Skip to main content

நான்கு சம்பவங்கள்




சம்பவம் 1

அப்பா எனக்கொரு சைக்கிள் வாங்கித்தந்திருந்தார். அரைச்சைக்கிள். ஹீரோ. முதலில் நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினால்தான் வாங்கித்தருவேன் என்று சொல்லியிருந்தார். நானோ வாங்கித்தந்தால்தான் பாஸ் பண்ணுவேன் என்று அடம்பிடித்தேன். ஈற்றில் என் பிடிவாதம் தாங்காமல் பரீட்சைக்கு முன்னரே சைக்கிள் வந்துவிட்டது. புறக்கோட்டையில் வாங்கி லொறியில் எடுத்து வரப்பட்ட சைக்கிள். பெல்லுக்குப் பதிலாக பற்றரியில் வேலை செய்யும் ஹோர்ன் அதில் இருந்தது. சிவப்பு நிறம். வண்ண வண்ணமான டஸ்ட் கவருகள், குஞ்சங்கள் எனப் புதுச்சைக்கிள் ஜொலித்தது. அதில்தான் பாடசாலைக்குப் போவேன்.
பாடசாலை வகுப்பில் ஊத்தேக்கியா என்றொரு நண்பன் இருந்தான். அவனும் ஒரு சைக்கிள் வைத்திருந்தான். அது ஒரு லேடிஸ் சைக்கிள். என்னுடையதை விடப் பெரிசு. என்னுடையது என்றில்லை. என் நண்பர்களின் சைக்கிள்களிலேயே ஊத்தேக்கியாவின் சைக்கிள்தான் பெரிசு. ஈஸ்டேர்ன் பிராண்ட். இரும்புச்சாமான். அந்நாட்களில் சைக்கிள் ரேஸ் வைக்கும்போதெல்லாம் ஊத்தேக்கியாதான் வெல்லுவான். அவன் தன் சைக்கிளில் எட்டி இரண்டு மிதி மிதித்தான் என்றால், அவன் பொஸ்கோ பள்ளிக்கூடத்தைத் தாண்டும்போது எம் எல்லா அரைச்சைக்கிள்களும் சோமசுந்தரம் வீதியின் ரயில்வே கடவையில் திக்கித் திணறி ஏறிக்கொண்டிருக்கும். அப்படியே எங்களில் யாராவது முக்கி முனகி அவனைப் பிடிக்க நெருங்கிவிட்டால் போதும். ஊத்தேக்கியா குறுக்கும் மறுக்குமாகத் தன் சைக்கிளைச் செலுத்தி எம்மை முந்த விடாமற் செய்துவிடுவான். அவனை இடித்து விழாமல் தவிர்க்க நாங்கள் பிரேக் போடும்போது ஊத்தேக்கியா பறந்துவிடுவான்.
இந்த அலாப்பி ஆட்டம் பல நாட்களாகத் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. நண்பர்கள் எல்லோருக்கும் அவன் ஒரு ஜென்ம விரோதியானான். தன்னை சைக்கிள் ரேஸில் யாருமே வெல்ல முடியாது என்று அவன் வகுப்பில் வீறாப்புப் பேசுவான். நானும் பொறுத்துப் பொறுத்துப் போனேன். ஒருநாள் முடியவில்லை. கோயில் வீதி. ஐ.சி.ஆர்.சி சந்திக்கு அருகில். அன்றைக்கும் வழமைபோலவே எம் சைக்கிள்கள் நெருங்க முனைகையில் ஊத்தேக்கியா குறுக்கும் மறுக்குமாக ஓடிப் படம் காட்டிக்கொண்டிருந்தான். நான் நெருங்க நெருங்க அவன் என்னை முந்த இடம் கொடுக்கவேயில்லை.
நான் சடாரென்று எதையும் யோசியாமல் ஊத்தேக்கியாவின் சைக்கிளை வேகமாகப் போய் இடித்துவிட்டேன்.
அடுத்தகணம் நானும் ஊத்தேக்கியாவும் ஹீரோவும் ஈஸ்ட்டேர்னும் நடுத்தெருவில். எப்போதுமே போய் அடிக்கும் வாகனத்துக்குத்தான் சேதம் அதிகமாகும். என் சைக்கிளின் சில்லுக்கம்பிகள் உடைந்து ரிம் நெளிந்துபோய்விட்டது. கைகளிலும் கால்களிலும் காயம்வேறு. சதை வெளியேறி இரத்தம் இன்னமும் கசியாமல் வெள்ளையாக இருந்தது. ஊத்தேக்கியாவின் சைக்கிளில் ஒன்றிரண்டு கம்பிகள் உடைந்திருந்தன. புறக்கையிலும் சிறிய காயம். ஸ்பிரிட் தடவிவிட்டால் போதும் என்று அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு போய்விட்டான். அவன் வீடு பக்கத்தில்தான். என் சைக்கிளை உருட்டவே முடியவில்லை. ஒருமாதிரி அரக்கிக்கொண்டுவந்தேன். நண்பர்களும் அவனைத் திட்டியபடியே எனக்கு ஆதரவு கொடுத்தபடி வந்தார்கள். கைலாசப்பிள்ளையார் கோயிலடியில் வந்த நண்பர்களில் சிலர் திரும்பிவிட்டார்கள். மேஜர் கணேஸ் வீதியால் நான் போகவேண்டும். ஆனால் வந்த நண்பர்கள் எல்லோருக்கும் வேறு வேலையிருந்தது. சிலருக்கு டியூசன். பலருக்கு மாலை கிரிக்கட். என்னோடு வீடுவரை கூடவே வருவதற்கு யாருமே இல்லை. சிவன் அம்மன் கோயிலைத் தாண்டும்போது அழுகையே வந்துவிட்டது. புதுச்சைக்கிள் உடைந்து உருக்குலைந்து திருத்தவே முடியாத நிலையில் இருந்தது. ஆனாலும் ஊத்தேக்கியாவின் கொட்டத்தை ஈற்றில் அடக்கிவிட்ட திருப்தி இருந்தது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சந்தியடியில் ஒருவன் குறுக்கே வந்துவிட்டான் என்று சொல்லி சமாளித்தேன். அம்மாவுக்கு விளங்கியிருக்கலாம். ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை. என் காயத்துக்கு மருந்திடுவதில் அவர் கவனம் போனது. ‘அவனுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுக்கவேண்டாம் என்று சொன்னமே, கேட்டிங்களா’ என்று அக்காமார் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். நான் ஒன்றுமே சொல்லவில்லை.
அந்த சைக்கிளை சாமியிடம் கொண்டுபோனோம். முழுதாக டயர், ரிம் என இரண்டு சில்லுகளையும் மாற்றவேண்டியிருந்தது. நெளிந்த மட்கார்டுகளை நிமிர்த்தி, பிரேக் எல்லாம் புதுசாகப் போட்டாலும் கீறல்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த ஹோர்னும் பழுதாகிப்போனது. சைக்கிள் வாங்கிய காசின் அரைவாசி திருத்தத்துக்குப் போய்விட்டது. இரண்டு வாரங்கள் பக்கத்து வீட்டு சென்றல் கல்லூரி அண்ணாவோடுதான் பாடசாலைக்குப்போனேன். வார இறுதி டியூசனுக்கு நடை. சிலவேளைகளில் நண்பர்களோடு டபிள்ஸ் போனேன்.
அந்த இரண்டு வாரங்களில் ஒன்றை உணர்ந்தேன். யாருக்காகப் போய் ஊத்தேக்கியாவின் சைக்கிளை இடித்தேனோ அவர்கள் எல்லோரும் சம்பவம் நிகழ்ந்த அரை மணி நேரத்திலேயே தம் பிரச்சனையைப் பார்க்கப்போய்விட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு சிறு விபத்து. ஊத்தேக்கியாவின் கொட்டம் அடங்கியது ஒரு உபரி. என் நிலைமையைக் கண்டு அவர்கள் கவலையடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக என்னோடு வீடுவரைக்கும் வருகின்ற மனநிலைகூட அவர்களிடமிருக்கவில்லை. அடுத்தநாள் இவனுக்கு சைக்கிள் இல்லையே, கூட்டிப்போவோம் என்றுகூட பலரும் நினைக்கவில்லை. கேட்டால் வந்திருப்பார்கள். எனக்கும் கேட்கத் தோன்றவில்லை.
நான் மறுபடியும் பாடசாலை போனபோது ஊத்தேக்கியா பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் என் நண்பர்கள் எல்லோரும் என்னோடு பேசுவதுபோலவே ஊத்தேக்கியாவுடனும் பேசினார்கள். சிரித்துப் பழகினார்கள். ஊத்தேக்கியா இனிமேல் அப்படிச்செய்யமாட்டான் என்று ஒரு நண்பன் எனக்குச் சொன்னான். ஒரு நாய் அவனோடு டபிள்ஸ் போனது. எனக்கு இதுவெதுவுமே பிடிக்கவில்லை. நான் பாடசாலையிலிருந்து தனியாக வீட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தேன். சில வருடங்கள் கழித்து பல்கலைக்கழக உத்தியோகம் சம்பந்தமாக ஊத்தேக்கியாவின் அப்பாவிடம் ஒரு உதவி கேட்கவேண்டியிருந்தது. வேறு என்ன செய்ய.
நானும் ரோசம் கெட்டு, பல்லை இளித்துக்கொண்டு அவனுக்கு முன்னால் போய் நின்றேன்.

சம்பவம் 2

மாப்பணாப்பிள்ளை அரசரத்தினம் என்பது அவருடைய இயற்பெயர். 1959ம் ஆண்டு நவம்பர் பதினொராம் திகதி பிறந்தவர். வன்னியிலுள்ள சேமமடு என்ற கிராமம்தான் அவருடைய ஊர். அவர் இளைஞனாகி போராட்டத்தில் இணைந்து மாவட்டப் பொறுப்பாளர் ஆகிறார். ஒருநாள் தன் குடும்பத்தைப் பார்க்கவென ஊருக்குத் திரும்புகிறார். மத்தியானம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு விறாந்தையிலேயே பாயைப் போட்டுப் படுக்கிறார். தாயையும் அருகில் வந்து படுக்கச்சொல்கிறார். மனிசி அவரின் தலையைத் தடவிவிட சந்தோசமாகக் கொஞ்சநேரம் அங்கே இளைப்பாறிவிட்டுத் திரும்பிவிடுகிறார். போகும்போது அம்மா கையால் ஒரு பொட்டு வைத்துவிடக்கேட்டார். இப்படிச் சின்னப்பிள்ளைமாதிரி இருப்பது அவனிண்ட விருப்பம் என்று தாய் பின்னாளில் நினைவுகூறுகிறார். அன்றைக்குப் போகும்போது கொண்டுவந்த சாறத்தையும் ரீசேட்டையும் விட்டிட்டுப் போட்டான் என்று அவரின் சகோதரர் பிறகு புலம்பிக்கொண்டிருந்தார்.
இது நிகழ்ந்து சில நாட்களில் ஈழநாதம் சிறப்புப் பதிப்பு ஒன்று வெளியாகிறது. நான் அடித்துப்பிடித்துப்போய் வரிசையில் நின்று பேப்பரை வாங்கி வாசிக்கிறேன். மாங்குளம் முகாம் தகர்ப்பு. வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை ஓட்டிச்சென்று மோதிய கரும்புலி லெப்டினண்ட் கேர்ணல் போர்க் வீரச்சாவு என அன்றைய சிறப்புப் பக்கங்கள் விரிந்தன. முழுதாக வாசிக்கமுதலேயே முன்வீட்டு லலி கிரிக்கட் விளையாட வருமாறு கூப்பிட்டான்.
பேப்பரை எறிந்துவிட்டுப் போய்விட்டேன்.

சம்பவம் 3

ஜி திரைப்படம். கதை, வசனம், இயக்கம் லிங்குசாமி. நடிப்பு அஜித், திரிசா.
படத்தின் நாயகன் வாசு கல்லூரித் தேர்தலில் அவன் நண்பர்களின் வற்புறுத்தலால் போட்டியிடுவான். அப்போது உள்ளூர் எம்.எல்.ஏ வரதராஜனோடு அவனுக்கு மோதல் வருகிறது. வரதராஜனின் மகனும் தேர்தலில் போட்டியிடுவதால் வந்த பிரச்சனை. வாசுவின் தரப்பு தேர்தலில் வெல்கிறது. இதைப் பொறுக்கமாட்டாத வரதராஜன் கல்லூரியில் கலவரத்தை ஏற்படுத்துகிறான். உடைமைகள் சேதமாகின்றன. மனிதர்கள் சாகிறார்கள். இழப்புகளுக்கு குற்றஞ்சுமத்தப்பட்டு வாசு தண்டனை பெற்று சிறை செல்கிறான்.
பல வருடங்கள் கழித்து வாசு சிறையிலிருந்து விடுதலையாகித் திரும்பி வருகையில் ஒரு ரயிலில் அவன் தன் நண்பனைக் காண்கிறான். யார் அவனைத் தேர்தலில் போட்டியிட வற்புறுத்தினானோ அந்த நண்பன். அவன் இப்போது ரெயில்வேயில் வேலை செய்கிறான். திருமணம் முடித்து, குழந்தைகளும் பெற்று ஒரு சாதாரண குடும்பஸ்தனாக மாறிவிட்டிருந்தான் அந்த நண்பன். இவனுக்கு உடனே மனம் துணுக்குறும். இவன் தன் மீட்கமுடியாத இளமையை சிறையில் கழித்துவிட்டு வருகிறான். ஆனால் நண்பர்களின் வாழ்வு இனிதே கடந்திருக்கிறது. அவர்கள் அவனைப் பார்க்கக்கூட வரவில்லை. இந்த அபத்தம் அவனுக்குப் புரியவேயில்லை. இவர்கள் ஏற்றிவிட்டுத்தானே தான் தேர்தலில் போட்டியிட்டேன். இவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் ஏன் சிறையில் தத்தளித்தேன்? அதே சமயம் அவனால் நண்பனோடு கோபப்படவும் முடியவில்லை. அவனும்தான் என்ன செய்திருக்கமுடியும்?
ஜி படம் மரணத் தோல்விப்படமாக முடிந்துபோனது.

சம்பவம் 4

வீட்டின் வரவேற்பறை கார்பற் கொஞ்சம் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிட்டது. பழையவீடு. கார்பற்றை அகற்றிவிட்டு மரப்பலகை போடலாம் என்று திட்டம். ஒரு தமிழ் குத்தகைக்காரர் மலிவாகச் செய்து தருகிறார் என்று கேள்விப்பட்டு அவரை ஒப்பந்தம் செய்தேன். அவர் தன் பணியாட்களை இரவு ஒன்பது மணிக்கு அனுப்பினார். முப்பதுகளின் இறுதியிலிருக்கும் இருவர் வந்தார்கள். தமிழர்கள். இருவருமே முன்னாள் போராளிகள். இருவருக்குமே மனைவி, குழந்தைகள் என குடும்பங்கள் ஊரில் இருந்தன. கப்பலால் வந்து வருடக்கணக்காக விசாவுக்காக கேஸ் மேல் கேஸ் போட்டு நிரந்தர குடியுரிமைக்காகக் காத்திருப்பவர்கள். ஒருவர் நம்பிக்கையிழந்துபோயிருந்தார். மற்றவர் மறுபடியும் ஒரு அப்பீல் போடப்போவதாகச் சொன்னார். இருவருக்குமே சம்பளம் அடிப்படையை விடக் குறைவாகத்தான் கிடைத்துக்கொண்டிருந்தது. கையில காசு. ஒரு பகல், இரவு, மறுபடி பகல் எனத் தொடர்ச்சியாக வேலை செய்துவிட்டு மீண்டும் இரவு வேலைக்கு வந்திருந்தார்கள். கே.எப்.சி சிக்கின் ஓர்டர் பண்ணினோம். அவர்கள் வாகனத்தில் ரெட் புல் கான்களை அடுக்கி வைத்திருந்தார்கள். அவற்றைக் குடிக்காவிட்டால் நித்திரை வந்துவிடும் என்றார்கள். அடுத்தநாள் காலை வேலை இல்லை. ஆனால் ஏதோ ஒரு பேர்த்தே பார்ட்டிக்குச் சோடிக்கப் போகவேண்டும் என்று சொன்னார்கள்.
வேலை முடித்ததும் பேசியதுக்கு அதிகமாகவே அவர்களுக்கென்று கொஞ்சம் காசைக் கையில் கொடுத்தேன். அவர்கள் ஒன்றுமே சொல்லாமல் வாங்கிக்கொண்டபோது என் அடிக் குதத்தில் சற்றுக் கூசியது. அந்தக் குத்தகைக்காரருக்கும் எனக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. சொல்லப்போனால் அவர்கள் இருவரைத்தவிர இந்தப் பூமியில் இருப்பவர்கள் அனைவருமே அவர்களை வஞ்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகப்பட்டது.
அடுத்தநாள் என் நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு வந்திருந்தான். புதிதாகச் செய்த பலகை வேலைப்பாட்டைப் பார்த்தான். எவ்வளவு முடிந்தது என்று கேட்டான். சொன்னேன். முகத்தைக் கொஞ்சம் கோணியபடியே சொன்னான்.
“மலிவுதான் ஆனால் வேலை நீட் இல்லை”
000

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...