ஓர் எழுத்து உங்களை என்ன செய்துவிட முடியும் எனக் கேட்பவர்களுக்கான என் பதில் நீளமானது, ஆழமானதும் கூட!
என் கொல்லைப்புறத்துக்காதலிகள் நூல் என்னுள் கடந்த தலைமுறை வாழ்ந்த யாழ்ப்பாண வாழ்வியல் நினைவுகளுக்குள் காலப்பயணம் சென்றுவந்த உணர்வொன்றை கடத்திவிட்டது.
புத்தகங்கள் வெறுமனே அச்சிட்ட வசனங்களல்ல அது நூலாசிரியன் வாசகனுடன் நிகழ்த்தும் ஒருவழி உரையாடல் அதனை மௌனமாக ரசித்து உள்வாங்குவதைக்காட்டிலும் என்ன வேலையிருக்கப்போகிறது வாசகனுக்கு?
யாழ்ப்பாணம் பற்றிய பல முன்முடிவுகள் அதற்கு வெளியே வசிப்போருக்கு அதுவும் ஏனைய தூர பிரதேசங்களில் இருப்போருக்கு வேறொரு பரிணாமத்தையே வழமையாக வழங்கும்.
ஒருமுறை எனது பேராசிரியர் ஒருவர் கூட குறிப்பிட்டார், தன் பணி நிமித்தமான யாழ்மண்ணுக்கான விஜயத்தையும் அது தன் முன்முடிவுகளை அறுத்தெரிந்து யாழ்மண் ஒரு கம்பீரமான நகருக்குரிய தோற்றத்திலும் வாழ்வியலிலும் மிளிர்வது தன்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்ததாக சிலாகித்தார்.
எனக்கு யாழ் செல்தற்கான வாய்ப்பு இருவருடங்களுக்கு முன்னரே அமையப்பெற்றது. அங்கு தங்கிய இரண்டு நாளில் அரை நாள் அடம்பிடித்து யாழ் நூலகத்திலே அடைக்கலமாகிவிட்டேன்.
மற்ற நாட்களில் யாழ்ப்பாணத்தின் சிறப்புக்குரிய இடங்களான காங்கேசந்துறை கடற்கரை, நல்லூர் ஆலயம், துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ்ப்பாண கோட்டை என இன்னபிற இத்தியாதிகள் அனைத்தையும் பார்த்தாகிவிட்டது. வழமையான யாழ்ப்பாண வெயிலார் மட்டும் நான் நின்ற நாட்களில் சற்று அடக்கியே வாசித்தார்.
இருந்தும் வெறுமனே புலக்காட்சிகள் மட்டும் ஒருநகரின் வாழ்வியலை கடத்திவிடுமா என்ன? நான் பார்க்க பிரயாசைப்பட்ட அந்த அசல் யாழ்ப்பாண வாழ்வையும் அதன் அழகியலையும் தன் எழுத்துக்களின் ஊடே என்னுள் கடத்திவிட்டார் ஜேகே.
90 களில் யாழ்ப்பாண வாழ்வு சொல்லெனாத் துயரங்களும் வலிகளையும் சுமந்த வாழ்வுதான் என்றாலும் அது என்றுமே அவர்களின் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தடைசெய்யவில்லை.
சிறு இடியோசை கேட்டாலும் பங்கருக்குள் பதுங்கும் பதட்டத்திலும் அங்கு நடக்கும் அக்கப்போர்களை நகைச்சுவை நடையில் விவரித்து ஆரம்பிக்கும் முதல் அத்தியாயமே ஆர்ப்பரிக்கிறது.
தன் பால்யகாலத்தில் நிகழ்ந்த அநேக நிகழ்வுகளை எழுத்தின்வழி உயிர்பெறச்செய்து அதனை வாசகனுக்கும் கடத்தி சாகாவரம் பெறச்செய்துவிட்டார்.
கடந்தகால நிகழ்வுகளையும் அது தன்னுள்ளே விட்டுச்சென்ற தடயங்களையும் அழகாக மீளுருவாக்கம் செய்யும் பாங்காகட்டும் அதனை ஓர் கதைபோல அல்லது உரையாடல் வடிவில் காட்சிப்படுத்துவதாகட்டும் ச்சோ ஸ்வீட் நாஸ்டோலொஜிக் மெமரிஸ் என சொல்ல வேண்டும்போல் உள்ளது.
தன் ரசனைகள் அதனை அவர் அனுகும் விதம் அதற்கான மெனக்கெடல்கள் என நகரும் வேளையில் தன் ஆதர்ஷ புருஷர்களான சுஜாதா, ரஜினி, இளையராஜா, மணிரத்னம், AR ரஹ்மான் போன்றோரை மிட்டிப்பார்க்கும் லாவகம் என்னையும் மறுமுறை இவர்களை கவனிக்க தூண்டுகிறது.
காலங்கள் கடந்த பின்னர் தான் காணும் யாழ்மண் தன் பால்யகாலத்தை சற்றேனும் பிரதிபலிக்கவில்லை என்ற அங்கலாய்ப்பும் ஆசிரியனுக்கு இருக்கவே செய்கிறது இருந்தும் மாற்றங்கள் மட்டும்தானே மாறாதது.
தன்னை செதுக்கிய ஆசிரியர்களை குறிப்பிட்டுச் சொல்லும்போது மறக்காமல் சந்திரன் மாஸ்டரையும் (!) அக்கால யாழ் இளைஞர்களுக்கான அவரது முக்கிய சேவையையும் சேர்த்து தனி அத்தியாயம் அமைத்தது டிபிக்கல் ஜேகே டச்.
இறுதி ஓரிரு அத்தியாயங்கள் முன்னைய அத்தியாயங்களிலிருந்து விலகி கணமான விடயங்களை தொட்டுச்சென்ற போதும் அதுகூட முத்தாய்ப்பாகவே அமைகிறது. வெறுமனே பால்யங்களை பகிர்ந்தால் போதுமா தன்னுள் எழும் நியாயமான கேள்விகளையும் ஆதங்கம் மற்றும் பிரிவின் வலிகளையும் கூட பகிர்தல் அன்றோ ஓர் உயர்ந்த ஆசிரிய வாசக உறவின் பிணைப்பை வலுப்படுத்தும்.
நூலின் ஒவ்வொரு அத்தியாயமாக தாண்டிச்செல்லும்போது பக்கங்கள் கரைகிறதே என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தாலும் வாசிப்பை இடைநடுவில் நிறுத்த விடாமல் தொடர்ந்து முன்னிழுத்துசெல்லும் சுவாரஸ்யமான விடயங்கள் மற்றும் மொழிநடை இறுதியில் " அடச்சி முடிந்துவிட்டதே " என்று ஜேகே இன் மணியாள் (தாய்) குறிப்பிடுவதுபோல் முடிந்தேவிட்டது.
Comments
Post a Comment