சமாதானத்தின் கதையில் உள்ள 'சைக்கிள் கடைச் சாமி' என்ற சிறுகதையைப் பற்றி கேதாவும் நானும் உரையாடும் காணொலி இது (இணைப்பு முதல் கொமெண்டில்). ஓரளவுக்கு கதைக்குப் பின்னணியாக இருக்கும் எண்ணங்களைப் பற்றி பேசியிருக்கிறோம் என்று நம்புகிறேன்.
உரையாடலின் ஓரிடத்தில் 'The straw that broke the camel's back' என்ற சொல்லடையைத் தமிழில் எப்படிக் குறிப்பிடுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். காணொலியைப் பார்த்துவிட்டு கலாதேவி அதற்கு நிகராகத் தமிழில் திருக்குறளே இருக்கிறது என்று இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
"பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"
உரை : மயிலிறகையும் அளவுக்கு மிகுதி ஏற்றினால் பாரவண்டியும் அச்சு முறிந்து விடும்.
அந்த ஆங்கில சொல்லடைக்கும் மேற்கொண்ட குறளுக்கும் சிறு வேறுபாடு உண்டு என்று நினைக்கிறேன். 'The straw that broke the camel's back' என்பதில் அந்தக் கடைசி வைக்கோலைக் குறிப்பிடுவதில் பெரும் அர்த்தம் இருக்கிறது. எப்போதுமே ஒட்டகம் பாரம் தாங்காமல் ஒடிந்துவிழும்போது அதற்குக் காரணமான அந்தக் கடைசி வைக்கோல்தான் எம் கவனத்தில் புலப்படும். ஆனால் அதற்கு முன்னராக வைக்கோல்களின் சேர்ப்பே ஒட்டகத்தின் வீழ்ச்சிக்கான படிப்படிக்காரணங்கள். ஒருவரின் மரணத்துக்குக் காரணம் ஹார்ட் அட்டாக் என்று சொல்வதுபோல. ஹார்ட் அட்டாக் இங்கே கடைசி வைக்கோல் ஆகும். ஆனால் அதற்கு முன்னரான உணவுப்பழக்கவழக்கங்கள், உடல் மன நலங்களைப் பேணாமை, அதைத் தலைமுறை தலைமுறையாகச் செய்யாமற்போனது எல்லாமே தனித்தனி வைக்கோல்கள்தாம்.
ஆனால் 'பீலி பெய்' குறள் சொல்லும் ஆதார செய்தி அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு மாத்திரமே. எவ்வளவு எடை குறைந்த மயிலிறகே ஆனாலும் அளவுக்கு மீறி ஏற்றினால் பாரவண்டி உடைந்துவிடும் என்பது. இரண்டும் பேசும் சம்பவங்கள் ஒன்று. ஆனால் சொல்லும் செய்திகளில் மெலிதான வேறுபாடு உண்டு.
இதைப்பார்த்துவிட்டு இச்சொல்லடை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போயிருக்குமா அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் போயிருக்குமா என்ற கேள்விகள் அர்த்தமற்றது. மொழியும் வழக்குகளும் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தே வளர்வது. மனித வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும்கூட ஒரேமாதிரியாகவே உலகமெங்கும் வரலாறு முழுதும் இருந்திருக்கிறது. அவற்றைத்தானே கதைகளும் பழமொழிகளும் பிரதிபலிக்கின்றன. பைதகரசின் விதியை அந்தப் பெயரே இல்லாமல் பாரசீகர்களும் சீனர்களும் இந்திய உபகண்டத்தவர்களும் பைதகரசுக்கு முன்னமேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏனெனில் எல்லோருடைய வாழ்விலும் பயன்படக்கூடிய, கண்டுபிடிக்கவும் ஏதுவான கணித விதி அது.
இதே புள்ளியில் கடைசியாக ஒரு விடயம். நேற்று 'புதிய பாடல்கள்' என்றொரு பிளேலிஸ்ட் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பாட்டின் வரிகள் என்னைத் தூக்கிவாரிப்போட்டது.
“ஒரு வெள்ளைக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா,
இவ வெள்ளரிக்கா வித்துகூட வீடு காத்து வாழ்வா”
எந்த மயிர்ச்சிந்தனையில் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. பல தமிழர்களுக்கு வெள்ளையர்கள், மேற்கத்தியர்களின் கலாசாரத்தை இழிவாகப் பார்ப்பதன்மூலமும் அதைக் குறைத்து மதிப்பிடுவதன்மூலமும் தம்மை உயர்வாக எண்ணும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. எனக்குத்தெரிந்து, வெள்ளைக்காரர்களுக்கு என்று மாத்திரமில்லை, உலகின் அத்தனை இனத்து மனிதர்களுக்குமே அடிப்படையான கூடிவாழும் அறம் உண்டு. இருபாற் சேர்க்கையாளர்கள் என்றாலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றாலும் பலபாற் சேர்க்கையாளர்கள் என்றாலும் தமக்கான இணையோடு, தமக்கான குடும்பத்தோடு நீடித்து உறவில் நிலைக்கவே உலகின் பெரும்பான்மை மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள். அது முடியாதபோது எதற்குச் சமூகத்துக்காகத் தம் ஒரே வாழ்வை வீணாக்கவேண்டும் என்று பிரிந்து, பின்னர் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பிறிதொரு இணையோடு சேருகிறார்கள். இதனைப் புரிந்துகொள்ளமுடியாமல் சும்மா மெயின் ஸ்ட்றீம் மலினத் திரைப்படங்களையும் டப்லோயிட் செய்திகளையும் பார்த்துவிட்டு ஏனைய சமூகங்கள் பற்றிய தவறான பார்வையைப் பலர் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காசு தீர்ந்ததும் பிரிந்து போகிறவர்களை எஸ்கோர்ட் என்பார்கள். அதில் வெள்ளைக்காரி, வெள்ளைக்காரன், தமிழன், தமிழச்சி என்ற இன வேறுபாடு இல்லை. பொதுவாக அவர்களைப் பாலியல் தொழிலாளி என்று சொல்லலாம். அவர்கள் தொழில் அது. அதனை ஏன் அவர்கள் காசில்லாமல் செய்யப்போகிறார்கள்? எந்தப் பாடலாசிரியரும் காசில்லாமல் திரைப்படங்களுக்குப் பாட்டு எழுதிக்கொடுப்பார்களா என்ன? சரி விடுவோம். அந்த மகா வரிகளை எழுதக்கூடிய பெரும் கவிஞர் யாராக இருக்கக்கூடும் என்று தேடிப்பார்த்தேன்.
“வைரவரிகள் கவிப்பேரரசு வைரமுத்து”
Comments
Post a Comment