எல்லோரும் வீட்டினுள் முடங்கிக்கிடக்கையில் வெளியில் நடமாடுவதில் ஒரு சுகம் உண்டு. எங்காவது ஓரிரு மனிதர்கள். மனிதர்களைக் கண்டு ஆச்சரியமாகத் திரும்பிப்பார்க்கும் கங்காருக்கூட்டங்கள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள்.
000
சந்தைக்குப் போனால் எப்போதுமே பரபரப்பாகவிருக்கும் உணவுவிடுதியின் கதிரைகள் எல்லாம் மேசைகளின் மேலே தலைகீழாக அமர்ந்திருந்தன. விலை மலிந்த மீனையும் இறாலையும் வாங்குவதற்கு ஆள் இருக்கவில்லை. மாடத்தின் மூலையில் இருக்கும் புராதன பியானோவை வாசிக்கும் வயோதிபப் பெண்மணியைக் காணக்கிடைக்கவில்லை. மேசைபோட்டு நாட்டு முட்டைகளையும் பாஸ்டா பக்கற்றுகளையும் விற்கும் தாத்தாவையும் காணவில்லை. அவரோடேயே எப்போதும் கூட அமர்ந்திருந்து ஹெரால்ட் சன் படிக்கும் அவர் நண்பரையும் காணவில்லை. சிறுவர்களையும் காணவில்லைதான். ஆனால் அதுபற்றி அவ்வளவு கவலை இல்லை. வயோதிபர்கள் வீட்டினுள் முடங்கியதுதான் பெருந்துன்பம். எங்களுடைய ஒரு நாள் அவர்களுக்கு ஒரு வருடம்.
தெரிந்த வயோதிபர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து பேசவேண்டும்போலத் தோன்றியது. கைலாசபதி அங்கிள், சகுந்தலா அன்ரி, பூபதி அங்கிள், வைத்தி அங்கிள்.
வேண்டாம்,
பிறகு பாப்பம்.
000
சந்தையில் அன்னமுன்னா பழம் வாங்கினேன். அவுஸ்திரேலியா வந்ததுக்கு என்றைக்குமே இப்பழத்தை வாங்கியதில்லை. ஊரிலும் அவ்வளவாகச் சாப்பிட்டதில்லை. கமலராணி அக்காவீட்டில் அம்மரம் நின்றது. பழம் ருசியானதுதான். ஆனால் பதம் பிடிப்பதுதான் சிரமம். சின்னன் என்றால் அழுகிவிடும். அல்லது பழுக்காமல் இருக்கும். நடுவில் ஒரு புள்ளி. பிடித்து ஆய்ந்தால் ருசி உலகை ஆளும். அக்காவுக்குத் தொலைபேசி எடுத்து இதனைச் சொல்லவேண்டும்போல இருந்தது. கோல் பண்ணினேன். இரண்டாவது ரிங்கோடு துண்டித்துவிட்டேன்.
அக்கா பிசியாக இருப்பா.
பிறகு கதைப்பம்.
000
நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கலைத்துபோடலாம் என்று மனம் உந்தியது. மொத்தமாக இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்குமா? ஒவ்வொன்றாக, பெயர், எழுதியவர், பதிப்பகம், நாடு, எழுத்துவகை, மூல மொழி எனப் பிரித்து குறிப்பு எடுத்து வைத்தால் என்ன? இவற்றுள் இன்னமும் வாசிக்காதவை எவை என்றும் அடைப்புக்குறிக்குள் இடவேணும். வாசிக்காதவை ஐநூறுவரைக்கும் இருக்கலாம். எனக்கும் தெரியாமலேயே நூலகத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் புத்தகங்களும் இவற்றுள் அடக்கம். படிக்கும் காலத்தில் நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். வாத்தியார் அறியாத மாணவனாக. எங்காவது ஒரு மூலையில் அமர்ந்தபடி, கணக்கை சரியாக நிறுவியது தெரிந்தும் கொண்டுபோய்க் காட்டத்தயங்கியபடி. அல்லது ஐந்தாறுபேர் கொண்டுபோய்க் காட்டியபின்னர் பத்தோடு பதினொன்றாக போய்ச்சென்று காட்டி, அவரின் ‘ம்’ என்ற பெரும் வார்த்தையில் கிறங்கி மகிழ்வுறும் ஒரு அற்ப மாணவனாக.
000
அன்னமுன்னாவைப் பிரித்துப்பார்த்தேன். உள்ளே அழுகியிருந்தது. குப்பையில் அப்படியே போட்டுவிட்டேன்.
000
ஆரம்பிக்காமலேயே முடிந்துபோன நாவலை மீளவும் முயற்சி பண்ணலாம் என்று முடிவெடுத்தேன். நேரமா இல்லை? கணம் பொழுதுக்காய் ஏங்கியதுபோக கணம் பொழுதாய் நீண்டு கிடக்கிறது. கதை உண்டு. களம் உண்டு. மாந்தர் பலர். அடுத்ததடவையும் சோ.பவிடம் சென்று இன்னமும் அதை எழுதி முடிக்கவில்லை என்று எந்த முகத்தோடு சொல்வது?
அவர் முகமும் குரலும் ஒருசேர நிழலாடுகிறது.
"இனி நானா இந்த வயசில எழுதுறது? நீர் ஒண்டையும் யோசிக்காம எழுதும் ஐ ஸே"
அவரின் “ஐ ஸே”க்கு நான் அடிமை. அடிக்கடி தொலைபேசி எடுத்துப் பேசவேண்டும். எண்பத்துமூன்று வயது. ஐந்து வருடங்களுக்கு முன்னரும் அப்படித்தான் யோசித்திருந்தேன். ஒருநாளும் பேசவில்லை. இந்தத்தடவையும் இப்போது ஒரு மாதம் ஆகிவிட்டது. எடுத்து ‘எப்படி இருக்கிறிங்கள்?’ என்று கேட்கலாம்தான்.
பிறகு பாப்பம்.
000
பூந்தோட்டத்தைத் துப்பரவு செய்யவேணும். களை எது செடி எது என்று தெரியாமல் பற்றை பத்திப்போய். என்ன ஒன்று, மகரந்தங்கள் மூக்கினுள் நுழைந்தால் தும்மும். பருவகாலத்தின் தொற்று வந்து காய்ச்சலும் இருமலும் ஒருசேர மிரட்டலாம். உலகம் என்னை சந்தேகப்படவுஞ் செய்யும். வஞ்சம் பண்ணும். ஒரு போதகரிலும் கேவலமாக என்னை நடாத்தும். தவிர, இலையுதிர்காலத்தின் எஞ்சிய நாட்களைக் கழிக்க மரங்களிடம் கொஞ்சமே உதிர்பூக்கள் தொங்கிக்கொண்டிருந்தன. இக்கணம் எதற்குத் தோட்டத்தில் மெனக்கடவேண்டும்?
பேந்து.
000
பதில் அளிக்கலாம். முகநூலில். மின் மடலில். வைபரில். வட்ஸ் அப்பில். குழுக்களில், நண்பர்கள், உறவினர்கள், வாசிப்புத் தொடர்புகள். ஒவ்வொருத்தருக்கும் ஆற அமர பதில் அளித்தால் என்ன குறைந்தா போய்விடும்? குறைந்தபட்சம் அழைப்புகளுக்காவது பதிலளிக்கலாமல்லவா? எத்தனை மிஸ் கோல்கள். எத்தனை நோட்டிபிசேன்கள். ஒரு மெசேஜ் பண்ணினால் என்ன?
சரி, முக்கியமானவர்களோடாவது பேசலாம். அக்காமாரோடு. அண்ணாவோடு. அம்மா. அப்பாவோடு. மாமா, மாமி. மச்சான், மச்சாள், மருமக்கள், குமரப்பெருமாள் மாமா எப்படி சமாளிக்கிறார்? பென்சில்வேனியாவில் மயூ என்ன செய்கிறான், ஜெகன் ஜேர்மனி போய்விட்டானா? எத்தனை நண்பர்கள்.
பேசவேண்டும். பேசலாம். என்ன அவசரம். ஆறுமாதங்கள் வீட்டுச்சிறை என்கிறார்கள்.
000
சமைக்கலாம். எப்பப் பார்த்தாலும் புட்டும் முட்டைப்பொரியலுமாக. ஒரு மாற்றத்துக்கு இடியப்பம் குழைத்தால் என்ன? தண்ணி கூடினால் கட்டிப்பட்டுவிடும். குறைந்தால் உதிர்ந்துவிடும். தட்டு வேறு கழுவி எடுக்கவேண்டும். இடியப்பம் பிழைப்பதற்கே அதிகம் சாத்தியம் உள்ளது. தமிழ்க்கடைகளின் வருகையால் அப்பத்தைப்போன்றே இடியப்பமும் இன்றைக்கு கடையில் மாத்திரமே கிடைக்கும் பொருள் ஆகிவிட்டது. எப்படித்தான் அவித்தாலும் அது மஞ்சுளா அக்காவின் இடியப்பம்போல வரப்போவதில்லை.
பிறகெதுக்கு குத்தி முறிவான்?
000
உடற்பயிற்சி நன்று. மாலை ஐந்து மணிக்கு ஓடலாம். மிதமான வெயில். இயந்திரப் புகைகள் நீத்த வளி. காதில் சிற்பி கேட்கலாம். ‘அலை நீரில் நதி ரெண்டு சேரும்’ என்று ஆண் மிக மிருதுவாகப் பாடுகையில் ஆர்ப்பாட்டமாக ‘நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்த கொடி’ என்ற சுசீலாவின் குரல். அந்தப்பாடலுக்கு எதற்காக சுசீலா என்று ஆச்சரியம் வந்தது. அதுவும் ரீங்காரமாய். புதுரோஜாவும் நல்ல பாடல்தான். ரிப்பீட்டில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இல்லை. ஓடவேண்டும்.
000
இவ்வளவு நேரம் கிடைக்க, வாசிக்கவேண்டியதுதானே.
அலிஸ் மன்றோவின் ஐந்தாறு கதைகள் இன்னமும் மீதமிருக்கின்றன. “ஞாயிறு கடை உண்டு” முன்னுரிமை வரிசையில். “Tales of enchanted boyhood” நன்றாக இருக்கும்போலத்தோன்றுகிறது. எல்லாமே என்னை வாசி என்றபடி. கடல் கோட்டையை மீள வாசித்தாலும் தகும்.
000
திவ்யா என்னானாள் என்று தெரியவில்லை. எட்டாவது மாதத்தில் குழந்தை இறந்து பிறந்தபோது போய்ப்பார்த்தது. அவள் மிகத் தைரியமாக இருந்தாள். அழவில்லை. தான் எதிர்பார்க்கவேயில்லை என்றாள். இறந்துபோன குழந்தையின் இயற்கைப் பிறப்புக்காகக் காத்திருந்த அந்த மூன்று நாட்களும் எப்படித் தனக்கு மனமும் உடலும் விறைத்துப்போயிருந்தன என்று சொன்னாள்.
திவ்யாவுக்கு ஒரு ஹாய் அனுப்பினால் என்ன? எப்படி இருக்கிறாய்? வேலை எப்படிப் போகிறது? வீட்டிலிருந்தா? கணவன் எப்படி இருக்கிறான்? கேட்டதாகச் சொல்லு. Stay safe. இவ்வளவுதானே. இதை அனுப்புவதில் என்ன திண்டாட்டம் இருக்கமுடியும்? இதை வாசிக்கையில் அவர்கள் எத்தனை மகிழ்ச்சியடைவர்?
May be later.
000
டீவி ஓடிக்கொண்டிருந்தது. நியூஸ் நியூஸ் நியூஸ்.
000
இணையம் திறந்தால் நியூஸ் நியூஸ் நியூஸ்.
000
இது எப்போது சரிவரும்? இன்று ஸ்பெயினில் எத்தனை? இத்தாலியில் எத்தனை? அமெரிக்காவில் எத்தனை? நியூ ஜேர்சியில் எத்தனை? அவுசியில் எத்தனை? மெல்பேர்னில் எத்தனை? எப்பிங்கில் எத்தனை? தெரிந்தவர்கள் யாருக்கும் தொற்று உண்டா?
எனக்குள் ஏற்படுவது தேடலா? ஆர்வமா? குதூகலமா? கொண்டாட்டமா? தூண்டலா? ஓர்கசமா?
ஒருநாளில் ஆயிரம் பேர் சாகும்போது அவரவர் வீட்டில் அழுவார்களா அல்லது இது ஒரு சமூக நிகழ்வு என்று ஆறுதலடைவார்களா?
000
அம்மா அப்பா வீட்ட போகலாமா? அம்மாவின் மீன் குழம்பு இன்றி எப்படி வாழப்போகிறேன்? ஒருதடவை போனால் என்ன குறைந்தா போய்விடும்? தப்பித்தவறி எனக்குத் தொற்றி நான் அதை உணராதிருந்தால்? இருவருமே வருத்தக்காரர்கள் ஆயிற்றே. எங்களுக்கு எப்படித் தொற்றும்? எங்கள் வீட்டில் எப்படிக் குண்டு விழும்? எங்கள் வீட்டுக்கு எப்படிப் புற்றுநோய் எட்டும்? எங்கள் வீட்டில் எப்படி சா விழும்?
உலகின் தொற்றுகளும் மரணங்களும் கொலைகளும் எங்கோ, யாரோ மனிதர்களுக்கு நிகழுவது. அவை வெறுஞ் செய்தியாகத்தான் என் வீட்டை வந்தடையும்.
000
வங்கிச் சேமிப்பு மீதியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அது ஷ்ரோடிங்கர் பூனை போன்றது. பார்த்துக்கொண்டேயிருந்தால் குறைகிறது. பார்க்காமலேயே விட்டால் அப்போதும் மேலும் வேகமாகக் குறைகிறது. வேலை இருக்குமா? போய்விடுமா? வேலை போனால் அடுத்து என்ன? கையிருப்போடு எத்தனை மாதங்கள் சமாளிக்கலாம்? யார் யாரிடமெல்லாம் கடன் வாங்கலாம்? எவ்வளவு வாங்கலாம்? வங்கியில் கடனை நிறுத்திவைக்க முடியுமா? பில் எல்லாம் எப்படிக் கட்டப்போகிறேன்? உணவுக் கையிருப்பு தீர்ந்தால் என்ன செய்வது. வாங்கிக் குவிக்கலாமா? வாங்கிக் குவித்தல் தவறு அல்லவா? ஏலவே வாங்கிக் குவித்து வைத்திருப்பதை என்ன செய்வது?
000
எதுவுமே செய்யாமல், யாரோடுமே பேசத் தோன்றாமல், சோபாவுக்குள்ளேயே புதைந்து கிடந்து, நெட்பிளிக்ஸில் நான்கரை மணிநேரம் தடவி எடுத்து, தெரிந்து ஒரு திரைப்படத்தைப் போட்டேன்.
“Eternal sunshine of the spotless mind”
எழுத்தோட்டம் முடியும் முன்னமேயே நிறுத்திவிட்டு, மீண்டும் நான்கரை மணிநேரம் தேடலுக்கு விரயம் செய்து ஏலவே முப்பது தடவை பார்த்த படத்தை மீளவும் போட்டேன்.
“Nottinghill”
பின்னர் அதனையும் நிறுத்திவிட்டு யூடியூபில் ஒரு படத்தைத் தெரிவு செய்தேன்.
"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"
இந்தியன் ஆர்மி சீன் முடிய அதனையும் நிறுத்திவிட்டு, கண்ணாமூச்சி ஏனடா பாடலைத் தேடி பிளே பண்ணினேன்.
பின்னர் அதை விட்டுவிட்டு அலக்சாந்தரின் 'கண்ணாமூச்சி' நாட்டக்குறிச்சி நகைச்சுவையைப் போய்ப்பார்த்தேன்.
மேலும் சில ஸ்டாண்டப் கொமடி. அப்படியே ரசல் பீட்டர்ஸ், டொன் ரிக்கில்ஸ் என சில ஆங்கில நகைச்சுவைகள்.
பிறகு மீண்டும்.
நீயூஸ் நியூஸ் நியூஸ் நியூஸ்.
000
அவாவில் ஊரிலிருந்து வாங்கிக்கொண்டு வந்துபோட்ட, யாருமே தேடாத, பனாட்டை நன்னி நன்னி நாள் முழுதும் சாப்பிட்டு முடிப்பது என்பது,
ஒரு தித்திப்பு.
000
வீட்டில் வில்படாமல் கிடந்த பழைய கச்சானை சாப்பிட்டு முடிப்பது என்பது,
ஒரு தித்திப்பு.
000
ஷிராஸ், பினோட், மேர்லட், ஷம்பைன், ஷார்டனே, டிசேர்ட் என வகை தொகையில்லாமல் பிரிந்து கிடந்தாலும் எல்லாமே திராட்சை ரசம் என பொதுமைப்படுத்தி, ஒரு கிண்ணம் உடலுக்கு நலம் என்றால் பல கிண்ணம் இடர் காலத்தில் நலம் என்றபடி, குடித்துத் தீர்ப்பது,
தித்திப்பு.
000
வெளியே வெயிலா? மழையா? காற்றா? குளிரா? இரவா? பகலா? சனியா? புதனா?
யாரறிவார் பராபரமே?
000
திடீரென எல்லோர் வீடுகளுக்கும் சென்று, யன்னலினூடாக திரைச்சீலை அசைவு கொடுக்கும் இடைவெளியில் அவரவர் வாழ்வை தரிசிக்க ஆசையாக இருக்கும். ஏனென்று தெரியாது. அறிய ஆவல். அவ்வளவுதான்.
கேதா அடிக்கடி சொல்லிக்காட்டும் கவிதைதான் ஞாபகம் வந்தது.
Oh! let us never, never doubt
What nobody is sure about.
அதிலொரு சந்தேகமுமில்லை.
000
உள்ளடங்கு காலத்தில் எல்லா மனிதரும் ஒன்றுபோல் ஆகினாரோ? என்னைப் பார்த்தது போலவே இருந்தது ..
ReplyDeleteகணம் பொழுதுக்காய் ஏங்கியது போக கணம் பொழுதாய் நீண்டு இருக்கும் போதே ஏழு நாட்கள் ஏழு கதை மாதிரி ஒன்றை தொடங்கலாம் தானே. ம்ம் எவ்வளவு இலகுவாக இருக்கிறது மற்றவர்களுக்கு சொல்லும் போது
ReplyDeleteநீங்களும் "பிறகு பிறகு "என்ற வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தான் கவலையளிக்கிறது.
பனாட்டு ,பழைய கச்சான்,திராட்சை ரசம் அதில் மட்டுமே தித்திப்பு..... ம்ம் எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே........