Skip to main content

கறுப்பி



கறுப்பியை இனிமேல் விற்றே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது. 

மெல்பேர்ன் வந்ததுக்கு இது இரண்டாவது வாகனம். முதல் வாகனத்தைப் படிக்கும் காலத்தில் வாங்கியது. அறாவிலைக்கு ஓட ஓட நடுவழியில் நட்டுகள் கழன்றுவிழும் நிலையில் இருந்த வாகனத்தை வாங்கித் திருத்தி ஓட ஆரம்பித்தது. ஆனால் எத்தனை நட்டுகள் விழுந்தாலும் அந்த வாகனம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது. வாங்கிக் கொஞ்சக் காலத்துக்கு ஹீட்டர் கூலர் இரண்டுமே வேலை செய்தது. பின்னர் ஹீட்டர் மாத்திரம் வேலை செய்தது. அதன் பின்னர் கூலர் கரைச்சல் கொடுத்தது. கொஞ்ச நாளைக்குப்பின்னர் வெறும் காற்று மட்டும் மெல்லிய எஞ்சின் நெடியுடன் பறந்தது. பாட்டுப்பெட்டிக்கும் அதே கதைதான். முதலில் சிடி பிளேயர் முழுதாக வேலை செய்தது. பின்னர் கனலில் கருவாகி புனலில் உருவானதை மாத்திரம் அது தொடர்ந்து ரிப்பீட் பண்ணியது. அதன்பின்னர் வானொலி மட்டும் தனியே பாடியது. ஈற்றில் வெறும் இரைச்சல் மாத்திரம். அதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தமுடியாமற்போனது. எஞ்சின் அதற்கும்மேலே. அடிப்பகுதியில் இங்கிங்கெனாது எங்கெனும் ஒயில் ஒழுகியது. ரேடியேட்டர் தண்ணீர் வடிந்தது. பெற்றோல் குடிக்கப்பட்டது. இயக்கம் இருந்த காலத்தில் காருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய உந்து என்பதால் மகிழுந்து என்று காருக்கு பெயர் சூட்டியிருந்தார்கள். மகிழுந்து வைத்திருந்தவர்களிடம் வரிகூட அறவிட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அந்தக்கார் திருத்துநருக்கும் பார்ட்ஸ் கடைக்காரருக்கும் மாத்திரமே மகிழுந்தாக செயற்பட்டுக்கொண்டிருந்தது.

இதற்குமேல் விழுவதற்கு நட்டுகள் இல்லை என்ற நிலை வந்தபோது அப்பா அந்தக்காரைத் தன்னிடம் கொடுக்குமாறு சொன்னார். உடனே அந்த வாகனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு இன்னொரு காரை வாங்கலாம் என்று முடிவு பண்ணினேன். இம்முறை பழைய காராக இல்லாமல் புதிதாக, நிஜமாகவே மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரு மகிழுந்தாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதுவும் எனக்குப் பிடித்தமான கட்டக் கறுப்புக் கலரில். பளிச்சென்ற புதுப்பெயிண்டில். சொன்னதைன்ச் சொன்னபடி கேட்கும் மக்கர் பண்ணாத ஒரு மகிழுந்து. 

அப்படி என் வாழ்க்கையில் வந்து இணைந்ததன் பெயர்தான் கறுப்பி. 

வாங்கிய கையோடு கறுப்பி சொன்னதெல்லாம் கேட்டது. ‘போ’ என்றால் போனது. ‘இன்னமும் வேகமாகப் போ’ என்றால் பறந்தது. ஹீட்டர் போட்டால் சுட்டது. கூலர் குளிர்ந்தது. கனலில் கருவாகிக்கு சரணம் இருப்பது தெரிய வந்தது. ஒரே திறப்பில் நான்கு கதவையும் திறக்கும் மர்மம் விலகியது. கதைவைத்திறந்தால் புதுக்காரின் வாசம் நாசியைத் துழாவியது. திறப்பைப் போட்டுத் திருகினால் ஸ்டார்ட் பண்ணியது. இதெல்லாம் மற்றவருக்கு சாதாரணமான விசயங்கள்தாம். ஆனால் நட்டுக்கழன்ற காரோடு வாழ்க்கை நடத்தியவனுக்குத்தான் இதன் அருமை தெரியும். எண்பது கிலோமீட்டரிலும் புறுபுறுக்காத வேகம். நூறில் உச்சம் தொடுகையில் கறுப்பி கம்மென்று தாக்குப்பிடித்தது. இந்தக்காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்துவந்தேன் என்ற மாதிரி இந்தக் கறுப்பியின் அருமை தெரிய ஒரு நட்டுக்கழன்ற காரை ஓட்டவேண்டியிருந்தது என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். 

முதல் வருடம் கறுப்பியை பார்த்துப் பார்த்துக் கவனித்தேன். ஒவ்வொரு மாதமும் குளிப்பாட்டினேன். உள்ளே வக்கியூம் பிடித்தேன். ஒரு டிஷு பேப்பர் உள்ளே இருக்கலாகாது. வாழைப்பழத்தோல், கௌப்பி, கடலை, உருளைக்கிழங்கு சிப்ஸ் சிறு துகள்கூட அண்டக்கூடாது. யாராவது உள்ளே ஏறுவதென்றால் சப்பாத்தை நன்றாகத் தட்டிவிட்டே ஏறவேண்டும். கோப்பிகூட வெளியே குடித்துவிட்டே உள்ளே நுழையவேண்டும். யாரும் யன்னலைக் கண்டபடி திறக்கக்கூடாது. வாகனத்தில் சாயக்கூடாது. நான் என்றைக்கும் உறவுகளை, நண்பர்களை, மனிதர்களை அப்படிக் கவனிப்பதில்லை. ஆனால் கறுப்பியைக் கவனித்தேன். அதுபோலவே கறுப்பியும் என்னைக் கவனித்தது. எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லை. மகிழுந்து என்றால் அசல் மகிழுந்து. 

ஆனால் எல்லாமே முதல் வருடம்தான். 

கறுப்பியை வாங்கி இரண்டாம் வருடம் ஒரு சித்திரை மழை நாளில் வியற்நாமி ஒருத்தன் புக்கென்று கறுப்பியை பின்னால் வந்து இடித்துவிட்டான். அல்டோனா பீச் பக்கமாக அது நிகழ்ந்தது. உடனேயே காப்புறுதிக்கு அழைப்பு எடுத்து, காரை திருத்தகத்துக்கு கொண்டுபோய்விட்டு, ஒரே வாரத்தில் திருத்தி எடுத்து இன்னொரு இரண்டு மாதங்கள் ஓடியிருக்கமாட்டேன். இந்தத் தரித்திரம் பிடித்த ஏழரைச்சனியால் இந்தத்தடவை நானே போய் ஒரு மெக்சிக்கன்காரிக்குப் பின்னாலே இடித்தேன். இம்முறை கறுப்பிக்கு அடி பலமாக இருந்ததில், திருத்தப்பட்டு மறுவீடு வர அவளுக்கு ஐந்து வாரங்கள் பிடித்தது. அந்த ஐந்து வாரங்களுக்கு மாற்றீடாக காப்புறுதி நிறுவனம் இன்னொரு காரை எனக்குக் குடுத்திருந்தது. அந்தக்கார் கறுப்பியைவிட புது மொடல். தோல் உறை போட்ட இருக்கை, வேகத்தை செட் பண்ணக்கூடிய வசதி, எல்லாப்பக்கமும் கமரா, நவிகேசன் வசதி என புதுக்காரைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. அதன் பெயிண்ட்கூட நல்ல நீலத்தில் பளிச்சென்று இருந்தது. 

ஐந்து வாரங்களில் கறுப்பி திருத்தப்பட்டுத் தயாராகியபின்னர் மாற்றீட்டுக்காரைக் கொடுக்கவே மனமில்லை. அதன்பின்னர் கறுப்பியை எடுத்து ஓடவும் அலுப்பாக இருந்தது. இத்தனைக்கும் கறுப்பி என்னவோ பழையமாதிரியே அலுப்பு குலுக்கு எதுவும் இல்லாமல்தான் ஓடியது. குறை சொல்வதற்கில்லை. ஆனால் எனக்குத்தான் விட்டுப்போய்விட்டது. நான் முன்னர்மாதிரி கறுப்பியைக் கவனிப்பதை நிறுத்திவிட்டேன். முறையாக அதனை சேர்விஸ் செய்வதில்லை. ஒயில் தண்ணி செக் பண்ணுவதில்லை. இப்போதெல்லாம் கறுப்பியைக் கழுவுவதேயில்லை. உள்ளே வாசனைத்திரவியத்தை வீண்காசு என்று வாங்கிச் செருகுவதில்லை. தவிர அழுகிய வாழைப்பழத்தோல்கள், காய்ந்த தோடம்பழ தோல்கள், கடித்த அப்பிள் நடுப்பகுதி எல்லாம் சேர்ந்து ஒரு றொபிகல் வாசனைத் திரவியத்தை தாமே உற்பத்திசெய்து பரப்பிக்கொண்டிருந்தன. கறுப்பியின் இருக்கைகளில் கோப்பிக்கறை எல்லாவிடமும் கிடந்தது. தவிர தூசு சகல இடங்களிலும் தட்டியிருந்தது. சமயங்களில் கறுப்பியை பார்க்கக் கவலையாகவும் இருக்கும். ஆனால் தூசு துடைக்கப் பஞ்சி. காசு கொடுத்துக் கழுவ கஞ்சம். வேண்டாப் பொண்டாட்டிக்கும் எதுக்கு வீணா வளையலும் வைரமும்? 

இதெல்லாவற்றையும் பார்த்து கறுப்பி கறுவிக்கொண்டிருந்ததோ என்னவோ. சமயம் பார்த்து என் காலை வார ஆரம்பித்தது. 

மூன்றாவது வருடம் கறுப்பிக்கு அப்பன்காரன் கொடுத்த வொரண்டி முடிவடைந்ததும் முதன்முதலாக ரேடியேட்டர் வழியாக முட்டைக்கண்ணீர் வடிந்தது. ஐநூறு டொலர். பின்னர் உன்னை சூடேற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தது. எழுநூறு டொலர். ஒரு நாள் நித்திரையால் எழும்பமாட்டேன் என்று அழுங்கு பண்ணியது. இன்னொருதடவை பற்றி மாற்ற முன்னூறு டொலர். பல்பு, டயர், மீளவும் ரேடியேட்டர், பில்டர், எட்செற்றா எட்செற்றா என மகிழுந்தாக இருந்த கறுப்பி நான்கே வருடங்களில் கவலையைக் கொடுக்கும் கவலுந்து ஆனது. 

சரி, எல்லாப் பிரச்சனைகளையும் ஒன்றடியாகத் தீர்க்கலாம் என்று திருத்துநரிடம் போய், என்ன செல்வென்றாலும் பரவாயில்லை என்ற ஒரு வார்த்தையைத் தவறுதலாகச் சொல்லி, இரண்டாயிரம் டொலர்களை அழுது, கறுப்பியைத் திருத்தி எடுத்துக்கொண்டு வந்தேன். திருத்தகத்திலிருந்து வெளியேறி மூன்று தெரு தாண்டியவுடனேயே அதனை பக்கிங் பிளக்கி என்று திட்ட ஆரம்பித்தேன். திட்டி முடித்து சில நிமிடங்களில் எங்கோ அருவி ஓடும் சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தால் கறுப்பியின் சீட்டுக்கு கீழேதான் எங்கோ சத்தம். எங்கோ தண்ணீர் அல்லது பெற்றோல் ஸ்டக் ஆகிக்கிடக்கிறது. ஓடும்போது அதுவும் ஓடுகிறது. உடனே யு-டேர்ன் அடித்துக்கொண்டு மெக்கானிக்கிடம் ஓடினேன். அவன் கறுப்பியைச் சுத்தமாகச் செக் பண்ணிவிட்டு அவள் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் என்று சீதையை அழைத்துவந்த அக்கினி பகவான் மாதிரி ஓட்டிவந்து நிறுத்தினான். இல்லை, இது தங்கமில்லை, ஒழுங்காகச் செக் பண்ணு என்றேன். என்ன இழவு என்றால், அவன் செக் பண்ணும்போது தண்ணி ஓடாது. ஆனால் நான் ஓட்டும்போது அருவிச்சத்தம், நீர் வீழ்ச்சி எல்லாம் கேட்கும். என் பிரமைதானோ என்று சந்தேகித்து வேறு சிலரையும் கறுப்பியில் ஏற்றி சத்தம் கேட்கிறதா என்று கேட்டேன். ம்ஹூம். எந்தச் சிலமனும் இல்லை. பேய்ப்படங்களில் அல்லது சாமிப்படங்களில் வருவதுபோல எனக்கு மாத்திரம் அந்தச் சத்தம் கேட்டது. 

ஒரு கட்டத்தில் எல்லோரும் கறுப்பிக்குக் காத்துக்கறுப்பு பிடித்துவிட்டது, சீக்குப்பிடித்த கறுப்பியை விட்டுவிடுமாறு அறிவுரை சொன்னார்கள். இதில் மிகப்பெரிய அவமானம் ஒன்றும் நிகழ்ந்தது. ஒரு நாள் கூப்பர் வீதியில் நடு லேனில் வந்துகொண்டிருந்தபோது திடீரென்று கறுப்பி சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டது. பற்றி இருந்தது. ஒயில் ஓகே. தண்ணி லெவல் ஓகே. சூடு கூட ஓகே. ஆனால் ஸ்டார்ட் பண்ணமாட்டேன் என்று விறுமத்துக்கு சில்லெடுத்தது. பின்னர் கறுப்பியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச்செல்லுமாறு சாலையோர அவசர உதவி நிறுவனத்துக்கு சொல்லிவிட்டு, என்னை வந்து கூட்டிச்செல்லுமாறு அப்பாவுக்கு அழைப்பு எடுத்தேன். அப்பா கூட்டிச்செல்ல வந்தார். நான் கைவிட்ட அந்த நட்டுக்கழன்ற காரில். இப்போது அந்தக்காரில் ஹீட்டர், கூலர், ரேடியேட்டர், எஞ்சின் என எல்லாமே வேலை செய்தது. என் ராசியா. இல்லை என் அப்பன் ராசியா தெரியவில்லை. முப்பது வருடக்காரின் பெயிண்ட் கறுப்பியினதைவிட பளிச்சென்று இருந்தது. 

அப்பா சொன்னார், 

“உந்தக் கறுப்பி பிரச்சனை குடுக்குதென்றால் கொஞ்சநாளைக்கு இத வச்சு ஓடன்” 

எனக்கு அவமானமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. வாங்கிக் கொஞ்சநாள் ஓடினேன். சனியன் பிடித்தது இப்போது கனலில் கருவாகியின் இரண்டாம் சரணமும் முடித்து அடுத்த பாட்டுக்கு திருச்செந்தூரின் கடலோரத்துக்கும் போனது. எம்மை ஏமாற்றியவர்களுக்கு வாழ்ந்து காட்டுவதைவிடப் பெரிய தண்டனை ஏதுமில்லை என்ற வள்ளுவர் வாக்குக்குக்கமைய அந்த நட்டுக்கழன்ற கார் எனக்கு ஒரு காட்டு காட்டியது. என்ன செய்வது. காருக்கு வந்த வாழ்வு என்று சமாளித்து ஓட்டிக்கொண்டிருந்தேன். 

மீண்டும் கறுப்பி அப்பன் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்தது. இம்முறை கறுப்பியோடு நான் பெரிதாக முட்டி மோத முயலவில்லை. கோபித்துக்கொண்டு பிறந்தவீட்டுக்குச் சென்ற மனைவியை மீண்டும் புகுந்தவீட்டுக்கு வந்த புதிதில் எப்படிக் கவனிப்பார்களோ அப்படி நான் கறுப்பியைக் கவனித்தேன். வேகம் எண்பதுக்கு மேலே இப்போதெல்லாம் போவதேயில்லை. காலை, மாலை என அனுதினமும் ரேடியேட்டரில் தண்ணி அடிப்பது. ஓயில் செக் பண்ணுவது. குளிரென்றால் எனக்கு இரண்டு ஸ்வெட்டரை எக்ஸ்ராக போடுவது. வெயில் என்றால் ஐஸ்பழம் சூப்புவது என்று கறுப்பியோடு தனகாமல் ஓட்டப் பழகிக்கொண்டேன். நூறு கிலோமீற்றர் எல்லைக்கு அப்பால் எந்த பிறந்தநாள் வைபவங்கள், இலக்கியக் கூட்டங்கள், இத்தியாதி நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொண்டேன். கோயிலில் ஒரு பூசை செய்து எலுமிச்சங்காய் மிதித்தால் கறுப்பி சரியாவாள் என்று ஒரு அன்ரி சொன்னதைக்கேட்டு ஒரு லூசுவாய் ஐயருக்கு ஐம்பது டொலர் கொடுத்தேன். பயணவழியில் இருபது கிலோமீட்டருக்கு ஒரு தடவை கறுப்பியை நிற்பாட்டி கோபம் தணித்தேன். இப்படி கண்ணப்பர் இரத்தம் வடிந்த சிவலிங்கத்தைக் கவனித்ததுபோல நான் ஒயில் வடியும் கறுப்பியை பார்த்துப் பார்த்துக் கவனித்தேன். 

But you know what, no matter how hard I tried, she just kept fucking me. 

இதுக்குமேலே ஆட்டேலாது போ என்று சொல்லி கறுப்பியை விற்பதாக முடிவு செய்தேன். கடையில் போய்க்கேட்டால் அறா விலையில் பேரம் பேசினார்கள். ஐநூறு டொலரை. இந்தக்காரை ஏன் வாங்கினாய் என்று திட்டினார்கள். அப்போதே சொன்னோமல்லவா என்று அறிவுரை சொன்னார்கள். முட்டாள் பய மவந்தான் இதனை வாங்குவான் என்றார்கள். அப்பன் முட்டாளாய் இருப்பதற்கும் நான் காரை வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. பேசாமல் காரைக்கொண்டுபோய் யார்டில் விட்டுவிட்டுவரலாம் என்று சிலர் சொன்னார்கள். அப்பாவுக்குக் கோல் பண்ணி கறுப்பி வேண்டுமா என்று கேட்டேன். தனக்கு நட்டுக்கழன்ற காரே போதும் என்று அவர் சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. பேசாமல் கொடுத்துவிட்டு ஐநூறு டொலரையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணினேன். அந்தக்காசில் ஐபாட் மினி ஒன்றையாவது புதிதாக வாங்கலாம். 

அம்மா கோல் பண்ணினார். 

“டேய் என்னடா கறுப்பியை விக்கப்போறியாம்” 

“ஓமம்மா … தொடர்ச்சியா அலுப்புக்குடுக்குது … என்ன செய்ய?” 

“டேய் வித்திடாதடா … அதிண்ட நம்பர் 147 அல்லோ” 

“அதுக்கென்ன?” 

“என்ர பிறந்த வருசம் 1947, அதில ஒன்பதை எடுத்தா கறுப்பிண்ட நம்பர் வருது …” 

“அதால?” 

அம்மா தயங்கினார். 

“அதால அந்தக்காரில ஏறெக்க எனக்கு ஏதோ … சொல்லத்தெரியேல்ல … ஆனா விக்காத பிளீஸ்” 

“சரி வையன ..” 

போனைக் கட் பண்ணிவிட்டு வெளியில் வந்து கறுப்பியைப் பார்த்தேன். 147 நம்பர். இப்போது எனக்கு ஒன்பதாம் நம்பரும் சேர்ந்து 1947 என்றுதான் தெரிந்தது. உள்ளே பின் சீட்டில் அம்மாவும் இருப்பதுபோல. ஹீட்டர் வேலை செய்யாத கறுப்பிக்குள் அம்மா ஒன்றுக்கு இரண்டு ஜக்கட்டுகளைப்போட்டு குளிரில் குறண்டியபடி உட்கார்ந்திருந்ததுபோல. கறுப்பியை ஒரு தடவை சுற்றிவந்தேன். இன்னமும் ஒயில் திட்டுத் திட்டாக வடிந்துகொண்டிருந்தது. ரேடியேட்டரில் தண்ணிர் குறைந்திருந்தது. உள்ளே உட்கார்ந்து ரேடியோவைத் திருகினேன். ம்ஹூம் வேலை செய்யவில்லை. அப்படியே கறுப்பிக்குள் உட்கார்ந்திருந்தேன். யோசித்துப்பார்த்தேன். கறுப்பியைக் குற்றம் சொல்லி என்ன பயன்? நான் சரியாக அதனைக் கவனிக்கவில்லை. ஒழுங்காக சேர்விஸ் செய்யவில்லை. உள்ளே சுத்தமாக வைத்திருக்கவில்லை. ஓடும்போதெல்லாம் வைதுகொண்டே ஓடியிருக்கிறேன். எந்தக் கறுப்பிதான் இப்படிப்பட்டவனை சமாளிப்பாள்? என் தவறுக்கு கறுப்பியைச் நொந்து என்ன பயன். கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. 

திரும்பவும் அம்மாவின் அழைப்பு. 

“டேய் .. அச்சாப்பிள்ளை …. அதை வித்திடாத… ஏதும் ரிப்பெயர் எண்டா நான் காசு தாறன்” 

“ஐயோ ... அலுப்படிக்காதையனை, அதை விக்கேல்ல.. போதுமா” 

அழைப்பைக் கட் பண்ணிவிட்டு ஸ்டியரிங்கில் அயர்ச்சியுடன் தலை கவிழ்த்தேன். 

‘பீங்ங்ங்…’ என்று கறுப்பி சந்தோசத்தில் அலறியது.

000

Comments


  1. //அப்பா அந்தக்காரைத் தன்னிடம் கொடுக்குமாறு சொன்னார். உடனே அந்த வாகனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு இன்னொரு காரை வாங்கலாம் என்று முடிவு பண்ணினேன்.//
    //அப்பாவுக்குக் கோல் பண்ணி கறுப்பி வேண்டுமா என்று//

    தடம் மாறும் பயணங்கள்.....


    //என் தவறுக்கு கறுப்பியைச் நொந்து என்ன பயன்//
    இதை புரிந்து கொள்ள இவ்வளவு......

    ReplyDelete
  2. எனக்கு நல்லா வேணும். இந்த கறுப்பியை பார்த்து நக்கலாக சிரித்தேன் . இப்ப என்னுடைய ப்ளாக்கி கழுத்தறுக்கிறது. இவன் ஜப்பான் காரியை பார்த்து பல்லை காட்டும்போதே நினைத்தேன்.... இப்ப நல்லாவே இவனுக்கு சிவப்பி ஆப்பு வைத்துவிடடாள். கருப்பண்ணசாமி மாதிரி பார்த்து பார்த்து கறுப்பனை கவனித்தேன். கடைசியில் ஒழுங்கை என்றாலும் பரவாயில்லை நடுரோட்டில வைத்து கழுத்தறுத்துவிட்டான்.

    ReplyDelete
  3. ஹா ஹா ... எல்லாருக்கும் கறுப்பிகளோடு சிக்கல்தான்போல.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .