக்கு எங்களது ஈழத்து சீர்காழியும் வந்திருந்தார். வழமைபோலவே சீர்காழியை ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடச்சொன்னார்கள். ஈழத்து சீர்காழி என்பதாலோ அல்லது இசை படிக்கவில்லை என்பதாலோ என்று தெரியவில்லை, அன்றைக்கும் சீர்காழிக்கு சுருதி சர்க்கேஸ் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் அவர் பாடி முடித்தபோது கைதட்டல் காதைக் கிழித்தது. அதைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த நம் மதுரை சோமுவுக்கு வாயில் பியர் கசந்தது. கொஞ்சம் சத்தமாகவே சொன்னார். 

“அவனுக்கென்ன … உலகம் முழுக்க ஆக்கள் வச்சிருக்கிறான் … அவன் பாட்டில்லை, பாண்டல் குசு விட்டாலும் கைதட்ட ஒரு பிரண்ட்ஸ் கோஷ்டி இருக்கு” 

சோமுவுக்கும் பயங்கர வெறி. அதோட அடுத்ததா அவரும் சர்க்கஸ் விளையாடத்தான் போகிறார். அப்போது இதே கொமெண்டை சீர்காழி என்னிடம் வந்து சொல்லும். இது எனக்கு வேண்டாத வேலை. பேசாமல் வந்தமோ, எலும்பு மச்சையை சூப்பினமா, ரெண்டு பியர் அடிச்சமா என்று இருந்திருக்கலாம். பட் அப்பன் டி.என்.ஏ. முடியவில்லை. 

“சோமண்ணை … வெறில கைதட்டுறவன் எல்லாம் பிரண்ட்ஸ் இல்லை” 

“இல்லைத் தம்பி … சீர்காழி உன்னை என்னை மாதிரி ஆள் கிடையாது … அவனிண்ட நெட்வேர்க் பெரிசு … ஒருதொகை பிரண்ட்ஸ் இருக்கினம்” 

இதுதான் சந்தர்ப்பம் என்று நான் விலாவாரியாக மேலே சொன்ன நண்பர்கள் பற்றிய பந்தியை சோமண்ணைக்கு விளக்க ஆரம்பித்தேன். ஆள் எல்லாவற்றையும் அம்மிக்கொண்டு கேட்டுவிட்டு கடைசியில் ஒரு சிரி சிரித்தார். சோமண்ணை சிரிக்கும்போது செம்புத்தண்ணியை அண்ணாந்துகுடிப்பதுபோல ஒரு சத்தம் கேட்கும். 

“எல்லாஞ் சரி தம்பி. நீர் பெரிய எழுத்தாளர் எண்டு நினைச்சு எனக்கு இந்தப் படம் காட்டிறீர். ஆனா நானறிய உமக்கு அந்த மூண்டு பிரண்ட்ஸ்கூட இல்லையே?” 

சமயங்களில் இப்படித்தான். புல்டொசுக்கும் விக்கட் விழுந்துவிடுவதுண்டு. 

000 

விடியச்சாமம் மூன்று மணி. நண்பனிடமிருந்து கோல் வந்தது. அவன் ஏன் இந்தச் சமயத்தில் எடுக்கிறான்? 

‘என்னடா… என்ன விசயம்?’ 

அவன் பதட்டத்தோடு சொன்னான். 

‘மச்சான், அப்பா மோசம் போயிட்டார் … இப்பதான் … கட்டிலில … தம்பி தம்பி எண்டு கூப்பிட்டுக்கேட்டுது ….. போய்ப்பாக்கிறதுக்குள்ள….’ 

‘என் … என்னடா சொல்லுற … வடிவாத்தெரியுமா? அம்புலன்சுக்கு கோல் பண்ணினியா …’ 

அவன் அழ ஆரம்பித்தான். 

‘எனக்கு என்ன செய்யிறதுண்டு தெரியேல்ல … சனியன்… உடன வெளிக்கிட்டு வா ’ 

000

Comments

  1. சூப்பராக பதிவு. நானும் கேமாட் போராடத் தேடிவிட்டேன். இருபது டொலருக்கும் குறைவாக ஒரு சப்பாத்தையும் காணோம். உங்கள் மொடலை அனுப்ப முடியுமா?
    நானும் உங்கள் மனைவியும் ஒரே ஊர். அடுத்த தடவை சண்டை வரும்பொழுது இந்தத்தகவல் உதவக்கூடும்.

    ReplyDelete
  2. :D ... https://www.kmart.com.au/product/casual-slip-on-canvas-shoes/2423324

    ReplyDelete
  3. இந்தக் கடைசிப் பந்தி........///ஒரு விக்கட் ட காப்பாத்தத் தெரியேல்ல... நீங்கெல்லாம் ஒரு எழுத்தாளர்........

    ReplyDelete
  4. //யார் யாரோ எப்போதோ சொன்னவையெல்லாவற்றையும் நம் சொந்த அனுபவங்களாகவே வரிக்க ஆரம்பித்துவிடுகிறொமோ என்ற குழப்பம் வருகிறது//
    ரொம்ப குழம்பாதீங்க நமக்கு கதை இல்லாமல் போயிடும்

    //எப்ப பார்த்தாலும் கேமார்ட்டில போய் பத்து டொலருக்கு வாங்கிறது.//
    நம்மட கேஸ் தானா KMART இல் வாங்கிப்போட்டு TARGET எண்டு சொல்லோணும்

    அடுத்த கணம் யோசிக்காமல் நண்பனின் கோல் வந்தவுடன் புறப்பட்டு சென்றால் புல்டோசுக்கு ஒருநாளும் விக்கெட் விழாது। ।
    வார்த்தை பிரயோகத்தில் இருந்து தெரிகிறது மூவரில் அவனும் ஒருவன் என்று

    ReplyDelete
  5. தன்யா3/22/2019 12:52 am

    It's good to hear that you are open to new friendships as you go. I have heard and experienced the opposite. I always think when was the last time I made a new friend. It dates back to my uni days..when I was immature and ignorant. And over time I started losing them.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...