சற்றுமுன்னர்தான் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டு பேசினேன். தோழர் நேசமணி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மிகுந்த உற்சாக மனநிலையுடன் இருப்பதாகவும் கூறினார். தோழரோடு பேசப்போகிறீர்களா என்றும் கேட்டார். ஏதோ ஒன்று தடுத்தது. பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.
நேற்றுத் தகவல் அறிந்தமுதல் எனக்குத் தோழர் நேசமணியின் ஞாபகமாகவே இருந்தது. பிரான்சில் இருக்கும் எம்முடைய இயக்கத்தோழரோடு அழைப்பெடுத்துப் பேசியபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவரும் தோழர் நேசமணியோடு பழகித்திரிந்த, கதைகள் பல பறைந்த அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தோம். காலமும் தூரமும் நம் உறவுகளை பிரித்தே வைத்திருந்தாலும் அனிச்சைகளால் நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.
எண்பத்தாறில் நாங்கள் அண்ணா நகரில் குடியிருந்தசமயத்தில்தான் தோழர் நேசமணியுடனான பழக்கம் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். அப்போது நாங்கள் மேல் மாடியிலே தங்கியிருந்தோம். லெனின் வழியிலான மார்க்சியத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. ஏராளமான தமிழக தோழர்களும் அவ்வப்போது எங்கள் மாடிக்கு வந்து இணை முரணியல் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். இந்தச்சமயம்தான் கீழ்வீட்டில் குடியிருந்த அபிராமிக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்துக்காக வீட்டினை செப்பனிடும் பணியைக் கொன்றாக்ட் எடுத்துச் செய்யவந்தவர்தான் தோழர் நேசமணி.
வீட்டில் வேலை ஆரம்பித்து சில நாள்களிலேயே தோழரோடு எமக்கு நெருங்கிய நட்பு ஆகிவிட்டிருந்தது. நேசமணி ஒரு தேர்ந்த வாசகர். மார்க்ஸிய இலக்கியங்கள் மாத்திரமல்லாது பெரியார், ஆடம் ஸ்மித், அயன் ராண்ட் என்று அவர் அத்தனைபேரையும் வாசித்து உள்வாங்கியிருந்தார். அரசு இயந்திரத்தின் அதிகாரத்தை தனிநபராக எதிர்ப்பதன் அடையாளமாக அவர் தனது சர்க்கார் உத்தியோகத்தை உதறித்தள்ளியிருந்தார். முதலாளித்துவத்தின்மீதான எதிர்ப்பைப் பதிவுசெய்யும் முகமாக தனியார் வேலைகளையும் அவர் நிராகரித்தார். மதம், அரசியல் என்று சாத்தியமான அத்தனை அதிகாரப்புள்ளிகளின்மீதும் தோழர் தன் எதிர்ப்பைத் தனிநபராகவே பதிவு செய்தார். இடையில் ‘திராவிடத் தேசியத்தில் நவீன மார்க்ஸியம்’ என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார். வயிற்றுக்கு ஈயவேண்டும் என்பதற்காகவே தனது கட்டட கொன்றாக்ட் வேலையையும் அவர் செய்துகொண்டிருந்தார். அப்போதுகூட வேலையில்லாமல் திரிந்த பல இளைஞர்களை அவர் தன்னோடு சேர்த்துக்கொண்டார். அதனால் அவர் போகும் இடங்களிலெல்லாம் பட்ட துன்பங்களை வைத்து ஒரு திரைப்படமே எடுத்துமுடிக்கலாம். இப்படிப்பட்ட தோழர் நேசமணியோடு எமக்கு உடனேயே நட்பு ஏற்பட்டது அவ்வளவு ஆச்சரியமில்லை. அக்காலங்களில் எமக்கு சுருட்டும் விஸ்கியும் வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பதும் அவரே. இலங்கை வங்கி சுன்னாகக் கிளை கொள்ளையடிப்பு வழக்கில் நாங்கள் அப்போது சிங்களப் பேரினவாத அரசால் தேடப்பட்டுக்கொண்டிருந்தோம். இந்த விடயத்தை நாங்கள் தயங்கியபடி சொன்னபோது தோழர் எம்மை ஆரத் தழுவிக்கொண்டார். பேரினவாத மய்ய அரசுக்கு நாம் வைத்த மிகப்பெரிய ஆணி என்று அவர் எம்மை சிலாகித்தார். நீங்கள் தேவையான ஆணிகளை மாத்திரமே பிடுங்கியிருக்கிறீர்கள் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். தன்னுடைய அப்பிரசிண்டுகளை வைத்து அரசு இயந்திரத்தின் ஒரு நட்டைக்கூடத் தன்னால் திருடமுடியாது என்று கவலைப்பட்டார்.
பின்னர் நான் கீழ்வீட்டு அபிராமையை திருமணத்துக்கு முன்னமேயே இழுத்துக்கொண்டு மலாவிப்பக்கமாகச் சென்று பின்னர் கனடாவில் போய் செட்டிலாகிவிட்டேன். அதன்பின்னர் தோழர் நேசமணியுடன் பெரிதாக தொடர்பேதும் இருக்கவில்லை. இடையில் என்னுடைய ஒரு கவிதைநூலை இந்தியாவில் வெளியிட்டு பிரபலப்படுத்தவேண்டும் என்று ஒருமுறை தொலைபேசியில் அழைத்துக் கேட்டபோது நேசமணி மிகக்கோபத்துடன் என்னைத் திட்டினார். நீ பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான் என்றார். இலக்கியத்தின் அகத்தேடலை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்வதேயில்லை என்று அன்றைக்கு நான் அபிராமியிடம் சொல்லிக் கவலைப்பட்டேன்.
தோழர் நேசமணி நலம்பெறுவது இன்றைய காலத்தின் ஒரு கட்டாயமாகும். அவர் மீண்டு வந்து மதமும் முதலாளித்துவமும் கோலோச்சும் இன்றைய அகன்ற பாரதத்தை தனது வலிமையான கோசங்களால் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
Get well soon comrade.
என்னது இது ?
ReplyDelete