Skip to main content

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 1



யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது.

முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய்களாகவும் இருந்தன. கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது அவற்றின் தொல்லை கூடிவிட்டாலோ நகரசபை நாய்பிடிகாரர் வந்து அவற்றைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். பல நாய்களைத் தெருவிலேயே வைத்து இயக்கங்களும் இந்திய இலங்கை ஆர்மிகளும் மாறி மாறிச் சுட்டுப்போட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுடும்போது அவர்கள் வளர்ப்புநாயா கட்டாக்காலியா என்று பேதம் பார்க்கமாட்டார்கள். எது எப்படியோ, இன்னோரன்ன காரணங்களால் அந்நாட்களில் கட்டாக்காலிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஒருவித கட்டுக்குள்ளேயே இருந்தது என்க.


ஆனால் இப்போது யாழ் வீதிகள் எல்லாமே நாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. ஒவ்வொருநாளும் புதுப்புது நாய்கள் வந்திணைகின்றன. எங்கிருந்து அவை வருகின்றன என்று தெரிவதில்லை. யாழ் பல்கலைக்கழக வாசலிலேயே பத்திருபது நாய்கள் எந்நேரமும் நித்திரையிலேயே கிடக்கின்றன. அதுவும் பட்டப்பகலில். இரவு எட்டு மணிக்குமேலே அவை எண்ணிக்கையில் இரட்டிப்பாகின்றன. அவை யாரைப்பார்த்து குரைக்கின்றன என்பதிலும் பெருத்த குழப்பம் இருக்கிறது. இத்தனை நாய்கள் இருக்கும் ஊரில்தான் இரவில் ஆவா குரூப்புகள் எந்தவித எதிர்ப்புமின்றி சாதாரணமாக வீடுகளுக்குள் நுழையமுடிகிறது. கத்திவெட்டுகளும் கஞ்சா கடத்தல்களும் இலகுவாக இடம்பெறுகிறது. நாய்கள் ஏனோ அவர்களை விட்டுவிடுகின்றன. ஆனால் சாமானியர்கள் வீதிக்குள் காலடி வைத்தாலே போதும். அவர்களைத் துரத்திப் பிடித்து தொடையில் அரைக்கிலோ அள்ளியபின்னர்தான் அவை அடுத்த சோலியைப்பார்க்கின்றன.

எனக்கு வேறு, சிறுவயதுமுதலே எங்களூர் நாய்கள் என்றாலே புழுத்த பயம்.

இதை நான் ஒரு படிமமாகவே அல்லது உள்குத்து எதுவும் வைத்தோ சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு எங்கட நாயளைக்கண்டால் சரியான பயம். அதிலும் எங்கள் வீட்டு நாய்க்கே பயங்கரப் பயம். சீசர் என்றால் குலை நடுங்கும். அது கொஞ்சம் உறுமினாலே நான் பம்மிவிடுவேன்.

சீசர் ஒரு சாதாரண சுதேசிய நாய்தான். பொற்பதி வீதியைச் சேர்ந்த தெரிந்த அன்ரி ஒருவர் வீட்டின் பின்வளவில் பிறந்த எட்டுக்குட்டிகளில் ஒருத்தன் சீசர். நந்தாவில் அம்மன் குரூப். முதலில் சீசரின் தமையனைத்தான் நாங்கள் எடுத்து வந்தோம். அதற்கு நெப்போலியன் என்று பெயரும் வைத்திருந்தோம். ஆனால் நெப்போலியன் மூன்றே நாட்களின் இறந்துவிட்டதால் அவன் தம்பி சீசரை அடுத்ததாகக் கொண்டுவந்தோம். சீசருக்கும் முதலில் நெப்போலியன் என்றே பெயர் வைத்தது. எங்கள் அம்மாவுக்கு நெப்போலியன் என்ற பெயர் வாய்க்குள் நுழையவில்லை. அதனால் பிரஞ்சுப் பெயர் வேண்டாம் என்று சொல்லி உரோமப் பேரரசரின் பெயரைத் தெரிவு செய்தோம். கட்டபொம்மன், சங்கிலியன் மாதிரியான பெயர்களை வைக்கலாம் என்று அம்மா ஆலோசனை சொன்னார். நான்தான் கேட்கவில்லை. நாய்களுக்குத் தமிழ்பெயர் சூட்டும் பஷன் அப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. அத்தோடு தமிழ் மன்னர்களின் பெயரை நாய்களுக்குச் சூட்டி அவமானப்படுத்தக்கூடாது என்பதிலும் உறுதியாயிருந்தோம். இப்போது அது தவறு என்று தெரிகிறது. ஆனால் அந்தக்காலத்தில் நாய்களை நான் குறைத்தே மதிப்பிட்டிருந்தேன். “நாயே உனக்கு ஒரு நாடா” என்று காசி ஆனந்தன் பாடியபோது நாணிக்கோணியிருக்கிறேன். "அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம்” என்ற பாரதி பாடலைப் படித்தபின்னர் சாமத்தியவீடுகளில் கும்பத்தைப்பிடித்தபடி வெட்கப்பட்ட நண்பிகளை எல்லாம் நாயாக்கிப் பார்த்திருக்கிறேன். எப்பொருள் எவர் வாயால் கேட்பதைப்பொறுத்து அப்பொருளின் மதிப்பை உயர்த்தி வைத்திருந்த வயது அது. ஆனால் இப்போது அந்த எண்ணம் கிடையாது. டெக்னிக்கலி ஸ்பீக்கிங் அச்சம் என்பது ஆண், பெண், நாய் என எல்லோருக்கும் அவசியமான ஒன்று. நாணம்கூட ஆண், பெண் என இருவருக்குமே தேவையானது என்றே நினைக்கிறேன். நாய்க்குக்கூட நாணம் உள்ளதா, இல்லையா, வேண்டுமா, வேண்டாமா என்பதை அறிய போதுமான தரவுகள் எம்மிடம் இல்லை. நாங்கள் பழக்கதோசத்தில் வெட்கம் கெட்ட நாயள் என்று சொல்கிறோமே, எப்போதாவது வெட்கம் கெடாத நாய்களைப் பார்த்திருக்கிறோமா? நாங்கள் பாரதி சொல்லிவிட்டான் என்பதற்காக அப்படியே கருத்தை எடுத்து பிரீசருக்குள் வைத்துவிடுகிறோம். நீ பெண்ணை உசுப்பேத்தவேண்டும் என்பதற்காக, தமிழரை போராட அழைப்பதற்காக நாயை எதற்காக இழுக்கவேண்டும் என்கிறேன் நான்.

ஸீ, இப்படி நாய்களை நான் கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்ததும் நாய்களுக்காக வாதாட ஆரம்பித்ததும் பின்னாளில்தான். அதுவும் வெளிநாட்டுக்குப்போனபின்னர்தான் நாய்களின் மீதான மதிப்பு எனக்குள் உயர ஆரம்பித்தது. உடனே, நாய்களின் மதிப்பை அறிய மெனக்கட்டு வெளிநாட்டுக்கா போகவேண்டும்? கொழும்புக்குப் போயிருந்தாலே அறிந்திருக்கமுடியுமே என்று விசர்க்கதை கதைத்துக்கொண்டு வரவேண்டாம். வெளிநாட்டில் நாய்களை மனிதர்களிலும் உயர்வாக நடத்துவார்கள். தெருவில் போகும்போது தம் நாய்கள் கழிக்கும் கக்காவை தாமே அள்ளுவார்கள். தன் கக்காவை சக மனிதர்களைக்கொண்டு அள்ள வைக்கும் சமூக அமைப்பிலிருந்து வந்தவனுக்கு தன் நாயின் கக்காவைத் தானே அள்ளும் எஜமானர்களைப்பார்க்கும்போது எப்படியிருக்கும்? அதுதான் திருப்புமுனை. அதன்பின்னர் நான் நாய்களை எப்போதும் உயர்வாகவே மதிப்பிட ஆரம்பித்தேன். நாய்கள் பற்றிய சில மொழியியல் ஆராய்ச்சிகளையும் நான் செய்திருக்கிறேன். எல்லா மொழிகளும் நாய்களை உயர்த்தியே வைத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் dog ஐ திருப்பிப்போட்டால் god. தமிழில் நாய்க்குத் தா போட்டால் தாய். சிங்களத்தில், மலையாளத்தில், பிரெஞ்சில் என்று இப்படி வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். ஆய்வு அத்தனை கடினமில்லை. எல்லா மொழிகளிலும் நாய்க்கு என்ன சொல் என்று முதலில் தேடவேண்டும். பின்னர் அந்த உச்சரிப்பை ஒட்டிய சொற்களைத் தேடவேண்டும். அவற்றில் தூஷணங்களை ஒதுக்கிவிட்டு மதிப்பு மிக்க சொற்களில் மிக உயர்ந்ததை மாத்திரம் தெரிவு செய்து குறிப்பிடுவது. உதாரணத்துக்கு நாய்க்குத் தேடுகையில் பேய், காய், டேய், வாய், சேய், தாய், பாய் என பல வந்திறங்கின. ஆனால் அம்மா செண்டிமெண்ட் வேர்க்கவுட் ஆகுமென்பதால் தாயைத் தேர்ந்தெடுத்தேன் என்க. நாயென்றில்லை, கழுதை, பன்றி, மயிர், மட்டை என எல்லா சொல்லுக்கும் இப்படி ஒரு ஆராய்ச்சி செய்து அவற்றை உயர்த்திப் பேசலாம். தேவையென்றால் தாழ்த்தவும் முடியும். அநேகமான மொழி சார்ந்த பெருமைகள் எல்லாவற்றுக்கும் பின்னே இவ்வாறான ஆய்வுகள் நிச்சயம் நிகழ்ந்திருக்கும். உதாரணத்துக்கு … வேண்டாம். யு வேர்க் இட் அவுட் நெக்ஸ் டைம்.

சீசருக்குத் திரும்புவோம்.

சீசரின் இயல்போ அல்லது எங்களின் வளர்ப்புப் பிழையோ தெரியாது. சீசர் வீட்டுக்கு அடங்காத நாயாகவே வளர ஆரம்பித்தது. படு கோபக்கார நாய் அது. மாலை நேரங்களில் அதைக் கட்டலாம் என்று சங்கிலியைத் தூக்கினாலே போதும். அது உறும ஆரம்பித்துவிடும். நான் உடனே பின்வாங்கிவிடுவேன். எனக்கேன் தேவையில்லாத வேலை? நாயையும் வளர்த்து பின்னர் அதனிடம் கடியையும் வாங்குவதற்கு நான் என்றைக்கும் தயாராக இருந்ததில்லை. அம்மாதான் பாவம். ‘சீயர்’ என்று உறுக்கியபடியே அதைப் பிடித்துக் கட்டுவார். பொதுவாக நாய்கள் எஜமானர்களைக் கண்டாலே வாலை ஆட்டிவைக்கும். ஆனால் சீசர் சாப்பாடு போடப்போகும்போது மாத்திரமே எங்களுக்கு வாலை ஆட்டும். அப்போதுகூட அதன் மனதில் ஓடுவதை அறிவது அவ்வளவு கடினமாக இருப்பதில்லை. நாயென்று இகழாமல் காது கொடுத்துக் கேட்டாலே போதும். விளங்கும்.
‘நாயே, என்னை நீ என்னிடம் கேட்காமலேயே பெற்று வளர்க்கிறாய், ஆகவே எனக்குச் சாப்பாடு போடவேண்டியதும் என்னைக் குளிப்பாட்டுவதும் எனக்கு உண்ணி பிடுங்குவதும் உன் கடமை, அதை நீ செய்யத்தான் வேண்டும். ஏதோ இதை நீ எனக்காகச் செய்வதாக பீலா விடவேண்டாம். உன் பாதுகாப்புக்காகவும் உன் சந்தோசத்துக்காகவும் நீ என்னை வளர்க்கிறாய். என்னை நாள் முழுதும் கட்டிப்போட்டுவிடுகிறாய். ஆகவே நானாக என் துணையைத் தேடும் திறனை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே என் காம இச்சைக்குப் பொறுத்தமான இன்னொரு நாயை ஏற்பாடு செய்யவேண்டியதும்கூட உன் கடமைதான். இவையெல்லாம் நீ எனக்குப்போடும் பிச்சை என்று நினைக்காதே. இது கடமை. வெறுமனே ஒரு கடமையைச் செய்துவிட்டு, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் என் நாயை வளர்க்க எத்தனை சிரமப்பட்டேன், ஆனால் வளர்ந்தபின்னர் சனியன் என்னைப்பார்த்துத் தன் வாலை ஆட்டவேயில்லை என்று புலம்புவதில் அர்த்தமேயில்லை. ஓடிப்போ. நான் சாப்பிடும்போது ஆ பார்க்காதே’
தினமும் நான் பாடசாலையிலிருந்து திரும்பும் நேரத்தில் சீசர் ஒழுங்கை வாசலிலே படுத்துக்கிடக்கும். என்னைக்கண்டதும் தலையைத் தூக்கிப்பார்த்துவிட்டுப் பின்னர் திரும்பவும் தூங்கிவிடும். வாலின் நுனியைக்கூட அது ஆட்டித்தொலைக்காது. ஏதோ ஒரு கதையில் அனுமர் படுத்துக்கிடந்தமாதிரி. அத்தனை திமிர் பிடித்த நாய் அது. சனியன். உடனே நாயை சனியன் என்கிறேன் என்று ஓடி வராதீர்கள். சனியன் என்றால் ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது? ஏழு நாளில் ஒன்றை சனியனுக்கே டெடிகேட் பண்ணி, எள்ளுச்சட்டி எரித்து, பல்லைக்கடித்துக்கொண்டு மச்சம் சாப்பிடாமல் ஏழரை வருடம் சமாளிக்கிறீர்கள் அல்லவா? சனியன் என்றால் அதனைத் திட்டெனக் கருதாதீர்கள். உங்களை ஒருவர் சனியன் என விளித்தால் இனிப் பெருமிதம் கொள்ளுங்கள். புரவுட் டு பி எ சனியன் என்று புளகாங்கிதம் அடையுங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் இப்படி ஒரு பந்தி விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தால் எப்போதுதான் நான் இதை எழுதி முடிப்பது? சனியன்.

ஒருநாள் இப்படித்தான், நான் பாடசாலையிலிருந்து திரும்பியபோது ஒழுங்கை வாசலில் சீசரைக் காணவில்லை. எங்கையடா ஆளைக் காணேல்லை என்று பார்த்தால் மாப்பிள்ளை ஒழுங்கையின் இரண்டாவது கரண்டு போஸ்டுக்குக் கீழே ரெண்டு காலில நிக்கிறார். மிச்ச ரெண்டு காலும் குமாரசாமி ரோட்டுப் பெட்டை நாய் ஒண்டுக்கு மேலே. அவ தன்ர முன்னங்கால் ரெண்டையும் போஸ்டில வச்சுக்கொண்டிருக்கிறா. ஸச் எ ஸீன் மேன். போர்ன்ஹப் பிரீமியம். ஐநூறு வருசத்துக்கு முன்னர் என்றால் ஸ்டெரியிட்டாக கோயில் கோபுரத்தில செதுக்கப்பட்டிருக்கக்கூடிய சிலைக் காட்சி அது. எனக்கு வந்ததே கோபம். ஒன்று, நாங்கள் வளர்க்கும் நாய் எங்கள் சம்மதமில்லாமல், நாம் பார்த்து சேர்த்து வைக்காமல், ஒரு குமாரசாமி ரோட்டுப் பெட்டையை ஒழுங்கைக்குள் கூட்டிவந்தது. இரண்டு, பத்தொன்பது வயதில் நான் கெஞ்சிக் கூத்தாடி கடன் சொல்லி சந்திரன் மாஸ்டரிட்ட சீன் படம் பார்த்துக்கொண்டு திரிய உந்த நாய் வாழ்வாங்கு வாழ்கிறதே என்கின்ற கடுப்பு. அதனால் அப்படியே சைக்கிளில் கடக்கும்போது சீமான் கூசிழிவில் கவனமாக இருக்கையில் நான் காலால் ஆளுக்கு ஒரு வெளு வெளுத்தேன். சீசர் சாதாரணமாகவே ஒரு கோபக்காரன். இப்போது காதலிக்கு முன்னாலே சிங்கனின் ஈகோவைக் கிளறிவிட்டேனா, வள்ளென்றபடியே என்னைத் துரத்த ஆரம்பித்தான். வெறிப்பாய்ச்சல் அது. நான் அம்மா என்று கத்தியபடி சைக்கிளை வேகமாக மிதித்தேன். சீசரின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க இயலவில்லை. வீடும் வந்துவிட்டது. கேற்றைத் திறந்து உள்ளே போக நேரமில்லை. நிச்சயம் அவன் என்னைக் கடித்தே தீருவான் என்று தெரிந்துவிட்டது. நான் உடனே கேற்றைப் பிடித்து மதிலில் ஏறிவிட்டேன். சீசர் கீழிருந்து எம்பி எம்பிப் பாய முனைந்தான். அப்போது அவன் கண்களிலிருந்து வன்மத்தை பார்க்கவேண்டுமே. ஒன்றை மட்டும் அன்று நான் தீர்மானித்தேன்.

நாயளிண்ட காதல் விசயத்தில் இனி ஒருக்காலத்திலும் உள்ளிடக்கூடாது.

பின்னர் அம்மா வந்து ஒருமாதிரி சீசருக்கு ஒரு முட்டையைக் கொடுத்து வளைத்துப்பிடித்துக் கட்டிப்போட்டார் என்க. அதன்பின்னர் நான் சீசரோடு எந்தத் தனகலும் வைத்துக்கொள்ளவில்லை. அதுவும் பெரிதாக என்னோடு முண்ட வருவதில்லை. ஒட்டாத கணவனும் மனைவியும் சமூகத்துக்காகவும் பெற்ற குழந்தைகளுக்காகவும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவதுபோல நானும் சீசரும் ஒருவரை ஒருவர் சீண்டாமல் வாழ்ந்துவந்தோம். நான் பின்னர் புலம்பெயர்ந்து கொழும்புக்குப் போய்விட்டேன். சீசர் ஊரோடேயே இருந்தது. இடையிடையே நான் வீடு திரும்பும் நாட்களில் அது உடனேயே என்னை இனம் கண்டுகொள்ளும். ஆனால் காட்டிக்கொள்ளாது. அப்படி எனக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். திருவிழாக்கூட்டங்களிலும் இலக்கிய நிகழ்வுகளிலும் அவர்கள் என்னைத் தூரத்திலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் சிரிக்கவோ பேசவோ மாட்டார்கள். அப்படிச் சிரித்தால் நான் பெரியவனாகி அவர்கள் சிறியவர் ஆகிவிடுவார்கள் என்ற எண்ணம். நானும் சிரிப்பதில்லை. மசிர். நான் மட்டுக்கட்டுமளவுக்கு பெரிய ஆட்களா அவர்கள்? நான் அவர்களைக் கவனிக்கவே இல்லை என்கிறேனே. சீசரும் எங்களைப்போலத்தான். யாரோ புதியவர்களைக் கண்டதுபோல என்னைப்பார்த்து அது வேண்டுமென்றே குரைக்கும். பாய்ந்து கடிக்கவரும். பின்னாட்களில், நான் ஒழுங்கை வாசலில் இறங்கும்போதே அம்மாவுக்குக் கோல் பண்ணி நாயைக் கட்டிப்போடச் சொல்லிவிட்டுத்தான் உள்ளே நுழைவேன். ஒருகட்டத்தில் அம்மாவும் கட்டிப்போடமுடியாத அளவுக்கு அது முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. சீசரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் வீட்டுக்குப்போகும்போதெல்லாம் சீசர் என்னைத் துரத்த ஆரம்பித்தது. வாசலில் தொடங்கினால் பரமேஸ்வராச்சந்தி காண துரத்தல் சம்பவம் இடம்பெறும். சந்திக்கடையில் நிற்பவர் முழுக்க என்னைப்பார்த்து சிரிப்பார்கள். இப்படி நான் தூக்கி வந்து வளர்த்த நாயால் நானே என் வீட்டுக்குள் உள்ளிடமுடியாத ஒரு துர்பாக்கிய நிலை எனக்கு வந்துவிட்டிருந்தது.

அப்புறம் என்ன, நான் நிரந்தரமாக வெளிநாட்டுக்குப் போய்விட்டேன்.

இம்முறை ஊருக்குப்போனபோது சீசருக்கு வயதாகிவிட்டிருந்தது. குட்டை பிடித்து, தன் மீது மொய்க்கும் ஈய்க்களைத் துரத்தக்கூட வாலைத் தூக்கும் வலுவின்றி பின் பத்தியில் சாக்குவிரிப்பினுள் அது படுத்துக்கிடந்தது. என்னைக்கண்டதும் ஆள் ஆரெண்டு மட்டுக்கட்டிவிட்டது. ஆனால் குரைக்கவில்லை. கண்களின் பழைய வன்மம் இல்லை. நான் தடவப்போனேன். சன்னமாக அது தன் வாலை ஆட்டியது. என்னைப்பார்த்தபோது அதற்கும் அந்த கரண்டு போஸ்டு ஞாபகம் வந்துபோயிருக்கலாம். தொண்ணுறுகளின் நாய் அது. அதற்கே உரிய ஞாபகங்கள். நான் வழமைபோலக் கிளறிவிட்டிருக்கவேண்டும். நான் திரும்பிப்போகும்வரையிலும் சீசர் வாலை ஆட்டிக்கொண்டேயிருந்தது. அதன் ஒரு கண்ணிலிருந்து நீர் கசிந்தாற்போல. ஆச்சரியப்பட்டு அக்காவிடம் சொன்னபோது ‘அது வெறும் பூளை’ என்றார்.

அடுத்தநாள் சீசரைக் காணவில்லை.

நாங்கள் எங்கெல்லாமோ தேடினோம். நோய் வாய்ப்பட்டு நடக்கமுடியாமல் கிடந்த நாய். அப்படி எங்கேதான் போயிருக்கமுடியும்? ஒவ்வொரு வீடாகப் போனோம். வெறுங்காணிகளில் தேடினோம். நான் குமாரசாமி வீதிவரைக்கும் போய்த் தேடிப்பார்த்தேன். ம்ஹூம். சீசரைக் காணவில்லை. நாய் ஒருநாளும் தான் வளர்ந்த வீட்டில் சாக விரும்பாது என்று அம்மாதான் பின்னர் சொன்னார். ஏனோ எங்கள் முன்னே, நாம் அறியும்படி செத்துப்போவதற்கு அது பிரியப்படவில்லை.

என் சாவும் அப்படித்தான் அமையவேண்டும் என்று அக்கணமே நான் முடிவுசெய்தேன்.

உடனேயே மனைவிக்கு அழைப்பெடுத்து சீசரின் கதையைச் சொன்னேன். நான் செத்தால் யாருக்கும் அறிவிக்காதே என்றேன். செத்த வீட்டு அறிவிப்பே வேண்டாம். வாழ்க்கையில் ஹலோகூட முன்னபின்னே சொல்லாத சொந்தக்காரர் பெயர் லிஸ்ட் தேடவேண்டாம். அர்த்தமில்லாத இரங்கல்கள் வேண்டாம். பத்திரிகைக்கும் லங்காசிறிக்கும் வீண் காசுச் செலவு வேண்டாம். இல்லாத கடவுளிடம் போய்ச்சேர்ந்துவிட்டார் என்று அஞ்சலிக்குறிப்பு எழுதுவார்கள். என் கதைகளை என்றைக்குமே வாசிக்காதவர்களும்கூட பத்து லைக்குக்காக நிலைத்தகவல் போடுவார்கள். ஜேகே ஒரு அவரேஜ் எழுத்தாளர் என்று ஒரு அறிவுஜீவு இந்திரா காந்தி செத்ததை அப்போதுதான் கண்டுபிடித்துக் கருத்துப்போடும். இன்னொன்று ஆசான் ஜெயக்காந்தனுக்கு எழுதிய கட்டுரையை பெருமிதமாகப் போய் கொமெண்டு பண்ணும். எதுக்கு? தெரிந்தவர்கள் தேவையே இல்லாமல் மனைவிக்கு அழைப்பெடுத்து தொந்தரவு செய்வார்கள். வீட்டுக்கு வருவார்கள். இடியப்பம் அவித்துக்கொண்டு தருவார்கள். இன்னொரு நாள் தோசை வரும். செத்தவீட்டுக்கு மச்சம் கூடாது என்று எல்லாமே மரக்கறிச் சாப்பாடாக வரும். அவளுக்குக் கண்ணிலும் காட்டக்கூடாத புட்டை எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி அவித்துக்கொண்டு வந்து அலுப்படிப்பார்கள். வருபவர்கள் கொஞ்சநேரம் அழுதுவிட்டு அடுத்த கணமே நெட்பிளிக்சில் பார்க்கும் நாடகங்கள் பற்றிக் கதைப்பார்கள். தேவையா இது? இதெல்லாவற்றுக்கும் காரணமாக என் சாவு இருக்கவேண்டாம். மயானத்து நிர்வாகத்திடம் இருப்பதிலேயே மிக மலிவான சவப்பெட்டிக்குள்ளோ அல்லது ஒரு பைக்குள் போட்டோ எரித்துவிடச்சொல்லும்படி மனைவியிடம் சொன்னேன். அவளையும் போய் மெனக்கடவேண்டாம் என்றேன். ‘முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி’ என்று செத்தவீட்டில் கும்மியடித்து யாரும் இளையராஜா இசையை கொச்சைப்படுத்தவேண்டாம். யாருக்கும் அறியத்தராதே. யாராவது அழைப்பெடுத்தால் ஆன்சர் பண்ணாதே. ஜேகே எங்கே என்று கேட்டால் உயிரோடு கக்கூசில் இருக்கிறார் என்று சொல்லிவிடு. இல்லை, சந்தேகம் வந்துவிடும். வெறுமனே கக்கூசில் இருக்கிறார் என்றாலே போதும். எனக்கு அந்திரட்டி செய்து அறுநூறு பேருக்கு வீணாகச் சாப்பாடு போடாதே. பூமகள் அன்ரி பாயை விரித்து சாயி பஜன் பாட ஆரம்பித்துவிடுவார். ஆணியே வேண்டாம். இப்படி ஒரு பெரிய லிஸ்டை மனைவிக்குச் சொன்னேன்.

மிக இயல்பாக அதைச் சொன்னாலும் ஆழ்மனது அவள் இதனைக் கேட்டு உடனே உணர்ச்சி வசப்படவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கவேண்டும். மனிதரின் குரூர இயல்பு இது என்று நினைக்கிறேன். தன் சாவினை நினைவூட்டி கூட இருப்பவரைத் துன்புறுத்துவது ஒன்றும் நமக்குப் புதிதில்லை. தாத்தாவும் பாட்டியும் தமக்கிடையே சண்டை வரும்போதும் இதைத்தான் செய்தார்கள். அம்மா கிணற்றுக்குள் விழப்போவதாக எத்தனை தடவை அப்பாவை மிரட்டியிருப்பார். நானும் முயற்சி பண்ணினேன். குறைந்தபட்சம் மனைவி கோபமாவது படுவாள் என்று நம்பினேன். அவளோ மிக இயல்பாகச் சொன்னாள்.
“சின்னப்பிரச்சனை இது. இதுக்கேன் இவ்வளவு பீலிங்? நாய் செத்ததுக்கெல்லாம் யாராவது செத்தவீடு கொண்டாடுவினமா?”

OOO

Comments

  1. இப்போது யாழ் வீதிகள் எல்லாமே நாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன....
    தமிழ் மன்னர்களின் பெயரை நாய்களுக்குச் சூட்டி அவமானப்படுத்தக்கூடாது.....என்பதிலும் உறுதியாயிருந்தோம். இப்போது அது தவறு என்று தெரிகிறது...
    இதை நான் ஒரு படிமமாகவோ அல்லது உள்குத்து எதுவும் வைத்தோ வாசிக்கவில்லை என்று சொல்ல ஆசை தான்.
    கடைசியில் மனைவியின் வார்த்தை இருக்கே...இவ்வளவு எழுதி பிரயோசனமில்லாத மாதிரி போய் விட்டது.
    மிக நீண்ட நாட்களின் பின் உங்கள் தளத்தில் ஒரு கதை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .