அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.
அண்மையில் ஜெயக்குமாரன் சந்திரசேகரனின் (ஜே. கே) சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். அருமையான வாசிப்பனுபவம்.
முன்னுரை, என்னுரை, பதிப்புரை என்று எதுவுமின்றி அறிவிப்பின்றி திடீரென வந்துவிட்ட விருந்தினர்போன்று தொடங்குகிறது சிறுகதைத்தொகுப்பு.
முதலாவது கதையான ‘கனகரத்தினம் மாஸ்டர்’ என்னும் கதை, இலங்கையில் வாழ்ந்து, அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த, ஆனால் யாழ் கலாச்சாரச் சிந்தனையில் வாழும் ஒரு ஆங்கில ஆசிரியர்பற்றியது.
வெளிநாட்டு வாழ்க்கை, இலங்கை வாழ்வின் எச்சங்கள், சோகங்கள், கனவுகள், சாதீய எண்ணங்கள், வெளிநாட்டில் வேறினத்தவர்களுடன் பழகுதல், குழந்தைகளுடன் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து வாழ்ந்து பின்பு தனித்து மனைவியுடன் வாழ்தல், மகனுடனான மனத்தாங்கல்கள், ஈகோ என்று பலவிதமான நுண்ணுணவுகள கலந்த சிறப்பான கதை அது.
கிருசாந்தி படுகொலையை அடிப்படையாகக்கொண்ட ‘உஷ். இது கடவுள்கள் துயிலும் தேசம்’ என்னும் கதை நகர்த்தப்பட்ட உத்திவித்தியாசமானது மட்டுமில்லை கதையையும் மிகவும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
நான் மிகவும் ரசித்த கதை ’சைக்கில்கடைச் சாமி’. வள வள சள சள என்ற வர்ணிப்புக்கள், கதையை அநாவசியமாக அகலிக்கும் எழுத்துக்கள் என்று எதுவுமில்லை. ஓலிம்பிக்போட்டியில் ஓடும் குறுந்தூர ஓட்டக்காரனைப்போன்று, அத்தனையும் கொழுப்பற்ற தனிச் சதை.
சாமியண்ணையின் சுயம் அவரது மனைவியினால் காயப்படுத்தபடுகிறது. அதிலும் “இராவுல வீரவான் முக்குற முக்கு ஊருக்குத் தெரிஞ்சா” என்று அவர் மனைவி அவரது ஆண்மையை கேலிப்படுத்துவது அவரை பாடாய்ப்படுத்துகிறது. மலினமாக கேலி செய்யப்படுவது எத்தனை பெரிய வலியைத் தரும் என்பதற்கு சாமியண்ணை உதாரணம். கதையின் முடிவில் வேறுயாரும் உட்புகுந்துவிடுவார்களோ, அதனால் சாமியண்ணை பிரச்சனைக்குள் சிக்கிக்கொள்வாரோ என்று மனது அடித்துக்கொண்டது. நல்லவேளை, அப்படியொன்றும் நடக்கவில்லை. எல்லா கதைகளும் நீதியை உரைக்கவேண்டும் என்ற அவசியமோ விதியோ இல்லையல்லவா?
அக்கதையை வாசித்து பல நாட்கள் கடந்த பின்பும் சாமியண்ணையின் சைக்கில் கடையில், அவருடன் உட்கார்ந்திருந்து, அவர் ரிம்க்கு நெளிவு எடுததுக்கொண்டிருக்கும் பொழுதுகளில், அவருடன் உரையாடிக்கொண்டிக்கிறேன். அவருடன் பேசுவதற்கு அத்தனை விடயங்கள் அக்கதைக்குள் இருக்கின்றன. இந்தக் கதையினுள் மறைந்திருக்கும் உளவியலை நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். இக்கதையில் உள்ள சைக்கில்கடைபற்றிய குறிப்புக்களும் அலாதியானவை.
நுண்ணிய உணர்வுமயமான கருக்களைத் தேடியெடுத்து, மனித உணர்வுகளை, கதாபாத்திரத்தின் மனநிலையை, உரையாடல்களை தத்ரூபமாகப் படம்பிடித்து எழுதியிருக்கிறார். இடையிடையே வரும் நகைச்சுவைகள் ரசிக்கவைக்கின்றன.
பதினொரு அருமையான சிறுகதைகளைக் கொண்டதே ‘சமாதானத்தின் கதை’. இந்த நூலை புலம்பெயர் ஈழத்தமிழரின் பதிப்பமான ஆதிரை வெளியிட்டிருக்கிறது. ஆதிரை யாருடையதாக இருக்கும் என்ற கேள்வி அவசியமில்லையல்லவா. ஆம், அவருடையதுதான்.
சில காலமாக இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து வருகிறேன். புத்தக வடிவமைப்பு, தாளின் தன்மை, நிறம், எழுத்துரு, முன்னட்டை பின்னட்டை ஆகியவற்றில் நம்மவர்கள் கவனம் செலுத்துவது குறைவு என்ற எண்ணமே எனக்கிருக்கிறது.
ஆனால், சமாதானத்தின் கதையில் இந்த விடயங்களில் மிகக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். முன்னட்டையில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஒரு சுவற்றில் இருந்து, பச்சையாகத் தாவரங்கள் வளர்வதைக் குறியீடாகக் காண்பித்திருப்பது ரசிக்கவைக்கிறது.
இலங்கையில் மட்டும் 600 பிரதிகள் விற்றுத்தீர்ந்ததாக பதிப்பக உரிமையாளர் பெருமைப்பட்டார். இது சாதனை என்றே நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் ஜே.கே!
வாழ்த்துக்கள் கஜானியின் அப்பா!
-- சஞ்சயன் செல்வமாணிக்கம்
Comments
Post a Comment