அன்றைக்கு சிவராத்திரி தினம்.
மத்தியானம் இரத்தமாக வெட்டிய ஆட்டிறைச்சிக்கறி செமிப்பதாக இல்லை. இரவுக்கு மிச்சச்சட்டியைவேறு பிரட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வண்டி இன்னமும் பொம்மிக்கொண்டு நின்றது. இரண்டு பனங்கிழங்குகளை சீவி உள்ளே போட்டுப்பார்த்தேன். வயிறு மேலும் இறுகியதுதான் மிச்சம். ‘நாச்சிமார் கோவிலடிவரைக்கும் நடந்திட்டு வருவமா’ என்று அக்கா ஐடியா கொடுத்தார். சரியென்று நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.
ஒழுங்கையிலிருந்து இராமநாதன் வீதிக்குள் காலடி எடுத்து வைத்ததுமே நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. பரமேஸ்வராச்சந்தியில் ஆரம்பித்து குரைப்புகள் ஒரு அலைபோல நாச்சிமார்கோவிலடிவரைக்கும் தொடர ஆரம்பித்தன. விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் கைகளை அசைத்து அலையலையாக கூச்சல் செய்வார்கள் அல்லவா. அதுபோலவே.
“என்னக்கா இவ்வளவு நாயள் றோட்டில நிக்குது”
“எல்லாம் மகிந்தண்ட விளையாட்டு தம்பி. அவன் செய்த வேலையாலதான் இவ்வளவு நாயள் றோட்டில திரியுது”
எங்கள் ஆட்கள் எல்லாவற்றுக்கும் மகிந்தவைச் சாட்டுவது இப்போது பஷனாகிவிட்டது என்று எண்ணினேன். ஆனால் இதில் கொஞ்சம் உண்மையும் இருந்தது. மகிந்த ஆட்சிக்கு மீண்டதுமே கட்டாக்காலி நாய்களை எவருமே கொல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தவனாம். அதில் எனக்கு அத்தனை ஆச்சரியம் வரவில்லை. என் பௌத்த நண்பர்கள் பலர் பௌர்ணமி என்றால் நுளம்புத்திரியே கொழுத்தமாட்டார்கள். நாங்கள் முழு நிலவென்றால் சிதவலாக இருக்குமென்று நண்டைத்தான் கொல்லமாட்டோம். ஆனால் பௌத்தர்கள் அன்றைய தினம் நுளம்பைக்கூடக் அடிக்கமாட்டார்கள். அது தம்ம நெறிக்கு எதிரானது என்பார்கள். இந்த நாய்கள் விசயத்திலும் அரசாங்கம் கொல்லுவதற்குத் தடையை மேம்போக்காகப் பிறப்பித்துவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கத்தொடங்கிவிட்டது. ஊர் முழுதும் பெருகிப்போய் எடுபட்டுத்திரியும் கட்டாக்காலி நாய்களை என்ன செய்வது என்பதற்கான தீர்வு பற்றி எவரும் யோசிக்கவேயில்லை. அதன்விளைவுதான் இந்த நாய்சூழ் யாழ்.
“இப்பிடிப் புழுத்துக்கிடக்கு … தொத்துவியாதி ஏதும் வந்து துலையப்போகுது நம் இனம்”
“எங்கட தண்ணிக்கும் சாப்பாட்டுக்கும் தொத்து நோய் வராது தம்பி. உலகம் முழுக்க கொரானா வரேக்க ஏன் தமிழருக்கு வரேல்ல தெரியுமா? நாங்கள் மஞ்சளும் இஞ்சியும் சாப்பிடுறதாலதான். மஞ்சளில இருக்கு கொரானாவுக்கு மருந்து.”
அமெரிக்காவிலாவது ஒரேயொரு ட்றம்ப்தான். ஆனால் எங்கள் இனத்திலே எல்லாருமே ட்றம்ப் என்று நினைத்துக்கொண்டேன். நாம் தொடர்ந்து நடந்தோம். பல்கலைக்கழக வாசலில் கூடிக்கிடந்த நாய்கள் எல்லாமே எம்மைக் கண்டதுமே எழுந்து நின்றன. ஆரம்பத்தில் அவற்றைப்பார்க்கப் பெரிதாகப் பயம் வரவில்லை. நான்தான் சொன்னேனே. வெளிநாட்டு வாழ்க்கையால் நாய்களுடனான நட்பு எனக்கு அதிகரித்துவிட்டிருந்தது. நாய்களைப் புரிந்துகொள்ளவும் பழகிவிட்டிருந்தேன். அதுவும் அலுவகத்தில் நாய்களோடு வேலை செய்ய ஆரம்பித்ததும் பயம் மறைந்து அவற்றின்மீது அன்புமேலிடவும் ஆரம்பித்துவிட்டிருந்தது. ஒரு கட்டத்தில் மனிதர்களைவிட நாய்களோடே நான் அதிக விருப்புடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அதனால் இப்போது இந்த நாய்களைப் பார்த்தவுடன் முன்னர்போல எனக்குப் பயமேதும் வரவில்லை. ஆனால் ஆச்சரியம் வந்தது. வெளிநாட்டில் நாய்கள் பெரும்பாலும் குரைப்பதில்லை. அப்படியே குரைத்தாலும் அதுகள் குருவியையும் எறும்பையும் பறக்கும் பலூனையும் பார்த்துக் குரைக்குமே ஒழிய மனிசரைப் பார்த்துக் குரைப்பதில்லை. அவை குருவியைத் துரத்திக் குரைப்பதுங்கூட ஒருவித குழந்தைத்தனமான தேடலால்தானே ஒழிய வன்மத்தினால் அல்ல. வெளிநாட்டு நாய்களைப் பொறுத்தவரையில் உலகின் எல்லா மனிதர்களும் நல்லவர்களே என்பது அவற்றின் எண்ணம். எல்லோருக்கும் அவை வாலை ஆட்டும். நக்கிவைக்கும். சாப்பாடு கொடுத்தால் சந்தோசத்தில் துள்ளும். ஆனால் எங்களூர் நாய்கள் அப்படியல்ல. அவற்றுக்கு எப்படியோ மனிசர்மீது அவ்வளவு வன்மம் பிடித்துவிடுகிறது. இத்தனைக்கும் மனிசர்தான் அதுகளுக்கு சாப்பாடு தண்ணி கொடுப்பது. தவிர அவற்றை அவ்வப்போது அவிட்டுவிட்டு சுதந்திரமாகவும் வளர்ப்பார்கள். வெளிநாட்டவர்கள் தம் நாய்களுக்கு குட்டியிலேயே நலமடித்துவிடுவார்கள். நம்மாட்கள் தம் குழந்தைகளுக்கு வேண்டுமானால் முப்பத்தைஞ்சு வயது வரைக்கும் நலமடித்து வைத்திருப்பார்கள். ஆனால் நாய்களை விட்டுவிடுவார்கள். அப்படியிருந்தும் நம் நாய்களுக்கு மனுசர்மீது அப்படி ஒரு வன்மம். தன் எஜமானர்களைத் தவிர்த்து மீதி எல்லா மனிதர்களையும் எதிரிகளாகப் பார்க்கும் குணம் எங்கள் நாயளின் டி.என்.ஏயில் இருக்கிறது. வெளிநாட்டு நாய்கள் அந்தளவுக்குப் பயங்கரவாதிகள் கிடையாது. எல்லோரையும் கட்டி அணைத்து, யார் போடும் எலும்பையும் கவ்வித் தின்று, குண்டியை ஆட்டிக்கொண்டு மெது நடை நடக்கும் அழகுப்பொம்மைகள் அவை.
இப்போது என்னிடமிருந்த ஒரே குழப்பம் இதுதான். உந்தக் கட்டாக்காலிகளோடு வெளிநாட்டு நாய்களைக் கொஞ்சுவதுபோல ‘சோ ஸ்வீட்’ என்று உம்மா கொடுத்து பெயரைக் கேட்பதா? இல்லை ‘அடிச் சீய்க் அங்கால போ’ என்று காலால் உதறுவதா? ஆரம்பத்தில் ஒரு வெளிநாட்டு பீலிங் காட்டவேண்டும் என்பதற்காக முதலில் நின்ற நாயைப்பார்த்து ‘ஹாய் ஹனி’ என்றபடித் தடவப்போனேன். ஆனால் அது ஹனி இல்லை பெரும் முனி என்பதை ஒரு குரைப்புடனேயே உணர்ந்துவிட்டேன். ஒரு நாய் தனியே நின்று குரைத்தாலே டென்சன். இதிலே கூட்டமாகச் சேர்ந்து குரைத்தால் அது இன்னமும் பயங்கர டென்சன். ஐம்பது நாய்கள் குரைக்கும்போது தெந்தெட்டாக ஒன்று கடித்து வைத்தாலே கதை முடிந்தது. அதைவிட எங்கள் ஊரில் ஒரு நாய் கடிக்க ஆரம்பித்தால் பின்னர் எல்லாமே அதைப்பார்த்துத் தாமும் கடிக்க ஆரம்பித்துவிடும். தவிர பெட்டை பெடியள் என எல்லா நாய்களுமே கலந்து குரைப்பதால் ஏதாவது ஒரு நாய் இன்னொரு நாய்க்கு சீன் போடுவதற்காக என்னைக் கடித்துவைத்துவிடுமோ என்றொரு அச்சமும் வந்தது.
அடுத்த கணமே எனக்குள்ளிருந்த நாய்ப்பாசம் ஓடித்தப்பிவிட, பீத்தல் பயம் வந்து அடிவயிற்றைப் பற்றிக்கொண்டது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் நடந்தேன். நாய்க்கும் பேய்க்கும் பயம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனால் பயத்தை வெளிக்காட்டாமல், எதையுமே கண்டுகொள்ளாதவன்போல நடக்க ஆரம்பித்தேன். நாய்கள் எம்மைத் தொடர ஆரம்பித்தன. குமாரசாமி றோட்டுச்சந்தி கடந்து சாய்பாபா ஒழுங்கை வாசலை எட்டிக்கொண்டிருந்தோம். இப்போது நாய்கள் என்னைச் சுற்றிவளைத்திருந்தன. அக்காவை உள்ளூர்க்காரி என இனம் கண்டதாலோ என்னவோ அவரை நாய்கள் ஒன்றுமே செய்யவில்லை. அவர் நிறுத்தாமல் விடுவிடுவென நடந்துகொண்டிருந்தார். என்னால்தான் முடியவில்லை. ஒருநாய் முன்னால் நின்று குரைத்துக்கொண்டிருக்கும்போது எப்படி விலத்திக்கொண்டு செல்வது? அது என் இயல்பில்லை. ஏதாவது செய்யவேண்டுமே என்று நான் தயங்கினேன்.
அதுதான் பிழைத்துவிட்டது.
யாராவது கொஞ்சம் தயங்கினால் போதும், இந்த நாயளுக்குக் குதூகலம் வந்துவிடுகிறது. இதற்காகவே காத்திருந்ததுபோல உடனே என்னை அவை மூன்று கட்டங்களில் பொக்ஸ் அடித்தன. மூன்றாவது கட்டம் புறக் கட்டம். மதில் அடிவாரத்தில், ஏடிம் மெசின் வாசலில், கரண்டு போஸ்டுக்கடியில், கடை விளம்பர போர்டுக்குப் பக்கமாக என்று அவை பொசிசன் எடுத்திருந்தன. நான் ஓடித்தப்பினால் துரத்துவதற்கென கட்டப்பட்ட கட்டம் அது. அடுத்த கட்டம் அவ்வளவு ஆபத்தில்லாத நாய்களால் அமைக்கப்பட்டிருந்தது. வயோதிப, நோஞ்சான், குட்டி, குட்டை நாய்கள் அவை. வெறுமனே குரைத்துவிட்டு அப்புறம் என்ன நடக்கப்போகிறது என்று அவை விடுப்புப் பார்த்தன. முதல் கட்டம்தான் தாக்குதற்பிரிவு நாய்கள். அவை எல்லாமே கட்டுமஸ்தான இளம் நாய்கள். அவற்றில் சில பிள்ளைத்தாய்ச்சிகள். அவை குரைக்காமல் வெறுமனே என்னைப்பார்த்துக் கறுவிக்கொண்டிருந்தன. ஆச்சரியமாக சில வெளிநாட்டு இனங்களும் அங்கே நின்றன. அரை பொமனேரியன். அரை பக். அரை லாபராடர். அரை அல்சேசன். இவற்றை எல்லாம் ஏன் மனிதர்கள் வளர்க்காமல் தெருவில் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். நிறைய வெளிநாட்டு நாய்களின் வரத்து அதிகமாகிவிட்டதால் முன்னர் அந்த நாய்களுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இப்போது நன்றாகவே சுருங்கிவிட்டிருந்தது. வெளிநாட்டு நாய்களைவிட ஊர்நாய்களையே இனி வளர்க்கவேண்டும் என்று சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்துமிருந்தார்கள். அதனால் வேறு வழியின்றி சில வெளிநாட்டு நாய்கள் கட்டாக்காலிகளோடு நட்பு பாராட்டிக்கொண்டு தம் மதிப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றன என்று விளங்கியது. பெரும்பாலான வெளிநாட்டு நாய்கள் உள்ளூர் நாய்களைத் தூண்டிவிட்டு ஏடிஎம் மெசின் பக்கம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. என்ன ஒன்று, வெளிநாட்டில் அழகுப்பதுமைகளாய் அம்மிக்கொண்டு திரிந்த நாயள்கூட ஊருக்குள் இறங்கியதும் கறுவிக்கொண்டு நின்றதுதான் கோபத்தை வரவழைத்தது.
என் கவனம் இப்போது மீண்டும் தாக்குதல் வளையத்து நாய்களின்மேற் போனது. நான் பிழையாக ஒரு அடி எடுத்து வைத்தால் போதும். டாரண்டினோவின் திரைப்படக்காட்சிபோல எல்லாவிடங்களிலிருந்தும் நாய்கள் என்னைப் பாய்ந்து விழுத்திக் கடித்துக் குதற ஆரம்பிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஒரு சின்ன அருட்டலுக்காக அவை எல்லாமே காத்திருந்தனபோலத் தோன்றியது. ஒரு அரச இலை உதிர்ந்தாற்கூட போதும் என்ற நிலைதான். எனக்கு வியர்த்து ஒழுகியது. வயிற்றினுள் இருந்த ஆடுவேறு அரை குறையாகச் செரித்து இப்போது கலக்க ஆரம்பித்தது. திடும்மெனக் கடவுள் நம்பிக்கை வந்தது. ஒரு பக்கம் ஒழுங்கை முகப்பில் மிகப்பெரிய சாயிபாபா படம். கும்பிடலாம் என்று யோசிக்கையில் அந்தாளைப்பற்றிய பிபிஸி டொக்கியூமெண்டரி ஞாபகத்தில் வந்து தொலைத்தது. சரி என்று மறுபக்கம் திரும்பினால் யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரன் கோயில். சிவ சிவா என்னை இந்த நாய்களிடமிருந்து காப்பாற்று என்று வேண்டினேன். சின்ன வயதில் மணி ரியூசனுக்குப் போகும்போதும் வரும்போதும் பரமேஸ்வரனைக் கும்பிட்டபடியே தாண்டியிருக்கிறேன். அதுகூட வாத்திமாரைக்காணும்போது சைக்கிளிலிருந்து இறங்கி பெடலில் நிற்பதுபோலவே அவனையும் நின்று கும்பிட்டிருக்கிறேன். அதன் பலாபலனோ என்னவோ, குருசேத்திரத்தில் கண்ணன் எல்லோரையும் பிரீஸ் பண்ணிவிட்டு கீதை சொல்ல வந்ததுபோல, நாய்களையும் முன்னே போன அக்காவையும் பிரீஸ் பண்ணிவிட்டு பரமேஸ்வரன் என் முன்னே வந்தான்.
“அடேய், இண்டைக்கு சிவராத்திரி, அது தெரிந்தும் நீ ஆட்டுக்கறி சாப்பிட்டாயல்லவா? அதனால்தான் இந்த சோதனை.”
சிவன் இத்தனை சில்லறையானவன் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
“இது எனக்குப் புதுசா இறைவா? … அந்தக்காலத்திலேயே சிவராத்திரிக்கு மச்சம் சாப்பிட்டுவிட்டு மாஸ்டரிடம் காமசூத்திரா பார்த்திருக்கிறேனே? அப்போது நீ ஒன்றுமே செய்யவில்லையே”
“செய்யவில்லை என்று யார் சொன்னார்? அதனால்தான் தெரு நாயைச் சுடுவதுபோல மாஸ்டரை சுட்டுப்போட்டேனே, அதை மறந்துபோனாயா?”
சிங்கன் அழித்தலுக்கான கடவுள் என்பது ஞாபகம் வந்தது. கூடவே அவனும் நாயைக் கேவலப்படுத்தியதில் எனக்குக் கோபமும் வந்தது. இந்த வள்ளலில் மணிவாசகரைக் குறை சொல்லி என்ன பயன்? அதே சமயம் இந்த நாயளோடு இத்தனை வருடங்களாய் காலம் தள்ளும் சிவனின் வலியும் விளங்கியது.
“சிவசிவா … மாஸ்டருக்கு நடந்ததை மறப்பேனா. தவறுதான். என்ன ஒண்டு. லீவில வந்திருக்கிறதே கொஞ்ச நாள்தான். அதிலயும் சிவராத்திரி, சிவதோசம், பங்குனி உற்சவம், ஆயிரத்தெட்டு நேர்த்தி எண்டால் நான் எப்பதான் ஆடு சாப்பிடுறது? அதோட சாவல், இறால், நண்டு, கணவாய், மட்டி, கட்டாக்கருவாடு, களங்கண்டி மீன், கூழ் என பல வராய்ட்டி ஐட்டங்களும் இருக்கு. இந்த ஊரில மரக்கறியைவிட மச்சங்களிண்ட எண்ணிக்கைதான் அதிகம். சொந்தக்காரர் வீடுகளுக்குப் போறதுமாதிரி எல்லாத்தையும் நான் கவர் பண்ணோணும். என்னதான் செய்யிறது சிவா?”
“அதுக்காக சிவராத்திரிக்கே சாப்பிடுவியா?”
“தீபாவளிக்குச் சாப்பிடேக்க கண்ணன் டென்சன் ஆகேல்லையே… நீ அவனிலும் பெரியவன் அன்றோ. அதைக்கொண்டாடத்தானே சிவராத்திரி?”
“என்னை அவனோடு ஒப்பிடுகிறாயா? அவன் சைவக்காரன் இல்லையே. நான் சுத்த சைவம் அல்லவா?”
“அப்ப கண்ணப்பன் உனக்குத் தந்தது என்ன வெஜி சிக்கினா சிவா? நீ அண்டைக்கு வெளுத்து வாங்கேல்லையா? உண்ட கண்ணில வழிஞ்சா ரத்தம். எங்கட கண்ணில வழிஞ்சா சட்னியா?”
சிவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“சிவ நிந்தனை செய்துவிட்டாய். இனி நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நாய் பட்டபாடு இன்று உனக்கு”
அவ்வளவுதான் காட்சி. உறைந்தவர் எல்லாம் உருக ஆரம்பித்தனர். அக்கா உடனேயே நடக்க ஆரம்பித்துவிட்டார். நாய்களும் மறுபடியும் குரைக்க ஆரம்பித்துவிட்டன. இந்த லொஜிக்தான் சிவனிடம் எனக்குப் பிடித்த விடயம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நாய்கள் சுற்றிவரக் கடிப்பதற்குத் தயாராக இருக்கின்றன. எனக்கோ குலப்பன் அடிக்கிறது. இந்த நிலையில் யாராவது வந்து முந்நூறு பக்கத்தில் சிவாதொபதேசம் பண்ணினால் அலுப்படிக்குமா இல்லையா?
அதனாலேயே சிவன் ஷோர்ட் அண்ட் ஸ்வீட்டாக உபதேசத்தை முடித்தான் என்க.
000
யுத்தக் காட்சி மீள ஆரம்பிக்கிறது.
எனக்கும் முதல்நிலை பொக்சுக்குமிடையில் இப்போது இரண்டு மீற்றர்கள்தான் இடைவெளி இருந்தது. நான் ஒரு அடி எடுத்தால் அவையும் ஒரு அடி நகரும். மூன்று கட்டங்களும் நகரும். இன்னொரு அடி எடுத்தால் இரண்டு மீட்டர் இடைவெளி ஒன்றரைமீட்டராகக் குறையும். அதேநேரம் அக்காவுக்கும் எனக்குமான இடைவெளி கூடிக்கொண்டே போனது. நான் ‘அக்கோய்’ என பயத்தோடு கூப்பிட்டேன். அவர் திரும்பிப்பார்க்காமலேயே சொன்னார்.
“அதுகள் எங்கட சீசரிண்ட பரம்பரைதான். கடிக்காது. நீ நிக்காம நட. நிண்டாத்தான் சும்மா சீன் போடுங்கள்.”
சீசரின் வழித்தோன்றல்கள் என்றதுமே உள்ளே போன பொறியல் கறி தண்ணிக்குழம்பாக மாறிவிட்டது. ஐயையோ. சீசர் என்னை நினைத்துக் கறுவிக்கறுவியே அத்தனை நாயளையும் அவசரத்தில் பெற்றுத்தள்ளியிருப்பானே. எனக்கு எல்லா நாய்களும் இப்போது சீசராகவே தெரிந்தன. அவை குரைப்பதை வெறும் சீனாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. எங்கட நாய்களுக்கு ஒரு வழக்கம் இருக்கிறது. அவை சீன் போடுவது என்னவோ உண்மைதான். ஆனால் அவை அப்படி சீன் போடுவதை நாங்கள் மதித்து வெறுமனே லைக் பண்ணிவிட்டால் பிரச்சனை வராது. ஆனால் இல்லை என்று இளக்காரம் பண்ணி அவற்றின் வண்டவாளத்தை அரங்கேற்றிவிட்டோமானால் சனியங்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டேயிருக்கும். சிலது ஒரு ஓர்மத்தில் கடித்தும் தொலைத்துவிடும். ஈகோ பிடித்த நாய்கள். நான் தயங்கினேன். அசோகமித்திரனின் பிராயாணம் சிறுகதை ஞாபகத்தில் வந்து தொலைத்தது. நானே என் உடலை இழுத்துக்கொண்டுபோவதுபோன்ற உணர்வு வந்தது. அந்த ஓநாய்களை விட மோசமானதாக என்னைச் சுற்றியிருந்த நாய்கள் காட்சி கொடுத்தன. பலத்த சண்டைக்கு முன்னரான பில்ட் அப் போல நான் ஒரு அடி வைப்பதும் மொத்த பொக்சுகளும் சேர்ந்து என்னோடு நகருவதுமாகக் காட்சி சாய்பாபா ஒழுங்கையிலிருந்து ஆத்திசூடி ரயில்வே கடவையை எட்டிக்கொண்டிருந்தது. இப்போது புதிதாக சில குரூப் நாய்களும் ஜோதியில் வந்து இணைந்துகொண்டன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கவே பயமாக இருந்தது. கடித்த பின்னரேயே குரைக்கும் கன்னிராசி நாய்கள் அவை.
திடீரென எனக்குள் ஒரு ஐடியா உதித்தது.
தண்டவாளத்துக்குக் கிட்டே போனால் அங்கிருக்கும் கற்களை எடுத்து நாய்களைத் துரத்தலாம். தண்டவாளக் கற்கள் கைக்கு அடக்கமானவை. நிறையவும் கிடைக்கும். தண்டவாளத்தைப் போட்டுத்தந்து என்னை நாய்களிடமிருந்து காப்பாற்றும் இந்தியாவுக்கு நான் மானசீகமாக நன்றி சொன்னேன். மொத்தமாக அறுபது நாய்கள் என்னைச் சுற்றி வளைத்திருந்தன. கல்லை விட்டெறிந்து பத்து நாய்களின் மூஞ்சியைப் பெயர்த்தால் ஏனையவை பயந்துவிடும். பின்னர் தொடர்ந்து கற்களை எறிந்தபடியே இருக்கலாம். அந்த வழியால் ஒரு ஓட்டோ வரும்போது ஏறிப் பறந்துவிடலாம். இதுதான் திட்டம். இந்திய உதவியுடன் செயற்படுத்தப்போகும் திட்டம். பிழைக்கச் சான்ஸ் இல்லை.
ஐ நோ. ஒத்துக்கொள்கிறேன். நாய்களைக் கல்லால் அடிப்பது என்பது வன்முரைதான். ஆனால் வேறு வழியில்லை. இதுநாள்வரையும் வாயால் வெடி கொளுத்தியதைத் தவிர்த்து எந்த வன்முரையையும் நான் செய்ததுமில்லை. சொல்லப்போனால் எனக்கு என்றைக்குமே வன்முரையில் நம்பிக்கை இருந்ததில்லை. வன்முரையை நான் ஆதரித்ததுமில்லை. ஆனால்…
இப்போது சிவனுக்குப் பதிலாக அங்கிருந்த நாய் ஒன்று சூழலை பிரீஸ் பண்ணிவிட்டு என்னோடு தனியே பேச ஆரம்பித்தது.
“ஏதோ சொல்லவருகிறாய். நீ வன்முறையை ஒருபோதும் ஆதரித்ததில்லையா?”
“வன்முரையை ஆதரித்திருந்தால் நான் எண்பத்திமூன்றிலேயே ஆயுதம் தூக்கியிருப்பேனே. இப்போது வன்முரையை ஆதரித்துப் பேசுபவர்கள் எல்லோரும் அப்போதே ஆயுதம் ஏந்திப் போராடி இருக்கவேண்டும்?”
“கிரேட் பொயிண்ட். அப்புறம் நீ அப்போது எதை ஆதரித்தாய் என்று சொல்லமுடியுமா?”
“அகிம்சையை. அமைதிப்போராட்டத்தை. காந்திய வழியை.” நான் பெருமிதத்தோடு சொன்னேன்.
“அருமை. அப்போ நீ அகிம்சையை ஆதரித்திருந்தால் அப்போதே ஏதேனும் ஒரு அமைதிப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கவேண்டுமே? எண்பத்திமூன்றில் எங்கே அதை நீ செய்தாய் என்று சொல்லமுடியுமா?”
அந்த நாய் என்னை மடக்கிவிட்டது என்று நினைத்திருக்கவேண்டும். நான் வெற்றிப்பெருமிதத்தோடு சிரித்தேன்.
“நான்தான் சொன்னேனே, வன்முரையை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை என்று. நான் அப்போது அமைதிப்போராட்டம் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்னை அவர்கள் அடித்து, சட்டை கழுசானைக் கழட்டி, நடு றோட்டிலேயே எரித்துக் கொன்றிருப்பார்கள். அது அவர்கள் செய்யும் வன்முரை அல்லவா? அவர்கள் அப்படிச் செய்வதற்கு நானே தூண்டுதலாகிவிடுவதா? என் காந்தியவழி என்னவென்றால், நான் மட்டுமன்றி என் எதிரியும் வன்முரையில் ஈடுபடும் சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல் இருப்பதுதான். அதனாலேயே நான் வீட்டுக்குள் அப்போது பதுங்கியிருந்தேன்.”
இதைக்கேட்ட அந்த நாய் அதிர்ச்சியில் உறைந்துபோனது. உறைந்துபோயிருந்த மீதிக்காட்சி அப்படியே உருகிவிட்டது. நிலைமையும் வழமைக்குத் திரும்பியது.
இந்த இடத்தில் பஞ்சியைப்பார்க்காமல் இன்னொரு விசயத்தையும் சொல்லிவிடுகிறேன். சின்னவயதிலிருந்தே நான் இப்படித்தான். சும்மா எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம், ஒரு வியாக்கியானம் கொடுப்பதில் நான் மகா வீரன். தாத்தா என்னை இவனொரு அப்புக்காத்து என்றே கூப்புடுவார். வாழ்க்கை முழுக்க எடக்கு முடக்காக லொஜிக் கதைத்தே உலகப்பிரச்சனைகளைத் தீர்த்துவிடலாம் என்பதில் எனக்கு அலாதி நம்பிக்கை. அவ்வளவுதான். அப்படிப்பட்ட என்னை இப்படிப் பல நாய்கள் சேர்ந்து பொக்ஸ் அடிக்கும் என்று எவர் கண்டார். வேறுவழியில்லை. அவற்றைக் கற்களால் அடித்தே தீரவேண்டும். வன்முறைதான் என்றாலும் செய்யத்தான் வேண்டும். தவிர வன்முறையை ஆதரிக்கவில்லை என்று நான் எங்கேயும் சொன்னதுமில்லை. சரியாக மீளவும் என் கூற்றைப் போய்ப்பாருங்கள். வன்முரையைத்தான் நான் ஆதரித்ததில்லை. சின்ன ‘ர’. நான் இப்போது சொல்லுவது பெரிய ‘ற’. இது தெரியாமல் நான் மாற்றி மாற்றிப்பேசுகிறேன் என்று அவதூறு பரப்பாதீர்கள்.
மறுபடியும் நாய்ப்பிரச்சனைக்கு வருவோம்.
கற்களை எடுத்து சில நாய்களின் முகரையைப் பெயர்ப்பது என்று முடிவு பண்ணிவிட்டேன். எனக்கே பொக்ஸ் அடிக்கிறீங்களாடா? வாங்கடா வாங்க. அற்புதமான திட்டம். பொக்சுக்கே அடித்த பொக்சு. நாய்களிலிருந்து பெரும் விடுதலை இனி. நான் இன்னமும் நிதானமாகத் தண்டவாளத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன். மிக மிக மெதுவான காய் நகர்த்தல். கல்லை எட்டும்வரைக்கும் நாய்கள் பாயக்கூடாது. அதில் கவனமாக இருந்தேன். நாய்கள் என் திட்டத்தை உணரவில்லை. நான் ஊருக்குப் புதிது வேறா? என்னளவுக்கு ஒரு புத்திசாலியை இந்த நாய்கள் முன்னரெப்போதும் எதிர்கொள்ளவில்லை என்பதால் அவற்றுக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்ற ஐடியாவே இருக்கவில்லை. வழமைபோல குரைப்பதும் கடிப்பதும் என தெரிந்ததைச் செய்யவே அவை முன்னின்றன. இன்னும் சில அடிகள்தான். எட்டிவிடும் தூரத்தில் கற்கள். நான் இப்போது மெதுவாகத் தலையைத் திருப்பித் தண்டவாளத்தைப் பார்த்தேன். அப்போதுதான் என் திட்டத்திலிருந்த பொத்தல் வெளியே வந்தது.
அந்தத் தாலி அறுந்த தண்டவாளத்தில் கற்களையே காணவில்லை.
இந்தியாவை நம்பி இம்முறையும் ஏமாறிய கதைதான். அவர்கள் போட்ட தண்டவாளங்களில் கற்கள் கிடையாது என்ற விசயம் அப்போதுதான் எனக்கு உறைத்தது. எனக்கு வயிற்றுக்குள் பயகிணி எரிய ஆரம்பித்தது. அக்காவைத் துணைக்கு அழைக்கலாம் என்றால் அவர் படுவேகமாகக் கலட்டிச் சந்தி தாண்டிப்போய்க்கொண்டிருந்தார். இப்போது நானும் அந்த அறுபது நாய்களும்தான். எதிரே பல்கலைக்கழக மகளிர் விடுதிவேறு தெரிந்தது. அங்கிருக்கும் பெண்கள் நான் நாய்களோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கமும் வந்தது. சிலர் வீடியோவும் பிடிக்கலாம். பேஸ்புக்கில் லைவ் ஸ்றீமிங்கூடப் போகும். புலம்பெயர் தமிழர் ஒருவர் தெரு நாய்களோடு மல்லுக்கட்டுகின்ற அதிர்ச்சிக் காட்சி என்று ஜேவிபி நியூசில் வீடியோ வெளிவரும். சைக். என்ன ஒரு அவமானம். பக்கென்று மதிலேறிப் பாயலாம் என்றால் நாய்களில் சில மதிலோரமும் தயாராக நின்றன. உளவுத்தகவல்களை சீசர் தன் உயிரணுமூலம் எல்லா வாரிசுகளுக்கும் கடத்தியிருக்கிறது. தவிர சில நாய்கள் மதிலையும் தாண்டும் என்று தெரிந்தது. மதிலைப்பிடித்து எம்பும்போது தவறினால் நாய்கள் எல்லாம் என்னைக் கொத்துக்கறி போட்டுவிடும். நான் மிகச் சாதுரியத்துடன் காய் நகர்த்திக்கொண்டிருந்தேன். நாய்களும்தான். ஒன்றும் மட்டும் தெளிவாக விளங்கியது.
யாரேனும் ஒருதரப்பு ஆரம்பிக்காதவரை யுத்தங்கள் இடம்பெறுவதேயில்லை.
இது கேட்பதற்கு மிகச் சாதாரணமான வாசகம்தான். ஆனால் அது எவ்வளவு ஆழமானது என்பதை நான் அக்கணத்தில் உணர்ந்தேன். அந்த அறுபது நாய்களும் நினைத்திருந்தால் எப்போதேனும் என்னைக் கடிக்க ஆரம்பித்திருக்கலாம். நானும் எந்தக்கணமும் தப்பி ஓட முயன்றிருக்கலாம். ஆனால் இது எதுவும் இடம்பெறவேயில்லை. அந்த அறுபது நாய்களும் நானும் ஏதோ ஒன்றுக்காகக் காத்திருந்தோம். மற்றவர் ஆரம்பிக்கட்டும் என்று நினைத்திருக்கலாம். நம்மை விட எதிரி பலமானவர் என்று எடை போட்டிருக்கலாம். எதற்காக அவசரப்படுவான் என்று யோசித்திருக்கலாம். தெரியவில்லை. ஆனால் எனக்கும் நாய்களுக்குமிடையேயான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது என்பதை நான் உணர்ந்தேன். என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஓடமுடியாது. எறிவதற்குக் கல் இல்லை. உதவிக்கு வர ஆளில்ல. கூட இருந்த அக்காவும் பிரிந்துபோய்விட்டார். இனி நான் என்ன செய்ய? நாய்களே என்னைப் பாவம் என்று விட்டால்தான் உண்டு. ஆனால் அப்படி விட்டுவிடுவதற்கான அறிகுறிகளே அவற்றிடம் இருக்கவில்லை. இதுவரைக்கும் நாய்கள் சீன் போட்டன. இப்போது நாய்களுக்கு நான் ஒரு பெரிய மாதா என்றமாதிரி சீன் போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அது நெடுங்காலம் நிலைக்கப்போவதில்லை என்றும் தெரியும். யாராவது ஒரு மீட்பர் வரவேண்டும். அதுவரைக்கும் இந்த நாடகத்தைத் தொடரவேண்டியதுதான். இந்தியா என்னை சும்மா விட்டுவிடுமா என்ன?
திடீரென்று தூரத்தே புகையிரதத்தின் ‘பீம்’ என்ற ஹொங் ஒலி கேட்டது.
திடுக்கிட்டோம். நானோ நாய்களோ இதை எதிர்பார்த்திருக்கவில்லை. வெறும் இலை விழுந்தால் போதும் எனக் காத்திருந்த நாய்களுக்கு புகையிரதத்தின் ஒலி எத்தனை அருட்டலைக் கொடுத்திருக்கும்? சடக்கென்று ஏக சமயத்தில் அத்தனை நாய்களும் என்மீது பாய ஆரம்பித்தன. நானும் எதனையும் யோசிக்காமல் ஓடத்தொடங்கினேன். நான் ஓட, நாய்களும் விடாமல் விரட்டிக்கொண்டு வந்தன. ஒரு புரியாத புதிர் என்னவென்றால் எனக்கு முன்னாலே பல நாய்கள் மறித்துக்கொண்டு குரைத்தன அல்லவா. ஆனால் இப்போது நான் ஓடும்போது அவை எனக்கு வழிவிட்டுவிட்டு பின்னர் மறுபடியும் என்னைத் துரத்தின. சனியனுகள். கடிக்கவும் மாட்டுதுகள். ஆனாத் துரத்துங்கள். எனக்கு அப்போதுதான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இன்னமும் வேகமெடுத்து ஓடினேன். கலட்டிச்சந்தி தாண்டி, மிலேனியம் உணவகம் தாண்டி, மணி டியூசன் ஒழுங்கை தாண்டி. எடித்தாரா மயூரியின் வீடு தாண்டி.
நானும் அந்த அறுபது நாய்களும் நாச்சிமார்கோவிலை நோக்கி ஓடிய காட்சி ஒரு அற்புதமான விளிப்பு என்றே சொல்லவேண்டும்.
நான் ஒருத்தன் தனியாகக் கத்திக்கொண்டு ஓடுகிறேன். பின்னாலும் முன்னாலும் அத்தனை நாய்களும் குரைத்தபடியே என்னைத் துரத்துகின்றன. தூரத்தே புகையிரதத்தின் சத்தம். தவிர போஸ்டுக்கம்பங்களிலுள்ள ஒலிபெருக்கிகளில் சிவபுராணம். ஒவ்வொரு ஒழுங்கை முகப்புகளிலும் கிளை நதிகள் தீராநதியை வந்தடைவதுபோல நாய்க்கூட்டங்கள் இராமநாதன் வீதியை நோக்கி வந்தடைந்துகொண்டிருந்தன. நான் ஓட முன்னாலிருந்த நாய்க்கூட்டம் வசுதேவருக்கு யமுனை நதி வழிவிட்டதுபோல இடம் கொடுத்து ஒரு காரணமே இல்லாமல் துரத்திக்கொண்டிருந்தன. இந்த ஒருவனை இத்தனை நாய்கள் சேர்ந்து விரட்டும்போது அச்சத்தோடு ஒருவித பெருமிதமும் எனக்குள் வந்து சேர்ந்தது. அதேநேரம் இந்த நாயளிடம் பிடிபடக்கூடாது என்ற ஒருவித ஓர்மமும் எனக்குள் வந்தடைந்தது. இதே நாய்களுக்கு இதே ஊரில் நான் யார் என்பதைக் காட்டவேண்டும் என்று சபதம் எடுத்தேன். என்னை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்தை இந்த நாய்க்கூட்டத்துக்குக் கொடுக்கவே கூடாது என்று உறுதி பூண்டேன். தம் பிடித்து ஓட ஆரம்பித்தேன். பயத்தில் ஓடும்போது ஒருபோதும் களைப்பு வருவதில்லை. ஆனால் கால்கள் பிடித்துவிடும். எனக்குக் கால்கள் பிடித்தது மாத்திரமின்றி வயிறும் கொழுவியது. மதியம் சாப்பிட்ட ஆடு வேறு கங்காருக்குட்டிபோல அவ்வப்போது வெளியே வரத் துடித்துக்கொண்டிருந்தது. என்னால் முடியவில்லை. ஒலிபெருக்கியில் சிவன்வேறு என்னை டென்சன் படுத்திக்கொண்டிருந்தான். ஆனால் அவனை நம்பி நான் என்றைக்கும் தொழப்போவதில்லை. நாய்களோடான பிரச்சனையில் நாயிற் கடையானை மீட்டெடுக்க எந்த ஆரியனும் வரப்போவதில்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். நாய்களிடமிருந்து நம்மை நாம்தான் காப்பாற்றவேண்டும். நான் ஓடிக்கொண்டேயிருந்தேன். நாச்சிமார் கோயிலடியை எட்டும்போது தெரிந்துவிட்டது. இதுவரை ஒழுங்கைகளிலிருந்தே நாய்கள் வந்து சோதியில் கலந்துகொண்டிருந்தன. இனி வரப்போவது எல்லாம் கே.கே.எஸ் ரோட்டு நாய்கள்.
எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. எல்லாமே இப்போது பாரதிராஜா படங்களின் கிளைமக்ஸ் காட்சியில் ஒட்டப்படும் புகைப்படங்கள்போலத் தெரிய ஆரம்பித்தன.
ஒருசில வீட்டுக்கதவுகள் திறப்பது. ஸ்டில்.கோயிலுக்கு வெளியே நின்று போன் கதைத்துக்கொண்டிருந்த காவி வேட்டிகள் விரைவது. ஸ்டில்.ஒலிபெருக்கி அலறுவது. ஸ்டில்.வீரியம் மிக்க நாய் ஒன்று முன்னால் பாய்வது. ஸ்டில்.முப்பது நாய்கள் அதன் பின்னால் பாய்வது. ஸ்டில்.‘தம்பீ.. என்று அக்கா ஓடிவருவது’ ஸ்டில்.நான் இடறி விழுவது. ஸ்டில்.அம்மாளாச்சி என்று நான் அரற்றுவது. ஸ்டில்.
முதல் கடி என் முழங்காலில் விழுந்தது. அடுத்த கடி தொடையில். இன்னொன்று அடி வயிற்றில். ஒரு மண்ணிற நாய் என் நெஞ்சில் ஏறி நின்று என் முகத்தைக் குறி பார்த்தது. மூக்கை நோக்கி குளோசப்பில் இரண்டு வெட்டுப்பற்கள் நெருங்கிவந்தமை தெரிந்தது. அதன் வாயிலிருந்து பறந்த எச்சில் கொஞ்சம் சவர்ச்சுவையுடன் இருந்தது. என்னால் முடியவில்லை. திரவுபதி கண்ணா என்று இயலாமையில் கத்தியதுபோல நான் ‘ஃபக்’ என்று அலறியபடி கண்களை மூடிவிட்டேன்.
ஒலிபெருக்கியில் சிவபுராணம் அலறிக்கொண்டிருந்தது.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்தமறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னைமறைந்திட மூடிய மாய இருளை.
மூக்கு பிய்யும்போது நான் மூர்ச்சையாகிவிட்டேன்.
000
கண் விழித்தபோது யாழ் நகரத்தின் ஒரு தனியார் வைத்தியசாலையில் இருந்தேன்.
குளிரூட்டிய வோர்டு. சீருடைத் தாதியர். யன்னலுக்கு வெளியே தெரியும் யாழ்ப்பாணத்தை வெயில் எரித்துக்கொண்டிருந்தது. மூன் வீட்டுக்காணியில் பலா ஒன்று காய் விட்டிருந்தது. பிரதானவீதியில் மினிவான் ஹோன் சத்தம் கேட்டது. கூடவே ஓட்டோ இரைச்சல்கள். காகங்களின் கரையல். கடையில் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் விஜய் குரல். தூரத்தே ஒரு நாயும் குரைத்தது. யாருமே நேற்றைய இரவின் அனர்த்தத்தை உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. பக்கத்துப் படுக்கைக்காரருக்கு மனைவியோ காதலியோ இடியப்பம் தீத்தி விட்டுக்கொண்டிருந்தார்கள். அவருக்கு எந்தச் சனியன் இரவு கடித்திருக்கும் என்பதை ஊகிக்கமுடியாமல் இருந்தது.
நிகழ்ந்த சம்பவத்தை மீட்டிப்பார்த்தேன். மொத்தமாக எத்தனை நாய்கள் என்பதில் இன்னமும் குழப்பம் இருந்தது. தாதி வந்து, நான் கட்டிலில் எழுந்து உட்கார உதவி செய்தார். அவருக்கு ஒரு இருபத்தைந்து வயது இருக்கலாம். முன்னரெல்லாம் இளவயது நேர்சைக் கண்டால் காதலிக்கலாம்போலத் தோன்றும். இப்போது கலியாணம் ஆகாமல் கிடக்கும் முன்வீட்டு அன்ரியின் மகனுக்கு அந்தப்பெண்ணின் குறிப்பைக் கேட்டுப்பார்க்கலாமா என்று தோன்றுகிறது. ஆனால் நான் கேட்கவில்லை. இந்தப்பெண் மிக உயரமாக இருந்தாள். அந்தத் தம்பியோ ஐந்தடி ஆறங்குலம். சரிவராது. அடுத்த ஷிப்டில் வரும் நேர்சைப் பார்த்துக்கொள்ளலாம். அல்லது உங்களுக்கு ஆரையேனும் தெரிந்தாலும் சொல்லுங்கள். முற்றாக்கிவிடலாம். தம்பிக்கு ஆறில் செவ்வாய். பூரட்டாதி நட்சத்திரம். சீமா பைனலிஸ்ட். முப்பத்தைந்து வயது. தீய பழக்கங்கள் ஏதுமில்லாத, உயர் சைவ வேளாள, சுத்தமாக நலமடிக்கப்பட்ட நம்பியாண்டார் நம்பி அவன். தமிழ் கலாசாரத்தில் வளர்க்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொருத்தங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
உடலில் மொத்தமாக இருபத்து மூன்று கடிகள் என்று அந்தத் தாதி சொன்னார். பன்னிரண்டு காயக் கட்டுகள். அவ்வழியால் வந்த ஒரு ஓட்டோவில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். நான் தொப்புளைத் தடவிப்பார்த்துக்கொண்டேன். பதினாறு ஊசிகள் என்பது பொய்க்கதை என்று தெரிந்தது. இப்போதெல்லாம் ஒரேயொரு ஊசியே போதும் என்று அந்தப்பெண் சொன்னார். என் கதைகளையும் வாசித்திருப்பதாகச் சொன்னார். ‘காக்கா கொத்திய காகம்’ அற்புதம் என்றார். இந்தச் சம்பவத்தை எழுதும்போது தன் பெயரை சேதுமாதவி எனக் குறிப்பிடச்சொன்னார்.
அக்கா வந்து துண்டுவெட்டிக்கொண்டு ஓட்டோவில் வீடு திரும்பும்போது பின்னேரம் நான்கு மணியாகியிருந்தது. கம்பசடியைத் தாண்டும்போது எட்டிப்பார்த்தேன். தேர்தலுக்கு அடுத்தநாள் வீதியில் படிந்துகிடக்கும் துண்டுப்பிரசுரங்கள்போல நாய்கள் எல்லாம் அங்கே அசையாமல் கிடந்தன. முந்தைய இரவு ஒருவனை கொத்துரொட்டிபோட்ட சலனமே அவற்றிடம் இருக்கவில்லை. சில நாய்கள் மாத்திரம் எங்கள் ஓட்டோ சத்தத்துக்குக் கண் திறந்தன. அதில் ஒன்று என்னை மட்டுக் கட்டியிருக்கவேண்டும். ஏனோ அது என்னைப் பார்த்துக் குரைக்கவில்லை. நான் அக்காவிடம் அழுத்தமாகச் சொன்னேன்.
“இந்த எடுபட்ட நாயளை ஒரு வழிப்பண்ணோணும் அக்கோய்”
“அதுக்கு மகிந்தவை நாங்கள் வீட்டுக்கு அனுப்போணுமடா”
அக்கா சொல்லிக்கொண்டே தன் போனில் யாருக்கோ கோல் எடுத்தார். ஓட்டோ எங்கள் ஒழுங்கைக்குள் இறங்கியது. என்னை மட்டுக்கட்டிய நாய் வீட்டு வாசல்வரைக்கும் பின் தொடர்ந்துவந்தது. முந்தைய நாள் அதற்கு என்னைக் கடிக்கக் கொடுத்துவைக்கவில்லை போலும். நான் எந்தப் பதட்டமுமின்றி ஓட்டோவிலிருந்து இறங்கியபடியே அந்த நாயைப்பார்த்தேன். அது கடிக்கப் பாயும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த நாய் உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன் என்கின்றமாதிரி என்னைக் கருணையுடனேயே கூர்ந்து பார்த்தது. ஒரு வெற்றியாளர் தோற்றவரிடம் காட்டுகின்ற இகழ்ச்சிக் கருணை அது. நான் அலட்டிக்கொள்ளாததுபோல உள்ளே போய் கேற்றைக் கொழுவினேன். உள்ளே கேற்றை மறிக்க வைக்கும் பெரிய சீமெந்துக்கல்லு கிடந்தது. எட்டி அதை எடுத்து அந்த நாயை நோக்கி விட்டெறிந்தேன்.
“அடிக்க்க்… அங்கால ஒடு சனியன் பிடிச்ச நாயே”
குருசேத்திரத்தில் கண்ணன் எல்லோரையும் பிரீஸ் பண்ணிவிட்டு கீதை சொல்ல வந்ததுபோல..... அருமை
ReplyDeleteஇதுவரை ஒழுங்கைகளிலிருந்தே நாய்கள் வந்து சோதியில் கலந்துகொண்டிருந்தன. இனி வரப்போவது எல்லாம் கே.கே.எஸ் ரோட்டு நாய்கள்.....
காக்கா கொத்திய காயம் .....உமாஜியையும் விடல
அருமை