Skip to main content

கொரானாவும் மலையாளத் திரைப்படங்களும்





“உண்டா” என்றொரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் மாவோயிஸ்டுகளின் பிரசன்னம் உள்ள கிராமங்களுக்குத் தேர்தல் கடமைக்காகச் செல்லும் ஒருதொகுதி காவல்துறையினரின் கதை. கலவரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மறியல் கடவைகளையும் லத்திகளையும் சில துப்பாக்கிகளையும்தான் அவர்கள் துணைக்குக் கொண்டு செல்கிறார்கள். போதுமான தோட்டாக்கள்கூட அவர்களிடம் இல்லை. அவர்களில் பலர் பயிற்சியின்போது சுட்டதற்குப்பின்னர் துப்பாக்கியையே பயன்படுத்தியதில்லை. தாக்குதல் அனுபவம் இல்லாதவர்கள். மிக எளிமையான சாதாரண மனிதர்கள். சரியான தயார்படுத்தல் இன்றி எப்படி மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை அந்தக் காவலர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஈற்றில் மாவோயிஸ்டுகளிடமிருந்து சனநாயகத்தைக் காக்க வந்தவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்களின் கையாட்களிடமிருந்துமே சனநாயகத்தைக் காக்கப் போராடுவதாகக் கதை முடிகிறது.

ஒரு எல்லையோரக் காட்டுப்பகுதிக் கிராமம். நூற்றுக்கும் குறைந்த மக்கள் வாழும் பகுதி. அதில் சிறுவீடுபோல அமைந்த பள்ளிக்கூடம். அதுதான் வாக்குச்சாவடி. அங்குதான் காவலர்களும் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கிடையேயான பேச்சுகளும் எண்ணங்களும் செயற்பாடுகளும்தான் கதை. இதில் எந்த ஹீரோயிசமும் இல்லை. கதையில் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கும் மம்மூட்டிக்கு முதலாவது மாவோயிஸ்ட் வெடிச்சத்திலேயே சின்னதாக ஹார்ட் அட்டாக் வந்துவிடுகிறது. துப்பாக்கியையே தூக்கமுடியாமல் அவர் அதிர்ச்சியில் உட்கார்ந்துவிடுவார். மற்றக் காவலர்களும் பயத்தில் சகட்டுமேனிக்குச் சுட்டு தோட்டாக்களை விரயம் செய்வர். இத்தனைக்கும் மாவோயிஸ்டுகள் சுட்டது வெறும் இரண்டே தோட்டாக்கள்தான். மிகச் சுவாரசியமான இந்தப் படம் பேசுகின்ற அரசியலும் ஆழமானது. இந்திய சனநாயகத்துக்கு அச்சுறுத்தல் அந்த நாட்டின் அமைப்பும் அரசியலுமே தவிர தீவிரவாதமோ மாவோயிஸ்டுகளோ அல்ல என்பதை இதைவிட மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் ஒரு திரைப்படத்தால் பதிவுசெய்யமுடியுமா என்றே படத்தைப் பார்த்து முடிக்கையில் தோன்றியது.

கொரனா ஆரம்பித்ததிலிருந்து மலையாளத் திரைப்படங்களை பலரும் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு சூம் உரையாடல்களும் 'நான் கடைசியாகப் பார்த்த மலையாளத் திரைப்படம்’ என்றே ஆரம்பிக்கிறது. திரையரங்குகளின் பிருமாண்டம், ரசிகர்களின் கூச்சல், காதைக்கிழிக்கும் சத்தங்கள், நாயக விம்பங்கள் என எவையும் நான் பார்த்த அநேகமான மலையாளத் திரைப்படங்களுக்குத் தேவையேபடுவதில்லை. அங்கிருக்கும் புகழ்பெற்ற நடிகர்களான மம்மூட்டியும் மோகன்லாலும் தோற்றுப்போகின்ற, மற்றவர்கள் எள்ளிநகையாடும், எதிர்மறையான பாத்திரங்களை எல்லாம் எடுத்துச் செய்கிறார்கள். அவர்களைவிட பகத் பாஸில், பார்வதி, துல்கர், நஸ்ரியா, அன்னா பென், பிரிதிவிராஜ் என இன்னொரு நடிகர் பட்டாளம்வேறு கலக்கித் தள்ளுகிறது. கதைகளை மாத்திரம் நம்பி, அவற்றுக்கு நேர்த்தியாகத் திரைக்கதை அமைத்து, அதற்கேற்ப நடிகர்களைத் தேர்வுசெய்யும் படைப்பாளிகள் உள்ள தேசம் அது. நான் கடந்த மூன்று மாதங்களில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் ‘கே.டி’. ஆனால் மலையாளப்படங்கள் இருபதைத் தாண்டும். அய்யப்பனும் கோஷியும், அன்றொயிட் குஞ்சப்பன், ட்றான்ஸ், பங்களூர் டேஸ், ஹெலன், டார்விண்டே பரினாமம், இம்மானுவல், ஹெய் ஜூட் என்பவை உடனே ஞாபகத்துக்கு வருபவை மட்டுமே. லிஸ்ட் இன்னமும் நீளம்.

கொரனாவுக்குப் பின்னராவது தமிழ்த் திரை ரசனை மாறலாம் என்றொரு நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது. இத்தனை மலையாளப் படங்களைப் பார்த்தபின்னர் தர்பாரில் ரஜினி வௌவால்போலப் பறந்து பறந்து சுடுவதையெல்லாம் எப்படி ரசிக்கமுடியும் என்று தெரியவில்லை. அவ்வகைப் படங்களுக்கு என்று ஒரு காலம் இருந்தது. இனிச் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. லோகேஷ் கனகராஜுக்கும் வினோத்துக்கும் வெற்றிமாறனுக்கும் பின்னால் எல்லா நடிகர்களும் அவசரம் அவசரமாகத் திரிவதன் காரணமும் அதுவே. அவர்களும் அதை உணர்ந்து நாயகர்களுக்காகப் பண்ணாமல் தம் பாணியிலேயே தொடர்ந்து படங்களை உருவாக்கட்டும். பெரிய கதைகளை மிக ஆழமாகச் சொல்லவேண்டும் என்பதில்லை. எளிமையான கதைகளை எளிமையான திரைமொழியில் சொல்லும்போதும்கூட மிக ஆழமான விசயங்கள் எம்மை அறியாமலேயே உள்ளூற ஏறிக்கொள்ளும். ‘உண்டா’ பேசுகின்ற அரசியல்போல.

இதை வாசிக்கும் பலரும் என்னைப்போலவே மலையாளப் படங்களைப் பார்த்துக்கோண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் நான் கடைசியாகப் பார்த்த மலையாளப்படம் கல்வியங்காட்டில் ஓடிய “கணவன் மனைவி” என்கின்ற சென்ற நூற்றாண்டு வாசிகளுக்கு ஒரு வேண்டுகோள். ஒருநாள் இரவு புட்டும் பாரைக் குழம்பும் சூடைப் பொரியலும் சமைத்து, குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டபடி கீழ்க்கண்ட திரைப்படத்தை ஆறுதலாகக் கண்டு ரசியுங்கள்.

“மகேஷிண்ட பிரதிகாரம்"

000

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .