நேற்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இளையராஜாவுடன் நடைப்பயிற்சியில் இருந்தேன்.
எல்லாமே தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்து இளையராஜா. “கட்டி வச்சுக்கோ”வில் ஆரம்பித்து “முத்துமணி மாலை”, “தானந்தன கும்மிகொட்டி”, “சாமிக்கிட்ட சொல்லிவச்சு”, “என்னைத் தொட்டு” என்ற வரிசை பதினொராவது கிலோமீற்றர் கடக்கையில் “சித்தகத்திப் பூக்களே”க்குத் தாவியது. அதன்பின்னர் அடுத்த முப்பது நிமிடங்களுக்கு அதுவே ரிப்பீட்ட ஆரம்பித்தது.
பிரபுவின் நூறாவது திரைப்படமாக ‘ராஜகுமாரன்’ அறிவிக்கப்பட்டு இளையராஜா இசை என்று தெரிந்ததுமுதல் எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. காரணம் பிரபு - இளையராஜா கூட்டணி புதிய மோகன் - இளையராஜா கூட்டணியாக மாறிக்கொண்டிருந்த காலம் அது. தவிர ஆர்.வி. உதயகுமார் இயக்கம். அவருடைய படங்கள் அப்படி இப்படி அமைந்தாலும் அவர் படத்தில் பாடல்கள் தரமாக அமைவதுண்டு. இதுவெல்லாமேதான் ராஜகுமாரனின்மீது பலத்த எதிர்பார்ப்பைக் கிளறியிருந்தது. அதென்ன எதிர்பார்ப்பு, அதுவும் சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்தில் என்று நீங்கள் நினைக்கலாம். எதிர்பார்ப்பு நண்பர்கள் மத்தியிலிருந்தது. ரியூசனில், பள்ளிக்கூடத்தில், சைக்கிளில் கூடப்போகும்போதெல்லாம் நாம் பேசுவது பாடல்கள் பற்றித்தான். அப்போது எங்களில் பலர் இளையராஜா கோஷ்டி, ரகுமான் கோஷ்டி என்று கன்னை பிரித்து அடிபட்டுக்கொண்டிருந்தனர். ‘ஒயிலா பாடும் பாட்டில’ என்ற ஒரு பாட்டாலேயே ஆதித்தியனுக்கு என்று கொஞ்சம் சப்போர்ட்டும் இருந்தது. வீரகேசரி சினிமாப்பக்கம், தாமதமாக வரும் ஆனந்த விகடன், குமுதம் பத்திரிகைகளும் எங்களின் இந்தப்போட்டிக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தது. நான் எப்போதுமே சண்டையில் யார் பக்கம் தாழுமோ அவர்கள் பக்கமே இருப்பேன். எல்லோரும் ரோஜாவைப்பற்றிப் பேசினால் நான் ‘நிலாக்காயும் நேரம்’ பெஸ்ட் என்பேன். எல்லோரும் ‘கொஞ்சிக் கொஞ்சி’ என்றால் நான் ‘சித்திரை நிலவு சேலையில் வந்தது’ என்பேன். எனக்கென்றால் ஒருவருக்காக மற்றவரை விட்டுக்கொடுக்கமுடியாது. தவிர இருவருமே எனக்காகத்தான் இசையமைக்கிறார்கள் என்ற குழந்தைத்தனமான ஒப்செசனும் என்னிடம் இருந்தது. இன்றைக்கும் அது இருக்கிறது.
ராஜகுமாரன் வெளியான சமயத்தில் கஸட் வாங்கிக் கேட்குமளவுக்கு வீட்டில் வசதியில்லை. ரேடியோவில் பட்டறியுமில்லை. டைனமோவில் ஒரு பிரச்சனை என்னவென்றால், கஸட் பிளே பண்ணும்போது நாங்கள் சுற்றுவதற்கேற்ப பாட்டும் இழுபடும். நாங்கள் களைத்தால் அதுவும் களைக்கும். ரசிக்கமுடியாது. ஆனால் வானொலி ஒலிபரப்பு அப்படியல்ல. நாங்கள் டைனமோ மிதிக்கும் வேகம் குறையும்போது வானொலியில் சத்தம் குறையுமே ஒழிய பாட்டு ஒருபோதும் இழுபடாது. ஆக ‘ராஜகுமாரன்’ பாடல்களைக் கேட்க நாங்கள் தங்கியிருந்தது டைனமோ சக்தியில் இசைத்த இலங்கை வானொலியைத்தான்.
ராஜகுமாரனில் முதலில் ஹிட்டாகிய பாடல் ‘என்னவென்று சொல்வதம்மா?’. நல்ல பாடல். ஆனால் எப்போதுமே எனக்கு இரண்டாவதாகக் ஹிட் ஆகும் பாடல்தான் அதிகம் பிடித்துப்போவதுண்டு. சிறைச்சாலையில் ‘ஆலோலங்கிளி தோப்பிலே’ (முதல் ஹிட் செம்பூவே), கிழக்குச் சீமையிலே ‘தென் கிழக்குச் சீமையில’ (முதல் ஹிட் மானூத்து மந்தையில), புதிய முகத்தில் ‘நேற்று இல்லாத மாற்றம்’ (முதல் ஹிட் கண்ணுக்கு மையழகு), ரோஜாவில் ‘காதல் ரோஜாவே’ (முதல் ஹிட் சின்னச் சின்ன ஆசை).
ராஜகுமாரனின் இரண்டாவது ஹிட் பாடல் ‘சித்தகத்திப் பூக்களே’
இந்தப்பாட்டை முதன்முதலில் கேட்டது ராஜேஸ்வரி சண்முகம் ஒலிபரப்பிய ஒரு நிகழ்ச்சியில்தான். அகத்திப்பூக்களைப் பார்த்திருக்கிறேன், அதுவென்ன சித்தகத்திப்பூக்கள்? என்று அவர் நேயர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போதெல்லாம் தொலைபேசி அழைத்துப் பேசும் வசதி இல்லை. ஒரே வாரத்தில் இந்திய வாசகர் ஒருவர் கடித உறைக்குள் சித்தகத்தி பூவையே வைத்து ராஜேஸ்வரி சண்முகத்துக்கு அனுப்பியிருந்தார். இன்றைக்கு ராஜேஸ்வரி சண்முகம் நம்மோடு இல்லை என்று அறிகிறேன். ஆனால் அவரைப்போன்றவர்கள் கொடுத்துவிட்டுப்போன தருணங்கள் அழியாமலேயே பயணம் செய்துகொண்டிருக்கின்றன.
சித்தகத்திப் பூக்களின் மெட்டு எப்போது கேட்டாலுமே மெய்சிலிர்க்க வைப்பதுண்டு. அதிலும் அதன் சரணம் அற்புதமானது. “நாள் பார்த்து பார்த்து, ஆளான நாத்து, தோள் சேரத்தானே வீசும் பூங்காற்று” என்ற மெட்டின் பயணம் அதி உன்னதம். டிப்பிகல் இளையராஜா மெட்டு அது. பின்னாளில் நான் ரியூசன் கொடுத்து பெற்றுக்கொண்ட சம்பளத்தில் செய்த முதற்காரியம் பாட்டுக்கஸட் அடித்ததுதான். கேடிகெ 90ல் இரண்டு பக்கமுகாகச் சேர்த்து மொத்தமாகப் பதினெட்டுப் பாடல்கள் அடிக்கலாம். ஒரு கொப்பியில் பிடித்த பாடல்களை எழுதி வரிசைப்படுத்த ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இருநூறு பாடல்கள் உடனடியாக அடிக்கவேண்டிய லிஸ்டில் இருந்தன. அதில் பதினெட்டை எப்படித் தேர்ந்தெடுப்பது? இறுதியில் ஒரே மூடில் அமைந்த பாடல்களை வரிசைப்படுத்தினேன்.
‘மழை வருது மழை வருது’“நிலாக்காயும் நேரம் சரணம்”“எந்தன் நெஞ்சில் நீங்காத”“பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு”“உன்னைக் காணாத நாள் ஏது”"மலையோரம் மயிலே"
இப்படிப்போன லிஸ்டில் முதலாவதாக எழுதப்பட்ட பாடல் ‘சித்தகத்திப் பூக்களே’.
சண் ரெக்கோர்டிங்கில்தான் கஸட் அடித்தது. அடிக்க நூறு ரூபா என்று நினைக்கிறேன். ‘பூத்துப் பூத்துக் குலுங்குதடி’ பாடல் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உடனே அவசர அவசரமாக ‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்’ என்று எழுதிக்கொடுத்ததும் ஞாபகம் இருக்கிறது. கஸட் அடித்து வீட்ட கொண்டுவந்து போட்டால் ‘சித்தகத்திப்பூக்களே’ பாடலைத்தாண்டி இன்னொரு பாடலுக்குப் போகவே மனமில்லாமல் அதையே ரிவைண்ட் பண்ணிக் கேட்க ஆரம்பித்தேன். இரண்டாவது சரணத்தில் ‘நீரின்றி வாழும் மீனேதம்மா? நீயின்றி நானும் வீண்தானம்மா’ என்று ஸ்பிபி பாடும் சமயத்தில் ஒரு இடறல் வரும். அது ரெக்கோர்டிங்காரன் செய்த அநியாயம். ஆனால் நான் அதையே தேயத் தேயக் கேட்டுப் பழகிவிட்டதால் இப்போதும் அந்த இடறல் இல்லாமல் என்னால் அப்பாட்டைக் கடந்துபோகமுடியாது. நானென்றில்லை சண் ரெக்கோர்டிங்கில் அதைப் பதிவுசெய்த எல்லோருக்கும் அந்த இடறல் இன்றைக்கும் இருக்கிறது.
‘சித்தகத்திப் பூக்களே” பாடலின் இஞ்சி இடுக்கெல்லாம் எனக்குப் பரிச்சயம். அதன் இடையிசையில் இருக்கும் நுணுக்கங்கள் அத்துப்படி. முழுப்பாட்டிலுமே எங்கெங்கே புல்லாங்குழல், வயலின், கீபோர்ட், அதன் அடிநாத ரிதமான ட்ரம்ஸ், எங்கெங்கெல்லாம் எஸ்பிபி புன்னகைத்துக்கொண்டு பாடுவார். எங்கே சிரித்துவைப்பார் என எல்லாமே தண்ணியாகத் தெரியும். அப்புறம் சித்ராவின் குரல். அவர் எதுவுமே செய்யவேண்டாம். தட் ‘நாணம்’ திங்கி இந்தப்பாடலில் அவருடைய குரல்பூராக இழையூடும். நதியா ரீஎன்ரி திரைப்படம் அது. நதியா என்றால் பாட்டுக்குச் சித்ரா என்பது அப்போது எழுதிவைக்கப்படாத சட்டம். சொல்லவா வேண்டும்? அப்போதைய இளைஞர்களுக்குத் தம்முடைய ஒருதலைக் காதலிகளின் குரலைக் கேட்டிருக்கவே சந்தர்ப்பம் இருந்திருக்காது. கதைத்தால்தானே. எல்லாருமே இதயம் முரளிகளாக அலைந்து திரிந்தார்கள். ஒரு சிலர் மட்டும் வெளிநாட்டுக்குப் போய்க் கொஞ்சம் தைரியம் வந்து கடிதம் எழுதி ஹீராக்களை விழுத்தினர். மற்றவர் எல்லாம் ஹீராக்கள் கொழும்புக்குப் போகும்வரை காத்திருந்து வழியனுப்பிவைத்தார்கள். எல்லா முரளிகளும் அப்போது தங்கள் காதலிக்குப் பொருத்திப்பார்த்து ரசித்த குரல் சித்ராவுடையது. தேன்.
மகிழுந்துப்பயணங்களில் எப்போதுமே எனக்கும் மனைவிக்குமிடையில் எந்தப்பாடலை ஒலிக்கவிடுவது என்பதில் சண்டை வருவதுண்டு. நான் ஏ.எம்.ராஜா, எம்.எஸ்.வி, ராஜா, ரகுமான், தேவா, வித்யாசாகர், சிற்பி என்று திரையிசையையே சுற்றிவருவேன். அவளோ ‘ஹரிஸ் சிவராமகிருஷ்ணன்’, ‘அர்ஜித் சிங்’ என்று கொஞ்சம் இந்தியாவில் சுற்றிவிட்டு படக்கென்று துருக்கிக்கும் ஸ்பெயினுக்கும் போய் பைலாண்டோ என்று ஆரம்பித்துவிடுவாள். இந்த வள்ளலில், திருமணமான புதிதில் ‘சித்தகத்திப் பூக்களே’ பாட்டைக் கேட்டே தீரவேண்டும் என்று அடம்பிடித்து அவளுக்குப் போட்டுக்காட்டினேன். என்ன உங்கட இசைஞானி டொக்கு டொக்கு என்று தட்டுகிறார் என்றாள். நான் ரெக்கோர்டிங்கைக் குறை சொன்னேன். அவள் ராஜாவை நக்கலடித்து நான் சண்டை போட்டுப் பேசாமல் பலநாட்கள் இருந்தது எல்லாம்கூட நடந்திருக்கிறது. ராஜா பாடல்களை அன்பிளக்ட்டாகச் செய்தால் எங்களைப்போன்ற ஆட்களுக்கு எடுபடும் என்று அவள் எப்போதும் சொல்வதுண்டு. அவள் இளையராஜாவை அன்பிளக்ட் ஊடாகவே அறிந்தவள். ‘சின்னச் சின்ன தூறல் என்ன’, ‘கல்யாணத் தேனிலா’, ‘பொன்வானம் பன்னீர் தூவுது’ போன்ற பாடல்களை அவள் ரசிக்க ஆரம்பித்ததும் அப்படித்தான். அவளுக்கு குழலூதும் கண்ணனைவிட ‘பாட்டேய்ன் ஹான்வா’ பிடிக்கும். ‘விழியிலே மணி விழியிலே’யை விட ‘ஜானே தோ நா’ பிடிக்கும். யாராவது ஹரிஸ் சிவராமகிருஷ்ணன், அபய் ஜோத்புர்கர் போன்றவர்கள் ‘சித்தகத்திப் பூக்களே’ பாடலைக் ‘கவர்’ செய்தால் தன்யனாவேன். அல்லது கார்த்திக் ராஜாவே இதனை ஒரு புரெஜெக்டாகச் செய்யலாம்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இன்னுமொன்றும் தோன்றியது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இளையராஜா தெறி போஃர்மில்தான் இருந்தார். ரகுமான் ஒருபக்கம் கலக்க ஆரம்பித்தபின்னரும்கூட ‘நிலாக்காயும் நேரம் சரணம்’, ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்’, ‘முத்துமணி மாலை’, ‘தென்றல் வந்து தீண்டும்போது' என்று தலைவர் பின்னிப்பெடல் எடுத்துக்கொண்டிருந்தார். ‘சித்தகத்திப் பூக்களே’ அதன் உச்சப்புள்ளிகளின் ஒன்று. என்னைக்கேட்டால் ‘காதலுக்கு மரியாதை’யின் வெற்றிதான் எல்லாவற்றையும் கெடுத்து வைத்தது என்பேன். அந்த இசையிலிருக்கிற ஒருவித எலக்ரோனிக் டோன் அதன்பின்னர் வந்த ராஜாவின் எல்லாப்பாடல்களிலும் ஒரு ஸ்டீரீயோடைப்பாக இடம்பெறத் தொடங்கியது. அது இன்றும் தொடர்கிறது. அவ்வப்போது வந்த கமல் படங்களும் ‘மீட்டாத ஒரு வீணை’, ’குண்டுமல்லி குண்டுமல்லி’, ‘சீனி கம்' ரகப் பாடல்களும் விதிவிலக்குகள். தவிர ரசிகர்களின் தலைமுறையும் மாறிப்போக ‘சித்தகத்திப் பூக்களே’ போன்ற பாடல்கள் வெளிவரக்கூடிய சந்தர்ப்பம் அறவே இல்லாமற்போய்விட்டது.
எனக்கு இதனை வாசிக்கும் போது உ..ஊ..ம ப த ப மா வாசித்த நினைவுகள். பழைய ஞாபகங்கள் அத்தனையும் இத்தகைய பாடல்கள் மீட்கின்றன. உங்கள் ரசனையின் பயணத்தில் எம்மையும் அழகாக அழைத்து செல்கின்றீர்கள்.தொடருங்கள்
ReplyDelete