Skip to main content

2019

ஞாபகத்திலேயே இல்லாத, ஷோர்ட் லெக்குக்குள் சும்மா தட்டிவிட்டு அவசரமாக ஓடி எடுத்த ரன்போல இந்த ஆண்டு கழிந்துவிட்டது. இன்னொரு ஐந்து வருடங்களில் இப்படியொரு ஆண்டு கழிந்ததே ஞாபகத்தில் இருக்கப்போவதில்லை என்று தோன்றியது. 2017ல் என்ன செய்தேன் என்பதும் ஞாபகமில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான். வருடம் முழுதும் மொங்கி மொங்கி வேலை செய்து என்ன பயன் என்று யோசித்தேன். அதைவிட வேலைக்கு மகிழுந்தில் பயணம் செய்வது கொடுக்கும் அலுப்பு. ச்சைக்.
தொடருந்தின் யன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி, வாசிப்பில் அலிஸ் மன்ரோ, அவ்வப்போது தடங்களின் ஓரங்களில் அமைந்திருக்கும் வீடுகளின் கூரைகளையும் வேலைகளையும் விடுப்புப்பார்ப்பது, முன்னிருக்கையிலிருக்கும் பள்ளிச்சிறுமியும் பாட்டியும் பேசுவதை ஒட்டுக்கேட்பது. இடையிடையே ‘பூந்தோட்டத்தில்… ஹோய் காதல் கண்ணம்மா’. குளிர்மிகு மெல்பேர்ன் நகர மையத்தில் காலைக் கோப்பி. இரவு உணவு. எப்படி இவற்றையெல்லாம் தொலைத்தேன் நான்? ஆன கதை எழுதி எத்தனை நாளாகிவிட்டது? ஒரு புத்தகம் வெளியிட்டு எத்தனை ஆண்டுகளாகிவிட்டது?

‘சந்திரா என்றொருத்தி இருந்தாள்’ என்ற சிறு கதையில் எழுதியிருந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.

“நேரத்தை எப்போதிருந்து தொலைக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. வேலைப்பளு என்றைக்குக் கனக்க ஆரம்பித்தது என்றும் ஞாபகமில்லை. நட்சத்திரங்கள் இன்னமும் கண் சிமிட்டுகின்றனவா? யாராவது ரசிக்கிறீர்களா? அவ்வப்போது தட்டிச் சொல்லுங்களேன்.”

‘போகப்போகச் சரியாயிடும்’ என்று அலெக்ஸ் சொன்னதுபோலவே இவ்வருடத்தை(யும்) ஓட்டியிருக்கிறேன். இப்படியே இனியும் இருத்தலாகாது. நிறையப்பயணங்கள், நிறைய வாசிப்பு, எழுத்து, புத்தகங்கள், வேலை நேரத்தில் மாத்திரம் வேலை என நாள்கள் நிரம்பவேண்டும்.

“சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையிலேயே இதற்கான தீர்வும் எழுதப்பட்டிருந்தது.

“ஒரு ஞாயிறு அதிகாலைப்பொழுதில் கண்விழித்தபோது அலுவலக மேசை முன்னிருந்தேன். அன்றே வேலையைத் துறந்துவிட்டேன்”

சிக், என்ன செய்துகொண்டிருக்கிறேன் நான்?

எதையுமே யோசியாமல் வேலைத்துறப்பு மின்மடலை விறுவிறுவென்று எழுதி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். டீக்கப்பில் வெறும் மண்டிதான் கிடந்தது. மீண்டுமொரு டீயை ஊற்றிக்கொண்டுவந்து அமர்ந்தேன். முன்னே அலிஸ் மன்றொவின் ‘My Best Stories’ முழித்துக்கொண்டு ‘என்னை வாசியேன்’ என்றது. எடுத்துப்பிரட்டினேன்.

பக்கம் 403.

Not long afterwards came the news from California. Sofie and Ian were going to get married.

“Wouldn’t it be too smarter to try living together for a while?”, said Eve on the phone from her boarding house, and Sofie said, ‘Oh no, He’s weird. He doesn’t believe in that.’

“But I can’t get off for a wedding,” Eve said. “We run till the middle of September”.

“That’s ok” said Sophie. “It won’t be a wedding wedding”

And until this summer, Even had not seen her again.

சின்னதாக சிரிப்பு வந்தது. எதேச்சையாகப் பிரட்டிய ஒரு பக்கத்தின் ஐந்தே வரிகள். யாரந்த ஈவ்? யாரந்த சோபி? கடைசியில் சோபியும் இயனும் திருமணம் முடித்தார்களா? பிரிந்தார்களா? ஈவ் ஏன் போர்டிங்கில் தங்கியிருக்கிறாள்? அவளுக்கு காதலனோ காதலியோ இல்லைபோல. அல்லது திருமணங்களில் நம்பிக்கையில்லாதவள். அல்லது தீய்ந்த அனுபவம். இல்லையேல் சோபி திருமணம் முடிப்பதில் சிறு பொறாமை. இத்தனைக்கும் அவர்கள் அடிக்கடி சந்தித்துப்பேசுவதுகூட இல்லை. அவ்வப்போது போனில்தான். கதையில் பெயர் என்ன என்று பார்த்தேன். “The Love Of A Good Woman”. கதையை முன்னேயும் பின்னேயும் வாசிக்கவே விருப்பமில்லாமலிருந்தது. முழுமையாக வாசித்தால் ஒரேயொரு சாத்தியம்தான். வாசிக்காதபோது எத்தகை சாத்தியங்கள்?

மியூட்டிலிருந்த போனில் நிர்வாக இயக்குநரின் அழைப்பு மீண்டுமொருமுறை மின்னி மறைந்தது. பன்னிரு மிஸ்ட் கோல்கள். சமாளிக்கவேண்டும். முடிவில் பிடிவாதமாக இருக்கவேண்டும். ஊதிய உயர்வுகளுக்கு மயங்கலாகாது. கொஞ்சக்காலம் இடைவெளிவிட்டுப் பேசலாம். எடுத்துச்சொல்லலாம். ஒருவரையே நம்பி எந்த அணியும் இல்லை. எந்த நிறுவனமும் இல்லை. எந்தக் குடும்பமும் இல்லை. எவரின் வாழ்க்கையும் இல்லை. எல்லாமே தோற்ற மயக்கங்கள்தாம்.

இன்னொரு பக்கத்தைத் திருப்பினேன்.

பக்கம் 469.

She asked Grant when they’d moved to this house.

“Was it last year or the year before?”

He said that it was twelve years ago.

She said, “That’s shocking”.

அவ்வளவும்போதும். கதையின் தலைப்பைப் பார்த்தேண்.

“The Bear Came Over The Mountain”

டீயை ஒரு மிடறு அருந்தியபடி கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன்.

“This is fucking awesome.”

Comments

  1. நினைத்தவை யாவும் நினைத்தபடி நிறைவேற எமது புது வருட வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...