Skip to main content

எல்லோராவின் பதினான்கு கட்டளைகள்





000

ஒரு காதலர்தினத்தின்போது எல்லோரா தன் காதலனுக்கு எழுதிய மின் அஞ்சலின் முதல் வரிகள் இவை. 
“என் கண்ணே பட்டுவிடும்போலத் தோன்றுகிறது. ஒரு பாதிரியாருக்கு இவ்வளவு பயங்கர அழகு கூடாது. அதுவும் உன் கண்கள் இருக்கிறதே. அவை அதி உன்னதமானவை.” 
000 

எஸ்.ராவின் ‘யானை பார்த்தல்’ என்றொரு கட்டுரை இருக்கிறது. அதிலே கோயில் சுவரிலே செதுக்கப்பட்டிருக்கும் கல் யானைக்கு வாழைப்பழம் வைத்துவிட்டு அது சாப்பிடுமா, மாட்டாதா என்று ஏங்குவாள் ஒரு சிறுமி. நீ சாப்பிடாவிட்டால் அதை நானே சாப்பிட்டுவிடுவேன் என்று அவள் அந்த கல் யானையோடு பாசாங்கு பண்ணுவாள். இப்படித்தான் சென்றவருடம் ஹம்பியில் நான் ஒரு நாள் இரவு முழுதும் ஒரு கோயில் யானையையே பாத்துக்கொண்டிருந்ததும் ஞாபகம் வருகிறது. அங்கிருக்கும் விருப்பாட்சர் கோயிலில், யானைக்கு வீபூதியும் குங்குமமும் பூசி, காலில் சங்கிலிகட்டி இழுத்துவந்து நிறுத்தியிருந்தார்கள். பெயர் இலட்சுமி. கோயிலுக்கு வருபவர்கள் இலட்சுமியின் தும்பிக்கையில் ஐந்தோ பத்தோ கொடுத்தால் அவள் அதை வாங்கி பாகனிடம் கையளித்துவிட்டு, காசு கொடுத்தவர்களின் தலையில் தன் தும்பிக்கையால் தொட்டு ஆசீர்வாதமும் செய்வாள். காசுக்குப் பதிலாக வாழைப்பழம் கொடுத்தால் அதை வாங்கி வாய்க்குள் போட்டுவிட்டு கொஞ்சம் பலமாக ஆசீர்வாதம் செய்வாள். இன்னாம்பெரிய யானை, சற்றே மூசினாலே போதும், கூடியிருந்தவர்கள் எல்லோருமே ஓடிவிடுவார்கள், ஆனால் அங்கு சூழவிருந்த யாருமே அந்த இலட்சுமிக்குப் பயப்படவில்லை. அந்த யானை எதுவுமே செய்யாது என்று அதற்கு வாழைப்பழத்தை நீட்டிய ஒரு கைக்குழந்தைக்கே தெரிந்திருக்கிறது. அதே குழந்தை தெருவில் நாய் குரைத்தால் மிரண்டு அழுதுவிடக்கூடியது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலொன்றின் உள் பிரகாரத்தில், ஆங்காங்கே யாத்திரிகள் குளிருக்கு சுருண்டு படுத்துக்கிடக்கும் நள்ளிரவு ஒன்றில், ஐந்து ரூபாவுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் இலட்சுமி என்கின்ற ஒரு கோயில் யானையோடு அளவளாவிக்கொண்டிருக்கும் கணங்கள் கொடுக்கும் உவகை அளவிலாதது. அப்போது திறந்த அவ்வரங்கு முழுதையும் முழு நிலவு மெல்லொளி பரப்பிக்கொண்டிருந்தது. இதே நிலவுதான் சாளுக்கியர்களுக்கும் கோசலர்களுக்கும் விஜயநகர யாத்திரிகர்களுக்கும் ஒளி கொடுத்தது என்பதன் தொடர்ச்சியை அணுகினால் உன்மத்தமே விளையும். 

மகாபலிபுரத்து யானைச் சிற்பங்களைப்பற்றி எஸ்.ரா குறிப்பிடும்போது அவை கல்லை மீறி ஓடிவிடத் துடிப்பவை என்பார். அந்த யானைகள் உன்மத்தம் கொண்டிருக்கின்றன, இரவு நிலா வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் நிலவை வெறித்தபடியே இருக்கின்றன என்பார். அதை நான் யோசித்துப்பார்த்ததுண்டு. கல் யானைக்கு நிலவுக்கு போக ஆசையாக இருந்திருக்கலாம். அல்லது நிலவு தன்னைத்தேடி வரும் என்று அவை கனவு காணலாம். அல்லது கல்யானையின் கண்களில் அதை வடித்த சிற்பியின் கனவு தேங்கியிருக்கலாம். எல்லாக்கலைஞர்களுமே நிலவை அடைய ஆசைப்பட்டவர்கள்தாம். நிலவிடம்தாம் நம் கனவுகள் பல புதைந்து கிடக்கின்றன. நம் முன்னோரின் கனவுகள் இருக்கின்றன. நம் வீட்டுப் பாட்டியின் இளமைக்கால இரகசியங்கள் இருக்கின்றன. அந்தச் சிற்பி தன் காதலியோடு பேசுவதற்கு அக் கல்யானையின் கண்களை சிருட்டித்திருக்கலாம். தன் காதல் முழுதையும் கொட்டிக்கொட்டி அதனை வடித்திருக்கலாம். அதனாலேயே அவ் யானையின் கண்கள் நிலவை நோக்கி ஏங்கிக்கிடக்கின்றன. கல்லை மீறி நிலவிடம் ஏகத் துடித்துக்கொண்டிருந்தன. 

எல்லோராவும் அப்படி ஒருத்திதான். 

000 

எல்லோரா என்றால் என்ன அர்த்தம் வருகிறது என்று தேடிப்பார்த்தேன். 

1. சூரிய வெளிச்சத்தைப்போல பிரகாசிப்பவள்.
2. அழகை ஆராதிப்பவள். அவளைச்சுற்றி எல்லாமே அழகாக இருக்கும்படி பார்த்துக்கொள்பவள். 

3. மிக இலகுவாக நண்பர்களைச் சேர்த்துக்கொள்பவள். சேர்த்த அதே வேகத்தில் அவர்களைத் தள்ளியும் வைப்பவள். 

4. அவள் ஒரு பூந்தோட்டத்தைப்போல. பூந்தோட்டங்களை காதலோடு பராமரித்தாலே அவை பூத்துக்குலுங்கும். காட்டிலே பூந்தோட்டங்கள் உருவாவதில்லை. 

5. அவள் கண்களில் இப்பிரபஞ்சத்துக்கான விடைகள் உறைந்திருக்கின்றன. 

6. குகைகளுக்குள் ஒளிந்திருக்கும் பழம்பெரும் சிற்பம் அவள். 

7. காமத்தை அவள் மூச்சு முட்டக் கொண்டாடுவாள். 

எல்லோரா என்றவுடனேயே எனக்கு ஹெமிங்வேயின் காதலியும் கூடவே ஞாபகத்துக்கு வந்தாள். அது என் மனநிலையாகவும் இருக்கலாம். மனம் நிறைந்த தனிமையும் சோகமும் அவளை ஆட்டிப்படைப்பதாக. எந்நேரமும் சுருட்டுப்புகைகளோடு. அல்லது மருவானா போதையில். தழைய அணிந்த பனியனும். கலைந்த குழலும். காற்சட்டையும். ஒரு கையில் திராட்சை மது நிறைந்த கோப்பையும். மதுக்கோப்பையோடு சேர்த்து கையை என் தோள்களில் போட்டு ‘ஹனி’ என்று போதையில் கிறங்கும் அந்தக் கண்களும். இத்தனைக்கும் ஹெமிங்வேயின் காதலியோடு அவ்வளவுக்கு அளவளாவியவன் அல்லன் நான். எனக்குத் தெரிந்தது எல்லோரா மாத்திரமே. ஆனாலும் ஹெமிங்வேயின் காதலியையும் எல்லோராவையும் ஏன் நான் இணைத்துப்பார்க்கவேண்டும்? இது நான் இருவருக்குமே செய்கின்ற தீது அல்லவா? 

000 

எல்லோராவும் நானும் ஒரே அலுவலகத்தில்தான் பணிபுரிந்தோம். 

அவள் மனித வளப்பிரிவில் புதிதாக வந்து இணைந்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. இந்தப்பெண் அநியாயத்துக்கு என் வாழ்க்கையை குதறியெடுக்கப்போகிறாள் என்று. ஆரம்பத்தில் அதிகம் பேச முயன்று, ஆனால் வெறும் காலநிலை பரிமாற்றங்களோடு முடிந்துவிடுகின்ற மின் தூக்கிச் சந்திப்புகள். அவளுடைய பிறந்தநாளுக்கு எல்லோரையும்போல போய் வாழ்த்து சொன்னேன். நன்றி என்று சொல்லி ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவளுக்கு என் பெயர்கூட ஞாபகம் வராமல் அதைக் கேட்கவும் முடியாமல் சமாளித்தாள். ஒருமுறை அலுவலகத்தில் புதிதாக இணைந்தவரை எல்லோருக்கும் கூட்டிவந்து அறிமுகப்படுத்தினாள். என்முறை வருகையில் ‘மீட் மிஸ்டர் …’ என்று தயங்க நான் என் பெயரைச் சொல்லி முடிக்கவேண்டியிருந்தது. அப்புறம் மின் அஞ்சலில் கெஞ்சி கெஞ்சி எனக்கொரு மன்னிப்பு அஞ்சல் அனுப்பினாள். எங்கள் நாட்டுப்பெயர்கள் மிக நீளமானவை, அதனால்தான் நீ மறந்தாய் என்று அவளுக்கு நான் ஆறுதல் சொல்லவேண்டியிருந்தது. அந்த சம்பவத்துக்குப் பின்னர் எல்லோரா என் பெயரை மறந்ததே இல்லை. பெயர் நீளமாக இருக்கிறதே என்று சுருக்கிக்கொள்ளவும் இல்லை. ஒவ்வொருதடவையும் அவள் என் பெயரை தவறாக உச்சரித்து மேலும் அழகாக்கினாள். எனக்காக, அவள் தன் புன்னகைகளைக்கூட விரயம் செய்ய ஆரம்பித்தாள். 

எல்லோராவுடனான பழக்கம் அலுவலகத்தின் ஆண்டிறுதி நத்தார் கொண்டாட்டத்தின்போதுதான் எனக்கு நெருக்கமாக ஆரம்பித்தது. என் எல்லா உறவுகளையும்போல கடவுள் துணையோடு. 
‘உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?’ 
முன்னே வந்து, மதுக்கோப்பையைத் தாங்கிய கைகளை என் வலது தோளில் போட்டு, மறு கையின் விரல்களில் சிகரட்டும் புகையுமாய், சற்றே கூனலுடன், கருநிற மக்ஸி உடையினூடாக எட்டிப்பார்க்கும் மெல்லிய மார்பகங்களின் பெருமிதங்களோடு, வார்த்தைகளை சளியவிடுகின்ற நிறைபோதை பெண்களுடன் நீங்கள் பழகியிருக்கிறீர்களா? சிந்தனைக்கு அவர்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்ற அதி உன்னதமானவர்களாகத் தெரிவர். ஆனால் நிஜத்தில் அவர்கள் இவ் உலகின் சபிக்கப்பட்ட உயிரிகள். மனதுக்கு இயைந்த மனிதர்களை சேமித்து வைக்கத் தெரியாதவர்கள். உண்மை மனிதர்களை அறியத்தெரியாதவர்கள். அவர்கள்தாம் அந்த நிலவு செல்லத்துடிக்கும் மாமல்லபுரத்து யானைகள். அந்தப் பெண்கள் எம்மோடு அப்படி வந்து பேசும்போதும்கூட அவர்கள் நம்மிடமிருந்து பதில்களை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் பேசுவதை நாம் கேட்கவேண்டும். அவர்களுக்குத் தேவை வெறும் பேச்சுத்துணைதான். அந்த மருவானாபோல. மதுபோல. தங்கள் வார்த்தைகளின் போதையில் தாமே கிறங்குவதற்கு நாம் சற்று இடங்கொடுக்கவேண்டும். அவ்வளவுதான். ஆனால் அதனை நாம் உண்மையோடு சலிப்பில்லாமல் செய்யவேண்டும். பெண்களோடு சேர்ந்து மது அருந்துகையில் அவர்களைவிடவும் குறைந்த அளவிலேயே நாம் அருந்துதல் வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அதுதான் அவர்களுக்கும் பிடிக்கும். போதையில் அரற்றும் ஆண்களை பெண்கள் என்றைக்குமே ரசிப்பதில்லை. மதுபோதையில் அவர்கள் பேசும்போது இயல்பாக, கண்களை மார்பிடை அலையவிடாமல், தோழமையோடு பேச்சை செவிமடுக்கவேண்டும். கடினம்தான். You don’t have to be a saint. But, don’t be a pervert. 

எல்லோரா திரும்பவும் கேட்பாள். 

‘உன்னைத்தான்… சொல்லு .. உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?’  
‘தெரியவில்லை எல்லோரா… உனக்கு இருக்கிறதா?’  
‘என்ன நீ, நான் உன்னைக்கேட்டால் நீ என்னிடமே அதைத் திருப்பி கேட்கிறாய். என் பதிலை அறிந்து அதற்கேற்ப புத்திசாலித்தனத்துடன் உன் பதிலைச் சொல்லப்போகிறாய். அதுதானே. You pervert.’ 

சிரித்தாள். அத்தகு பெண்களின் சிரிப்பை என்றைக்காவது அனுபவித்திருக்கிறீர்களா? சிகரட்புகையைப்போல அவர்கள் சிரிப்பும் இதழோரமாக ஒருவித எகத்தாளத்துடன் சுருள் சுருளாகப் பறந்து வானிடை ஏகும். பெண்களின் புன்னகைகள்தாம் விண்ணின்று மழையாக நம்மேல் விழுகின்றன என்று ஒரு கற்பனை எல்லோராவின் சிரிப்பினில் எனக்கு வந்து போனது. நான் அதை அவளுக்குச் சொல்லாமல் தவிர்த்தேன். பெண்களின் அழகைப்பற்றி அவர்களிடமே வியக்கும்போது அந்த அழகை மாத்திரமே குறிப்பிடவேண்டும். நம் கவித்துவத்தை அதில் கலப்படம் செய்தல் ஆகாது. நல்ல ஓவியத்துக்கு எதற்கு வேலைப்பாடு மிகுந்த சட்டம் வேண்டும்? தவிர மதுபோதையில் பெண்களின் அழகை ஆராதிக்கும்போது தப்பாகவும் தோன்றிவிடும். நான் பதில் சொல்லாமலேயே இருந்தேன். 
‘பரவாயில்லை. நானே சொல்லிவிடுகிறேன். எனக்கு நிச்சயமாகவே கடவுள் மீது நம்பிக்கை இல்லை. I just can’t feel it. கடவுளே இல்லை. அப்புறம் நம்பிக்கையை எங்கு கொண்டுபோய் வைக்க நான்? ஆனால் பார், இதிலொன்றும் எனக்குப் பெருமையில்லை. கடவுளே இல்லை என்று உணருகின்ற இச்சிந்தனை எனக்குக் கவலையையே கொடுக்கிறது. அதிலும் அக்கருத்தியலை நம்புபவர்களைப் பார்க்கையில் பொறாமை வருகிறது. அவர்களுக்கு ஒரு துணை, கொழுகொம்பு எங்குபோனாலும் வந்துவிடுகிறது. எந்தத் துன்பத்திலும் அவர்களுக்கு ஒரு இணை கிடைக்கிறது ஆனால் எனக்கு அப்படி இல்லையே. இறைவனது பெயரைக்கேட்டதுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து, நின்றும் புரண்டும் ஏதேனும் ஆகாளாய்க்கிடக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை பார்த்தாயா?'
‘மாணிக்கவாசகரைப் படிக்கிறாயா என்ன?’ 
“உனக்கும் தெரியுமா அவரை? அந்த மனுசன் ஒரு பாக்கியசாலி தெரியுமா? குதிரை வாங்கப்போன இடத்தில் just like that, he found his personal legend there, silly… isn’t it?”

“யார் உன்னைத் தடுக்கிறார்கள் எல்லோரா? உனக்கு ஆசையென்றால் நீயும் நம்பிவிடேன்”

“அது அவ்வளவுக்கு இலகு இல்லையே. எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை வைக்க ஆசை ஆசையாக இருக்கிறது. ஆசை இருப்பதாலேயே நம்பிக்கை வந்துவிடுமா என்ன? அவனருளாலேதான் அவன் தாள் வணங்க முடியும் முட்டாளே” 

000 

எல்லோராவும் நானும் எப்படி நெருங்கிய நண்பரகளானோம் என்று விபரிப்பது தேவையற்றது. அதில் பெரிதாக ஆச்சரியங்கள் எதுவுமே இல்லை. அலுவலக நட்பு. இரண்டு மூன்று தடவைகள் மதுபான விடுதிச் சந்திப்பு. சில இராப்போசனங்கள். மேலும் பல இராப்போசனங்கள். அப்போது அவள் ஓவியன் ஒருத்தனோடு உறவில் இருந்தாள். உறவு என்று சொல்லமுடியாது. அது ஒரு உறவுடைக் காலம். அவளிடம் ஒரு குழந்தையும் பேசுவதற்கு நிறையக் கதைகளும் இருந்தன. எனக்கும் கேட்க நிறைய நேரம் இருந்தது. கலைஞர்களின் துணைகளுக்கு வீடு செல்லும் அவசரங்கள் என்றைக்கும் இருந்ததில்லை. அவளுக்கும் ஓவியனுக்குமான உறவு. அதன் தழம்பல். அவள் அவ்வப்போது அவனோடு சண்டைபோட்டு விடுதியில்போய்த் தங்கியது. பின்னர் நிரந்தரமான பிரிவு. அவளும் குழந்தையும். அவளுக்கும் பாதிரியாருக்குமான சமீபத்திய தொடர்பாடல்கள். கடவுள் பற்றிய கதைகள். எல்லோராவுக்குள் ஒரு நீண்ட நெடு நாவலே உறைந்திருந்தது. ஆனால் என்னிடம் ஒரே ஒரு வரிதான் நெருடிக்கொண்டிருந்தது. 

I was just being a pervert. 

சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் தனியராக இருந்து, உங்கள் நண்பர்களில் எவருக்காவது காதலனோ காதலியோ இருக்குமென்றால் அவர்களோடு நீங்கள் நெருக்கமாக பழக முனைவீர்கள். அவர்களும் உங்களோடு நெருக்கமாகப் பழகுவார்கள். ஏலவே அவர்களுக்கு ஒரு உறவு இருப்பதால் உங்களுடைய இந்த உறவு விகற்பமில்லாத அற்புதமான வெறும் நட்பு என இருவருமே அதற்குக் காரணம் கற்பிப்பீர்கள். அவர்கள் தம் துணையைப்பற்றி எரிச்சல்படும்போது சுவாரசியமாகக் காது கொடுப்பீர்கள். ஆனால் எங்கோ ஒரு மூலையில் உங்கள் மனதில் ஒரு சிந்தனை துளிர்த்துக்கொண்டே இருக்கும். இவர்கள் எப்போதாவது சண்டையிட்டுப் பிரிய நேரிட்டால்? அவர்கள் அப்படி சண்டையிடவேண்டும் என்று வேண்டமாட்டீர்கள். ஆனால் அவர்களாகவே சண்டையிட்டுப் பிரிந்துபோனால்? அப்புறம் இவனோ இவளோ எனது அல்லவா? அந்த எண்ணம் உங்கள் அடிமனதில் கசிவது உங்களுக்கே தெரிந்திருக்காது. வசந்தம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று உறங்கிக்கொண்டிருக்கும் இலையுதிர்காலத்து மேப்பிள் மர இலைகள்போல. அல்லது கூட்டத்தைவிட்டு பிரிந்துவரும் ஆட்டுக்குட்டிக்காகக் காத்திருக்கும் ஓநாய்போல. 

ஓவியன் விடயத்தில் கொஞ்சம் அசட்டையாக இருந்தது உண்மைதான். ஆனாலும் என்ன? இப்போது எல்லோரா வெறுமனே ஒரு பாதிரியாரைத்தானே காதலிக்கிறாள்? ஒரு பாதிரியருடனான காதல் உடைவதற்கு எத்தகை இலகு சாத்தியங்கள் இருக்கின்றன? 

After all, he is a fucking priest right? 

000 

எல்லோரா எந்நேரமும் பாதிரியாரைப்பற்றியே என்னோடு பேசிக்கொண்டிருந்தாள். 

தான் எழுதிய மின் அஞ்சல்களுக்கு பாதிரியார் பதில் அனுப்பினார் என்று சொன்னாள். அவற்றில் சிலவற்றை அவள் என் முகவரிக்கும் அனுப்பிவைத்தாள். தான் கடவுளைப்பற்றி கேட்டு எழுதியவற்றுக்கெல்லாம் அவர் பொறுமையோடு பதில் அனுப்புகிறார் என்றாள். இதில் காதல் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பாதிரியார் கடவுளைப்பற்றி அஞ்சல் அனுப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? ஆனால் நான் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் அவள் இருக்கவில்லை. பாதிரியாரோடு காதல் என்பதில் ஒருவித சாகச உணர்வை அவள் அடைகிறாள் போன்று தோன்றியது. ஒரு மருத்துவரையோ ஆசிரியரையோ அல்லது கணினி நிபுணரையோ காதலிப்பதில் சாகசங்கள் ஏதுமில்லை. ஆனால் ஒரு பாதிரியாரை. அல்லது ஒரு இராணுவவீரரை. அல்லது ஒரு வயோதிபரை. அல்லது ஒரு பாடசாலை மாணவரை. நாட்டின் சனாதிபதியின் மனைவியை. அல்லது அமைச்சரின் கணவனை. இப்படியான காதல்கள்தாம் சாகச உணர்வைக் கொடுப்பவை. ஆனால் அவை ஆபத்தானது என்று நான் எல்லோராவுக்குச் சொன்னேன். எழுத்தாளர்களைவிட, ஓவியர்களை விட பாதிரியார்கள் மிக மோசமானவர்கள் என்றேன். காரணம் அப்போதுதான் எல்லோரா அந்த ஓவியனுடனான காதல் முறிவிலிருந்து ஒருவழியாகத் தேறி வந்துகொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அந்த ஓவியக் காதலும் எல்லாக் காதல்களையும்போல நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் அவன் வீட்டிலேயே போய்த் தங்கியிருந்தாள். ஒரு ஸ்டீரியோடைப் ஓவியக்காதல் அது. அவன் அவளை ஓவியம் வரைந்தான். முதலில் உடையோடு. பின்னர் அது அகன்று விழும்படியாக. எல்லாமே கலை எனும் பெயரில் கவின்றது. ஓவிய அறையிலேயே இருவரும் காதல் கொண்டார்கள். I fucking knew it was all for sex. அவன் ஓவியங்களை இவள் உடலிலேயே வரைந்தபடி காதல் கொண்டான். எல்லோரா அந்த ஓவியங்களை பின்னர் நான் கேட்காமலேயே எனக்கு அனுப்பிவைத்து அவை எப்படி இருக்கின்றன என்று கேட்டாள். அவளின் உடலின் அழகுக்கு எந்த ஓவியமும் நியாயம் சேர்க்கமுடியாது என்று நான் சொன்னேன். சாதாரணமாக நான் எல்லோராவுக்கு இதனை சொல்லவே முடியாது. ஆனால் கலையின் பெயரில் இவற்றை செய்யும்போது சங்கடங்கள் ஏற்படுவதில்லை. முன்னமேயே சொன்னேனே. அந்த விகற்பமில்லாத நட்பு பற்றி. அது எங்களோடது. அல்லது அந்தப் புகைப்படங்கள் அவள் எனக்குக் கட்டும் காப்புறுதித் தவணைப்பணமாகக்கூட இருக்கலாம். The leverage. குளிரூட்டி அறையிலிருக்கும் மின்விசிறிபோல. நான் அவற்றையெல்லாம் சிந்திக்க விரும்பியதில்லை. அப்போதே எனக்கு இது எல்லாம் கொஞ்சக்காலம்தான் என்று எனக்குத் தெரியும். விரைவிலேயே நிறப்பூச்சுகளின் ஒவ்வாமையால் அவளுக்கு கடி ஏற்பட்டது. ஓவியனும் கொஞ்சநாள் இவளோடு கிடந்துவிட்டு பின்னர் மீளவும் தானும் ஓவியங்களுமாய் மூழ்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு ஏராளம் நிர்வாணங்கள். வழமைபோல ஒரு சாதாரண சண்டையில், பூர்த்தியாகும் தறுவாயிலிருந்த ஒரு ஓவியத்தை இவள் கிழித்தெறிந்தபோது, அவர்கள் காதல் நிறைவுக்கு வந்தேகியது. உண்மைதான். அவர்கள் பிரிந்தபோது மிக உயர்ரக ஷண்டோன் ஷிராஸ் திராட்சை மதுவை உடைத்து அவளோடு நான் பகிர்ந்துகொண்டேன். குழந்தையை எப்படித் தனியாக வளர்க்கப்போகிறேன் என்று அன்றிரவு முழுதும் மதுபோதையில் அவள் புலம்பிக்கொண்டேயிருந்தாள். அவளுக்குப் பிரிவுத்துயர். எதிர்காலம் பற்றிய அச்சம். 

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். எனக்கோ அன்று உன்மத்தம். 

000 

இதையும் எஸ்.ராதான் சொன்னது. 

‘ஒரு கலைஞருக்கு மனைவியாக அமைவது மிகவும் கடினமானது’ 

யோசித்துப்பார்த்தேன். 

‘அப்படி ஒரு மயிரும் கிடையாது. நீ என்ன சனியனுக்கு உன் மனைவிக்கும் கலைஞனாக இருக்கவேண்டும்? மனைவிக்குக் கணவனாக இரு. அது போதும்’ 

000 

எல்லோராவின் பலவீனங்களை நான் நன்றாக அறிந்திருந்தும் அவளை பாதிரியாரைக் காதலிக்க விட்டது என் தவறுதான். ஆனால் இந்தப்பெண் யாரிடம் மயங்குவாள் எப்போது கிறங்குவாள் என்பதை யாரறிவார்? ஓவியனின் பிரிவின்பின்னர் தான் கடவுளை அறியப்போகிறேன் என்று அவள் ஆலயத்துக்குச் செல்ல ஆரம்பித்தாள். தொடர்ச்சியாக பதினைந்து வாரங்கள் தேவாலய பிரசார வகுப்புக்குப் போனாள். அப்போது ஆரம்பித்த நட்பு. ஆனால் ஆரம்பத்தில் நான் பாதிரியாரைப்பற்றித் தவறாக எண்ணம் ஏதும் கொள்ளவில்லை. பாதிரியார்கள் பொதுவாக குழந்தைகளையே துஷ்பிரயோகம் செய்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் எல்லோராவும் ஒரு வளர்ந்த குழந்தைதான் என்பதை மறந்துவிட்டேன். பதினான்காம் நாள் வகுப்பில் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவள் என்னிடத்தில் புலம்பிப்புலம்பி அழுதாள். வெளிச்சங்களை அணைத்துவிட்டு வகுப்பிலிருந்த அனைவரும் இறைவரின் மரணத்தோடு சங்கமித்தோம் என்றாள். நாம் எல்லோருமே அழுதோம் என்றாள். பாதிரியாரால் பேசவே முடியவில்லை என்றாள். அவரைப்பற்றி விதைந்து பேசினாள். வகுப்பு முடிந்த பின்னரும் எல்லோரா தேவாலயத்துக்குத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள். நான் எவ்வளவோ தடுத்தும். 

அப்புறம் அந்தப் பாதிரியார் எங்கோ ஒரு கிராமத்துக்கு மாற்றலாகிப்போகிறார் என்ற செய்தி அறிந்ததும் அதற்கும் எல்லோரா அழுதாள். ‘கவனம். போகிறபோக்கில் நீ அவரைக் காதலித்துவிடப்போகிறாய்’ என்றேன். அவள் உடனே என்னை நிமிர்ந்து பார்த்தாள். ‘Yeah right?’ என்றாள். நான் இப்படிச் சொன்னேன் என்று அதை அப்படியே அந்தப் பாதிரிக்கு மின் அஞ்சலாகப் போட்டுவிட்டாள். 

The rest is a fucking history. 

000 

எல்லோராவின் மின் அஞ்சல்கள் அந்த மாமல்லபுரத்து யானைகள் நிலவுக்கு அனுப்பும் செய்திகளைப்போலவே இருப்பதுண்டு. எதையும் அவள் முழு வாக்கியமாக பூர்த்திசெய்யமாட்டாள். அவள் உறவுகளைப்போலவே அவள் வார்த்தைகளும் இடை நடுவிலேயே உடைபட்டுத் தனித்துவிடுவதுண்டு. 

“நான் இதை உங்களுக்கு எழுதவேண்டியிருக்கிறது. காரணம் சொல்லத்தெரியவில்லை. ஆனால் நீங்கள் எனக்குத் தேவை. உங்கள் அன்பு. அதிலிருக்கும் உண்மைத்தன்மை. மிருது. அந்த தெய்வீக உணர்வு.” 

பாதிரியார் அவளுக்குத் தன்னுடைய புகைப்படத்தை கேட்காமலேயே அனுப்பிவைத்தார். பாதிரியார்கள் அணியும் அங்கியில் இல்லாமல் ஒரு குதிரைவீரனின் உடையில் அவர் இருந்தார். 

“ஆகா. நீங்கள் பாதிரியாரே இல்லை, இரு காளைகளை ஒன்றாக அடக்கும் வீரர் என்று சொன்னால் அப்படியே நம்பிவிடுவேன் நான்” 


இவற்றையெல்லாம் எனக்கு அவள் சொல்லாமலேயே விடலாம்தான். ஆனால் காப்புறுதித் தவணையை அவள் மறக்காமல் எனக்குக் கட்டிக்கொண்டேயிருந்தாள். ‘ஒருநாள் நீ மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகப்போகிறாய்’ என்று அவளுக்கு நான் சொல்லிப்பார்த்தேன். ‘அந்தப் பிக்காஸோ இவனளவுக்கு மோசம் கிடையாது என்று ஒருநாள் என்னிடம் சொல்லி அழப்போகிறாய்’ என்றேன். ‘எப்போதாவது புளித்த பீரை பிக்காஸோ உன் முகத்தில் விட்டெறிந்திருப்பாரா, இந்தப் பாதிரி செய்யக்கூடியவன்’ என்றேன். 
‘அந்த ஓவியன் என்னெல்லாம் செய்தான் என்று உனக்குத் தெரியுமா?’ 
அவள் தன் மேற்சட்டையை சற்றுத்தூக்கி கீழ் முதுகுத்தண்டைக் காட்டினாள். குறுக்கும் மறுக்குமாக சவுக்கடித் தழும்புகள். இவற்றையெலாம் சமாளித்தும் ஏன் அவனோடு அவள் அத்தனை நாள்களாய் வாழ்க்கை நடத்தினாள்? இதை ஏன் அவள் எனக்கு இப்போது காட்டவேண்டும்? நான் யார் என்பதை இன்னுமா அவள் புரிந்துகொள்ளவில்லை? 

எல்லோரா தொடர்ந்தாள். 
‘உங்களைப்போன்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? ஓவியத்தைப்பார்த்து பல்லிளித்துக் கொண்டாடுபவர்கள்தானே நீங்கள், அவன் தனிவாழ்க்கையில் எப்படியானவனாக இருந்தாலும் உங்களுக்கு அவன் உன்னதமானவந்தானே. நான் அல்லவா அனுபவித்தேன்.’ 

நான் அமைதியாக இருந்தேன். 

Sometimes you gotta be a saint too. 

000 

எல்லோராவும் பாதிரியாரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். 

இருவரும் பரஸ்பரம் மின் அஞ்சல்களை அனுப்பி வைத்தார்கள். அதிலும் எல்லோராவின் காதல் அஞ்சல்களில் சொட்டும் விரசங்களில் சங்க இலக்கியத் தலைவிகளே நாணித் தலை குனிவார்கள். இப்போதெல்லாம் தான் பாதிரியாருக்கு அனுப்பும் அத்தனை காதல் அஞ்சல்களையும் அவள் எனக்கும் கூடவே சேர்த்து அனுப்பிவிடுவாள். 

“பாஃதர், நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன். நீங்களும் என்னைக் காதலிக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். இறைவனிடம் இத்தனை அன்பாக இருக்கும் ஒருவர் என்னைக் காதலிக்காமல் போய்விடுவாரா என்ன? ஆனால் ஒருநாள் நான் உங்களையும் தொலைத்துவிடுவேன் என்றே நினைக்கிறேன். என் ராசி அப்படி.” 

அதைப்பார்த்ததும் நான் அவளுக்கு பதில் அனுப்புவேன். 

“அதைத்தான் நான் படித்துப் படித்துச் சொல்கிறேனே” என்றேன். எனக்கு மறுமொழி அனுப்பாமல் அவள் பாதிரியாருக்குத் தொடர்ந்து மடல்களை வரைவாள். 

“புத்தகங்களை நான் ஏன் சேகரிக்கிறேன் தெரியுமா பாஃதர்?” 

நான் மீளவும் இடைமறிப்பேன். 

“சரி காதலிக்கிறாய், குறைந்தது அந்தாளை பாஃதர் என்றாவது அழைக்காமல் இரேன். அசிங்கமாக இருக்கிறது.” 

“அதெப்படி முடியும்? அவரை பாஃதர் என்றே அழைத்துப் பழகிவிட்டேனே?” 

அவள் சொல்வதும் சரிதான் என்று பட்டது. யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் இப்படித்தான் ஆண்களை அண்ணா என்று அழைப்பார்கள். பின்னர் காதலிப்பார்கள். காதலித்து குழந்தைகள் பெற்றுக்கொண்டபின்னர் அதே ஆண்களை அப்பா என்றழைப்பார்கள். திருமணத்துக்கும் குழந்தைப்பேறுக்கும் இடையில் எப்படி அழைத்திருப்பார்கள் என்பது ஏனோ எமக்குத் தெரியவருவதில்லை. ஆண்களைப் பெயர் சொல்லி அழைப்பதில் ஏனோ அவர்களுக்குத் தயக்கம். ஆதலால் அத்தனை தகாத உறவுகளாலும் ஆண்களை விளிப்பார்கள். இதனோடு ஒப்பிடுகையில் ஒரு பாதிரியார் காதலனை எல்லோரா பாஃதர் என்று அழைத்ததில் தவறு இருப்பதாகத் தெரியவில்லைதாம். எல்லோரா ஒரு குழந்தை என்று நான் எண்ணுவதுண்டு. ஆனால் பல சமயங்களில் அவள் என்னிடம் குழந்தைத்தனமாகப் பழகி என்னை விசரன் பேயன் ஆக்குகிறாளோ என்றும் சந்தேகப்படுவதுண்டு. அதிகம் நெடிப்புக் காட்டும் பெண்கள் ஆபத்தானவர்கள். 

எல்லோரா அஞ்சலைத் தொடர்வாள். 

“புத்தகங்களை நான் ஏன் சேகரிக்கிறேன் தெரியுமா பாஃதர்? அவற்றை நான் வாசிப்பதுகூட இல்லை. ஆனால் சேகரிக்கிறேன். வாசிக்காதவரைக்கும் புத்தகங்களும் அவற்றுள் உறையும் கதைகளும் என்னைவிட்டுப் பிரிவதில்லை” 

எல்லோராவுக்கு நானும் ஒரு புத்தகம்தான் என்று தோன்றியது. எனக்கு எல்லோரா ஒரு புத்தகம். இரண்டு புத்தகங்களில் ஒன்றுதான் தற்போதைக்கு வாசிக்கப்படுகிறது. 

அஞ்சல் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் தொடரும். 

“ஒன்று சொல்லவா பாஃதர் … உங்களுடைய கடவுள் இருக்கிறாரே. அவர் வானம் முழுதும் பரந்திருக்கும் ஒரு இராட்சத இழுதுமீன்போல எனக்குத் தெரிகிறது” 

அதற்குப் பாதிரியார் அனுப்பிய பதில் இப்படியிருந்தது. 

“ஆகா. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் நீ இப்போது வந்து சேர்ந்துவிட்டாய். நான் எப்போதும் கனவில் காண்கின்ற, நிஜத்தில் அமைய சாத்தியமேயில்லை என்று எண்ணிய ஒரு பெண்ணை சந்தித்துவிட்டேன் என்பதில் பெருமைப்படுகிறேன். உன்மேலான காதலுக்கு முன்னால் இறைவனும் அவன் சேவையும் எனக்கு முக்கியமேயில்லை. நான் பாதிரியார் அங்கியை உதறிவிட்டு உன்னிடமே வந்து சேரப்போகிறேன். வரலாமா?” 

எல்லோரா அக்கடிதத்தை எனக்கு அனுப்பியபோது கூடவே ‘What the fuck’ என்றும் சேர்த்து எழுதியிருந்தாள். 

000 

காதலிப்பது அவ்வளவு கடினமில்லை. ஒருவரைப் பார்க்கிறோம். உடலின் உயிரியல் மாற்றங்களுக்கு ஆளாகிறோம். உயிரியல் மாற்றங்கள் தம் தேவைக்காக எமக்குள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறோம். காதல் கொள்கிறோம். கூடினால் கூடலும் செய்கிறோம். இத்தனையும் இயல்புதாம். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேலே உதிரியாக சமூகம் நமக்கு ஏற்படுத்திவிடும் கட்டு என்று ஒன்று உள்ளது. அதுதான் கூடிவாழ்தல். கூடிவாழ்தலுக்கு வெறும் காதலும் காமமும் எத்தனைநாள் துணைபோக முடியும்? இவளோடு நம் சிந்தை பொருந்துமா? இவன் பழக்கங்கள் நமக்கு இசைவாகுமா? என் தனிமை என்னாவது? குழந்தைகள் பிறந்துவிடுமோ? யார் அவர்களைக் கவனிப்பது? நான் பறக்கும்போது இவன் இறக்கைகளை ஒடித்துவிடுவானோ? என் கவிதைகளை அவள் குரலொலி குழப்புமா? எத்தனை கேள்விகள்? எத்தனை கவலைகள்? இவற்றை வெறும் காதலும் காமமும் எத்தனை நாள்களுக்கு மூடி மறைக்கமுடியும்? அதனாலேயே திருமணம் ஒரு கட்டு ஆகிறது. அவிழ்க்கமுடியாத கட்டு. ஆனால் கட்டு என்று ஒன்று ஏற்படின், விட்டு விலகுதலும் ஒரு சாத்தியமாக எப்போதும் அமைதல் வேண்டும். 

பின்வருவனவற்றை வரிசைப்பிரகாரம் செய்க. 


1. காதல் உணர். 

2. காமம் கொள்க. 

3. காதலையும் காமத்தையும் ஒரு பாத்திரத்தினுள் இட்டு பாலை தேசம் சென்று உலர விடுக. உறவும் சேர்ந்து உலர்ந்துபோனால் அப்படியே விட்டுவிட்டு மீண்டும் புள்ளி ஒன்றிலிருந்து ஆரம்பிக்குக. 

4. நீ அவ்விடம் ஏகு. அவள் இவ்விடம் ஏகுக. 

5. கூடி வாழ்க. 

6. அன்றில்போல வாழ்தல் அவசியமன்று. வேண்டாமெனத் தோன்றில் விலகுக. வேற்று மனிதருக்காய் வாழாதே. 

7. ஒருவரோடு உறவிலிருக்கையில் இன்னொரு உறவை அண்டவும் விடாதே. நெறிகளுக்காக மட்டுமல்ல. ஆரம்ப இச்சைகளுக்குப்பின்னர் உன் நிம்மதி நிரந்தரமாகப் பாழாகிவிடும். கவனம். 

8. இத்துணை விளங்காது என்று விலக நேர்ந்தால், மீளவும் புள்ளி ஒன்றிலிருந்து ஆரம்பி. 

9. இனி விலகுதல் முடியாதது. இவனும் இவளும் அன்றில்கள் என ஆனபின்னர், 

 if (
           குழந்தைகளுக்காக ஏங்கினால் and

           உன் வாழ்வில் குழந்தைகள் ஒரு விடிவெள்ளி என்று எண்ணினால் and

           உன் விருப்புகளை தியாகம் செய்ய நேரிடாது என்று நம்பினால் and
           உன் விருப்புகளில் குழந்தைப்பேறும் முக்கியம் என்று முடிவெய்தினால் and
    
           குழந்தைகளை நன்மனிதராய் வளர்க்கமுடியும் என்று தோன்றினால் and

          ஊருலகமெல்லாம் செய்கிறது என்பதற்காகவன்றி உனக்காக வேண்டுமெனத் தோன்றினால் )   

          பெற்று இன்புறுக; 

 } 

10. குழந்தைகள் ஆன பின்னரும் துணையை விட்டு விலக நேர்ந்தால், குழந்தைகள் நலனையும் உள்வாங்கி முடிவு எடு. 

11. புள்ளி பத்தில் விலகுதல் என்ற முடிவை எடுத்தால் மீண்டும் ஒன்றிலிருந்து ஆரம்பி. இம்முறை புள்ளி ஒன்பதை அறவே தவிர்த்துவிடு. 

12. இவ்விடம் ஏகின் விருப்பமிருந்தால் வதுவை செய். வதுவை என்பது மன மகிழ்வுக்காக செய்யும் ஒரு கூட்டு நிகழ்வு. பணத்தையும் நேரத்தையும் உளைச்சலையும் குடிக்கக்கூடியது. தவிர அது என்றைக்கும் அவசியமானதொன்றல்ல. வதுவை செய்வதற்கும் குழந்தை பெறுவதற்கும் தொடர்புகள் இல்லை. இரண்டையும் எவ்வரிசைப் பிரமாணத்திலும் செய்யலாம். இரண்டையும் செய்யாமலும் போகலாம். ஒரு குடியும் மூழ்கிவிடாது. 

13. இப்புள்ளிவரை வந்துசேர்ந்த உனக்கு எதற்கு கட்டளைகள்? மீதி வாழ்வையும் சமரசங்கள் இன்றி திகட்ட திகட்ட வாழ்ந்து முடி. போ. 

மேற்சொன்ன பதின்மூன்று கட்டளைகளையும் பின்பற்றுகையில் ஒரு குறுக்குவெட்டுக் கட்டளையையும் எல்லாச்சமயத்திலும் நிலை நிறுத்தவேண்டும். 

“எந்நாளும் எக்காரணம் கொண்டும் ஊர் பேச்சுக்கு செவி சாய்க்காதே. ஊருக்கு ஆயிரம் சோலி. ஆனால் உனக்கு மட்டும்தான் உன் சோலி.” 

000 

எல்லோராவிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவளிடம் இருக்கும் இந்தத் தெளிவுதான். 

அவள் தனக்கென மேற்சொன்ன பதின்மூன்று கட்டளைகளை இயற்றி ஒரு குறிப்புப்புத்தகத்தில் எழுதி இலாச்சிக்கடியில் வைத்திருந்தாள். முதலில் மூன்று கட்டளைகளுடன் ஆரம்பித்தது. அவ்வப்போதான வாழ்க்கை அனுபவங்களோடு கட்டளைகளின் எண்ணிக்கையும் வளர்ந்து இப்போது பதினான்காக பரிணமித்து நிற்கிறது. இக்கட்டளைகளை எல்லோரா ஒரு மருத்துவத் தாதியுடனான இரண்டு வருட உறவு முறிந்த கணங்களில் தன்னைத் தேற்றுவதற்காக எழுத ஆரம்பித்தாள். புள்ளி மூன்றோடு உடைந்த காதலது. அப்பிள் தோட்டத்தில் பழங்கள் பறிக்கும் வேலையிலிருந்த காலத்தில் பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்து அவளோடு வேலை செய்த இளைஞனோடான காதல் முறிந்தபோதும் அவள் இக்கட்டளைகளையே பின்பற்றினாள். புள்ளி ஐந்துவரை அது போனது. ஓவியனுடனான காதல்தான் கொஞ்சம் சிக்கலானது. அப்போது புள்ளி ஒன்பது உருவாகியிருக்கவில்லை. குழந்தையோடு பிரிவது என்பது மிகக்கடினமான ஒன்றாக அவளுக்குப் பட்டது. ஓவியக்காதல் உடைந்த பின்னரே பத்தாவது கட்டளை பிறந்தது. பாதிரியாருடனான காதல் துளிர்த்தபோதே அவள் தன் பதின்மூன்று கட்டளைகளையும் எழுதிமுடித்துவிட்டிருந்தாள். 

அந்தக் குறுக்குவெட்டுக் கட்டளையை நான் சொல்லி அவள் உபரியாகச் சேர்த்துக்கொண்டாள். 

சொல்லப்போனால் எல்லோரா எப்போதுமே காதலுக்கும் காமத்துக்கும் அதிகம் நேரம் யோசித்ததில்லை. ஆனால் பாதிரியாரின் காதலை மாத்திரம் ஏனோ புள்ளி ஒன்றுடனேயே நிறுத்த முயன்றாள்போலத் தோன்றியது. அவள் நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுளையும் கடவுள் தத்துவத்தையும் ஒரு கலையெனக் கருதிக் கொண்டாடுபவள். ஒரு பாதிரியோரோடு போய் கூடலுறுவது பற்றி அவளிடம் ஒரு கூச்சம் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஆச்சரியமாக பாதிரியார்கள் பலருக்கு அந்தக்கூச்சம் இருப்பதில்லை. எல்லோராவின் பாதிரியார் காதலன் புள்ளி இரண்டுக்குத் தயாராகிவிட்டது அவனுடைய கடைசி இரண்டு அஞ்சல்களிலும் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. அவன் எல்லோராவின் மென் சிறு மார்புகள் பரிசுத்தமானவை என்று விளித்திருந்தது அவளை முகம் சுழிக்கவைத்தது. பாதிரியார் கடைசியாக அனுப்பிய அஞ்சல்களுக்கெல்லாம் எல்லோரா பதில் அனுப்பவில்லை. பாதிரியாரிடமிருந்து அவளுக்கு ஒருமுறை சிறு தபாற்பொதி வந்தது. அதனுள் ஒரு மெல்லிய சிலுவை நெக்லசும் இருந்தது. ‘உன் மார்பில் தவழவென எருசெலத்திலிருந்து நான் சுமந்துவந்த சிலுவை இது’ என்று ஒரு குறிப்பும் இருந்தது. அவள் அதற்கு பதில் ஏதும் அவள் அனுப்பவில்லை. ஆனால் அந்த சிலுவையை அணிந்தபடி கொஞ்சநாள் திரிந்தாள். சிலவேளை அவள் தன் பதில்களை எனக்கு அனுப்பாமல் தனியே பாதிரியாருக்கு மாத்திரம் அனுப்பியிருக்கலாம. ஏதோ காரணத்தால் அவள் தன் மின் அஞ்சல் கடவுச்சொல்லையும் மாற்றியிருந்தது தெரியவந்தது. 

பொறுக்கமாட்டாமல் ஒருநாள் நான் அவளைக் கேட்டேன். 

‘அந்தப் பாதிரிக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்?’ 

‘தெரியவில்லை. பாஃதரை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் யோசித்துப்பார்க்கையில் பாஃதராகத்தான் பிடித்திருக்கிறது. அந்தாளை தினம் கூலிக்குப்போய் வீட்டுக்குத் திரும்பும் ஒரு சாதாரண மனிதராக ரசிக்க முடியவில்லை. பாதிரியார் அங்கியில் மாலை தேவாலயத்திலிருந்து களைத்துப்போய் திரும்பும் காதலனை எப்படி நான் கட்டியணைத்து முத்தம் கொடுப்பது? அவரை, அவர் காதலை, அவர் காதலில் தளும்பும் சிறு கடவுள்நிலையை. அவைதான் எனக்குப் பிடித்திருக்கின்றன. அவரை மிக அருகில் அறிந்தேனாகில் வெறுத்துவிடுவேனோ என்று தோன்றுகிறது. கடவுள்கள் சாமியறைக்குள் இருக்கும்வரைக்கும்தான் கடவுள்கள். அவர்களை படுக்கைக்கு அழைப்பது சரியாகுமா?’ 

‘ஆண்டாள் செய்தாள் அல்லவா?’ 

‘அது வேறு. அவளுடையது ஒருதலைக்காதல். கிட்டத்தட்ட நானும் அதையே செய்கிறேன். ஆனால் ஆண்டாளைத்தேடி எப்போதாவது கடவுள் போயிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள் என்று நினைக்கிறாய்?’ 

நான் யோசித்துப்பார்த்தேன். எதையும் முடிவு செய்ய இயலாமலிருந்தது. பதில் தெரிந்தாலும் அதனைச் சொல்லவேண்டியதில்லை. எல்லோராவே பதில் சொல்லுவாள். 

“நான் சொல்கிறேன் கேள். அவள் பின்வாசல் வழியாக ஓடித்தப்பியிருப்பாள். கடவுள் இல்லாதவரைக்கும்தான் அவளுக்கு அது கடவுள். புரிகிறதா?” 

‘இல்லை, ஆனால் அது முக்கியமில்லை. முதலாவது இந்தப்பாதிரி கடவுள் கிடையாது. இரண்டாவது, நீ அவனை என்ன செய்யப்போகிறாய்?’ 

‘உனக்கு நான் சொல்வதே விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.’ 

‘நீ என் கேள்விக்கான பதிலை இன்னமும் சொல்லவில்லையே?’ 

எல்லோரா எனக்கு எதுவும் சொல்லாமலேயே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் பாதிரியாருக்கு என்ன பதில் சொல்லப்போகிறாள் என்பதை அறுதியாக முடிவு பண்ணிவிட்டாள் என்பது விளங்கியது. ஆனால் அதைச் சனியன் எனக்குச் சொன்னால் என்ன? சொல்லமாட்டாள். அதிலொரு அற்ப சந்தோசம் அவளுக்கு. என் வாழ்க்கையில் நீ முக்கியமானவன்தான். ஆனால் அத்தனை முக்கியமானவன் கிடையாது என்று சொல்லவருவதுதான் அவள் செய்கையின் அர்த்தம். சில பெண்களின் இயல்பு இது. எல்லாவற்றையும் சிறு எதிர்ப்பார்ப்புடனேயே விட்டுவைத்திருப்பது. ஒரு ஆண் பின்னால் திரிந்தால் அவனுக்கு இல்லை என்று அறுதியாகச் சொல்லாமல் விடுவது. அலுவலகத்தில் ஒருவன் தவறாக நடக்க முயன்றாலும் சற்றே விட்டுப்பிடிப்பது. துணை கேள்வி கேட்டால் முழுமையான பதிலை சொல்லாமல் கேள்வியை மீளவும் கேட்க வைப்பது. உடலின் மகத்தான அழகுகளை பட்டும்படாமலும் காட்டுவதிலிருந்து ஆரம்பிக்கும் குணவியல்பு இது. ஈர்ப்பின் மகிமையும் இதுவே. பூமியின் குணத்தைப்போல. இந்தப் பூமி உன்னை சேர்த்தும் அணைக்காது. ஓடித்தப்பவும் விடாது. 

000 

“Fuck you” 

எல்லோராவின் கத்தலில் நான் திடுக்கிட்டு எழுந்தபோது வெளியே வெளிச்சம் இன்னமும் பரவியிருக்கவில்லை. முற்றத்து மேப்பிள் மரத்தில் வாழும் பஞ்சவர்ணக் கிளிகள் எல்லாம் சத்தமாக இறக்கையடித்தபடி என் அறை மேற்கூரையில் தாவித்திரிந்துகொண்டிருந்தன. எல்லோராவின் கத்தல் சமையலறைப்பக்கமாகவிருந்தே வந்திருக்கவேண்டும். அவள் வீட்டிற்கு குடிவந்த பின்னர் இப்படியான கத்தல்களுக்கு நான் பழகிப்போயிருந்தேன். ஆனால் அதிகாலையில் இப்படி நிகழ்வது இல்லை. இந்நேரம் அவள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள்? காது கொடுத்தேன். 

“நீயும் உன் கடவுளைப்போலவே … முகமற்ற ஒரு போலி மனிதன். போய்விடு” 

எல்லோரா கத்த பதிலுக்கு ஒரு கிசுகிசு சத்தம் கேட்டது. 

“எல் … என்னை மன்னித்துவிடு … நான் உன்னை எந்தளவுக்கு விரும்புகிறேனோ அந்தளவுக்கு இறை சேவையையும் விரும்புகிறேன்” 

“சனியனே … அதை நீ நேற்றைக்கு இரவே சொல்லியிருக்கவேண்டும் … திகட்டத் திகட்ட அனுபவித்துவிட்டு இப்போது உனக்கு கடவுள் கேட்கிறதா? இச்சைக்காக அலைந்து திரியும் இறைப் புழு நீ. போய்விடு” 

“நீதான் என்னை வரும்படி சொன்னாய் எல்லோரா?” 

“போய்விடு நாயே… என் கண் முன்னாடி ஒரு கணமும் நில்லாதே” 

எல்லோரா பாதிரியாருக்கு தன்னிடம் வரும்படி மின் அஞ்சல் அனுப்பியதை என்னிடம் மறைத்துவிட்டாள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். காப்புறுதி நிறுவனத்துக்கு எவற்றையெலாம் மறைக்கவேண்டும் என்று சந்தாகாரர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் எனக்கு அவள்மீது கோபம் வரவில்லை. நான் எல்லோராவாக இருந்திருந்தாலும் அதனையே செய்திருப்பேன் என்று தோன்றியது. 

“உன்னை வெளியே போ என்று சொன்னேன். ஏன் இன்னமும் இங்கேயே நிற்கிறாய்?” 

பாதிரியார் என் அறையையும் தாண்டி வரவேற்பறைக்குள் நுழைந்து வாசற்கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறியது கேட்டது. அவனை நேரிலேயே பார்க்கமுடியாமற்போனது வருத்தமாக இருந்தது. அவன் பாதிரியார் அங்கியில் இருந்திருப்பானா? அல்லது சாதாரண உடையிலா? எதுவும் தெரியாது. எல்லோராவின் காதலர்கள் எவரையும் நான் நேரிலேயே பார்க்காமற்போய்விட்டேன். அந்தப் பிரஞ்சுப் பழம் பொறுக்கி. ஓவியன். பாதிரி. எவரையும் நான் கண்டதில்லை. பாதிரியை மாத்திரம் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எல்லோராவின் பதின்மூன்று கட்டளைகளில் பாதிரியார் எந்தப்புள்ளி என்று யோசித்துப்பார்த்தேன். பாத்திரத்தில் காதலை விட்டு பாலை தேசத்தில் உலரவிட்டது என்னவோ இங்கே பாதிரியார்தான். எல்லோராவுக்கு இது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம் என்றே தோன்றியது. அவள் இரண்டாம் புள்ளியிலிருக்கையிலேயே பாதிரியார் மூன்றாம் புள்ளிக்குப் போய்விட்டான். அதுதான் நிக்ழ்ந்திருக்கிறது. பாதிரி எப்போதுமே ஒரு புள்ளி முன்னேயே நிற்கிறான். 

எல்லோராதான் பாவம். எல்லோருமே அவளை ஏமாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். 

000 

நான் எதிர்பார்த்ததுபோலவே அன்று காலையிலேயே நானும் எல்லோராவும் கூடல் கொண்டோம். 

000 

பாதிரியார் வெளியேறி அரை மணித்துளி கழிந்திருக்கும். 

கூரையில் திரிந்த கிளிகளின் தொணதொணப்பில் தூக்கம் கலைந்ததுபோன்ற பாவனையில் நான் எழுந்து அறைக்கு வெளியே சென்றேன். எல்லோராவைத் தேடினேன். எல்லோரா அப்போதும் சமையலறைக்குள்ளேயே நின்றுகொண்டிருந்தாள். மென் பருத்தியில் நெய்த காற்சட்டையும் கையற்ற பனியனும் அணிந்திருந்தாள். பாதிரியார் விளித்த சிறு மென் மார்புகள் சற்றே வெளித்தெரிந்தபடி இருந்தன. தலை மயிர் கலைந்திருந்தது. நான் போனபோது சிகரட் ஒன்றை அவள் பற்ற வைத்துக்கொண்டிருந்தாள். அவள் விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. குடித்திருக்கலாம். அல்லது மருவானா உட்கொண்டிருக்கலாம். பாதிரியார் கொண்டுவந்து கொடுத்திருப்பான். 

“மன்னித்துவிடு … எல்லாமே சிதறிப்போய்க்கிடக்கிறது … குப்பை” 

சமையலறை நிலத்தில் பாண் துண்டுகளும் கோப்பைகளும் சில மரக்கறிகளும் சிதறிக்கிடந்தன. இவை காமத்தின்போது பறந்ததா அல்லது அது வடிந்தபின் எழுந்த கோபத்தின்போதா என்பதை சொல்லத்தெரியவில்லை. நான் ஒவ்வொன்றாக அவற்றை எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டேன். 

“கோப்பி ஊற்றித் தரவா?” 

“பிளீஸ்” 

கோப்பியை இயந்திரத்தில் வடித்துக் கொடுத்தேன். 

“அந்தப் பாதிரி ஒரு நாய் தெரியுமா? அலைகிறான்”, கோப்பியை வாங்கி உறிஞ்சியபடியே சொன்னாள். 

“உனக்கு இன்னொரு சிகரட் வேண்டுமா?” 

“பிளீஸ் … அவனுக்கு தேவை இந்த உடம்புதான் … காய்ஞ்ச மாடு … எல்லாம் முடிஞ்சபிறகுதான் அவருக்குக் கண்டறியாத அவர்ட கடவுள் கண்ணில படுறார் … அவனும் ஒரு பெர்வேர்ட் … அவண்ட கடவுளும் ஒரு பேர்வேர்ட் … இதுக்கு அந்த ஓவியன் எவ்வளவோ பரவாயில்லை” 

“அலட்டிக்கொள்ளாதே, எனக்குத் தெரியும் … அந்தப்பாதிரியோடான காதல் என்றைக்குமே உனக்குச் சரி வந்திருக்கப்போவதில்லை…. எல்லாமே நன்மைக்கே” 

“Yeah right? இதை ஏன் எனக்கு நீ முன்னமேயே சொல்லவில்லை?” 

“சொல்ல முயன்றேன் … கேட்கும் நிலையில் நீ இருக்கவில்லை … இப்போது என்ன நிகழ்ந்துவிட்டது என்று அழுகிறாய்? … நீ நீயாக மீண்டுவிட்டாய் … அது போதும் எனக்கு … என் எல்லோரா அப்படியே இருக்கிறாள் இங்கே” 

ஏன் அந்த இறுதி வாக்கியத்தைச் சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுதான் பலித்தது. எல்லோரா மறு பேச்சு எதுவும் பேசாமல் என்னை நெருங்கி ஆவேசத்துடன் முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். அவளுக்கான, அவள் எது சொன்னாலும் மறுக்காத, அவளைத் தன் வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்திருக்கின்ற ஒரு சீவன். இந்த நம்பிக்கையை அவளுக்கு அவளின் ஒவ்வொரு காதலர்களும் கொடுத்தார்கள் என்றே தோன்றியது. ஒவ்வொரு தடவையும் அவள் ஏமாந்தாள். தெரிந்தே ஏமாந்தாள். நானும் அவளை ஒரு கட்டத்தில் ஏமாற்றிவிடுவேன் என்றே தோன்றியது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் பாதிரியார் எதிர்பார்த்ததற்கும் நான் எதிர்பார்ப்பதற்கும் இம்மியேனும் வேறுபாடுகளில்லை. என்ன ஒன்று. அவன் இரையை நேரடியாக அடித்து வீழ்த்துகிறான். நான் நரிபோல அவன் அடித்துவீழ்த்தும்வரை ஒளிந்திருந்தேன். இருவருமே வேட்டைவிலங்குகள்தாம். இதை ஒப்புக்கொள்வதில் எனக்குப் பெருமைதான். 

These days you become a saint by admitting to be a pervert. 

000 

உண்மை இதுதான். 

மிக இயல்பான எளிமையான வாழ்க்கையை எல்லோரா போன்ற தேவதைகளால் வாழவே முடியாது. மாமல்லபுரத்து யானைகளுக்கு உயிர் வந்தால் என்ன நிகழும்? அழகும் மிதப்பும் நிறைந்த உடலோடும் நீண்ட நெடு தந்தங்களோடும் அவை இவ்வுலகில் எப்படி நடமாட முடியும்? நிலவுக்குப்போகிறேன் பேர்வழி என்று அதைத்துரத்தித் துரத்தியே அவை தம் வலு இழந்துவிடும் அல்லவா? அல்லது தம் இயலாமை கண்டு அவற்றுக்கு மதம் பீடித்துவிடும். எல்லோராவின் வாழ்வும் அப்படித்தான். அவள் நிலவுக்காக ஏங்கிய ஒரு அற்புதமான ஒரு கல் யானை. அவளுக்கு வெறுமனே என்போன்ற சுற்றுலா வழிகாட்டிகள் என்னத்தைக் காட்டிவிடமுடியும்? கல் யானைகளுக்கு மரணங்களேது? 

000 

எல்லோராவும் ஒருநாள் தற்கொலை செய்துகொண்டாள். 

000 

எல்லோராவின் மரணத்தின்பின்னர் ஒருநாள் அவள் அறையைத் துலாவியபோது இலாச்சிக்கடியில் அவள் எழுதிவைத்திருந்த கட்டளைகளின் குறிப்பு அகப்பட்டது. அதில் சாவதற்கு முன்னர் பதினான்காவதாக ஒரு கட்டளையை இணைத்திருந்தாள். 

14. வாழ்வது போலி என்று தோன்றினால். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை என்று எண்ணினால். இக்கணம் ஏற்படுத்தும் நடுக்கத்தை உன்னால் தாளமுடியாமற்போனால், தற்கொலை செய்துவிடு. உனக்கே உனக்கான நிம்மதியான சூனியம் நிலவில் காத்துக்கிடக்கிறது. 

000

Comments

  1. நிலவுக்காக ஏங்கும் கல்யானைகளாக இருக்கும் வரை பாதிரியார்களாலும் ஓவியர்களாலும் ஏமாற்றப்பட்டு கொண்டுதானிருப்பாள். இந்த எல்லோராவின் பதின்னாக்காவது கட்டளையை எழுத்தாளரால் கூட மாற்ற முடியவில்லையே. கல் யானைகள் எப்போதும் காட்சிப்பொருளே. சங்கிலியால் கட்டப்பட்ட கோவில் யானையை பார்க்கும் போது அதன் வாழ்க்கை பரவாயில்லை என்று எண்ண தோன்றுகிறது. நிஜமான கதை என்பதால் அதிக விமர்சனம் தேவையில்லை என்று எண்ணுகின்றேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .