உதாரணத்துக்கு.
"பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே"
பொருள்:
பழமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட
உழும் கலப்பை உயர்வானது.
உழவர் பெருஞ்சிறப்புக்கு உரியவர்.
இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில்
உலகம் செல்லும்.
படைச்சாலில் விதை இடுவர்
அது விளையும்
விளைவைப் பெற வழிச் செல்வர்.
"காற்றுமேல் வருகின்ற கார்விடினும், கடல்சுவறி,
யாற்றுநீர் அறவெள்ளி அரசனும்தெற் காயிடினும்,
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. "
பொருள்: காற்று வந்து கார்மேகம் பெய்யாமல் போனாலும்
ஆற்றுநீர் வறண்டு போனாலும்
ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் காராளர் கடமை
"கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே! "
பொருள்: சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர்.
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது
மாட்டின் கழுத்தில்
ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை.
"ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. "
பொருள்: அன்னம் நீங்காக் கழனி
கழனி உழவர்
உழவர் களத்தில் ஏற்போர் கூடை
கூடை கொண்டு களத்தில் புகுந்து உலகோர் நெல்லைப் பெற்றுக்கொள்வதால்
அரசன் ஆடை அணி பொலிய முடி சூடிக்கொள்வான்
அவன் யானைக்கு ஓடை பொலியும்
இந்த “ஏர் எழுபது” நூலை எழுதியது கம்பர் என்கிறார்கள். இராமாயணம் எழுதிய கம்பர்தான் இவர் என்று சொல்பவர்களும் உண்டு. இல்லை, ஔவைமாதிரி கம்பரும் ஒரு பொதுப்பெயர். அவர் வேறு இவர் வேறு என்றும் சொல்கிறார்கள். ஆனால் இது 12ம் 13ம் நூற்றாண்டு சோழர்காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்தமுடிகிறது.
தமிழிலக்கியம் ஒரு ஜீவ நதி.
Comments
Post a Comment