எழுதும் வேகத்தில் பிழைகளைத் தவிர்ப்பது கடினமாகவே இருப்பதுண்டு. மனவேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதுவதே கடினம். அதிலும் பிழைகளில்லாமல் எழுதுவது எப்படி? சரி எழுதிய பிற்பாடு வாசித்துத் திருத்தலாம் என்றால் அப்போது பஞ்சி பிடித்துவிடும். தவிர எழுதிய எழுத்தை மீள வாசிப்பதும் கொல்லக்கொண்டுபோவதுபோல. அப்படியே திருத்த வெளிக்கிடுகையில் கூடுதலாக ஐந்து பந்தி சேருவதுதான் நிகழுமே ஒழிய எழுத்துத் திருத்தம் நிகழாது.
இப்படியான சூழ்நிலையில்தான் சிலவருடங்களுக்கு முன்னர் வாணி பிழைதிருத்தியின் அறிமுகம் கிடைத்தது. எழுத்துப்பிழைகள், புணர்ச்சி விதி, குற்றியலுகரம் போன்ற இலக்கண விதிகளில் விடும் தவறுகள் போன்றவற்றை வாணி பிழைதிருத்தி அடிக்கோடிட்டுக் காட்டுவதுண்டு. அதையும் தாண்டி இறுதிப் பதிவில் பிழைகள் விடப்படுவது நிகழும்தான். ஆனால் நடுவருக்கு உதவியாக வந்த டி.ஆர்.எஸ்போல தவறுகளைக் குறைக்க வாணி எனக்குப் பெருமளவு உதவிசெய்திருக்கிறது. என்ன ஒன்று, ஈழத்தமிழ் சொற்களை அது விளங்கிக்கொள்ளாமல் திருத்த முயற்சிசெய்யும். ‘சீலம்பா’வை ‘சிலம்பா’ என்று மாற்றச்சொல்லும். ‘வெளிக்கிடுங்கள்’ என்றால் குழம்பிப்போய் அடிக்கோட்டோடு நிறுத்திவிடும். அது தவிர பெரும் கட்டுரைகளை ஒரே தடவையில் திருத்த முடிவதில்லை. திருத்தியின் வேகமும் நாளடைவில் குறைந்துவிட்டது. எல்லாமே காலப்போக்கில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன். நீச்சல்காரன் என்பவர் இந்தத் திருத்தியை உருவாக்கிப் பராமரிப்பவர். அவர் செய்யும் உதவிக்கு நன்றியாகச் சிறு டொனேசன் ஒன்றையும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தேன்.
இப்போது வாணிக்குத் தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது கிடைத்திருப்பதாக நீச்சல்காரன் மின்மடலில் தகவல் கொடுத்திருந்தார். சந்தோசமாக இருந்தது. இந்த நிலைத்தகவலைக்கூட அதில் பிழைதிருத்தம் செய்துதான் வெளியிடுகிறேன். பத்துக்கும் மேற்பட்ட பிழைகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. ‘நிலைத்தகவலைக்கூட’ என்ற சொற்பிரயோகம் தவறு என்று சொல்கிறது. ஆனால் சரியான திருத்தம் எது என்று தெரியவில்லை. நண்பர்கள் சொல்லலாம்.
வாணியை நீங்களும் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment