Skip to main content

“விளமீன்” பற்றி மணியாள்



மகனின் ‘விளமீன்’ கதையை வாசித்தபோது பல ஞாபகங்கள் வந்து போயின.
அந்தக்காலத்தில் கொஞ்சம் வசதி கூடிய குடும்பங்களுக்கு வீட்டிற்கே மீனைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். வசதி குறைந்த குடும்பத்தார் கொஞ்சப்பேர் கடற்கரைக்குப் போய் தோணிக்குக் கிட்டவா நிற்பார்கள். மீன்காரன் பையை வாங்கிக்கொண்டுபோய் தோணிக்குள் இருந்து மீனை எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் அவர்கள் அதுவரைக்கும் பொறுக்காமல் தோணியை கரையேற்றமுதலேயே அடித்துப்பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். இப்படிப்போட்டி போட்டுக்கொண்டு நின்றால்தான் நல்ல மீன்கள் கிடைக்கும். இவர்கள் எல்லோருமே மீனுக்கான காசை மாதம் முடியும்போதுதான் கொடுப்பார்கள்.
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தீவுப்பகுதி மீன்கள் எல்லாம் அந்த மக்களுக்குப் போகாமல் ஐஸ் பெட்டியில் யாழ்ப்பாணம் போய்விடுகிறது. ஊரிலும் முன்னமாதிரி ஆட்கள் இல்லை. சரசுமாமி மாதிரி வெளி நாட்டுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்றுவிட்டார்கள்.

000
சரசு மாமியைப்போல பிள்ளைகளைப்பார்க்க அவுஸ்திரேலியாவுக்கு வந்த நம்மவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வேற்று நாட்டவர்கள், வெவ்வேறு மொழியினரும் இங்கே இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பிள்ளைகள் கூப்பிட்டோ அல்லது வேறு வழிகளிலோ இங்கு வந்தவர்கள். வந்த இடத்தில் அகதி விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுத்து, அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டதில் அகதிகள் ஆனவர்கள். இவர்களில் வயது வந்தவர்களுக்கு அரசாங்கமே பென்சன் கொடுக்கும். ஆனால் பென்சன் வயதை எட்டாதவர்கள் ஆங்கிலவகுப்பில் சேர்ந்து படிக்கவேண்டும். அப்படிப்படித்தால்தான் அரச உதவித்தொகை அவர்களுக்குக் கிடைக்கும். அதனால் நம்மட ஆட்கள் எல்லோரும் ஆங்கிலம் படிக்கப்போவார்கள். அங்கு பலருடைய அறிமுகமும் கிடைக்கும்.
000
இங்கு வந்திருக்கும் மக்களுக்கு அரசாங்கம் எத்தனையோ சலுகைகளைக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று உந்த “வயது மூத்தோர் சங்கம்”. அதில் விரும்பிய மூத்தோர் வருடத்துக்கு பதினைந்து டொலர் கட்டி சேரவேண்டும். செலவுக்கு அரசாங்கம் காசு கொடுக்கும். இவர்கள் தலைவர், காரியதரிசி என்று ஒரு குழு அமைத்து அதை நடாத்துவர்கள். வருடத்தில் ஒருமுறை பஸ் பிடித்து சுற்றுலா போவார்கள். பொங்கல், வருசம், தீபாவளி, கிறிஸ்மஸ் என பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள். சின்னச்சின்ன நிகழ்வுகளும் நடக்கும். நம்மாட்கள் என்பதால் எல்லாத்திலும் சச்சரவு இருக்கும். இவை எல்லாச்சங்கங்களிலும் நடப்பவைதான்.
000
இதைவிட சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் தங்கவேண்டிவந்தால் அங்கும் நம்மவர்களுக்கு இராஜபோக நடப்புத்தான். எல்லா வேலைகளையும் செய்துகொடுப்பார்கள். சாப்பாடுகூட தீத்தி விடுவார்கள். சிலபேர் வீட்டுக்கு வராமல் ஆஸ்பத்திரியிலேயே இருக்கப்போகிறேன் என்று அடம் பிடிப்பார்கள். ஆனாலும் சுகமானவுடன் அவர்களை ஆஸ்பத்திரி வீட்டுக்கு அனுப்பிவிடும்.
000
எனக்குத் தெரிந்து, சரசு மாமிபோல வேறு சிலரும் மூன்று நான்குபேராக சேர்ந்து எல்லா இடமும் சுற்றிப்பார்த்துவிட்டு கோப்பிக்கடையில் போய் கப்புசீனோவும் சிப்சும் வாங்கிச்சாப்பிட்டுவிட்டு (கடைக் கார்ட் வைத்திருந்தால் ஏழு கப்புசீனோவுக்குப்பிறகு எட்டாவது இலவசமாகக் கொடுப்பார்கள்) வீட்டுக்கு நேரம் செல்லப்போவார்கள். அங்கு சரசுமாமிக்கு நடந்ததுபோல சில பிரச்சனைகளும் நடக்கும். அதனால் சிலபேர் அரசாங்கம் வயோதிபர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வீட்டைப் பெற்றுக்கொண்டு, தனியாகக் குடிபோய், காரும் ஓட்டப்பழகிக்கொண்டு சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்.
000
எனக்குத் தெரிந்த அன்ரி ஒராள் பயங்கரக் கெட்டிக்காரி. இங்கு வந்த தொடக்கத்தில் அவ எங்கு போவதென்றாலும் பஸ்ஸில்தான் போய்வருவா. அப்படி பஸ்ஸில் போவது அலுத்துப்போய், கார் ஓட்டப்பழகி, லைசன்சும் எடுத்துவிட்டா. அதுவும் மூன்றுமுறை பெயிலாகி நான்காவதுமுறைதான் சரிவந்தது. ஒரு காரையும் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள்ள தொடங்கி கடைசியில் எல்லா இடமும் ஓடப்பழகிட்டா. ஒருநாள் பொலிஸ்கார் நிற்பதைக் கவனிக்காமல் அந்தக்காரையே முட்டிவ்விட்டு கவனிக்காமல் சென்றுவிட்டார். ஆனால் அவனோ பின்னாலே துரத்திக்கொண்டுபோய்ப் பிடித்துவிட்டான். பின்பு ஒருமாதிரி “சொறி சேர், சொறி சேர்” என்று கெஞ்சி மன்றாடியபடியால் வயதுபோன மனிசி பாவம் என்று அவனும் விட்டுவிட்டான்.
000
சரசுமாமியைப்போல இல்லையென்றாலும் எனக்கும் இந்த விளமீனால் ஒரு சுவாரசியமான விசயம் நடந்தது.
நானும் எனது கணவரும் பிரெஸ்டன் சந்தைக்கும் போனோம். அங்கு கடையெல்லாம் விளமீனைத் தேடிக் களைத்து கடைசியாக ஒரு கடையில் அதைக் கண்டுபிடித்து வாங்கப்போனேன். எனது கணவரோ “ஒண்டு காணும்” என்று சொல்லிக்கொண்டு நின்றார். இப்படித்தான் என்ன வாங்கப்போனாலும் “ஒண்டு காணும்” அல்லது “பேந்து வாங்கலாம்” என்று சொல்லுவார். நானும் அவர் சொன்னாரென்று ஒரு மீனை மாத்திரம் வாங்கிவிட்டு அவரைக் கூட்டிக்கொண்டு சந்தையில் நாங்கள் அடிக்கடி போகும் பிஸ்ஸாக்கடைக்குப் போனேன். அவருக்கு ஒரு பீஸ்ஸா துண்டை வாங்கிக்கொடுத்து சாப்பிடச்சொல்லிட்டு “கொஞ்சம் இருங்கோ நான் இங்காலப்பக்கம் பார்த்திட்டு வாறன்” என்று சொல்லியபடி மீண்டும் அந்த விளமீன் கடைக்கு ஓடினேன். அங்கே இன்னும் இரண்டு மீனை வாங்கிக் பைக்குள் போட்டேன்.
வீட்ட வந்து கராச்சுக்குள்ள வச்சு சமைப்பம் எண்டு, அதற்குள் வைத்தே மீனை வெட்டி, வடிவாகக் கழுவி, குழம்பும் சொதியும் முதலில் வைத்து இறக்கினேன். பின்னர் பொரிப்பதற்கு எடுத்த மீனுக்கு உப்பு, மிளகாய்த்தூள் எல்லாம் போட்டுப் பிரட்டி வைத்து, எண்ணெய்ச்சட்டியை அடுப்பில் வைத்தேன். பதினொரு மணிதானே, றோட்டில் இப்போது ஆட்கள் போவது குறைவாக இருக்கும் என்று கராச்சின்ற முன் கதவையும் திறந்து வைத்துவிட்டு, மீனைப் பொரிக்க ஆரம்பித்தேன். மீனும் நல்ல வாசனையோடு பொரிந்துகொண்டிருந்தது.
அந்தநேரம் பார்த்து ஒரு வெள்ளைக்காரன் நாயைக் கொண்டுவந்திருக்கிறான். அதை நான் கவனிக்கவில்லை. நானோ விளமீன் பொரியலின் மணத்தை மூக்கில் இழுத்து இரசித்துக்கொண்டு நின்றேன். திடீர் என்று அந்த நாய் வவ் என்று பாய்ந்துகொண்டுவந்து அடுப்பு இருந்த மேசை மீது இரண்டு கால்களையும் மேலே தூக்கி வைத்து நாக்கை நீட்டிக்கொண்டு நிற்குது. எனக்கோ அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘ஐயோ என்ர விளமீன் பொரியல்’ என்று அதை நாயிடமிருந்து பாதுகாக்கும் வேலையை நான் தொடங்கிவிட்டேன். நாய்க்காரன் உடனே உள்ளே வந்து நாயைப் பிடித்துக்கொண்டு, என்னைப் பார்த்தானே ஒரு பார்வை. நானோ அசையவில்லை. மீனைப்பாதுகாப்பதுதான் என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது. அவனோ நாயை இழுத்துக்கொண்டு “பிளடி இண்டியன்ஸ்” என்று வாய்க்குள் ஏதோ புறுபுறுத்துக்கொண்டு போனான். நானும் ‘போய்யா நீயும் உன்ர நாயும்’ என்று புறுபுறுத்துக்கொண்டிருந்தேன்.
நல்ல காலத்துக்கு, நாய் என்று சொன்னது அவனுக்கு விளங்காதபடியால் நான் தப்பித்தேன்.
— மணியாள்

Comments

  1. அன்னையர் தின சிறப்பு பதிவு. தாயைப் போல்பிள்ளை நூலைப்போல் சேலை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .