நித்திரையால் எழுந்தபோது நேரம் ஆறு மணியாகியிருந்தது. தாமதமாக எழுந்த எரிச்சலோடு தேநீர் ஊற்றவென குசினிக்கு வந்தேன். அங்கே ஹோலில் கடிகாரம் ஐந்து மணி என்று காட்டியது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இன்றைக்கு அவுஸ்திரேலியாவில் நேரம் மாற்றப்படும் நாள். வசந்தகாலத்தில் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் முன்னகர்த்தி பின்னர் இலையுதிர்காலத்தில் திரும்பவமும் பின்னகர்த்துவார்கள். அதாவது இன்று அதிகாலை நள்ளிரவு இரண்டு மணி தன்னாலே மூன்று மணியாகியிருக்கும். கோடைக்காலங்களில் வெள்ளனவே வெளிச்சம் இங்கு வந்துவிடுவதால் பகற்பொழுதுகளை முழுமையாகப் பயன்படுத்தச் செய்யும் மாற்றம் இது. மின்சாரமும் மிச்சம். அந்த இரு நாட்களும் அனேகமான நவீன டிஜிட்டல் கடிகாரங்கள் எல்லாம் அதன்பாட்டுக்கு மாறிவிடும். ஆனால் வீட்டு ஹோல்களில் தொங்கும் சுவர்க் கடிகாரங்களை நாங்கள்தான் மாற்றவேண்டும். ஆனால் பலர் பஞ்சியில் அதை மாற்றாமல் எந்நேரமும் மனக்கணக்கு போட்டே ஆறுமாதங்களைக் கடத்துவார்கள்.