Skip to main content

பேக்கிழவாண்டி - கதை நிகழ்ந்த கதை



லொக்டவுனை எப்படிச் சமாளித்தீர்கள் என்பதுதான் இப்போது எதிர்படுபவர்கள் எல்லாம் கேட்கும் பொதுவான கேள்வியாக இருக்கிறது. எம்மிருவரையும் பொறுத்தவரையில் அக்காலம் நன்றாகவே கடந்துபோனது. காலை எழுந்ததும் எழுத்து. பின்பு கனிவு கொடுக்கும் வீட்டிலிருந்தான வேலை. மாலை முழுதும் நடை. நித்திரைக்கு முன்னர் நெட்பிளிக்ஸ்.

அப்புறம் அம்மாவும் அப்பாவும்.
அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் அம்மா கையால்தான் சாப்பாடு. அதனால் லொக் டவுன் டைமில் வண்டி புங்குடுதீவு காணப்போய்விட்டது. என்னதான் பத்து கிலோமீற்றர் மாய்ந்து மாய்ந்து நடந்தாலும் அம்மாவின் வெறும் வெந்தயக்குழம்பும் மூன்று நீத்துப்பெட்டிப் புட்டும் வயிற்றுள் போனால் வண்டி என்ன செய்யும் பாவம். ஒவ்வொருநாளும் அங்கு சாப்பிட்டுவிட்டு இனி ஒரு கிழமைக்கு அம்மா வீட்ட சாப்பாடு இல்லை, டயற் என்றுதான் நாம் திரும்புவோம். அடுத்தநாள் அம்மா அழைத்து ‘சாப்பிட வாறியா’ என்று கேட்டால் இல்லை என்றுதான் வீறாப்பாகப் பதில் சொல்வோம். உடனே ‘வெங்காயம், தேங்காய்ச்சொட்டு, பச்சைமிளகாய் போட்டு றொட்டிக்கு மா குழைச்சு வச்சிருக்கிறன். செத்தமிளகாய்ச் சம்பலும் செய்யலாம்’ என்று அவர் ஆசை காட்டுவார். அதுக்குப்பிறகு எப்படி வேண்டாம் என்பது? போய் எட்டு றொட்டியும் சாப்பிட்டு, மீதி இரண்டையும் பார்சல் கட்டிக்கொண்டு வரும்போது வண்டியைத் தடவிப்பார்த்தால் அது இராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கும்.
அம்மாவின் சாப்பாடு ஒரு பக்கம் என்றால் அப்பாவின் கதைகள் இன்னொரு பக்கம். அப்பர் கதை விடுவதில் மன்னர். தன் பொய்களை எல்லாம் உண்மை என்றே நம்புபவர் அவர். அவரின் கதை மாந்தர்களுக்கு இயற்கைப் பெயர்கள் கிடையாது. புழுகர், விசர்க்கூட்டம், கசவாரம், கையிடுக்கிச் சின்னட்டியார், கொழும்பர் எனப் பட்டப்பெயர்கள்தான். அனேகமான பட்டப்பெயர்கள் குடும்பப்பெயர்களாகவே இருக்கும். இந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் புழுகர் கூட்டம். இவர்கள் எல்லாம் விசர்க்கூட்டம் என்ற மாதிரி. அப்போது அம்மாவின் வேலை அப்பா சொல்லும் கதைகளில் வரும் தன் குடும்பத்து மாந்தரைக் காப்பாற்றுவது. அப்படி முடியாமற்போகும் சமயங்களில் அதற்கீடான அப்பா தரப்பு பாத்திரம் ஒன்றைக் கழுவி ஊற்றுவது. கீரியும் பாம்பும் சீறுவதுபோல அவர்கள் அடிபடுவதைப் பார்க்க அழகாக இருக்கும். அப்பர்தான் அதிகம் அடிவாங்குவதுண்டு. எழுபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் அத்தனைபேரோடும் கொழுவிப்பேசாமல் இருந்தாலும் தாம் பிறந்த குடும்பத்தின்மீதான பெருமை என்பது மறையவே மறையாது என்பதற்கு அம்மா ஒரு சிறந்த உதாரணம்.
இப்படித்தான் ஒருநாள் ‘புட்டு + சூடை மீன் பொரியல் + பொரிச்சிடிச்ச செத்த மிளகாய்ச் சம்பல்’ ஆசை வலையில் விழுந்து அம்மா வீட்டுக்குப் போனோம். அப்போது வண்டி திக்கெட்டும் தறிகெட்டுப் பறந்து கடைசியாக இமையமலைப் பக்கம் திரிவதாகச் செய்தி வந்திருந்தது. ஹூ கெயார்ஸ்? புட்டோடு பொரித்த சூடைமீன் தலை கடிபடுவதை நினைத்தாலே வாயூறியது. அன்று சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் வழமையான ஊர்க் கதைகளைவிட்டுவிட்டு ஒரு நீர்கொழும்புக் கதையை அம்மா சொன்னார். அங்கு யாரோ ஒருவருக்கு செத்தவீடு செய்து பிரேதத்தை எரித்தும்விட்டபிறகு ஒரு கிழமை கழித்து செத்தவர் வாசலில் வந்து நின்றாராம். பிரேதம் எழுந்து வந்து நின்றதைக் கண்ட வீட்டுக்காரச் சனம் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு பொலீஸ் ஸ்டேசனுக்கு ஓடியதாம் என்று எங்கோ ஒரு யூடீப் செய்தியை அம்மா எம்மோடு பகிர்ந்தார். இது ஒரு உண்மைச்சம்பவம் என்றும் சொன்னார். செத்துப்போன சொந்தக்காரர் திரும்பி வந்தால் சந்தோசப்படுவதைவிட்டு ஏன் அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டும் என்ற கேள்வி வந்தது. பின்னர் அதைப்பற்றி ஜீவியும் நானும் அடிக்கடி கலந்துரையாடுவதுண்டு. அதை ஒரு கதையாக எழுதினால் நன்றாக வரும் என்று ஜீவிதான் ஐடியா கொடுத்தது. அந்தப் பேய்க்கதையின் பாத்திரங்களை இனம்கண்டதுங்கூட ஜீவிதான். தாத்தாவின் பேய் வீடு திரும்புகிறது. அதை வீட்டிலுள்ள மகள், மனைவி, தாயுடன் கதை சொல்லி எப்படி எதிர்கொள்கிறார் என்றமாதிரி ஒரு கதை. விடுமுறைக்கு மாத்திரம் ஊருக்கு விசிட் அடிக்கும் புலம்பெயர் தமிழர்கள் உருவகம். இதுதான் ஐடியா. ஜீவி சொல்லச்சொல்ல சிறுவயதில் படித்த ‘Colonel Fazackerley Butterworth Toast’ கவிதை ஓடிவந்து மண்டையில் ஏறிக்கொண்டது. அதற்குப்பிறகு எழுதிமுடித்த கதைதான் ‘பேய்க்கிழவாண்டி’.
அந்த நீர்கொழும்புச் செய்தியை வைத்து ஒரு பேய்க்கதை எழுதிய விசயத்தை போன வெள்ளிக்கிழமை அம்மா தோசைக்கடை போட்டபோது சொன்னேன். கதையைப் பொறுமையாகக் கேட்டவர் கடைசியில் ஒன்று சொன்னார்.
“எல்லாஞ்சரி ஆனால் அது ஒரு லூசுப்பேயா இருக்கும்போல, அதுக்கு ஏன் தாத்தாவைப் போட்டனி? அப்பப்பா வந்ததா எழுதியிருக்கலாமே, அவையளிண்ட குடும்பம்தான் விசர்க்கூட்டம்”
அவ்வளவுதான். கீரியும் பாம்பும் மோதலை ஆரம்பிக்க நான் நெய்யில் பொரிந்துபோயிருந்த தோசையின் கரைகளோடு இடித்த சம்பலை அள்ளி எடுத்து வாயில்போட்டபடி அதை ரசிக்க ஆரம்பித்தேன்.

Comments

Popular posts from this blog

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .