கொமெண்டை அழிப்பது என்று சொல்லிவிட்டேனே ஒழிய எனகெண்டால் அதற்கு மனமே இல்லை. வெண்முரசு அளவுக்கு இல்லையாயினும் விஷ்ணுபுரம் அளவுக்கு நீண்டுவிட்ட ஒரு அற்புதமான கொமெண்ட். இதனைப்போய் அடிச்சுவடியே இல்லாமல் அழிப்பதா என்று ஒரே கவலையாக இருந்தது. கருத்து நல்லா இருக்கு. கிசோகருக்குத்தான் வேணாம். தனியா நானே படலைல ஒரு பதிவாப் போட்டால் என்ன? இல்லை, வேண்டாம். படலை என்ற ஒரு தளம் இருப்பது எனக்கே மறந்துவிட்டது. பேஸ்புக்கில ஷெயார் பண்ணினாலும் நாலு லைக்குகூட இப்ப விழுகுதில்ல. எதுக்காக இருக்கும்? நாலாயிரம் பிரண்டுகள் இருந்தாலும் நாலு பேரை மாத்திரம் விட்டிட்டு மத்த எல்லாரையும் அன்பஃலோ பண்ணி வச்சிருக்கிறதால மார்க்கு அலேர்ட் ஆகி என்னை இந்த சமூகத்திற்கு இருட்டடிப்பு செய்கிறான் என்று தெரிந்தது. என்ன செய்யலாம்?
ஜெமோவுக்கு ஒரு கடிதம் போட்டால் என்ன?
பளிச்சென்று வந்த ஐடியாவில் உடல் ஒருமுறை குழுங்கி அடங்கியது. யெஸ். லெட்ஸ் டு இட். முதலில் அவருடைய கதையை சிலாகித்து ஒரு பிட்ச் பண்ணலாம். பின்னர் மெல்லமாகச் சமூகம் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டு, கிசோகரை இழுத்துவிட்டு, கடைசியாக என்னுடைய ஆராய்ச்சிக் கொமெண்டை எழுதி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கடைசியில் கேட்டால் தெறிக்கும். உடனே அழித்துக்கொண்டிருந்த கொமெண்டை அப்படியே கைவிட்டுவிட்டு நோட்ஸ் அப்பிளிகேசனைத் திறந்து ஜெமோவுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.
யெஸ். யு கெஸ்ட் இட் ரைட். இன்னமும் ஒண்டுக்கடித்தபடியே.
ஜெமோவுக்குக் கடிதம் என்றவுடனேயே ஏனோ தெரியவில்லை எழுத்து நடை வணிக எழுத்திலிருந்து இலக்கிய எழுத்துக்குத் தடாலடியாகத் தாவிவிட்டது.
அன்புள்ள ஆசானுக்கு,
நீங்களும் நாகசைதன்யாவும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் இரவு நாவலை இன்று பதினெட்டாவது தடவையாக வாசித்து உள்வாங்க முயன்று தோற்றுப்போனேன். ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் அந்நாவல் எனக்கு ஒவ்வொரு அக எழுச்சிகளை தன்னியல்பில் பரப்பிக்கொண்டேயிருக்கின்றது. ‘இரவு ஒரு வாசனைத் திரவியத்தைப்போல பரவுகிறது’ என்று எஸ்.ரா யாமத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால் உங்கள் இரவுகள் அதினின்றும் மேலானவைபோலத் தோன்றுகின்றன. அவை இந்தியப் பெருநிலத்தின் அத்தனை வகை நீலிகளையும் தன்னகத்தே அலையவிடுகின்றன. நாவலை வாசிக்கும்போது இரவுலாவிகளின் உலகில் என்னையும் ஒரு பிரதிநிதியாகவே உணர்கிறேன். எப்படியோ தெரியவில்லை. நான் இரவுலாவியாக உரு மாறியவுடனேயே ஏழாம் உலகத்தின் சில ஷணங்களையும்கூட அனிச்சையாக உணரமுடிந்தது. சிந்தித்துப்பார்க்கையில் சித்தர்களும் அகோரிகளும்கூட ஒருவகையில் இரவுலாவிகள்தாமே. இரவுப்பொழுதில் நம் இரகசியங்களை மறைத்து வைக்கவேண்டிய பெரும் பாரம் அறவே இல்லாமல் போகிறதல்லவா? இரவின் நிர்வாணம் கொடுக்கும் அலர்ச்சி சொல்லில் மாளாதது. அண்மையில் என் நண்பர்கள் இருவர் காசிக்குச் சென்றிருந்தபோது உங்கள் ஏழாம் உலகத்தில் ஒவ்வொரு சொல்லையும் வாழ்ந்துபார்க்கமுடிந்தது என்று சிலாகித்தார்கள். ஒரு நாவல் மனிதர்களை அதன் சொற்களூடு மீள இமைந்திடச் செய்கிறது என்பதை இவ்விடம் அறிய முடிகிறது.
சார், நான் உங்களிடம் இதனைக் கேட்கவேண்டும் என்று பலநாள்களாகவே எண்ணியிருந்தேன்.
இரவுலாவியாக நான் ஆகியபின்னர், சமூக வலைத்தளங்கள் எனக்கு மீளாப் பெரும் பகலாவே காட்சி அளிக்கிறது. பகல் பரப்புகின்ற வெளிச்சத்தில் மனிதர்களின் நிஜ முகங்களும் அவர்கள்தம் குணங்களும் கண்களைக் கூசச்செய்கின்றன. புகழ் மயக்கம் அங்கு ஒரு எரிமலைபோல அவ்வப்போது வெடித்து எரிகுழம்பியாய் விரவி சுற்றத்தைத் தீக்கிரையாக்குகின்றது. எனக்கு ஒன்று புரியவேயில்லை ஆசானே. புகழுக்காக மனிதன் ஏன் மயங்கவேண்டும்? மனித நாகரிகத்தில் புகழ் எப்போது அவனோடு வந்து இணைந்துகொண்டது? ஏனைய விலங்குகளிடம் புகழ் மயக்கம் இருப்பதுபோலத் தெரியவில்லை. போர்த்துக்கீய அறிஞர் பாலபட்ட பெந்தி என்பவர் சொல்கிறார், மனிதர்களோடு நாய்கள் கூடப்பழகமுன்னமேயே மனிதர்கள் புகழோடு ஒட்டிப்பழக ஆரம்பித்துவிட்டனர் என்று. இந்திய ஞானமரபில் புகழின் இடம் எவ்விடம் இருக்கிறது சார்? இச்சிறு சீடனுக்கு விளக்கிடல் வேண்டும்.
அந்தப்புள்ளியிலேயே நான் என் அடுத்த கேள்வியையும் முன் வைக்கிறேன். உங்கள் அறிவுரைப்படி நான் இப்போது சமூக வலைத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. ஆனால் அவ்வப்போது என் நண்பர்கள் அங்கு என்ன நடக்கின்றது என்று சந்திக்கும்போது சொல்வதுண்டு. அப்படி ஒரு நண்பர்களுடனான சொல்லாடலின்போதுதான் இணையத்தில் கிசோகர் என்பர் வெளியிட்ட கருத்தியல் ஒன்றைக் கேள்விப்பட நேர்ந்தது. சர்வாதிகாரிகள் எல்லோரும் கொடுங்கோலர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று ஹிட்லருக்கும் லீகுவான்யூக்கும் புனிதர் பட்டம் கட்ட அவர் முனைந்திருந்தார். அதைக்கேட்டதுமே என் உள்ளம் மிகுந்த அலைச்சலுக்கும் வெக்கைக்கும் உள்ளானது. எப்படி முடிகிறது இந்த மனிதர்களால்? ஏன் இவர்கள் இத்தகு வினைகளை ஆற்றல் வேண்டும்? நீங்கள் சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். ஜேர்மனி ஏர்போர்டில் ட்றான்சிட் செய்திருக்கிறீர்கள். உங்கள் சிந்தனையில் லீகூவான்யூவையும் ஹிட்லரையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என அறியத்தந்தால் அகம் மகிழ்வேன்.
எனக்கென்ன தோன்றுகின்றதென்றால்…
தட்ஸ் இட். இதற்குப்பிறகு நான் அந்தக் கொமெண்டைக் கொண்டுவந்து கொப்பி பேஸ்ட் பண்ணிப்போட்டால் பிரிக்கும் என்று தோன்றியது. மீண்டும் பேஸ்புக் அப்ளிகேசனுக்கு ஸ்விட்ச் பண்ணினேன்.
யெஸ். யு கெஸ்ட் இட் ரைட். தொடர்ந்து ஒண்டுக்குப்போனபடியே.
முடியும் தறுவாய் என்பதால் எச்சில் துப்பவேண்டும்போலத் தோன்றியது. கொமெடுக்குள் உப்பித் துப்பினேன்.
‘மல்லி …. மே .. பலன்ன’
மீண்டும் கடவுளின் குரல் கேட்டது. ஐ நோ. ஐ நோ. திருப்பித் திருப்பிக் கடவுள் வந்தால் சர்ப்பரைஸ் எலிமெண்ட் போய் அலுப்புத் தட்டிவிடும். பட் தேவையாக இருக்கிறது மக்கள்ஸ். மன்னித்தருள்க. நான் குனிந்துபார்த்தேன். கரப்பான் தண்ணீரில் தத்தளித்தபடியே மிதந்துகொண்டிருந்தது. கரப்பான்களுக்கு நீந்தத்தெரியுமா என்ற ஒரு சந்தேகம் வந்தது. டைனோசர் காலத்துக்கு முன்னமேயே இருந்த உயிரி. இத்தனை காலமும் நீந்தப்பழகாம இருக்கமுடியுமா? ஒருவகையில் கடவுளைப்பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இந்த மனுசன் எதுக்காக இவ்வளவு கஷ்டப்படுது? சிலுவைல அறை வாங்குது. காவிரி கோலிங் செய்யுது. மனுசியோட தப்பியோடுது. பேசாம சிவனே எண்டு சிலையா இருந்தாலே போதுமே. நம்மாளு பதிகம் பாடி, கரகாட்டம் ஆடி, தீ மிதிச்சு, கூட்டம் கூட்டமா வந்து பிரதட்டை பண்ணி, அடி அழிச்சு, ஃபனி பிசினெஸ் எல்லாம் பண்ணுவாப்ள. எதுக்காக கரப்பான் வேசம் கட்டி, குப்புறக் கவுண்டு, பிளஷ் பண்ணாத கொமெடுக்குள்ள விழுந்து. இட்ஸ் லிட்டரலி எ ஷிட்டி லைஃப்.
‘சொல்லுங்கள் தேவனே… இந்தத் தடவை உங்களை என்னால் தூக்கிவிடமுடியாது. சாரி.’
‘அதெல்லாம் தேவையில்லை. ஐ ஆம் டூயிங் கிரேட் ஹியர். ஒன்றே ஒன்றை மாத்திரம் நான் உனக்குச் சொல்ல மறந்துவிட்டேன். அவ்வை சொன்ன ‘வரப்புயர’போல நான் உனக்குச் சொல்லப்போகும் தத்துவம் இது. கேள்’
எனக்கு டிக் என்றது. இந்தாள் ஒரு தத்துவத்தைச் சொல்லப்போய், இனிவரும் சமுதாயம் அதனைப் பரப்ப வெளிக்கிட்டு, அது பேமசாகி, எல்லா வீட்டுச் சுவர்களிலும் இந்தத் தத்துவம் பிரேம் போட்டு மாட்டி வைக்கப்பட்டு. ஐயையோ. அதெல்லாம்கூட ஓகே. ஆனால் தத்துவத்த்தின் பக்கிரவுண்ட் இமேஜுக்கு எதிர்கால ஓவியர்கள் இந்தக்காட்சியை எப்படி வரையப்போகிறார்களோ என்றுதான் அச்சம் வந்தது.
‘அப்புறம்?’
‘வட் அப்புறம்?’
‘நீ எதைச் செய்ய முனைந்தாலும் 'அப்புறம்?' என்றொரு கேள்வியைக் கேட்டுப்பார். உனக்கே விளங்கும்’
கடவுள் சொல்லிவிட்டுத் தொடர்ந்து தத்தளிக்கத் தொடங்கினார். அவர் உண்மையில் தத்தளிக்கிறாரா அல்லது பூல் லைஃபை என்ஜோய் பண்ணுகிறாரா என்று புரியவில்லை. கிடக்கட்டும். எனக்கு அவர் சொன்னது எதுவுமே அவ்வளவாக விளங்கவில்லை. எனினும் கேள்வியைக் கேட்க ஆரம்பித்தேன்.
ரெடி ஸ்டார்ட்.
அப்புறம்?
நான் ஜெமோவுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறேன்.
அப்புறம்?
அவர் தளத்தில் என் படத்தோடு கடிதம் வெளியாகும். ஆளு ஒரு மூடிலிருந்தால் பதிலாக ஒரு ஐநூறு பக்கத்தில் ஒரு புத்தகமும் வெளியாகும்.
அப்புறம்?
நான் இன்னொரு கடிதம் எழுதுவேன்.
அப்புறம்?
என் சிறுகதையை சிலாகித்து திடீரென்று டலசிலிருந்து வெங்கட்ராமன் எழுதிய கடிதம் ஜெமோ தளத்தில் வெளியாகும்.
அப்புறம்?
என் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் பிரபலமடையும். டிசெம்பர் புத்தகத் திருவிழாவுக்கு நான் போவேன். எழுத்தாளர்களோடு படங்கள். சந்திப்புகள். முடிந்தால் ஒரு வெளியீட்டில் பேசவும் செய்யலாம்.
அப்புறம்?
யெஸ். என் புத்தகம் ஒன்று வெளியாகும். ஜெமோ முன்னுரை. அவரையே மெல்பேர்னுக்கு அழைத்து வெளியிடுவேன். புல்வெளிதேசம் சீசன் டூ.
அப்புறம்?
உருத்திரா அண்ணை கொஞ்சம் காண்டாவார். பட் நான் சமாளித்துக்கொள்வேன். எனக்கு ஜெமோ வந்து என் புத்தகத்தைப் புரமோட் பண்ணுவது முக்கியம்.
அப்புறம்?
அப்புறம். ஜெமோ எதிரிகள் என்னைத் திட்ட ஆரம்பிப்பார்கள். சிலர் கொண்டாடுவார்கள். ஈதர் வே, கவனிக்கப்படுவேன். நான் தொடர்ந்து ஒரு சனியனையும் எழுதாவிட்டாலும்.
அப்புறம்?
அப்புறமென்ன, .. இன்னொரு புத்தகம் வெளியிடுவது. கொஞ்சம் செட்டில் ஆனாப்புறகு ஜெமோவையும் விமர்சித்துவிட்டு தனியா ஒரு மடம் கட்டிடோணும். இம்முறை வெளியீட்டுக்கு வண்ணதாசனை கூப்பிடலாம். திரும்பவும் இலக்கியக்கூட்டங்கள். பேருரைகள்.. பிளா பிளா.
அப்புறம்
ஒவ்வொரு இலக்கியவாதியும் இங்கு வந்துவிட்டுத் திரும்பும்போது என்னைப்பற்றி தமிழகத்தில் கொஞ்சம் சொல்லிவைப்பர். அதைக்கேட்கும் ஏனைய இலக்கியவாதிகளும் பாத்வே டு பரதேசம் என்று நான் என்ன குப்பை எழுதினாலும் பாராட்டிச் சிலாகிப்பர். ஐ வில் பிகம் எ சென்ஸெசன்.
அப்புறம்?
பேமஸாயிடுவன். ஈழத்து இலக்கியப்பரப்பில் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாகிவிடுவேன். அனைத்துத் தமிழக எழுத்தாளர்களுக்கும் என் பெயர் தெரியவரும். டொப் டென் லிஸ்டில் வந்திடுவன். ஒரு சர்ச்சை கிளப்பி பேமஸானா டொப் பைவுக்குள்ளகூட வந்திடலாம்.
அப்புறம்?
வட் அப்புறம்? எல்லாம் கிடைச்சிடும். இனி என்னத்தைப் பண்ணுறது. வேண்டுமெண்டால் இன்னொரு புத்தகம் வெளியிடலாம். நோ. சினிமால நடிக்கலாமா? …ஐ டோன்ட் நோ…
அப்புறம்?
அப்புறமென்ன? வயசாயிடும். இளையவர்கள் என்னைப் பாராட்டுவார்கள். கம்பன் கழகம் சான்ஸ் இல்லை. கொழுவீட்டன். மே பி கந்தர்மடம் சனசமூக நிலையம் எனக்கு ஒரு விருது கொடுக்கலாம்.
அப்புறம்?
அப்புறம் நானே இலக்கிய விருது அறிவிப்பேன். 'படலை' விருதும் நினைவுப்பேருரையும். முதல் விருது மெலானியா ட்றம்புக்கு.
அப்புறம்?
இதுக்குமேல நான் என்னத்தைச் செய்யிறது? ஒரு மனிசனிண்ட சாதனைக்கு அளவு கணக்கு இல்லையா?
அப்புறம்?
என்ன ஒரே அப்புறம் அப்புறம். கடைசில எல்லாரையும்போல சாகவேண்டியதுதான். செத்தா அஞ்சலிப்பதிவு எழுதுவார்கள். இதே கிசோகர் ‘உந்த **** ஒரு **** எழுத்தாளன். அன்பு ****’ என்பான். அதற்கு ரிப் என்று கொமெண்ட்ஸ் வரும். 'எப்போ அண்ணா விஜயின் நசல் பட ரிவியூ எழுதுவீங்கள்' எண்டு ஒருத்தன் இடையில் செருகுவான். ஒரு சனியன் ஐடியாவே இல்லாம அதுக்கும் வந்து வாழ்த்துக்கள் என்று கொமெண்டும். இக்கன்னா வராதடா பன்னி. வாழ்த்துகள்.
அப்புறம்?
அப்புறம் ஒரு கொட்டையுமில்ல போ.
ஷிட். ஷிட். ஷிட். பளிச்சென்று ‘அப்புறம்’ தத்துவத்தின் வலிமை எனக்கு விளங்கியது. கடவுளே. கடவுளே. கடவுளே. கடவுளே. நான் உன்னை மூத்திர வெள்ளத்தினுள் விட்டேகினாலும் நீ என்னை மீளவும் பெரும் மலக்குழியில் விழாமல் தடுத்தாட்கொண்டாய். ஐயகோ. ஒரு கணத்தில் நான் என் அகங்காரங்களுக்கு அடிமையாகி, என் இயல்பை நானே தொலைத்து, புகழ் என்னும் மாய இருளினுள் ..பக் பக் பக் … ஏன் இப்படித் தமிழ் வருகிறது? கெட் த பக் அவுட்ட கியர். என்ன நான் கிசோகராகவே மாற ஆரம்பித்துவிட்டேனா? இல்லையே. ஆங்கிலத்தில் தூஷணம் கொட்டும்போது ஏதோ ஒரு வெள்ளைக்கார மிதப்பு வருகிறதே. அவன் தமிழில் மோசமான தூஷணங்களையல்லவா கொட்டுகிறான். சீப் பஃலோ.
அப்புறம்?
போதும். எனக்குப் புரிந்துவிட்டது. இதற்குமேல் வேண்டாம். ஒரு ஆணியும் நான் பிடுங்கத்தேவையில்லை. கடிதமும் வேண்டாம். மயிரும் வேண்டாம். கொமெண்டை அழித்துவிட்டுப் போய்த் தேத்தண்ணியைப் போடவேண்டியதுதான். நான் கிசோகருக்கு எழுதிக்கொண்டிருந்த கொமெண்டை முழுமையாக அழிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் கஷ்டகாலம். அப்போதுதான் உச்சா முடியும் தறுவாய். யெஸ். இட்ஸ் பைனலி பினிஷிங். டொக்டர் சொன்னதுபோல புரோஸ்டேட்டை போய் செக் பண்ணினாலும் காரியமில்லை. இப்பத் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இது தொடர்கிறதே. முடிக்கையில்தான் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும்.
சிந்தாமல் சிதறாமல் டார்கட் பண்ணியபடி, கொமெண்டையும் அழிக்க முயற்சி பண்ணியதில்,
அந்தக் கோதாரி விழுந்த கொமெண்டை தவறுதலாக எண்டர் பண்ணித் தொலைத்துவிட்டேன்.
கிழிந்தது கிருஷ்ணகிரி. ஆனாலுமென்ன? பப்ளிஷ் ஆனதைப் போய் டிலீட் பண்ணவேண்டியதுதான். திரும்பவும் கிசோகர் போஸ்டை நான் லோட் பண்ண முயன்றேன். இண்டர்நெட் ஸ்லோ என்பதாலோ என்னவோ கிசோகரின் போஸ்ட் லோட் ஆகமாட்டேன் என்றது. நேரத்தைப்பார்த்தேன். காலை ஐந்து மணி தாண்டியிருந்தது. இச்சமயம் கிசோகர் சிட்னியில் நித்திரையால் எழுந்திருக்கச் சாத்தியமில்லை என்று நிம்மதி வந்தது. ஆனால் சிலசமயம் ஆள் இந்நேரம் பார்சிலோனா மட்ச் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் வந்தவுடன் மீண்டும் டிக்கென்றது. உடனேயே அழித்துவிடவேண்டும். கமோன். லொக் அவுட் பண்ணி லொகின் செய்தேன். கிசோகர் புரபைலைத் தேடிப்போனேன். கட்டைல போவான், உந்த கப்புக்குள் முப்பது பதிவுகள் போட்டிருந்ததால் கொடுங்கோலன் பதிவைத் தேடிக்கண்டுபிடிக்கவே கடினமாக இருந்தது. அதையும் ஒருமாதிரிக் கண்டுபிடித்து, ஸ்கிரோல் டவுண் பண்ணி என் கொமெண்டையும் தேடிக் கண்டுபிடித்து பதட்டத்தோடு டிலீட் செய்யப்போனேன்.
அந்தச்சமயம் பார்த்து என்ர சீலம்மா போன் வழுக்கி கொமெடுக்குள் விழுந்துவிட்டது.
Comments
Post a Comment