Skip to main content

புது நேரம்


நித்திரையால் எழுந்தபோது நேரம் ஆறு மணியாகியிருந்தது.

தாமதமாக எழுந்த எரிச்சலோடு தேநீர் ஊற்றவென குசினிக்கு வந்தேன். அங்கே ஹோலில் கடிகாரம் ஐந்து மணி என்று காட்டியது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இன்றைக்கு அவுஸ்திரேலியாவில் நேரம் மாற்றப்படும் நாள். வசந்தகாலத்தில் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் முன்னகர்த்தி பின்னர் இலையுதிர்காலத்தில் திரும்பவமும் பின்னகர்த்துவார்கள். அதாவது இன்று அதிகாலை நள்ளிரவு இரண்டு மணி தன்னாலே மூன்று மணியாகியிருக்கும். கோடைக்காலங்களில் வெள்ளனவே வெளிச்சம் இங்கு வந்துவிடுவதால் பகற்பொழுதுகளை முழுமையாகப் பயன்படுத்தச் செய்யும் மாற்றம் இது. மின்சாரமும் மிச்சம். அந்த இரு நாட்களும் அனேகமான நவீன டிஜிட்டல் கடிகாரங்கள் எல்லாம் அதன்பாட்டுக்கு மாறிவிடும். ஆனால் வீட்டு ஹோல்களில் தொங்கும் சுவர்க் கடிகாரங்களை நாங்கள்தான் மாற்றவேண்டும். ஆனால் பலர் பஞ்சியில் அதை மாற்றாமல் எந்நேரமும் மனக்கணக்கு போட்டே ஆறுமாதங்களைக் கடத்துவார்கள்.
கதிரையை இழுத்து, ஏறி நின்று சுவர்க்கடிகாரத்தைக் கழட்டி கொஞ்சம் தூசு தட்டி, நேரத்தை ஒரு மணிநேரத்தால் கூட்டினேன். கண்முன்னே ஒரு மணியை இமைப்பொழுதில் இழப்பதுபோன்ற உணர்வு. நேரம் என்பதே எங்களது படைப்பு என்பது அப்போதுதான் விளங்கியது. கடவுள்போல நேரமும் இன்னொரு illusionதான். நாங்களே உருவாக்கி ஈற்றில் நாங்களே அதன்பின்னால் ஓடும் அதிசயம் இது.
நேரமாற்றம் என்பது ஈழத்தவர்களுக்குப் புதிதில்லை. 96ம் ஆண்டு வறட்சியால் நாடு முழுதும் மின்சாரவெட்டு இடம்பெற்றது. அதனால் பகற்பொழுதை முழுமையாகப் பயன்படுத்தவென அப்போதைய மின்சார அமைச்சர் ரத்வத்தை இந்த நேரமாற்றத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினார். நேரமே ஒரு சார்பான வஸ்து என்ற விடயம் எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அதெப்படி நேரத்தை எழுந்தமாறாக மாற்றலாம் என்று எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். அக்காலத்தில் நாங்கள் வன்னியில் இடம்பெயர்ந்திருந்தோம். அங்கே மின்சாரமே இல்லையென்பதால் இயக்கம் இந்த நேரமாற்றத்தை அமுல்படுத்தப்படவில்லை. தவிர இது இன்னொரு நாடு என்பதை உணர்த்தவும் அந்த முடிவு இயக்கத்துக்கு உதவியாக இருந்தது. ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த புதுநேரம், பழையநேரம் பிரச்சனை உருவாக ஆரம்பித்தது. கோயில்களும் சாமிகளும் நேரமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமையால் அவை பழைய நேரத்திலேயே இயங்கின. நேர தாமதங்களுக்கும் அவை சாட்டாகின. இதில் இலங்கை வானொலி வர்த்தகசேவை பழைய நேரத்தையும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை புதியநேரத்தையும் சொல்லிக்குழப்பும். பலர் தம்முடைய அட்டவணைகளை ஒரு மணிநேரம் தாமதப்படுத்தினர். எட்டு மணிக் கூட்டங்கள் எல்லாம் ஒன்பது மணிக்கு மாறியது. நேர மாற்றத்தால் ஏற்படக்கூடிய பயனையே அது இல்லாமற் பண்ணியது. ஈற்றில் வழமைபோல ராஜபக்ச ஆட்சியில் நேரமாற்றம் அவருக்குக் நல்லதல்ல என்று ஜோசியர் சொன்னதால் அது முற்றாக அகற்றப்பட்டது.
இரண்டாயிரங்களின் ஆரம்பங்களில் லோஷன் எங்களுக்கெல்லாம் ஒருமாதிரியான இளையதளபதி. உந்த எஃப். எம் வானொலி அறிவிப்பாளர்களின் அலம்பல்களுக்கு மத்தியில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக, உருப்படியான தகவல்களையும் கலந்து அறிவிப்பு செய்துகொண்டிருந்தவர் லோஷன். நானும் கஜனும் 12B படத்தை முதல்நாள் கிங்ஸ்லியில் பார்த்துவிட்டு அன்று முழுதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். என்னடா இப்படி ஒரு படத்தை தமிழில் எடுக்கலாமா என்றமாதிரியான சிலாகிப்பு. ஆனால் அந்தப்படம் அவ்வளவாக ஓடவில்லை என்பதில் எங்களுக்குக் கவலை. ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் வெளிவந்த படங்களில் 12B நன்றாக இருந்தது என்று லோஷன் சொல்லவும், தளபதியோடு ரசனை ஒத்துப்போகிறது என்று நான் யோசித்திருந்தேன்.
ஏதோ ஒரு நிகழ்ச்சியில் லோஷன் சொன்ன புதிர் ஒன்று அரைகுறையாக ஞாபகத்துக்கு வருகிறது. ரசியாவில் ஒருவர் மூன்று மணிக்கு புகையிரதத்தில் எங்கோ போய்விட்டுத் திரும்பும்போது நேரம் இரண்டரைதான் ஆகியிருந்தது என்றமாதிரியான புதிர். எமெக்கெல்லாம் ஒரு மண்ணும் விளங்கவில்லை. சிலர் கோல் பண்ணி அது டைம் ட்ராவல் என்றார்கள். சிலர் புகையிரதக் கடிகாரம் வேலை செய்யவில்லை என்றார்கள். ஆனால் உண்மையான பதில் அந்த நேர மாற்றத்தின்போது அவர் பயணம் செய்ததுதான். லோஷனுக்கு இந்த நிகழ்ச்சி ஞாபகம் இருக்குமோ தெரியாது.
நேற்று யாரோ பதிந்திருக்கிறார்கள். வழமையாகத் தாமதமாக வருபவர்கள் சூம் கலந்துரையாடல்களிலும் தாமதமாகத்தான் வருகிறார்கள் என்று. அது ஓரளவுக்கு உண்மைதான். சூம் நிகழ்வுகள் எதுவும் நேரத்துக்கு ஆரம்பிப்பதாயில்லை. புதிய நேரத்தில் ஆரம்பித்து பழைய நேரத்திலேயே நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. நிகழ்வின் ஆரம்பத்தில் யாரோ ஒருவரின் மைக் வேலை செய்யாமல் மக்கர் பண்ணுகிறது. கணினியை ரிஸ்டார்ட் பண்ணவேண்டியிருக்கிறது. தலைவர் வரவேற்புரை செய்யும்போது ஒருவர் மியூட் பண்ணாமல் போனில் பேசுகிறார். பெரியம்மா நான் பிறகு கதைக்கிறன் என்கிறார். சூம் பாக்ரவுண்டில் எகிப்திய பிரமிட்டுகளுக்கு மத்தியில் ஆட்களின் தலை வெட்டுப்பட்டுக்கிடக்கிறது. எல்லா வீடுகளின் கதிரைகளிலும் துவாயோ அல்லது முதல்நாள் போட்ட டிசேர்ட்டோ தொங்குகிறது. சிறுகதை இலக்கியத்தில் கு. அழகிரிசாமி ஏற்படுத்திய சலனங்கள் என்று ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து அறையில் டொய்லட் பிளஷ் பண்ணும் சத்தம் கேட்கிறது. அவரவர் கமரா பொசிசனும் சிக்கல்களைக் கொடுக்கின்றன. சுதாகரனுக்கு இந்த வயதிலேயே மூக்கு மயிர் நரைத்துவிட்டது என்றால் நம்புவீர்களா? மிர்னாலினியின் பிங்க் உதட்டுச்சாயம் நன்றாகவே இருந்தாலும் நெற்றியில் உதிர்ந்திருந்த பொடுகுகளோடு அது ஒத்துப்போகவில்லை. தர்சன் நேரே முகத்தை வைத்துப் பேசும்போது ஓகே. ஆனால் திரும்பினால் அவனது காது ஒரு முழுநேர புகைப்பிடிப்பவரது ஆஷ்ட்ரேபோல ஒரே ஊத்தை. குளிக்கும்போது காதுகளைக் கழுவாமல் மீட்டிங்குக்கு வாராதிங்கப்பா.
லொக்டவுன் ஆரம்பத்தில் அப்பாடி, இனிமேல் கூட்டங்களும் பார்டிகளும் இராது. அழுத்தத்தின் மத்தியில், ஆளின் மூஞ்சிக்காக எல்லாம் நிகழ்ச்சிகளுக்குப் போகவேண்டியதில்லை என்றொரு சந்தோசம் வந்தது உண்மைதான். ஆனால் நாளடைவில் சூம் நிகழ்ச்சிகள் இப்படிக் குவிந்துவிடும் என்று எதிர்பார்க்கவேயில்லை. அதிகம் நெருக்கமில்லாத மனிதர்களோடு பேசுவது என்பது எப்போதுமே கொல்லக்கொண்டுபோவதுபோல. அதிலும் தொலைபேசியில் என்றால் நெருக்கமான மனிதர்களோடுகூட என்னால் பேசமுடியாது. அது ஒருவகை போஃபியா எனக்கு. சூம் நிகழ்ச்சிகள் மாத்திரம் விதிவிலக்கா என்ன? ஆனால் நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும்போது இது புரியாமல் பலர் என்மீது கோபம் கொள்கிறார்கள். தடிப்பு என்று நினைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் போகமுடிகிறது, என்னுடையதற்கு வர முடியாதா என்று குறைப்படுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று சூம் சந்திப்புகள் இடம்பெறுகின்றன. நேற்று நான்கு மணிநேரம் ஒரு சூம் நிகழ்வு. இன்றும் நான்கு மணிநேரம் ஒன்றிருக்கிறது. இரண்டுமே நான் பங்குபற்றியே தீரவேண்டியவை. தவிர மூன்று சூம் நிகழ்ச்சிகளுக்கு இந்த வாரம் போகவில்லை. சிலர் புரிந்துணர்வுடன் செயற்படுவார்கள். நேற்று ஐந்தரைக்கு ஒரு சூம் நிகழ்வு இருந்தது. ஆனால் நிகழ்ச்சி அமைப்பாளரே அழைத்து, தம்பி வேண்டுமானால் இன்னொருவரை மாற்றிப்போடவா என்று அவராகவே கேட்டு எனக்கு விடுதலை கொடுத்தார்.
நிகழ்ச்சிகளில் சிலரின் விசர்ப் பேச்சுகளைக் கேட்டபடி சும்மா வாளாவிருப்பதிலும் உடன்பாடில்லை. ஒன்று அங்கேயே எதிர்க்கவேண்டும், அல்லது அந்த இடத்திலேயே இருக்கக்கூடாது. ஆனால் கருத்துகளை மறுத்துச் சொல்லும்போது அடிபடுகிறார்கள் என்று வசையும் வருவதுண்டு. பைடன் பேசும்போது ட்றம்ப் வேண்டுமென்றே குறுக்கிட்டு அவரைப் பேசவிடாமல் தடுக்கும்போது ட்றம்பைத்தான் குறை சொல்லவேண்டுமே ஒழிய, இரண்டு பேரும் அடிபடுகிறார்கள் என்று “False equivalance” செய்யக்கூடாது. ஆனால் எல்லோரும் அப்படி விடயங்களை அணுகுவதில்லை. இவையெல்லாம் அயர்ச்சியை வரவழைப்பவை. சிலர் போகிறபோக்கில் ஒரு கொமெண்டை சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். தாம் சொல்லிய கருத்தைப்பற்றி அவர்கள் அப்புறம் அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால் நாங்கள் மனதுக்குள்ளேயே அதை அசைபோட்டபடி இருப்போம். ஒரு கருத்தைச் சொல்ல ஆயிரம் தடவை யோசிப்போம்.
பலருக்கு நேரத்தின் மதிப்பும் புரிவதில்லை. ஒரு சூம் நிகழ்ச்சியில் இருபது பேர் இணைந்திருக்கிறார்கள் என்றால், இரண்டு மணிநேர நிகழ்வின் மொத்த மதிப்பும் நாற்பது மனித மணித்தியாலங்கள். அது ஒருவர் வாரம் முழுதும் செய்யும் வேலை நேரத்தின் நீளம். அங்கே நாம் பேசும் ஒவ்வொரு நிமிடத்துக்குமான மதிப்பு இருபது மனித நிமிடங்கள் என்பதையும் மறக்கக்கூடாது. ஆனால் இதுவெல்லாம் ஓரிருவருக்கு மண்டையில் ஏறுவதில்லை. அந்த ஓரிருவரே முழு நிகழ்ச்சிகளையும் கெடுத்துவிடுபவர்கள். The bad apples. இதைச்சொன்னால் இங்கே நான்தான் கெட்டவன் ஆவேனே ஒழிய சொல்வதின் தாற்பரியத்தை பலர் பொருட்படுத்துவதில்லை. Its just how things work.
பிரச்சனை என்னில்தான் என்றும் புரிகிறது. ஏன் மனிதர்களைப் பார்த்ததுப் பதட்டம் வரவேண்டும் என்று தெரிவதேயில்லை. எந்த மனிதர்களும் என்னை விழுங்கிவிடப்போவதில்லை. அவரவருக்கு ஆயிரம் சோலிகள். அதில் என்னைப்பற்றி என்ன கவலை? தெரியும். ஆனால் இதுதான் என் மனநிலை. நானே நினைத்தாலும் என்னை மாற்றிக்கொள்வது கடினம். என் செல்பேசி எந்நேரமும் சைலண்ட் மோடிலேயே இருக்கும். மெசேஜ் அனுப்பினால் பதில் அளிப்பேன். ஆனால் கோல் எடுத்தால் நோ ஆன்சர்தான். நேரில் மிக நெருங்கியவர்களுடன் ஆர்ப்பாட்டமாகப் பழகும் நான், புதிதாக ஒரு நபர் வந்தால் டென்சன் ஆகிவிடுகிறேன். பாலுபோல. பாலு என்னைக்கண்டதும் உற்சாகத்தில் செய்வதறியாமல் அத்தனை விளையாட்டுச்சாமான்களையும் முன்னே கொண்டுவந்து குவிப்பான். ஒவ்வொன்றாக டெமோ காட்டுவான். என்னையும் சேர்ந்து விளையாடச்சொல்லுவான். கூச்சலிடுவான். உன்னிடம் நன்றாக இடம்கண்டுவிட்டான் மச்சான் என்று அவன் தகப்பன் சொல்லிச் சிரிப்பதுண்டு. ஆனால் அதே பாலு புதிதாக ஒரு முகத்தைக் கண்டால் போதும். கண்ணிரண்டும் முட்டையாகி வெடித்து அழ ஆரம்பித்துவிடுவான். புதிய மனிதர்களோடு அப்படி ஒரு ஒவ்வாமை அவனுக்கு. எனக்கும்தான்.
இன்னும் மூன்று மணித்தியாலங்களில் ஒரு சூம் நிகழ்ச்சி இருக்கிறது. இப்போதே வயிற்றுக்குள் நேரம் டிக் டிக் என்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. பேசாமல் சுவர்க்கடிகாரத்தை எடுத்து அதன் முட்களைப் பிடுங்கிவிடலாமா என்று தோன்றுகிறது.

Comments

  1. Zoom meeting தலையிடி பற்றி சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீங்கள். Lock down காலத்தில beauty parlour எல்லாம் மூடின நிலையில் zoom meeting போற ரிஸ்க் இருக்கே..... அழகிரியின் சலனங்கள் எகிப்திய பிரமிட்டுகள் அருமை��
    தொடருங்கள் ஜேகே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...