படம் : என் கொல்லைப்புறத்துக் காதலிகள் |
அப்போது ‘இது கடவுள்கள் துயிலும் தேசம்’ கதையை முயற்சிசெய்துகொண்டிருந்தேன். ஆங்கிலத்தில். ஆனால் எவ்வளவு முயன்றும் கதை இரண்டாவது பந்தியைத் தாண்டுவதாயில்லை. கதையோடு ஒட்டவும் முடியவில்லை. சரி, தமிழில் எழுதிப்பார்க்கலாம் என்று ஆரம்பித்தேன். தமிழ் யூனிகோட் தட்டச்சு இப்போதுபோல அந்நேரம் இலகுவாக இருக்கவில்லை. தட்டுத்தடுமாறி பல பிழைகளோடு எழுதியது. ஆனாலும் அந்த சுவாரசியம் பிடிபட்டுப்போக, அடுத்தடுத்த நாளே ஒரு இணையத்தளத்தை உருவாக்கி ஆட்டத்தைத் தொடங்கியாச்சு.
இப்போது படலையின் முதற்பதிவை வாசித்துப்பார்க்கும்போது அதிலிருக்கும் அதிகப்பிரசிங்கித்தனம் சிரிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த ஒன்பது வருடங்களில் மீளப்போய் வாசிக்கும்போது பல கதைகளும் கட்டுரைகளும் அந்த உணர்வையே கொடுப்பதுண்டு. அதேபோலவே இப்போது எழுதுபவை எல்லாம் பிறிதொரு தினத்தில் சிரிப்பை வரவைக்கலாம். எல்லாமே அந்தந்த நேரம் சரி என்று நினைத்து எழுதுவது. காலப்போக்கில் நான் மாறிக்கொண்டிருக்கிறேன். எழுதிய சொற்கள் எல்லாம் அப்படியே தேங்கிவிடுகின்றன. அபத்தம் என்றாலும் அவற்றை அழித்துவிடவும் மனம் கேட்பதில்லை.
முதல் பதிவில் எழுதிய வரிகள் இவை.
இது முதல் பதிவு தான். இதுவே கடைசி பதிவாகக்கூட இருக்கலாம். அல்லது ஆரம்பித்த ஆர்வத்தில் இன்னும் ஒரு நான்கு பதிவு எழுதிவிட்டு காணாமலும் போகலாம். அல்லது இப்போது இருக்கும் மனநிலை தொடர்ந்து இந்த எழுத்தை தொடரும் சந்தர்ப்பம் கூட இருக்கிறது. அதனால் எங்கு போகப்போகிறேன், என்ன எழுதப்போகிறேன் என்று எல்லாம் சொல்ல போவதில்லை. ஒரு முயற்சி தான். முடியும் என்று நினைக்கிறேன்.
படலை என் வாழ்வின் ஒரு முக்கிய திறப்பு என்பதில் சந்தேகமில்லை. படலை தொடங்கியதுமுதல் வண்ணாத்துப்பூச்சி விளைவுபோல பல சம்பவங்கள் நிகழ்ந்தேறிவிட்டன. என் வாசிப்பு மேலும் விரிவடைவதற்கு உதவி செய்வது அதுதான். வாசிப்பு அனுபவத்தைப்போலவே எழுத்து மூலமும் ஒரு மன வெளியை உருவாக்கி அனுபவிக்கலாம் என்பதை உணர்த்தியதும் அதுதான். இயலுமானவரை எனக்குப் பிடித்ததை, எழுதவேண்டும் என்று தோன்றியதை மாத்திரமே எழுதியிருக்கிறேன். கருத்துகளை எதிர்கொள்ளவும், ஏன் அவற்றைச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் கொஞ்சம் பழகியாச்சு. சமயங்களில் ஆதிரையின் அத்தாருக்கு நிகழ்ந்ததுபோல, ஒரு தடித்த தோல் காதுகளை மூடவும் இடமளிப்பதுண்டு. For my own good.
படலை இணையத்தளத்தை பலகாலம் புனருத்தானம் செய்யாமல் விட்டுவிட்டேன். முகநூல் வந்ததும் அது இரண்டாம் பட்சமாகிவிட்டது. வெளியீடுகளும் உரையாடல்களும் முகநூலிலேயே நிகழ்கின்றன. இப்போது படலையை கொஞ்சம் சரி செய்திருக்கிறேன். நிறையப்பேர் மொபைலில் வாசிப்பதால் அதற்கேற்ப வடிவத்தை மாற்றியுள்ளேன். புத்தகக் கடையும் இருப்பதால் தளத்துக்குக் கொஞ்சம் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இனிவருங்காலத்தில் படலையில் நேரத்தை அதிகம் செலவழிப்பதாக ஒரு எண்ணம். முகநூல் அதிகம் வாசகர்களைக் கொண்டுவருவது உண்மைதான். ஆனால் அது கவனத்தையும் கலைக்கிறது. எழுதிய எழுத்தை போட்டுவிட்டு பறப்பதுதான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி.
படலைக்கு ஒன்பது வருடங்களாக உங்களில் பலரும் கொடுக்கும் ஆதரவுக்கு அன்பும் நன்றியும்.
கிருமிகளிடமிருந்து மீளும்பட்சத்தில் பத்தாவது வருடத்தை சிறப்பாகக் கொண்டாடவேணும் என்று ஒரு எண்ணம். பார்ப்பம்.
என்றும் அன்புடன்.
உங்கள் படலை என்றும் திறந்தே இருக்கட்டும். வாழ்த்துகள் ஜேகே.
ReplyDeleteநன்றி JG
Delete