Skip to main content

கொள்ளை நோய்




ஓரன் என்கின்ற கடலோர நகரம் ஒன்றில் இடம்பெறும் கதை இது.

ஒரு ஏப்ரல் நாளில் ஓரன் நகரமெங்கும் திடீரென்று ஆயிரக்கணக்கான எலிகள் செத்துவிழத்தொடங்குகின்றன. முதலில் ஒருவருடைய வீட்டு வாசலில் எலி ஒன்று செத்துக்கிடந்தது. பின்னர் தோட்டத்தில் ஐந்தாறு எலிகள் செத்துக்கிடந்தன. குப்பைத்தொட்டியருகே ஐம்பது எலிகள். ஒரு தானியக் கிடங்குக்குப் பின்னே நூற்றுக்கணக்கான எலிகள். இப்படித் தொடர்ச்சியாக எலிகள் செத்துவிழ ஆரம்பிக்கின்றன.


எலிகளின் மரணம் ஒரு நல்ல சமிக்ஞை இல்லை என்று அங்கிருக்கும் வைத்தியர் சொல்கிறார். எவருமே அதனைக் கணக்கிலெடுப்பதாக இல்லை. எலிகளின் மரணம் ஒரு தற்செயல் சம்பவம் என்று அவர்கள் கூறுகிறார்கள். உள்ளூர்ப்பத்திரிகை ஒன்று அரபுகள் வாழும் தெருவில் சுகாதாரம் சரியாகப்பேணப்படவில்லை என்று ஒரு கட்டுரை வரைவதற்கு வைத்தியரின் உதவியை நாடுகிறது. வைத்தியரோ, எழுதப்படவேண்டியது பொதுச்சுகாதாரத்தின் மோசமான நிலைமையைப்பற்றித்தான் என்று பத்திரிகையாளருக்குக் கூறுகிறார். பத்திரிகையாளர் அதனைக் கருத்திலெடுக்கவில்லை.

எலிகள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாகச் செத்து விழுந்துகொண்டிருந்தன. அவை செல்வந்த வீடுகளிலும் உயர்ரக உணவகங்களிலும் இப்போது சாக ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் பின்னர் அதிகாரிகளும் இதுபற்றிக் கரிசனை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். எலிகளுக்குக் கொள்ளைநோய் பரவிவிட்டது, கவனமாக இருக்கவேண்டும் என்று வைத்தியர் சொல்கிறார். மக்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்படுகிறது. உடனே உள்ளூர்ப்பத்திரிகையும் பரபரப்பாகச் செய்தி ஒன்றைப்போடுகிறது. அதைத்தொடர்ந்து பரபரப்பு சிறு பதட்டமாக மாறுகிறது. நகரசபை தினமும் செத்த எலிகளை அள்ளி கூட்டம் கூட்டமாக எரிக்க ஆரம்பிக்கிறது. சில நாள்களின் பின்னர் எலிகளின் மரணம் அருகிவிடவே மக்கள் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததையே மறந்துபோய் அவர்களுடைய வழமையான வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். பகல் முழுதும் வேலை. திரைப்படங்கள். உணவு. காமம். தூக்கம்.

ஒருநாள் அந்த நகரத்தில் ஒரு மனிதர் இனம் தெரியாத நோயால் இறக்கிறார்.

அப்புறம் இன்னொரு மனிதர். பின்னர் இன்னொருவர். எலிகளுக்கு ஏற்பட்ட கொள்ளைநோய் இப்போது மனிதர்களுக்குப் பரவிவிட்டது என்று வைத்தியர் அதிகாரிகளுக்குச் சொல்கிறார்கள். ஆனால் வைத்தியர் பேச்சை மறுத்து பலரும் பலவிதமான நோய்களையும் மருத்துவத்தையும் அதற்குக்  குறிப்பிட்டார்கள். அதிகாரிகள் மாறி மாறிக் காரணங்களைக்கூறிப் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து வைத்தியரின் எச்சரிக்கையைப் புறக்கணிக்கிறார்கள். நாளாக நாளாக மனிதர்கள் நூற்றுக்கணக்கில், பின்னர் ஆயிரக்கணக்கில் செத்துவிழ ஆரம்பிக்கிறார்கள். எலிகளின் மரணத்தின்போதுகூட பரபரப்புச் செய்தி போட்ட உள்ளூர்ப்பத்திரிகை இப்போது அசமந்தப்போக்கையே கடைப்பிடித்தது. இதையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வைத்தியருக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக வந்தது. கொள்ளைநோய் ஒன்றும் மனிதக்குலத்துக்குப் புதிதல்லவே. வரலாற்றில் இதற்கு முதலும் அது பலதடவை வந்து பல சமூகங்களைக் காவு கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் மனிதர்கள் எப்படி வரலாற்றை மிக இலகுவாக மறந்துபோகிறார்கள் என்று அவர் ஆச்சரியப்படுகிறார். ஒவ்வொருதடவையும் மனிதர்கள் முன்னர் ஏற்படட கொள்ளைநோய்களை மறந்து அவற்றைப் புதிதாக எதிர்கொள்கிறார்கள் என்று அவர் நினைத்துக்கொள்கிறார்.

மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ ஆரம்பிக்கின்றன. ஆனாலும் பலர் இதுபற்றி தனித்தனி நிலைப்பாடுகளிலேயே இருந்தார்கள். இழவு விழுந்த வீடுகளில் இந்த சோகம் தமக்கானது மாத்திரமே என்று நினைந்து அழுதார்கள். இழவு விழாத வீடுகளில் அந்த நிலைமை தமக்கு வராது என்று நம்பினார்கள்.

ஒரு அவலத்தில் இரண்டுவகை உண்டு. ஒன்று தனிமனித அவலம். அடுத்தது கூட்டு அவலம். ஒரு கொள்ளை நோயை சமூகம் ஒருவித வேடிக்கை மனநிலையில், விடுப்பு மனநிலையில், இன்னமும் சொல்லப்போனால், சிறு பரவச மனநிலையிலேயே அணுகுகிறது. நூறு மனிதர்களின் மரணத்தைவிட ஆயிரம் மனிதர்களின் மரணம், அது துக்கச்செய்தியே ஆனாலும் சற்று மீதமான பரவசத்தையே மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. மேலதிக மரணங்கள் அவை பற்றி உரத்துப்  பேசுவதற்கு ஏதுவாகிறது. இதனால் பலர் பயனடைகிறார்கள். ஆருமே அறியாத ஆழ்மனதில் அந்த எண்ணிக்கை இரண்டாயிரமானால் என்ன என்ற எண்ணம் வந்துபோகிறது. தினமும் இழவுச்செய்திகளை எதிர்பார்த்து பத்திரிகைகளை வாசிக்கும் மனநிலை ஏற்படுகிறது. மனித மனத்தின் குரூர குணம் இது. ஆனால் மரணம் விழுந்த வீட்டின் உறவுகளுக்கு அந்த மனநிலை இருக்காது. அது ஒரு இரத்த உறவை இழந்த சோகம். அதன் வலி அலாதியானது. வெறுமனே துக்கச்செய்தியைப் பகிர்ந்து சில கருத்துகளை உதிர்த்துவிட்டு அடுத்தவேளை சோலியைப் பார்க்கச்செல்வதற்கு அந்த மனிதர்களால் முடியாது. பொதுவாக இப்படியான சந்தர்ப்பங்களில் தனிமனித அவலங்களை எதிர்கொள்பவர்கள் சமூகத்தினின்றும் தள்ளியே நிற்பார்கள். வலி அவர்களுக்கானது, தம் வலியை சமூகம் உணர்வதேயில்லை என்பது அவர்கள் எண்ணமாகவிருக்கும். பல மரண வீடுகளின் ஒப்பாரிகளில் இறந்தவர்களின் கணவனோ, மனைவியோ, தாயோ, தந்தையோ அதிகமாகப் பங்கெடுப்பதில்லை. சிறிது அழுவார்கள். பின் ஒதுங்கிப்போவார்கள். தனித்திருந்து வலியை உணருதல் என்பது ஒருவித போதை என்றுகூடச் சொல்லலாம். வலிகள் தமக்கானவை மாத்திரம் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.  இப்போது இந்த ஓரன் நகரம் முழுதும் கொள்ளை நோய் பரவி எல்லா வீடுகளில் மரணம் பரவிவிட்டது. நோய் வீட்டுக்குள் நுழைந்து படுக்கைக்கு அருகில் வந்துவிட்டது. எல்லோருமே மரணத்தை எதிர்கொள்பவர்கள் ஆகிவிட்டனர். எல்லோருக்கும் சமூகத்தின் கூட்டு வலியைவிட தத்தமது  வலி அதிகமாகவே தெரிந்தது. அதனால் எல்லோரும் மேலும் மேலும் தனித்துப்போக ஆரம்பித்தார்கள்.

கொள்ளை நோயிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றப் பாதிரியார்கள் தேவனைப் பிரார்த்திக்கிறார்கள். தம் பாவங்களுக்காகக் கடவுள் கொடுக்கும் தண்டனை இது என்கிறார்கள். நோயை இந்தளவுக்கு வளரவிட்டது யாருடைய தவறு என்று அதிகாரிகள் தமக்குள் சண்டை பிடித்தார்கள். கொள்ளை நோய் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஊரெல்லாம் ஒட்டப்பட்டன. ஆனாலும் அவை பெரிதளவில் வெளியே தெரியாவண்ணம் மூலைகளிலும் சனநடமாட்டம் இல்லாதவிடங்களிலுமே ஒட்டப்பட்டன. தலைநகரிலிருந்து நோய்த்தடுப்பு மருந்து வந்தாலும் அது சொற்பமானவரைக் குணப்படுத்தவே உதவியது. ஊரைவிட்டு பலர் தப்பியோட ஆரம்பித்தார்கள். ஆனால் யாருமே வெளியேறக்கூடாது என்று தடை போடப்பட்டது. இப்போது மனிதர்கள் சக மனிதர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள். யாரும் யாரோடும் பேசுவதேயில்லை. அவர்களுக்குத் தாம் பிறந்து வளர்ந்த ஊரே ஒரு அந்நியமான குரூரமான ஊராகத் தென்பட ஆரம்பித்தது. தடைக்கு முன்னதான சுதந்திரத்தின் சுவை இப்போதுதான் மனிதர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. ஆச்சரியமாக அந்த ஊரிலிருந்த குற்றவாளிக்கு இவையெல்லாமே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை அவனைக் குற்றவாளியாகப் பார்த்தவர்கள், தேடியவர்கள் எல்லோரும் அவனை இப்போது கணக்கிலேயே எடுப்பதில்லை. இப்போது அனைவருமே அவனைப்போல சிறைபிடிக்கப்பட்ட மன நிலையிலேயே இருக்கிறார்கள். அவன் இப்போது ஊரெல்லாம் சுதந்திரமாகத் திரிய முடிந்தது. தவிர மனிதர்கள் அவனை நாடி வரவும் ஆரம்பித்தார்கள். ஊரைவிட்டு மனிதர்களைக் கடத்தி வெளியே கொண்டுபோகும் தொழிலை அவன் ஆரம்பித்திருந்தான். அந்தத் தொழிலில் பெருத்த வருமானம் கிடைத்தது. நிறைந்த செல்வமும் சமூக அங்கீகாரமும் அந்தக் குற்றவாளிக்குக் கிடைக்கவும் அவன் தன் வாழ்வில் முதன்முதலாக தன் தனிமையை மறந்து மகிழ்ச்சியோடு வாழ ஆரம்பித்தான்.

நகரத்தில் பல மனிதர்கள் இன்னமும் கொள்ளைநோய்ச் சூழலை ஏற்றுக்கொள்ளாமலேயே இருந்தார்கள். தம் நகரத்தில் கொள்ளைநோய் பரவ சந்தர்ப்பமே இல்லை என்றார்கள். அதனால் அவர்கள் தடுப்பு வேலைகளிலும் பங்கெடுக்காமல் இருந்தார்கள். இதனாலேயே கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவது மேலும் கடினமான ஒன்றாக மாற ஆரம்பித்தது. எல்லோரும் நோய்க்கான பொறுப்பை யாரோ ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள். அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அல்லது சக குடிவாசிகள் அதனைச் செய்யவேண்டும் என்று நினைத்தார்கள். இது தம்முடைய பிரச்சனை கிடையாது என்று காலத்தைக் கடத்தினார்கள்.

ஏழெட்டு மாதங்கள் கடந்தன. வெளியுலக தொடர்பில்லை. வெளியே போகவும் முடியாது. வெளியிலிருந்து வரத்தும் இல்லை. மரணங்களும் நின்றபாடில்லை. சமூகத்தின் எல்லா நிலைகளுக்கும் நோய் பரவியது. எல்லோரும் இறக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதிகாரிகள் இன்னமுமே தமக்குள் வாக்குவாதம் செய்தபடியே இருந்தார்கள். தினமும் மரண எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள் எண்ணிக்கை நூற்றைம்பதாக இருந்து மறுநாள் அது நூற்றிமுப்பதாக அமைந்தால் கொள்ளைநோய் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகப் பிரசாரம் பண்ணப்பட்டது. அடுத்தநாள் எண்ணிக்கை இருநூறாக அதிகரித்தால் அறிவிப்பு தாமதப்படுத்தப்பட்டது. ஆனாலும் மரணங்கள் தொடர்ந்தபடியே இருந்தன. தனித்தனியாக மரணவீடுகள் செய்யமுடியாமல் ஈற்றில் கூட்டம் கூட்டமாக உடல்களைப் புதைக்க ஆரம்பித்தார்கள். அஞ்சலிகள் எல்லாம் அருகிப்போயின. ஒரு கட்டத்தில் புதைக்க இடமில்லாமல் உடல்களை எரிக்க ஆரம்பித்தார்கள். இதில் சமூக உயர்வு தாழ்வு நிலைகளெல்லாம் அடிபட்டுப்போயின.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருந்த மனிதர்களுக்குப் பிரக்ஞை வந்தது. இது தத்தமது தனிமனித அவலமில்லை. இது ஒரு சமூக அவலம். இந்த வலி அனைவருக்கும் பொதுவானது.இதனை  நிறுத்தவேண்டுமானால் நாமெல்லாம் கூட்டாக இயங்கவேண்டும். நாம் அனைவரும் இணைந்தே இந்தக் கொள்ளைநோயை ஒழிக்கவேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். கொள்ளை நோய்த்தடுப்புக்கான காரியங்களை ஒன்றிணைந்து திட்டமிட்டுச் செயற்படுத்த ஆரம்பிக்கிறார்கள். தடுப்பு நோய் மருந்தை உள்ளூரிலேயே கண்டுபிடிக்க முயல்கிறார்கள். பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.

ஒரு சிறுவனின் மரணம் நிகழ்கிறது. அப்போது அந்த வைத்தியர் பாதிரியாரை நோக்கி ‘இந்தச் சிறுவன் என்ன பாவத்தைச் செய்தான்? இவன் ஏன் சாகவேண்டும்?’ என்று கத்துகிறார். பாதிரியாரும் இதனால் அதிர்வடைந்து தன் போதனையைச் சற்று மாற்றுகிறார். மனிதர்கள் ஒன்று கடவுளை முற்றாக நம்பி அவரிடம் தம்மை அவனிடம் ஒப்படைக்கவேண்டும். அல்லது கடவுளே இல்லை என்று முற்றுமுழுதாக நம்புதல்வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நின்று தடுமாறக்கூடாது என்கிறார். அதனால்தான் இது நிகழ்கிறது என்கிறார். கடைசியில் பாதிரியாரையும் ஒரு நோய் தொற்றுகிறது.  ஆனால் நோய்க்கு மருத்துவம் பார்த்தால் அது இறைவனை தான் நம்பாமல் விடுவதாகும் என்று சொல்லி அவர் வைத்தியம் பார்க்காமலேயே தவிர்க்கிறார். இறுதியில் அவர் இறந்துபோனபின்னர் அவருடலை பரிசோதனை செய்த வைத்தியர் அவர் கொள்ளை நோயால் இறந்திருக்கச் சாத்தியமில்லை என்று சொல்கிறார். 

சில மாதங்கள் கழித்து, ஓரன் நகரத்தவரின் முயற்சியாலோ அல்லது நோய்க்கிருமிக்கு போதும் என்று தோன்றியதாலோ என்னவோ, கொள்ளை நோயின் தீவிரம் நகரி ல் கு றைய ஆரம்பிக்கிறது. மரணங்களும் நோய்த் தொற்றுகளும் குறைகின்றன. நகரத்தைச் சுற்றிப்போடப்படட தடை அகற்றப்படுகிறது. எல்லா மக்களுக்கும் இது புத்துணர்ச்சியை  கொடுத்தாலும் அந்தக்குற்றவாளியால் இதனை தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவன் வெறுத்துப்போய் தன் அறைக்குள்ளிலிருந்தபடி துப்பாக்கியால் சகட்டுமேனிக்குச் சுட ஆரம்பிக்கிறான். காவல்துறை அவனைக் கைது செய்கிறது.

மெதுவாக ஊர் வழமைக்குத் திரும்ப ஆரம்பிக்கிறது. கொள்ளை நோயை வென்றுவிட்டோம், இனிமேல் வாழ்க்கையை மீள அழகாகக் கட்டமைக்கவேண்டும் என்று எஞ்சியவர்கள் தீர்மானிக்கிறார்கள். ஊர் முழுதும் ஒருவித மகிழ்ச்சி நிறைந்திருந்தது. மனிதர்களிட,ம் வெறுக்கத்தக்கக் குணங்களைவிட நற்குணங்களே அதிகமாக இருக்கிறது, ஆனால் அவர்களுடைய அசட்டையீனம்தான் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவருகிறது என்று அந்த வைத்தியர் நினைக்கிறார். ஊரை விட்டு வெளியேறியவர்கள் பலர் திரும்புகிறார்கள். நடைமுறை வாழ்க்கை மீள்கிறது. ஆனால் மனிதர்களின் இயல்பான குணம் மாறவேயில்லை. சில நாள்களிலேயே, அங்கொரு கொள்ளை நோய் பரவியிருந்ததையே மக்கள் மறந்துபோய் தத்தமது வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள். பகல் முழுதும் வேலை. திரைப்படங்கள். உணவு. காமம். தூக்கம்.

மனிதர்கள் என்னதான் பாடுபட்டாலும் அவர்களால் கொள்ளைநோயை வெற்றி கொள்ளவே முடியாது என்று அந்த வைத்தியர் நினைத்துக்கொள்கிறார். கொள்ளை நோயின் மூலக்கிருமி பல வருடங்களுக்கு உறங்கு நிலையில் இருக்கக்கூடியது. அது மீளவும் தனக்குரிய சூழல் மிகுகையில் வெளிக்கிளம்பவே செய்யும். அப்போது இந்த ஊரும் மனிதரும் மீள அவலப்பட வேண்டிவரும். இதிலிருந்து அவர்களுக்கு மீட்சியும் கிடையாது. அதுபற்றி அவர்கள் அக்கறைப்படப்போவதுமில்லை. மனிதர்கள் நல்லவர்கள்தான். ஆனால் அதீத அசட்டையீனம் கொண்டவர்கள்.

கொள்ளை நோய் ஒழிந்துபோய் மக்கள் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒருநாளில் ஒரு வயதான அஸ்மா நோயாளியை வைத்தியம் பார்க்க அவரின் வீட்டுக்கு வைத்தியர் வருகிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே தெருவில் கொள்ளைநோயை வெற்றிகொண்ட குதூகலத்தில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. சிறுவர்கள் வெடி கொளுத்தி மகிழ்கிறார்கள்.

வைத்தியர் நோயாளியிடம் கேட்கிறார்.

“நான் உங்கள் மாடிக்குப்போய் கூரையின்மேல் ஏறி நின்று வேடிக்கை பார்க்கலாமா?”

“எதை? இந்த மக்களையா? தாராளமாகப் பாருங்கள். ஆனால் அருகில் பார்த்தாலும் தூரத்திலிருந்து பார்த்தாலும் எல்லோருமே ஒரே மாதிரியே தெரிவார்கள்”

வயதானவர் சொல்ல வைத்தியர் படிகளில் ஏற ஆரம்பிக்கிறார்.

“சொல்லுங்கள் டொக்டர், இறந்தவர்களுக்கு நினைவாலயம் ஒன்றை எழுப்பப்போகிறார்களாமே?”

“அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். பத்திரிகைகளில் வந்திருந்தது. ஒரு நினைவுத்தூபி கட்டப்போகிறார்கள்”

“அப்புறம் அஞ்சலிப்பேச்சுகளும் இருக்கும் அல்லவா. எனக்கு இப்போதே அந்த உரைகள் கேட்க ஆரம்பித்துவிட்டன… ஆண்டவரே … இந்த உயிர்களை … பேசிவிட்டு அத்தனைப்பேரும் இரவு உணவகத்துக்குச் செல்வார்கள்”

வயதானவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வைத்தியர் கூரைக்கு விரைந்துவிட்டார். இரவு வானம் நட்சத்திரங்களைச் சிமிட்டியபடி இருந்தது. தூரத்தில் கடலலைகள் ஆர்ப்பரிப்புடன் அடித்துக்கொண்டிருந்தன. இலையுதிர்காலத்தின் குளிரும் வெம்மையும் கூடி முகத்தில் அடித்தது. நகரம் இன்னமும் ஆர்ப்பரிப்புடன் குதூகலித்துக்கொண்டிருந்தது.

ஆனால், குப்பைத் தொட்டிகளுக்கருகில், கடைகளின் தாவாரங்களிற்கிடையில், தானியக்கிடங்குகளில், வீட்டுக் கொல்லைப்புறங்களில், கட்டில் கால்களுக்கடியில், கை லேஞ்சியின் தையல் இடுக்கில் இன்னமும் அந்த நோய்க்கிருமி தூங்கிக்கொண்டே இருக்கிறது.


****


இது அல்பேர்ட் காமுஸ் எழுதி “த பிளேக்” என்ற நாவலின் மிகச்சுருக்கப்பட்ட (சிறு மாற்றங்களுடன்) வடிவம்.


Comments

  1. நிகழ் காலத்திட்கான பதிவு போல் உள்ளது


    ReplyDelete
  2. இன்னமும் உண்மை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...