Skip to main content

குருபரன்



இனிய நண்பர் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்தார் என்ற செய்தி மிகுந்த மன அலைக்கழிப்பைத் தந்துகொண்டிருக்கிறது.

ஊரில் இவ்வகை நிகழ்வுகள் தினமும் நிகழும் ஒன்றுதான். ஆனால் குருபரனை நெருக்கமாகத் தெரியும் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோலத்தான் என் இன்னொரு நண்பர் பாலமுருகனுக்கும் நிகழ்ந்தது. மருத்துவரான பாலமுருகன் சில வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஊரில்போய் வாழவேண்டும் என்று போன இடத்தில் அரசுத்துறையும் அதிகாரிகளும் ஆண்டுக்கணக்கில் அவருக்கு வேலைக்கான ஒதுக்கீட்டை செய்யாமல் அவரை அலைக்கழித்ததில் பாலா திரும்பவும் வெளிநாட்டுக்கே வந்து இங்குள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்துக்குப் படியாமல், நேர்மையான வழியில், நெளிவு சுளிவுகளின்றி வாழ விரும்பும் பலரை இப்படித்தான் அந்தக்கட்டமைப்புகள் பிழிந்து எடுத்துவிடுகின்றன.

குருபரனுக்கு நிகழ்ந்தது அதற்கான சமீபத்திய அடையாளம்.

விரிவுரையாளராகவும் இருந்துகொண்டு சட்டத்தொழிலும் செய்யமுடியாது என்று பல்கலைக்கழகப்பேரவை சில காலத்துக்கு முன்னர் குருபரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதுவுங்கூட இராணுவத்தின் முறைப்பாட்டின்படி. இராணுவம் ஏன் முறைப்பாடு செய்யவேண்டும்? காரணம் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட பன்னிரண்டு இளைஞர்களுக்கான ஆள்கொணர்வு வழக்கை குருபரன் அந்த இளைஞர்களின் பெற்றோர்களின் சார்பில் தாக்கல் செய்தமைதான். இதுவெல்லாம் தெரிந்தும் பல்கலைக்கழகப் பேரவை இராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குருபரனுக்கு தடையுத்தரவு விதிக்க, குருபரன் அதை எதிர்த்து வழக்கும்போட, வழக்கு எதிர்பார்த்ததுபோலவே இழுபட்டுக்கொண்டேபோக, வேறு வழியில்லாமல் ஈற்றில் இந்த முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு குரு உள்ளாகியிருக்கிறார்.

தொழில்சார் கல்வியை தொழிற் துறையில் உயிர்ப்போடு உள்ளவர்கள் கற்பித்தால் சிறப்பாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஒரு மருத்துவப்பணியில் ஈடுபடுபவர் மருத்துவக்கல்வியைக் கற்பிக்கும்போது அதனுடைய வீரியம் அதிகம். ஒரு மென்பொருள் பொறியாளர் மென்பொருள்சார் விரிவுரைகளைச் செய்யும்போது நடைமுறை சிக்கல்களையும் சேர்த்தே கற்பிக்கப்போகிறார். இது இயல்பு. ஆராய்ச்சித்துறைசார் கல்வி என்பது வேறு. ஆனால் தொழிற்றுறைக் கல்விக்கு தொழில்சார் நிபுணர்கள் விரிவுரையாளர்களாக வருவதை தடை செய்யாமல் நாம் வரவேற்று ஊக்குவிக்கவேண்டும். இலங்கையில்கூட எனக்குத் தெரிந்து மொறட்டுவைப்பல்கலைக்கழகம் இவ்வகை தொழில்முறை நிபுணர்களை விரிவுரையாளர்களாக நியமிப்பது உண்டு. விரிவுரையாளர்களாகவும் இருந்துகொண்டு தொழிற் துறையிலும் தொடர்ந்து அவர்கள் இயங்குவார்கள். வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம். உண்மையில், இராணுவத்தின் முறைப்பாட்டை பல்கலைக்கழகப் பேரவை வன்மையாகக் கண்டித்து அதன் தலையீட்டை எதிர்த்தே அறிக்கை விட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக நடந்திருக்கிறது.

இம்முறை ஊருக்குப் போன சமயம் குருபரனையும் அவர் மனைவி ஆரணியையும் அவர்கள் வீட்டில் ஒரு காலை உணவில் சந்தித்தேன். “அண்ணை நீங்கள் வாறீங்கள் எண்டு என்னைக் குசினிப்பக்கமே அவ விடுறா இல்லை” என்று குரு சிரித்தார். யாரும் விருந்தினர்கள் வந்தால் கிளீனிங் மாத்திரமே அவருக்குக் கொடுக்கப்படுமாம். தான் சமைப்பதற்கு அனுமதி இல்லை என்று சொன்னார். அது ஏன் அப்படி என்பது காலையுணவு தயாரானதும் தெரிந்தது. பசுந்தான இட்லி. குண்டுத்தோசையைப் பிரித்தால் உள்ளே வித்தியாசமாக உருளைக்கிழங்குக் கறி இருந்தது. உன்னதம். எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.

உரையாடலில் இந்தப்பிரச்சனையும் வந்தது. இந்தச்சிக்கல் அவருக்குப் பெரும் உளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தது விளங்கியது. “நீங்கள் எண்டால் என்ன செய்வீங்கள்” என்று கேட்டார். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? இந்த சிஸ்டத்தை முட்டி முட்டி என் மண்டையை உடைக்கும் வலு இல்லாததால்தான் நான் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினேன். உங்களுக்குத் தெரியாத ஒன்றையும் நான் சொல்லிவிடப்போவதில்லை, இயலுமானவரை வழக்கைப் போராடிப்பாருங்கள். தீர்ப்பு சரியாக வராவிடில் பிரக்டீஸ் பக்கமே முழுமையாகப் போய்விடுங்கள். பல்கலைக்கழகத்துக்குள் இருந்தால் ஒரு கல்லைக்கூட உங்களால் நகர்த்தமுடியாது என்றேன். எனினும் உப்புச்சப்பில்லாத தடையுத்தரவு அது என்றே எனக்குத் தோன்றியது. எந்த ஊரில் ஒரு பல்கலைக்கழகம் இப்படியொரு லூசுத்தனமான தடையை விதிக்கும்? எந்த நீதிமன்றம் அதை உறுதிசெய்யும்? ஆனாலும் அழுத்தங்கள் காரணமாக அது நிகழ்ந்தாலும் நிகழலாம் என்று தோன்றியது. பிரச்சனை இயலுமானவரை பொதுவெளியில் சென்சேசனாகாமலிருந்தால் வேலை சுலபாகமுடியலாம் என்று நான் நினைத்தேன். அப்படித்தான் அவரும் மிக நிதானமாக இதனை எதிர்கொண்டிருந்தார். ஆனால் ‘இது எப்பவோ முடிந்த காரியம்’ போலவே செயற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. முடிவில் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பைக் கொடுக்கலாம்தான். ஆனால் அதனை அப்படிக்கொடுக்க முடியாமல் வழக்கைத் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இவ்வகை பிரச்சனைகள் ஒருவரின் குடும்பத்தில் கொடுக்கும் உளைச்சல்களை நாம் யோசிப்பதில்லை. தொடர்ந்து போராடு என்று குருவுக்கு அறிவுரை சொல்வது இலகு. ஆனால் தினமும் எத்தனை மண்டைக்குடையல்கள். எத்தனைபேரோடு பேசவேண்டும். என்னைப்போல ஆயிரம்பேர் ஆயிரம் கதைகள் குருவுக்குச் சொல்லியிருக்கக்கூடும். அவர் மனைவியும்கூட ஒருவித விரக்தி மனநிலையிலேயே இருந்தார். அவர்களுக்கு ஒரு கைக்குழந்தைவேறு. அவர்களின் கனவினை யோசித்துப்பாருங்கள். சொந்த ஊரிலே நேர்மையாக வாழ்ந்து தாம் வாழும் சமூகத்தை இயன்ற அளவுக்கு தம்மாலான வழிகளில் மேம்படுத்த முனைகின்றவர்களுக்கு நிகழ்வது என்ன? இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைப்போட்டு அந்த அரசும் இராணுவமும் எப்படியெல்லாம் சிப்பிலி ஆட்டுகின்றன? இது குருவுக்கென்றில்லை. எவர் எவரெல்லாம் நேர்மையுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்களோ அவருக்கெல்லாம் இப்படி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.

குரு இதிலிருந்து மீண்டுவருவார் என்றெல்லாம் எழுதத்தேவையில்லை. உண்மையில் இதிலிருந்து மீண்டு வரவேண்டியது பல்கலைக்கழகமும் அந்த அமைப்பும்தான்.

000


Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...