டொமினிக் ஜீவா எழுதிய சிலுவை என்ற சிறுகதையிலிருந்து ஒரு பகுதி. தனக்கு தினமும் கடிதம் கொண்டுவரும் தபால்காரர் காலமானதும் அவருக்கு எழுத்தாளர் எழுதும் பதில் கடிதம்தான் இக்கதை.
இது எழுதப்பட்டது சித்திரை, 1959ல். இங்கே எல்லாமே எழுதப்பட்டுவிட்டன. நாம்தாம் வாசிப்பதில்லை.
*****
நல்ல கைராசிக்காரனப்பா நீ!
எழுத்தாளன் மீனைப் போன்றவனாம்; பொதுஜனங்கள் தண்ணீரைப்போன்றவர்கள். பொதுமக்கள் என்கிற தண்ணீரைவிட்டு எழுத்தாளன் பிரிந்தாலோ, பிரிக்கப்பட்டு விட்டாலோ, அவன் இறந்தவனுக்குச் சமானமாகிறான். இந்தத் தத்துவத்தையொட்டி என்னை உயிர்வாழும் எழுத்தாளர் வரிசையில் இடம் பிடிக்கச் செய்ததற்கு மறைமுகமாக நீயும் ஒரு காரணமாக இருந்திருக்கிறாய். எப்படி என்று திகைக்கிறாயா? என்னைப் போன்ற எழுத்தாளர்கள் புகழ் மாலைகளை, நெருப்பை உண்டு வாழும் தீக்கோழிகளைப்போல உண்டு வாழும் அபூர்வ ஜெந்துக்கள். நீ எனக்கு புகழ் மாலை சூட்டும் ஆயிரமாயிரம் ரசிகர்களின் கடிதங்களைக் கொண்டு வந்திருக்கிறாய். பொது மக்கள் என்கிற தண்ணீரிலிருந்து என்னைப் பிரிக்காமல் செய்திருக்கிறாய்.
நான் தீடீரென்று முளைத்து, வளர்ந்து பிரபலமாகிவிட்ட எழுத்தாளனல்ல. வானத்திலிருந்து திடீரென்று பூமியில் குதித்துப் பிரபலமடைந்துவிட்ட இலக்கிய கர்த்தாவுமல்ல. அல்லது என்னுடைய ஆத்மசாந்திக்காக, சுயதிருப்திக்காக எழுதிக் கிழிக்கிறேன் என்று கூறித் திரியும் வரட்டுத் தனி மனித வாதத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கூச்சல்போட்டு முன்னுக்கு வந்தவனுமல்ல; உழைத்து உழைத்து எழுதினேன். பல காலம் கஷ்டப்பட்டேன். படித்துப்படித்துச் சிந்தித்தேன். எல்லாவற்றையும்விட மனிதர்களிடமிருந்து, மனிதனின் வாழ்க்கையிலிருந்து, அது தரும் போதனைகளிலிருந்து பாடத்தைப் படித்துக் கொண்டேன். தொடர்ந்து எழுதி முன்னுக்கு வந்தேன். விளம்பரத்தைப் போன்றாவது ஒரு கதை, ஒரே ஒரு கதை, பிரசுரிக்கப்படக்கூடாதா என்று ஏங்கி இருக்கிறேன். ஒரு காலம் புழுங்கிச் செத்திருக்கிறேன். இருந்தும் திறமையின்மையால் தேங்கி நிற்கவில்லை. தலைக் கனம் என்று இப்பொழுது நீ சொல்லலாம். எனக்கு என் எழுத்தைச் சரியாக எடைபோடும் திராணி இருக்கிறது. எந்தக் காலத்திலும் காக்காய் பிடிக்கும் தனிக் கலை எனக்குத் தெரியாது!
எழுத்தாளன் ஜாதியில் குயவன். பாத்திரங்களைச் சிருஷ்டிக்கிறான். நான் படைத்த பாத்திரங்களோ பல நூறு. என் பாத்திரங்கள் வெறும் மண்பாண்டங்களா? கிடையாது! சதையும், நாரும், எலும்பும், ரத்தமும் கொண்டு உயிருடன் நடமாடியவை அவை. பாத்திரங்களின் மன உணர்ச்சிகளை ஆசைகளை, விருப்பங்களை, எழுச்சிகளை மக்கள் முன் வைத்து, அவர்களை மக்களுடன் மக்களாக நடமாட விட்டிருக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் நான் எத்தனையோ பேர்களைச் சந்தித்ததுண்டு. அவர்களில் அனேகரிடம் பேசி இருக்கிறேன்; பழகியிருக்கிறேன்; மனந் திறந்து கதைத்திருக்கிறேன். இவர்களில் சிலரை அடிக்கடி தினசரி சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நிர்ப்பந்தமும் இருக்கிறது. இது தவிர்க்க முடியாத சங்கதிதான். இப்படியான முக்கிய தினசரி சந்திப்பாளர்களில் ஒருவன்தான் நீ என்று அலட்சியமாக நான் இருந்தது என்னமோ உண்மைதான்.
ஆனால் நீ..நீ.. நீ இன்று சிதையிலே சாம்பலாகி விட்டாய். பார்த்தாயா? மறந்தே விட்டேனே! எழுத்தாளர்களுக்குக் கற்பனைச் சிறகு முளைக்கிறது என்று சொல்லுகிறார்கள்; சுத்த “ஹம்பக்”. அவர்களுடைய மண்டைக்குள் ஞாபக மறதி என்கிற சிலந்திக் கூட்டமல்ல்வா வலை பின்னிக் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.
"புனிதமான ஞாபகத்திற்காக” என்று எழுதப்பட்ட கல்லறையின் கீழே, மண்ணிற்கு அடியில் உன் உடல் அணு அணுவாக, கொஞ்சம் கொஞ்சமாக.
*****
Comments
Post a Comment