"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்"
சமாதானத்தின் கதை ஜேகேயின் புத்தகம் வெளிவந்து, வாங்கி நாட்கள் கடந்து விட்டன. வாசித்து முடித்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. வழமைபோல் பரபரவென வாசிக்கத் தொடங்கி இரண்டாவது கதையில் ஒரு இடைவெளி வந்து விட்டது. இந்த இரண்டாவது கதை பற்றி கொஞ்சம் விரிவாகவே கூறுகிறேன். கூற வேண்டும்! சிறிது நாட்கள் இடைவெளியின் பின் மீண்டும் வாசித்து முடிக்கையில், அவரவர் ஏற்கனவே விமரிசனங்கள் எழுதி முடித்து விட்டனர். இதற்குள் நான் என்னத்தைச் சொல்லிக் கிழிக்க? எனினும் நான் நினைத்ததை முடிக்காமல் விடுவதெப்படி?
000
கனகரத்தினம் மாஸ்டர்: சத்தியமாக இலங்கையில் இவ்வளவு சாதிப் பிரிவினைகள் இருப்பது எனக்குத் தெரியாது. நல்ல ரெஃபரென்ஸ்! இந்த முத்தாய்ப்பே கதைக்கான ட்ரெயிலர் தான்! ("மற்றும் பெண்கள்" - கேலியாகச் சொல்லப்பட்ட வலி மிகுந்த உண்மை). இரண்டாவது வரி "பிளடி இண்டியன்ஸ்". ஆனால்,வெள்ளைக்காரனுக்கு இந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் கீழான இந்தியன் சாதி. என்ன ஒரு தொடக்கம்! ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் ஒருத்தனுக்கு அடிமைப்பட்டு, அந்தக் காரணத்தினாலோ என்னவோ இன்னொருத்தனுக்கு ஆண்டானாகும் திருப்தி. இந்தச் சமூக உண்மை கதையில் இழையோடுகிறது. குடும்ப உறவுகள் உட்பட! வெள்ளைக்காரனுக்கு ஐரோப்பியன் அகதி. வெள்ளைத்தோல் ஐரோப்பியனுக்கு இந்தியன் கீழ். இந்தியனுக்கு இலங்கைக்காரன் அகதி. வெள்ளாளனுக்கு கோவியன். கோவியனுக்கு நளவன். இதற்குள் நாம் எல்லோரும் விழுந்துகட்டி "ஐ ஆம் நொட் அன் இண்டியன்" என ஸ்டேட்மெண்ட் விட்டு எம்மைக் கொஞ்சம் உயர்த்தப் பார்ப்பது அடுத்த கொமடி. தவிர, இந்த அடிமைத்தனம் பிடிவாதமாக என்ன பாடுபட்டாவது தன்னை மேலாக நிலைநிறுத்த முயற்சிப்பது மாஸ்டர் ஊரில் கோயில் கட்ட திட்டம் போடுவதில் வெளிப்படுகிறது. கதை வெளிநாட்டில் வாழும் இன்றைய எமது சந்ததியின் வாழ்க்கையையும், பெற்றோரைப் பயன்படுத்தும் விதத்தையும் பேசுகிறது. ஜேகேயின் கதை நல்ல ஒரு சாம்பார் செய்து, இன்னும் மேலதிக வாசனைக்காக கொத்தமல்லி இலை சேர்ப்பது போல் அமையும். இந்தக் கதையில், எம்மால் அறிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மை (எப்பவோ முடிந்த காரியம்) செவ்விந்தியத் தலைவரின் கடிதத்தால் உணர்த்தப்படுகிறது. ‘The Sacred Land’ பற்றிப் பேசியது இதில் கொத்தமல்லி வாசனை போல! கதையில் எனக்கு மிகவும் பிடித்தது: "அதிகாரம் என்பது பலருக்கு ஒரு அனிச்சையாகப் பொருந்திப்போகிறது. கர்ணனின் கவசகுண்டலங்கள் போல. அடிமை உணர்வும் அப்படியே". என்ன ஒரு சத்தியமான உவமை!
000
உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்: கிருஷாந்தி பற்றிய கதை. உயிரோடு இருந்திருக்க வேண்டிய கிருஷாந்திக்கான புனைவு. கதைக்கான நோக்கம் வேறு. ஆனால் எங்கள் சைக்கிள் காலம், பெடியளின் சுத்தல், தொண்ணூற்றைந்து இடப்பெயர்வு இந்த அழகெல்லாம் கலந்து காட்டியது அபாரம். இதில் குழந்தையுடனான உரையாடலில் சிலது மறைபொருளாக உணர்த்தப்படுவதாகவும் எடுக்கலாம். "லாஸ்ட் ஸ்டோரி ஜக்கி. அதில அந்த சிஸ்டர் டை பண்ணீட்டுது. பாவம்". இந்தக் கதையில் தொண்ணூற்றைந்து இடப்பெயர்வு, கைதடி பற்றி வாசித்துக்கொண்டிருக்கையில் கிருஷாந்தி கதை என்பது புரியத் தொடங்கி விட்டது. முதல் நாள் கிடைத்த புத்தகம், ஆர்வக் கோளாறினால் மறுநாள் காலையிலேயே வாசிக்க வெளிக்கிட்டு கண்ணீர் மறைக்க வாசித்த இரண்டாவது கதையின் பின் சில நாட்கள் வாசிப்பு நகரவில்லை. இது எழுத்தாளனின் வெற்றியும் கூட! ஆனால் இங்கு நான் ஒரு கதை சொல்லியே ஆக வேண்டும்:
தொண்ணூற்றாறு. இலங்கை இராணுவம் தென்மராட்சியையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னான காலப்பகுதி. ஏ/எல் படிப்பு குழம்பிவிட்டது. வலிகாமப் பிள்ளைகள்போல தனிப்பட்ட வகுப்புகளுக்குப் போய் ஓரளவு சிலபஸ் முடிக்கும் வசதி எமக்கு இருக்கவில்லை. முடிந்த மட்டுக்கும் ஏதாவது கிழிக்கும் உத்வேகத்தில் ஆமிக்காரனையும், சோதனைச்சாவடியுடன் கூடிய பலமைல் தூரத்தையும், பயங்கரங்களையும் கடந்து குணசீலன் சேரின் தாவரவியல் வகுப்புக்கு சென்று வந்துகொண்டிருந்தோம். நான், தயாளினி சாவகச்சேரியிலிருந்து. நிருபராணி, கோகிலா, கிருஷாந்தி கைதடியில் இருந்து. அந்தக் காலப்பகுதியில் சாவகச்சேரி, யாழ்ப்பாணம் இணைக்கும் கண்டி வீதியால் அவ்வப்போது சைக்கிளில் செல்வோரில் நாம் ஐந்து பேர் மட்டுமே இளம் மாணவிகள். எல்லா சோதனைச் சாவடி ஆமிக்காரங்களுக்கும் எம்மைத் தெரியும். நாவற்குழிக் காம்பில் தினமும் நிற்கும், இராணுவத்தை கட்டுப்படுத்தும் இரண்டு மிலிட்டரி போலீஸ்காரர்கள் என்னையும், தயாளினியையும் மறித்து, இப்படித் தனியே திரிய வேண்டாம் என்றும், அந்தப் பகுதி ஆமி சரியில்லை என்றும் கண்டித்ததும் ஞாபகத்தில் உள்ளது.
கிருஷாந்தி... உண்மைதான்! நிமிர்வு, அலட்சியமான ஸ்டைல், நேர்ப்பேச்சு. அப்பா சிறு வயதிலேயே காலமாகி விட்டார். ஒரு அக்கா, ஒரு தம்பி. ஆசிரியையான தாயார் பிள்ளைகளில் உயிரையே வைத்திருந்தார். மிகுந்த செல்லம். தொண்ணூற்றியாறில் கிருஷாந்தியின் அக்கா ஊரில் இல்லை. கொழும்பில் படித்துக் கொண்டிருந்தார். நாம் முதலில் பாடசாலைகள் இயங்கும் காலத்தில் ஒரே ஸ்கூல் பஸ். கிருஷாந்தி சுண்டுக்குளி. நான் வேம்படி. போரின் பின்னான ஆமிக் கட்டுப்பாட்டில் சைக்கிளில் செல்லும் போது, எல்லோருமாக சிறிது தூரம் சேர்ந்து உழக்குவோம். நானும், தயாளினியும் சாவகச்சேரி மட்டிலுமாக அதிக தூரம் வர இருப்பதால், கைதடி குரூப்பைப் பிரிந்து சைக்கிளை கடும் வேகத்தில் அமத்திக் கொண்டு வந்து விடுவோம். செம்மணி ஆமியின் அராஜகமும், நாம் உள்ளுக்குள்ளே கோபப்பட்டுக் குமுறுவதும் பழகிப் போன ஒன்று.
எமது உயர்தரப் பரீட்சை நடந்த இரண்டு கிழமையும் நாம் ஒவ்வொருவரும் யாழ் நகரில் தெரிந்தவர் வீடுகளில் தங்கியிருந்து பரீட்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தோம். அம்மாவை ஒருநாளும் விட்டுப் பிரியாத கிருஷாந்தி தான் தினமும் வீட்டிலிருந்தே வந்து செல்லப் போவதாகக் கூறியிருந்தாள். எமக்கு இரசாயனவியல் பரீட்சை முதலாம் பகுதிக்கு சென்ற போது சயன்ஸ் ஹோல் ரியூஷன் சென்டரில் கூடப்படித்த ஞானாந்தி காலையில் ஆமி வாகனம் மோதி இறந்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது. மறுநாள் இரசாயனவியல் இரண்டாம் பகுதி பரீட்சையின் போது, முதல் நாள் பரீட்சை முடிந்தபின் நண்பி ஞானாந்தியின் மறைவுக்கு சென்று விட்டு மிகுந்த உள வருத்தத்துடன் வீடு திரும்பிய கிருஷாந்தியை செம்மணி காவல் நிலையத்தில் நின்ற இராணுவம் வேண்டுமென்றே பிந்தி வீடு திரும்பும் காரணத்தைக் கேட்டு, கதை வளர்த்து உள்ளே அழைத்துச் சென்ற செய்தியைக் கேள்விப்பட்டோம். அந்த நேரத்தில் ஒருவர் மட்டுமே அப்பாதையால் சென்றுள்ளார். மகளைத் தேடிய தாய்க்கு அவர் மூலமே தகவல் கிடைத்தது. பின்னர் செம்மணி சென்ற குடும்பத்தினர், பக்கத்து வீட்டு கிருபாகரன் காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த நேரங்களில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டோர் காங்கேசன்துறை கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தது. கிருஷாந்திக்கு உடனடியாக குடும்பத்தினரும் தேடிச்சென்றதால் எதுவும் பிரச்சனை நேர்ந்திராது எனும் நம்பிக்கையில்தான் மாணவிகள் எல்லோரும் இருந்தனர். உயர்தர பரீட்சை முடிந்து சில நாட்களின் பின் நானும், நண்பி தயாளினியும் நாம் இடம்பெயர்ந்து வசித்து வந்த நுணாவில் வீட்டில் இருந்து உரையாடிக்கொண்டிருந்த போது, யாழில் இருந்து வேலைமுடித்து வீடு திரும்பிய அப்பாமூலம் எம்மைத் துடிக்க வைத்த செய்தி கிடைத்தது. செம்மணி வெளியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மழை நீரால் மேலே வந்த உடலைக் கண்டு தகவல் சொல்லியிருக்கின்றான். அப்பா வந்துகொண்டிருக்கும்போது நாவற்குழி மிலிட்டரி பொலிஸ் செம்மணி காவலரண் பின்னாலுள்ள வெளியில் உடல்களை தோண்டி எடுத்து விசாரணை செய்து கொண்டிருந்ததாகவும், அது கிருஷாந்தி எனத் தன்னிடம் கூறியதாகவும் அவர் எம்மிடம் கூறினார். இதை என்னாலோ, நண்பியாலோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன்பின் நடந்த செம்மணி மனிதப் புதைகுழி அவலம் எல்லோரும் அறிந்தது.
இது நடந்து எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இப்போதும் ஊருக்குச் செல்லும் போது, செம்மணி வெளியினூடாகப் பயணப்படும்தோறும் என் கைகால்கள் நடுங்கி, தொண்டை அடைத்து, விபரிக்க முடியாத மன அழுத்தம் ஏற்படும். அதீதமாகக் கூறுவதாகப் படலாம், ஆனால் இது உண்மை. இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் எனக்கு அதே உணர்வு ஏற்பட்டது. ஊர் செல்லும்போது, கஷ்டமோ, சுகமோ அலைந்து திரிந்த பழைய இடங்கள் மனதுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். ஆனால் நான் மிகவும் வெறுக்கும் இடம், எனக்கு என்றுமே பிடிக்காத இடம் செம்மணி-அரியாலை வெளி. ஏனென்றால் இது காரணமின்றிக் கடவுளாக்கப்பட்டவர்கள் துயிலும் தேசம்!
இதில் முக்கியமாக வேறு ஒரு விடயம் கூறவேண்டும். இது நடந்த நாட்களில் எமது மக்களில் பலரிடையே பரவலாக உலவிய பேச்சு சிலர் அறிந்திருப்பார்கள். அந்த நேரத்தில் கிருஷாந்தி கொலைக்கு காரணம் கிருஷாந்தி இராணுவத்தினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதென்றும், கிருஷாந்தியின் இயல்பு காரணமென்றும் எம்மவர் கதைபட்டனர். ஏன் மாட்டார்கள்? தனியே ஒரு தாய் தனது பிள்ளைகளை மிகுந்த கம்பீரத்துடன் வளர்த்து வரும்போது, அது எம்மவரின் வெட்டிப் பேச்சுக்குத் தீனி போடாவிடின், பிறகு இலங்கைத் தமிழர் என்று சொல்லுவதில் என்ன இருக்கிறது? ஆமிக்காரன் அடக்குமுறைக்காக அனுப்பப்பட்ட எதிரி. தமிழ் மக்கள் தம் இனத்தின் ஒரு பாடசாலை மாணவிக்கும், குடும்பத்திற்கும் நடந்த கொடுமைக்காக கதிகலங்க வேண்டியவர்கள். ஆனால் செய்ததுதான் என்ன? இங்கு அதிக குரூரம் கொண்டவர் யார்? இராணுவத்தினரா? நாமா?
000
சந்திரா என்றொருத்தி இருந்தாள்: இது கதையாக எழுதப்பட்ட கதையல்ல. எழுத்தாளனின் உணர்வு ஒன்று தன்னையே கதையாக வடித்துக் கொண்டதாகத் தோன்றுகிறது. இந்த உணர்வோடு ஒன்றிப்போவதைத் தவிர எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
"மென்மையாயிருத்தல் எப்போது பலவீனமானது?"
"எதுவுமே அவை எழுதப்படும்வரையிலும் எனக்கு நிஜமில்லை. மரணங்கூட. அதைக்கூட வாசிக்கும் போதுதான்"
"புத்தகங்கள் என்னைக் கைவிட்டுவிட்டன. என் நண்பர்கள் எவருமே என்னோடு தங்கவில்லை. அவர்கள் நண்பர்களே இல்லை என்று பின்னர்தான் அறிந்துகொண்டேன். ரயிலின் சக பயணிகளையும் தேநீர்கடையின் பணியாளர்களையும் நான் நண்பர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்"
"திரவுபதி துகிலுரியப்படுகையில் அருச்சுனனின் மனநிலையை எண்ணிப்பார்க்கிறேன்"
"இருந்தும் இல்லாதிருத்தலைத் தாங்கிக்கொள்ள இயலும். இல்லாமையின் இருத்தலைத் தாங்கவே முடியாது"
"நிறையச் சட்டைகள் நமக்காக நெய்யப்பட்டுக் காத்திருக்கின்றன. நாம்தான் அவற்றை அணிவதில்லை"
"தற்கொலை செய்பவர்கள் கோழைகள் என்று ஏன் சொல்கிறார்கள்? உண்மையில் அவர்கள் பாக்கியசாலிகள்"
ஆஹா! வார்த்தைக்கு வார்த்தை கனம்... கனம்... ஜேகே அடித்துத் துவைக்கும் எழுத்துக்களில் இது ஒன்று. நான் கதையின் பாத்திரமாக ஆகும் தருணங்கள் அவை. நட்சத்திரங்கள் இன்னமும் கண் சிமிட்டுகின்றனவா? யாராவது ரசிக்கிறீர்களா? அவ்வப்போது தட்டிச் சொல்லுங்களேன்! - இது இன்று எனது கூவல் ஜேகே.
000
சைக்கிள்கடைச் சாமி: குடும்ப உறவுகள்! சாமி - பாக்கியங்கள், அல்லது எதிர்வளமாக எல்லா ஊர்களிலும் உண்டு. இங்கு சாமியின் செய்கையும், அதற்கான மனநிலையும் நோக்கத்தக்கது. ஒன்று, சாமியை கொலை செய்யும் எல்லைக்கு ஆளாக்கிய பாக்கியத்தின் அந்த இறுதி வார்த்தைகள். மற்றையது, கொலைக்குப் பின்னான சாமியின் மாறாத அதே நிதானம், அன்றாட அலுவல்களில் அதையும் ஒன்றாக்கி எதுவும் நடக்காததுபோல் நடந்து கொள்வது. இவை அதிசயமல்ல. பாக்கியம் இல்லாத வீட்டில் என்றுமேயில்லாத அமைதியைக் காணும் சாமி, இவ்வளவு வயதாகும்வரை அதை ஒத்திப்போட்டது ஏன்? இதுதான் குடும்பங்களின் அதிசயம். இங்கு கொலையல்ல தீர்வு. தன்னையறியாமலே இறுதி எல்லையும் உடைந்து போனதுதான் கொலை நடந்ததற்கான காரணம். இங்கு கொலை ஒரு முடிவு. இப்படி எத்தனையோ முடிவுகள். இந்த எல்லைவரை குடும்பங்கள் இருப்பது அதிசயம். அதுவும் குடும்பம் நடத்திக்கொண்டு இருப்பது இன்னும் அதிசயம்! ஆனால் இதுதான் எம்மவர் வாழ்க்கை. இங்கு சாமியின் கதை ஒருவகைப்பட்ட உதாரணம். ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் ஆயிரம் குமுறல்கள். வாழ்பவர், வாழ்ந்தவர் எத்தனைபேர்? ஆனால் ஒன்றாக இருக்கிறார்கள். ஏன்?? சமூகம்? குடும்பப் பின்னணி? சூழ்நிலை? அடிப்படைப் பயம்? நாமே எம்மைக் கேட்டுக்கொள்வோம்.
000
தூங்காத இரவு வேண்டும்: மெல்பேர்ணில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த தெரிந்த குடும்பத்தலைவியின் மறைவின் உண்மைச்சம்பவத்தை மையமாக்கி எழுதப்பட்ட கதை. இங்கு வசிக்கும் பலருக்குத் தெரிந்திருக்கலாம். வருத்தம், வைத்தியசாலை, மரணம்... கொடிதிலும் கொடிது. ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த நிலை ஏற்பட்டால் அனுபவிக்கப்படும் வேதனையை, உணர்வை கதை பேசுகிறது. ஏனையோருக்கு அந்த நேரத்தில் அது ஒரு சோக சம்பவம், பின் மறந்து விடும். வாழ வேண்டிய குடும்பத்திற்கு இது தினம் தினம் அனுபவிக்கும் வலி. வாழ்வின் துணை, மகிழ்ச்சி, எதிர்காலம் எல்லாமே மீள முடியாது மாறிப்போன சோகம். முடிவில்லாத வேதனை. இந்த உணர்ச்சியை குடும்பத்தில் ஒருவராகவே அனுபவித்து, இக்கதை எழுதப்பட்டுள்ளது.
000
விசையறு பந்து: மதுவந்திகாவின் கோபம், மன அழுத்தம், இறுதியில் அது வெடித்து வெளிப்படுவது இவற்றிற்கான அடிப்படைக் காரணம் நேர்முகத்தேர்வு இல்லை. நேர்முகத்தேர்வு கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு தூண்டல் மட்டுமே. அடிப்படைக் காரணம் குடும்பப் பின்னணி. சிறுவயதிலிருந்து உள்ளேயே கனன்று ஒரு கட்டத்தில் அதைச் செலுத்தும் வழி தேடிப் பின் உடைந்து போவது. ஆண் மேலாதிக்க குணமுடைய அப்பா. அதை ஆமோதிக்குமாறு நடந்துகொள்ளும் அருவருப்பூட்டக்கூடிய அம்மாவின் வாழ்க்கை நடைமுறை. இப்படி அன்புக்காக ஏங்கி, அசிங்கத்துடன் நாளும் போராடும் எத்தனையோ மதுவந்திகாக்கள் உள்ளனர். வீட்டினுள்ளே காணப்படும் உறவுச்சிக்கல் வெளி உலகுக்கு விளங்காது. ஒரு கட்டத்தில் மன நோயாக ஆகும்போது அதன் காரணம்கூடப் புரிந்துகொள்ளப்பட மாட்டாது. இது பெற்றோருக்கான கதை. விசையறு பந்தினைப்போல் மனம் வேண்டியபடி வீடு இருப்பின், விசைக்குள்ளேயே அடங்கியிருந்தது பின் வெடித்துச்சிதறிப் போகாமல் பிள்ளைகள் இருப்பார்கள் என்பதைப் புரிய வைக்கும் கதை.
000
சமாதானத்தின் கதை: இரட்டை அர்த்தம் தொனிக்கும் கதையின் முடிவு! "சமாதானமா? அப்படி ஒண்டும் இங்கனக்க இல்லை". உள்ளே உணர்வுகளுடன், ஆனால் வெளிக்காட்டாமல் பரிமளத்தின் உதவிக்காக மட்டும் வாழும் சமாதானம். சமாதானத்தை தேவைப்படும்வரை பயன்படுத்திவிட்டு புறக்கணிக்கும் பரிமளம். இங்கு சரி - தவறு கூடச் சொல்ல முடியாது. வாழ்க்கையில் தோற்றுப்போனபின் ஏதோ ஒரு வழி கிடைக்கையில் நன்றி மறக்கும் தன்னலக்குணம் பரிமளம் போன்றவரின் பொது இயல்பு. அதே சமயம் பரிமளத்திடம் எதுவும் வெளிக்காட்டாமல் வேறு விதத்தில் கொந்தளிக்கும் பரிதாபமான சமாதானம். சமாதானம் எனும் கதாபாத்திரம் இங்கு அவ்வப்போது உபயோகப்படுத்தப்பட்டு இல்லாமலாக்கப்படுகிறது. தேடுவார் கூட இல்லை! எமது சமாதானப் பேச்சு ஒரு காலத்தில் ஏதோ நோக்கங்களுக்காக இழுபறிப்பட்டு கொஞ்சம் தாக்குப் பிடித்தது. பின்பு ஒரேயடியாகத் தூக்கி எறியப்பட்டு விட்டது. இனிமேல் தேடுவார் இல்லை! வெளிநாட்டு மோகமும், ஊர் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் விதமும் படம் பிடித்ததுபோல் காட்டப்பட்டிருப்பது அருமை. சமாதானம் என்னவானது எனும் ஏக்கம் கதை முடிவில் எழுவதைத் தடுக்க முடியவில்லை. எந்த மாற்றத்திற்கும் ஆட்படாமல், எதையும் புறங்கூறாமல், அமைதியாக தன் ஒழுங்குமுறைகளில் மட்டும் மாற்றமில்லாது தனியனாக வாழும் சமாதானம். ஆனால் அதை உணர்வார் இல்லை! அது தன்பாட்டுக்குப் போயும் விட்டது. உடல் பூராகப் பெரியம்மைத் தழும்புபோல் பொக்குளங்கள் போட்டிருக்கும் சமாதானம்..., அழகன்!
000
நகுலனின் இரவு: மீண்டும்...! இறைவா! இவ்வாறான கதைகளிலிருந்து என்னைக் காப்பாற்று! ஜேகே, இதை எழுதிய தருணம் எது சகோதரா? வரிக்கு வரி வாழ்ந்து களைத்து விட்டேன். இதை எப்படிக் கொட்டுவேன்? இந்தக் கதைத் தொகுதிகளில் எனக்கு அதிகம் பிடித்த கதை இதுவே. அதிகம் என்பது சும்மா அதிகமல்ல, என் ஆன்மாவோடு ஒட்டிய கதை. இது ஜேகேக்கும் தெரியும்.
"எவரிடமிருந்து காத்துக்கொள்ளுகிறேன், அல்லது என்னிடமிருந்தா?"
"நல்ல மனிதர்களைத் தள்ளியே வைத்திருத்தல் சாலம் என்று படுகிறது"
"என்னால் என் பலவீனங்களிலிருந்து மீள முடியவில்லை. இறக்கை இருக்கிறது. ஆனால் பறக்க முடிவதில்லை. தீக்கோழி போல"
"உயர்ச்சியும் பறப்பும் என் இயல்பு அன்று. ஆனால் அருகில் இருப்பவர் எவராவது வீழும் தருணங்களில் நான் உயர்கிறேன்"
"வழிப்பயணிக்கு அதிகம் என்ன கிடைத்து விடப்போகிறது" - ஆம், சக பற்றை!
"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்"
"குப்பைகளை ஓர் எல்லைவரைதான் சகிக்க முடியும்"
“அறிவுடன் கூடிய இயலாமை எதிரிக்கும் வேண்டாம்”
இப்பெருவெளியில் எல்லாமே இருந்தும் ஏதுமில்லாமல் இருக்கும் தனிமை!
கதை முழுவதும்.. சொல்லுக்குச் சொல், சொல்லுக்குச் சொல்.. நகுலன், இலக்குவன் பாத்திரப் படைப்புக்களின் உண்மைத் தன்மை... ஐயோ... இதன் அழகை என்னால் சொல்ல முடியவில்லை!
நகுலனின் இரவு! இது எவ்வாறு ஜேகே? இது ஏன்? சத்தியத்தின் கனமும் ஒரு கட்டத்தின் மேல் தாங்க முடியாது போய்விடும். ஏனெனில் நான் நகுலி!
000
மறை சாட்சி: சம காலத்திற்கு கட்டாயம் தேவைப்படும் கதை. இதை வாசித்தாவது எவர் மனதிலாவது மாற்றம் ஏற்பட்டால், ஈரம் சுரந்தால் நல்லது. நான் சந்தித்த, கேள்விப்பட்ட படகில் வந்தோரின் கதைகளை அப்படியே எழுதியதுபோல் உள்ளது. பழைய மனக்காயம், சமகாலப் பிரச்சனை, அதனால் ஏற்படும் மனப்பிறழ்வு. எங்குமே அகதியான மரியதாஸ்! சொந்த வீட்டிற்குத் திரும்பிப் போனால் கூட! இவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? சாய்ந்திருந்துகொண்டு வாய்க்குவந்தபடி கதையளக்கும் நாங்கள் மரியதாசை நாமாகக் கற்பனைசெய்து பார்த்திருப்போமா? ஒருவகையில் நாமும்தானே காரணம்? கதைக்குள்ளே இங்குள்ள எம்மவரின் அற்ப குணத்தை, பிள்ளைகளை வைத்து போட்டி பிடிக்கும் கோமாளித்தனத்தைக் காட்டியது மேலதிக சுவை. இங்கு இன்னொரு விடயம் மனத்தைத் தைக்கிறது! கடமை, ஒழுங்கு, பண்பு தவறாமல் எப்போதும் கடவுள் பக்தியிலும் முழு ஈடுபாட்டோடு இருக்கும் மரியதாஸ். ஆனால் அவனுக்கு எல்லா வழிகளும் மூடிக்கொண்டு விட்டன. ஒரு வாசல் கூடத் திறக்கவில்லை. அப்போது எது வாழ்க்கை? கதையிலே மரியாதாசின் சோகங்களையும், இடையிடையே பிரார்த்தனை வசனங்களையும் சேர்த்து எழுதியது செம கெட்டித்தனம்!
000
வெம்பிளி ஓஃப் ஜஃப்னா: இவ்வளவுக்கும் பின்னர் சிரிப்புடன் வாசித்த கதை! ஒழுங்கை, அயலட்டை, வெளிநாட்டு முதல்வரவு, சின்ன வயதுக் காலங்கள், பின் நடந்த மாற்றங்கள் எல்லாம் வர்ணித்தது சொல்லி வேலையில்லை! சுதா அக்காக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் உண்டு. எனக்கும் பின் வளவுப்பக்கம் எங்கேயோ ஒரு ஞாபகம் தலை தூக்குகிறது. மாறாதது அம்மாமாரின் விடுப்பு ஒன்றுதான் - சூப்பர்!. அதுவும் விடுப்புச் சொல்லும் விதம் - சூப்பரோ சூப்பர்! என்ன எழுத்து ஜேகே! "சாமத்தியப்படும்வரைக்கும் சிறுமிகளும், வெளிநாடு அல்லது இயக்கத்துக்குப் போகும்வரை ஆண்களும் பொதுவாக நம்மோடு சேர்ந்து விளையாட வருவார்கள்". அப்படியே காலத்தை அழகாகப் பிடித்துக் காட்டும் எழுத்து. சந்தோஷமாக நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, பச்சை மிளகாயைக் கடித்தது மாதிரி, மனதை சின்ன வலியோடு நெருடிச்செல்கிறது தவக்களையின் முடிவு. ஆனால் இந்த வலிச் செருகல்கள்தானே கதையழகை உச்சம்பெற வைக்கின்றன. "....ஈழநாத நான்காம் பக்க வீரச்சாவு அறிவித்தலோடு அவன் வரலாற்றில் காணாமல் ஆக்கப்பட்டான்". அப்படியே கமரா பிடித்து மெதுவாகச் சுழற்றிப் படம்பிடித்துக்காட்ட 'ஆ'வென்று பார்த்துக்கொண்டிருப்பதுபோல கதை வாசிப்போடு காட்சி மனதில் விரிகிறது. பஹத் பாசில் நடித்த நல்ல ஒரு கிளாசிக் மலையாளப் படம் பார்த்த மாதிரி.... ஜேகே! என்ன எழுத்தாளனையா நீ?
000
விளமீன்: இந்தப் புத்தகத்தின் முதல் கதையிலிருந்து ஒரு வசனம் மீண்டும் ஞாபகம் வருகிறது. "அதிகாரம் என்பது பலருக்கு ஒரு அனிச்சையாகப் பொருந்திப் போகிறது. அடிமைத்தனமும் அப்படியே". பெண் எனும் 'சாதி'யின் இந்த இயல்பான அடிமைத்தனம் எமக்கு முந்தைய தலைமுறையினரிடம் ஓரளவுக்கும், அதற்கும் முந்தைய தலைமுறையில் அதிகமாகவும் இருந்திருக்கிறது. சரசுமாமியின் வாழ்க்கையைப் போல. ஆனால் செம்மறியாடு தலைதூக்கிப் பார்த்தது போல் (நகுலனின் இரவிலிருந்து), சரசுமாமி தன் விருப்பத்திற்கு தனது வாழ்வை மாற்றியமைக்க முயற்சிக்கும்போது, சிக்கல்கள் ஆரம்பித்து விடுகின்றன. சரசுமாமி போன்றோரின் உள்ளேயே பூட்டி வைத்திருக்கும் இந்த ஏக்கம் வயதான பின்பும் நிராகரிக்கப்பட்டு அவர்களுடனேயே சேர்ந்து புதைந்து போகிறது. மறுக்கப்பட்ட சிறுவயதின் மிகப்பெரிய ஆசை, காலங்கடந்து மனதினுள் வந்து விஸ்வரூபம் எடுக்கும். குடும்பம் என்ற வட்டத்திற்கு இவர்கள் ஒரு பயன்பாடு மட்டுமே. இவர்கள் உணர்வுகள் வெளியே புரிந்துகொள்ளப்படுவதில்லை, அல்லது அதற்காக எவரும் மெனக்கடுவதுமில்லை. "ராசன் எந்த உணர்ச்சியுமில்லாமல் சொன்னான், 'மெடம் இஸ் நோ மோர். டோன்ட் கோல் எகெய்ன்'". வெளிநாட்டுக்கு வந்து கைதூக்கிய வயதானவர்கள் சென்ட்ரலின்ங்க் காசுக்காக ஆங்கில வகுப்புக்குப் போன காலகட்டத்தைக் காட்டியது நன்றாக உள்ளது. "மீனரிவாளில் பிறாண்டப்பட்டுச் செதில்கள் சிதறிப் பறப்பதுபோல மாமிக்குப் பழைய ஞாபகங்கள் பறக்க ஆரம்பித்தன". அருமையான உவமை!
நிற்க, தம்பி ராசா ஜேகே, எப்பிடியாவது சப்பட்டையின்ட கடையில தேடிப்பிடிச்சு ஒரு விளமீன் வாங்கிச் சமைச்சு, ஊரால வந்தாப்பிறகு நான் கூப்பிட்டுத்தராட்டி என்ர பேரை மாத்துறன்.
000
புத்தகத்தின் கதைகள் அநேகமாகக் குடும்ப உறவுகள், உணர்வுச் சிக்கல்கள், அவற்றின் வெளிப்பாடுகள் பற்றிப் பேசுகிறது.
சைக்கிள் கடைச் சாமி - பொருத்தமில்லாத உறவு, ஒரு எல்லையில் அதீத முடிவை அடைவது. ஆனால் சகித்துக்கொண்டு அதுவரை சேர்ந்து வாழ்வது.
விசையறு பந்து - அன்பில்லாத, அழுத்தமான வீட்டுச்சூழல், புரிந்துகொள்ளப்பட முடியாத பெற்றோர், அதனால் பாதிக்கப்படும் மகள்.
சந்திரா என்றொருத்தி இருந்தாள் - அம்மா, அப்பாவின் பிரிவால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும் பிள்ளை.
தூங்காத இரவு வேண்டும் - இங்கு நல்ல ஒரு குடும்ப அமைப்புக்கு உதாரணமான அழகிய குடும்பம். ஆனால் விதியின் கொடுமையால் நடக்கும் பேரிழப்பு.
அப்போது எது வாழ்க்கை? எவ்வாறானது வாழ்க்கை? சேர்வு, பிரிவு, நல்லது, கெட்டது, சரி, தவறு...! இவ்வாறுதான் என வாழ்வது எங்கனம்? நடப்பது எல்லாமே மாயை என்று வாழ்ந்துவிட்டுப் போவதா? வெறும் தோற்ற மயக்கங்கள் என என்ன நடப்பினும் ஆடாமல் இருப்பதா? அப்படியிருந்தால் உலகம் எங்கனம் நகரும்? அல்லது எவ்வாறு இருக்க முடியும்? எதுதான் பாதை?
000
ஜேகேயின் எழுத்தின் அழகு, அது எல்லைகள் அற்றது.
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - குதூகலம்.
கந்தசாமியும் கலக்சியும் - அறிவியலும், மறைபொருளும் கலந்து கட்டிய நகைச்சுவை.
சமாதானத்தின் கதை - கனம்!
புத்தகங்கள் வாசகர்களோடு உறவாடுபவை. ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகங்களோடு உள்ள உறவு மிகவும் தனிப்பட்டது. நெருக்கமானது. உணர்வுமயமானது. உறவாடுதல் என்பது எல்லாவிதமான உணர்வுகளையும் அனுபவித்தல்தானே!
000
--சுபாசிகன்
Comments
Post a Comment