ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.
சமாதானத்தின் கதை ஒவ்வொன்றும் அத்தனை கனதி. பல ஆழமான விடயங்கள் விரவிக் கிடக்கின்றன.
கனகரத்தினம் மாஸ்டரை வாசித்தபின் நான்கு நாட்களாக அதனையே அசைபோட்டபடி இருந்தேன். மீண்டும் அதனையே மீள்வாசிப்புச் செய்தேன். அதற்கப்புறம் அதனை சிலாகித்தபடி இரு நாட்கள். இதற்கிடையே அக்கதையைப் பற்றிய கதையாடலை சில தோழமைகளிடமும் பகிர்ந்திருந்தேன். பின்னர் மீண்டும் அக்கதையை வாசித்தேன்.
பெண்ணிலைவாதத்தின் அடிநாதம் குறுக்குவெட்டுத்தன்மை சார்பான கூருணர்வு. பாரபட்சங்களை ஏற்படுத்தும் அந்த குறுக்கு வெட்டுப்பகுப்பாய்வினை அங்குலம் அங்குலமாக, அத்தனை சுளுவாக, அத்தனை ஆழமாக ஒற்றைக் கதையில் கொண்டுவந்திருந்தமை பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயம்.
வைட் சுப்ரிமஸி, ஆணாதிக்கம், சாதியம், நாடற்றவர், தேசியம், எல்லை, செவ்விந்தியர், கறுப்பு ஆபிரிக்கன், பிரவுன் பீப்பிள், சப்பைமூக்கு ஆசியன், நிறவாதம், இனவாதம், வர்க்கம், வயது, பால், பால்நிலை, பாலியல் நாட்டம், திருமணம், மதம், மொழி, கலாசாரம்- அத்தனையையும் கலந்து கட்டி ஒற்றைக் கதையில் அலுப்படிக்காமல், சுவாரஸ்யமாக வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜே.கே.
இப்படியானதொரு கதைசொல்லிக்கு பெரும் நன்றி.
ஹஸனாஹ் கவிதா
18.03.2020
Comments
Post a Comment