நேற்று சூரரைப்போற்று பார்த்தேன். ‘எயார் டெக்கான்’ நிறுவனர் கோபிநாத்தினுடைய வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை உள்வாங்கி அவற்றின் ஈர்ப்பில் உருவானது இந்தப்படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் படத்தைப்பார்ப்பவர்கள் இதனை ஒரு உண்மைக்கதை என்று நம்பிவிடக்கூடாது என்பதற்காகச் சில தகவல்கள்.
1. ‘எயார் டெக்கான்’ நிறுவனர் கோபிநாத்தின் முழுப்பெயர் ‘கோரூர் இராமசாமி ஐயங்கார் கோபிநாத்’. கர்நாடகாவில் பிறந்தவர். அவருடைய மனைவி ஒரு பேக்கரி முதலாளி. பேக்கரியின் பெயர் Bun World.
2. கோபிநாத் எட்டு வருடங்கள் ஆர்மியில் இருந்திருக்கிறார். பங்களாதேஷ் யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறார்.
3. எண்பதுகளில் கோபிநாத் தன் ஊரில் ஒரு விவசாயப் பண்ணையைப் பராமரித்திருக்கிறார். பின்னர் மோட்டர்சைக்கிள் கொம்பனி டீலர்ஷிப் பண்ணியிருக்கிறார். அதன்பின்னர் ஒரு ஹோட்டலும் நடத்தியிருக்கிறார். வாழ்க்கைமுழுதும் அந்த ஒரு ஐடியாவையே கட்டிப்பிடித்துத் தொங்கவில்லை.
4. 1997 இல் தன் நாற்பத்தாறாவது வயதில் கோபிநாத் ஹெலிகப்டர் சேவை ஒன்றை ஆரம்பிக்கிறார். பின்னர் ஆறு வருடங்கள் கழித்து 2003ல் எயார் டெக்கான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அவர் ஒன்றும் நிதி நெருக்கடியில் இருந்ததாகத் தெரியவில்லை. நான்கே வருடங்களில் அவருடைய நிறுவனம் விஜய் மல்லயாவின் கிங் பிஷரோடு இணைந்துவிட்டது. சூரரைப்போற்று படத்தில் விஜய் மல்லையா பாத்திரமும் வருகிறது. திரைப்படத்தில் மல்லையாவிடம் தன் நிறுவனத்தை விற்க மறுக்கும் காட்சியில் மிக அற்புதமாக சூர்யா நடித்திருப்பார். ஒரு வசனம் மயிர் கூச்செறியும். “You are a socialite, I am a socialist”
5 கோபிநாத் பின்னர் ஒரு சரக்கு விமானசேவையை ஆரம்பித்திருக்கிறார். அதுவும் நிதிச்சிக்கலில் மாட்டி நீதிமன்ற ஆணைப்படி மூடப்பட்டது.
6. கோபிநாத்துக்கு சிவாஜிக்குக் கொடுத்ததுபோல செவாலியே விருது பிரான்ஸ் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
7. கோபிநாத் இரண்டுமுறை தேர்தலில் நின்று தோற்றிருக்கிறார். அண்மைக்காலங்களில் சமூக, அரசியல் கருத்துகளில் ஆப் ஆத்மி கட்சியினுடைய கொள்கைகளோடு ஒத்துப்போகிறார்.
8. கோபிநாத்தினுடைய திருமணம் ஒரு சுயமரியாதைத் திருமணமாகத் தெரியவில்லை. அவர் ஒரு சோசலிஸ்டும் கிடையாது. அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியவராகவோ அல்லது குரல் கொடுத்தவராகவோத் தெரியவில்லை. குறைந்தவிலையில் விமானப்பயணம் என்பது ஒரு வணிக உத்தி. அதனை இணையம் பரவலாகிய காலத்தில் சரியாகப் பயன்படுத்தியவர் கோபிநாத். டாட்டா நனோபோல. இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படாத சந்தையை பயன்படுத்தும் திறன் இது. ‘Untapped market’ என்பார்கள் இதை. ஒருவிதமான Blue Ocean strategy. முற்றுமுழுதான சந்தையின் கேள்வியைப் பயன்படுத்தி தொழில்செய்யும் முதலாளித்துவ அணுகுமுறை இது.
ஏன் இவற்றைச் சொல்கிறேன் என்றால், நாங்கள் எதையும் ரொமாண்டிசைஸ் பண்ணுவதில் வல்லவர்கள் என்பதைக் குறிப்பிடத்தான். இந்தப்படத்தை அண்ணாமலை, சூரியவம்சம் வகைப்படங்கள்போலவே பார்த்து ரசிக்கவேண்டுமே ஒழிய “குரு”, “The Founder” போன்ற biopic ரகத் திரைப்படங்களோடு ஒப்பிடக்கூடாது. அந்தத் திரைப்படங்கள் அவற்றின் மூலப்பாத்திரங்களின் இயல்பை ஓரளவுக்கு நேர்மையாக வெளிக்கோண்டுவர முயன்றவை. அந்தப்பாத்திரங்களை முழுமையாக நியாயப்படுத்தவும் அவை முனையவில்லை. நிஜம் இதுதான். இந்தியா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவமும் முறைகேடுகளும் பணத்தாசையும் புரையேறிப்போயிருக்கும் சமூகங்களில் ‘மாறா’ போன்ற பாத்திரங்களின் இருப்பு முளையிலேயே கிள்ளப்பட்டிருக்கும். இங்கிருக்கும் முதலாளிகள் எல்லாம் அம்பானி, ட்றம்ப், ரே கிரொக் போன்று நேர்மையைப் புதைத்துவிட்டு குறுக்குவழிகளிலேயே தொழிலும் சமூக வாழ்விலும் முன்னேறியவர்கள். அப்படியிருந்தால்தான் முன்னேறலாம் என்பதை பொதுவில் பெருமையாகவும் சொல்லிக்கொண்டவர்கள். இன்னமும் சொல்லப்போனால் உலகில் மிக அரிதாகவே பெரும் தொழிலதிபர்கள் சோசலிஸ்டுகளாக இருந்திருக்கிறார்கள். யாராவது அப்படி இருந்திருக்கிறார்களா என்றே எனக்குத் தெரியவில்லை.
எழுத்தாளர் சயந்தன் அடிக்கடி புனைவில் நேர்மை பற்றிச் சொல்வதுண்டு. உண்மைச் சம்பவங்களைப் புனைவில் சேர்க்கும்போது ஆதாரமான விசயங்கள் மாறுபடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள்வேண்டும் என்பார். உதாரணத்துக்கு ஹேராம் என்கின்ற திரைப்படம் புனைவுதான். ஆனால் அது வரலாற்றோடு ஒட்டி வருகின்ற ஒரு திரைப்படம். படம் என்பதற்காக சாகேத்ராம் காந்தியைச் சுட்டுக்கொள்வதாகப் படத்தை எடுக்கமுடியாது. அல்லது காந்தியை அவர் கொள்கைகளிலிருந்து விலகிய ஒரு வன்முறை விரும்பியாகவும் காட்டமுடியாது. இதுதான் புனைவின் நேர்மை. சூரரைப்போற்று திரைப்படத்தை ஒரு பொழுதுபோக்குக் களியாட்டமாகப் பார்த்து ரசிக்கலாம். அதற்குமேலே வேறொருபுள்ளி இப்படத்துக்குக் கிடையாது.
சொன்னாப்போல, படத்தில மகேஷிண்ட பிரதிகாரம் ‘அபர்ணா முரளி’, ரத்தம்.
Comments
Post a Comment