ஈழத்தின் ஆதிக்குடிகள் எவர் என்றொரு உரையாடல் அண்மையில் உருவாகியிருக்கிறது. அவ்வப்போது இந்தச் சந்தேகம் எனக்கும் ஏற்படுவதுண்டு. கூடவே ஆதிக்குடிகள் என்ற பதத்துக்குள் யார் யாரெல்லாம் அடங்குவர் என்பது பற்றிய வரைவிலக்கணமும் எனக்குள் காலப்போக்கில் மாற்றம் அடைந்துகொண்டேயிருக்கிறது. அவற்றின் அடிப்படையில் எளிமையான நேர் மொழியில் தர்க்கரீதியான ஒரு தேடலைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றியது.
அவுஸ்திரேலியாவில் ஆதிக்குடிகள் (Indigenous) பற்றிய பல தகவல்களும் உரையாடல்களும் எப்போதும் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கும். அவுஸ்திரேலிய ஆதிக் குடிகள் கிட்டத்தட்ட எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வந்திருப்பதாக மனிதவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து இறங்கும்வரையிலும் அவர்கள் தனித்தனி தேசங்களாக (Indigenous nations) தமக்கான மொழி, கலாச்சாரம், பண்பாடுகளோடு வாழ்ந்துவந்தார்கள். இப்போதைய அவுஸ்திரேலியாபோலவே அப்போதும் நாட்டின் தென் கிழக்குப் பகுதிகளில் மரே நதியின் கரையோரங்களில் அவர்களுடைய பெரும்பாலான வாழ்விடங்கள் அமைந்திருந்தன. ஐரோப்பிய வருகைக்குப்பின்னர் ஆதிக் குடிகள் மீது இடம்பெற்ற வன்முறையாலும் படுகொலைகளாலும் அம்மை நோய்த் தொற்றுகளாலும் அவர்களுடைய சனத்தொகை அருகியதோடு மீதம் எஞ்சியவர்களில் பலரும் வடக்கே இடம்பெயர்ந்து டார்வின், அலிஸ் ஸ்பிரிங் போன்ற இடங்களுக்குப் போய் ஒதுங்கிவிட்டார்கள். ஐரோப்பியர் வரும்போது இங்கே ஐந்நூறுக்கும் அதிகமான தேசங்கள் இருந்தன. இருநூற்றைம்பது மொழிகள் பேசப்பட்டுக்கொண்டிருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை அரைவாசியாகச் சுருங்கிவிட்டது. அதிலும் பதின்மூன்று மொழிகளைத்தவிர மீதி எல்லாமே அழிந்துகொண்டுவருகிறது. ஆதிக்குடிகளில் பலரும் ஆங்கிலத்தையே இப்போது பேசுகிறார்கள். அதில் கொஞ்சமே அவர்களுடைய மூல மொழியின் கூறுகள் சில அடங்கியிருக்கும். அதனை “Australian Aboriginal English” என்று சிலர் அழைப்பர். இப்போது அவுஸ்திரேலியாவில் கணிசமான அளவு “Full blooded indigenous” மக்கள் வாழ்கிறார்கள் என்றாலும், ஆதிக்குடிகள் பலரின் மொழி மாறிவிட்டது. உடலமைப்பு, நிறங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கலாச்சாரம் பண்பாடும் நிறையவே மாறிவிட்டது.
இப்போது இந்தத் தகவல்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஈழத்தில் ஆதிக்குடிகள் யார் என்பதை தர்க்கரீதியாக அணுகிப்பார்ப்போம். ஈழம் என்று இங்கே குறிப்பிடப்படுவது முழுத் தீவையும்தான். ஈழம், தம்பபன்னி, இலங்கை, சீயம், சிலோன், சிறி லங்கா எல்லாமே ஒன்றுதான்.
ஈழத்தில் மனிதரின் இருப்புத் தோன்றி 125,000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன. விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் ஈழக்கரையை வந்தடையும்போது அங்கே ஏலவே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் இருந்திருக்கின்றன. அப்படியெனில் மிக நீண்ட மனித நாகரிகச் சமூகம் விஜயனின் வருகையின்போது ஈழத்தில் இருந்திருக்கவேண்டும். அந்தக் காலப்பகுதியில் கிரேக்கர்களே தமிழ்நாட்டுத் துறைமுகங்களைச் சென்று சேர்ந்திருக்கும்போது, வங்கத்திலிருந்து விஜயன் வரக்கூடியதாக இருந்தபோது, மிகவும் சிறு கடனீரேரியால் பிரிக்கப்பட்டிருந்த தென்னிந்தியாவோடு ஈழம் எத்தகைத் தொடர்புகளை அப்போது கொண்டிருந்திருக்கக்கூடும்? எத்தனை ஆண்டுகளாக அது தொடர்ந்திருக்கும்? இதை உணர்ந்துகொள்ள வரலாற்றுத் தடயங்கள் அவசியமில்லை. ஆக நிச்சயம் இரண்டு நிலங்களிலும் ஒரே மொழி அல்லது ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட மொழி பேசப்பட்டிருப்பதற்கான சாத்தியமே அதிகம். இதில் பெரிதாக முரண்படவேண்டிய அவசியமுமில்லை. விஜயனின் வருகையின்போது ஈழத்தில் வாழ்ந்த பலர் தமிழைப்பேசியிருப்பதற்கான ஆதாரங்களும் பல உண்டு. இதுபற்றி நிறைய ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்திரபாலாவின் ஆய்வுகள் முக்கியமானவை.
இப்போது கேள்வி எதுவென்றால் சிங்களவர்கள் ஆதிக்குடிகளா இல்லையா என்பது. மிக எளிமையான தர்க்கம் இது. யோசித்துப்பாருங்கள். அப்போது கப்பல்களில் வந்தவர்கள் வெறுமனே எழுநூற்றுச்சொச்சம்தான். அவர்கள் வந்திறங்கும்போது இங்கொரு பெரு மனிதக்கூட்டம் இருந்திருக்கிறது. விஜயனின் அத்தனை நண்பர்களையும் குவேனியின் கூட்டம் கைது செய்திருக்கிறது என்றும் ஒரு கதை உள்ளது. அப்படியெனில் எண்ணிக்கையில் நெருங்கமுடியாத பெரும் கூட்டமாகத்தான் குவேனியின் கூட்டம் இருந்திருக்கமுடியும். ஈற்றில் விஜயன் குவேனியைத் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளைப் பெறுகிறான். பின்னர் அவன் பிள்ளைகளை வைத்துக்கொண்டு குவேனியை விரட்டிவிட்டதாகவும் ஒரு கதையை மகாவம்சம் கூறுகிறது. காரணம் குவேனியை அவர்கள் அரக்கர் குலமாகக் கருதினார்கள். பிற்காலங்களில் பண்டுகாபய மன்னன் அரக்கர்களோடு போரிட்டான் என்றும் கதை உண்டு. அது கிடக்கட்டும்.
வரலாறு, அதிலும் மகாவம்சம், இராமாயணம் போன்ற புனைவுகளை நம்பி ஏற்றுக்கொள்ளப்படும் வரலாறு என்பது பெரும் அபத்தமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் விஜயனோடு ஒரு இனக்குழு, அதுவும் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இனக்குழு இங்கு வந்ததை ஏற்றுக்கொள்ளலாம். வந்தவர்கள் உள்ளூரில் வாழ்ந்த மக்களோடு கலந்துகொண்டார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கிடையேயிருந்து தனித்துவமான ஒரு மொழி பிறந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். அந்த மொழி சிங்களமாகிறது. அதைப்பேசியவர்கள் சிங்களவர்கள் ஆகிறார்கள். ஆனால் மொழி மாற்றமடைந்தாலும் அந்த மக்களில் பெரும்பான்மையினர் இங்கிருந்த ஆதிக்குடிகளின் பரம்பரைதானே? எழுநூறு பேர்கள் இங்குள்ள பல்லாயிரக்கணக்கான ஆதிக்குடிகளோடு கலந்தால் அதன் நீட்சியை யாருடைய அடையாளமாகக் கொள்ளவேண்டும்? ஆதிக்குடிகளுடையதாகத்தானே கொள்ளவேண்டும்? சிங்களவர்களில் பெரும்பாலானவரின் உடலமைப்பும் நிறமும் திராவிடத்தைத்தானே ஒத்திருக்கின்றன? தவிர காலத்துக்குக்காலம் துணைக்கண்டத்துடனான தொடர்பு எப்போதும் ஈழத்துக்கு இருந்து வந்திருக்கிறது. படையெடுப்பு, வணிகம், குடியேற்றம் என தொடர்ச்சியாக மக்கள் கூட்டம் ஈழத்துக்கு வந்திருக்கின்றன. அவை அங்குள்ள மக்களோடு கலந்து வாழ்ந்திருக்கின்றன. அவை எல்லாவற்றினதும் விளைவான நிகர மக்கள் கூட்டம்தான் இன்றைய ஈழத்தவர்கள். இந்தச் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களில் பலருக்கும் இந்தியத் தமிழர்களோடும் தொடர்பு ஏற்பட்டிருக்கவே சாத்தியம். ஆக ஈழத்திலே எவருமே தூய உயிரிகள் கிடையாது.
மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருவோம். அவுஸ்திரேலியாவில் ‘stolen generation’ என்றொரு தலைமுறை இருக்கிறது. ஒருகாலத்தில் ஆதிக்குடிகளுக்கும் ஐரோப்பியர்களும் பிறந்த குழந்தைகளை (அநேகமான குழந்தைகள் ஆதிக்குடிப் பெண்கள்மீது செய்யப்பட்ட பாலியல் வல்லுறவால் பிறந்தவை) அவர்களின் தாய்மார்களிடமிருந்து பறித்தெடுத்து மிசனரி நிறுவனங்களிலும் வெள்ளையினக் குடும்பங்களிலும் விட்டு வளர்த்தெடுத்தார்கள். அக்குழந்தைகளை ‘நாகரிகப்படுத்தவேண்டுமென்பது’ ஐரோப்பியர்களின் நோக்கம். அப்படி வளர்ந்த குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே பேசப் பழகிக்கொண்டன. அவற்றுக்குத் தம் தாய்மொழி தெரியாது. பெரும்பாலான குழந்தைகளின் நிறங்களும் வெள்ளைக்கலப்பால் ஆதிக்குடிகளின் நிறத்திலிருந்து மாறிவிட்டிருந்தன. பின் அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, அவர்களும் வேற்றினத்தவரோடு இணைந்ததில் அந்தத் தலைமுறையினரின் தொடர்ச்சிக்கும் ஆதிக்குடிகளுக்குமிடையே இடைவெளி இன்னமும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒருவரது உயிரணுவில் கொஞ்சமேனும் ஆதிக்குடிகளின் அணுக்கூறுகள் எஞ்சியிருக்குமெனில் அவர்களும் ஆதிக்குடிகளே.
இதனடிப்படையில் பார்த்தால் ஈழத்தில் வாழும் அத்தனை அடையாளக்குழுக்களும் ஆதிக்குடிகள்தாம். பேசும் மொழியை அடிப்படையாக வைத்து மனிதக்கூட்டத்தின் ஆயுளை எடைபோடுவது தவறு. ஏனெனில் மொழி காலத்துக்காலம் மாறிக்கொண்டேயிருப்பது. ஆக்கிரமிப்புகள், படையெடுப்புகள், குடிப்பரம்பல்களின்போது மொழி மாற்றமடைகிறது. மனிதர்களுக்கானதுதான் மொழியே தவிர மொழிக்காக மனிதர்கள் கிடையாது. ஒன்றிலிருந்து இன்னொன்றாகி மற்றொன்றோடு கலந்து மருவுவதுதான் மொழிகளின் சிறப்பு. மனிதர்களைப்போலவே. தவிர இப்போது நாங்கள் பேசுகின்ற எழுதுகின்ற தமிழுக்கும் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழுக்கும் மலைக்கும் மடுக்குமான வித்தியாசங்கள்.
நாங்கள் உண்மையில் ஆராயவேண்டியது மரபணுக்களைத்தான்.
மரபணு ஆய்வுகளின்படி ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையான ஒற்றுமை ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்குமிடையே உள்ள ஒற்றுமையைவிட அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. “No significant genetic variation among the major ethnic groups in Sri Lanka”. இதில் இன்னொரு பகடி என்னவென்றால் சத்திரியர் என்ற இந்திய மரபணு ஆய்வாளரின் கண்டுபிடிப்புத்தான். அவருடைய ஆய்வின்படி தமிழர்களின் 55 வீதமான மரபணுக்கள் சிங்களவர்களிடமிருந்து வந்திருக்கின்றன. ஆனால் சிங்களவர்களின் 69 வீதமான மரபணுக்கள் தென்னிந்தியத் தமிழர்களிடமிருந்து வந்திருக்கின்றன. வெறும் 25 வீதமே வங்காளத்திலிருந்து வந்தடைந்திருக்கின்றன. சொல்லப்போனால் இதுதான் யதார்த்தம். தூய உயிரிகள் என்று இங்கே எவருமே இலர். அப்படியான உயிரிகள் எவையும் கூர்ப்பியலில் நீடிக்கவும் முடியாது. சிங்களவர்களாக இருக்கட்டும். தமிழர்களாக இருக்கட்டும். முஸ்லிம்களாக இருக்கட்டும். பறங்கியராக இருக்கட்டும். சைவர்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், நாத்திகர்கள் யாரேனுமாகவும் இருக்கட்டும். எல்லாமே அடையாளங்களினூடாக கட்டமைக்கப்பட்ட குழுக்கள்தாம். மொழி, மதம், ஊர், சாதி, பால் சார்ந்த பிரிவினைகள் எல்லாமே இருத்தலியற் பிரச்சனையால் அதிகாரம் கொண்ட குழுமைகளால் கட்டமைக்கப்படுபவை. ஆனால் இவற்றை எல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தால் எல்லோருமே வெறும் மனிதர்கள்தான். எல்லோருமே ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து நாலா திக்குகளிலும் பிரிந்துபோனவர்கள்தாம்.
நமக்கிருக்கும் பிரச்சனை வேறு. இங்கே சிக்கல் என்னவென்றால் நாம் வாழ்ந்த நிலத்தை ஒருவர் அபகரித்து, நம் பண்பாட்டையும் மரபுரிமைகளையும் தொன்மங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைவுறச்செய்து, நம்மீது தம் மொழியையும் தம் அதிகாரத்தையும் தம் வரலாறையும் திணிக்க முயலும்போது அதற்கெதிராக எப்படி எழுவது என்பதுதான். இது என் நிலம், நான் இங்கு முதலின் வந்தேன், ஆகவே இது உனக்கானது கிடையாது என்பதை உரத்துச்சொல்லத்தான் ஆதிக்குடிகள் விவகாரம் இப்போது பேசப்படுகிறது. சொல்லப்போனால் இது இயலாமையின் வெளிப்பாடு. உலகில் பேசப்படும் பெருமைகள் அத்தனையுமே ஒருவித இயலாமையின் வெளிபாடுதாம். ஆனால் அந்த விவாதம் எந்த விதத்தில் எமக்கு உதவக்கூடும் என்பதுதான் கேள்வி.
ஒருவர் ஒரு நிலத்தின் ஆதிக்குடிகள் என்பதாலேயே அவர்களுக்கு அந்நிலத்தின்மீதான எல்லாவிதமான உரிமையும் கிடைத்துவிடப்போவதில்லை. அப்படியானால் உலகின் பல நாடுகளையும் ஆதிக்குடிகளே இன்று ஆண்டுகொண்டிருக்கவேண்டும். தமிழர்கள்தான் இந்த நாட்டின் மூத்த குடிகள் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினால் மாத்திரம் எமக்கான உரிமைகள் கிடைத்துவிடுமா என்ன? அதிகாரம் இவை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. அவை வரலாற்றைத் தம் இருத்தலுக்கு ஏதுவாகப் பயன்படுத்துமே ஒழிய, எதிராகப் பயன்படுத்த அனுமதிக்காது. தவிர ஆதிக்குடிமை என்பது அதிகாரத்துக்கும் உரிமைகளுக்குமான தகுதியும் கிடையாது. உரிமைகளுக்கு தகுதி எதுவும் தேவையில்லை. ஒருவர் பின்னே வந்தார் என்பதற்காக அவருக்கான உரிமைகளை மறுக்கவும் முடியாது. ஒருவர் மதம் மாறிவிட்டார் என்பதற்காக அவர்தம் உரிமையை மறுக்கமுடியாது.
உரிமை என்பது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டியது. தனி நபரிலிருந்து தொடங்கப்படவேண்டியது. தனி நபர், குடும்பம், சார்ந்த குழுக்கள், குழுக்களின் குழுக்கள், தேசங்கள், நாடுகள் என்று உரிமைகள் கீழிருந்துதான் மேல்நோக்கி நகரவேண்டும். இந்தச்சங்கிலியில் எந்தப்புள்ளியிலும் யாரும் தன் விருப்பத்துக்கு ஏற்ப செயலாற்றக்கூடியக் கட்டமைப்பு இருக்கவேண்டும். எந்தப்புள்ளியிலும் பிரிந்து தனியாகப் போகக்கூடிய, அல்லது இன்னொரு குழுவுடன் இணையக்கூடிய வசதி இருக்கவேண்டும். அதுவே உண்மையான அதிகாரப் பரவலாக்கம் என்பது. இதில் மதம், மொழி, ஆதிக்குடிமை, நேற்று வந்தவர்கள் என்ற பிரிவினைகள் முக்கியமேயில்லை. தொன்மங்களும் வரலாறும் மனிதவியல் ஆய்வுக்காகவும் தேடலுக்காகவும் அறிவியலுக்காகவும் பயன்படவேண்டியவை. சமூகத்தின் கற்பிதங்களை உடைக்கவும் அவை பயன்படலாம். ஆனால் அவை அரசியலைத் தீர்மானிக்கக்கூடாது. என் மூத்தவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு என் உரிமைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. படவும்கூடாது. சிங்களவர்கள் வரலாற்றை முன்வைத்து தமது அரசியல் பகடையை நிகழ்த்தினால் அதே பகடையை நாமும் உருட்டுவதில் பலனில்லை. அந்த வாதமே ஒரு ‘False Premise’ என்று நாம் தள்ளிவிடவேண்டும். இதே தவறை சமயத்தில் நாங்கள் இந்திய இந்துத்துவ வன்முறைக்கு எதிராகவும் செய்யத் தலைப்படுவதுண்டு. இந்துவெறியர்கள் இராமனை முன்னிறுத்தி, இராமனுக்குக் கோயில் கட்டி கும்பிடும்போது நாங்கள் இராவணனைக் கடவுளாக்கி இது இராவணதேசம் என்று முழங்குகிறோம். அப்படிச் செய்வதன்மூலம் நாங்கள் இராமனின் இருப்பை உறுதியாக்குகிறோமே ஒழிய வேறொன்றுமில்லை. எங்களுடைய வாதப்புள்ளி (premise), இராமன் என்பவன் ஒரு இதிகாசப் புனைவில் வருகின்ற கடவுள் பாத்திரமேயொழிய அப்படி ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பதாகவே இருக்கவேண்டும். இராமனும் புனைவு, இராவணனும் புனைவு என்று சொல்லுவதுதான் அங்கே சரியாக இருக்கும். இராமனுக்கு நிகராக இராவணனை நிறுத்த முயன்றால் it will get no where.
ஆனால் நாங்கள் அப்படி செய்யமாட்டோம். எங்கள் பலரின் கனவுகள் எல்லாமே அகண்ட இராச்சியங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன. ஆதிக்கத்தை நோக்கியே அமைகின்றன. மொழி, இனம், வரலாறு, சாதி, ஆண், பெண் என்ற பலவிதமான அடையாளப்பெருமைகளிலேயே தேங்கிக்கிடக்கின்றன. அறிவுகூட இங்கே எமக்குப் பெருமையாகிவிடுகிறது. கற்றகல்வி பெருமையாகிறது. ஒற்றுமைகூட அப்படித்தான். அடையாளப்பெருமைகளுக்கு அவ்வவ் குழுக்களின் ஒற்றுமை முக்கியம். ஆகவே ஒற்றுமையையும் நாங்கள் பெருமை என்று நினைக்கிறோம். வலிந்து திணிக்கப்படும் ஒற்றுமையில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. எப்போது நினைத்தாலும் பிரிந்துபோகும் வசதியுடன் கூடிய ஒற்றுமையிலேயே வலு அதிகம். அது சாதாரண குடும்ப உறவாக இருக்கட்டும். பல தேசங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கட்டும். ஆனால் நாங்கள் விவாகரத்துகளை எள்ளி நகையாடுவோம். தேச ஒற்றுமைக்காகக் கூக்குரல் இடுவோம். காலனித்துவம் கொடுத்துவிட்ட நிர்வாக அலகுகளின் எல்லைகளைக் காக்கவென உயிரைக்கூடத் துறப்போம்.
அடிப்படை சனநாயகத்துக்கு தெற்காசியர்கள் நாங்கள் என்றைக்குமே தயாராக இருந்ததில்லை. எமக்கான தனித்துவ மொழி, பண்பாடு, வரலாறு இருக்கிறது. நம்மை நாமே ஆள வழிவிடுங்கள் என்று சிங்களத்தைக் கேட்டால் சிங்களம் மாட்டேனென்று சொல்லி எம்மை அடக்கியாள முயற்சி செய்கிறது. வடக்குக் கிழக்கு சுயாட்சிக்காகப் போராடும் அதே இனம், இதிலே கிழக்கு தான் தனியாகப் பிரியவேண்டி நின்றால் உடனே அதனை எதிர்க்கவும் தயங்காது. அதே கிழக்கில் தென்கிழக்கு தனக்கென அதிகாரம் கேட்டால் கிழக்கு உடனே முரண்டு பிடிக்கும். மாகாணசபை, நகரசபை, அரச அலுவலகங்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள், குடும்பம், ஆண், பெண் என எல்லாவிடங்களிலும் எல்லா மனிதர்களும் ஒருபக்கம் தமக்கான உரிமைக்காகப் போராடிக்கொண்டும் மறுபக்கத்தில் தன்னிடமிருக்கும் அதிகாரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டவாறே இருக்கிறோம். எல்லோருமே ஒரேவிதமான இந்திரலோகத்து வெள்ளையானையின் வாலில் பிடித்துத் தொங்குகிறோம்.
யார் ஆதிக்குடிகள், யார் முதலில் வந்தவர், யார் இங்கேயே இருப்பவர், பேசும் மொழி, இனம், சாதி, பால், மதம் என எந்தக்காரணங்களும் உரிமைப் போராட்டங்களின் மூலங்களாக இருக்கத்தேவையில்லை. உலகின் அத்தனை உரிமைப் போராட்டங்களுக்குமான மூலம் ஒன்றே ஒன்றுதான். உரிமைகள் மறுக்கப்படுதல் என்பதே அது. எங்கெலாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெலாம் அதற்கான போராட்டங்கள் ஏற்படும். தொடரும். அவ்வளவுதான்.
Comments
Post a Comment