Skip to main content

ஊரோச்சம் : கட்டுநாயக்கா



பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது.

சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?
ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சனிடைசர்களை பொறுமையைத் தொலைத்த சில குழந்தைகள் அழுத்தி விளையாடிக்கொண்டிருந்தன. நாங்கள் டேர்மினலுக்குள் நுழையவும் எங்கள்மீது மிருதுவான ஒரு சனிடைசர் புகை சாம்பிராணிபோல அடிக்கப்பட்டது. வெப்பநிலை செக்பண்ணும் வீடியோவும் பூட்டியிருந்தார்கள். நான் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். மூலைக்கு மூலை நின்றிருந்த ஆயுதம் தாங்கிய படையினர் எல்லாம் வீடியோ கேமில் போகஸ் ஆவதுபோல என் கண்களுக்கு சிவப்பு நிறத்தில் போகஸ் ஆகி மறைந்தார்கள். இது ஒரு சிறுவயதுப் பயம். ஒவ்வொரு ஆர்மியும் பொலிஸும் நம்மை அடிப்பதற்கும் கொல்வதற்கும் பிறந்து வளர்ந்து பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்கள் என்பது என் பொதுப்புத்திக்குள் நிரந்தரமாக ஏறிவிட்டது. அதனாற்றான் மெல்பேர்ன் ரயில் நிலையங்களில் சிவனே என்று நிற்கும் சீக்கியப் பொலிசாரைக் கண்டால்கூட வயிற்றைக் கலக்குகிறது. அது டி.என்.ஏ டிபெக்ட். மாற்றமுடியாதது.
விசுவரூப சைசில் ஒரு புத்தர் விமானநிலையத்தில் இடத்தைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அவருக்குக் குண்டியைக் காட்டியபடி நின்றுகொண்டு புகைப்படம் எடுக்கக்கூடாது என்று அறிவித்தல் போடப்பட்டிருந்தது. ஒரு சில வெளிநாட்டார்கள் முழங்கால்களை சிறிது மடித்து வணங்கியதைப் பார்த்தேன். சிங்களப் பௌத்தர்கள் முற்றாகக் குனிந்தார்கள். எனக்கு முன்னால்போன புலம்பெயர் தமிழ் குடும்பம் புத்தரை நின்று வணங்கி போட்டோ எடுத்துக்கொண்டது. நானும் உடனே அரைமனதோடு கும்பிட்டேன். காசா பணமா. சென்னையிலிருந்து புடைவை கொண்டுவந்த யாவாரிகள் இவற்றையெல்லாம் கவனிக்காமல் குடிவரவு வரிசைக்கு விரைந்தார்கள்.
என் முறை வந்தபோது ‘ஹாய்’ என்று அழுத்தமாகச் சொன்னபடி குடிவரவு அதிகாரியிடன் கடவுச்சீட்டை நீட்டினேன். அவர் பதில் சொல்லவில்லை. என் கடவுச்சீட்டைப் போலியானது என்று அவர் நினைத்திருக்கக்கூடும். நான் இயல்பாக இருப்பதுபோல நடித்தேன். கழுத்துக் கொலரைத் திறந்து உள்ளே ஊதிவிட்டுக்கொண்டேன். முதுகுப் பையி̀லிருந்து சிறு தண்ணீர் போத்திலை எடுத்துக் குடித்தேன். உள்ளேயிருந்த தண்ணீரை சிங்கப்பூரிலேயே ஊற்றிவிட்டதை மறந்துபோனேன். அதிகாரி இதனையெல்லாம் தன் கண்ணாடி பிரேமுக்கும் இமைக்குமிடையாலே நோட்டம் விட்டது தெரிந்தது. அபத்தமாகச் சிரித்தேன். ஏனிந்தப் பீப்பயம் என்று தெரிவதேயில்லை. அவர் கடவுச்சீட்டில் சீலைக் குத்திவிட்டு ‘வெல்கம் டு ஶ்ரீலங்கா' என்றார்.
சுங்க வரிசை. என் பைக்குள் புதிதாக ஒரு ஐபோன் இருந்தது. இரண்டு கணினிகள். நண்பர்களுக்கென்று வாங்கிய சில ஐந்து டொலர் அவுஸ்திரேலிய வைன் போத்தல்கள். நான் எதையும் பிரகடனம் செய்யவில்லை. பிரகடனம் செய்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று என் நண்பன் அடிக்கடி சொல்வதுண்டு. எனக்கு நடுங்கியது. அவுஸ்திரேலிய கடவுச்சீட்டை சுங்க அதிகாரிகளின் கண்களில் படும்படி வைத்துக்கொண்டு காசுவலாக நடந்தேன். ‘காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை’ என்று ரஜனிகாந்த் நடப்பாரே. அந்த நடை. கிட்டாருக்குப் பதிலாக கடவுச்சீட்டு. விட்டுவிட்டார்கள்.
வரபேற்பு மண்டபத்தினுள் நுழைந்ததும் நூறு டொலர்களை மாற்றிக்கொண்டேன். அண்மையில் இலங்கையிலிருந்து திரும்பிய நண்பியொருவர் கொடுத்த சிம்மை எடுத்து என் போனில் போட்டு ரிசார்ஜ் செய்தேன். ஒரு நெஸ்கபேயை வாங்கிக்கொண்டு ஆசுவாசமாக உட்கார்ந்தேன். ஒரு சூட்கேசை முழங்கை தொட்டது. மற்றையதை அட்டனக்கால் நுனி தொட்டது. முதுகுப்பை மற்றக் கையில் கொழுவிக்கிடந்தது. எதுவும் மிஸ்ஸாகிவிடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வைபர் எடுத்து வந்திறங்கிய செய்தியைச் சொல்லத்தொடங்கினேன். வழமையான விசயங்கள்தான். பிளைட் டைமுக்கு வந்துவிட்டது. சாப்பாடு சரியில்லை. டிசெர்ட் நல்லா இருந்தது. புதிதாக, இஞ்ச எல்லாரும் மாஸ்க் போட்டிருக்கிறாங்கள். முந்தியை விட இப்ப கொஞ்சம் வெக்கை கூடிட்டுது. எங்கட காலத்தில இந்தக் கதிரைகள் எல்லாம் உடைஞ்சிருந்தது. இப்ப நல்லா டெவலப் ஆயிட்டுது.
நேரம் பன்னிரண்டு ஆகியிருந்தது. எனக்கு யாழ்ப்பாண டிரெயின் நான்கு மணிக்குத்தான். ஏர்போர்ட் டக்ஸி பிடித்தால் கோட்டை ரயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரத்தில் போய்விட முடியும். அங்குபோய் மூன்று மணிநேரம் வெயிலில் காய்வதைவிட விமானநிலையத்திலேயே தங்கிவிடலாம் என்று முடிவுசெய்தேன். மார்கரட் அட்வூடின் த பிளைன்ட் அஸாசினும் அசோகமித்திரனின் ஒற்றனும் பைக்குள் இருந்தது. அட்வூடை வெளியே எடுத்தேன். பத்தாவது பக்கத்துக்குள் நான்கு தடவைகளாவது ‘ஓ ஐ லவ் அட்வூட்’ என்று யாராவது ஒரு பெண் ஓடிவந்து சொல்வாள் என்று மனம் எதிர்பார்த்தது. இவ்வகைக் காதல்கதைகள் பலவற்றை நான் வைத்திருக்கிறேன். நூறாம் நம்பர் பஸ்ஸில், பொலீஸ் பாசுக்காக நிலையத்தில் வெயிட் பண்ணும்போது, ஆஸ்பத்திரியில், டிரெயினில், பல்கலைக்கழகக் கண்டீனில், சுன்னாகம் எண்ணைப் பிரச்சனை ஆர்ப்பாட்டத்தில், இப்படி எங்கெல்லாம் காத்திருக்கும்போதும் என் கையிலிருக்கும் புத்தகத்தைக் கண்டு ஒரு பெண் வருவாள். தமிழ் ஏரியா என்றால் பெரும்பாலும் சுண்டுக்குளி, சமயத்தில் என் மூடைப் பொறுத்து சில வேம்படிக்காரிகள். சிங்கள ஏரியா என்றால், கொசுவத்தை வலப்பக்கம் போட்டு, இரண்டு இஞ்சி வண்டி பிதுங்கும் டயலொக்காரி. சிங்கப்பூரில் கட்டைக் காற்சட்டை பனியன் போட்டு அதற்குமே லூசாக இன்னொரு பனியன் போட்ட சீனத்துப்பெண். மெல்பேர்ன் என்றால் ... வன்ஸ் எ பனங்கொட்டை ஓல்வேய்ஸ் எ பனங்கொட்டை என்று கொழும்பர் மாமி அடிக்கடி சொல்வது ஞாபகம் வந்தது. ஆனாலும் அற்பத்தனம் போகுமா என்ன? பாஃஸ்ட் அண்ட் பியூரியஸ், சிங்கம், பிர்லா, Fifty shades மாதிரி இக்காதல் கதைகளை ஒரு தொடராக எழுதவேண்டும் என்றொரு ஆசை. வெவ்வேறு புத்தகங்களை வாசிக்கும்போது வெவ்வேறு பெண்கள் வருவார்கள். ஆனால் கதை ஒன்றுதான். கிளைமக்ஸ் கதையில் அந்தத் தொடரையே ஒரு பெண் வாசித்துக்கொண்டிருக்கும்போது ‘ஐ நோ திஸ் ரைட்டர்’ என்று நான் போய் அறிமுகப்படுத்துவதுபோல. ஐ நோ. இது ஒரு புளுத்திக் கதை. மொழியில் போதாமைகள் நிறைந்த ஒரு பேஸ்புக் தொகுப்பை எப்படிப் ஒரு புத்தகமாக எழுதலாம் என்று உடனேயே மைண்ட் வொய்ஸ் வந்து சொன்னது. தமிழ் இலக்கியச்சூழலில் எழுதினால் செவ்வியல் இலக்கியம்தான் எழுதவேண்டும். இல்லாவிட்டால் அது டொய்லட் பேப்பர். இறாலே போடாமல் இறால் சொதி என்று அடம்பிடித்தால்? ஒரு சனியனும் வேண்டாம். எழுதும் ஐடியாவையே கிடப்பில் போட்டேன்.
ஜெட்லாக்கின் அசதியில் அட்வூட்டை ரசிக்கமுடியவில்லை. மூடிவைத்துவிட்டு இன்னொரு நெஸ்கபேயை சூட்கேசுகளையும் கூடவே இழுத்துக்கொண்டுபோய் வாங்கிவந்தேன். ஓரிரு விமானங்கள் இப்போது ஒன்றாகத் தரையிறங்கியிருக்கவேண்டும். சீனர்கள். இந்தியர்கள். வெள்ளைக்காரர்கள். அரேபியர்கள். நாடு திரும்பும் இலங்கையர்கள். எல்லோரையும் வரவேற்க யாரோ ஒருவர் காத்திருந்தார்கள். என்னையும் யாராவது வந்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரையும் வரவேண்டாம் என்று சொன்னாலும் ஒரு சர்ப்பரைஸ் கொடுக்கமாட்டார்களா என்ன? ம்ஹூம். காதலியைப் பிரிந்து, அவளும் கலியாணம் கட்டிக் குழந்தை குட்டி என்று ஆனாப்பிறகு, வேண்டுமென்றால் யாருமே இல்லாத ஒரு மழைநாளின் கூரைத் தகரச் சத்தத்தில் அவள் என்னை நினைவுகூறக்கூடும். அதற்காக உடனே டென்சன் ஆகி நம்பர் தேடிப்பிடித்து கோல் பண்ணி உன்னைப்பற்றி யோசிச்சன் என்று சொல்வாளா என்ன? அதுபோலத்தான் ஊரும். பிரிந்தபின்னர் அது வேறு. நாம் வேறு. அதற்கும் குழந்தை குட்டி என்று ஆகிவிட்டது. நமக்கும்தான். இனி நம் இளமைபோலவே நம் இளமையைக் கழித்த ஊரும் திரும்பப்போவதில்லை. இனி அதனைப் பார்க்கும்போது வெறும் ஹாய்தான். குழந்தை மடியிலிருந்தால் என்ன பெயர் என்றுகூடக் கேட்கக்கூடாது. சரவணன் என்று சொல்லிவிட்டால் வாழும் வாழ்க்கை நரகமாகிவிடும். வெறும் கியூட் என்று சொல்லிவிட்டுப் பிச்சுக்கொண்டு பறந்துவிடவேண்டும்.
ஆனாலும் மற்றவர்களைப் பார்க்கப் பொறாமை வந்தது.
மத்திய கிழக்கிலிருந்து திரும்பும் ஒரு சோனகப் பெண்தான் முதலில் கவனத்தைக் கவர்ந்தார். வயது அறுபதை எட்டலாம். திடகாத்திரமாக இருந்தார். அவரை வரவேற்கக் கணவரும் மகனும் வந்திருந்தார்கள். தூரத்தில் அவர்களைக் கண்டதுமே அந்தப் பெண் அழத்தொடங்கிவிட்டார். ஓடிவந்து உச்சி மோர்ந்து மகனின் தலையைக் கோதிவிட்டார். அவர் வந்ததுமே கணவர் டிரைவருக்கு கோல் பண்ணி வண்டியைக் கொண்டுவரும்படி சொன்னார். சூட்கேசை இழுத்துக்கொண்டு முன்னே நடக்க ஆரம்பித்தார். ஆற அமர அந்தப் பெண்ணோடு ஒரு நிமிடம் கதைத்தாரில்லை. கட்டிப்பிடித்தாரில்லை. முத்தம் ம்ஹூம். பார்க்கக் கொஞ்சம் பாவமாக இருந்தது. இப்பெண் வீடு திரும்பியதுமே முதல்நாள் அயலட்டம் சாப்பாடு கொடுக்கலாம். அன்றிரவு அவர்களின் உறவு ஆகாயத்தில் மிதக்கும். அடுத்தநாள் அந்தப்பெண்ணே சமைக்க ஆரம்பிப்பார். கொண்டுவந்த பரிசுப்பொருட்கள் முடிந்ததும் சுற்றம் அகன்றுவிடும். காசு முடியும் தறுவாயில் கணவர் வேலையில் பிசியாகத் தொடங்குவார். புதிதாக ஒரு கடன் பிரச்சனையைச் சொல்லுவார். மகனுக்கு கிரிக்கட் விளையாடப் புதுத் துடுப்பை வாங்கிக்கொடுக்க, அவன் கிரவுண்டே கதியாகிக்கிடப்பான். ஒரே மாதத்தில் இதே விமானநிலையத்தில் கண்கள் கலங்கி டாட்டா சொல்லி அவள் விலகிப்போகவும், அதற்கு மறு டாட்டாகூடச் சொல்லாமல் அந்தக் கணவர் டிரைவருக்குக் கோல் பண்ணக்கூடும்.
அத்தனை நெகடிவ்வாக ஏன் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை யோசித்தேன் என்று எனக்கே கோபம் வந்தது. போனில் பேஸ்புக் பார்த்தேன். வந்திறங்கிய விசயத்தை உலகுக்கு அறிவிக்கலாமா என்று மனம் உந்தியது. தவிர்த்தேன். மணி இரண்டரையை எட்டியது. சுற்றுலாத்துறை நிலையத்தில் சென்று கோட்டை ரயில் நிலையத்துக்கு டக்ஸி பிடித்தேன். மூவாயிரம் என்றார்கள். இரண்டாயிரத்து ஐநூறு கேட்டேன். ஏசி போடமாட்டோம் என்றார்கள். சரி போடு என்று மூவாயிரம் கட்டினேன். பின்னர் டோலுக்கு ஐநூறு என்றார்கள். விசர் வந்தது. பணியாளர் என்னை அழைத்துக்கொண்டு டக்சி ஸ்டாண்டுக்கு விரைந்தார். அவர் வேகத்துக்கு என்னால் சூட்கேசுகளோடு ஈடு கொடுக்க இயலவில்லை. அவர் சனத்துக்குள் தொலைந்துபோனார். கொஞ்சநேரத்தில் டிரைவர் ஓடிவந்து ‘ஒய ஜெயகுமார நே’ என்றார். ஜெயக்குமரன் என்று திருத்த நினைத்துவிட்டுப் பின்னர் என்ன கொட்டைக்கு என்று விட்டுவிட்டேன். ஈழத்தில் இறங்கியதுமே தூஷணம் தமிழுக்கு மாறியதன் அற்புதத்தை அந்தக் கணத்திலும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.
ஏறிக் குந்தியதும் சிக்ரட் நாறியது. ஏசியைப் போடச்சொன்னேன். டிரைவர் 'போட்டிருக்கு, நேரமாகும், சொறி சேர்’ என்று சிங்களத்தில் சிரித்தார். 'ஆ, கமந்னா' என்றேன். மொறட்டுவை எக்கசியப் பனஹாய் சிங்களம் பதினைந்து வருடங்கள் கழிந்தும் சிதைவுறாமல் இன்னமும் விளங்கியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதுவொரு பொற்காலம். கெலின்ம கீல, வமட்ட ஹரவன்ன ஐயே. இஸ்ஸராப்பத்தன நவத்தன்ன. ஓவ், மெகம தமாய். கீயத ஐயே? அடுக்கறண்ண புளுவாங்த? எப்பா. அபராதி நேத? மங் கீல என்னங். கிரிகோடு கிதட ஆல நம்பே தேச யா உனா. ‘ஒரு முத்தமாய் உன் கன்னம் சேர்ப்பேன்’ எனும்போது குளியல்தொட்டியில் சோப்புப் போட்டுக்கொண்டிருந்த அந்த நடிகை என்னவாகியிருப்பாள் என்றொரு எண்ணம் வந்தது. அரசியலுக்குப் போயிருக்கலாம். பார்த்தியிடம் கேட்டால் சொல்லுவான். எல்லா நினைவுகளையும் கீழடியிலிருந்து தூசு தட்டி மீள எடுக்க ஆரம்பித்தேன். வண்டி விமானநிலையத்திலிருந்து வெளியேறி பிரதான வீதிக்குள் நுழைந்தது. அங்கே பெரும் வரவேற்பு வளைவில் அந்த இரண்டிஞ்சி வண்டி பிதுங்கிய டயலொக்காரி கைகூப்பிக்கொண்டே சிரித்தாள்.
‘ஶ்ரீ லங்கா அன்போடு வரவேற்கிறது’
நான் சீற் பெல்டை இழுத்துப் போட்டபடி நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
-- தொடரும் --

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .